
யான் நீயே 38
வீரன் மருத்துவரின் முன்பு அமர்ந்திருந்தான்.
பத்து நாட்கள் நகர்ந்திருந்தன.
இந்த பத்து நாட்களில் மருத்துவமனையை விட்டு நகராது கண்ணின் மணி போல் தன்னவளை பார்த்துக்கொண்டான் வீரன்.
குளிப்பதற்கு மட்டுமே வீட்டிற்கு சென்றான்.
யாரவது இருவர் மாலை வரை உடனிருந்து மீனாளை எந்நேரமும் கலகலப்பாக வைத்துக் கொண்டனர்.
லிங்கம் மூன்று நேரமும் வந்து பார்த்துச் செல்வான்.
பிரேம் ஹோட்டல்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்ள, இரு ஆலைகளையும் லிங்கம் பார்த்துக்கொள்கிறான். கால்நடைகள், தோப்பு, பண்ணை ஆகியவற்றை பாண்டியனும், மருதனும் பார்த்துக்கொள்கின்றனர்.
நாச்சிக்கு தன்னால் வளைகாப்பு நின்றுவிட்டதென மீனாள் அதிகம் வருந்திட… “உன்னைவிட எனக்கு அது முக்கியமில்லை மீனு” என்று நாச்சி தான் சமாதானம் செய்தாள்.
மீனாள் வீட்டிற்கு வந்த பிறகு கல்லூரிக்கு சென்றுகொள்கிறேனென அங்கையும் அவளுடன் தான் பொழுதை மருத்துவமனையில் கழிக்கின்றாள்.
அன்று மீனாள் வீட்டிற்கு சென்றிடலாமென மருத்துவர் சொல்லிட அனைவரும் அவளை அழைத்துச்செல்ல வந்துவிட்டனர்.
மீனாளின் உடல்நிலையின் உண்மை விவரத்தை மருத்துவர் அனைவரின் முன்பும் கூறினார்.
“நடக்க ஆறு மாதங்கள் ஆகும். கை ஒரு மாதத்திலே சரியாகி விடும். ஆனாலும் ஸ்டெரயின் பண்ணக்கூடாது. கொஞ்ச நாளுக்கு” என்றவர், வீரனின் முகம் பார்த்து தடுமாறி “கம்ப்ளீட் ரெஸ்டில் இருக்க வேண்டும்” என்று சொல்ல… வீரனின் மனம் தடதடத்தது.
“அம்புட்டு தானுங்களே டாக்டர். இனி உசுருக்கு பயப்பட ஒண்ணுமில்லையே?” மகா தவிப்பாக வினவினார்.
“அதெல்லம் இல்லை” என்ற மருத்துவர், “வீரன் என் கேபின் வந்து ரிப்போர்ட்ஸ் எல்லாம் வாங்கிக்கோங்க” என்று நகர்ந்தார்.
வீரனுக்கு மருத்துவர் என்னவோ விரும்பத்தகாத ஒன்றை சொல்லப்போகிறார் என்று மனம் வலியுறுத்தியது.
‘அதை தான் கேட்க வேண்டாம்’ என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே…
“அண்ணே… வா! ரிப்போர்ட்ஸ் வாங்கிட்டு வரலாம்” என்று லிங்கு அழைக்க, தடுமாறிய வீரன், “நீயி போயி பணம் கட்டிட்டி வாடே!” என்று லிங்குவை அனுப்பி வைத்துவிட்டு வீரன் மட்டும் மருத்துவர் அறைக்குச் சென்றான்.
“டாக்டர்.” வீரனின் குரலே பரிதவிப்பாகத்தான் ஒலித்தது.
“உட்காருங்க.”
தனுக்கு முன்னிருந்த இருக்கையை காட்டினார் மருத்துவர்.
“என்ன வீரன் எவ்வளவு தைரியமான ஆள் நீங்க. மனைவிக்கு ஒண்ணுன்னதும் இப்படி துடிச்சிட்டிங்க?” என்று கேட்டார்.
மருத்துவர் வீரனுக்கு நல்ல பழக்கம்.
மருத்துவர் வீட்டில் நடைபெறும் அனைத்து விசேடங்களுக்கும் மீனாட்சி ஹோட்டல் கேட்டரிங் தான்.
“அவ என் உசுரு டாக்டர்” என்றவனின் முகத்தில் அவரால் அவனது காதலை காண முடிந்தது.
“ம்ம்ம்…”
“ரிப்போர்ட்ஸ் டாக்டர்?”
அவர் வேறெதுவும் தவறாக சொல்லிவிடக் கூடாதென்று மீனாட்சி அம்மனிடம் வேண்டுதலை உருப்போட்டுக் கொண்டிருந்தான் வீரன்.
“அதுக்கு முன்னாடி கொஞ்சம் பேசணும் வீரன். உங்க பேமிலி ரொம்ப அபேக்ஷனேட் நினைக்கிறேன். அதான் எல்லார் முன்னாடியும் சொன்னால் தாங்கிப்பாங்களா தெரியமால், உங்களை தனியா கூப்பிட்டேன்” என்று அவர் சுற்றி வளைக்க வீரனின் இதய துடிப்பு எகிறியது.
“ஒரு நோயாளியாக உங்க மனைவியும் இதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அல்ரெடி அவங்க விபத்து நடந்த ஷாக்கில் இருக்காங்க. அதான் உங்கக்கிட்ட மட்டும் சொல்ல முடிவு பண்ணியிருக்கேன்” என்றார்.
“எதுவாயிருந்தாலும் சொல்லுங்க டாக்டர்” என்ற வீரன், மேசை மீதிருந்த நீரினை அனுமதி பெற்று எடுத்து பருகி… வருவது எதுவாகினும் தாங்கிட வேண்டுமென தன்னை திடப்படுத்தினான்.
“நீங்க ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கீங்க நினைக்கிறேன். வீட்டுக்கு போயிட்டு ஈவ்வினிங் கூட வாங்க. பேசலாம்” என்றார் மருத்துவர்.
“இல்லை டாக்டர் நீங்க சொல்லுங்க. நான் ஓகே தான்” என்ற வீரன் நிமிர்ந்து அமர்ந்தான்.
“ஓகே ஃபைன்” என்று ஆரம்பித்தார்.
“உங்க மனைவிக்கு நல்ல அடின்னு சொன்னால்… பின் தலை மற்றும் முதுகு தண்டுவடம். நல்லவேளை இரண்டிலும் நரம்புகள் எதுவும் பாதிப்படையவில்லை. இல்லையென்றால் வாழ்வு முழுமைக்கும் அவங்க படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை வந்திருக்கலாம். ஆனால்…” என்று நிறுத்தியவர்,
“இதனின் பக்க விளைவாக… பின் தலையில் அடிபட்ட இடத்தில் ஸ்கல்ஸ் ஓபன் ஆகலனாலும், ரத்தம் உறைந்திருக்கு. ரத்த சுழற்சியால் தானாகவே சரியாக வாய்ப்பிருக்கு. அதனால் இப்போதைக்கு அதற்கு மாத்திரை கொடுத்திருக்கேன். ஸ்கிப் பண்ணாமல் த்ரீ மந்த்ஸ் கன்ட்னியூ பண்ணுங்க. அதுக்கு அப்புறம் ஒரு ஸ்கேன் பண்ணி பார்த்திடலாம். சரியாகலன்னா… கண்டிப்பா ஆப்பரேஷன் பண்ண வேண்டியிருக்கும்” என்றார்.
“உயிருக்கு?” ஒரு வார்த்தை கேட்பதற்குள் மரித்து மீண்டு வந்திருந்தான் வீரன்.
“நல்லவேளை டேஞ்சர் சோனில் பிளட் க்ளாட் இல்லை. மாத்திரையில் குணமாகலன்னா ஆப்பரேஷனில் கண்டிப்பா சரி செய்திடலாம். க்யூர் ஆகும்வரை அப்பப்போ தலைவலி வரும். அந்தநேரத்தில் போட தனி மாத்திரை கொடுத்திருக்கேன்” என்றவர் மேலும் என்னவோ சொல்லத் தயங்கினார்.
‘இதுக்கும் மேல் ஒன்றா?’ வீரனுக்கு அக்கணம் அப்படித்தான் தோன்றியது. அவனது தங்கத்திற்கு சிறு தலைவலி என்றாலே துடித்திடும் அவனுக்கு இன்னும் இருக்கிறது என்ற மருத்துவரின் பார்வை உடலில் நடுக்கத்தை கொடுத்தது. முயன்று வெளிக்காட்டிடாது அமர்ந்திருந்தான்.
“இதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை” என்ற மருத்துவர் மெல்ல விடயத்தை சொல்ல…
வீரனின் உலகமே ஒரு கணம் நின்று சுழன்றது.
“இதை சரி செய்ய முடியாதா டாக்டர்?” கண்ணில் வழிந்த நீரை சடுதியில் துடைத்தவனாகக் கேட்டான்.
“கண்டிப்பா க்யூர் ஆக சான்சஸ் இருக்கு வீரன்” என்றவர் அதற்கான தீர்வை கூறி… “அதுவே தானாகவும் சரியாகிட வாய்ப்புகள் இருக்கு. பட் அக்யூரெட்டா எப்போ குணமாகும் சொல்ல முடியாது. உங்க லைஃப் மூவ்க்கும் இதுக்கும் சம்மந்தமில்லை. யூ கேன் ஹேவ் லிபரல் இண்டிமேட். மெடிசன்ஸ் கன்ட்னியூ பண்ணட்டும். கொஞ்ச மந்த்ஸ் அப்புறம் திரும்ப டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்” என்றார்.
மருத்துவர் சொல்லியதுபோல் குணமாகிவிட்டால் நன்று. ஆகவில்லை என்றால்?
இதனை தன்னவளிடம் எப்படி சொல்வதென்று துடியாய் துடித்தான்.
“இப்போதைக்கு மீனாளுக்கு தெரிய வேண்டாம் டாக்டர். நான் மெதுவா சொல்லிக்கிறேன்” என்றவன் எப்போது வேண்டுமானாலும் வெளியில் வருவேனென்று கண்களில் முட்டி நின்ற கண்ணீரை கைகளால் துடைத்தவனாக மருத்துவர் கொடுத்த அறிக்கைகளை வாங்கிக்கொண்டு கனத்த இதயத்தோடு மீனாளிருந்த அறைக்கு வந்தான்.
“எங்கடே யாரும் காண்கல?”
“எல்லைரையும் இப்போதேன் அனுப்பி வச்சிட்டு வரேன். ஒட்டுக்கா எதுக்கு போயிட்டு” என்ற லிங்கம், “பில் எல்லாம் கட்டியாச்சுண்ணே” என்று ரசீதை வீரனிடம் கொடுத்தான்.
“தங்கம் எங்க?”
“கைகட்டு சேன்ஜ் பண்றன்னு கூட்டிட்டு போயிருக்காங்க. வந்ததும் கிளம்பிடலாம்” என்று பதில் சொல்லிய லிங்கம், “என்னண்ணே மொவமே வாட்டமா இருக்கு. டாக்டர் வேறென்னவும் தனியா சொன்னாரா?” எனக் கேட்டான்.
மருத்துவர் சொல்லிய இரண்டில் ஒன்றை சொல்ல முடியாது. ஆனால் மற்றொன்றை சொல்லிட வேண்டும். நினைத்த வீரன் தலையில் ரத்தம் உறைந்திருப்பதை பற்றி மட்டும் மேலோட்டமாகக் கூறினான்.
“அண்ணே…” லிங்கம் பதறிவிட்டான்.
“சரியாகிடுமின்னு திடமா சொல்லியிருக்கார் லிங்கு. நம்பிக்கையா இருப்போம்” என்ற வீரனை நினைத்து தான் லிங்கத்திற்கு பயமாக இருந்தது.
மீனாளுக்கு ஒன்றுமில்லையென தெரிந்து, அவள் தண்ணீர் குடிக்கத் துவங்கிய பின்னர் தான் வீரனும் தன் தாகம் உணர்ந்து நீர் அருந்தியிருந்தான்.
மீண்டும் அப்படியொரு நிலையில் வீரனை காண முடியாதென்பதே அவனது பயத்திற்கான காரணம்.
“நான் ஓகே தாம்டே!” என்ற வீரன் மனதிற்குள் பெரும் சூறாவளி ஒன்றிற்கு நடுவில் மாட்டிக்கொண்டவனாகத் தத்தளித்துக் கொண்டிருக்கிறான். அதனை அவன் மட்டுமே அறிவான்.
சிறிது நேரத்தில் செவிலியின் உதவியோடு மீனாள் வர, மூவரும் மருத்துவமனை வாசம் முடிந்து வீடு திரும்பியிருந்தனர்.
அபி திருஷ்டி சுற்றி மீனாளை உள்ளே வீட்டிற்குள் வரவேற்றிட…
“கீழிருக்கும் பெரிய ரூமை சுத்தப்படுத்தி வச்சிருக்கு அமிழ்தா. மீனாளுக்கு சரியாக மட்டும் அங்கன இருங்க” என்று மீனாட்சி சொல்லிட…
மீனாள் பிறர் அறியாது வீரனிடம் மறுப்பாக தலையசைத்தாள்.
“இருக்கட்டும் அப்பத்தா. மேலவே இருந்துக்கிறோம்” என்ற வீரன், “மீனாளுக்கு ரொம்பவே சிரமமா இருக்கும் அப்பு. எம்புட்டு நேரம் அங்கன ரூமுக்குள்ளே அவளால் படுத்திருக்க முடியும். இங்கட்டுன்னா அப்பப்போ வெளியில் எங்களோடு உட்கார்ந்திருப்பாள்” என்றவரின் பேச்சினை காதில் வாங்கிக்கொள்ளாதவனாக,
“நான் என்னத்துக்கு இருக்கேனாம். எப்போ கீழ வரணும் சொன்னாலும் தூக்கிட்டு வந்து விடுறேன்” என்றான்.
“எத்தனைவாட்டி அப்பு?”
“நூறு தடவையா இருந்தாலும் சரித்தேன்” என்ற வீரன், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த மீனாளை மலரென கையில் ஏந்தியிருந்தான்.
“வீல் சேரை தூக்கிட்டு வாடே” என்று வீரன் லிங்கத்திடம் கூற, ‘நான் தூக்க வேண்டியதே வேற’ என்று மனதில் நினைத்தவனாக அங்கு ஓரமாக நின்றிருந்த அங்கையை பார்க்க, அவளோ லிங்கம் தன்னை பார்க்கிறான் என்று அறிந்து அவன் பக்கம் திரும்பவில்லை.
‘பாக்குறேன்டி… எம்புட்டு நாளுக்குன்னு அஞ்சாறு நாளா மூஞ்சியைக்கூட பார்க்காம, திருப்பிக்கிட்டா இருக்க. கவனிச்சிக்கிறேன்’ என்று உள்ளுக்குள் முணங்கியவனாக சென்றான்.
லிங்கத்தின் குத்தும் பார்வை அங்கையின் விழிகளில் நீரை உண்டாக்கியது. யாருக்கும் தெரியாது உள்ளிழுத்துக் கொண்டாள்.
அன்றிரவே கல்லூரி கிளம்ப வேண்டுமெனக் கூறியவள், மருதன் மகா எவ்வளவோ சொல்லியும் கேளாது புறப்படக் கிளம்பி நின்றாள்.
மீனாள் வீட்டிற்கு வந்ததும் அவசர வேலையென லிங்கம் ஹோட்டலிற்கு சென்றிருந்தான். அவனுக்கு அங்கை கிளம்புவது தெரியாது போனது.
“லிங்கம், பிரேம் ரெண்டேறுமே இல்லை. இந்நேரத்தில் எப்படி போவ?” மகா கேட்டார்.
“பஸ்ஸில் போயிக்கிறேன் ம்மா” என்ற அங்கை, “மெயின் ரோட்டுக்கு இன்னும் கால் மணியில் ஒரு பஸ் வருமே! போயிட்டு வரேன்” என்று வீட்டு வாயிலுக்கு இறங்கிவிட்டாள்.
“எதுக்கு இந்த பிடிவாதம் அங்கை?” கேட்ட மருதன், ஸ்கூட்டியை உயிர்பித்து “உட்காரு” என்க, ஏறி அமர்ந்தாள்.
மருதன் வண்டியை செலுத்த அங்கை வீரனுக்கு அழைத்து சென்னை கிளம்பிவிட்டதாகக் கூறினாள்.
“யாரோட மருத போற?”
“ஐயா வர்றாங்க” என்ற அங்கை, “ரீச் ஆகிட்டு போன் போடுறேன் மாமா” என வைத்துவிட்டாள்.
“யாரு மாமா?”
“சின்னக்குட்டிதேன். ரெண்டேருக்கும் ஏதும் சடவு போல” என கண்டுகொண்டவனாகக் மீனாளிடம் கூறினான்.
“ம்க்கும்… அவீய்ங்க நம்மள மாறியில்லை. வேணாம் வேணாமின்னே லிங்கு மாமா அங்கை அங்கைன்னு சுத்தி வராரு. அவராவது அவகிட்ட சலம்புறதாவது” என்ற மீனாளின் பேச்சிற்கு…
“அதுவும் சரிதேன்” என்று சிரித்தான் வீரன்.
அவனது சிரிப்பில் உயிர்ப்பில்லை என்பதை மீனாள் கண்டுகொண்டாள்.
மருத்துவமனையிலிருந்து வந்தது முதல் பெயருக்கு பேசி சிரிக்கிறான் என்று அவளால் உணர முடிந்தது.
“ஏதும் என்கிட்ட மறைக்கிறியா மாமா?”
மீனாளின் கேள்வியில் தடுமாறி அவளின் முகம் பார்க்க முடியாது திரும்பிக்கொண்ட வீரன்,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. அசதியா இருக்கு. உறங்குறேன்” என்று அவளுக்கு முதுகுக்காட்டி படுத்துவிட்டான்.
அடுத்தநாள் காலை அங்கை முன்தின இரவே கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள், அதுவும் தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லாது சென்றுவிட்டாள் என்பதில் லிங்கம் உட்சக்கட்ட கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான்.
***************
ஆறு மாதங்கள் ஓடிய வேகம் தெரியாது ஓடி மறைந்திருந்தது.
மீனாள் முழுதாக குணமாகிவிட்டாள் என்பதில் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு அளவில்லை.
கடந்து சென்ற நாட்களில் ஒரு குழந்தையைப்போல் வீரன் தன் தங்கத்தை பார்த்துக்கொண்டான் என்று சொன்னால் மிகையாகாது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தலையினை ஸ்கேன் செய்த மருத்துவர், ரத்தம் உறைந்திருந்தது சரியாகிவிட்டது என்று சொல்ல வீரன் கொண்ட ஆசுவாசத்தினை வார்த்தையால் விவரித்திட முடியாது.
மற்றொன்று… அதனை ஆராய்ந்து பார்த்திட வீரனுக்கு சற்று கலக்கம் தான். மருத்துவரும் இன்னும் நாட்கள் செல்லட்டும் பிறகு அதனை பரிசோதனை செய்து பார்ப்போம் என்று சொல்ல,
இனி தன்னவளின் உயிருக்கு எவ்வித ஆபத்துமில்லை என்பதே வீரனுக்கு போதுமானதாக இருந்தது.
நன்றாக நடக்க முடிந்தாலும் காலில் சில நேரங்களில் வலி ஏற்பட, அதற்கான மருந்தினை மட்டும் எழுதி கொடுத்திருந்தார்.
அதுவும் கொஞ்ச நாட்களில் சரியாகியிருக்க, அந்த ஒன்றை தவிர்த்து மீனாள் பூரண குணமடைந்திருந்தாள்.
நாச்சிக்கு ஆண் பிள்ளை பிறந்திருக்க, அவ்வீட்டின் இளவரசனாக வலம் வந்து கொண்டிருக்கிறான் குட்டி வாண்டு நித்ரன்.
வீரனின் சர்க்கரை ஆலை மிகவும் பிரபலமாகியிருந்தது. விவசாயிகளிடம் இடைத்தரகர்கள் இன்றி கரும்பு நேரடியாக கொள்முதல் செய்து கொள்வதால், விவசாயிகளுக்கும் கனிசமான லாபம் கூடுதலாகக் கிடைக்கப்பெற, மாவட்ட அளவில் அனைவரும் வீரனின் சர்க்கரை ஆலையை தேடி வந்தனர்.
“மாமா…” மீனாள் மாடிப்படிகளில் வேகமாக ஏறிவருவது தெரிய, கண்ணாடி முன்பு நின்று ஆலை செல்ல தயாராகிக் கொண்டிருந்த வீரன் அறையை விட்டு வேகமாக வெளியில் வந்தான்.
“தங்கம் மெதுவா” என்று வீரனின் அதட்டலுக்கு உடனே அடங்கி மெல்ல அடி வைத்திருந்தாள்.
“கொஞ்சநா மெதுவாவே நடன்னு எம்புட்டு தரம் சொல்றது தங்கம். அப்புறம் கால் வலிக்குதுன்னு கண்ணை கசக்குவ” என்று கடிந்து கொண்டான்.
“கால் வலின்னு சொன்னா மருந்து தேச்சுவுடு மாமா. கண்ணை கசக்கினா துடைச்சு வுடு. பொறவு என்னத்துக்கு நீயி இருக்கியாம்” என்றவள், “எக்ஸாம்க்கு ஹால் டிக்கெட் வந்தாச்சு” என்று அலைப்பேசியை அவன் முன் தூக்கிக் காண்பித்தாள்.
“இந்த தடவை எப்படியும் பாஸ் பண்ணிப்புடனும் தங்கம்” என்றவனின் கண்களில் தெரிந்த எதிர்பார்ப்பில் வேகமாக தலையாட்டினாள் மீனாள்.
“சாப்பிட்டியா?”
“இப்போதேன் மாமா” என்று அவள் சொல்ல, அறைக்குள் கூட்டி வந்தான்.
“அல்ரெடி படிச்சிருந்தாலும், திரும்ப எல்லாம் படிச்சிக்கோ தங்கம்” என்றவன் மாத்திரைகள் எடுத்து அவளின் கையில் கொடுத்தான்.
“விழுங்கு தங்கம்.”
மீனாள் விழுங்காது அவனை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
“என்னவாம் தங்கத்துக்கு?”
பார்வையாலே அவனை அருகில் அழைத்திருந்தாள்.
வீரன் அவள் முன் சென்று நூலிழை இடைவெளியில் நிற்க, மீனாள் தன் கைகளை அகல விரித்துக் காண்பித்தாள்.
அழகாய் அவளுள் அடங்கி நின்றான் வீரன்.
“இன்னும் என் உடம்பு முழுசா குணமாகலையா மாமா?”
“ஏன் கேட்குற? உன் உடம்பு… நல்லாயிருக்கு இல்லையான்னு உனக்கு நான் சொல்லணுமாட்டிக்கு?” என்றான் வீரன்.
“அப்புறம் எதுக்கு இன்னும் மாத்திரை?”
“சத்து மாத்திரைதேன் மீனாள். எனக்காக கொஞ்சநா கன்ட்னியூ பண்ணு. பொறவு நிறுத்திக்கலாம்” என்றான்.
சரியென தலையாட்டியவள் அவனை விலக்கி மாத்திரையை விழுங்கினாள்.
அது சத்து மாத்திரை என்று மீனாளுக்காக சொல்லப்பட்டது.
“சரி நீயி படி. நான் ஆலைக்கு போயிவரேன்” என்ற வீரன் மீனாளின் நெற்றியில் இதழொற்றி நகர,
“இனியும் வெறும் முத்தத்தை மட்டும் கொடுத்து ஏமாத்தாத மாமா” என்றாள். முறைத்துக் கொண்டு.
“அடியேய்… மெதுவா! கீழ கேட்கப்போவுது” என்ற வீரன், “நடக்கும்போது தானா நடக்கும்” என்று சொல்லிச்சென்ற வீரனுக்கும் தன் தங்கப்பொண்ணுவை தனக்குள் மொத்தமாக அடக்கிக்கொள்ளும் வேட்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அவளின் உடல் நலன் தேறவே பொறுமையாக இருந்தான்.
வீரன் கீழே வர, பாண்டியன் அவனிடம் பேசுவதற்கு அருகில் அழைத்தார்.
“லிங்குவுக்கு வரன் ஒன்னு வந்திருக்கு அமிழ்தா? நல்ல குடும்பம்” என்று பாண்டியன் முழுதாக சொல்லி முடிக்கும் முன்னரே…
“லிங்குவுக்கும், சின்னக்குட்டிக்கும் பண்ணலாங்க ஐயா! மாமாகிட்ட பேசுங்க. சின்னக்குட்டி படிப்பு முடிஞ்சுப்போச்சுது. நாளைக்கு வந்திப்புடுவாள்” என்றான் வீரன்.
“ஆத்தா மீனாட்சி…” தலைக்குமேல் வணங்கியவராக மீனாட்சி மகிழ்வில் ஆர்ப்பரித்தார்.
“சரி அப்பு. நான் பேசுறேன். லிங்கத்துக்கு விருப்பமான்னு ஒரு வார்த்தை கேட்டுக்கிடலாம்” என்று பாண்டியன் சொல்ல…
“லிங்கு” என்று தன் தம்பியை அழைத்திருந்தான் வீரன்.
அண்ணனின் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்திருந்தான் லிங்கம்.
“பைய வாடே! என்னத்துக்கு அவசரம்” என்ற வீரன், “ஐயா மாமாவிடம் பேசலான்னு இருக்காங்க. உனக்கு கல்யாணத்துக்கு சம்மதந்தேனா?” எனக் கேட்டான்.
லிங்கம் யோசிக்கவெல்லாம் இல்லை. உடனடியாக சரியென்றான்.
“சொல்லுற வேகத்தை பார்த்தாக்கா… ஏற்கனவே ஆசை இருந்திருக்கும் போலவே?” அபி தன் மகனை வம்பு பேசினார்.
“அதெல்லாம் வருச கணக்கா நடக்குது அத்தை” என்று வந்த மீனாளின் காதினை லிங்கம் திருகிட…
“விடுடே” என்று லிங்கத்தின் கையை தட்டிவிட்ட வீரன், “கல்யாணத்துக்கு முன்னுக்க என்ன சடவா இருந்தாலும் சரி செஞ்சிப்புடு” என்று லிங்கத்திற்கு மட்டும் கேட்கும் வகையில் முணுமுணுத்து விட்டு, மீனாளிடம் ஒரு பார்வைப் பார்த்து கிளம்பிவிட்டான் வீரன்.
“அப்போ நான் மாமாகிட்ட பேசிட்டு வரேன்” என்று பாண்டியன் எழுந்து சென்றார்.
“இன்னும் உங்களுக்குள்ள எதுவும் சரியாகலையா மாமா?” என மீனாள் லிங்கத்திடம் கேட்க,
“என்னன்னே சொல்ல மாட்டேங்கிறா மீனுக்குட்டி. எதாவது சொன்னாதேன் தெரியுமாட்டிக்கு. அவள் உனக்கு அடிப்பட்டப்போ என்கிட்ட பேசுனது. இன்னும் என் மூஞ்சியை பார்க்கல அவள். என் போனை எடுக்கிறதே இல்லை. வூட்டுக்கு வரும்போது பாக்கலான்னு போனாக்கா… மொவத்தை திருப்பிக்கிட்டு போறா” என்றான் வருத்தமாக. மீனாளிடம் அதீதமாக புலம்பினான்.
“நானா அவள் வேணுமின்னு சுத்துனேன். வேணான்னு இருந்தவனை இழுத்துவிட்டு இப்போ வேடிக்கை காட்டுறா. பித்து புடிக்குதுத்தா” என்ற லிங்கத்தின் முகத்தில் கவலையை காண்பதற்கு மீனாளுக்கு அத்தனை வருத்தமாக இருந்தது.
“அப்போ இப்போ கல்யாணம் ஏற்பாடு பண்ணனுமா மாமா?”
கேட்ட மீனாளை விரக்தியாக பார்த்தான் லிங்கம்.
“அவ மனசுல இப்போ என்ன இருக்குன்னு எனக்கு தெரியணுமாட்டிக்கு. அதுக்கு இது அவசியம். ஐயா மாமாகிட்ட பேசட்டும், அப்போதேன் அவ முடிவு என்னன்னு தெரியுமாட்டிக்கு” என்றான்.
“அவ உங்கள வேணாமின்னுலாம் சொல்லமாட்டா மாமா. உம் மேல அந்த சின்ன வயசுலே உசுரையே வச்சவள். இப்போ வேணாமின்னு சொல்லிடுவாளா?”
மீனாள் சொல்லிய இந்த தைரியம் தான் லிங்கத்திடம். அதனால் தான் வீரன் கேட்டதற்கு உடனடியா சம்மதம் சொல்லியிருந்தான்.
“சரி வா மாமா. வந்து சாப்பிடு. அவள் வரட்டும் நேரில் வச்சு என்னான்னு மாமாவை கேட்க வைப்போம். மாமாகிட்ட எதையும் மறைக்கமாட்டாள் தானே” என்ற மீனாள் லிங்கத்திற்கு உணவு பரிமாறி, அவனிடம் ஏதேதோ கதைகள் பேசி, அவனை ஓரளவிற்கு இயல்பாக்கிய பின்னரே தனித்து விட்டாள்.
“என்னத்தா உன் கொழுந்தனுக்கு என்ன வெசனமாம்? இப்போ சரியாகிட்டானாக்கும்” மீனாட்சி கேட்டிட,
“இது எங்களுக்குள்ள ரகசியம். நீயி ஏன் தெரிஞ்சிக்கணும் அப்பத்தா” என்று அவரின் குமட்டில் இடித்தாள்.
“ஆத்தே… எம் மவனே என்கிட்ட முன்ன நின்னு பேச பயப்படுவான். நீயி வாவடிக்குற. இரு எஞ்சாமி வரட்டும் போட்டுக் கொடுக்கிறேன்” என்று வம்புக்கு இழுத்தார் மீனாட்சி.
“ம்க்கும்… சொல்லிக்கோ அம்மத்தா. நீயிதேன் என்னைய படிக்க வுடாம புடிச்சு வச்சு கதை பேசுறன்னு சொல்லுவேன்” என்றாள்.
மீனாட்சி வாயில் கை வைத்துக் கொண்டார்.
அதில் மீனாள் கலகலத்து சிரிக்க…
“இப்போதேன் உடம்பு தேறி வந்திருக்கு. கண்ணுபடுற மாறி சிரிக்காதத்தா” என்றார் அபி.
“எம் பேத்தி சிரிச்சாக்கா கொள்ள அழகட்டி அபி” என்று மீனாட்சி மீனாளின் கன்னம் வழித்து, “உன் ஜாடையில ஒன்னு, எம்மவராசன் ஜாடையில ஒன்னு. இந்த கட்டை போயி சேருறதுக்குள்ள பெத்து கொடுத்துடுத்தா” என்றார்.
சட்டென்று முகத்தில் தோன்றிய நாணத்தை பெரியவர்களிடம் மறைத்தவளாக மேலேறி வந்துவிட்டாள்.
கட்டிலில் அமர்ந்தவளின் மனம் முழுக்க இனிய படபடப்பு.
கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிறது. கல்யாணம் முடிந்து. இதுவரை யாரும் மீனாளிடம் குழந்தையைப் பற்றி பேசியதில்லை.
ஆனால் இன்று அப்பத்தா நேரடியாகக் கேட்டிருக்க… வீரனின் மார்பில் தன்னை புதைத்துக்கொள்ள வேண்டுமெனும் அளவிற்கு சிவந்து போனாள்.
உடனடியாக வீரனுக்கு அழைத்தும் விட்டாள்.
புதிதாக வந்திருந்த கரும்பு லோடினை எடை எடுத்துக்கொண்டிருக்க, அதனை கவனித்தபடி இருந்த வீரன் மீனாளிடமிருந்து அழைப்பு என்றதும் சற்று தள்ளி வந்திருந்தான்.
“என்ன தங்கம்?”
“எதுமிருந்தாதேன் கூப்பிடணுமா மாமா?”
அத்தனை இதமாக ஒலித்த தன் மனைவியின் குரலில் வீரன் மொத்தமாகக் கட்டுண்டான்.
தங்கம் என்ற தன்னுடைய அழைப்பே தன்னை நிலையில்லாமல் தவிக்க வைத்து அவள் வசம் ஈர்க்கிறது என்பதற்காக தங்கமென்று சொல்வதையே நிறுத்தியிருந்தவனுக்கு, அந்த தங்கமே உருகி குழைய வைத்தால் அவனும் என்னதான் செய்வான்.
“சாய்க்க பாக்குறியாடி?” கண்டுகொண்ட கள்வனாகக் கேட்டிருந்தான்.
“சாயலையா மாமா?”
“என்னட்டி வேணுமாட்டிக்கு?” இதழ் விரிந்த சிரிப்பை தொண்டைக்குள் சத்தமின்றி ஒளித்து வைத்தான்.
“நீதேன் வீரா!”
அம்மம்மா… தேனில் ஊறிய குரலாக செவியில் ராகம் சேர்த்திட…
“ஆலையில நிக்கேன்… உசுரை உருவாதத்தா” என்றவன் வேகமாக அழைப்பை முறித்திருந்தான்.
மீண்டும் அழைத்தவள்,
“எதுக்கு மாமா கட் பண்ண?” என்று அதட்டினாள்.
“கூட இருக்கும்போது இதெல்லாம் தோணாதாடி உனக்கு? சோலியா நிக்கும் போது என்ன வேலை பாக்குற நீயி?” என்றவனிடம் கொஞ்சமும் கோபமில்லை. குரல் அத்தனை குழைந்து ஒலித்தது.
“நீயி பக்கட்டு இருக்கும்போது நான் கிட்டக்க வந்து… நீயி இன்னும் பரீட்சை முடியலன்னு சொல்லி தடுத்தின்னாக்கா?”
“அதுக்கென்ன இப்போ ட்ரைலர் ஓட்டி பாக்குறியாக்கும்?”
“உனக்கு அப்படி தோணுச்சின்னாக்கா… மெயின் பிக்ச்சர் ஓட்டவே ரெடிதேன் மாமா” என்றவள், “பாக்க நீயி ரெடியில்லையாக்கும்?” எனக் கேட்டாள்.
“வாய்… வாய்யீ… நேர்ல நின்னனாக்கா நாலு போட்டிருப்பேன். என்ன பேச்சு பேசுற நீயி? நைட்டு வந்து இருக்குடி உனக்கு” என்றவனின் மனம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் அனைத்து கவலைகளும் நீங்கி சிறு நிறைவை உணர்ந்தது.
‘சரியானாலும், ஆகாவிட்டாலும் என் தங்கம் மட்டும் எனக்கு போதுமாட்டிக்கு.’ அடி மனதில் சொல்லிக்கொண்டான்.
இந்த எண்ணம்… அதாவது இருவரின் காதல் மட்டும் போதுமென்ற வீரனின் நினைப்பே மற்றவர்களுக்கும் இருந்திடாதே!
திருமணமென ஒன்று நடந்தால் அடுத்து என்ன என்பதில் தானே மற்றவர்களின் மனம் சென்று நிற்கும்.
மீனாள் மீனாட்சி பாட்டியுடனான பேச்சினை நாணத்தோடு சொல்ல…
சடுதியில் வீரனின் முகம் கசங்கி கலையிழந்தது. முகம் பரவியிருந்த சிரிப்பு காணாமல் மறைந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
37
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Ayayo ini yena nadakumo pavam.meena kutty
All is well 😍
மெளனமாக – தனியாக தாங்கும் அவனின் பரிதவிப்புகள்…
Super oh baby porakkarathula problem o
மீனாளின் விருப்பத்திற்காக மேல் அறையிலேயே தங்கிக்கொள்ள செய்தது அருமை. “நான் எதுக்கு இருக்கேன் பார்த்துக்கிறேன்”.
அங்கையின் முகத்திருப்பல் தான் ஏனோ? கல்யாண ஏற்பாட்டின் வாயிலாக அவள் மனதில் இருக்கும் சுனக்கத்தின் காரணம் அறிய முற்படுகின்றான் லிங்கம்.
தனது தங்கத்தின் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதே போதும் மற்றதை பற்றிய கவலை இல்லை என்ற எண்ணம் வீரனுக்கு.
வீரன் மீனாள் உரையாடல் கொள்ளை அழகு 😍
உண்மை தான் சம்மந்தப்பட்டவர்கள் சும்மா இருந்தாலும் சுற்றி இருப்பவர்கள் தரும் குடைச்சல்கள் ஏராளம்.
அன்பினால், பாசத்தினால், ஆசையினால் என்று எதுவாய் கேட்டாலும் அது நிர்பந்தமே.