Loading

யான் நீயே 34

இறைவனை வணங்கியபடி கண் மூடி நின்றிருந்த அனைவரும் வசந்தியின் கோபமான வார்த்தைகளில் கண் திறந்தனர்.

அவர்களுக்கு வசந்தி ஏன் திடீரென இப்படி பேசுகிறார் என்பது புரியவில்லை.

வசந்தி பேசுவதை கண்டுகொள்ளாத கௌதம், சுபாவின் கையினை இறுகப்பற்றி மீனாட்சி முன் சென்று நின்றான். அவளுடன்.

சுபாவின் மார்பில் ஊசலாடிய தாலியை கண்ட மீனாட்சி “ஆத்தே… என்ன காரியம்டா பண்ணிப்போட்ட” என்று வாயில் கை வைத்தார்.

அதன் பின்னர் தான் மற்றவர்களுக்கு விடயம் விளங்கிற்று. ஊர் மக்கள் அனைவரும் தங்களுக்குள் முணுமுணுக்க… வீரன் சுற்றி பார்த்த பார்வையில் அவ்விடம் நிசப்தம் ஆனது.

“எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி” என்று இருவரும் அவரின் காலில் விழுந்திருந்தனர்.

மீனாட்சி அதிர்ந்தபடி வீரனை பார்க்க, அவனோ கண்மூடி சம்மதம் வழங்கினான்.

கௌதம் சுபாவுக்கு தாலி கட்டிவிட்டான் என்றதும் வீரன் சுந்தரேசனைத்தான் பார்த்தான். அவரிடம் எவ்வித சஞ்சலமும் இல்லை. அதிலே அவருக்கும் தெரிந்து நடந்துள்ளது என்பதை அவதானித்துக் கொண்டான்.

பெற்றவர் சம்மதத்துக்கு முன் மற்றவர்கள் என்ன செய்திட முடியுமென அமைதியாகிவிட்டான்.

“கருப்பர் முன்னாடி நடந்த கல்யாணம். அவர் விருப்பமில்லாம இங்கன நடக்க வாய்ப்பில்லையாட்டிக்கு. நல்லாயிருங்க… இருப்பீங்க” என்று இருவரின் தலை தொட்டு ஆசீர்வாதம் செய்தார் மீனாட்சி.

“மன்னிச்சிக்கிடுங்க” என்று பொதுவாக தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் சொல்லிய கௌதம்…

“உங்ககிட்ட சொல்லாம செய்ததுக்கு மட்டும்தான் இந்த மன்னிப்பு. நான் சுபா கழுத்தில் தாலி கட்டியதற்காக இல்லை” என்றவன், “எனக்காகவும் சுபாவுக்காகவும், யோசிக்காம உங்க சொத்தை கொடுக்க நினைத்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணே. நானாயிருந்தால் கூட இப்படி செய்திருப்பனா தெரியல” என்றான்.

“நான் விலைப்போயி என் கல்யாணம் நடப்பதில் உடன்பாடில்லை. அதுக்காகத்தான் இப்படி” என்றான்.

வசந்தி தன்னுடைய ஆங்காரம் அனைத்தையும் ஊர் மக்கள் முன் காட்ட விரும்பாது அமைதியாக நின்றார்.

கௌதம் பேசியதில் நல்லானை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

“நடந்தது எல்லாம் நல்லதுக்குத்தேன். சாமியை கும்பிடுங்க. கருப்பன்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கங்க” என்று மருதன் சொல்லிட… “இப்போ ஒரு வகையில் உம் மனசு நிம்மதி அடைஞ்சிருக்குமே மாமா?” என மருதனுக்கு மட்டும் கேட்குமாறு வினவியிருந்தான் வீரன்.

“எம் உடன் பொறந்தவாளாவே இருந்தாலும் உழைப்பை தூக்கிக்கொடுக்க எனக்கு பரந்த மனசு இல்லடே” என்றார் மருதன்.

“எல்லாம் சனம் கூடி நின்னு கருப்பன் ஆசீர்வாத்தில் தானே கல்யாணம் நடந்திருக்கு. ஆக வேண்டியதை பார்ப்போம்.” பாண்டியன் தான் அடுத்து என்ன என்பதை நகர்த்திச் சென்றார்.

சாமி கும்பிட்டு முடித்தவர்கள், வந்திருப்போர் அனைவரையும் உட்கார வைத்து பந்தியிட்டு உணவளித்தனர்.

மீனாள் சாப்பிடக்கூட இல்லை.

நாச்சியுடன் அங்கையும் நின்றிருக்க, மற்றவர்கள் பந்தியில் கவனமாக இருந்தனர்.

“மதினி எல்லாம் முடிஞ்சுதே. நான் வூட்டுக்கு போவட்டுமா?” மீனாளின் முகம் அத்தனை சோர்ந்து இருந்தது.

“ஏம்த்தா… இன்னும் நாம யாரும் உண்கலையே” என்று நாச்சி சொல்ல…

“பந்தி முடிஞ்சதும் சாப்பிட்டு போலாம் க்கா” என்றாள் அங்கை.

“முடியல அங்கை. ரொம்ப நோவுது” என்றவள், “இப்போதானே பந்தி ஆரம்பிச்சிருக்கு. முடிய நேரமாவுமே! நான் போறேன்” என்று சொல்லிய மீனாள் வீரனை தேடினாள்.

அவன் மும்முரமாக உணவு பரிமாறுவதில் ஈடுபட்டிருந்தான்.

“நான் வேணுமின்னா வந்து வுட்டுப்போட்டு வரட்டுமாக்கா” என்று அங்கை கேட்டிட… “வேணாமாட்டிக்கு சின்னக்குட்டி. வண்டிதேன் இருக்குதே! போயிக்கிறேன்” என்றாள்.

மீனாள் ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு செல்ல, சட்டென்று திரும்பி பார்த்த வீரனுக்கு மனைவியின் பின் உருவம் மட்டுமே தெரிந்தது.

தன்னுடைய கையிலிருந்த பாத்திரத்தை லிங்கத்திடம் கொடுத்தவன், என்னவென்று பந்தியிலிருந்து வர…

“அக்காவால முடியலயாட்டுக்கு மாமா. வூட்டுக்கு போயிட்டாள்” என்றாள் அங்கை.

“ம்ம்ம்” என்ற வீரன், வீட்டிற்கு செல்லலாமென நினைக்க…

“அடுத்த பந்திக்கு சோறு பத்தாதாட்டிக்கு அமிழ்தா. வெரசா ஆக்க சொல்லு” என்று கூறினார் பாண்டியன்.

அடுத்தடுத்து வீரன் பரபரப்பாகிட, மக்கள் பந்தி முடிந்து வீட்டு ஆட்கள் அமர்ந்தனர். குடும்பத்தினர் மட்டுமே எஞ்சியிருந்தனர். அனைத்தும் முடித்து கிளம்பும் வரை வீரன் அங்கிருக்க வேண்டிய நிலை. தவிர்க்க முடியவில்லை.

“மீனாள் எங்க?” அபி கேட்க நாச்சி பதில் கூறினாள்.

“ஈரத்தோட பின்னல் போட்டிருப்பாள். அவளுக்கு சாப்பாடு எடுத்துட்டு போவோம்” என்றார் மகா.

மீனாள் இல்லாது வீரனுக்கு உணவு இறங்கவில்லை. பெயருக்கு சாப்பிட்டவன் எழுந்து கொண்டான்.

செய்த உணவுகள் மிச்சமின்றி தீர்ந்து போயிருந்தனர்.

“சோறு மீதிப்படல” என்ற மீனாட்சி, “சுருக்க பாத்திரத்தை எல்லாம் ஏத்தி அனுப்பிட்டு வந்து சேருங்க” என்று பெண்களை கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார்.

“வூட்டுக்கு போனாக்கா இந்த வசந்தி என்ன ஒரண்டயை இழுப்பாளோன்னு பயந்து வருது” என்று மகா புலம்ப…

“அதெல்லாம் கௌதம் பார்த்துப்பாங்க பெரிம்மா. உங்களை பேச விடமாட்டாங்க” என்றாள் சுபா.

“இப்போவே நீயி உம்ம வூட்டுக்கு போவ வேண்டாமாட்டிக்கு மகா. நம்ம வூட்டுல இரு. மருதன் வந்ததும் போவலாம்” என்றார் மீனாட்சி.

“என்னண்ணே மொவம் சோர்ந்து கிடக்கு?”

சமைப்பதற்கு பாத்திரங்கள் தங்களது ஹோட்டலிலிருந்து தான் கொண்டு வந்திருந்தனர். வீரன் அதனை சரிபார்த்துக் கொண்டிருந்தாலும், அவன் முகம் தெளிவின்றி இருக்கவும் லிங்கம் வினவினான்.

“ஒன்னுமில்லைடே” என்ற வீரன், “அங்கன பார்த்து இறக்கி வையுங்க” என்று வேலை ஆட்களிடம் கூற,

“நீயி வூட்டுக்கு போண்ணே. நான் முடிச்சிட்டு வரேன்.”

“இருக்கட்டும் லிங்கு. இப்போ போனாலும் கௌதம் பஞ்சாயத்து இருக்கு” என்ற வீரன், “நான் கௌதம் இப்படி ரோசிப்பான்னு சூதானமா இல்லாம விட்டுப்புட்டேன். சுந்தரேசன் மாமாவோட சம்மதத்தோடுதேன் நடந்திருக்கு” என்று நெற்றியை தேய்த்துக் கொண்டான்.

“அவங்க முடிவுக்கு நாம என்னண்ணே பண்ண முடியும்? மாமாவுக்கு அவருடைய தன்மானம் முக்கியமா பட்டிருக்கலாம்” என்றான் லிங்கம்.

“அதேதான்” என்ற பாண்டியன், “இப்படியொரு கல்யாணம் கட்டி சுபாவை கூட்டிட்டு போனால் நம்ம ஆத்தா அவளை வஞ்சியே சாகடிச்சிப்புடுமுன்னு கௌதமுக்கு தெரியாதா? அடுத்து என்னன்னு வெசனமா இருக்கு” என்று அவர் புலம்பிட…

“எனக்கும் சுபா வாழ்க்கை சிக்கலாகிடுமோன்னு இருக்கு” என்றார் மருதன்.

“கௌதம் அதுக்கும் வேற ரோசனை வச்சிருப்பியான்” என்ற வீரனுக்கு “அப்ராட் போக புராஜெக்ட் சைன் பண்ணியிருக்கேன்” என்று கௌதம் சொல்லியது நினைவு வந்தது.

“பாப்போம் என்ன நடக்குதுன்னு” என்று சற்று தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்த சுந்தரேசன் மற்றும் கௌதமின் மீது பார்வையை பதித்தான் வீரன்.

சிறிது நேரத்தில் அனைத்தும் முடிந்து வீட்டிற்கு வர,

“இதை மொத முடிச்சு விட்டுடுவோம் அமிழ்தா” என்று கௌதமை கை காட்டினார் மருதன்.

“நான் வரல” என்று லிங்கம் தனதறை சென்றுவிட்டான்.

சரியென பெரியவர்கள் அனைவரும் மருதனின் வீடு செல்ல… வீட்டு திண்ணையிலேயே முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார் வசந்தி.

பக்கத்தில் வைத்திருந்த அரிவாளை தூக்கி கௌதமின் காலுக்கு கீழ் வீசியவர்…

“அவன் இந்த வூட்டுக்குள்ள காலடி வைக்கக்கூடாது” என்று ஆங்காரமாய் கத்தினார்.

“ஆசைபட்டான். கட்டிக்கிட்டான். உட்கார்ந்து பேசுவோம் வசந்தி.” மீனாட்சி சொல்லிட…

“இது என் குடும்ப விசயம். யாரும் தலையிடக் கூடாது” என வசந்தி சொல்ல, கோபம் கொண்டு பேச முனைந்த மருதனை வீரன் அடக்கினான்.

“சரி அப்போ நானே பேசுறேன்” என்ற கௌதம், “இது உங்க வீடு இல்லை. என் மாமா வீடு. நான் இங்கன வர போவ உங்க அனுமதி எனக்குத் தேவையில்லை” என்றவன், “டாக்சிக்கு சொல்லியிருக்கேன். செத்த நேரத்தில் வந்திடும். ப்ரொஜெக்ட் விசயமா கம்பெனி என்னை துபாய் அனுப்புறாங்க. ரெண்டு வருச ப்ரொஜெக்ட். அடுத்து அங்கயே செட்டில் ஆகிடலாம் நினைக்கிறேன். சுபாவையும் கூட்டிட்டு போறேன்” என்று பாண்டியன் மற்றும் மருதனை பார்த்துக் கூறினான்.

அவ்வளவு தான் வசந்தி காளியாக மாறிவிட்டார்.

“யாரைக்கேட்டு முடிவு பண்ண?” என்று எகிறிக்கொண்டு வந்தார். நல்லான் பார்வையாளர் மட்டுமே. இருக்கும் கோபத்தை வீரனை நினைத்து உள்ளுக்குள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.

“நீயி அவக்கூட வாழக்கூடாது. தாலி மட்டும் தானே கட்டுன. அத்துப்போட்டு…”

“வசந்தி!”

அவர் முடிக்குமுன் மீனாட்சி அதிர்ந்து விளித்திருந்தார்.

“தாலி கழுத்திலேறி அந்தி தான் சாயுது… அதுக்குள்ள என்ன பேசுற” என்று ஆதங்கமாக வினவினார்.

“அவங்க பேச்செல்லாம் ஒன்னும் செய்யாது பாட்டி” என்ற கௌதம்,

“என் விசயத்தில் முடிவெடுக்க வேண்டிய உரிமை உங்களுக்கு இல்லை” என்று கௌதம் சொல்லும் போதே அவன் வரழைத்திருந்த கார் அங்கு வந்து சேர்ந்தது.

“பார்த்து கவனமா இருந்துக்கோ கௌசிக். காலேஜ் ஓபன் பண்ணதும் டிசி வாங்கிட்டு சொல்லு. டிக்கெட் புக் பன்றேன். அங்க வந்திடு. இவங்களோடு இருந்தாலே உன்னையும் விலைப்பேசிடுவாங்க” என்று தம்பியிடம் சொல்லிவிட்டு சுபாவை பார்க்க…

அவள் எல்லோருக்கும் தலையை அசைத்துவிட்டு, காரில் ஏறிக்கொண்டாள்.

“போயிட்டு தகவல் சொல்றேன் அண்ணே. இங்கிருந்து மதுரை ஏர்போர்ட். சென்னை போனதும் துபாய் பிளைட்” என்று வீரனிடம் சொல்லிவிட்டு அனைவரையும் பார்த்தவன் சுபாவின் அருகில் ஏறி அமர்ந்திட…

“உங்க மனசையெல்லாம் சங்கிடப்படுத்திப்புட்டேன் தெரியுது. ஆனால் எனக்கு வேற வழித் தெரியல” என்று கை விரித்த சுந்தரேசன், “நானும் அப்படியே கிளம்புறேன்” என்று அவர்களோடு புறப்பட்டிருந்தார்.

வசந்தி… கௌதம் தன்னை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை என்பதில் பெருத்த அடி வாங்கியிருந்தார். ஆனால் உள்ளுக்குள் எரிமலையாய் வெடித்துக் கொண்டிருந்தார்.

கௌதமிற்கு வீரனின் குடும்பம் தான் துணை நின்று திருமணத்தை செய்திட திட்டம் போட்டது என்று நினைத்து வன்மம் கொண்டார்.

அந்த வன்மம் யாரை பலியாக்கிட இருக்கிறதோ?

“பெத்த பிள்ளை… அம்மாயில்லைன்னு சொல்லாம சொல்லிட்டு போற நிலையில் தான் நீயிருக்க. இனியாவது குணத்தை மாத்திக்கப்பாரு” என்று மருதன் சொல்லிட… வீட்டிற்குள் சென்ற வசந்தி பையோடு வெளியில் வந்தார்.

யாரையும் பார்க்காது கௌசிக்கின் கையினை பிடித்துக்கொண்டு நடக்க,

“எப்பவும் எங்க மூக்கை அறுக்கிறதே உங்க வேலையாய் போச்சுல்ல” என்று கேட்ட நல்லானும் வசந்தியின் பின் சென்றார்.

“மாத்தவே முடியாதா?” ஆயாசமாக வினவிய மருதன் திண்ணையில் அமர்ந்திட…

“பையன் இப்படி பண்ணிப்புட்ட கோவம் இருக்கத்தானே செய்யும் மருதா. காலம் கடந்தாக்கா ஆறிப்போவும்” என்ற மீனாட்சி, “காலையிலிருந்து கொள்ள சோலி பார்த்தது. உடம்பு அசந்திருக்கும். இருட்டப்போவுதே வூடு நுழைங்க” என்று சொல்லிட பாண்டியன் தன் மக்களோடு வீடு வந்து சேர்ந்தார்.

இவர்கள் வந்ததும் அங்கையும், நாச்சி அங்கு சென்றிட…

லிங்கம் என்ன நடந்ததென்று கேட்டு தெரிந்து கொண்டான்.

“லிங்கு ஒரு கோழி அடிச்சு கொடுடே” என்ற வீரன், “ம்மா காரம் சேர்க்காம வச்சு வையுங்க. வரேன்” என்றுவிட்டு வேகமாக மாடியேறினான்.

மீனாள் தூங்கிக் கொண்டிருந்தாள். கோவில் செல்வதற்காக ஈரத்தோட போடப்பட்டிருந்த நீண்ட கூந்தல் களைந்து படுக்கையில் தவழ்ந்திருந்தது.

இடை வரையான நல்ல அடர்த்தியான கார்குழல். அத்தனை எளிதில் காயாது என்பதால் தலைவலி வைத்திருந்தது.

அருகில் சென்று நெற்றியை தொட்டு பார்த்தான். பிசுபிசுப்பாய். தைலம் தேய்க்கப்பட்டதற்கான அடையளாமாக அவனின் விரலில் ஒட்டியது.

அவள் எப்போவாவது தலை வலிக்கிறது என்று சொல்லுவாள் தான். ஆனால், இந்தளவிற்கு சோர்ந்து படுத்துக் கொண்டதெல்லாம் இல்லை.

மனதின் சஞ்சலம் உடலை நிலைகுலைய வைத்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டவனுக்கு மனதில் பாரம் ஏறியது.

மீனாளின் முகத்தருகே அமர்ந்தவனின் கை தன்னைப்போல் உயர்ந்து அவளின் தலை வருடியது.

“நானு என்ன தங்கம் செய்யணுமாட்டிக்கு?” கண்கள் மூடி இருந்தவளிடம் பதிலில்லை.

அவள் தன்னருகே தடுமாறுகிறாள். தவிப்புக்கு உள்ளாகிறாள். இந்த தடுமாற்றமும், தவிப்பும் அவளின் கனவை சிதைத்துவிடும். அவனுக்கு பெரும் குற்றவுணர்வாகிப்போகும். வாழ்வு முழுமைக்கும் வலியாகும். அது அவனுக்கு வேண்டாம். சராசரி கணவனாக இருந்திட வேண்டாம் அவனுக்கு.

மனைவியின் கனவும், கல்வியும் அவனுக்கு அவசியமாகப்பட்டது. முக்கியமானதாக இருந்தது.

அவள் பேசாது விலகி நின்ற காலங்களிலேயே அவளை விட்டுவிடாதவன்… தன்னில் மனைவியாக இணைந்து விட்டவளையா விட்டு விடுவான்.

இரண்டு வருடங்கள்… விரைந்து ஓடிவிடும். இந்த இடைவெளி போதும். அவளின் ஆசையை நிறைவேற்றி விட.

பொங்கல் அன்று மீனாட்சி அம்மன் கோவிலில் வசந்தி மீனாள் கௌதமின் கல்யாண பேச்சினை ஆரம்பித்து, வேண்டாமென அவளின் படிப்பை முன் நிறுத்தியபோது…

“என்ன கவர்மெண்ட் ஆபீசுல கலெக்டருக்கா படிக்கப்போறாள்?” என்று வசந்தி கேட்டது அவளின் ஆசை தெரிந்ததாலேயே! அத்தனை நக்கலோடு கேட்டிருந்தார்.

அந்த பேச்சினை பாண்டியன் மகனிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். அன்றே அவளின் கனவு வெறும் கனவாகிப்போகிடக் கூடாது என்பதில் அவளைவிட அவன் தீவிரமாக இருக்கின்றான்.

அதனை தன் மனைவிக்கு புரிய வைத்திட முடியாமலே, அவளை தன்னிடம் தடுமாற வைத்து தவிக்க வைத்து உள்ளம் கசங்ககிட வைக்கின்றான்.

ஏங்கிய காதல் கை கூடிய நிலையில் அவனுமே அதீத மகிழ்ச்சியில் சற்று தடுமாறிவிட்டான். வெளிப்படையாக காதலைக்காட்டி, அவளின் மனதை தடம் புரள வைத்திட்டான். தன்னையே நிந்தித்தான்.

‘இனி ரொம்பவே கவனாமா இருக்கணும்!’ தனக்குள் சொல்லிக்கொண்டான்.

மீனாளின் முகம் பார்த்தது பார்த்தபடி இருந்தான்.

மெல்ல புருவம் சுருக்கி எழுந்தாள்.

“இருட்டிடுச்சா?” தன்னெதிரே அமர்ந்திருப்பவனின் தொடையில் கன்னம் வைத்து மீண்டும் கண்களை மூடியவள், நொடியில் நிதர்சனம் புரிய துள்ளி குதித்து எழுந்தமர்ந்தாள்.

“சாரி… சாரி… உறக்கத்துல கவனிக்கல” என்றாள்.

இதே இந்த இரண்டு நாள் தத்தளிப்பு இல்லாமலிருந்திருந்தால்… அங்கே குட்டி கொஞ்சல்கள் நடந்திருக்கும். அவளும் அவன் மடி மீது மிச்ச தூக்கத்தை தொடர்ந்திருப்பாள். அவனும் அவளின் நெற்றியை தன்னிதழுக்கு பட்டயம் செய்திருப்பான்.

“இப்போ தலைவலி எப்படியிருக்கு? மாத்திரை விழுங்குறியா?”

வேண்டாமென மறுத்தவள், “வலியில்லை” என்றாள்.

” ஹ்ம்ம்” என்றவன், “ரெபிரஷ் பண்ணிட்டு உட்கார். வர்றேன்” என்று கீழே சென்றான்.

“ம்ம்மா… சாப்பாடு செஞ்சிட்டிங்கலா?”

“ஆச்சு அமிழ்தா. மீனாளுக்கு மேலுக்கு சுவமில்லையோ?” அபி கேட்டவர், வேகமாக உணவினை தட்டிலிட்டு வீரனின் கைகளில் கொடுத்தார்.

“நல்லாயிருக்காம்மா” என்றவன் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு மேல் செல்ல… லிங்கம் படியிறங்கி வந்து கொண்டிருந்தான்.

“என்னவாம்?”

கையில் உணவுடன் மேலேறியவனை கண்ட லிங்கம்… மீனாளுக்கு என்னவானது எனும் பொருளில் வினவினான்.

இருவருக்குமான நெருக்கத்திற்கு இன்னும் காலமிருக்கிறது. தங்களின் அன்பு தான் தங்களது பலவீனம் என்பதை கண்டு கொண்டவனுக்கு லிங்கத்தின் கேள்வியின் பொருள் புரியாது வாய் விட்டிருந்தான்.

“இன்னும் வருசம் செண்டு கல்யாணம் கட்டியிருக்கணுமோ?”

அறையின் கதவு திறந்திருந்ததால் வீரனின் பதில் அவளுக்கும் கேட்டிட சட்டென்று கண்ணில் நீர் தலும்பியது. சன்னல் திண்டில் சென்று அமர்ந்தாள். ஒரு விதமான வலி அவளுள் ஊடுருவியது.

அவளிடமே அவன் சொல்லியிருக்கிறான். இப்போ கல்யாணம் கட்டும் யோசனையே எனக்கு இல்லை என்றும் அத்தோடு அவன் மறுத்தற்கான காரணத்தையும் சொல்லி அவளை முதல் நாளே தெளிவு படுத்தியிருக்கிறான். இன்று ஏனோ அந்த தெளிவு எங்கோ மூலையில் இடம் பிடித்திருந்தது போலும், அவன் வார்த்தைகள் அதீத வலியாகியது.

அடுத்து பேசியது அவளுக்கு கேட்கவில்லை.

“அண்ணே?” லிங்கம் அதிர்ந்தவனாக விளித்தான். இருவருக்கும் ஏதும் ஒத்துவரவில்லையா என்கிற கவலையில்.

ஆனால் அதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு என்பதும் விளங்கியது. இந்த சில நாட்களில் இருவரின் காதலையும் பக்கமிருந்து பார்க்கின்றானே!

“அவளோட ஆசைக்கு நானும் என் நேசமும் தடையா இருந்திடக் கூடாதுடே!” என்றான் வீரன்.

“கல்யாணத்துக்கு பொறவு…” தொண்டையை செருமி “என் நெனப்பு மட்டுந்தேன் இருக்கு. எனக்காக அவளோட கனவை ஒதுக்கி வச்சிடுவாள் போல. அது கூடாதுடே” என்றான்.

லிங்கத்திற்கு விளங்கிற்று.

“வெசனப்படாதண்ணே… அதுலாம் மீனாக்குட்டி ஜெயிச்சு காட்டிப்போடும்” என்ற லிங்கத்தின் நம்பிக்கை, வீரனுக்கு இல்லை. அவளிடம் பழைய உறுதி தங்களின் திருமண கனுவுகளால் குறைந்து விட்டதென்று அவளுக்கே தெரிந்ததால் தானே திடீரென தன்னை தள்ளி வைக்க பார்க்கிறாள் என்ற எண்ணம்.

“சரிடே… நீயி ஒரு எட்டு தோப்பு பக்கம் போயிட்டு வந்திடு. மஞ்சள் அறுவடை என்னைக்கு வச்சிக்கலாம் பார்த்துப்புடு” என்று அறைக்குள் சென்றான் வீரன்.

மீனாள் வீரனின் அரவம் உணர்ந்தும் திரும்பினாளில்லை. அவளின் பார்வை இருளில் மூழ்கியிருந்தது.

அவளுக்கு முன் திண்டில் அமர்ந்தவன் ஒன்றும் பேசவில்லை. கோழி குழம்பில் சாதத்தை பிசைந்து… சிறு உருண்டையாக்கி அதனுள் சிறு துண்டு கோழியையும் அதன் மீது கொஞ்சமாய் தயிரும் வைத்தும் அவள் வாய் அருகே நீட்டினான்.

அவளும் வாங்கிக்கொண்டாள்.

கண்ணில் நீர் முட்டியது.

ஒரு வார்த்தை பேசாது ஊட்டி முடித்தான். தண்ணீர் பருக வைத்து, தன் வேட்டியால் அவளின் வாய் துடைத்து விட்டான்.

தட்டினை எடுத்துக்கொண்டு அவன் நகர, கையினை பிடித்து நிறுத்தியிருந்தாள்.

வீரன் முகம் திருப்பாது நின்றிருக்க…

“கல்யாணமான ரெண்டு மூணு வாரத்துலே ஏன் பண்ணோமின்னு இருக்கா மாமா?” என்றவளின் குரல் மொத்தமாக உடைந்திருந்தது.

‘லிங்கத்திடம் பேசியதை அரைகுறையாக் கேட்டிருக்காள்.’

நெற்றியை நீவிக் கொண்டான்.

“உனக்கு என்னை புரியும்” என்றவன் சென்றுவிட்டான்.

அவன் சென்ற திசையையே பார்த்திருந்தவளுக்கு…

“இந்த கசகசப்பில் பலவித ரோசனைக்கு நடுவில் நம்ம வாழ்க்கை தொடங்க வேணாமாட்டிக்கு தங்கம். அதுவா இயல்பா ஆரம்பிக்கட்டும். என் தங்கப்பொண்ணை கலெக்டர் சீட்டில் நான் பார்க்கணுமாட்டிக்கு.” இரண்டு நாட்களுக்கு முன்னர் அவளை அதீத நெருக்கத்தில் நெருங்கிவிட்டவன் பட்டென்று சுதாரித்து விலகியதில் அவளின் சோக முகம் கண்டு அவன் கொடுத்த விளக்கம்.

ஏற்கனவே சொல்லியிருக்கிறான். ஆனால் அன்று ஏனோ இருவரும் தங்களின் கடமைகளை மறந்து காதலில் கட்டுண்டு போன சில நிமிடங்கள் அது.

அவளின் உணர்வுகளோடு விளையாடிவிட்ட குற்றவுணர்வு அவனுக்கு. அவனின் அந்த வருத்தம் கண்டு பெண்ணவள் தள்ளி நிற்க பார்த்தாள். கண்டுகொண்டான் அவன்.

லிங்கத்திடம் வீரன் சொல்லிய வார்த்தையில் துவண்டவள், வீரன் தன்னிடம் சொல்லிச் சென்றதில் முழுதாய் மீண்டிருந்தாள்.

வீரன் படிப்புக்கு முன்பு இப்போது இது வேண்டாமென்று மறுக்க முக்கிய காரணம்… குழந்தை என்று வந்துவிட்டால் வீட்டு உறுப்பினர்களே அவளின் படிப்புக்கு இடைவெளி விட்டுவிடுவர். முக்கியமாக மகா… குழந்தைக்கே முன்னுரிமை கொடுப்பார். முதலில் பிள்ளை அப்புறம் என்னமும் செய் என்றிடுவார். குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது அதில் ஓடிவிடும். அதற்காகவே வீரன் முரண்டு பிடித்து… தன்னிலையில் பிடிவாதமாக இருக்கிறான் என்பது அவன் சொல்லிச்சென்ற என்னை புரியும் என்பதில் முற்றும் முழுதாய் விளங்கிக்கொண்டவள். நன்கு தெளிந்திருந்தாள்.

மீண்டும் மேலே வந்த வீரன் அவளின் முகம் பார்த்தே மனதை அறிந்தவனாக குளிக்கச் சென்றான்.

வீரன் தலையை துவட்டியபடி வேட்டியை மட்டும் கட்டிக்கொண்டு வர, அவளின் பார்வை ஒரு நொடி… ஒரு நொடியே ஆனாலும் அவனது வெற்று மார்பில், திடம் வாய்ந்த உடம்பில் சலனமாக படிந்து விலகியது.

வேகமாக டி-சர்ட் எடுத்து அணிந்து கொண்டவன். இனி அவளை தடுமாற வைத்திடும் சிறு செயலையும் செய்திடக் கூடாதென எண்ணிக்கொண்டான்.

மீனாளின் பார்வை சன்னல் வழி வெளியில் இருந்தாலும், அவளின் கருவிழிகள் நிலை இல்லாது அலைப்பாய்ந்தது.

தான் ஆறுதல் கொடுத்தால் அவள் கூட்டிலிருந்து, தன்மீதான காதலிலிருந்து வெளியில் வர மாட்டாளென்று அவளருகில் செல்ல துடித்த கால்களை கடினப்பட்டு கட்டில் பக்கம் நகர்த்திச் சென்றவன், புத்தகம் ஒன்றை கையிலெடுத்துக்கொண்டு, தலைமாட்டில் சாய்ந்து கால்நீட்டி அமர்ந்துகொண்டான்.

சில நிமிடங்களில் தன்னவளின் பார்வை தன்னையே துளைப்பதை உணர்ந்தும் அவன் நிமிர்ந்தானில்லை.

மீனாளின் அலைப்பேசி இசைத்து அவளை மீட்டது.

“தீபா!”

…..

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நல்லாயிருக்கேன். தூக்கம் வருது. அதான் குரல் ஒருமாதிரி இருக்கு” என்ற மீனாளின் பேச்சில் அவளின் தோழி என்ன கேட்டிருப்பாள் என்பதை வீரனால் அனுமானிக்க முடிந்தது.

….

“ஹோ… அப்படியா? நான் போன் எடுக்கவே இல்லை. நாளைக்கு பத்து மணிக்குத்தேனே?” என்றாள்.

…..

“காலேஜ் வரல தீபா. வீட்டிலே காலேஜ் வெப்சைட்டில் பார்த்துக்கிறேன்” என்றவள் மணியை பார்த்துவிட்டு வீரனுக்கு மறுபக்கம் சென்று படுத்துக்கொண்டாள்.

மாலை தூங்கியது வேறு… உறக்கம் வருவனாயென்று சதி செய்தது.

அசையாது தனக்கு முதுகுக்காட்டி படுத்திருந்தாலும் அவள் உறங்கவில்லை என்பது அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது.

கௌதம் அழைத்தான்.

சென்னை சென்று சேர்ந்து விட்டதாகவும், அதிகாலை மூன்று மணிக்கு துபாய் செல்ல விமானமென்றும் சொல்லி வைத்திட்டான்.

“பார்த்து பத்திரம்டே!” என்றதோடு வீரன் பேச்சினை முடித்துக்கொண்டான்.

நேரம் செல்ல அவன் புத்தகத்தில் ஆழ்ந்து போனான். அவளோ உறக்கம் அண்டாது எழுந்து அவனைப்போலவே சாய்ந்து அமர்ந்து அலைப்பேசியில் கேம் விளையாடத் துவங்கிட சட்டென்று அலைப்பேசியை அவளின் கையிலிருந்து பறித்திருந்தான்.

“போன தலைவலி திரும்ப வரப்போவுது” என்றவன் அவளை இழுத்து தன் மார்பில் சாய்த்திருந்தான்.

மீனாளும் முரண்டு பிடிக்காது கண்களை மூடிக்கொண்டாள்.

வீரன் புத்தகத்தை ஓரம் வைத்துவிட்டு அவளை அணைத்தவாறு கண்களை மூடிக்கொண்டான்.

அப்போதுதான் நினைவு வந்தவளாக…

“சுபா அக்கா எங்கிருக்காங்க? வசந்தி அத்தை சலம்பல கூட்டலையா? சத்தமே கேட்கல?” எனக் கேட்டாள்.

வீரன் நடந்ததை சுருக்கமாகக் கூறினான். அவள் கேட்டுக்கொண்டாள்.

வார்த்தைக்கு வார்த்தை தங்கம் என்பவன் அவ்வார்த்தையையே தவிர்த்திருந்தான். அவன் தடுமாறும் முதல் அடி அவளது பெயரல்லவா.

ஒற்றை விளிப்பில் காதலை கொட்டிக் கொடுத்திடும் அவனின் தங்கம் என்ற சொல்லை எதிர்பார்த்து ஏமாந்தவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

அவன் தன்னை நேர்கொண்டு பயணிக்க… வாழ்வில் நிமிர்ந்து நிற்க வைக்க முயல்கிறான். அதற்காக சிலவற்றை தனக்கும் சேர்ந்து தான் வலி கொடுக்கப்போகிறது என்று அறிந்து ஏற்க முடிவு செய்துவிட்டான். தானும் புரிந்து நடந்துகொள்ள வேண்டுமென எண்ணிக்கொண்டவளுக்கு, தங்களுக்குள் சொல்லிக்கொள்ளாத காட்டிக்கொள்ளாத நேசமும் புரிந்துகொண்ட இடத்தில் இருக்கும்போது தேவையில்லா மனப்போராட்டம் எதற்கு என்று அவனைப்போலவே ஏற்க முயற்சி செய்யத் துவங்கினாள், அக்கணம் முதல்.

அடுத்து என்ன பேச, என்ன கேட்க என்று தெரியவில்லை. இருவரிடையேயும் மௌனம்.

இனி இப்படித்தான் நாட்கள் நகரப்போகிறது என்று இருவருக்கும் தெரிந்து தான் இருந்தது. தெளிந்த நீரோடையாய் தங்களின் இலக்கை எட்டிப்பிடிக்க காதலை தள்ளி வைத்து அடி வைத்தனர். இரு காதல் நெஞ்சங்கள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 42

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
43
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

9 Comments

  1. இத்தகைய புரிதலும் நேசமும் எந்த பெண்ணுக்கும் ஒரு வரம் !!!

  2. பெற்றவர்கள் சம்மதம் முன் மற்றவர்கள் என்ன கூறி விட முடியும். சுந்தரேசன் தனது தன்மானம் போய்விடாமல் பாதுகாத்து கொண்டார்.

    உறவுகளே ஆனாலும் அவர் மகளுக்காக அடுத்தவர் உழைப்பை அடமானம் வைப்பது எவ்வகையில் சரியென்றாகும்.

    கௌதம் தெளிவாய் யோசித்து தானும் விலைப்போகாமல், தனது தன்மானத்தையும் விலைபோகவிடாமல் காத்துக்கொண்டான்.

    பெற்ற பிள்ளைகள் உறவே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்துச் சென்ற பின்னும் கூட ஆங்காரம் குறையாமல் மற்றவர் மேல் வன்மம் கொண்டு அலைகின்றனர் நல்லானும் வசந்தியும்.

    மனைவி அவளது லட்சியத்தை அடைய தன் மீதான அவளது தடுமாற்றமும் தவிப்பும் தடையென அறிந்து அவள் சலனம் இல்லாமல் இலக்கை அடைய விலகி நிற்கின்றான் வீரன்.