Loading

யான் நீயே 4

வீரன் வீசிச்சென்ற காதல் அம்புகள் இதயத்தை தைத்திட, ரணமாக மாறிவிட்ட சுவட்டினை கடந்து தடம் பதித்திட முடியாது கன்னம் உருண்டோடும் நீரினை துடைக்கத் தோன்றாது அவன் சென்ற திசையையே வெறித்தவளாக சிலையாகியிருந்தாள்.

“ஆசைப்பட்டது. சொல்லிட்டாய்ங்க போல!”

அசையாது நின்றிருந்த மீனாளின் இடதுபக்கம் தோளில் தட்டியவனாக வலதுபக்கம் வந்து நின்றான் லிங்கம்.

 

“மாமா…” பீறிட்டு வந்த கேவலை அவனின் மார்பில் புதைத்தாள்.

 

“டேய் மீனாக்குட்டி… அழுவுறியா நீயி? நான் வீரா மாமாவை காதலிக்கிறேன் லிங்கு மாமா. கட்டிக்க யார்கிட்ட கேட்ணுமாட்டிக்குன்னு என் கை பிடிச்சுக்கிட்டு தைரியமா கேட்ட பதினாறு வயசு மீனாள் இல்லையே இது” என்ற லிங்கம், அவளின் தலையை அழுத்திக் கொடுத்தான்.

 

“எனக்கு அவிங்க வேணாம் மாமா.” விசும்பலோடு மொழிந்தாள்.

 

“நெசமாவா… என் அண்ணே உனக்கு வேணாமா?” சிறு புன்னகையோடு வினவினான்.

 

இரு பக்கமும் தலையை ஆட்டினாள்.

 

“அந்த அய்யனார் அப்போ வேணாமா?”

 

“வேணாம்.”

 

“வேற யாருக்காச்சும் தார வார்த்திடுவோமா?”

 

“தெரியலையே!” அவனது மார்பிலிருந்து முகத்தை உயர்த்தி கருவிழிகள் பந்தாட கூறியவளின் உடலில் அத்தனை நடுக்கம்.

 

“என்னடா… இப்போ என்னாவாகிப்போச்சாம்? அன்னைக்கு அண்ணே பேசுனது தப்புத்தேன். கட்டிக்கிட்டு பழிவாங்கு. ஓடவிடு. சத்தம் காட்டாது வாங்கிப்பாங்க. முடியலன்னு கிடைக்கிற வாய்ப்பை விட்டுப்போட்டு பொறவு பொலம்பக் கூடாது” என்றான் அத்தனை கனிவாக.

 

“நானு சரின்னு மண்டையை ஆட்டிபோட்டாக்கா, அன்னைக்கு அவங்க பேசுனது நெசமுன்னு ஆகிப்புடாதா மாமா?” அவளின் உள்ளத்து பயம் வார்த்தையாக வெளி வந்திருந்தது.

 

“உன் மாமன் தானே! அவிங்க அன்னைக்கு சொன்னது நெசமுன்னே ஆவட்டுமே! உனக்கில்லா உரிமையா? வேண்டான்னு ஒதுங்கிப்போறது அம்புட்டு ஈஸியா தெரியலாம். ஆனால் காலத்துக்கும் வலி கொடுத்துப்புடும். வீம்புக்குன்னு ரோசிக்காம, அதை கடந்து எப்படி வாழனுமுன்னு ரோசித்தா. நீயில்லாம அண்ணே நெஞ்சுக்கூடு காலியாகிப்போவும்” என்றான்.

 

தன்னிலிருந்து மீனாளை பிரித்து குழந்தைப்போல் முகம் துடைத்து உச்சியில் உள்ளங்கை வைத்து அழுத்தம் கொடுத்தான்.

 

“இருட்டுல என்னடா பஞ்சாயத்து. அங்கிட்டு ஏதோ பேச்சு வார்த்தைன்னு அம்மத்தா கூப்பிடுது” என்று வந்த பிரேம், மீனாளின் சிவந்திருந்த விழிகளை கண்டு அர்த்தமாக ஏறிட்டான்.

 

“உன்னையத்தேன் வெரசா வர சொன்னாய்ங்க” என்று சொல்ல லிங்கம் மீனாளிடம் அழக்கூடாது எனும் விதமாக கண்காட்டிவிட்டு சென்றான்.

 

“என்னடா… அழுதியா?”

 

“அண்ணே!”

 

“உன் மாமாடா. நாங்க ஆள் மாத்தி ஆள் சொன்னாதேன் உனக்குத் தெரியுமாட்டிக்கு? அன்னைக்கு நான் கொஞ்சம் புத்தியோடு இருந்திருக்கலாம். என் செயல் உன் மனசை காயப்படுத்துமின்னு நினைக்கல” என்ற பிரேமிடம் அத்தனை வருத்தம்.

 

“நான் செஞ்சதுக்கு நாச்சியா என்னை திரும்பிக்கூட பார்க்கமாட்டேங்கிறா! அதுக்காக அவ மனசுல நானில்லைன்னு அர்த்தமாகிப்போவாது. என்னைத் திட்டிக்கிட்டேனாலும் விரும்பிக்கிட்டுதேன் இருக்காள். என்ன, அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி வெளிப்படையா சொல்லமாட்டேங்குறா. அவளை மாதிரி இருன்னு உன்னைய சொல்லல. மாமாவை மிஸ் பண்ணிடாதேன்னு சொல்றேன்” என்றவன், “மனசு விட்டு பேசுத்தா. நாலு அடிகூட அடிச்சிப்போடு. வேணான்னு நின்னு அவரை உக்கிப்போக வச்சிப்புடாத. உனக்கு தான் வலியாவும்” என்றான்.

 

மீனாளுக்கு தனக்காக லிங்கம் பேசியதை விட பிரேம் பேசுவது ஆச்சரியமாக இருந்தது. சொல்லப்போனால் அவளுக்காக அவன் பேசியதில் தான், பிரேமுக்கு அண்ணனாக தன் மீது எவ்வளவு பாசம் உள்ளதென்றே தெரிந்தது.

 

பிரேம் என்றுமே வெளிக்காட்டிடாத பாசம் அது. இன்று காட்டியிருந்தான். லிங்கமிடமுள்ள நெருக்கம் கூட மீனாளுக்கு பிரேமிடம் இருந்ததில்லை. அண்ணன் தங்கை என்கிற முறையில் பேச்சு, விளையாட்டு, சண்டை என எல்லாம் இருந்திருக்கிறது. உணர்வுகள் கூடிய அன்பு, அக்கறை இல்லையென்றில்லை. வெளிப்படுத்திட வாய்ப்பு இல்லாமல் போனதே காரணம். இன்று புரிந்து கொண்டாள்.

 

“அண்ணே!”

 

“வலியில்லாம இங்கிட்டு எதுவுமே கைக்கு வராதுடா பாப்பா.”

 

ஒற்றை வரியில் வாழ்வின் நிதர்சனத்தை இயல்பாய் சொல்லியிருந்தான்.

 

“அண்ணே இங்குட்டு நின்னு எந்த கதையை பேசுறீங்க. அங்கன உன் லவ்சுக்கு எண்ட் கார்டு போட்டுக்கிட்டு இருக்காய்ங்க” என்று வந்த வேகத்திற்கு அங்கை தன் அண்ணனிடம் மூச்சுவிடாது சொல்ல, பிரேமும் மீனாளும் என்னவென்று புரியாது தான் பார்த்தனர்.

 

“அச்சோ மொத நீயி அங்குட்டு வாண்ணே!” என்று பிரேமின் கையை இழுத்துக்கொண்டு செல்ல மீனாளும் பின் சென்றாள்.

 

அனைவரும் உண்டு முடித்து, தார் பாய் விரித்து ஒன்றாக அமர்ந்து கதை பேசிட… ஒன்றாக சேர்ந்திருக்கும் பொழுது மனசுக்கு ஒருவித நிறைவை கொடுக்க இன்றே நல்ல விடயத்தை பேசி ஆரம்பிப்போமென்று எண்ணி மீனாட்சி அப்பத்தா பேச்சை ஆரம்பித்தார்.

 

“உம் உடன்பிறந்தவ வரான்னு மகா சொன்னா(ள்) மருதா. எப்போ வாராய்ங்க?” என்று பொதுவான பேச்சினை துவங்கிக் கேட்டார்.

 

இந்த கேள்வி வந்தததுமே அபிராமி தன் கணவர் பாண்டியனை ஏறிட்டு உதடு சுளித்தார்.

 

“பண்ணண்டு வருசமாச்சு அத்தை. இப்போதான், அந்த மனுசனுக்கு வர மனசு வந்திருக்கு. வசந்தி மட்டுமில்லை. பிள்ளைங்க, அவரும் கூட வாராய்ங்க” என்ற மருதன், “அந்த மனுசன் சலம்பல கூட்டாமா கெளம்பனுமுன்னு இப்போவே வெசனமா கிடக்கு” என்று கூறினார் மருதன்.

 

“இப்போவும் அப்படியேவா இருப்பாய்ங்க. இளம் வயசுல சூடத்தேன் இருக்கும். இப்போ புள்ளைங்க வளந்து அனுபவம் வந்திருக்குமே அப்பு” என்று நீ பயப்படும்படி ஒன்றுமாகாது என்பதை மறைமுகமாக தெரிவித்த அப்பத்தா, “வசந்திக்காக பாக்க வேணுமாட்டிக்கு. நம்மள விட்டாக்கா அவளுக்கு உறவு யாரு?” என்றார்.

 

வசந்தி மருதனின் தங்கை. பாண்டியனுக்குத்தான் முடிக்க நினைத்து ஏற்பாடாகியது. ஆனால் நிச்சயத்துக்கு முன்னவே, படித்த மாப்பிள்ளை தான் வேண்டுமென்று வசந்தி சொல்லிவிட, மீனாட்சி முதல் மருதன் வரை வருத்தம் இருந்தாலும், தன்னுடைய ஆசையை புதைத்துவிட்டு மற்றவர்களைத் தேற்றியது பாண்டியன் தான். 

 

அத்தை மகளென்று உடன் வளர்ந்ததால் பாண்டியனுக்கு ஆசை தானகவே வந்திருந்தது.

 

தங்களை சமாதானம் செய்தாலும் பாண்டியன் உள்ளுக்குள் வருந்துவதை மாமனாக இல்லாது நண்பனாக புரிந்துகொண்ட மருதன், வசந்தி அருகிலேயே இருந்தால் பாண்டியனுக்கு திருமணம் செய்துகொள்ளும் விருப்பம் வராது. அவளை பார்க்கும் நேரமெல்லாம் அவனின் ஆசை நிராசையான வலி தான் முன் வரும். அது பாண்டியனுக்கு நல்லதில்லை என்று வசந்தி கேட்டதுபோலவே, நல்ல படித்து அரசு வேலையிலிருந்த நல்லானுக்கு சீக்கிரம் மணம் முடித்து அனுப்பி வைத்திட்டார் மருதன்.

 

தங்கை நல்ல நாளின் போது வந்து சென்றால் போதுமென்று நினைத்திருக்க, நல்லான் மதுரையிலிருந்து மாற்றல் வாங்கிக்கொண்டு சென்னைக்கு சென்றவர், வருடம் ஒருமுறை அழைத்து வருவார். வரும் போதெல்லாம் கிராமத்தில் விவசாயம் செய்யும் நீங்களெல்லாம் எனக்கு நிகரா என்பது போல் தான் நடந்து கொள்வார்.

 

அப்படி ஒருமுறை வந்திருக்கும்போது…

 

மருதனை வேலை ஏவியபடி அவர் காட்டிய நாட்டாமை தனம் வீரனுக்கு பிடிக்காதுப்போக…

 

அவர் குடிக்க வைத்திருந்த தண்ணீர் சொம்பில் கோமியத்தை பிடித்து வைத்துவிட்டான்.

 

சொம்பு செம்பு பாத்திரமாக இருந்திட நீரின் நிற வித்தியாசம் தெரியாது அவர் குடித்துவிட… தொண்டையில் இறங்கிய பின்னரே குமட்டி வெளியில் துப்பியிருந்தார் நல்லான்.

 

அவர் அசூயையாக முகத்தை வைத்துக்கொண்டு சொம்பினை ஆராய,

 

வீரன் தன் படையுடன் அவரை பார்த்து கேலி செய்து சத்தமிட்டு சிரித்துவிட்டான்.

 

“என்ன பெரியப்பா கோமியத்துக்கும், தண்ணிக்கும் வித்தியாசம் தெரியாதமாட்டிக்கு குடிச்சிப்போட்டீங்க போல” என்று சிரித்ததோடு,

 

“கை நீட்டுனா உட்கார நாற்காலியை உங்கனால எடுத்துப்போட்டுக்க ஆவாதா? எம் மாமன் வந்து இருக்கை போட்டாத்தான் இருக்க முடியுமோ?” என்றும் கேட்டிருந்தான்.

 

அன்று அறுப்பு வேலை முடித்து அலுப்பாக அப்போது தான் வந்து திண்ணையில் அமர்ந்த மருதனை உட்காரக்கூட விடாது,

 

“காத்தாட உட்காரனும். இப்படி வெளியில சேர் கொண்டு வந்து போடு” என்று அதிகாரமாக உரைத்திருந்தார்.

 

அதற்குத்தான் வீரன் வைத்து செய்திருந்தான் அவரை.

 

அன்று ஒரு ஆட்டம் ஆடிவிட்டு குடும்பத்தை கிளப்பிக்கொண்டு சென்றவர் தான் பனிரெண்டு வருடங்களாக ஊர் பக்கமே வரவில்லை.

 

ஒவ்வொரு முறையும் மருதன் தான் சென்னை சென்று தங்கைக்கு பிறந்த வீட்டு சீர் செய்து வருவார்.

 

அப்படி பொங்கல் சீர் செய்ய சென்றபோது தான், வசந்தி இந்த பொங்கலுக்கு வருகிறோமென்று சொல்லியிருந்தார்.

 

“என்னைக்கு வாராய்ங்க?”

 

கேட்டது வீரன் தான்.

 

வீரன் கேட்ட தோரணையிலேயே பழைய நினைவில் பிரேமும், அங்கையும் வெடித்து சிரித்திட…

 

பாண்டியன் பார்த்த பார்வையில் பிரேம் லிங்கத்தை அழைக்க ஓடி வந்திருந்தான்.

 

“அப்பு மருதனுக்குன்னு இருக்க ஒரு உறவு வசந்தி தான். அப்போ ஏதோ சின்னப்புள்ள தெரியாம பண்ணிப்புட்டீங்க. இப்போ அந்த மாதிரிலாம் ஏதும் வேணாமாட்டிக்கு” என்ற அப்பத்தா முடிக்கும் முன்,

 

“அவீங்க உறவுன்னா நாங்க யாராம்? இம்புட்டு வருசம் உடனிருக்கும் எங்களைவிட அவிங்க உறவு பெருசாக்கும்?” வீரன் கேட்க நினைத்ததை லிங்கம் கேட்டிபடி வந்தமர்ந்தான்.

 

வீரன் மருதனைத்தான் அழுத்தமாக பார்த்திருந்தான்.

 

“நான் உடன் பிறந்த ரத்த சொந்தத் lதை சொன்னேன் அமிழ்தா” என்ற அப்பத்தா, “பாண்டியா சொல்லி வை. இப்போவே அடவு கட்ட ஆரம்பிச்சிட்டானுவ” என்றார்.

 

“லிங்கம்…”

 

பாண்டியன் பேசுவதற்கு முன்னவே,

 

“என்னங்க ஐயா?” என்று அடர்த்தியாகக் கேட்டிருந்தான் வீரன்.

 

“ஒண்ணுமில்லப்பு” என்ற பாண்டியன் மருதனை பாவமாக ஏறிட,

 

“எனக்காக ரோசிக்க, பார்த்துக்கன்னு நிறைய பேர் இருக்கீய்ங்க. ஆனால் வசந்திக்கு?” என்று நிறுத்திய மருதன், “மாப்பிள்ளைக்குன்னு பார்க்க வேண்டாம். வசந்திக்காக கொஞ்சம் அமைதியா இருங்க” என்றார்.

 

“அது வரவரு நடந்துகிறதை பொறுத்து” என்ற வீரனின் அடாவாடியில் மொத்த குடும்பமும் அவனை பாவமாக பார்த்தனர்.

 

“அண்ணே குடும்பத்தையே ஆட்டம் காங்(ண்)க வைக்கிறீங்க” என்று லிங்கம் வீரனின் காதில் கிசுகிசுக்க…

 

“நாளைக்கு வாராய்ங்க” என்று மருதன் அப்பத்தாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

 

வீரன் அடவடியாக நடந்துகொண்டாலும், அவன் பக்கம் சரியென்பதிருக்கும் என்பதால் அனைவரும் அமைதியாக அடுத்த பேச்சிற்கு தாவினர்.

 

“பொறவு மருதா… பாண்டியனும் எனக்கும் ஒரு ரோசனை. உன்கிட்ட எப்படியும் சொல்லியிருப்பான். இருந்தாலும் ஒண்ணா கலந்தோசிப்போம்” என்ற அப்பத்தா,

 

“நாச்சியாக்கு கல்யாண குரு வந்திட்டு அப்பு. வயசும் இருவத்தி மூணு ஆவுது. காலாகாலத்துல பண்ண வேண்டியதை பண்ணிப்புடுவோமப்பு” என்றார்.

 

மகாவின் மடியில் தலை வைத்து படுத்திருந்த நாச்சி அதிர்ந்து வெடுக்கென்று எழுந்திருந்தாள்.

 

“எதுக்கட்டி இம்புட்டு வேகம்?”

 

அபிராமி அதட்டிட அவள் கண்டு கொள்ளாது…

 

“எனக்கு இப்போ கல்யாணமெல்லாம் வேண்டாம்” என்று கூறினாள்.

 

வீரன் தான் அங்கையை பிரேமை கூட்டிவருமாறு யாருக்கும் தெரியாது அனுப்பி வைத்தான்.

 

வந்து விடயமறிந்த பிரேமுக்கு என்ன செய்வதென்று தெரியாது கிருகிருத்து நின்றது ஒரு நொடி தான். அடுத்த நொடியே வீரனை பார்த்தான்.

 

வீரன் அழுத்தமாக இமை மூடி திறந்திட,

 

“நம்ம வீட்டுக்கு மூத்தவைங்க நீங்கதான். உங்க சொல்லுக்குத்தேன் குடும்பமே கட்டுப்பட்டு நிக்குது. அதனால உங்ககிட்ட கேட்கிறது தான் சரி” என்று அப்பத்தாவின் முன் சென்று மண்டியிட்டு அமர்ந்த பிரேம்…

 

“அப்போ புரியாத வயசு ஈர்ப்புன்னு என்னென்னவோ பேசுனீய்ங்க. இப்போ அப்படியில்ல அம்மத்தா. இப்பவும் நாச்சியா தான் என் பொண்டாட்டின்னு இங்க துடிக்குதே” என்று இதயப்பகுதியை தொட்டு தன்னிரு கையையும் அவர் முன் ஏந்தியிருந்தான்.

 

“நாச்சி தான் என் பொண்டாட்டின்னு இங்க சொல்லுதே.”

 

பிரேமின் வார்த்தையில் அத்தனை நாள் அடக்கி வைத்திருந்த நேசமெல்லாம் பீறிட்டுக்கொண்டு வெளியேறத் துடித்திட, நாச்சியின் கண்கள் மழையென பொழிந்தன.

 

அவளின் கண்ணீரே மற்றவர்களுக்கு அவள் மனமும் பிரேமை விரும்புகிறது என்பதை காட்டிக்கொடுத்திட்டது.

 

வீரன் பாண்டியனை பார்க்க…

 

மகனின் பார்வையில் பொருள் புரிந்த பாண்டியன் மருதனின் கையினை பற்றிக்கொண்டார்.

 

இந்நிகழ்வு அன்றைய தினத்தை அனைவருக்கும் நினைவூட்டியிருந்தது. கனத்த கணம். கடக்கவே முயன்றனர்.

 

“உனக்கு உரிமையிருக்கு அப்பு. நீயி கேக்குற. அவளுக்கும், பெத்தவை(ய்)ங்களுக்கும் விருப்பம் இருக்கணுமே” என்ற மீனாட்சி வீரனை பார்க்க, அவனோ சிறு தலையசைப்பில் தன்னுடைய சம்மதத்தை தெரிவித்தான்.

 

அடுத்து பாண்டியனிடம் கேட்க,

 

“என் மாமனுக்கு அவர் மகனை மருமகனா கொடுக்க விருப்பமின்னாக்கா. எனக்கு சம்மதம்தேன்” என்றார்.

 

மருதனுக்கும் அந்த ஆசை உள்ளதே! நாச்சி பிரேம் திருமணம் மட்டுமா. அவரின் ஆசை வீரன், அவருக்கு மருமகனாக வர வேண்டுமென்கிற ஆசையும் அடியில் புதைத்து வைத்திருக்கிறாரே.

 

நடந்த நிகழ்வு ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருக்க… பிரேம், நாச்சி அவற்றை எளிதாக கடந்ததைப்போல் மீனாள் கடக்காது மருகி தவிக்கிறாள் என்பது அறிந்தே வீரனுக்குத்தான் மீனாள் எனும் எண்ணத்தை ஆசையை மறைத்து வைத்திருக்கிறார்.

 

மருதனுக்கு பிள்ளைகளின் ஆசையை தவிர்த்து வேறென்ன இருந்திடப்போகிறது.

 

“நாச்சிக்கு சம்மதமின்னா நாள் பார்க்கலாம்” என்றார் மருதன்.

 

“அபிராமி, மகா நீங்க ரெண்டேரும் என்ன சொல்றீங்க?” என்ற அப்பத்தா வீரனுக்கு நாச்சியை கண்காட்டினார்.

 

பெண்கள் இருவரும் முகம் மலர சம்மதம் தெரிவிக்க, வீரன் எழுந்து நாச்சியின் முன் அமர்ந்தான்.

 

“உம் மனசு இன்னைக்கு இல்லை, அன்னைக்கே எனக்கு தெரியும். அதனால் தானோ என்னவோ பிரேமிடம் இயல்பாட்டுக்கு என்னால இருக்க முடிந்தது. பழசு நிகழ்கால சந்தோஷத்துல மறந்துபோவும். மறக்க வைக்க பிரேமுடைய உன் மேலான அன்பு போதுமின்னு நினைக்கேன். உனக்கு அவன் மேலயும் அவன் அன்பு மேலயும் நம்பிக்கை இருந்தா மட்டும் சரின்னு சொல்லு. கொஞ்சமே கொஞ்சம் பழைய வருத்தம் இருந்தாலும், இந்த கல்யாணம் வேண்டாம். பின்னாடி என்னைக்காவது நீயோ, அவனோ சொல்லிகாட்டிட்டீ(ய்)ங்கன்னா… அங்க உங்க காதல் சொல்லாமலே செத்துப்போவும்” என்றான்.

 

வீரன் என்னவோ பேசியது அனைத்தும் அவனின் தங்கைக்காகத்தான். ஆனால், அவை யாவற்றையும் தனக்கும் பொருந்தும் வகையில் உள்வாங்கிக்கொண்டாள் மீனாள்.

 

வீரன் சொல்லுவது உண்மை வாக்கு. நாச்சியின் நிலையில் தானே மீனாளும் இருக்கின்றாள்.

 

வீரனைத்தான் இமை சிமிட்டாது பார்த்திருந்தாள் மீனாள்.

 

“நீயென்ன சொல்லுவியோன்னு பய ரொம்ப நேரமாட்டு தவிக்கிறான். நீயி வாப்பெட்டி தொறந்து வார்த்தையா சொல்லிபுட்டின்னா, எல்லாருக்கும் திருப்தி. அது வேணான்னாலும் சரிதான்” என்ற வீரன் தங்கையின் இரு கைகளையும் தன் கரங்களுக்குள் பொத்திக்கொண்டான்.

 

நாச்சியின் கரங்கள் அத்தனை சில்லிட்டிருந்தது.

 

நாச்சிக்கு அன்றைய நிகழ்வு வரை பிரேமின் மீது நேசமென்பதில்லை. ஆனால் அவன் சொல்லிய தருணம், புரிய வைக்கத் தெரியாது சொதப்பி வீரனிடம் நன்கு வாங்கிக்கட்டிய நொடி, தன்னைப்போல் பிரேமின் தடத்தை காதலாக நெஞ்சில் பதித்தாள்.

 

பிரேமின் அன்றைய செயல் நினைக்கும் கணமெல்லாம் நடுக்கத்தையே கொடுக்க…

 

இன்று இந்நொடி நினைக்கையில், அவனை கணவனாக தன்னருகில் நிறுத்தி எண்ணிப்பார்க்கையில் அன்றைய கத்தலும், முகத் திருப்பலும் சிறுப்பிள்ளைத் தனமாக தோன்றியதோடு தித்திப்பாய் துளி சுவை அகம் நிரப்பியது.

 

வீரனின் முகத்திலிருந்து தனது விழிகளை அகற்றி தன்னையே தவிப்போடு படபடப்பாய் பார்த்திருக்கும் பிரேமின் மீது அழுத்தமாக நிலைக்கவிட்டவள்,

 

“சம்மதம்” என்று சொல்லிட, சிறுவர்கள் கத்தி அதகளம் செய்தனர்.

 

“மதினி” என்ற கூவலோடு மீனாள் நாச்சியின் தோள்களை கட்டிக்கொள்ள அவளின் முகத்தில் அப்படியொரு மகிழ்வு.

 

தன்னவளின் ஒளி கூடிய முகத்தை மிக அருகில் கண்ட வீரன், மூச்சு முட்டிட பட்டென்று பின்னந்தலையை கோதியவனாக எழுந்து லிங்கம் அருகில் சென்றிருந்தான்.

 

மருதனின் கண்கள் பனித்துப்போயின.

 

சிறியவர்களின் மனங்களில் வடுவாய் தங்கிவிட்ட நிகழ்வு, அவர்களின் நல்வாழ்விற்கு தடையாய் அமைந்திடுமோ என்று மருதன் கவலை கொண்ட நாட்கள் பல. இன்று அந்த கவலைக்கெல்லாம் விடுதலை கிடைத்தது போலிருந்தது.

 

‘இதேபோல் என் வீரனை மீனாளுக்கு முடிச்சு கொடுத்துப்புடு மீனாட்சி.’ மருதன் மனதார அந்த மதுரை மீனாட்சிக்கு வேண்டுதல் விடுக்க, வீரன் இருக்கும்போதே சந்தோஷத்தில் தன்னுடைய மாமனை ஆரத் தழுவியிருந்தார் பாண்டியன்.

 

“ஏற்கனவே இதுங்க பாசம் நெஞ்சை சிலிர்க்க வைக்கும். இப்போ இன்னும் அதிகமாகுமே! எப்படிண்ணே சமாளிக்கப்போறோம்.” லிங்கம் வீரனிடம் முணுமுணுக்க…

 

“இப்போ இருக்க மாறியே கண்டுக்காம இருந்திடு மாமா” என்றாள் அங்கை.

 

“சின்னக்குட்டி சொல்றதும் வாஸ்தவம்” என்ற லிங்கம், “இந்த மாமா மீனாளுக்கு அடுத்து ரொம்ப கேப் விடாமல் எனக்கொரு பொண்ணு பெத்திருக்கலாம். இவங்களுக்கு அடுத்து நீயும் மீனாகுட்டியும் ஜோடி ஆகிடுவீங்க. நான் மட்டும் சிங்கிலா எனக்கென பிறந்த தேவதை எங்கிருக்காளோன்னு ஊர் ஊரா தேடணும்” என்றான். சோகமாக.

 

“இப்போ மட்டும் என்னவாம். என்னைய கட்டிகிடு மாம்ஸ். நான் உன்னைய கண் கலங்காம வச்சி பார்த்துக்கிறேன்” என்று அங்கை கேலியாய் சொல்லிட, அவளின் தலையிலேயே கொட்டியிருந்தான் லிங்கம்.

 

“இதெல்லாம் விளையாட்டுப் பேச்சில்லை சின்னக்குட்டி” என்று அதட்டியும் இருந்தான்.

 

“ஏனாம்? என் மாமன்கிட்ட நான் விளையாடுறேன்” என்று அப்போதும் அங்கை லிங்கத்தை சீண்டிட, வீரனுக்கு இது அங்கையின் வழமையான விளையாட்டுப்போல் தெரியவில்லை. அவளின் உள்ளத்தை தான் இப்படி கிடைத்த வாய்ப்பில் வெளியிடுகிறாள் என்பதை புரிந்துகொண்டான்.

 

“அங்கை…”

 

வீரனின் கூர்மையான விளிப்பில்,

 

“என்ன மாமா? அப்படியே விளையாண்டா என்ன தப்பு?” என்று வீரனிடமும் கேள்வி கேட்டாள்.

 

“விளையாட்டா மட்டுமிருந்தா சரித்தேன்” என்ற வீரனை லிங்கம் அதிர்ந்து பார்க்க…

 

“அப்பத்தா என்னமோ பேசுது. அங்குட்டு கவனி” என்று லிங்கத்தை திசை திருப்பினான் வீரன்.

 

வீரன் உட்பொருள் வைத்து பேசியதிலேயே அவன் தன்னை கண்டுகொண்டான் என்பதில் அங்கைக்கு வருத்தமோ பயமோ ஏதுமில்லை. எல்லாவற்றிலும் தனக்கு துணை நிற்கும் தன்னுடைய மாமன் இதில் முட்டுக்கட்டை போடுகிறாரே என்று முகம் சுருங்கிப்போனாள்.

 

“பொங்க செண்டு பத்து நா(ள்) கழிச்சு தாம்பூலம் மாத்தி கல்யாணத்துக்கு தேதி குறிப்போம்” என்ற அப்பத்தாவின் சொல்லுக்கு அனைவரும் சம்மதம் தெரிவிக்க…

 

பிரேம் ஓடி வந்து வீரனை கட்டிக்கொண்டான்.

 

“தேன்க்ஸ் மாமா. தேன்க்ஸ்” என்று தழுதழுப்பாக மொழிந்தான்.

 

“உன் காதலே உன்னைய ஜெயிக்க வச்சிருக்குடே! எனக்கு என்னத்துக்கு தேன்க்ஸ் சொல்றீரு. இனிமேட்டாவது உள்ளுக்குள்ளே மருகாம சிரிச்சிட்டு இருடே” என்றான் வீரன்.

 

அன்றைய தினம் பிரேமின் மீது அதிக கோபத்தில் கொதித்ததும் வீரன் தான், அடுத்த நாளே பிரேமின் மனதை புரிந்துகொண்டு இன்று வரை அவனுக்கு நம்பிக்கையாய் இருந்ததும் வீரன் தான். நாச்சியின் விருப்பமும் பிரேமென்று தெரிந்ததால் கூட இருக்கலாம்.

 

“பொறவு… கொள்ள ராத்திரி ஆகிப்போச்சுதே! வூட்டுக்கு பொறப்படுங்க. காலையில சூரியன் பொங்க வைக்க வெள்ளன எந்திரிக்கணுமே!” என்று அப்பத்தா கூறிட, ஒவ்வொருத்தராக தங்களின் வீடு நோக்கி செல்லத் துவங்கினர்.

 

“மாமா நாச்சிகிட்ட பேசணுமே?”

 

மீனாள், அங்கையை கூட்டிக்கொண்டு மருதனும் மகாவும் தங்கள் வீடு செல்ல,

 

அபிராமிக்கும் அப்பத்தாவுக்கும் பின்னால் பாண்டியனும் சென்றிட, அண்ணன்களுடன் செல்ல பின் தங்கிய நாச்சியை கவனித்து வீரனிடம் கேட்டிருந்தான் பிரேம்.

 

“பாருண்ணே புதுசா பெர்மிஷனுலாம் கேக்குறான். முடியாதுன்னு சொன்னாக்கா போயிடுவானாமா?” லிங்கம் சீண்டிட பிரேம் அப்பாவியாக இருவரையும் பார்த்தான். வீரன் சிரித்துவிட்டான்.

 

“எம் பொழப்பு உங்களுக்கு சிரிப்பா இருக்கோ? மொத அவள் என் கைக்குள்ள வரட்டும். அதுக்கப்புறம் யாருட்டையும் கேட்டு பேசணும் அவசையமில்லை” என்று முறுக்கினான் பிரேம்.

 

“டேய் போதும்டா உன் வீராப்பு. நாச்சியும் பேசணும் நினைக்குது. அதான் தேங்கி நிக்குறா(ள்). பேசிபுட்டு கொண்டாந்து வுடு. நாங்க போறோம்” என்ற வீரன் லிங்கத்தை கூட்டிக்கொண்டு தங்கைக்கு பார்வையால் தைரியம் அளித்துச் சென்றான்.

 

“அண்ணே நாம வேணுன்னா அங்குட்டு அந்த வரப்புல நிப்போமா?”

 

“ஒத வாங்காம வாடா. எம்புட்டு நாளுக்கு துணைக்கு நிப்ப? அவங்கதான் ஜோடின்னு ஆகிப்போச்சு. அப்புறமும் என்னத்துக்கு வூடால நாம?”

 

தங்கைக்கு காவல் நிற்போம் என்ற தம்பியை அண்ணன் இழுத்துச் சென்றான்.

 

அன்றைய படபடப்போ, பயமோ நாச்சிக்கு இன்று பிரேமின் அருகில் இல்லை.

 

“அழகு…”

 

பிரேமின் ஒற்றை அழைப்பிற்கு அவன் விழிகளை நேருக்கு நேர் சந்தித்திருந்தாள்.

 

“இப்போ பயம் ஏதுமில்லையே? போற உன் அண்ணேங்களை கத்தி கூப்பிட்டிட மாட்டியே?” என்றான் பிரேம். கிண்டலாகத்தான். பேச வேண்டுமென நினைத்தவனுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.

 

அந்த நிகழ்வுக்கு பின் ஓரிரு மாதங்கள் மீனாள் வீரனின் முகம் கூட காணாது, அவனின் முன் வராது இருந்தாள். அதன் பின்னர் அப்படியிருக்க வீரன் விடவில்லை. உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் நீ என் முகம் பார்க்க வேண்டும். என்னிடம் பேசிட வேண்டுமென்று செயலால் வலியுறுத்தி, தன்னிடம் அவளை முன்னிறுத்தி விலகல் இல்லாமல் பார்த்துக்கொண்டான்.

 

ஆனால் நாச்சி பிரேமை மொத்தமாக தவிர்த்திருந்தாள். ஐந்தாண்டிற்கு பின் இன்று தான் அவன் முன் நிற்கின்றாள். அதனாலே பிரேம் அவ்வாறு வினவினான்.

 

நாச்சி இல்லையென்று தலையசைத்திட…

 

“ஜிவ்வுன்னு ஏறுது. இப்படி நீயி பக்கட்டு நிக்குறது. கொஞ்சம் முன்னுக்க என் கண்ணை பார்த்து சொன்ன சம்மதத்தை இப்போ சொல்லேன். கேட்கணுமாட்டி இருக்கு” என்றான்.

 

“பழசை எப்பவுமே பேசிடக்கூடாது. யார் மேல தப்போ சரியோ. அது இப்போ தேவையில்லை. உங்களை ரொம்ப பிடிக்கும். அந்த பிடித்தம் எல்லாத்தையும் சரி செய்திடுங்கிற நம்பிக்கை இருக்கு” என்றாள்.

 

நாச்சியே இவ்வளவு தெளிவா பேசும் போது பிரேமுக்கு வேறென்ன குழப்பம் இருந்திடப்போகிறது.

 

‘குடும்பத்திற்காக சரியென்கிறாளா?’ என்ற அவனின் உள்ளத்து கேள்விக்கு அவசியமில்லாமல் போயிருந்தது.

 

“நிஜமாவே பிடிக்குமா? அப்புறம் அன்னைக்கு ஏன் கத்துன?”

 

“இப்போ தான் அதை பத்தி பேச வேண்டாம் சொன்னேன்.” நாச்சியின் முகம் வாட,

 

“சரி சரி… இனி பேசமாட்டேன்” என்ற பிரேம், “ஒருமுறை கட்டிக்கவா? ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றான்.

 

“அண்ணேங்களை கூப்பிடணுமாட்டிக்கு!” நாச்சி மிரட்டிட பிரேம் தலைக்கு மேல் இரு கரம் கூப்பியிருந்தான்.

 

“அந்த மருத வீரய்ங்க மட்டும் வேண்டாம்த்தா. நான் கல்யாணத்துக்கு பொறவே எல்லாம் பண்ணிக்கிறேன்” என்று இப்போவே தன்னை அவளிடம் ஒப்புவித்தான்.

 

“சரி நான் போறேன்.” நாச்சி நகர, சட்டென்று கையை பிடித்திருந்தான்.

 

பட்டென்று பழைய பயம் உள்ளுக்குள் பிரவாகம் எடுக்க…

 

“அவீங்க உன் புருஷனாவ போறவைய்ங்க நாச்சி. உனக்கும் அவிங்களை ரொம்ப பிடிக்கும்” என கண்களை மூடிக்கொண்டு மனதுக்குள் உருப்போட்டு அவனின் தொடுகைக்கு அசையாது விறைத்து நின்றவள், நொடியில் இயல்பாய் அவனது கரங்களில் பொருந்தியிருந்தாள்.

 

“இப்போ மொத்த பயமும் போயாச்சா?”

 

“அண்ணே பேச மட்டுந்தேன் சொன்னாய்ங்க!”

 

“அப்போ விட்றவா?”

 

“இன்னும் ஒரு நிமிசம்” என்று சொல்லியவள் பல நிமிடங்கள் சென்ற பின்னரே அவனிலிருந்து விலகினாள்.

 

 

 

    

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 29

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
30
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

7 Comments

  1. இந்த பேச்சு வழக்கு தான் ரொம்ப அருமையா இருக்கு … மதுரை பக்கம் இருந்தாலும் நாங்க இப்படி எல்லாம் பேசுறது இல்ல … ஒரே குடும்பத்துக்குள்ள இருக்காங்க ஆனாலும் அவர்களுக்குள்ள இருக்கிற காதலை சொல்லிக்கிற விதம் … மாமா மகன் அத்தை மகன் மேலே இருக்கிற அன்பு … அண்ணன் தங்கை … அண்ணன் தம்பி … மாமா மச்சான் இப்படி எல்லா உறவும் வார்த்தைகளா படிக்கும் போது உணர்வு பூர்வமா உணர முடியுது …

    1. Author

      மகிழ்ச்சி… மனமார்ந்த நன்றி சிஸ்

  2. தடம் மாறாமல் மிக கவனமாக உறவுகளை மதித்து பயணிக்கும் இந்த அணுகுமுறை அருமை….

  3. தனக்கானது என்று தானும் எடுத்து கொள்ள இயலாமல் பிறருக்கு தாரை வார்த்தும் தர இயலாமல் தவிக்கும் மனதுடன் மீனாள்.
    உரிமையானவன் கேட்க பாசமுள்ள உறவுகளும் பிரேம் நாச்சி திருமணத்திற்கு சம்மதித்து விட்டன.
    வடுவாக தங்கிவிட்ட வருத்தம் பிள்ளைகளின் வாழ்வை பாதிக்குமோ என்ற பயம் அகன்று வீரன் மீனாள் இணைவுக்கும் சேர்த்து வேண்டிகொள்கிறார் மருது.
    அனைத்திற்கும் துணை நின்ற மாமன் லிங்கம் மீதான தனது விருப்பத்திற்கு தடை சொல்வது ஏனோ என்ற எண்ணத்தில் அங்கை.
    வலி இல்லாமல் வாழ்வில்லை பழையதை மறந்து கூடவே இருந்து கொடுமை செய்துகொள் என்ற மற்றவர்களின் கருத்தை பற்றி யோசிக்கும் மீனாள்.
    ஊருக்கு வரவிருக்கும் மருதுவின் தங்கை குடும்பத்தால் என்ன நிகழப்போகின்றதோ.
    மிக அழகாக செல்கிறது. எழுத்து நடை அருமை. 👏🏼

    1. Author

      மகிழ்ச்சி… மனமார்ந்த நன்றி sis