Loading

யான் நீயே 33

வீட்டிற்கு வந்த வீரன் ஹோட்டலில் நடந்ததை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டான்.

“அவனுங்கல சும்மா விடக்கூடாதுண்ணே. நீயி ஒவ்வொரு முறையும் விட்டுடுறதாலதேன் இந்த அளவுக்கு ஏறிப்போவுது” லிங்கம் ஆதங்கப்பட்டான்

“ஆதங்கப்படுறதால அவசரப்பட முடியாது லிங்கு. கொஞ்சம் பொறுமையா தான் செய்யணும். குருமூர்த்தி சாதாரண ஆள் இல்ல நம்ம என்ன வேணாலும் செய்யலாங்கிறதுக்கு.” மருதன் எடுத்துச் சொல்ல பாண்டியன் அதனை ஆமோதித்தார்.

“ஒன்னு போனா ஒன்னு வந்துகிட்டே இருக்கே” என்று மீனாட்சி “மொத நாளைக்கு கருப்பருக்கு படையில் போடணும்” என்றார்.

வசந்தி தன் குடும்பத்துடன் வந்ததுமே மகா… அங்கை மற்றும் நாச்சியை கூட்டிக்கொண்டு தன் வீடு சென்று விட்டார்.

ஹோட்டலில் நடந்த விவகாரம் அறிந்தே அதனை கேட்பதற்காக மருதன் வந்திருந்தார். அவரை தொடர்ந்து நல்லானும் வந்திருக்க…

“எங்களுக்கு குடுக்குற ஹோட்டல எந்த வம்பும் இல்லாத ஹோட்டலா குடுங்க. உங்க பிரச்சனைல என்ன எதுலையும் சடவுல மாட்டி விட்றாதீங்க” என்ற நல்லான் பேச்சு லிங்கத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

“எந்த வம்புளையும் மாட்டிக்காம இருக்கணும்னா அடுத்தவங்க சொத்து மேல ஆசை படாம இருக்கணும்” என்று நறுக்கு தடித்தார் போல் கூறிவிட்டான்.

நல்லானுக்கு முகம் கருத்து சிறுக்க…

“எங்களுக்கு ஒன்னும் கெட்டுப் போவல, உங்க சொத்தை நீங்களே வச்சுக்கங்க. எங்க பையன நாங்களே வச்சிக்கிறோம். எங்களுக்கு இந்த கல்யாணம் நடக்காம போச்சுன்னா எந்த ஒரு விளைவும் இல்லை. நீங்க உங்க பொண்ணு வாழ்க்கை மட்டும் யோசிச்சு பாருங்க” என்ற நல்லான் மருதனை முறைத்து விட்டு எழுந்து சென்றுவிட்டார்.

“பேசுனது நானு. மாமாவை முறைச்சிட்டு போறாரு. இதுங்க எல்லாம் திருந்தவே திருந்தாதா?” கேட்ட லிங்கத்தை வீரன் பார்வையாலே அடக்கினான்.

“சும்மா அவங்க அத பண்றாங்க இது பண்றாங்கன்னு நீயி ஆத்திரப்படாத. கோவப்பட்டால் எதுவும் ஆவாது.” வீரன் தம்பியை கடிந்து கொண்டான்.

“சரி சரி பேசினதெல்லாம் போதும் பேசிக்கிட்டே இருந்தாக்கா பிரச்சனை தான். போய் உறங்குங்க, காலைல வெள்ளன கோயிலுக்கு எந்திருச்சு போகணும். அனைவரையும் அனுப்பி வைத்த மீனாட்சி எழுந்து பூஜை அறை சென்று மனதில் என்ன நினைத்தாரோ ஆளுயர மீனாட்சி அம்மன் படத்தின் முன்பு நின்று இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டு “எம் பிள்ளைகளுக்கு நீயிதாத்தா துணை” என்று வேண்டிக்கொண்டு படுக்கச் சென்றார்.

வீரனுக்காக லிங்கம் மாடி வராண்டாவில் காத்திருந்தான்.

“என்னடே… என்னவும் பேசனுமா?”

“அவனை வேலையை மட்டும் தூக்கினால் போதுமாண்ணே?”

“அவன் அம்பு தாம்டே. எய்தவனையே ஏதும் செய்யாமல் பொறுமையா இருக்கும்போது அவனை என்னமும் செஞ்சி என்னவாப்போவுது” என்ற வீரன்… “எம்புட்டு தூரம் போறான்னு பாப்போம்” என்றான்.

குரு மூர்த்தி மீனாட்சி ஹோட்டலில் புதிதாக ஒருவனை சேர வைத்து, அவன் மூலமாக பயன்படுத்தும் தேதி முடிந்த சமையல் பொருட்களை மீனாட்சியின் சமையலறை ஸ்டோர் ரூமில் வைத்து, உணவுப்பாதுகாப்பைத் துறையில் மாட்ட வைத்து, மீனாட்சி ஹோட்டலுக்கு இருக்கும் நல்ல மதிப்பினை மக்களிடத்தில் நீக்குவதற்கு முயற்சி செய்ய… வீரன் அந்த ஆளை கண்காணிப்பு காமிராவின் மூலம் கண்டறிந்து, ஹோட்டலின் மதிப்பையும் கைப்பற்றி, பொருட்களை மாற்றி வைத்தவனையும் ஹோட்டலிலிருந்து வெளி அனுப்பியிருந்தான்.

இத்தனை அமைதியாக பொறுமையாக செல்லும் வீரன் லிங்கத்திற்கு புதிது.

தவறென்றால் வீரனின் கை தான் முதலில் பேசும். ஆனால் இன்று அவனை ஒரு வார்த்தைக்கூட கடிந்து கொள்ளாது அனுப்பிவிட்டான்.

அதைத்தான் லிங்கம் இப்போது கேட்டிருந்தான்.

“அவன் தொழிலை முடக்கிட்டோம். அந்த கோவத்தில் ஏதோ பண்ணத் தெரியாம பண்ணிட்டு இருக்கான். நாம பதிலுக்கு எதுவும் செய்யாம வுட்டாலே அவன் அமைதியாகிப்போவான். இது குருமூர்த்தி வேலைதேன். எனக்கு கோகுல் என்ன செய்வான்னுதேன் ரோசனை” என்ற வீரன், “பார்த்துகிடலாம்டே… போயி உறங்கு” என்று அனுப்பி வைத்தான்.

லிங்கம் படுக்கையில் விழ, மருதனின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

“இப்போதேன் போனாரு. அதுக்குள்ள என்னவா இருக்கும். இந்த வசந்தி பெரிம்மா ஏதும் சலம்பலை கூட்டிடுச்சோ?” என்றவனாக அழைப்பை ஏற்க…

“மாமா” என்ற அங்கையின் ஹஸ்கி குரல் அவன் செவி நுழைந்தது.

“என்ன இந்நேரம் போனு?” விறைப்பாகத்தான் கேட்டிருந்தான்.

“போனு எதுக்கு பண்ணுவாக? பேசத்தேன்” என்றாள் அவள்.

“ராத்திரியில பேச என்ன இருக்கு?”

“மக்கு மாமா நீயி” என்றவள், அவனின் “ஏய்” என்ற அதட்டலில், “இதுக்கெல்லாம் பழகிக்கோ மாமா” என்று அசராது சொல்ல… அவன் தான் அசந்து போனான்.

“இப்போ என்னட்டி வேணும் உனக்கு?”

“நீதான்” என்று பட்டென்று சொன்னவள், “இப்போயில்லை… இன்னும் கொஞ்ச வருசம் செண்டு” என்றாள்.

“ரொம்பத் தெளிவாத்தேன் இருக்கவ” என்ற லிங்கம், “வெளிப்படையா சொல்லிட்டங்கிறதுக்காக மத்தவங்கள மாதிரி நாமளும் இருக்கணும் அவசயமில்லை அங்கை. எதை எப்போ செய்யணுமோ… அதை அப்போதேன் செய்யணும்” என்றான்.

“ரொம்ப பண்ற மாமா நீயி!”

“இருக்கட்டும்.”

“உண்மையாவே உனக்கு இருபத்தியேழு வயசுதானா மாமா?”

அங்கை கேட்டதன் பொருள் விளங்கியவன்,

“அடிங்க… வா ஓவரா போவுது. ஒழுங்கா இருக்க பாரு” என்றவன் வைத்துவிட்டான்.

அலைப்பேசியை வைத்ததும் காற்றை குவித்து ஊதினான்.

“செத்த நேரத்துல உசுபேத்த பார்த்தாளே” என்றவன், “உஷாரா இருந்துக்கோ லிங்கு. இல்லை ஆட்டி படைச்சிடுவா(ள்)” என்று சொல்லிக்கொண்டு, இதழ் விரித்தவனாக கவிழ்ந்து படுத்துக்கொண்டான்.

அவனுக்கும் காதல் முகிழ்ந்த பின்னர் தோன்றும் எல்லாம் ஆசையும் இருக்கத்தான் செய்கிறது… ஆனால் அதற்கு அவனவளின் வயதும் பக்குவமும் இடம் கொடுக்கவில்லையே.

“நீயி கொஞ்சம் முன்ன பிறந்திருக்கலாம்டி” என்று புலம்பியவனாக உறங்கிப்போனான்.

வீரன் அறைக்குள் வரும்போது மீனாள் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

மாலையில் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின்பு மீனாள் மற்றும் வீரன் இடையே சிறு இடைவெளி. இரவு உணவின்போது கூட மீனாள் வீரனின் அருகில் அமரவில்லை. காரணம் வீரனுக்கு புரிந்துதான் இருந்தது.

உறங்கும் மனைவியை சில கணங்கள் ரசித்து பார்த்தவன் அவளுக்கு மறுபக்கம் சென்று படுத்துக்கொண்டான்.

உறக்கத்திலே அவனின் இருப்பை உணர்ந்த மீனாள் அவனை ஒட்டி படுத்தாள்.

வீரனுக்கு அவளின் சிறு செயலில் மனம் லேசானதை போல் இருந்தது.

மீனாளுக்கும் வீரன் இடத்தில் கோபம் என்றெல்லாம் இல்லை அவளால் அவன் அருகில் இயல்பாக இருக்க முடியவில்லை.

அவன் சொல்லும் காரணங்கள் நியாயமானதாக இருந்தாலும் அவளின் காதல் மனதிற்கு அதெல்லாம் ஏற்கவில்லை. காதல் கொண்டு மனம் புரிந்தவளுக்கு காதலாக அவனுடன் வாழ்ந்திடத்தான் விருப்பம். விலகி இருக்க அல்ல.

கிட்ட நெருங்கினால் தானே இந்த தவிப்பும், ஆர்பரிப்பும் என நினைத்தவள் எட்டி நிற்க முடிவு செய்துவிட்டாள். வீரனும் புரிந்து கொண்டான்.

“இம்சைடி நீயி!” அவளின் மூக்கு நுனியில் முத்தம் வைத்தவன்,

“எத்தனை நாளுக்குன்னு பார்க்கிறேன்” என்றான்.

அடுத்த நொடியே…

“நீயி வீம்பா இருந்துக்குவ. நாலஞ்சு வருசமா இருந்தவத்தானே! நாந்தேன் உம் பக்கட்டு அவஸ்தையாகிப்போவேன்” என்று அவளின் நெற்றியில் இதழ் பதித்து விலகியவன், தன் கை வளைவில் வைத்துக்கொண்டு துயில் கொண்டான்.

வீரனின் மூச்சு ஆழ்ந்த உறக்கத்தில் சீராக வெளியேற, அக்கணமே இமை திறந்திருந்தாள் மீனாள்.

“நீதேன் தவிக்க வுடுற மாமா. உன்னைய மாறி சட்டுன்னு வெளிவர முடியமாட்டேங்குது. என்னோட தவிப்பு உனக்கும் குற்றவுணர்வாகிப்போவுது. இப்போ இருக்க நிலைமையில உன்னாலையும் இயல்பா எதையும் ஏத்துக்க முடியலன்னு மூளைக்கு புரியுது. மனசுக்கு தெரியமாட்டேங்குது. அதுக்கு இதுத்தேன் சரி. ஒண்ணாத்தானே இருக்கோம். பார்த்துக்கிட்டே பக்கமிருக்கிறதும் நல்லாத்தேன் இருக்குமாட்டி” என்று மனதில் உள்ளவற்றையெல்லாம் வீரன் கேட்டுக்கொண்டிருக்கிறான் என்பது தெரியாமலே பேசினாள்.

மீனாள் பேசிய மொத்தத்திலும் அவனுடனான வாழ்விற்காக அவள் கொண்டுள்ள ஏக்கமும் தவிப்புமும் மட்டுமே பரவி கிடந்தது.

கொள்ளைப்பிரியம் வைத்திருந்தும் அவர்களுக்கு சூழல் சரியானதாக அமையவில்லை.

ஒரு பக்கம் கோகுல், குரு மூர்த்தி என்று வீரன் கவனமாக காய்கள் நகர்த்திக் கொண்டிருக்க… மறுபக்கம் சர்க்கரை ஆலை கட்டும் பணி காத்துக்கிடக்கிறது. அந்த வேலை துவங்கிவிட்டால் வீரன் வீட்டில் இருக்கும் நேரமே அரிதாகிப்போவும். மீனாளுக்கும் ஒரு வருட படிப்பு இருக்கிறது. அவளின் தீவிர படிப்பிற்கு காரணம், அவள் சிறு வயது முதல் கொண்டுள்ள ஆசை. ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற வேண்டும். அதற்காகத்தான் பள்ளி இறுதியில் மாவட்டத்தில் முதல் மாணவியாக வந்த போதும் இளங்கலை வரலாறு எடுத்து படித்தாள். இப்போது முதுகலை இரண்டாம் ஆண்டு வரலாறு. அவளின் கனவு திருமண வாழ்வால் கவனம் சிதறி தடைபட்டு விடக்கூடாது.

இருவருக்குமான வாழ்வு நீண்டு இருக்கவே… இந்த சிறு இடைவெளி அவசியமாகப்பட்டது அவனுக்கு. அவனவளும் அதனை புரிந்து கொண்டாள்.

“லவ் யூ மாமா.” மீனாள் மெல்லொலியில் மொழிந்திட, வீரன் மனதோடு சொல்லிக்கொண்டான்.

அந்நேரத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்டு பாண்டியன் என்னவென்று வந்து பார்க்க…

சுந்தரேசன் வெளியில் செல்ல வாயில் கதவை திறந்து கொண்டிருந்தார்.

“என்ன மச்சான் இந்நேரம்?”

“மனசு குடைச்சலா இருக்கு மாப்பிள்ளை. உறக்கம் வரல, செத்த காத்தாட நடந்துட்டு வறேன்.”

“நானும் வரட்டுமா?”

“வேணாமாட்டிக்கு. நம்ம தோப்பு தொரவு… இங்கன நடக்க என்ன?” என்ற சுந்தரேசன் பாண்டியன் அடுத்து பேசும் முன் இறங்கி நடக்க ஆரம்பித்திருந்தார்.

அவர் தென்னந்தோப்பு பக்கம் செல்ல… பாண்டியனும் சென்று படுத்தார்.

அங்கே சுந்தரேசனுக்காக கௌதம் காத்திருந்தான்.

கௌதமை கண்டதும் மாலை சுபா கௌதமின் முடிவாக சொல்லியது நினைவு வந்தது. அதைப்பற்றி பேசத்தான் கௌதம் இந்நேரம் அழைத்திருக்கிறான் என்பதும் புரிந்தது.

“வாங்க மாமா. மன்னிச்சுக்கோங்க. இப்போ விட்டால் வேற எப்பவும் பேச முடியாது. அதேன்” என்ற கௌதமிடம்,

“அதனாலென்னப்பா” என்றார்.

அதன் பின்னர் இருவரிடமும் மௌனம்.

சுந்தரேசனே பேசினார்.

“சுபா சொல்லுச்சுப்பா. எனக்கு சம்மதந்தேன். ஆனால், அதுக்கு பொறவு உங்க பெத்தவக செயல் என்னவா இருக்குமின்னு நினைச்சாக்கா பயந்து வருது” என்றார்.

“அச்சப்பட வேண்டாம் மாமா. என்னைய அடகு வைக்கிற மாதிரி என் வாழ்கையை, அவங்க பேராசைக்காக விலை பேசியவங்க என்னை பெத்தவங்களா இருக்க முடியாது. எனக்கு அந்த நினைப்பு போயி ஒரு வாரமாவுது. அவுங்க என்ன வேணா பேசட்டும். கண்டுக்க வேண்டாமாட்டிக்கு. கருத்தில் ஏத்துகிட்டா தானே வருத்தம்?” எனக் கேட்டான்.

“என்னதேன் சொந்தமா இருந்தாலும், எம் மவளுக்காக அவீங்க சொத்து குடுக்கிறது என் தன்மானத்தை வுட்டுக் கொடுக்கிறாப்போல இருக்கு. பாண்டியன் மாப்பிள்ளையும், வீரனும் நல்ல மனசோட செஞ்சாலும் காலத்துக்கும் எனக்கு அது உறுத்துதேன். அதுக்காகத்தேன் உங்க முடிவுக்கு ஒத்து வரேன். நீங்க ரெண்டேறும் நல்லா இருந்தா போதுமாட்டிக்கு” என்றார்.

கௌதம் சுந்தரேசனின் கைகளை இறுகப்பற்றி அழுத்தம் கொடுக்க… அப்படியொரு நிம்மதி அவரிடத்தில்.

நாளை அவர்கள் எடுத்திருக்கும் முடிவு மற்றவர்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறதோ?

************

அதிகாலை நான்கு மணியளவில் அனைவரும் எழுந்து கோவில் செல்ல ஆயத்தமாகினர்.

குளித்து கிளம்பி தயாராகிய வீரன், உறங்கும் மனைவியை எழுப்பினான்.

“தங்கம்… தங்கப்பொண்ணு…”

அவனின் அழைப்பிற்கு சட்டென்று எழுந்து கொண்டாள்.

“நேரமாச்சுது… குளிச்சிட்டு கிளம்பு” என்று அவன் சொல்ல… அருகிலிருந்த அலைப்பேசியை எடுத்து நேரத்தை பார்த்தவள் மீண்டும் படுத்துக் கொண்டாள்.

“என்ன படுத்துட்ட?”

“அம்மத்தா சொன்னாங்க… கெடா வெட்டப்போறீங்கன்னு. இப்போ போனதும் அதானே செய்வீங்க? நான் வரல. பொறவு வாரேன்” என்றவள் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டாள்.

சிறுவயதில் ஒருமுறை ஆடு வெட்டுவதை நேரில் பார்த்து ஒரு வாரம் காய்ச்சலில் சுருண்டு கிடந்தவளுக்கு இன்னமும் அந்த பயம் இருக்கத்தான் செய்தது.

“வெட்டுறதை பார்க்க மட்டுந்தேன் பயம்… உண்குறதுல இல்லை” என்று வீரன் கேலி செய்ய…

“எனக்கு சிரிப்பு வரல. கிளம்புங்க. சமைக்குற ஆள காரம் இல்லாம செய்ய சொல்லுங்க” என்றாள்.

“கூட நானிருக்கேன் தங்கம். நீயி வா.” மீண்டும் அழைத்து பார்த்தான்.

அவளிடம் பதிலில்லை.

அடுத்து வீரனிடமிருந்து எந்த சத்தமுமின்றி இருக்க… சென்றுவிட்டான் என நினைத்து போர்வையை விலக்கி எழுந்து அமர்ந்தவள்… “ஊப்” என்று காற்றினை இழுத்து ஊதிட… அவளுக்கு முன் மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு ஒற்றை புருவத் தூக்கலுடன் அவளை பார்த்திருந்தான்.

“அவாய்ட் பன்றியா தங்கம்?”

வீரனின் கேள்வியில் மீனாளின் கண்களில் நீர் நிரம்பிவிட்டது.

அவளின் அம்முகம் வருத்திட… எதுவும் பேசாது அங்கிருந்து வேகமாக சென்றிருந்தான்.

“சாரி மாமா” என்று இல்லாதவனிடம் கூறியவள், எழுந்து சென்று கிளம்பி கீழே வந்தாள்.

வீட்டு ஆண்கள் அனைவரும் கோவிலுக்கு சென்றிருந்தனர்.

“என்ன மீனாள் நகை எதுவும் போடல. புதுசா கல்யாணம் ஆகியிருக்கு. கறி கஞ்சி உண்க வர ஊர் சனம் விசாரிக்குமே… ரெண்டு மூணை எடுத்து போட்டுக்கிட்டு வா” என்று அபி சுபாவிற்கு பூவை கொடுத்தவாறு விரட்டினார்.

மீனாள் திரும்பி செல்ல…

“ரெண்டு கையிலும் கணமா வளவியை பூட்டியாத்தா” என்றார் மீனாட்சி.

அறைக்கு வந்தவள் வார்ட்ரோபிற்கு உள்ளிருக்கும் ரகசிய பெட்டியின் கடவுச்சொல் அழுத்திட தவறு என்று வந்தது. எவ்வளவு யோசித்தும் சரியான எண் நினைவு வராது போக வீரனுக்கு அழைத்துவிட்டாள்.

அழைப்பை ஏற்றவன் ஒன்றும் பேசாதிருக்க…

“லாக்கர் பாஸ்வோர்ட் தப்புன்னு வருது?” என்று மெல்லிய குரலில் கூறினாள்.

“நான் மாத்தலயே!”

“நான் தான் தப்பா போடுறேன். நினைவு இல்லை” என்றாள்.

அவன் சொல்லிட அழுத்தியவள்,

“ஓபன் ஆகிருச்சு” என்றிட அவ்வளவுதான் என்பது போல் வைத்துவிட்டான்.

மீனாளுக்கு முகம் சுருங்கிப்போனது.

“நீ பண்ணதை அவுக திரும்பி பண்ணா வருத்தமா இருக்கோ?” தன்னைத்தானே கேட்டுக்கொண்டவள்,

“கொஞ்ச நாளுக்கு மீனாள்” என்று திடப்படுத்திக்கொண்டு நகைகள் அணிந்து கீழே சென்றாள்.

வீரனருகில் சாதாரண பேச்சிற்கே காதல் கொண்ட மனம் மூச்சு முட்டிட… சீண்டி விலகும் நொடி இருவருக்குமே ஏற்படும் குற்றவுணர்வை தவிர்க்கவே மீனாளின் இந்த விலகள்.

ஒருநாள் இல்லை ஒருநாள் அந்த குற்றவுணர்வு பாரமாகிப்போகும். அந்த பாரம் முகம் பார்த்திடவே சங்கடத்தை கொடுத்திடும். அது தங்களுக்குள் வேண்டாமென்கிற எண்ணம் மீனாளுக்கு.

இருவருக்குமிடையே அதீத புரிந்துணர்வு இருந்திட… அவள் தள்ளி நிறுத்துகிறாள் என்பது தெரிந்ததும் மனதில் சட்டென்று மூண்டுவிட்ட கோபத்தில் ஏதும் வார்த்தையை விட்டுவிடுவோம் என்பதாலேயே வீரனும் வேகமாக வெளியேறியது.

புரிதல் உள்ள அன்பு என்றும் தீர்ந்துபோகாதது.

பெண்கள் கோவிலுக்கு செல்ல, மருதன், நல்லான் வீட்டார் அனைவரும் அங்கு வந்திருந்தனர்.

ஊர் எல்லையில் உள்ள பரந்த மணற்பரப்பின் நடுவில் கம்பீரமாக வெண் வர்ண குதிரையில் கையில் அரிவாளுடன் நின்றிருந்தார் கருப்பர்.

சுற்றி பல குதிரைகள் சிலை நின்றது. கோவிலுக்கு அரணாக சுற்றிலும் பருத்த மரங்கள்.

சிலை உயிருடன் நிற்பது போன்ற தோற்றம். பார்க்கவே பயமளிக்க தள்ளி சென்று மரத்தடியில் அமர்ந்துவிட்டாள் மீனாள்.

இன்னும் இருள் பிரியவில்லை.

“கெடா வெட்டப்போவுது வாக்கா.” அங்கை கோவிலின் முன்னிருந்து சற்று உரக்க அழைக்க… வரவில்லை என மீனாள் கையசைத்தாள்.

தீபாராதனை முடிந்து,

மஞ்சள் நீர் ஊற்றப்பட்டு கருப்பர் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மூன்று சேவல்களின் கழுத்தை திருகி போட்ட பூசாரி, ஐந்து ஆடுகளையும் இமைக்கும் நொடியில் வெட்டியிருந்தார்.

“அம்புட்டுதேன். ரத்தம் பூமியில் பட்டாச்சு. கருப்பர் உம்ம குறையை போக்கி… நல்லது நடத்துவார்” என்று சொல்லிய பூசாரி… “சமைச்சு முடிச்சிட்டால் படையல் போட்டுடலாம்” என்றார்.

“நாச்சி மீனாளையும் கூப்பிட்டுக்க. ரெண்டு பானையா உருண்டை பொங்கல் வையுங்க. லிங்கம் சேவலை கழுவு நறுக்கித் தருவியான். குழம்பு வச்சிப்புடுங்க. அதைத்தேன் படையலுக்கு வைக்கணுமாட்டிக்கு” என்ற மீனாட்சி “நாம கறி கஞ்சி வேலையை பார்ப்போம்” என்று அங்கு பெரியதாய் விரிக்கப்பட்டிருந்த தார் பாயில் கால்நீட்டி அமர்ந்தார்.

“நாங்க கெடா நறுக்குற இடத்துல நிக்கிதோம். இல்லைன்னா சரியா செய்யமாட்டானுவ” என்று மருதனும், பாண்டியனும், கோவிலுக்கு சற்று தள்ளி மரங்களுக்கு நடுவில் ஆடுகளின் தோலினை உரித்துக்கொண்டிருந்த ஆட்களின் பக்கம் சென்றனர்.

வீரன் பொங்கல் வைக்கும் இடத்தில் இரண்டு பானைகள் வைப்பதற்கு ஏதுவாக கற்கள் அடிக்கி வைத்திட…

“நீங்க வையுங்க மதினி” என்று அருகிலிருந்த பாறை மீது அமர்ந்துவிட்டாள் மீனாள்.

“ஏன்? என்னாச்சு மீனாக்குட்டி. அப்பத்தாவுக்கு தெரிஞ்சா ஏசும். நான் பானையை வைக்குதேன். தண்ணீ கொதிச்சதும் அரிசியை போடு மத்தது நான் பாத்துகிடுதேன்” என்றாள் நாச்சி.

“விடியலிலே தலைக்கு தண்ணீ ஊத்தினது ஆவல மதினி. தலை பொடுபொடுன்னு வலிக்கு” என்றாள் மீனாள்.

“சரி நீயி இரு. நான் எரியவுடுறேன்” என்று நாச்சி அடுப்பில் குச்சிகள் வைத்து, அதன்மீது கற்பூரம் வைத்து ஏற்றி இரு அடுப்புகளையும் எரிய விட்டு நீர் நிரம்பிய பானைகளை தூக்கி அடுப்பின் மீது வைத்தாள்.

வீரன் நின்று மீனாளை பார்த்தானே தவிர்த்து எதுவும் பேசவுமில்லை, கேட்கவுமில்லை.

“சோறாக்குற இடம் போறேன் நாச்சியா. விறகு பத்தலன்னா கூப்பிடு” என்று சென்றிருந்தான்.

“உனக்கும் அண்ணேக்கும் ஏதும் சடவா மீனு?”

“ஏன் கேக்குறீங்க மதினி?”

“உனக்கு தலைவலின்னு சொல்லியும் அமைதியா போவுதேன்னு கேட்டேன்” என்ற நாச்சி பொங்கல் வைப்பதில் பரபரப்பாகிட…

அந்தப்பக்கம் வெட்டப்பட்ட ஆடுகள் கொழம்பில் கொதித்திட மீனாட்சி காட்டிய பரபரப்பில் உணவு வேலை சரூராக நடைபெற்றது.

வீட்டு ஆட்கள் சமையலுக்கு வேண்டியவற்றை தயார் செய்து கொடுக்க… லிங்கத்தின் கை மணத்தில் சாப்பாடு சரியான நேரத்திற்கு தயாராகியது.

“அச்சோவ்… மாமா வாசம் ஊரை தூக்குது” என்று அங்கை குழம்பினை கிளறிவிட்டுக் கொண்டிருந்தவனின் அருகில் நின்று குதித்தபடி சொல்ல…

“நெருப்புகிட்ட ஆடாம தள்ளி நில்லு அங்கை” என அதட்டினான் லிங்கம்.

“கையில ஊத்து மாமா. ருசி பாப்போம்” என்று அங்கை தன் உள்ளங்கையை அவன் முன் நீட்டி காட்டிட…

“இத்தாம் பெரிய டபராவுல கொதிக்கிற குழம்பை கையில் ஊத்துனா தாங்குவியா நீயி?” எனக் கேட்டுக்கொண்டே தன் கையில் ஊற்றியவன் அவளின் வாயருகே காட்டினான்.

“ம்ம்ம்… அசத்தல் மாமா. உன்னை மிஞ்ச ஆளிருக்கா?” என்று சிலாகித்திட..

“அடங்குடி… மொத்த குடும்பமும் இங்கனத்தேன் பாக்குது” என்றான்.

“பாக்கட்டும் மாமா. அப்படியாவது நம்மளை புரிஞ்சிக்கட்டும்” என்று அங்கை ஒற்றை கண்ணடிக்க… லிங்கம் தடுமாறினான்.

அவனால் அடுத்து என்ன என்று முடியாது தலும்பிட…

“சின்னக்குட்டி” என்று வீரன் அங்கையை அழைத்து தன் தம்பியை காப்பாற்றினான்.

அபியும், மகாவும் தன்னையே குறுகுறுவென்று பார்ப்பதை கண்டு அசடு வழிந்த லிங்கம் மற்றைய பக்கம் திரும்பிக்கொண்டான்.

“அடுத்த ஜோடி ரெடியாவுது போல மதினி.” அபி சொல்ல மகா புன்னகையோடு தலையசைத்தார்.

“சந்தோஷம் தானே அபி… நம்ம புள்ளைங்க, கண்ணுக்கு முன்னவே சிறப்பா வாழ்ந்தா அதைவிட வேறென்ன வேணுமாட்டிக்கு?” என்றார் மீனாட்சி.

“அங்கன ரெடி அப்பத்தா. இங்கன ரெடின்னா படையல் போட்டுடலாம்” என்று நாச்சி வந்து சொல்ல…

“ஒரு இருவது நிமிசம் நாச்சி” என்ற லிங்கம், “பொங்கன பானையை கருப்பர் முன்னாடி வச்சி படையல போடுத்தா. இங்கன முடிஞ்சிடும்” என்றான்.

நாச்சி பூசாரியிடம் செய்த பொங்கல் மற்றும் சேவல் குழம்பினை எடுத்து கொடுக்க…

“கொட்டு அடிங்கடே. சத்தம் கேட்டு சனம் வந்து சேரும்” என்று சொல்லி, ஒலிக்கும் கொட்டு சத்தத்தில் கருப்பர் முன் தலை வாழை இலை போட்டு பொங்கல் வைத்து அதன் மீது கறியோடு குழம்பை ஊற்றி… கருப்பருக்கு பிடித்த இன்னும் பிற பொருட்களை வைத்துவிட்டு பூசாரி குடும்பத்தாரை அழைக்க அனைவரும் முன் வந்தனர்.

ஊர் மக்களும் வந்த வண்ணம் இருந்தனர்.

அதன் பின்னரே வசந்தி நல்லானுடன் வந்து சேர்ந்தார்.

அதுவரை அனைத்திலும் பார்வையாளனாக ஓரமாக நின்றிருந்த கௌதம் முன் வந்து நின்றான்.

“என்னடே வந்ததிலேர்ந்து ஒரு மாறியாவே இருக்க? கல்யாணத்தை நெனச்சு அச்ச படுதியாக்கும்? கல்யாணம் முடிஞ்சாக்கா சரியாப்போவும்” என்று கௌதமின் தோள் தட்டிய வீரன், “மனசுல என்ன வெசனமிருந்தாலும், நமக்கும் மேல ஒரு சக்தி இருக்கு. அது நல்லதையே கொடுக்குமின்னு நம்பிக்கையோட சாமி கும்பிடுடே… உன் நம்பிக்கைதேன் உன்னோட பலம். எல்லாத்தையும் சரி செய்துப்புடும்” என்றான்.

கௌதமிற்கு மறு பக்கம் சுபா நின்றிருந்தாள்.

“இப்பவே என்னடே ஒட்டிட்டு நிக்குற? இங்கன வா!” எதிர் வரிசையில் நின்றிருந்த வசந்தி கௌதமை அழைக்க அவனோ அவரை கண்டுகொள்ளவே இல்லை.

“கல்யாணம் முடியட்டும் வச்சிக்கிறேன் அவளுக்கு.” சுபாவை பார்த்து முணுமுணுத்தார் வசந்தி.

லிங்கு, மீனாள், வீரன் என்று நின்றிருக்க, லிங்கத்திற்கும் மீனாளுக்கும் இடையில் வந்த அங்கை,

“தள்ளுக்கா” என்று இடித்திட மீனாள் வீரனின் தோளோடு தோள் உரச நின்றாள்.

உரசிய கணம் இருவரின் பார்வையும் முட்டிக்கொண்டது.

மீனாளின் விழிகள் நன்கு சிவந்திருந்தது. ஆழ்ந்து பார்த்தானே தவிர எதுவும் கேட்கவில்லை.

பூசாரி அடித்த மணி சத்தத்தில் பார்வையை கருப்பரிடம் திருப்பிக் கொண்டான்.

தீபாராதனை தொடங்கியது.

அனைவரும் விழிகள் மூடி இறைவனை வணங்கிட…

கௌதம் எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, சுந்தரேசனை ஏறிட்டான். அவரோ சம்மதமென தலையசைக்க…

“உனக்கு என்னை கட்டிக்கிட சம்மதம்தேனே சுபா?” என தன்னருகில் நின்றிருந்தவளிடம் அவளுக்கு மட்டும் கேட்குமாறு கேட்டான்.

சுபா வாய் திறந்து தன் சம்மதத்தை கூறிட, தன்னுடைய சட்டைப் பையில் வைத்திருந்த தாலியை கையில் எடுத்த கௌதம் யாரைப்பற்றியும் கருத்தில் கொள்ளாது சுபாவின் கழுத்தில் கருப்பர் சாட்சியாக தாலியை கட்டியிருந்தான். சுபாவும் மனமார ஏற்றுக் கொண்டிருந்தாள்.

தாலி கட்டிவிட்டு கௌதம் தன் கையினை இறக்க…

“அடப்பாவி.. இப்படி எம் மானத்தை ஊர் முன்னாடி முச்சந்தியில் சந்தி சிரிக்க வச்சிட்டியேடா” என்று கேட்ட வசந்தியின் குரலில் கண்கள் திறந்த அனைவருக்கும் என்னவென்று புரியாத நிலை.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 47

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
41
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

8 Comments

  1. “தானமா கொடுத்த மாட்ட பல்ல பிடிச்சு பதம் பார்த்தானாம்” பழமொழிக்கு பொருத்தமா நடந்துக்குறாரு நல்லான்.

    அடுத்தவங்க சொத்தை கேக்கறதே தப்பு இதுல சொத்து சொத்தையா இருக்கானு வேற கேட்குறாரு.

    குருமூர்த்தி பிரச்சினை சம்மந்தமான வீரனின் பொறுமையான செயல்பாடுகள் சரியே.

    இருவருக்கும் வாழ்வு நீண்டு இருக்க மீனாளின் லட்சியம் நிறைவேற சிறிது காலம் விலகி இருக்கும் எண்ணத்தினில் வீரன்.

    சாதாரணமாக பேசி நெருங்கினால் கூட உணர்வுகளின் ஆர்ப்பரிப்பு, விலக இயலா தவிப்பு என மீனாள்.

    இருவருக்கும் ஏற்றது போல் சூழலும் சரியாக இல்லை.

    சிறிது காலம் காதலர்களாக பேசி பழக மனதை பக்குவப்படுத்த வேண்டும் மீனாள். எந்நேரமும் தானும் வருந்தி வீரனையும் வருந்த விட்டு.

    கருப்புசாமி படையல் குறித்தான விளக்கங்கள் அருமை. 👏🏼👏🏼❤️

    கௌதம் தனது தன்மானத்தை மட்டும் அல்லாது சுந்தரேசனின் தன்மானத்தையும் காப்பாற்றி விட்டான்.

    நல்லதொரு முடிவு.

    1. Author

      மகிழ்ச்சி… மிக்க நன்றி 😍

  2. வசந்திக்கு இந்த அதிர்ச்சி தேவை தான்….