Loading

யான் நீயே 44

அன்று வீரன் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டான். இரவு சரியாக உறங்கிடக்கூட இல்லை அவன்.

பல மாதங்களுக்குப் பின்னர், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின் மனைவியை நேரில் காண இருக்கின்றான்.

நெஞ்சமெல்லாம் அதீத துடிப்பில் தவித்தான்.

இந்த இரண்டு வருடமும் அவனின் தங்கம் உடனில்லாது பெயருக்கு நடமாடிக் கொண்டிருந்தான்.

பயிற்சியில் அவளது கவனம் சிதறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

அன்று அவனை விட்டு பிரிந்திருக்க முடியாது அழுது அழுது சென்றவளை பிரிவுக்கு தானே பழக்கியிருந்தான்.

ஆரம்பத்தில் தினமும் பேசியவன், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, நான்கு நாட்களுக்கு ஒருமுறை, இறுதியில் வாரம் ஒருமுறையென தன் பேச்சினைக் குறைத்துக்கொண்டான். இரவு நேரங்களில் எத்தனை தவிப்பு எழும்பினாலும் அவளுக்கு அழைத்திடமாட்டான்.

காலை சரியாக ஆறு மணிக்கு எடுப்பவன், பத்து நிமிடம் பேசி வைத்திடுவான். அந்த பத்து நிமிடமும் அவளின் நலன் குறித்து மட்டுமே பேச்சு இருக்கும்.

முதல் வருடத்தில் அவளை பார்க்க இவன் சென்றிருக்க, கணவனை பார்த்ததும் அழுது தீர்த்தவள் உடன் வருகிறேன் என்று பிடித்த அடத்தில் அவளை பார்க்க செல்வதையே தவிர்த்துவிட்டான்.

மீனாள் எவ்வளவோ கெஞ்சியும் அவன் வர முடியாதென சொல்லிவிட்டான்.

வீட்டு ஆட்களிடமும் அடிக்கடி அழைப்பு விடுத்து தொல்லை செய்திடக் கூடாதென கட்டளையாகவே சொல்லிவிட்டான்.

“உனக்கு கஷ்டமாவே இல்லையாண்ணே?” லிங்கம் எப்போது கேட்டாலும் சிறு சிரிப்போடு நகர்ந்திடுவான் வீரன்.

“ரொம்ப பன்ற மாமா நீயி! அக்கா பாவம்” என்று அங்கை கூட வீரனிடம் அடிக்கடி புலம்புவாள். கண்டுகொள்ளவே மாட்டான்.

அவனின் தங்கப்பொண்ணுவிற்கான அவனது ஏக்கம் யாவும் அவனுள் மட்டுமே பதிந்து வைத்துக் கொண்டிருந்தான்.

பயிற்சி முடிய ஒரு வாரம் இருக்கும் முன்பு,

“எப்போன்னு சொல்லுத்தா…நான் வந்து கூட்டிட்டு வரேன் தங்கம்” என்றவனை காணொளி அழைப்பில் தீயாய் முறைத்தாள்.

“நீயி ஒன்னும் இங்கன கொண்டு வந்து விடலையே! வந்த எனக்கு திரும்பி வரத் தெரியுமாட்டிக்கு” என்று கோபமாக சொல்லி வைத்திட்டாள்.

மீண்டும் அவளுக்கு அழைத்தவன்,

“எவ்வளவு கோபமிருந்தாலும் இங்கன எம் பக்கட்டு வந்து காட்டுத்தா” என்றவனின் குரல் தழுதழுப்பை அவள் உணர்ந்த நொடி கட் செய்திருந்தான்.

பயிற்சியின் இறுதி நாட்கள் என்பதால் அதற்கடுத்து வந்த நாட்களில் அவளால் அவனிடம் பேசிடவே முடியவில்லை.

தமிழகம் வர ரயில் ஏறிய பின்னரே வீரனுக்கு அழைத்து தகவல் சொன்னாள்.

“இங்கிருந்து கோவை. அங்கிருந்து மருத. லிங்கு மாமாவை மருத ஸ்டேஷன் அனுப்பிடு மாமா” என்றவள் அவன் பதில் பேசும் முன்பு வைத்திருந்தாள்.

‘முன்பு தான் செய்ததற்கு பழிவாங்கல் இது’ என அப்போதும் சிறு சிரிப்பு மட்டுமே அவனிடம்.

வீட்டில் அனைவரிடமும் சொல்ல எல்லோருக்கும் அதீத மகிழ்வு.

“எம் பேத்தி வந்ததும், சட்டுப்புட்டுன்னு பேரனோ பேத்தியோ என் கையில பெத்து கொடுத்துப்புடு ராசா. நாச்சியா புள்ளையை கொஞ்சிப்புட்டேன். இன்னும் கொஞ்ச மாசத்துல சின்னவன் புள்ளையயையும் தூக்கிப்புடுவேன். உம் புள்ளைய பார்க்காம போனாக்கா என் கட்டை வேவாது அப்பு” என்று லிங்கத்தின் அருகில் சற்று மேடிட்ட வயிற்றுடன் நின்றிருந்த அங்கையை பார்த்துக்கொண்டே கூறினார் மீனாட்சி.

அங்கை தன் முதல் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறாள். நான்காம் மாதம் நடந்து கொண்டிருக்கிறது.

வீரன் முகம் வருத்தம் சுமந்து நொடியில் சீரானது.

“அயித்த மீனாள் மொத வரட்டுமாட்டிக்கு” என்ற அபி தான் அவரை சமாதானம் செய்தார்.

திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகியும் தன் மூத்த பேரன் பிள்ளையின்றி இருப்பது அவருக்கு வருத்தமாக இருந்தது. அதற்கு சரியான காரணங்கள் இருந்தபோதும், ஊர் ஏதும் பேசிடும் முன்பு நல்ல விடயம் நடந்திட வேண்டுமென நினைத்தார்.

“எல்லாம் நடக்கும் அப்பத்தா” என்றவனின் குரலில் சத்தம் மெலிந்து தான் வந்தது.

“மீனுவுக்கு போஸ்டிங் வேற எங்கனையாவது போட்டிருந்தால் அவ்வளவுதேன் அப்பத்தா” என்று நாச்சி சொல்ல, “வேலையே வேணாமின்னு வர சொல்லுன்னுவேன்” என்றார் மீனாட்சி.

“ம்க்கும்… இதென்ன உம் பண்ணையில புல்லு புடுங்கிற வேலைன்னு நினைச்சியாக்கும்” என்ற நாச்சி வீரனின் பார்வையில் அமைதியாகினாள்.

“இதை பார்க்க வசந்தி அத்தை இல்லாமல் போயிட்டாங்களே! என்னலாம் பேசியிருப்பாய்ங்க” என்ற அங்கை, “ஒரு நா அக்காவை அவங்க வூட்டுக்கு கூட்டிட்டு போயாவது சீன் போட்டுட்டு வரணும் மாமா” என்றாள் அங்கை.

வசந்தி தான் நினைத்தது நடக்காமல் விட்ட அவமானத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் முன்பே நடமாட பிடிக்காது, நல்லானை கூட்டிக்கொண்டு சென்னைக்கே சென்றுவிட்டார். சொத்துக்காக ஆசைப்பட்டு வந்தவர், விலைமதிப்பில்லா பிள்ளை செல்வங்களை இழந்திருந்தார். கௌசிக்கும் கௌதமுடன் சென்றுவிட்டான். மாதா மாதம் அவர்களின் தேவைக்கென பணம் மட்டுமே இருவரும் அனுப்புகின்றனர்.

விடியலுக்கு முன்பு தயராகி கீழே வந்தவன், வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த அபியிடம் சொல்லி கிளம்பிவிட்டான்.

“இந்த ஓட்டம் ஓடுறான்!”

திண்ணையில் அமர்ந்திருந்த பாண்டியனிடம் அபி கூறிட,

அந்நேரம் வயலுக்கு செல்ல வெளிவந்த லிங்கம்,

“இது உம் மவன் இல்லையாட்டுக்கும்மா. மீனாக்குட்டியோட புருஷன். ரெண்டு வருசம் அடக்கி வச்ச தவிப்பை, இந்த ஒரு ராவு அடக்க முடியல” என்றான்.

“இனியாவது ரெண்டேறும் ஒட்டுக்கா நல்லாயிருந்தா அது போதும்” என்றார் பாண்டியன்.

அதற்கு வாய்ப்பில்லையென விதி நினைத்ததோ!

ரயில் நிலையம் வந்த வீரன் மீனாள் வரும் ரயிலின் தடம் எண்ணில் சென்று காத்திருந்தான். இன்னும் அரை மணி நேரமிருந்தது. அவனுக்கு அது ஒரு யுகமாகத்தான் தெரிந்தது.

அவனால் இந்த சில நிமிடங்களை கடத்திட முடியவில்லை. மீனாளின் முகம் பார்த்தால் மட்டுமே அவன் நிலை கொள்வான்.

“தங்கம்.” அவன் இதயம் மத்தளம் கொட்டியது.

ரயில் வரும் ஓசையில் இவனது இதயம் தடம் புரண்டது.

ரயில் நின்றதும் மீனாள் இறங்குவதற்கு முன்பு அவளிருக்கும் பெட்டிக்குள் வீரன் ஏறியிருந்தான்.

பெட்டிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள், அருகில் நாசி தீண்டிய தன்னவனின் வாசத்தில்…

“மாமா” என்று திரும்பினாள்.

வீரனின் கண்களில் கரைபுரண்ட ஏக்கத்தில் சுதாரித்தவள், தன்னை நெருங்கிய வீரனின் கைகளில் பெட்டியை திணித்து…

“போலாம்” என்றாள்.

வீரன் அவளின் இந்த பொய் கோபத்தைக்கூட ரசித்தான்.

“வூட்டுக்கு வாடி… இருக்கு” என்று அவளை உரசியவாறு காதில் கிசுகிசுத்தவன், அவளின் இடையோடு கையிட்டு இறுக்கி, வெற்றிடத்தில் கரம் பதித்து கூட்டிச்சென்றான்.

அவனின் பிடியில் அவளால் நெளியக்கூட முடியவில்லை.

“வுடு மாமா” என்றவள், “யாரும் பார்க்க போறாய்ங்க” என்றாள்.

“பார்த்தா பார்க்கட்டுமாட்டிக்கு. எம் பொண்டாட்டி நான் புடிச்சிருக்கேன்” என்றவன் வாகனங்கள் தருப்பிக்கும் பகுதி வந்தே அவளை விட்டான்.

“ஒழுங்கா சாப்பிடறது இல்லையா மாமா. இளைச்சு தெரியுற?” எனக் கேட்டாள். வண்டியில் அமரும் முன்பு.

“நீயி வந்திட்டல… ஆறு வேளையா ஊட்டி விடுத்தா. தேத்திடலாம்” என்றவனின் பேச்சு சாதாரணமாக இருந்தாலும், அதில் அவளுக்காக அவன் மறைத்து வைத்த வலிகள் நிரம்பி கிடந்தன. அவன் சொல்லாமலே உணர்ந்து கொண்டாள்.

“கோவம் போயிடுச்சா?”

பெட்டிகளை வண்டியின் பின்னால் வைத்து மூடியவன், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி, தனக்கு அருகில் அமர்ந்து மீனாளிடம் கேட்டான்.

“அவ்வளவு சீக்கிரம் போவாது” என்று உம்மென்று விறைப்பாக சொல்லியவள், வீரனின் தோளில் சாய்ந்து கண் மூடிக்கொண்டாள்.

மனமெல்லாம் இதம் உணர்ந்தாள். தன்னிடம் வந்து சேர்ந்த நிம்மதி. அவளுக்கான இளைப்பாரல் அவனிடம் மட்டுமே.

இருவருமே வெகு நாட்களுக்குப் பின்னர், தத்தம் இணையின் அருகாமையை ரசித்தவர்களாக மௌனத்தை சுமந்தனர்.

வண்டியை சீரான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்த வீரன், ஆளரவமற்ற பகுதியில் வண்டியை நிறுத்திட…

“வூடு வந்திடுச்சா?” எனக் கேட்டவாறு மீனாள் கண் திறந்தாள்.

சுற்றுப்புறம் பார்த்து,

“இங்கன ஏன் நிறுத்துன மாமா?” என்றவளிடம்,

“முடியல தங்கம்” என்றவன் அவளின் கன்னம் தாங்கி இதழ் தீண்டியிருந்தான். அழுத்தமாய், ஆழமாய் அவளின் இதழ் சுவையில் மூழ்கிப்போனான். அவளும் அவனுக்கு மொத்தமாக கட்டுண்டு கண்கள் மூடியிருந்தாள். தன் சுவாசம் முழுவதையும் அவள் அகம் சேர்பித்த பின்னரே விலகியிருந்தான்.

“நான் கோவமா இருக்கேன் மாமா!”

“இருந்துக்கோடி” என்று அவளின் தோளிலே இடித்தவன், வண்டியை இயக்கினான்.

அனைவரும் வாயிலிலே காத்திருந்தனர்.

மீனாள் இறங்கியதும் ஆளாளுக்கு அவளை அணைத்து, கரம் பற்றியென அவளின் பிரிவின் வேதனையை தீர்த்துக்கொண்டனர்.

அங்கையின் மேடிட்ட வயிற்றில் கை வைத்த மீனாள்,

“ரொம்ப சந்தோஷமாட்டிக்கு சின்னக்குட்டி” என்று கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

“என்ன மாமா சிங்கில் பாலில் டபுள் சிக்ஸ் போல?” என்று மீனாள் லிங்கத்தின் தோளில் கைபோட்டு கண்ணடித்து கிசுகிசுக்க…

“ச்சூ… போத்தா” என்று வெட்கச் சிரிப்போடு நகர்ந்தான் லிங்கம்.

அங்கைக்கு இரட்டை குழந்தைகள். அதனைத்தான் மீனாள் குறிப்பிட்டு லிங்குவை கேலி செய்தாள்.

அவளின் சிரிப்பு சத்தம் லிங்கத்தின் முதுகைத் தீண்ட…

“அண்ணே” என்று திரும்பி நின்று சிணுங்கினான் லிங்கம்.

“அவன்கிட்ட என்ன சேட்டை?” என்ற மகா, “நீயும் சீக்கிரம் நல்ல சேதி சொல்லுத்தா” என்றார்.

மீனாள் சிவந்த முகமாய் வீரனை ஏறிட, அவனோ கண்கள் எட்டா புன்னகையை உதிர்த்தான்.

“போஸ்டிங் எங்கன மீனு?” பிரேம் தான் நினைவாகக் கேட்டிருந்தான்.

மீனாளை பார்த்த சந்தோஷத்தில் அவளின் வேலையைப்பற்றிக் கேட்டிட மறந்திருந்தனர்.

“கோயம்புத்தூர் அண்ணே” என்று வீரனின் முகம் பார்த்து பிரேமுக்கு பதில் வழங்கினாள்.

வீரனின் முகம் சட்டென்று சோர்ந்திட… மீனாள் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள்.

‘ரெண்டு வருசம் என்னை தவிக்க வச்ச தானே மாமா… கொஞ்ச நேரத்துக்கு நீயி தவிச்சு நில்லு’ என்று மனதோடு குறும்பாக எண்ணிக்கொண்டாள்.

“நித்தம் போயிட்டு வர முடியாதே!” மருதன் சொல்லிட…

“அங்கனவே வூடு கொடுப்பாய்ங்க ப்பா” என்றாள் மீனாள்.

“அப்போ உம் புருஷனோட இருக்கமாட்டியா நீயி?” மகா குரலுயர்த்திக் கேட்டார்.

“அதை எம் புருஷன் கிட்டவே கேட்டுக்கோம்மா” என்றவள், “சோர்வா இருக்கு. நான் செத்த தூங்குறேன்” என்று மாடியேறினாள்.

“என்ன அமிழ்தா இது. உனக்கொரு வாரிசு வந்துடாதுன்னு நாங்கயெல்லாம் காத்துக்கிடக்கோம். இவள் இப்படி சொல்லிட்டுப்போறாள்!” என்றார் அபி.

“மாத்தல் வாங்கிக்கலாம்மா” என்ற வீரனுக்குமே இன்னும் கொஞ்ச நாள் தன்னவளை விட்டு பிரிந்து இருக்க வேண்டுமா என்று ஆயாசமாக வந்தது.

“வேலையே வேணாமாட்டிக்கு. வுட சொல்லு” என்றார் மீனாட்சி.

“அப்பத்தா” என்று அழுந்த உச்சரித்த வீரன், “புரிய வைங்கப்பா” என்று பாண்டியனிடம் சொல்லிவிட்டு மனைவியிடம் சென்றான்.

குளியலறைக்குள் சத்தம் கேட்டது.

சில நிமிடங்களில் குழலில் ஈரம் சொட்ட தன் சட்டை மட்டும் அணிந்து பக்கம் வந்தவளை தொண்டைக்குழி ஏறியிறங்கிட மையலாக பார்த்திருந்த வீரன், மொத்தமாக தன் தங்கப்பொண்ணுவிடம் கொள்ளை போயிருந்தான்.

நெடும் பிரிவை ஈடுகட்டிட ஒருவருக்குள் ஒருவர் சித்தம் உருகி உயிர் கலந்து இளைப்பாரியிருந்தனர்.

******************

அன்று முதல் நாள் பணியில் சேரவிருக்கிறாள் மீனாள்.

திருமதி. தங்கமீனாள் வீர அமிழ்திறைவன் ஐ.ஏ.எஸ்.

தன் கையிலிருந்த காகிதத்தில் இருந்த பெயரை மென்மையாய் வருடிக்கொடுத்தான் வீரன்.

அவனின் கண்களிலும், உதட்டிலும் மின்னிய புன்னகைக்காக எதுவும் செய்யலாம் எனத் தோன்றிட… எம்பி அவன் கன்னத்தில் முத்தம் வைத்து விலகினாள் மீனாள்.

பயிற்சி முடிந்து சிறப்பாக பயிற்சி மேற்கொண்டவர்களுக்கு பரிசளித்து, இறுதியில் பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்றே அம்மாநில ஆளுநர் கையால் பணி நியமன படிவம் கொடுக்கப்பட்டிருந்தது.

கடந்த நாட்களில் வீரனிடம் கூட அதனை மீனாள் காட்டிடவில்லை. அந்த படிவத்தில் எங்கு வேலையென்று குறிப்பிட்டிருக்க, பணியில் அமரும் அன்று காட்டிக்கொள்ளலாம் என இருந்துகொண்டாள்.

அன்றைய தனிமையின் போது, தன் நெஞ்சத்தில் தலை வைத்து படுத்திருந்தவளின் உச்சியில் இதழ் பதித்து…

“உண்மைக்கும் கோவையில் தான் போஸ்டிங்கா?” என்று வீரன் கேட்டிட, அவனது மார்பில் நாடி குற்றி முகம் நிமிர்த்தியவளாக, “ஆமாம், என்னோட வர நீயும் ரெடியாகிக்கோ மாமா” என்றிருந்தாள்.

“டிரான்ஸ்பர் வாங்க முடியாதுல?”

“முதல் போஸ்டிங். அல்ரெடி ஜிந்தில் ஏழு மாசம் சப் கலெக்டரா பயிற்சி பண்ணியிருக்கேன். வட பக்கம் தான் போஸ்டிங் போடுற மாதிரி இருந்துச்சு. பயிற்சியில் நிறைய புள்ளிகள் வாங்கியதால், நான் கேட்டேன்னு இங்கன போட்டிருக்காய்ங்க. இதுவே பெருசு” என்றாள்.

“ம்ம்ம்… போட்டதே போட்டாய்ங்க, மருதைக்கு போட்டிருக்கலாம்” என்ற வீரன் அவளை இறுகக் கட்டிக்கொண்டு, “தனியா இருந்திடுவியா தங்கம்?” எனக் கேட்க, அவனை வெட்டவா குத்தவா என்று பார்த்தாள்.

மீண்டும் ஒரு பிரிவா என்று வருந்தும் அவனிடம் உண்மையை சொல்லிவிடலாம் நினைத்த நொடி,

“அப்பத்தா உன்கூட தங்கிப்பாங்க. நான் சொல்றேன்” என்றான்.

‘எப்பவும் என்னைய வுட்டுப்போட்டு இருக்கறிதுலே இரு’ என்று மனதில் சடைத்துக் கொண்டவள், ‘இப்போதைக்கு உண்மையை சொல்லவேக் கூடாது’ என நினைத்து, இதோ இந்த நொடி வரை சொல்லவில்லை.

இன்று பணியில் சேர வேண்டுமென நான்கு நாட்களுக்கு முன்பு மீனாள் சொல்லியது முதல் வீரன் அவளுக்கு என்னென்ன வேண்டுமென்று எடுத்து வைப்பதற்காகக் கேட்டிட மீனாள் வாய் திறக்கவில்லை.

“உனக்கு போற ஐடியா இருக்கா இல்லையா?” வீரன் கடிந்துகொள்ள…

“எனக்கு என்ன தேவையோ எடுத்து வச்சிக்க தெரியுமாட்டிக்கு” என்று கத்தியவள், “துரத்தி விடுறதுலே இரு நீயி. ஒருநா மொத்தமா உன்னைவுட்டு போவப்போறேன் பாரு” என்று மீனாள் முடிக்கும் முன்பு அவளது வார்த்தைகளை தனது தொண்டைக்குள் விழுங்கியிருந்தான் வீரன்.

“அப்படி ஒன்னு நடந்தாக்கா நான் செத்ததுக்கு சமானம்” என்று அவளின் விழிகளை பார்த்து அழுத்தமாகக் கூறியவன், “நான்(யான்) தான் நீயி(நீயே). உனக்குள்ள நான் இருக்கேன். என்னைய வுட்டுப்போட்டு போவனுமின்னா, கொன்னுப்போட்டுட்டு போடி” என்றான்.

“மாமா…” என்று அவனின் இடையோடு கையிட்டு கட்டிக்கொண்டவள், “எப்போ பாரு என்னைய தூரம் இருக்கவே வைக்கிறன்னு சடவுல சொல்லிப்புட்டேன். அதுக்கு ஏன் இப்படிலாம் பேசுற மாமா?” எனக் கேட்டவள், வீரனின் கோபத்தை மலையிறக்க அவன் கைகளில் தன்னை தொலைக்க வேண்டியிருந்தது.

இப்போது அதனை நினைத்தவள், வீரனின் கையிலிருக்கும் படிவத்தில் உள்ளவற்றை அவன் வாசித்ததும் எப்படி வினை புரிவான் என ஆவலாக அவன் முகம் பார்த்தாள்.

“இப்போதேன் காட்டனும் தோணுச்சாக்கும்” என்றவன் முதல் வரியிலிருந்த அவளின் பெயரிலே சில கணங்கள் தேங்கிவிட்டான்.

மெல்ல வீரன் விழிகள் அடுத்தடுத்த வரிகளில் ஊர்ந்திட…

மீனாள் பணி நியமனம் செய்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஊரின் பெயரை படித்தவன் இன்பமாக அதிர்ந்தான்.

“தங்கப்பொண்ணு” என்று அணைத்துக் கொண்டவன், “வேணுன்னே தவிக்க வச்சிருக்கல நீயி?” என்று அவளின் நெற்றி முட்டினான்.

“ரெண்டு வருசம் என்னைய பார்க்கக்கூட வராமல் இருந்தல. அதுக்குத்தேன் இந்த பழிவாங்கல். எப்புடி?” என்று வீரனின் இரு பக்கமும் மீசையை முறுக்கிவிட்டாள்.

மீனாளின் நெற்றியில் முத்தம் வைத்தவன் தன் மார்பில் அவளை பொதிந்து வைத்தவனாக…

“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குத்தா” என்றான்.

“எனக்கும். இப்படியே உன் கைக்குள்ளவே இருந்துடுறேன் மாமா” என்றவளை இன்னும் இன்னும் நேசித்தான்.

“தினமும் நீதேன் கூட்டிட்டுப்போயி கூட்டியாரனும் மாமா. இல்லை அம்புட்டுதேன்” என்றாள்.

“அப்போ சைரன் வச்ச வண்டி வேணாமாட்டிக்கு?” என்று வீரன் சிரித்துக்கொண்டே கேட்க, “ஆபீஸ் வேலைக்கு மட்டும் யூஸ் பண்ணிக்கலாம்” என்றாள்.

அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன்,

“நேரமாச்சுது” என்க,

“இங்கன சாப்பாடு கொண்டுவரியா மாமா?” எனக் கேட்டாள்.

அவள் எதற்காகக் கேட்கிறாள் என்பது புரிந்து வீரன் கீழே செல்ல…

“இன்னிக்கு தானே வேலையில் சேரனும் அமிழ்தா? இனி கிளம்பி கோவை எப்படி போறது?” என விசாரித்தார் பாண்டியன்.

“கோவை இல்லைங்க ஐயா. மதுரை தான். சும்மா என்னைய சீண்டிட பொய் சொல்லியிருந்தாள்” என்று அனைவருக்கும் பொதுவாக சொல்லியவன், யாரையும் கண்டு கொள்ளாது தட்டில் உணவினை வைத்து எடுத்துக்கொண்டு சென்றான்.

“ம்க்கும்…” லிங்கம் தொண்டையை செருமிட…

“ராவுல நீயி வந்து கொண்டுப்போறியே! நான் கண்டுகிட்டனாடே?” என்று வீரன் கிசுகிசுக்க லிங்கம் கையெடுத்துக் கும்பிட்டான்.

“அது…” என்ற வீரன், “நீயி சாப்பிட்டுடாம, ஒழுங்கா அங்கைக்கு வெட்டிக் கொடுடே!” என்று லிங்கத்தின் கையிலிருந்த பழங்கள் மற்றும் கத்தியை பார்த்துக் கூறியவனாக நகர்ந்தான்.

வீரன் உணவினை எடுத்து வருவதற்குள் மீனாள் புடவை உடுத்தி தயாராகி இருந்தாள்.

உணவு ஊட்டிவிட்டவன், அவள் பொட்டு வைக்க மறந்திருக்க, தானே வைத்துவிட்டான்.

இருவரும் ஒன்றாக கீழே வந்தனர்.

“ஆல் தி பெஸ்ட் மீனாக்குட்டி” என்ற லிங்கம் அவளை தோளோடு அணைத்து விடுக்க, மற்ற அனைவரும் வாழ்த்துக்கூறினர்.

“பத்தரைக்குத்தேன் நல்ல நேரமாட்டிக்கு கண்ணு. அப்போ கையெழுத்து போடு” எனக்கூறி ஆசீர்வதித்து திருநீறு பூசிவிட்டார் மீனாட்சி.

“இன்னைக்கு பதினோரு மணிக்கு அங்கைக்கு செக்கப்டே! சோலியில மறந்துப்புடாத. பத்திரமா கூட்டிட்டுப்போயி வரணும்” என்று லிங்கத்திடம் கூறிய வீரன்,

“வண்டியை வேகமா ஓட்ட சொல்லி இடும்பு பண்ணக்கூடாது” என்று அங்கையையும் எச்சரித்தான்.

அதன் பின்னர் வீரன் மீனாளை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அழைத்துச் சென்றான்.

மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகள் அனைவரும் அங்கு இருந்தனர். அனைவரும் மீனாளை வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

பணி நியமன பதிவேட்டில் அனைவரின் முன்னிலையிலும் கையெழுத்திட்டவள், தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில், புன்னகை முகமாக தன்னை பார்த்து நின்றிருந்த கணவனை விழிகளால் பருகியபடி சென்று அமர்ந்தாள்.

மற்றவர்கள் தத்தம் பணிக்கான சென்றிட… மீனாளின் அருகில் வந்த வீரன்…

“உன் மனசாட்சிக்கு உண்மையா இருத்தா. அது போதுமாட்டிக்கு” என்றவன்,

“வாழ்த்துகள் திருமதி.தங்கமீனாள் வீர அமிழ்திறைவன் ஐ.ஏ.எஸ்” என்று அவளின் கரம் பற்றி குலுக்கினான்.

மீனாள் பளீரென்று புன்னகைத்தாள்.

“வேலை முடிச்சிட்டு போன் போடுத்தா வந்திடுறேன்” என்று சென்றுவிட்டான்.

அந்த இருக்கைக்கான பணிகள் என்னென்ன என ஏற்கனவே பயிற்சிகள் பெற்றிருந்ததால் எளிதாகவே அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டாள்.

இந்த பதவியால் பல எதிரிகளை சம்பாதிக்க நேரிடுமென தெரிந்தாலும், யாவும் வீரன் இருக்கும்போது சமாளித்திடலாம் என்ற திடத்தோடு தன் பணியை தொடங்கியிருந்தாள்

தன் பதவியின் மூலம் தன்னுடைய மாவட்டத்திற்கு என்னென்ன நன்மைகள் செய்திட முடியுமோ, அவற்றை பட்டியலிட்டு ஒவ்வொன்றாக செய்யவும் தொடங்கியிருந்தாள்.

பணியில் எத்தனை வேகம் இருந்தாலும், வீரனுடனான வாழ்வை பல பிரிவுக்கு சேர்த்து வைத்து நிதானமாக அதீத மகிழ்வாய் ஆழ்ந்து அனுபவித்து வாழ்ந்தாள்.

வீரன் தன்னுடைய உயிரானவளை தன் மார்பில் வைத்து தாங்கினான் என்று தான் சொல்ல வேண்டும்.

பணிச்சுமை எத்தனை அதிகமாக இருந்தாலும், தங்களின் இணைக்கான நேரத்தை தவிர்த்ததே கிடையாது.

இருவரின் அந்நியோன்யமான தாம்பத்ய வாழ்வினை குடும்பத்தினர் அனைவருமே ரசித்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.

நாளுக்கு நாள் வீரனின் காதல் கூடுவதை மீனாள் உளமார உணர்ந்தாள்.

இரண்டு மூன்று மாதங்கள் செல்ல, மீனாட்சி குழந்தை வரவை பற்றி மீனாளிடம் நேரடியாகவே கேட்கத் துவங்கினார்.

“வரும் போது வரும்” என்று வீரன் அவரின் வாயினை அடைத்துவிட்டான்.

ஆனால் மீனாள் வருந்தத் தொடங்கியிருந்தாள். வீரனுக்கு தெரியாது.

அடுத்த மாதம் அங்கைக்கு ஒன்பதாம் மாதம். வளைகாப்பு வைப்பதைப்பற்றி பேசிட மருதனும், மகாவும் மாலை போல் வந்திருந்தனர்.

மீனாளை வீட்டில் விடுவதற்காக வந்த வீரன், வாயிலோடு ஆலையில் வேலையிருப்பதாக சென்றுவிட்டான்.

பெரியவர்கள் எல்லோரும் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

நல்ல நாள் பார்த்து தேதியெல்லாம் முடிவெடுத்திருந்தனர்.

விடயம் அறிந்து மீனாள் மகிழ்வாய் அங்கையை அணைத்து விடுவித்தாள்.

“இப்போதைக்கு புள்ளை ஏதும் வேணாமின்னு இருக்கீங்களா மீனாள்?” மகா தான் கேட்டிருந்தார்.

“அப்படிலாம் எதுவும் இல்லம்மா!” என்ற மீனாளின் குரல் அடங்கி ஒலித்தது.

“பின்ன ஏன் நாள் தள்ளாமல் இருக்கு. இந்த மாசம் கூட விலக்கு ஆயிட்டன்னு அபி சொன்னாள்” என்ற மகா, “வேலை வேலைன்னு ஓடாம, கொஞ்சம் குடும்ப வாழ்க்கையிலும் அக்கறை காட்டு. அது அது காலா காலத்தில் நடந்தால் தான் பொண்ணுக்கு மதிப்பு” என்றார்.

மகளை வருந்தச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் மகாவுக்கும் துளியும் இல்லை.

மற்றவர்கள் பேசிடும் முன்பு தான் பேசிவிட்டால் அவர்கள் பேசிடமாட்டார்களே என்ற எண்ணம் அவருக்கு.

மகளை பேறுகால வயிற்றோடு பார்த்திடமாட்டோமா என்கிற தவிப்பு அது.

அவளுடன் திருமணமான நாச்சி குழந்தையோடு வலம் வருகிறாள். இரண்டு வருடங்கள் முன்பு திருமணம் நடந்த அங்கைக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்க இருக்கிறது. இதில் மீனாள் மட்டும் குழந்தையின்றி இருப்பது அவருக்கு மட்டுமல்ல குடும்பத்துக்கே மன வருத்தத்தை அளித்தது.

அந்த வருத்தத்தில் பேசிவிட்டார்.

“எல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பா நடக்கும். புள்ளைய ஏதும் சொல்லாத” என்ற பாண்டியன், மருதனோட வெளியில் சென்றிட,

“உங்களுக்குள்ள ஏதும் கட்டுப்பாடா இருக்கீய்ங்களா?” எனக் கேட்டார் மீனாட்சி.

சொந்த குடும்பமாவே இருந்தாலும் இப்படி தங்களின் உறவு விமர்சிக்கப்படுவது மீனாளுக்கு வலியாக இருந்தது.

“இல்லை அம்மத்தா” என்ற மீனாள் வெளிவரத் துடிக்கும் அழுகையை கட்டுப்படுத்தி நின்றாள்.

“சும்மா புள்ளைய ஏதும் பேசிக்கிட்டு… வர நேரம் வரட்டும்” என்ற அபி, “ஆதங்கந்தேன் கண்ணு. இந்த வூட்டோட சொத்தே அமிழ்ததேன். அவன் வாரிசை ஐஞ்சு வருசம் செண்டும் பார்க்க முடியலையேன்னு தான் பேசிப்புட்டாக. மனசுல வச்சிக்காதத்தா” என்று மீனாளின் முகம் துடைத்து அனுப்பி வைத்தார்.

பார்த்துக் கொண்டிருந்த அங்கைக்கே மீனாளின் கலங்கிய முகம் என்னவோ போலிருந்தது.

எப்படியும் மீனாள் இதனை வீரனிடம் சொல்லமாட்டாளென்று, இரவு வீரன் வந்ததும் ஒரு வார்த்தை மாறாது அவனிடம் சொல்லிய பின்னரே உறங்கச் சென்றாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 44

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
39
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. அவளுக்குள்ளே காரணம் தெரியாத தவிப்புகள்…