Loading

யான் நீயே 32

என்னயிருந்தாலும் சுந்தரேசன் அபியின் அண்ணன். ஆதலால் இதில் கருத்து சொல்ல முடியாது அபி அமர்ந்திருந்தார்.

“இப்பவும் நீங்க கம்மின்னு இருந்தாக்கா என்ன அர்த்தம்?” மகா தான் மருதனிடம் கேட்டிருந்தார்.

“ஹோட்டல் முழுக்க எம் மருவமவனுங்க உழைப்பு. அதை என்னத்துக்கு கேக்குறா அவள். அமிழ்தந்தேன் கூறுக்கெட்டு போயி தலையை ஆட்டிட்டு வந்தான்னாக்கா நீங்க எப்படி அமைதியா வரலாம்?” என்று தன்னுடைய ஆதங்கத்தை காட்டிய மகா, “உங்க தங்கச்சிக்குன்னதும் ஊமையாயிட்டீய்ங்களா?” என வெடித்தார்.

“பூர்வீக வீடு பூட்டியே கிடக்கிறதுக்கு யாராவது புழங்கனா நல்லதுதேன். அதை அவளுக்கே கொடுங்க. நான் வேணாமின்னு சொல்லல… ஆனால் ஒத்தயா நின்ன ஹோட்டலை ஏழா உருமாத்த அமிழ்தனும், லிங்குவும் போட்ட உழைப்பை கூடயிருந்து பார்த்த ஆளுதானே நீங்க?” மூச்சுவாங்க கீழே அமர்ந்தார் மகா. அவரால் வசந்தியின் பேராசையை ஏற்கவே முடியவில்லை.

“ஓட்டலுல பிரேமுக்கே உரிமை இல்லைன்னு சொல்லுவேன்” என்றவரின் முன்பு சொம்பு நீரை நீட்டிய மீனாள், “நீயி நம்ம சுபா அக்காவை மறந்துட்டு பேசுறம்மா!” என்றாள்.

“சுபாவுக்காகன்னா மொத்தத்தையும் கொடுன்னு சொல்லியிருப்பேன். இது வசந்தி ஏதோ நம்மளை கட்டம் கட்டி கேட்ட மாறியில்ல இருக்கு” என்றார் மகா.

அங்கு அனைவருக்கும் மகாவின் ஆதங்கம் புரியத்தான் செய்தது.

“அத்தை நீயி எதையும் ரோசிக்காத. முதலில் சுபா கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும்” என்று அவரை சமாதானம் செய்த வீரன், “மாமா உங்களுக்குந்தேன். இதெல்லாம் வேணாம், சுபா வூட்டோட இருந்தாலே போதுமின்னு சொல்றதை வுட்டு கல்யாண சோலியை ஆரம்பிங்க” என்றான்.

“லிங்கு நீயென்னடே சொல்ற?”

வீரனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த லிங்கம்… “ஐயா, மாமாகிட்டலாம் கேட்டீங்களா? என்கிட்ட மட்டும் திரும்பத்திரும்ப கேட்க காரணமென்னண்ணே! நான் ஹோட்டலுவளை பார்த்துக்கிறேன்னா? இல்லை பின்னாடி உரிமை கேட்டு நிப்பேன்னா” என்றவன், “வலிக்குதுண்ணே” என்று அங்கிருந்து சென்றிருந்தான்.

“ம்ப்ச்…” வீரன் தன் நெற்றியை தேய்த்துக்கொண்டான்.

வீரன் இரவு பிரேமிடம் கூட இதைப்பற்றி பேசி, அவனது விருப்பம் என்னவென்று கேட்டிருந்தானே! கேட்க வேண்டியது கடமை. கேட்டுவிட்டான். அதில் லிங்குவிற்கு சடைப்பு உண்டாகுமென்று வீரன் நினைக்கவில்லை.

“பிரேமுகிட்ட கேட்டுபுட்டேன். அவனுக்கும் சம்மதம். அடுத்து ஆக வேண்டியதை பாருங்க” என்று இருக்கையிலிருந்து எழுந்த வீரன், “ரெண்டு நாளுல கருப்பருக்கு படையல். வசந்தி பெரிம்மாவும் வருவாய்ங்க. படையல் முடிச்சிட்டு, வீட்டிலே பரிசம் மாத்திக்கலாம்” என அனைவருக்கும் பொதுவாக சொல்லியவன் “உங்களுக்கு சரிதானே மாமா?” என சுந்தரேசனிடம் கேட்டிருந்தான்.

அவரால் மகள் வாழ்வின் முன்பு சரியென தலையாட்டிடத் தான் முடிந்தது.

“அப்பத்தா…?”

“என்னய்யா… எனக்கு சம்மதந்தேன். நீயி இப்படியொரு முடிவுக்கு சம்மதம் சொல்லிபுட்டியே, ஆளாளுக்கு என்ன நினைப்பாய்ங்கன்னு வெசனப்படாத ராசா. எங்க போவுது… இப்போ வசந்தி கேட்டு வாங்கிட்டாலும், பின்னாடி நம்ம கௌதம் சுபா கைக்குத்தானே சேரப்போவுது” என்றார். அருகிலிருந்த அபி தன் மாமியாரின் கையை பற்றிக்கொண்டார்.

“அம்புட்டு லேசுல வுட்டுப்புடமாட்டோம்த்தா!” என்று மருமகளின் கையில் அழுத்தம் கொடுத்து அரவணைத்துக் கொண்டார் மீனாட்சி.

“உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஆத்தா” என்ற சுந்தரேசன் அமைதியாக எழுந்து வெளியில் சென்றார். அவரின் பின்னோடு மருதனும், பாண்டியனும் வெளியேறினர்.

வீரன் தன் தம்பியை தேடி மாடி ஏறி சென்றான். அவனது அறையை நோக்கி.

மகா ஏதோ ஒரு ஆதங்கத்தில் பேசி விட்டார். ஆனால் அவர் பேசியதும் சரிதானே! அபி என்னவும் நினைத்துக் கொள்வாரோ என்று அபியின் அருகில் சென்று அமர்ந்தார்.

மகா விளக்கம் கொடுக்கும் முன்பே அபி அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு… “உங்கள நான் தப்பாவே நினைக்கல மதினி. நீங்க சொல்றதும் சரிதானே! ஒருத்தியோட ஆசைக்காக மத்தவங்க விட்டுக் கொடுக்க வேண்டியதா இருக்கே” என்று வருத்தம் தெரிவித்தார்.

“சுபாவுக்காக கொடுக்கறதுக்காக நான் எதுவும் சொல்லல அபி. இதுக்காக அவ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளா இல்ல கல்யாணத்த சாக்கா வச்சு சொத்து கேக்குறாளான்னு என்னால புரிஞ்சுக்க முடியல. ஆனா வசந்தியோட குணம் நமக்கு தெரியுமே!

“இந்த சுபாபுள்ள அந்த வசந்தி கிட்ட என்னன்னு தான் வாழ்க்கையை ஓட்ட போறாளோ?” என்று மகா ஆதங்கப்பட்டார்.

“எனக்கும் அந்த கவலை தான் மதினி. என்ன பண்றது காதல்னு வந்துட்டாலே குடும்பம் கண்ணுக்கு தெரியாது போல இருக்கு.

“இதுல இன்னமும் இவ செய்ய துணிஞ்ச செயல என்னால ஏத்துக்கவே முடியல மதினி… ஒத்த மனுசனா நின்னு அண்ணே அவளை வளத்துச்சு. ஆனா காதல் தான் பெருசு, அந்த வசந்தியோட வார்த்தை பெருசுன்னு இப்படி பண்ணிட்டாளே, பாவி மவ(ள்). அபியால் தன் மனக்குறையை மகாவிடம் கூறி புலம்ப மட்டுமே முடிந்தது.

“அச்சோ ஒழுங்கா இத்த பேசுறதை நிறுத்துங்க. இத பத்தியே பேசிகிட்டு இருந்தா வீண் மன வருத்தம் தான். எடுத்த முடிவு எடுத்தாச்சு. மாமா சொல்லிட்டு போனது போல அடுத்து என்னன்னு தான் நாம பாக்கணும். இங்கேயே உட்கார்ந்திருந்தாக்கா எல்லாம் ஆச்சா? படையலுக்கு தேவையானதை பார்ப்போம். படையல் முடிச்சா அன்னைக்கு சாயங்காலமே பரிசம் வேற. ரெண்டு வேலை இருக்கு. முதலில் ஆக வேண்டியத பார்ப்போம்” என்ற அங்கையை தொடர்ந்து,

“எனக்கு என்னவோ வசந்தி அத்தை இதோட நிறுத்துற மாதிரி தெரியல. வேற ஏதோ உள்ளுக்குள்ள மனக்கணக்கு இருக்கு” நாச்சி சொல்லியதும் மற்றவர்களுக்கும் அந்த குழப்பம் தான்.

அங்கு நடப்பதை பார்த்தபடி மீனாள் அமைதியாக இருக்க. “நீ என்னட்டி ஒத்தையில உட்கார்ந்து இருக்கிற? நீ என்ன நினைக்கிற உன் மனசுல என்ன ஓடுது” என நாச்சி கேட்டிருந்தாள்.

“நான் நினைக்க என்ன மதினி இருக்கு” என்ற மீனாள் “கௌதம் மாமா இதுக்கு எப்படி ஒத்துக்கிட்டாரு? இது அவரை விலைப்பேசின மாதிரி இல்லையா? எனக்கே இது உறுத்துது. இதெல்லாம் புடுங்கி கிட்டு எப்படி அவர் சுபா அக்காவோட நிம்மதியா வாழ்வாரு?” என்று சொல்ல, “நீயி இம்புட்டு ரோசிக்கிறியா” என அபி கேட்டிருந்தார்.

“கௌதம் மாமா நல்லவர்தேன் நான் இல்லைன்னு சொல்லல ஆனா அவங்க அம்மா கேட்கும் போது அவர் அவரோட மனசுல இருக்குறத தெளிவா சொல்லி இருக்கலாம் இல்லையா? இல்ல இது இப்படித்தான்னு அவர் ஏத்துக்கிட்டாரா? அவரோட அமைதி அவருக்கும் அவங்க அம்மா கேட்டதுல விருப்பம் இருக்குங்கிற மாதிரி இல்லையா இருக்கு. இப்போ சுபா அக்கா மனசு என்ன நினைக்கும்? இந்த இடத்தில் கௌதம் மாமா சுபாக்கா மனச பார்க்க தவறிட்டாருன்னு தான் எனக்கு தோணுது” என்றாள் மீனாள்.

அவள் சொல்வதும் சரிதானே! இது சுபாவுக்கு எம்புட்டு வலியை கொடுத்திருக்கும். அவன் மறுத்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது சுபாவின் காதலுக்கு அல்லவா அடி.

இப்பொழுது உண்மை தெரிந்ததும் கௌதம் இதைப் பற்றி தன்னிடம் ஒன்றும் பேசவில்லையே என்கிற சுபாவின் வருத்தம் அவளின் கண்களில் கண்ணீராக பிரதிபலித்தது

கௌதம் இதைப்பற்றி மட்டுமல்லாது, சுபா சென்னையிலிருந்து இங்கு வந்த இரண்டு மூன்று தினங்களாகவே அவளிடம் அவன் ஒன்றும் பேசவில்லை. அதுவே சுபாவிற்கு உறுத்தலாக இருந்தது. கௌதம் என்ன நினைக்கின்றான் அவனின் மனதில் என்ன ஓடுகிறது அவனது அடுத்த திட்டம் என்னவென்று எதுவும் தெரியாது குழம்பினாள்.

சுபாவின் வருத்தம் முகம் கண்டு “நீ செத்த சும்மா இருக்கா” என்று அங்கை சுபவாவை மீனாளுக்கு கண் காட்டினாள்.

“எல்லாம் சரியாப் போவும். கல்யாணம் மட்டும் தான் சடவுல ஆரம்பிக்குது அதுக்கு அப்புறம் நீ வாழுற வாழ்க்கைல அந்த வசந்தி மூக்கு மேல விரலை வைக்கணும். உன்னைய அடிக்கணும்னு அவள் நினைச்சு இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்ணயிருந்தாக்கா அவ தான் உன்கிட்ட அடங்கிப் போற மாதிரி இருக்கணும்” மீனாட்சி சுபாவை தேற்றினார். மகாவும் அபியும் கூட அவளை ஆறுதல் படுத்தி அவளது அறைக்கு அனுப்பி வைத்தனர்.

“என்னத்துக்கு ஒருத்தர் மொவத்தை ஒருத்தர் பார்த்துகிட்டு உட்கார்ந்திருக்கீய்ங்க? நேரம் ஆவுது இல்லையா? போய் உறங்குங்கட்டி.” மீனாட்சி அப்பத்தா அனைவரையும் விரட்டி அவரவர் அறைக்கு உறங்குவதற்கு அனுப்பி வைத்தார்.

அறைக்குள் வந்த சுபாவிற்கு உறக்கம் என்பது கொஞ்சமும் கண்களில் இருக்கவில்லை.

அவளுக்கு கௌதம் இதுவரை இதைப் பற்றி தன்னிடம் பேசாதது அத்தனை மன வருத்தத்தை அளித்திருந்தது.

நேரத்தை பார்க்காது கௌதமுக்கு அழைத்து விட்டாள்.

கௌதம் அழைப்பை ஏற்றும் எதுவும் பேசாது சில நிமிடங்களை மௌனத்தில் நீட்டியவள்…

“உங்க அம்மா பண்றது கொஞ்சமும் சரியில்ல கௌதம். உனக்கு நான் வேணுமா? உங்க அம்மா வேணுமா? நீ தான் முடிவு பண்ணனும்” என்று சொல்லிருந்தாள்.

சுபாவிற்கு எப்போதும் வசந்தியை கெளதமிடமிருந்து பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது இல்லை. ஆனால், இப்பொழுது வசந்தியின் குணம் அவரிடமிருந்து விலகி இருந்தால் தான் நல்லது எனும் எண்ணத்தை சுபாவின் மனதில் விதைத்திருந்தது.

“இத நான் உன்கிட்ட எதிர்பார்க்கல கௌதம். உன்னோட மௌனத்துக்கு பின்னாடி இருக்க காரணம் தான் என்ன? என்கிட்டயாவது கொஞ்சம் சொல்லு?” சுப ஆதங்கமாக கேட்டிருந்தாள்.

“நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் சுபா. இப்ப நீ சொல்ற பதில்ல தான் எல்லாம் அடங்கி இருக்கு.

“சொத்துக்காக அவங்க ஆசையை என்ன வச்சு தீர்த்துக்கலாம் நினைக்கிறவங்களிடம் பேசி என்ன ஆகப்போகுது என்ற எண்ணம். அவங்க மகன் அப்படின்னு நான் இருக்கிற வரைக்கும் தானே அவங்களுக்கு இந்த எண்ணம் இருக்கும். என்ன வச்சு இப்படி ஒரு திட்டம் போட்டதுக்காக அவங்க வருந்தனும். நான் ஒரு முடிவு எடுத்துருக்கேன்” என்றவனாக கௌதம் ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவெடுத்ததை சுபாவிடம் கூறினான்.

சுபாவிடம் பெரும் யோசனை ஆழ்ந்த மௌனத்தில் அவள்.

“இதுதான் என் முடிவு சுபா, இல்லையா நான் மட்டும் என் முடிவை செயல்படுத்திக்கிறேன்.

“நீ வந்தா சேர்ந்து போகலாம். இல்லையா நான் மட்டும் போய்க்கிறேன். உனக்கு எப்போ என்கிட்ட வரணும் தோணுது அப்போ வா” என்று சொல்லியிருந்தான்.

கோபமாகவோ ஆதங்கமாகவோ கௌதம் பேசவில்லை.

கௌதம் முடிவிற்கான பதிலை சொல்லாது “இங்க எப்போ வர்றீங்க? என்று கேட்டிருந்தாள் சுபா.

“நான் கேட்டதுக்கு முதலில் யோசித்து பதில் சொல் சுபா. நீ சொல்ற பதில் தான் என்னோட முடிவு, நம்மோட வாழ்க்கை இருக்கு” என்றான் கௌதம்

“நான் அப்பா கிட்ட பேசணும் கௌதம்.”

சுபாவிற்கு கௌதமின் முடிவு எந்த அளவிற்கு ஏற்பது என்று குழப்பமாக இருந்தது. அதனால் அவள் தனது தந்தையை காரணம் காட்டினாள். அதோடு வசந்தி, நல்லான் போல் அல்லவே சுந்தரேசன். அவளுக்காகவே வாழ்ந்தவர். அவள் அவரையும் யோசித்து தானே முடிவு எடுக்க வேண்டும்.

*******************

ஒரு வாரத்தில் கட்டுத்தறி வேலைகள் முடிந்து தயாராகி இருந்தது.

அந்த வாரம் வெள்ளியன்று கருப்பருக்கு படையில் இருப்பதால் முந்தைய தினமான வியாழன் அன்று கட்டுத்தறிக்கு பூஜை நடத்தி கால்நடைகளை அங்கு அழைத்து வந்தனர்.

குளமும் வாத்துகளால் நிரம்பி இருந்தது. சின்னதும் பெரியதுமாக பலவகை வாத்துக்களை வாங்கி குளத்தில் நிரப்பியிருந்தான் வீரன்.

வீட்டிற்கு பின் இருக்கும் கட்டுத்தறி கால்நடைகளால் நிரம்பி வழிவதை கண்ட பின்னரே வீடு வீடாக இருப்பதைப் போல் அகமகிழ்ந்தனர்.

“இப்போதேன் அப்பு என் மனசே நிறைஞ்சு கிடக்குது.” மீனாட்சி பாட்டி சொல்லியதும் மற்றவர்களிடமும் அதே நிறைவு.

அன்று மாலை போல் வசந்தி தன் குடும்பத்தாருடன் வந்து விட்டார்.

வந்ததும் நேராக பாண்டியனின் வீட்டிற்கு தான் சென்றார். முற்றத்தில் கால் நீட்டி அமர்ந்திருந்த மீனாட்சியின் முன் சென்று நின்று “உங்க எல்லாருக்கும் சம்மதம் தானே பின்னாடி அதை இதை சொல்லி நான் புடுங்கிட்டேன் சொல்லக்கூடாது. இப்போ உங்களுக்கு விருப்பம் இல்லைனா சொல்லிடுங்க எனக்கு எந்த சொத்தும் வேணாம் இந்த கல்யாணமும் நடக்காது” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

“என்னடி ஒத்த கல்யாணத்த வச்சுக்கிட்டு எங்களை ஆட்டிப்படைக்கலான்னு நினைக்கிதியோ?” என்ற மீனாட்சி “என் அப்பு சொன்னதுக்கு அப்புறம் அதுக்கு மறுவார்த்தை ஏது? இனி இந்த கல்யாணம் நடக்கிற வரைக்கும் நீ உன் வாப்பெட்டியை திறக்கக்கூடாது” என்று உறுத்து பார்த்தார்.

“புள்ளைங்க ஆசைப்பட்டுப்போச்சு. நிறைவேத்தி வைக்கலான்னு பாக்குதோம். அம்புட்டுதேன். வூடால ஏதும் சடவு வச்சிப்புடலாம் கனா காங்காதே” என்றவர், “உன் அதிகாரத்தை உன் வூட்டோட வச்சிக்கிடு. இங்க வந்து நாட்டாமைத்தனம் பண்ண பார்த்தாக்கா ஆஞ்சிப்புடுவேன்” என்றார்.

இனியும் வசந்தியிடம் பொறுத்து போவதாக இல்லை என்கிற எண்ணம் மீனாட்சிக்கு வந்து விட்டிருந்தது. இவ்வளவு நாளும் அண்ணன் மகள் என்று மருதன் என்பவருக்காக மட்டுமே வசந்தியை தங்களுக்குள் இணைக்க பார்த்தனர்.

எப்போது சமயம் கிடைத்ததும் ஆட்டுவிக்கலாம் என்று காத்திருந்த வசந்தியின் எண்ணம் பிடிப்பட்டதோ, உறவும் அவ்வளவு தானென்று வீட்டின் பெரிய மனிதியாக முடிவெடுத்திருந்தார்.

“அப்பத்தா!” மீனாட்சியின் சத்தம் கேட்டு வந்த வீரன், வசந்தியை வரவேற்கவே செய்தான்.

“இருக்கட்டும்” என்ற வசந்தி “பெரிய வூட்டை சுத்தம் பண்ணி வெளுத்து வையுங்க. பரிசம் முடிஞ்சதும் நாங்க அங்கன இருந்துக்கிறோம். இனியும் எதுக்கு என் அண்ணே வூட்டுல நானு தங்கணுமாட்டிக்கு” என்றுவிட்டு சென்றார்.

“என்ன ஆட்டம் ஆடுறாள். ஆட்டுற குறுக்கை ஒடைச்சு அடுப்புல வைக்கணும்.” மீனாட்சி முணங்கிட…

“கல்யாணம் வரையாவது செத்த சும்மான்னு இரு அப்பத்தா” என்றுவிட்டு சென்றிருந்தான்.

லிங்கம் ஹோட்டலிற்கு சென்றிருந்தான்.

மேலே வந்த வீரன் சன்னல் பக்கம் சென்று நிற்க…

“என்ன மாமா காலையிலேர்ந்து அங்கட்டு நின்னு கொட்டாவ பார்த்துக்கிட்டே இருக்க?” என்ற மீனாள் துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள்.

“அப்பப்போ ராவுல உறக்கத்துக்கு நடுவுல எழுந்து இங்கன நின்னுதேன் சரியா இருக்கான்னு பார்ப்பேன் தங்கம். இத்தனை நா அங்கட்டு வெறுமையா இருக்கவும், மனசு கனத்து கிடந்துச்சு. இன்னைக்குத்தேன் லேசா இருக்குது” என்ற வீரன் அவளை பின்னிருந்து அணைத்து அவளின் வேற்று தோளில் நாடி பதித்து கன்னத்தில் முத்தம் வைத்தான்.

“கீழே என்ன சத்தம் மாமா?” எனக் கேட்டாள்.

அவளை பிரித்து தன்னை பார்க்கும்படி செய்தவன்,

“முத்தம் கொடுத்தாக்கா கிறங்காம… அதை கண்டுக்கமாட்டாம, கீழ என்னன்னு கேக்குற?” என்று முறைத்தான்.

“நீயி கட்டிப்ப. முத்தம் வச்சிப்ப. பொறவு நாந்தேன் குழம்பி நிக்கணும். படிப்பு முடியட்டும் சொன்னல மாமா. அதேன் நான் நல்ல பிள்ளையா இருக்கேன்” என்றாள். அவளின் குரல் உணர்வுகள் இன்றி நிர்மலமாக இருந்தது.

நொடியில் அவளின் நிலையை உள்வாங்கிக்கொண்டான் வீரன்.

இருவருக்கும் தனியாக இருக்கும் பொழுதுகள் உணர்வுகளின் ஆர்பரிப்புகள் அதிகம் தான். அதனை வீரனால் கட்டுக்குள் வைத்திருக்கும் திடம் மீனாளிடம் இல்லை. சில நேரம் அவளின் தவிப்புகள் அடங்கிவிடுவதற்குள் திணறிப்போகிறாள். அதனையே வேறு விதமாக அவள் சொல்லிட, வீரனுக்கு புரிந்தது.

“சாரி தங்கம். கஷ்டப்படுத்துறேனா?”

“ம்ப்ச்… இல்லை மாமா” என்றவள் அவனின் மார்பில் சாய்ந்து கொண்டவளாக…

“ஒரு விசயத்தை மூடி வைக்கிற வரை தான் அது மேல ஆர்வமிருக்கும். திறந்து என்னன்னு தெரிஞ்சிக்கிட்டோமின்னா அவ்வளவுதானான்னு தோண ஆரம்பிச்சிடும். ஆனால்… ” என்றவள், “இதுக்கு மேல சொல்லத் தெரியல மாமா” என்று விலகிக் கொண்டாள்.

“தங்கம்.”

“நான் ஓகே தான் மாமா” என்றவள் கீழே சென்றுவிட்டாள்.

வீரனுக்கு தன்னவளின் உணர்வுகளை தான் கட்டுப்படுத்துகிறோமோ என்கிற அலைக்கழிப்பு அந்நேரம்.

கட்டிலில் சோர்ந்தவனாக தொப்பென்று அமர்ந்தான்.

அந்நேரம் லிங்குவுடமிருந்து அழைப்பு வர, வேகமாக கீழே வந்தவன்…

“நான் ஹோட்டலுக்கு போறேன் தங்கம். காத்திருக்காமல் சாப்பிடு” என்று நடந்துகொண்டே சொன்னவாறு வெளியேறி வண்டியை அதீத வேகத்தில் முடுக்கினான்.

பத்து நிமிடத்தில் தங்களின் ஹோட்டலில் இருந்தான். வீரனுக்காக லிங்கம் வாயிலிலே காத்திருந்தான்.

“என்னடே… என்ன திடீர்னு?” என்று கேட்டுக்கொண்டே வீரன் உள்ளே செல்ல…

ஹோட்டல் முழுக்க சோதனைக்குள் ஆட்பட்டிருந்தது.

“வாங்க மிஸ்டர்.வீரன். ஹோட்டல் பொறுப்பு உங்க பேரில் தானே இருக்கு?” கேட்ட அதிகாரி, “கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணுங்க” என்றார்.

“கோ அகெய்ட்” என்ற வீரன் அலுவலக அறைக்குள் லிங்கத்துடன் நுழைந்தான்.

“மூணு மாசத்துக்கு முன்னுக்கத்தானே வந்திட்டு போனாய்ங்க. இப்போ அதுக்குள்ள என்ன?” என்று வீரன் தன் நெற்றியை தேய்த்துக் கொண்டவனாக சிந்தனைக்குள் மூழ்கினான்.

தரக்கட்டுப்பாட்டுத் துறையிலிருந்து ஹோட்டலின் பாதுகாப்பு மற்றும் அதன் அமைப்புகளை சோதனை செய்திட அதிகாரிகள் வந்திருந்தனர்.

“எப்போ வந்தாய்ங்க?”

“வந்ததும் உனக்கு போன் போட்டேன்” என்ற லிங்கம், “இது யாரோ வேணுமின்னு செய்த மாறி இருக்குண்ணே” என்றான்.

வீரனுக்கும் அந்த சந்தேகம் தான்.

“எல்லாம் சரியா இருக்கும்போது என்னத்துக்கு வெசனம்” என்று வீரன் லிங்கத்திடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவனின் அலைப்பேசி அதிர்ந்து ஒலித்தது.

பேசிவிட்டு வைத்த வீரன்,

“உணவு பாதுகாப்புத் துறையிலிருந்து ஆளுங்க வராங்களாம்” என்றான்.

“வந்து ஒண்ணுமில்லைன்னு போகட்டும்’ண்ணே” என்ற லிங்கம் இருக்கையில் அமர,

வீரன் வேகமாக இருக்கையிலிருந்து எழுந்திருந்தான்.

“இது வேற ஏதோ கணக்கு மாதிரி தெரியுது லிங்கு” என்ற வீரன், ஹோட்டலின் மொத்த காமிரா கண்ட்ரோல் இருக்கும் பகுதி நோக்கி வேக எட்டுக்களுடன் நடந்தான்.

லிங்கம் என்னவென்று தெரியாது வீரனின் பின்னால் சென்றான்.

“நீ ரிஷப்ஷன் லானிலே இரு லிங்கு. அவங்க வந்ததும் தகவல் கொடு” என்று லிங்கத்தை அனுப்பி வைத்தான்.

சமையலறை பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராவின் காட்சிகளை ஆராய்ந்தபடி, செக்யூரிட்டி தலைமைக்கு அழைத்தவன் “கிச்சன் தின்க்ஸ் மொத்தம் சில நிமிடங்களில் சோதனை செய்திருக்கணும். க்வ்யூக்” என்றவன் அடுத்து அழைத்தது ஹோட்டலின் முதன்மை செஃப்’க்கு.

“செஃப்… செக்யூரிட்டி திலீபன் வருவார். அவரோட புட் தின்க்ஸ் டேட் செக் பண்ணுங்க. டைம் இல்லை” என்றவன், காமிரா காட்சியை மீண்டும் ஒருமுறை சரி பார்த்துவிட்டு வெளியில் வந்தான்.

தனக்கு தகவல் அளித்த ஆளுக்கு அழைத்து கேட்க,

அதிகாரிகள் தற்போதுதான் கிளம்பியதாக தெரிவிக்க, இங்கு வர குறைந்தது அரை மணி நேரமாவது ஆகுமென்று ஆசுவாசம் அடைந்தான்.

லிங்கத்திடம் வந்தவன்,

“ரெண்டு நாளுக்கு முன்ன யாரையும் புதுசா வேலையில் அமர்த்தினியா?” எனக் கேட்டான்.

“ஆமாண்ணே” என்ற லிங்கம், “எல்லாம் செக் பண்ணித்தான் அப்பாயிண்ட் பண்ணேன்” என்றான்.

“ம்ம்ம்” என்று லானின் குறுக்கும் நெடுக்குமாக நடந்திட லிங்கத்திற்கு பதட்டமாக வந்தது.

வீரன் அங்கு நடந்தபடி இருக்க…

பணியாளர்கள் அவனை என்னவோ ஏதோவென்று பார்க்க…

“சாரி காய்ஸ். யூ கேரியான்” என்று சொல்லி லிங்கத்தை கூட்டிக்கொண்டு ஹோட்டலுக்கு வெளியில் இருக்கும் தோட்டப்பகுதிக்கு வந்தான்.

“குவாலிட்டி டிப்பார்ட்மெண்ட் வர வைத்து நம்மை டைவர்ட் பண்ணிட்டு, புட் சேஃப்பிட்டி டிப்பார்ட்மெண்டில் மாட்டிவிட பார்த்திருக்கான்” என்றான் வீரன். உள்ளுக்குள் அத்தனை கோபம் கனன்ற போதும் சூழ்நிலை கருதி பொறுமையாக இருந்தான்.

“யாருண்ணே?”

“குரு மூர்த்தி இல்லைன்னா கோகுல்” என்ற வீரனின் கை முஷ்டி இறுகியது.

“இவனுவ அடங்கவே மாட்டானுவலா?” லிங்கம் இடையில் கை குற்றியவனாக அலுப்பாக ஏறிட்டான்.

“அவனுவளை மொத்தமா சிதைச்சிருக்கணும்’ண்ணே” என்றான்.

“ம்ப்ச்… அவனுங்க ஆட்டமெல்லாம் செல்லாதுடே. நாம நம்ம சோலியை மட்டும் பார்ப்போம்” என்ற வீரனிடம் ஏனிந்த பொறுமை என்று லிங்கத்திற்கு பிடிபடவில்லை.

“சார் கூப்பிடுறாங்க.” பணியாள் வந்து அழைக்க… வீரனின் அலைப்பேசி ஒலித்தது.

“சார் இங்க எக்ஸ்ஃபயரி ஆன குரோசரிஸ் பத்து பாக்ஸ் இருக்குது சார்” என்றான் திலீபன்.

சரியாக அந்நேரம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கார் வந்து முன் நின்றது.

“ஒன்லி டூ மினிட்ஸ் திலீபன். டிஸ்போஸ் இட்” என்றவன், அவர்களை வரவேற்கும் விதமாக தலையசைக்க…

“கிச்சன் போகணும்” என்றார் அந்த அதிகாரி எடுத்ததும்.

வீரன் லிங்கத்திற்கு கண் காட்டிட…

மேலாளரை அழைத்த லிங்கம், அவர் வந்ததும்,

“கூட்டிட்டு போங்க” என்றான்.

“நீங்க வரமாட்டிங்களோ?” அவர் நிச்சயம் உங்களை மாட்டிவிடுவேன் என்ற தோரணையிலேயே பேசினார்.

“குவாலிட்டி டிப்பார்ட்மெண்ட் வந்திருக்கு சார். முடிச்சிட்டு வரேன்” என்ற லிங்கம், அவர்களை மேலாளருடன் அனுப்பி விட்டு தர பகுப்பாய்வு பிரிவினர் இருக்குமிடம் வந்தான்.

அவர்கள் எவ்வித தர குறைவும் இல்லையென்று அறிக்கை தயார் செய்து கொடுத்திருக்க…

அதனை படித்து பார்த்துக்கொண்டிருந்தான் வீரன்.

“ஹோட்டல் ரொம்ப நீட் அண்ட் கிளீனா வச்சிருக்கீங்க” என்று அதிகாரி சொல்ல…

“ஹோட்டல் ஹவுஸ் கீப்பிங் டிப்பார்ட்மெண்ட்க்கு தான் தேன்க் பண்ணனும்” என்றான் வீரன்.

வீரன் அறிக்கையில் கையெழுத்திட்டு லிங்கத்திடம் கொடுக்க…

“ஆம்பியன்ஸ் சூப்பர்” என்றார் மற்றொரு அதிகாரி தன்னுடைய பார்வையை சுழல விட்டபடி.

வீரன் கொடுத்த காகிதத்தில் லிங்கம் கையெழுத்திட… துறை அதிகாரிகள் சீல் வைத்து தரம் மிகுந்ததென கையொப்பமிட்டு தரச் சான்றிதழ் வழங்கி விடைபெற்றனர்.

கிச்சனில் சரியாக சமையல் பொருட்கள் இருக்கும் இடத்தினை குறி வைத்து ஆராய்ந்திட, அங்கு அவர்கள் எதிர்பார்த்தது கிடைக்காது போக… மீண்டும் மீண்டும் பரிசோதித்தனர்.

“என்ன சார் அந்த ஒரு இடத்தை மட்டுமே தேடிட்டு இருக்கீங்க?” என்று லிங்கம் கேட்க,

“அங்க தான் நாம் எதையாவது பதுக்கி வச்சிருப்போமின்னு தகவல் கிடைச்சிருக்கும்டே” என்று வேட்டியை மடித்துக் கட்டி மீசையை முறுக்கிவிட்டான் வீரன்.

அதில் அதிகாரி அரண்டு விட்டார்.

“உங்களை அனுப்பின ஆளுகிட்ட போயி சொல்லுங்க… எல்லா நேரமும் நான் பொறுமையா இருக்க மாட்டேன்” என்றான்.

“யாரோ ஒருவரின் ஏவலுக்காக பொய்யாக சோதனை நடத்துகிறீர்களென உங்கள் மீது புகார் கொடுக்கட்டுமா?” என்று வீரன் கேட்டது தான் தாமதம், அதிகாரி தன் உடன் வந்தவர்களை கூட்டிக்கொண்டு நொடியில் வெளியேறியிருந்தார்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
11
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. எல்லாமே பரபரப்பா போயிட்டு இருக்கு.. இந்த கௌதம் என்ன தான் பண்ண போறான்?? சுபாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு வெளிநாட்டுக்கு போக போறானா ??

  2. பணம் என்றால் எந்த நீளத்திற்கும் போவார்கள் சிலர்…