
யான் நீயே 29
சென்னையை நெருங்கிய சமயம் வீரன் கௌதமிற்கு அழைக்க பல அழைப்புகள் எடுக்கப்படாமலே போனது.
வீரனுக்கு… என்னவானதென்கிற குழப்பம்.
சுபாவுக்கு அழைக்க, அவளின் விடுதி தோழி அழைப்பை ஏற்றிருந்தாள்.
“சுபா?”
“நான் சுபா பிரண்ட்” என்ற பெண், நடந்ததை தெரிவிக்க வீரன் பட்டென்று பிரேக்கினை அழுத்தியிருந்தான். கார் கிரிச்சென்ற அதீத சத்தத்தோடு நின்றிருந்தது.
“அமிழ்தா… பார்த்துப்பா!” பாண்டியனும், மருதனும் ஒன்றாகக் கூறினர்.
“எந்த ஹாஸ்பிடல்?”
வீரனின் கேள்வியில் பெரியவர்கள் இருவரும் பதற்றம் கொண்டனர்.
அப்பெண் மருத்துவமனை பெயர் சொல்லிட… அவளுக்கு நன்றி தெரிவித்து அலைப்பேசியை வைத்தவன்…
“சுபா தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்காள்” என்றான்.
“என்னப்பு சொல்ற?”
“நாமதேன் பேசறமுன்னு சொல்லியிருந்தோமே!”
“அதுக்குள்ள என்ன அவசரமாட்டிக்கு?”
மருதனும், பாண்டியனும் மாற்றி மாற்றி புலம்பிட… வீரன் சுந்தரேசனுக்கு அழைத்து, எங்கிருக்கிறார் என்பதை விசாரித்தான்.
சென்றுகொண்டிருந்த இடத்திலேயே இறங்கிக்கொண்ட வீரன், மருத்துவமனை பெயரினை சொல்லி…
“நீங்க ரெண்டேறும் போங்க. மாமா பத்து நிமிசத்தில இங்கன வந்திடுவார். நான் அவர் கூடால வாரேன்” என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தான்.
வீரன் சுந்தரேசனிடம் விடயத்தை சொல்லாது மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான்.
மருத்துவமனையை பார்த்ததும்,
“சுபா ஏதும் பண்ணிக்கிட்டாளா அமிழ்தா?” என்று சற்று திடமாகவே கேட்டார்.
மனைவியின் இழப்பையே மகளுக்காக தாங்கிக் கொண்டவருக்கு… அந்த திடம் இப்போதும் இருந்தது.
“ம்ம்ம்… கை கிழிச்சிக்கிட்டாளாம்!” என்ற வீரன் நொடியில் தளர்ந்துவிட்டவரை கைத்தாங்கலாக உள்ளே அழைத்து வந்தான்.
பாண்டியன் மற்றும் மருதன் வந்ததைக்கூட உணராது கௌதம் வெறித்தபடி அமர்ந்திருக்க, இருவரும் அவனது இருபுறமும் அமர்ந்திருந்தனர்.
கௌதமின் முன் சென்று வீரன் நின்றிட, “அண்ணா” என்ற கௌதம் அவன் மீதே தலை முட்டி அழுகையில் கரைந்தான்.
“அவளை ரொம்ப பிடிக்கும். ஆனால் வலி கொடுக்கிற அளவுக்கு பிடிக்குமின்னு இப்போதான் தெரியுது” என்றவனின் அழுகையை சுந்தரேசன் உணர்வற்றப் பார்வையால் பார்த்தார்.
அன்று சுந்தரேசன் சுபாவிற்கு வீரனை கேட்ட போது… அவன் முதலில் சொல்லியது தன் மனம் மீனாளை விரும்புகிறது என்பதைத்தான். அவர் அதிரவோ,கோபப்படவோ இல்லை. கூடவே வளர்ந்திருக்கும் போது விருப்பமும் பிடித்தமும் இயல்பானது என்பதை ஏற்றுக்கொண்டார்.
அடுத்தக்கட்டமாக “சுபாவுக்கு வெளிய பார்க்கணும். அடிக்கடி உடம்பு சரியில்லாமப் போகுது. நானிருக்கும்போதே ஒருத்தன் கையில பிடிச்சிக் கொடுத்துட்டா கடைசி காலம் நிம்மதியா இருக்கும்” என்று அவர் சொல்ல…
“கௌதமை பேசலாம் மாமா” என்றிருந்தான் வீரன்.
லிங்கம் இருக்கும்போது அவனை விட்டுவிட்டு வீரன், கௌதமை சொல்லவுமே காதல் என்பதை கண்டுகொண்டார் சுந்தரேசன். அதனை அவர் கேட்கவும் செய்திட ஒப்புக்கொண்ட வீரன்,
“சுபா சென்னையில வேலைக்கு சேர்ந்ததே கௌதமுகாகத்தான்” என்றான்.
சுந்தரேசன் வசந்தியை நினைத்து பெரிதும் தயங்க… கௌதமின் குணநலன்களை எடுத்து சொல்லி, வசந்தியை தான் பார்த்துக்கொள்வதாக பொறுப்பினை தன்மீது ஏற்றி அவரை சம்மதிக்க வைத்திருந்தான்.
அப்போதும் மகள் கௌதமிற்காக தன் உயிரை விடுமளவிற்கு செல்வாள் என்றும், அவளுக்காக அவன் உயிர் வலி கொள்வான் என்றும்… அன்று நம்பாத அவர்களின் காதலின் ஆழத்தை இன்று நம்பினார்.
அன்று வீரனின் பேச்சிற்காக மட்டுமே சம்மதம் சொன்னவர், இன்று கௌதமின் கண்ணீரை கண்டு, அவன் தன் மகள் மீது வைத்திருக்கும் காதலுக்காக அவர்களின் நேசத்தை மனதால் ஏற்றுக்கொண்டார்.
“அழுவாதடே! ஒண்ணுமாவாது” என்ற வீரன், சுபாவிற்கு சிகிச்சை அளித்த அறையிலிருந்து மருத்துவர் வெளியில் வரவும் அவரிடம் சென்றான்.
“நல்லவேளை வெயினில் ஆழம் படல… இருந்தாலும் பிளட் நிறைய போயிருக்கு. ட்ரிப்ஸ் முடிஞ்சதும் மயக்கம் தெளிஞ்சிடும். கூட்டிட்டு போங்க” என்றார் மருத்துவர்.
“அதான் ஒன்னுமில்லையே. அவள் ஓகே தான். நீயி அழுவுறதை நிறுத்துடே” என்று கௌதமை தேற்றிய வீரன், செவிலியிடம் சென்று ட்ரிப்ஸ் முடியும் நேரத்தைக் கேட்டுவர,
அப்போது இரு காவலர்கள் அங்கே வந்தனர்.
சூசைட் என்பதால் மருத்துவமனையில் காவலர்களிடம் புகார் கொடுத்திருப்பர் என்று அவர்கள் நினைக்க…
வந்த ஆய்வாளரோ…
“தற்கொலைக்கு தூண்டிய நபரை அரேஸ்ட் பண்ணிட்டோம். விக்டிமிடம் ஸ்டேட்மெண்ட் வாங்கணும்” என்று சொல்ல அனைவரும் புரியாது பார்த்தனர். வீரன் உட்பட.
“என்ன சார் சொல்றீங்க புரியல?” சுந்தரேசன் கேட்டிட, “இவங்க சொல்லுவாங்க” என்று அவர் ஒரு பெண்ணை காண்பித்தார்.
அவள் ஷீலா. சுபாவின் விடுதி அறைத்தோழி. அவளை சுந்தரேசனுக்கும், கௌதமிற்கும் தெரிந்திருந்தது.
“என்ன ஷீலா இது? எனக்கு வேற பொண்ணு பார்த்திருக்காங்கன்னு கை கட் பண்ணிக்கிட்டாள். ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணிருக்கன்னு தானே எனக்கு போன் பண்ண. போலீஸ் வேற சொல்றாங்க?” என்று கௌதம் கேட்டிட, “என்னம்மா ஆச்சு?” என்றார் சுந்தரேசன்.
“ஒரு நெம்பரிலிருந்து கால் வந்துச்சு அங்கிள். அட்டெண்ட் பண்ணதுமே அழ ஆரம்பிச்சிட்டாள். இவள் ஒரு வார்த்தைகூட பேசாம அழுதுகிட்டே இருந்தாள். அந்தப்பக்கமிருந்தவங்க என்ன பேசினாங்க தெரியல. ஒரு பத்து நிமிஷம் பேசியிருப்பாங்க. போனை வைத்ததும், பழம் கட் பண்ணி சாப்பிட்டுகிட்டு இருந்தோம். அந்த கத்தியை எடுத்து நான் சுதாரிக்கும் முன்ன கட் பண்ணிக்கிட்டாள். ரவுண்ட்ஸ் வந்த வார்டன், நான் ஹாஸ்ப்பிடல் கூட்டிட்டு போறதுக்குள்ள போலீசுக்கு கால் பண்ணிட்டாங்க. அதான் ஆம்புலன்ஸில் அவளை அனுப்பிவிட்டுட்டு, கௌதமுக்கு கால் பண்ணி சொன்னேன். ஹாஸ்டலுக்கு போலீஸ் வந்து என்கிட்ட விசாரிச்சாங்க. நான் நடந்தது எல்லாம் சொல்லிட்டேன். அவங்க உடனே சுபா மொபைலில் லாஸ்ட்டா வந்த நெம்பர் யாரோடாதுன்னு கால் பண்ணி பார்த்தா, கௌதம் அம்மா. இப்போ அவங்களை அரேஸ்ட் பண்ண லேடி போலீஸ் கௌதம் வீட்டுக்கு போயிருக்கு” என்றாள் முழு விளக்கமாக.
இடிந்து போனவனாக இருக்கையில் தொய்ந்து தொப்பென்று அமர்ந்தான் கௌதம்.
யாருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
வசந்தி சுபாவின் மனம் நோகும்படி ஏதோ பேசியிருக்கிறார் என்பது மட்டும் அனைவருக்கும் விளங்கியது.
வசந்தி சாதரணமாகவே எப்படி பேசுவாரென்று தெரியும். இப்போது சொல்லவும் வேண்டுமா?
காலையில் அத்தனை அடமாக சுபாவைத்தான் கட்டுவேனென்று சொல்லிவிட்டு கௌதம் அலுவலகம் சென்றுவிட… கொதித்துவிட்ட வசந்தி சுபாவிற்கு அழைத்து கண்டபடி பேசிவிட்டார். அவளை இழிவாகவும் பேசிவிட… சுபாவுக்கு யாவும் மரத்த நிலை. நொடியில் தவறாக முடிவெடுத்துவிட்டாள்.
“இது தான் காலை பேசியதற்கான பிரதிபலிப்பு” என்று உணர்ந்த கௌதம், அன்னைக்காக எதுவும் பேச முடியாது மௌனமாகவே இருந்தான். அவனுக்கு சுபா கண்கள் திறந்தால் போதுமென இருந்தது.
ஒரு மணி நேரத்தில் சுபா கண் திறக்க, உறவினர்களை கூட விடாது போலீஸ் முதலில் சென்று அவளிடம் விசாரித்துவிட்டு வந்தனர்.
வெளியில் வரும்போது…
“அந்தப்பொண்ணு கேஸ் வேணாம் சொல்லும்போது நாமென்ன பண்ண முடியும் சார். அரேஸ்ட் பண்ணவங்களை அனுப்பிட சொல்லிடலாம்” என்று இரு காவலர்களும் பேசிக்கொண்டு செல்ல… காதில் வாங்கியவர்களுக்கு சுபாவின் இந்த செயல் பெரும் ஆசுவாசத்தை கொடுத்தது.
வேகமாக ஓடிச்சென்ற கௌதம் சுபாவை அணைத்துக்கொண்டு…
“யாரும் வேணாம். இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றிட அவனுக்கு பின்னால் வந்து நின்ற தன் உறவுகளைக் கண்டு சுபா தான் கௌதமை தேற்றி விலக்கி நிறுத்தினாள்.
சுந்தரேசன் சுபாவின் தலையை பரிவாய் வருடினார். அவ்வளவு தான். நடந்து முடிந்ததை… வசந்தி என்ன பேசினார் எனக் கேட்டு மகளை மீண்டும் வருத்தம்கொள்ள வைக்க அவர் நினைக்கவில்லை.
கேட்டு தெரிந்துகொள்ள வசந்தி பேசியவை நிச்சயம் உவப்பானதாக இருக்காது என்கிற எண்ணம் அனைவருக்குமே!
“அவங்க என்ன வேணாலும் பேசியிருக்கட்டும்… என்னை விட்டுப்போக பார்த்தல நீ?” என்று கௌதம் மட்டுமே தன் ஆதங்கத்தை சிறிதாய் வெளிப்படுத்தினான்.
“நான் ஹாஸ்பிடல் பார்மாலிட்டிஸ் முடிச்சிட்டு வர்றேன். கௌதம் வீட்டுக்கு போகணும்” என்றான் வீரன்.
“இனி அவங்ககிட்ட பேசுறது வேஸ்ட்ண்ணா. நானே ஒரு முடிவுக்கு வந்துட்டேன். விடுங்க. நீங்க சுபாவை ஊருக்கு கூட்டிப்போங்க” என்ற கௌதமை வீரன் புருவம் தூக்கி பார்க்க…
“எங்க கடமைக்கு ஒருமுறை பேசி பார்க்கிறோம் தம்பி. என் பொண்ணு முறைப்படி உங்க வீட்டுக்கு வந்தால் எனக்கு சந்தோஷம்” என்றார் சுந்தரேசன்.
“நான் பேசுறேன் கௌதம். வசந்தி இதுக்கு பொறவும் வேண்டாமின்னு மறுத்துடுமா?” என்றார் மருதன்.
கௌதம் வேண்டாமென்று சொல்ல…
“ஒருமுறை பேசட்டுமே கௌதம்” என்றாள் சுபா. கௌதமும் அவளுக்காக ஒப்புக்கொண்டான்.
அனைவரும் வசந்தியின் வீட்டில் அமர்ந்திருந்தனர். வீட்டிற்கு வந்தவர்களை கௌசிக் தான் அழைத்து அமர வைத்திருந்தான்.
அவர்கள் வந்த சில நிமிடங்களுக்கு பின்னர் தான், நல்லான் வசந்தியை காவல் நிலையத்திலிருந்து அழைத்து வந்தார்.
உள்ளே அமர்ந்திருப்பவர்களை வசந்தி கண்டுகொள்ளவே இல்லை. அதிகப்பட்ச ஆத்திரத்தில் இருந்தார் அவர்.
“கௌதம் கல்யாண விடயமாத்தான் வந்திருக்கீங்கன்னா நீங்க கிளம்பலாம்!” நல்லான் யாரின் முகத்தையும் பார்க்காது கூறிட,
“மாமா ஒருமுறை…” மருதன் தொடங்கும் முன்பே, “இந்த வீட்டுக்கு வர முன்னவே எம் பொண்டாட்டியை போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வச்சிட்டாள். அவளை எப்படி நாங்க ஏத்துப்போம்?” என்று கொதித்தார் நல்லான்.
“அவங்க இப்போ வெளியில் இருக்க காரணமே சுபா தான். இவங்க தான் அவளை தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு வார்த்தையால் நோகடிச்சிருக்காங்க. அப்பவும் சுபா இவங்க மேல புகார் கொடுக்கல” என்று நச்சென்று வார்த்தையால் கொட்டு வைத்தான் வீரன்.
காவல் நிலையத்திலும் இதனை சொல்லித்தானே வெளியே விட்டனர். வசந்தி தனக்குள் எரிந்து கொண்டிருந்தவராக நொடியில் வேறு கணக்குப் போட்டார்.
ஒன்று சுபாவை மருமகளாக்கி தன் கைபிடியில் வைத்து வாழ்க்கை முழுக்க வதைத்திட வேண்டும். இன்னொன்று?
வீரன் பேசிய பின்னர் அங்கு ஆழ்ந்த அமைதி.
கௌதம் இவர்களிடம் பேசி பலனில்லை எனும் நிலைக்கு எப்போதோ வந்திருக்க… நீங்க என்ன வேணுமானாலும் பேசிக்கொள்ளுங்கள், நான் வேறொரு முடிவுக்கு வந்துவிட்டேன் எனும் விதமாக அமர்ந்திருந்தான்.
வசந்தி சொத்துக்காக பார்க்கின்றாரோ என்று நினைத்த சுந்தரேசன்…
“என் முழு சொத்தும் எம் பொண்ணுக்குத்தான். கல்யாணத்துக்கு முன்னவே மொத்தமா அவள் பேரில் எழுதி வச்சிடுறேன்” என்று சொல்ல…
“நாங்க சொத்துக்கு ஆசைப்படுறோம் சொல்றீங்களா?” என்று கேட்டார் நல்லான்.
‘இல்லைன்னு சொல்லுவீங்களா? ஆமாம் சொல்லுங்க அங்கிள்.’ கௌசிக்கின் மனம் கூவியது.
“என்ன ஒரு ரெண்டு ஏக்கரா இருக்குமா?” வசந்தி நக்கலாகக் கேட்டிருந்தார்.
“ஐம்பத்தாறு ஏக்கர் வருமுங்க.” அமைதியாகவே கூறினார் சுந்தரேசன்.
சம்மந்தப்பட்ட இரு வீட்டாரும் பேசிக்கொள்கிறார்கள் என்று மற்றவர்கள் மௌனம் காத்தனர்.
உள்ளுக்குள் “அம்புட்டா?” என்றிருந்தது. வசந்திக்கும், நல்லானுக்கும்.
‘கவர்மெண்ட் வேலை ஒண்ணும் தேராதுன்னு நெனச்சோமே!’ கணவன் மனைவி இருவருமே அர்த்தமாக பார்த்துக்கொண்டனர்.
“அந்த வயலுகளையெல்லாம் வச்சுக்கிட்டு நாங்க என்னத்த பண்றது?” என்று வசந்தி நீட்டி முழுக்க…
“பணமாவோ, நகையாவோ எம்புட்டு வேணாலும் செய்துபுடலாம்” என்றான் வீரன்.
கௌதமுக்கு தன்னை விலைபேசுவது போலிருந்தது. தன் பெற்றோரின் பேச்சு சுத்தமாக பிடிக்கவில்லை.
“அதோட சேர்த்து ஒரு ஹோட்டலையும், ஊருக்குள்ள இருக்கும் பூர்வீக வீட்டையும் கொடுத்துப்புடு. கல்யாணத்தை ஜாம்ஜாமுன்னு நடத்திப்புடலாம்” என்றார் வசந்தி. தன் இன்னொரு திட்டத்தின்படி.
“தாய்மாமன் பொண்ணுக்கு நீயும் சீர் செய்யணுமே! நான் கேட்டதுக்கு சரின்னாக்கா… கல்யாணம் நடக்கும்” என்றார்.
வீரனுக்கோ மற்றவர்களுக்கோ கல்யாணத்தை முறைப்படி நடத்திடவே விருப்பம். அதற்காக ஒப்புக்கொண்டான்.
“சரி… கல்யாணத்துக்கு பொறவு சொன்னதை செய்வேன்” என்றிருந்தான். கொஞ்சமும் யோசிக்கவில்லை அவன்.
பாண்டியன் தன் மகனை பெருமை பொங்க பார்த்தார்.
மருதனுக்கே இப்படியொரு பேராசை பேயா தன் தங்கை என்று அருவருப்பாக இருந்தது.
சுந்தரேசன் வீரனிடம் மறுக்க… “யாருக்கோ கொடுக்கப்போவதில்லை மாமா. நம்ம சுபா, கௌதமுக்குத்தேன்” என்று அவரை அடக்கினான்.
“அடுத்த வார வெள்ளி கருப்பருக்கு படையல் போடலாமின்னு இருக்கோம். குடும்பத்தோட வந்துடுங்க. கல்யாணத்தை பேசி முடிச்சிடலாம். அன்னைக்கே பத்திர பதிவு வச்சிக்கனுமின்னாலும் வச்சிக்கிடலாம். அப்போ நாங்க கெளம்புறோம்” என்று வீரன் எழுந்துகொண்டான்.
மரியாதைக்காக சுந்தரேசன் மட்டுமே போய்வருகிறோம் என்றிருந்தார். மருதன் வசந்தியை திரும்பிக்கூட பாராது முதல் ஆளாக வெளியில் சென்றிருந்தார்.
கௌதம் தனக்கு முன் அமர்ந்திருக்கும் பெற்றோரை அழுத்தமாக பார்த்திருந்தான். அவனது மனதில் அத்தனை இறங்கியிருந்தனர் இருவரும்.
‘தனக்கு இப்படியொரு பெற்றோரா?’ மனதால் குன்றினான்.
வாய் திறந்து தன்னுடைய குமுறலை கொட்டிடக்கூட அவனுக்கு நா எழவில்லை.
கௌசிக் தான் அத்தனை புலம்பியிருந்தான்.
“திஸ் இஸ் நாட் குட் ம்மா. நீங்க மருதன் மாமா தங்கச்சியா அவர்கிட்ட கேட்டிருந்தால் கூட அதிலொரு நியாயம் இருக்கு. ஆனால் வீராண்ணா கொடுக்கணும் என்ன அவசியம். அப்படியிருந்தும் அவர் சம்மதிச்சிருக்கிறார் அப்படின்னா அதுக்கு ஒரே காரணம்?” என்று கேள்வியாய் இடை நிறுத்திய கௌசிக், “கௌதம் அண்ணாவுக்கும் சுபாவுக்காகவும் தான். உங்க பையனோட கல்யாணத்தில் நீங்களே பிளே பண்ணாதீங்க. நெக்ஸ்ட் நாம அங்க தான் போகணும். எப்படி மத்தவங்க முகம் பார்ப்பீங்க? பணத்துக்கு இத்தனை மதிப்பு கொடுப்பீங்களா நீங்க?” என ஆதங்கமாகக் கேட்டவன், “உன்னை விலை பேசியிருக்காங்கண்ணா. அமைதியா இருக்க?” என்று உடன்பிறப்பிடமும் கோபத்தைக் காட்டிச் சென்றான்.
வசந்தி கேட்கும்போது கூட கௌசிக்கு ஆச்சரியமில்லை. அதனை வீரன் ஒப்புக்கொள்ளும்போது வேண்டாமென்று மறுக்காத கௌதமின் நிலை தான் அத்தனை ஆச்சரியத்தைக் கொடுத்தது.
பாவம் கௌசிக் அறிந்திருக்கவில்லை. கௌதம் வேறொரு திட்டத்தில் இருக்கின்றான் என்று.
“நீயெதும் பேசலையா கௌதம்?” மகனிடமே நக்கல் ஒலியைக் காட்டினார் வசந்தி.
அவரை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தானே தவிர எதுவும் பேசாது சென்றுவிட்டான்.
“கிளம்பிட்டிங்களா?” விடுதியிலிருந்த சுபாவுக்கு மெசேஜ் செய்தவன் மெத்தையில் விட்டத்தை பார்த்தவனாக படுத்தான்.
சுபாவிடமிருந்து “ஜஸ்ட் நோவ்” என்று பதில் வர…
“டேக் கேர்” என்று அனுப்பியவன் கண்களை மூடி உறங்க முயற்சித்தான்.
வசந்தி வீட்டிலிருந்து கிளம்பி விடுதிக்கு சென்று சுபாவை அழைத்துக்கொண்டு கிளம்பிய இந்நொடி வரை மருதன் உம்மென்று முகத்தை தூக்கி வைத்தபடி தான் வந்தார். அவரின் முகத்தில் அப்பட்டமான கோபம்.
பின்னிருக்கையில் பாண்டியனும் சுபாவும் அமர்ந்திருக்க… சுபா பாண்டியனின் தோளில் சாய்ந்து உறங்கியிருந்தாள்.
அதிகாலை வீரன் சென்னை செல்ல வேண்டுமென விடயத்தை சொல்லியதால் அங்கு அனைத்தும் அப்படியே போட்டுவிட்டு வந்திருப்பதாகவும், பண்ணைக்கும் ஆள் மாற்றிவிட்டு வருவதாக சுந்தரேசன் சேலம் புறப்பட்டுவிட்டார். சுபாவை அவரே அழைத்துச் செல்வதாக சொல்ல, பாண்டியன் நம் வீட்டில் ஆட்களோடு மாற்றமாக இருக்குமென்று மறுத்துவிட்டார்.
மருதன் அவ்வவ்போது காரினை செலுத்திக் கொண்டிருந்த வீரனின் முகத்தை கோபமாக ஏறிடுவதும், சாலையை பார்ப்பதுமாக இருக்க…
“என்ன மாமா? என்ன கேக்கணும்?” என வீரனே கேட்டுவிட்டான்.
“இது ரொம்ப அதிகம் அமிழ்தா. அதுவும் பூர்வீக வீடு. எனக்கு மனசு கேட்கமாட்டேங்குது அப்பு” என்றார்.
“இதை கொடுக்கலன்னா இந்த கல்யாணம் நடக்காதே மாமா.”
“ரெண்டேறுக்கும் பதிவு திருமணம் செஞ்சிபுடலாம். வசந்திக்கு தெரிய வேணாமாட்டிக்கு. தாலி கட்டிப்புட்ட பொறவு என்ன செஞ்சிடுவாள்?” என்று கேட்டார். வசந்தி மீதும் நல்லான் மீதும் அப்படியொரு கோபம் மருதனுக்கு கனன்றது.
“திருட்டு கல்யாணமா மாமா?”
வீரன் கேட்டதில் மருதனுக்கு முகமே விழுந்துவிட்டது.
பாண்டியன் இருவரின் பேச்சுக்கும் குறுக்கே வரவில்லை. பாண்டியனுக்குமே கௌதமிற்காக இடங்களை கொடுப்பதில் வருத்தமில்லை. அதனை கேட்ட விதம் தான் ஒப்பவில்லை. இப்படியொரு சூழலில் பணிய வைப்பதற்காக கேட்டதுபோலிருந்தது.
“என்ன சொல்லு, மனசு ஆறமாட்டேங்குது அமிழ்தா. ஹோட்டலோட வளர்ச்சிக்கு முழு உழைப்பு உன்னோடதும், லிங்குவோடதும்… லிங்கு பய, ஹோட்டல் நீதேன் பார்த்துகிடணும் நீயி சொன்ன வார்த்தைக்காக அதுக்கேத்த படிப்பை எத்தனை மெனக்கெட்டு படிச்சான்” என்று ஆதங்கப்பட்டார்.
“எம்புட்டு நேரம் பொலம்பிட்டே வரப்போற மாமா?” வீரனின் அந்த தொனியே இனி இதைப்பற்றி பேசக்கூடாது என்றது.
மருதனின் வாய் மூடியிருந்தாலும் உள்ளுக்குள் வசந்தியை அர்ச்சித்துக் கொண்டே தான் வந்தார்.
அவர்கள் கிளம்பும்போதே அபி பாண்டியனுக்கு அழைத்து என்ன ஆனதென்று கேட்க… வீட்டுக்கு வந்து சொல்வதாக வைத்துவிட மற்றவர்கள் யாவரும் அடுத்து யாரிடமும் தெரிந்துகொள்ள முயலவில்லை.
மகா, நாச்சி, அங்கை கூட பாண்டியன் வீட்டிலேயே இரவு தங்கிக்கொண்டனர்.
“இந்த லிங்கு பயலை இன்னும் காணுமேட்டி” என்று மீனாட்சி சொல்லிக்கொண்டிருக்கும் போதே கையில் கவருடன் உள்ளே வந்தேன் லிங்கம்.
“தொழுவம் கட்டும் வேலையை உன்னைய பார்க்க சொல்லியிருந்தான். நீயி என்னடான்னாக்கா திடுதிப்புன்னு கெளம்பி ஓட்டலுக்கு போயி இந்நேரம் செண்டு வர” என்றார் மீனாட்சி.
“அச்சோ அப்பத்தா இன்னும் பத்து நாளுல நம்ம ஹோட்டல் டே வருதே! நாளியிலிருந்து ஒரு புது ரெசிபி லான்ச் பண்ணுவோமே! அதுக்கு நாளைக்கு அறிமுகம் செய்யுற ரெசிபிக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்திருந்தேன். சரியா வரலன்னு செஃப் போன் போட்டாங்க. அதேன் நானே போயி செய்து காட்டிட்டு வந்தேன்” என்றவன், “இந்தா சின்னக்குட்டி உனக்கு இது நிரம்பவே புடிக்கும்” என்று அவளின் கையில் கொடுத்தான்.
“ஏன் எங்களுக்கு புடிக்காதா?” மீனாள் லிங்கத்தை அர்த்த பார்வையோடு வினவினாள்.
“அதானே?” என்று நாச்சியும் மீனாளுடன் இணைய,
“எல்லாருக்குந்தேன். ஒத்தயா அம்புட்டும் அவளே எப்புடி உண்குவா(ள்)?” என்று சமாளித்தான்.
கவரில் அட்டை பாக்ஸ் இருக்க…
எடுத்து பிரித்த அங்கை அதன் வண்ணத்திலும், அலங்கரிக்கப்பட்டிருந்த விதத்திலும், விழிகள் விரித்து… “வாவ்… மாமா, லுக்கே செமயா இருக்கு. நீயி பண்ணியா?” எனக் கேட்டாள்.
சிரித்துக்கொண்டே “ஆமாம்” என்றான்.
“பார்த்துக்கிட்டே இருக்காம கட் பண்ணட்டி… டேஸ்ட் நல்லாயிருக்கும் போலவே” என்று நாச்சி சொல்ல…
“என்ன டெசெர்ட் மாமா இது?” எனக் கேட்டாள் மீனாள்.
“சாக்லேட் சிட்ரஸ் கசாட்டா” என்று லிங்கம் சொல்லியதும், “அப்போ பிஸ்தா நிறைய போட்டிருக்கா மாமா” என்று கேட்டிருந்தாள்.
“ம்ம்ம்… பிஸ்தா காரமலைஸ்ட் பண்ணி சேர்த்திருக்கு உள்ள” என்றான்.
லிங்கம் எதனால் அங்கைக்கு இது பிடிக்குமென்று சொன்னானென்று இப்போது புரிந்தது.
“சீக்கிரம் வெட்டி கொடுடி. பார்த்துக்கிட்டே கிடக்கவ!” என்று மீனாட்சி சொல்ல…
“என்ன அம்மத்தா பாக்கவே நாக்கு ஊறுதா?” என்று அவரை கிண்டல் செய்த பின்னரே சிறு சிறு துண்டுகளாக வெட்டி அனைவருக்கும் கொடுத்தாள்.
மேலிருக்கும் பிஸ்தா, உள்ளிருக்கும் சாக்லேட் மற்றும் ஆரஞ்சின் சுவை சுண்டி இழுக்க…
“அட்டகாசமா இருக்கு மாமா” என்றாள் மீனாள்.
“ஆமாடே லிங்கு… இந்த பதார்த்தம் நல்லா போகும்டே” என்றார் மகா.
“அம்மா உனக்கு பிடிச்சிருக்கா?”
“நல்லாயிருக்கு அப்பு” என்ற அபி, “பிஸ்தா போட்டிருக்குன்னு ராவுல ரொம்ப திங்காதடி” என்று அங்கையை அதட்டினார்.
ரசித்து சுவைத்துக் கொண்டிருந்த அங்கையின் முகம் சுண்டிட…
“அதெல்லாம் சீரகம் போட்டு தண்ணீ காய வச்சு குடிச்சிக்கலாம். நீயி சாப்பிடு” என்றான் லிங்கம்.
“சரி… சரி… மீதியிருந்தாக்கா பிரிட்ஜுல எடுத்து வச்சிப்போட்டு படுங்க போங்க” என்று அனைவரையும் விரட்டிய மீனாட்சி எழுந்து சென்றிட, அபியும், மகாவும் கதைகள் பேசியபடி உறங்க ஒரு அறைக்குள் சென்றனர்.
“அண்ணே போன் போட்டுச்சா மீனாக்குட்டி?”
“இல்லை மாமா. மெசேஜ் போட்டாலும் பாக்கல” என்று வருத்தமாகக் கூறியவள், “நான் திரும்ப கூப்பிட்டு பாக்குறேன்” என்று மாடியேறிவிட்டாள்.
அந்நேரம் நாச்சிக்கு பிரேமிடமிருந்து அழைப்புவர, முகத்தில் தோன்றிய வெட்கச் சிரிப்போடு நகர்ந்திட்டாள்.
“நீயி சாப்பிடலையா மாமா?” அப்போதும் உணவில் கவனம் வைத்தவளாக அங்கை கேட்டிட,
“என்னது… பாக்ஸ் காலியான பொறவா?” என்று லிங்கம் சிரித்திட, வாயில் வைக்க கொண்டுபோன கடைசி துண்டினை அவனது வாயில் திணித்தாள்.
“ஏய் மெதுவா” என்றவன் தன் உதட்டில் பட்ட தன்னவளின் மென் விரலை நா வருடி சுவைத்தவனாக மெல்ல விட்டான்.
“கேக்குன்னு நெனச்சு என் விரலை கடிச்சிட்ட மாமா” என்றவள் நகர,
“கேக்கைவிட உன் விரல் நல்லாயிருந்தது சின்னக்குட்டி” என்று மந்திரத்தில் கட்டுண்டவனாக சொல்லிவிட்டவன், அங்கை பட்டென்று திரும்பிட சுதாரித்தான்.
“உன் விரல் பட்டதுல கேக் இன்னும் கூடுதல் சுவையாகிப்போச்சுன்னு சொன்னேன்” என்று தடுமாறி மொழிந்து வேகமாக அங்கிருந்து ஓடிவிட்டான்.
அங்கை அவனது தடுமாற்றத்தால் தனக்குள் பூக்கும் காதல் பூக்களின் கணங்களை நெஞ்சோடு சேமித்தவளாக, தோன்றிய புன்னகையை இதழோரம் மிச்சம் வைத்தாள்.
“சீக்கிரமே நீயா சொல்லுவ மாமா” என்றவளுக்கு, அவனை தான் மறுக்கும் நிலை வருமென அறியவில்லை.
அறைக்குள் வந்த மீனாள் இரண்டு முறை அழைத்துவிட்டாள். கார் ஓட்டிக்கொண்டிருப்பதால் அவன் எடுக்கவில்லை.
“போன் வருதே அமிழ்தா. எடுத்துப் பேசு” என்று பாண்டியன் சொல்ல…
அழைப்பது யாரென்று தெரிந்தவனுக்கு, ‘இவர்கள் முன்னாடி அவளிடம் எப்படி பேசுவது? நிச்சயம் போன் எடுத்தாள் ஹைப் ஆகுற மாதிரி பேசுவாள்’ என நினைத்தவன், “வண்டியை நிறுத்தும்போது பேசிக்கிறேன் ஐயா” என்று சொல்லிவிட்டான்.
அடுத்து தொடர்ந்து குறுந்தகவல் வந்த வண்ணம், புலனத்தின் மெசேஜ் டோன் ஒலித்துக் கொண்டே இருக்க… பாண்டியனும், மருதனும் வீரனை யாரதென்று பார்த்தது பார்த்தபடி இருக்க… தூங்கிக்கொண்டிருந்த சுபாவும் எழுந்துவிட்டாள்.
“மீனாவா அப்பு?” மருதன் கேட்டிட,
சாலையோர தேநீர் கடை அருகே வண்டியை நிறுத்தியவன், சிறு புன்னகையோடு காரிலிருந்து இறங்கிக்கொண்டான்.
“நீங்க டீ குடிச்சிட்டு இருங்க. வந்துப்புடுறேன்” என்று சற்று தள்ளி சென்று அலைப்பேசியை திறந்தவனுக்கு அவள் “மாமா… மாமா…” என அழைத்திருந்த அத்தனை குரல் பதிவுகளும் சிலிர்ப்பை உண்டாக்க, கீழ் பற்களால் மேலுதட்டை கடித்து தன் உணர்வுகளை அடக்கி மீனாளுக்கு அழைத்தான்.
மீனாள் எடுத்ததும்…
“அடியேய் ராட்சசி… எதுக்குடி இப்புடி படுத்துற?” என்று கோபமாகக் கேட்க நினைத்து முடியாது குழைந்து ஒலித்தது அவனது குரல்.
“எப்போ மாமா வருவ? தூக்கமே வரமாட்டேங்குது” என்றாள்.
“வர இன்னும் நாலு மணி நேரமாவும்டி. தூங்கு தங்கம்” என்றவன், “போனு எடுக்கலன்னா சும்மா இல்லாம எதுக்குடி இம்புட்டுவாட்டி மாமான்னு கூப்பிட்டு வச்சிருக்கவ? தொடர்ந்து மெசேஜ் டோன் கேட்கவும், ஐயாவும் மாமாவும் எம் மூஞ்சியையே பாக்குறாய்ங்க. வண்டி ஓட்ட வேணாமா?” எனக் கேட்டான்.
“நீயி ராவுக்குள்ள வந்துப்புடுவேன் சொன்ன தானே மாமா. இப்போ மணி எம்புட்டு? ஒழுங்கா உன் கைய குடு. தூங்கணும்” என்றாள்.
“கொல்லாதடி என்னைய” என்றவனின் முகத்தில் அத்தனை மத்தாப்பூக்கள்.
“தங்கம்… தங்கப்பொண்ணு” என்று கொஞ்சியவனின் கொஞ்சலுக்கெல்லாம் அவள் மசியவே இல்லை. அவள் போக்கில் சீக்கிரம் வா என்பதையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தாள்.
“தங்கம்… ம்ப்ச்… வந்துடுறேன் வைய்யித்தா” என்று அலைப்பேசியை அணைத்து சட்டை பைக்குள் போட்டவன், இருளில் மின்னிய நட்சத்திரத்தை நொடி நேரம் கண்சிமிட்டி ரசித்தான்.
“என்ன கண்ணு டீ’யை குடிக்காம அமிழ்தனையே பார்த்துகிட்டு இருக்க?” பாண்டியன் சுபாவின் பார்வையை வைத்து வினவினார்.
“மாமா முகம் மீனுக்கிட்ட பேசும் போது எப்படி பிரகாசமா இருக்குது பாருங்க. கண்ணும் சிரிக்கிற மாதிரி இருக்குல. அவர் இப்படி சிரிச்சு நான் பார்த்ததே இல்லை” என்றாள். அதே எண்ணம் தான் ஆண்கள் இருவருக்கும்.
வீரனை வாஞ்சையாக நோக்கினர்.
வீரனின் சில மணி நேர பிரிவையே ஏற்க முடியாத மீனாள், மொத்தமாக அவனை விட்டுச் சென்று பிரிவின் வலியில் மூழ்கடிக்கவிருக்கிறாள் என்பது அக்கணம் யாரும் அறிந்திருக்கவில்லை.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
37
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Yenaga…rendu jodi khm ipdi twist vaikirnha
அந்த போன் உரையாடல் செம….
Ayayo twist ku Mela twist ah irukuthey
Bayama ah irukey
இடையில் என்னடா ச*கு*னி வேலை
குடும்பத்துக்குள்ள மறுபடியும் பிரச்சனை வர போகுதா