Loading

யான் நீயே 28

அன்று சுபா அலுவலகத்திற்கு வந்ததும் கௌதம் அவளை சந்திக்க வந்தான்.

“என்னடா வொர்க் இல்லையா?”

“அதெல்லாம் இருக்குதுதான்” என்ற கௌதம், “அம்மாவுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சு சுபா. உன் அப்பாவை பேச சொல்ல முடியுமா? நான் என்னால் முடிஞ்சவரை பேசிட்டேன். இறங்கி வரமாட்டேன்கிறாங்க. என்ன பண்ண ஒண்ணும் தெரியல?” என்றவன் அவள் முன்னிருந்த இருக்கையில் கைகளால் தலையை தாங்கி அமர்ந்தான்.

“என்னடா கழட்டி விடலாம் நினைக்கிறியா?”

“அடியேய்… அதுக்குத்தான் உங்க அப்பாவை பேச சொல்ல சொல்றேனாக்கும்” என்றான். கோபமாக.

“ஓகே… ஓகே… கூல்” என்றவள், “நான் அப்பாவை பேச சொல்றேன்” என்றாள்.

நேற்று இரவு கௌதம் தன்னுடைய அலைப்பேசியை ஹாலிலே வைத்துவிட்டு சென்றிருக்க… அந்நேரம் சுபா அழைத்தாள். திரை தாங்கி வந்த மை லவ் என்கிற புகைப்படத்தில் அதிர்ந்த வசந்தி…

“கௌதம்” என்று கத்தியதில், ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கௌசிக் உட்பட பதறி அடித்து ஹாலிற்கு வந்திருந்தனர்.

“என்னத்துக்கு இந்த கத்து கத்துற?”

நல்லான் கேட்டிட, கையிலிருந்த அலைப்பேசியை தூக்கி காண்பித்தார் வசந்தி.

“போச்சு… ச்சோலி முடிஞ்சு.” கௌதம் மனதில் நினைக்க…

வசந்தி இது ஒத்து வரவே வராதென்று பேச ஆரம்பித்துவிட்டார். அவருக்கு சுந்தரேசனின் சொத்து விவரங்கள் தெரியாதோ என்னவோ? தெரிந்திருந்தால் முதல் ஆளாக சம்மதம் வழங்கியிருப்பார். மீனாளை மகனுக்கு மணக்க நினைத்ததே சொத்திற்காகத்தானே!

அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவருக்கு மிஞ்சிப்போனால் வீடு சொந்தமாக இருக்கும். வேறென்ன இருந்துவிடப் போகிறதென்று நினைத்தார். அவரின் பூர்வீக விவரம் எதுவும் அறியாதவராக. சுந்தரேசன் எப்போதும் தன் பகட்டை வெளிக்காட்டியதில்லை. அவருக்கும் பெயர் சொல்லுமளவிற்கு நிலபுலன்கள் இருக்கின்றன. அவர் இன்னமும் தன் தங்கைக்கு ஒவ்வொரு விசேடத்திற்கும் சீர் செய்யும் விடயம் தெரியாது போலிருக்கு.

கௌதம் எவ்வளவோ மன்றாடியும் வசந்தி தன் பிடியிலே நிற்க… விடயம் அறிந்து தன்னிடம் பேசவே முகம் கொடுக்காத நல்லானிடம் எப்படி பேசுவதென்று கௌதம் தவிக்க…

“உனக்கு நாளைக்கே பொண்ணு பார்க்க ஆரம்பிக்கிறேன்” என்று சென்றுவிட்டார்.

“ஒண்ணுமில்லாத வூட்டுல பொண்ணு எடுக்க சொல்றியா நீயி?” என்று மகனை பார்வையால் மிரட்டிவிட்டே நகர்ந்தார் வசந்தி.

கௌதம் சொல்லியதை கேட்டதும்…

“நீயும் நானும் தானே வாழப்போறோம். உனக்கு உன் அப்பா அம்மா வேணுமா?” எனக் கேட்டாள் சுபா. அவர்களின் பணத்தாசை அவள் அறியாததா?

கௌதம் அடிபட்ட பார்வை ஒன்றை அவள் புறம் வீசிட…

“நான் கேட்டால் என் அப்பா மொத்த சொத்தையும் கொடுத்திடுவார். ஆனால் அப்படி எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு உங்க வீட்டுக்கு நான் வந்தாக்கா, எம் மனசு அங்க உண்மையான சந்தோஷத்தோட இருக்குமா கௌதம்? அவங்களைப்பற்றி உன்னைவிடவா எனக்குத் தெரியும்?” எனக் கேட்டாள்.

கௌதம் அமைதியாக இருக்க…

“என் அப்பா உன் வீட்டுக்கு வந்தால் உன் பேரண்ட் முதலில் மரியாதை கொடுப்பாங்களா?” என சுபா கேட்ட கேள்வியில்…

“எல்லாம் தெரிஞ்சுதானே என் பின்னாடி சுத்துன?” என்றிருந்தான் கௌதம். இரவிலிருந்தே வசந்தியின் பேச்சில் ஒருவித அழுத்தத்தில் இருந்தவனுக்கு சுபாவின் கேள்வியில் பொறுமை பறந்தது.

“எஸ்… உன் பின்னாடி தான் சுத்துனேன். உன்னை அவ்வளவு பிடிக்கும். எத்தனை முறை வேணாலும் சொல்லி காட்டிக்கோ. நான் மைண்ட் பண்ண மாட்டேன்” என்றவளின் கைகளை மன்னிப்பாய் பற்றிக்கொண்டான்.

“வீராண்ணேவை பேச சொல்லுவோமா?” கௌதம் யோசனை வழங்கினான்.

“ம்ம்ம்… அல்ரெடி அப்பாக்கு தெரியும் நினைக்கிறேன். வீரா மாமா பேசியிருக்கு. இப்போ உங்க வீட்டுலையும் மாமாவையே பேச வைப்போம். அப்புறம் ரெண்டு குடும்பமும் மீட் பண்ணிக்கட்டும்” என்றாள்.

“அண்ணே… இப்போ எப்படி சொல்றது. அங்கட்டும் கொட்டா எரிந்து சூழல் சரியில்லையே?” என்று கௌதம் கேள்வியாய் யோசிக்க… “ஒரு வாரம் போகட்டும் கௌதம். இப்போதானே பொண்ணு பார்க்கிறேன் சொல்லியிருக்காங்க. பார்த்துக்கலாம்” என்றாள் சுபா. இலகுவாக.

ஆனால் மாலையே முடிவு செய்யப்பட்ட சம்மந்தத்துடன் வீடு வந்தார் நல்லான்.

கௌதம் முற்றிலும் தன் சுயமிழந்த நிலை.

நல்லான் மற்றும் வசந்தியிடம் எதுவும் பேச முடியாதவன், பலவற்றை யோசித்து தன்னையே குழப்பி… ஒருகட்டத்திற்கு மேல் முடியாதென, வீரனுக்கு நேரத்தை பார்க்காது அழைத்துவிட்டான்.

அன்றைய இரவு வீரன் மாந்தோப்பிற்கு கால்நடைகளுக்கு காவலுக்கு வந்திருந்தான்.

முதல் நாள் பாண்டியன் இருந்ததால் தொடர்ந்து குளிர் காற்று அவரின் உடல்நலனுக்கு ஏதும் இழுத்துவிட்டுவிடுமோ என வீரன் தான் பார்த்துக்கொள்வதாக சொல்லிவிட்டான்.

இரவு பெங்களூர் செல்ல வேண்டி கிளம்பிய பிரேமை லிங்கம் மதுரை சென்று பேருந்து ஏற்றிவிட்டு வர, இரவு உணவு முடிந்து அறைக்குக்கூட வராது கீழிருந்தபிடியே மாந்தோப்பிற்கு சென்றுவிட்டான் வீரன்.

வீரனின் பாராமுகமும், ஒதுக்கமும் ஒருநாளுக்கே மீனாளுக்கு நெஞ்சை அறுத்தது.

மீனாளுக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்தளவிற்கு கோபம் கொள்ளுமளவிற்கு என்ன செய்தோமென்று யோசித்து யோசித்தே மண்டை காய்ந்தாள்.

“அவென் காவலுக்கு போயி மணியாச்சு. நீ ஏண்டி இன்னும் இங்கன உட்கார்ந்திருக்க?” மீனாட்சி தொலைக்காட்சி முன் அமர்ந்து திரையை பார்க்காது எங்கோ வெறித்திருந்த மீனாளிடம் கூறினார்.

“என்ன கெழவி சத்தம் ஓவரா வருது. கல்யாணமாகி மூணு நா ஆவல. அதுக்குள்ள உம் பேரன் என்னைய ஒத்தையில வுட்டுப்போட்டு போயாச்சு. போறேன்னு சொல்றவங்களை வேணாம் சொல்லி தடுக்க முடியல. உம் வாவெல்லாம் என்கிட்ட தான் அம்மத்தா” என்றாள்.

“அடியாத்தி… எம்புட்டு பேச்சு பேசுற. நீயி பேசுற பேச்சுக்கு எம் மவராசன் தாங்குவானா. உன்னைப்பத்தி அவனுக்கு தெரிஞ்சிருக்கு. கருப்பருக்கு பொங்க வைக்கணுமே… நீயி சும்மா வுடமாட்டேன்னுதேன் காவலு சாக்கை வச்சு ஓடிட்டான்” என்று அவர் நீட்டி முழக்கி பேச…

“ஏன் அம்மத்தா நேரங்காலம் தெரியாம நீபாட்டுக்கு பேசுற” என்றவள், “அப்படியே நடந்துட்டாலும்” என்று மெல்ல முணங்கியவளாக எழுந்து சென்றுவிட்டாள்.

“ஏட்டி அபி புள்ளைங்களுக்குள்ள ஏதும் சடவா? இந்த முறுக்கு முறுக்கிட்டு போறா!” மீனாள் சென்ற வேகத்தைக் கண்டு மீனாட்சி அபியிடம் விசாரித்தார்.

“அப்படிலாம் இருக்காது அத்தை. அமிழ்தன் தோப்புக்கு போன கோவமா இருக்கும்” என்று நகர்ந்தார்.

வீரன் கரியனை பார்த்து இரண்டு நாளாகியிருந்தது. கரியனும் சூழல் புரிந்து வீரன் தீவனம் வைத்தால் தான் சாப்பிடுவேனென்று அடம் செய்யாது, யார் வைத்தாலும் உண்டு கொண்டான்.

அவ்வீட்டில் கால்நடைகளுக்கும் புரிதல் இருந்தது.

அந்த இருட்டிலும், தூரத்திலேயே வீரனின் வாசத்தை கண்டுவிட்ட கரியன், “ம்மாஆஆஆஆ” என்று அழைத்து, முன்னங்காலை தரையில் தேய்த்து தலையை ஆட்டி தன் எதிர்பார்ப்பைக் காட்டியது.

கரியனின் தேடலை உணர்ந்த வீரன் எட்டி நடைப்போட்டு அவனருகில் வந்து கழுத்தோடு திமிலை சேர்த்து கட்டிக்கொண்டவனாக அவனின் முன்நெற்றியில் முத்தம் பதிக்க… கரியனும் தன் நாவால் வீரனின் கன்னம் தீண்டியது.

மற்றவைகளும் “ம்மாஆ” என்று குரல் கொடுக்க… யாவற்றையும் நலன் விசாரித்து தீவினமிட்டு தோப்பிற்கு நடுவில் போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் வீரன் அமர்ந்த நொடி கௌதமிடருந்து அழைப்பு வந்தது.

“சொல்லுடே கௌதம்.”

“சாரிண்ணே… டைம் பார்க்காம பண்ணிட்டேன்.”

“பிரச்சினை இல்லை… காரணமில்லாம நேரங்காலம் பார்க்காம கூப்பிடமாட்டியே! என்னன்னு சொல்லு?” என்ற வீரனுக்கு ஒரு யூகம் இருந்தது.

கௌதம் தான் ஒரு பெண்ணை விரும்புகிறேன் என்று சொல்லிய பின்னரும் வசந்தி அமைதியாக இருந்ததற்கான காரணம்… தங்கள் முன்பு கௌதமை திட்டிடக் கூடாது என்பதாலேயே! திருமணம் முடிந்து இரு நாளுக்கு முன்பு ஊருக்கு சென்றிருக்க… நிச்சயம் பெண் யாரென்று தெரிந்திருக்கும். வசந்தியும், நல்லானும் ஒரு ஆட்டம் ஆடியிருப்பர். அதற்கே கௌதமின் அழைப்பு. நொடியில் கிரகித்து விட்டான் வீரன். கௌதமாக சொல்லட்டுமென்று மௌனம் காத்தான்.

“சுபா தான் நான் லவ் பண்ற பொண்ணுன்னு தெரிஞ்சிடுச்சுண்ணே. உடனே குதி குதின்னு குதிச்சிட்டாங்க. சுபாகிட்ட சொல்லி சுந்தரேசன் மாமாவை வரவழைத்து பேச வைக்கலாம் இருந்தால், ஈவ்வினிங் பொண்ணு பார்த்து பேசி முடிச்சாச்சு நாளை மறுநாள் எங்கேஜ்மெண்ட் சொல்றாங்க. என்ன பண்ணனும் ஒன்னும் புரியலண்ணே. நீயி பேசி பாரேன்… ப்ளீஸ்.” இறுதியாக இறைஞ்சும் குரலில் கேட்டிருந்தான்.

“இப்போதாண்ணே ஆன்சைட் போக சான்ஸ் வந்திருக்கு. நேத்து தான் டூ இயர்ஸ் காண்டராக்ட் சைன் பண்ணேன். இப்போ போக முடியாது சொன்னா வேலையே போயிடும். இந்த சூழலில் சுபாவை விட்டும் போக முடியாது. மண்டை காயுதுண்ணே!”

“நான் பேசுனாக்கா உன் அப்பா அம்மா இன்னும் முறுக்குவாய்ங்களே! நான் மாமாவை பேச சொல்லுறேன். வெசனப்படாத” என்றான்.

“மாமாவே அப்பாவுக்கு பயந்துதேன் பேசுவாறு. அவர் பேச்செல்லாம் மிஸ்டர் நல்லானிடம் எடுபடாதுண்ணே! உம்மேல கொஞ்சம் பயமிருக்கு. நீயின்னாக்கா என்ன சொல்ல வரன்னாவது கேட்பாரு” என்ற கௌதமுக்கு வீரன் பேசினால் நன்றாக இருக்கமென்ற எண்ணம்.

“சரிடே… நான் பார்த்துக்கிறேன்” என்று வீரன் சொல்லிக்கொண்டே திரும்ப மீனாள் அவனருகில் கட்டிலில் அமர்ந்தவள் அவனது மடியில் தலை வைத்து படுத்திருந்தாள்.

“சுபா வேற பொண்ணு பார்த்து முடிவு பண்ணிட்டாங்கன்னு தெரிந்ததிலிருந்து அழுதுகிட்டே இருக்காண்ணே! அவளிடமும் பேசேன்” என்றான்.

மத்தளத்துக்கு இருபக்கமும் இடி என்பதைப்போல் தான் இப்போது கௌதமின் நிலையும். ஒரு பக்கம் சுபா. மறுபக்கம் அவனது பெற்றோர்.

வீரனின் கை தன்னவளின் சிகை வருடி கொடுத்தபடி இருக்க… கௌதமிடம் பேசிக்கொண்டிருந்தான். அவனை தொல்லை செய்யாது மீனாளும் கண்களை மூடிக்கொண்டாள். அவளுக்கு வீரனின் ஒதுக்கத்திற்கு காரணம் தெரியாது… இரண்டு நாட்களாக ஒன்றாக இருந்த அறையில் அவனின்றி தனித்து இருக்க முடியவில்லை. ஒருநாள் அவனது கை வளைவில் உறங்கியதே அவளின் மனம் வேண்டியது.

உறக்கம் வராது சன்னல் திண்டில் அமர்ந்து இருளை வெறித்திருந்தவள், ஒரு நிலைக்கு மேல் முடியாதென வீரனிடமே சென்றுவிடலாமென முடிவு செய்து அறை கதவினை திறந்து வெளியில்வர… மாடி வராண்டாவில் லிங்கம் நடந்து கொண்டிருந்தான்.

“உறங்கல?”

கதவு திறக்கும் சத்தத்தில் மீனாளை ஏறிட்ட லிங்கம் வினவ,

“மாமாகிட்ட போறேன்” என்றாள்.

“அண்ணே இல்லாம ஒரு நா உறங்க முடியாதோ?” என்ற லிங்கம், “நீங்கதேன் எங்க அண்ணனை வேணாமின்னு சொல்லிட்டு இருந்தீய்ங்க” என்று கிண்டல் செய்து சிரித்தான்.

“அதுக்கு இப்போ என்ன? மதினின்னு மரியாதை இல்லாம என்ன பேச்சு பேசுற? காலையில அம்மத்தாக்கிட்ட போட்டுக்கொடுக்கிறேன் இரு!” என்று மீனாள் விரல் நீட்டி மிரட்டிட, லிங்கம் தலைக்கு மேல் கைகளை குவித்து போதுமென்றான்.

“அது… அந்த பயமிருக்கணும்” என்ற மீனாள் சிரிப்போடு படியிறங்க…

“நான் வந்து வுட்டுப்போட்டு வரட்டுமா மீனாக்குட்டி?” எனக் கேட்டான்.

“நம்ம பண்ணை மாமா. எனக்கென்ன பயம். நான் போயிக்கிறேன்” என்றவள் கீழே அனைவரின் கதவும் மூடியிருப்பதை உறுதி செய்துகொண்டு வீரனிருக்கும் மாந்தோப்பிற்கு வந்துவிட்டாள்.

வீரன் அலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்க அமைதியாக அவனது மடியில் படுத்துக்கொண்டாள். தானாக அவன் கை தன் தலை வருடவுமே அத்தனை நேரமிருந்த தவிப்புகள் அடங்கி நொடியில் உறங்கிப்போனாள்.

இருப்பினும் அவனது வருடல் மட்டும் நிற்கவே இல்லை.

கௌதமிடம் பேசிக்கொண்டிருந்தவனுக்கு இரண்டாவது அழைப்பு வர,

“நான் சுபாவுக்கு கால் பண்ணி பேசுறேன் கௌதம். நீயி ஏதும் நெனைக்காமா உறங்கு” என்று சொல்லிவிட்டு மற்றொரு அழைப்பினை ஏற்றான்.

லிங்கம் தான் அழைத்திருந்தான்.

“வந்துட்டா(ள்)டே!”

லிங்கம் கேட்கும் முன்பே அவன் இதைத்தான் கேட்க அழைத்திருக்கிறான் என்பது புரிந்து பதில் சொல்லியிருந்தான் வீரன்.

“ரொம்ப தைரியம் வந்திருச்சுண்ணே மேடத்துக்கு. வாவும் கூடிப்போச்சு. என்னா பேச்சு பேசிட்டு… பயமே இல்லாம கெளம்பியாச்சு. நானு அவிங்களுக்கு மதினின்னு மரியாதை கொடுக்கணுமாம்.” லிங்கம் சொல்லிவிட்டு சிரிக்க…

“கொடுடே… கொடுக்கணுமே!” என்றான் வீரனும் சிரிப்போடு.

“அண்ணே…” என்று இழுத்த லிங்கம், “உங்க ஆட்டத்துக்கு நானு வரல” என்று வைத்துவிட்டான்.

அலைப்பேசியை எட்டி மரத்தண்டில் வைத்தவன், தலை குனிந்து தன் மடியில் படுத்திருப்பவளை பார்த்தான்.

வீரனின் வயிற்றில் முகம் புதைத்து ஒரு கையால் அவனை சுற்றி கட்டிக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

மனைவியையே ரசனையோடு பார்த்திருந்த வீரன் மென்மையாக அவளின் நெற்றியில் இதழொற்றி…

“இந்த வா என்ன வார்த்தை சொல்லுச்சு” என்று விரல் கொண்டு இதழ் தொட்டு, அழுத்தமாக கன்னம் கிள்ளிட…

தூக்கம் கலைந்து கத்திக்கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

வீரன் கிள்ளிய இடம் சிவந்து விட்டிருந்தது.

“ஏன் மாமா கிள்ளுன. வலிக்குது.” முகம் சுருக்கியவளாக தேய்த்துக் கொண்டவளின் கண்கள் கலங்கியிருந்தது.

“வலிக்கட்டும்…” என்ற வீரன் அவளின் கண்கள் துடைத்து, கன்னத்தில் தன்னுடைய உள்ளங்கை பதித்தான்.

“சொல்றதும் செய்யுறதும் வேறையா இருக்குது.” மீனாள் முறைத்துக்கொண்டு சொல்ல…

“எதுக்கு இங்கன வந்த? அதுவும் இந்த இருட்டுல” எனக் கேட்டான்.

“நீயி இல்லாம உறக்கம் வரல மாமா” என்று சிணுங்கியவளாக அவனின் மடியில் தலை சாய்க்க பார்க்க… தடுத்தவன்,

“தள்ளிப்போடி” என்றான்.

“ரொம்ப பண்ற மாமா நீயி? இன்னைக்கிலாம் ரொம்ப தேட வைக்குற. கிட்ட வந்தாக்கா மொறைச்சிக்கிட்டு வீராப்பா போற” என்றவளின் குரல் தழுதழுத்தது.

“ரெண்டு மணி நேரம் நானு இல்லாம அந்த வூட்டுல உன்னால இருக்க முடியல… இதுல இவுங்க, அவுங்க ஐயா வூட்டுக்கு போறாங்களாம்.” வீரன் சொல்லிக்காட்டியதில் அவனுக்கான கோபம் என்னவென்று மீனாளுக்கு தெரிந்தது.

“அது ஏதோ அந்தநேர சடவுல அப்படி தோணுச்சு சொல்லிப்புட்டேன். அதுக்குன்னு மூஞ்சியை தூக்கி வச்சிக்கிட்டு சுத்துவியா மாமா நீயி” என்றவள் அவனை கட்டிலில் தள்ளி அவன் நெஞ்சில் கைகள் ஊன்றி தானும் அவன்மீது விழுந்திருந்தாள்.

“இன்னொருவாட்டி விளையாட்டு பேச்சுக்குன்னாலும் இப்படி உனக்குத் தோணக்கூடாதுல… அதுக்குத்தேன்” என்றவனின் கீழுதட்டை பெருவிரல் மற்றும் சுட்டுவிரல் கொண்டு அழுத்தி பிடித்து இழுத்து முத்தம் வைத்தவள்,

“ரொம்பத்தான் கோவம் வருது மாமா” என்றாள்.

“உன் விசயமின்னா இதுக்கு மேலவும் வரும். இன்னொருவாட்டி என்னையவிட்டு போறங்கிற நெனப்புக்கூட வரக்கூடாது” என்றான். அவனது குரலில் அத்தனை அழுத்தம். வார்த்தையில் அடர்த்தி.

“அதெல்லம் போவமாட்டேனாக்கும். வாழ்க்கை முச்சூடும் உன்னை இம்சை பண்ணிக்கிட்டே இருக்கணும் மாமா. எம்புட்டு இருக்குது” என்றவள் அவனின் மார்பு மீதே தலை வைத்து கண்களை மூடிட, தன்னிரு கைகளை அவளைச் சுற்றி கோர்த்தவனாக தன்னோடு இறுக்கிக்கொண்டான்.

நிமிடங்கள் சில இருவருக்கும் அப்படியே நீண்டது. இந்நேர இதம்… அது கொடுக்கும் நிறைவே போதுமாக இருந்தது.

“தங்கம்…”

“மாமா!”

“காலையில வெள்ளென சென்னைக்கு கிளம்புறேன்” என்றான்.

“எதுக்கு மாமா?”

“கௌதம், சுபா கல்யாண விடயம் பேசணும்” என்றவன் கௌதம் அழைத்தது அவன் பேசியதென எல்லாம் கூறினான்.

“நாமெல்லாம் சொன்னாக்கா கேட்கும் ஆளா மாமா அவிங்க?”

“பேசி பாப்போம்” என்றவனிடமும் இது சாத்தியமா என்கிற பெருமூச்சு.

“ரெண்டு மாமாக்கும் பேசணும்” என்றவன், “நீயி எழும்பு” என்றான்.

“ம்ஹூம்” என்று தலையசைத்தவள், “இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருக்கலாம் மாமா” என்றாள்.

அவனும் அவள் சொல் கேட்டு அமைதியாகினான்.

அவன் பெரியவர்களிடம் பேசிவிட்டு சற்று நேரம் உறங்கிட வேண்டும். நாளுக்கான அலுப்பு அவனிடம். சோர்வு நீங்கினால் தான் காலையில் கிளம்ப முடியும். அதற்காக மீண்டும் அவளிடம் எழுந்திருக்க சொல்ல… அவளோ முடியதென்றாள்.

“இதென்ன அடம் தங்கம்?”

“அப்படித்தான் பண்ணுவேன்” என்றவள், “காலையில போவும்போது வெவரமா பேசிக்கோ மாமா. இப்போ எதுவும் நெனைக்காம என்னோட இரு” என்றாள். உரிமையாக. கட்டளையாக.

“படுத்துறடி” என்றவன் அவளை தன் பக்கம் சரித்து அவள் மீது கையிட்டு படுத்தவன், அவளோடு உறங்கிப்போனான்.

இரண்டு மணி நேரம் கழித்து தானாக விழித்தவன், லிங்கத்திற்கு அழைத்து, “இங்குட்டு வாடே” என்றான்.

“தங்கம்” என்று விளித்திட அவளிடம் அசைவில்லை.

“தங்கப்பொண்ணு” என்று கன்னம் தட்டிட…

“அதுக்குள்ள விடியப்போவுதா மாமா?” எனக் கேட்டுக்கொண்டே எழுந்து அமர்ந்தாள்.

லிங்கமும் வந்து சேர,

“பார்த்துக்கிடு. இன்னைக்கு ஒரு நா ஆலை, ஹோட்டலுலாம் மேனேஜர் கிட்ட சொல்லி பார்த்துக்கோடே! நீயி இங்கனவே தொழுவம் கட்டுற இடத்துல நில்லு. சென்னைக்கு போற சோலி… இன்னும் கொஞ்ச நேரத்துல கெளம்பிடுவேன்” என்று மேலோட்டமாக விடயத்தைக் கூறினான்.

“அடுத்த பஞ்சாயத்தா!” லிங்கம் சிரித்திட, தம்பியின் தோளில் தட்டினான் வீரன்.

லிங்கம் வந்ததைக்கூட உணராது மீனாள் உட்கார்ந்துகொண்டே தூங்க…

“தங்கம் எந்திரி. மணி மூணாவுது. இப்போ கெளம்புனாத்தேன் சரியா இருக்கும்” என்று அவளின் கன்னம் பிடித்து ஆட்ட… “விடிஞ்சி போ மாமா. இப்போ கட்டிக்க” என்று நின்றிருந்தவனின் மீதே தலை முட்டி இடை பிடித்து உறங்க… லிங்கம் மாடுகள் பக்கம் நகர்ந்திருந்தான்.

“அடியேய்… லிங்கு இருக்காண்டி. எந்திரி…” என்று அவளின் காதில் வீரன் பற்களைக் கடித்துக்கொண்டு சொல்ல, வீரனை அணைத்திருந்த கைகளை பட்டென்று எடுத்தவள், வேகமாக கட்டிலை விட்டு இறங்கியிருந்தாள்.

“லிங்கு…”

தம்பி அருகில் வந்ததும்,

“நீயி படுத்துக்கோடே. கொஞ்சமின்னுக்கத்தேன் எல்லாத்துக்கும் மறு தீனி போட்டேன். இனி விடிஞ்சு போட்டா போதும்” என்ற வீரன்,

மீனாளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான்.

பாதி உறக்க நிலையில் அவனில் சரிந்து நடந்தபடி வீடு வந்து சேர்ந்தனர்.

“ரூமுக்கு போ தங்கம்” என்று அவளை அனுப்பி வைத்தவன், பின்கட்டுக்கு சென்றான்.

அங்கு தான் தாழ்வாரத்தில் பாண்டியன் கட்டில் போட்டு படுத்திருந்தார்.

அருகில் சென்றவன் “ஐயா” என்று அழைத்திட… ஒரு குரலுக்கு எழுந்து என்னவென்று கேட்டார்.

“சரியா தூக்கமில்லைங்களா? கூப்பிட்டதும் விழிச்சிட்டிங்க?” என்ற வீரன் அவர் முன்னிருந்த சிறு திண்ணையில் அமர்ந்தான்.

“எங்க அப்பு… அரை தூக்கந்தேன். வயசு ஆவுதே” என்ற பாண்டியன், “ஏதும் சேதியா கண்ணு?” எனக்கேட்டார்.

வீரன் சொல்லியதும் அவருக்கு அத்தனை அதிர்வு.

“எப்படிப்பு வசந்திகிட்ட சுபா வாழ்க்கையை நடத்தும்?” அவருக்கு சுபாவை நினைத்து அப்போதே கவலை ஆரம்பித்துவிட்டிருந்தது.

“அதெல்லம் கௌதம் சமாளிச்சிக்கிடுவான் ஐயா. நாம இப்போ சென்னை கெளம்பனும். நம்ம சுபாவுக்காக, சுந்தரேசன் மாமாவுக்காக ஒரு முறை பேசி பார்த்திடுவோம்” என்றான்.

பாண்டியனும் சரியென தலையசைத்தார்.

“செத்த மின்னுக்கத்தேன் மாமாவுக்கு போன் போட்டு விசயத்தை சொன்னேன். அவரு அப்படியே அங்கன வந்திடுறன்னு சொல்லிட்டாரு. நாம கெளம்புவோம். மருதன் மாமாவும் வந்திடுவாறு. நீங்க தயாராவுங்க” எனக்கூறி உள்ளே சென்றான்.

மாந்தோப்பிலிருந்து வரும்போதே… சுந்தரேசனுக்கும், மருதனுக்கும் ஒன்றாக அழைத்து இருவருக்கும் சேர்த்தே சொல்லியிருந்தான்.

“தூங்குவன்னு நெனச்சேன்.” அறைக்குள் வந்த வீரன், சட்டையை கழட்டி ஆங்கரில் மாட்டியவனாக உம்மென்று சன்னல் திண்டில் அமர்ந்திருந்தவளிடம் பேசினான்.

“ஐயா, மாமா போனா போதாதா? நீயும் போவனுமா மாமா?”

மீனாளின் சுருங்கிய முகம் அவனை என்னவோ செய்தது.

அருகில் வந்தவன் அவளின் தலையை தன் வயிற்றோடு அழுத்தியவனாக,

“நம்ம சுபாவுக்காகடே! நாமத்தேன் எல்லாம் பார்த்து செய்யணுமாட்டிக்கு” என்றவன் அவளின் உச்சியில் அழுத்தமாக இதழ் பதித்து விலகினான்.

“நானும் வரட்டா மாமா?”

“தங்கப்பொண்ணு” என்று இடையில் கை குற்றி நின்றவன், “இப்போ போனா ராத்திரிக்கு வந்துடப்போறேன். என்னத்துக்கு இம்புட்டு தவிக்கிற?” என்றான்.

“தெரியல மாமா. ரெண்டு நாதேன் ஆவுது. ஆனால்… ம்ப்ச், உன்னை விட்டு இருக்க முடிய மாட்டேங்குது. இப்போ நெனச்சா, நானா அத்தனை வீம்பா நீயி வேணாமின்னு இருந்தேன்னு எனக்கே ஆச்சரியமா இருக்குது” என்றவள், “எப்பவும் உம்மேல இதே கிறுக்கோட இருக்கணும் மாமா” என்றாள்.

அவள் இத்தனை வருடம் சொல்லாது வீரனை ஏங்கவிட்ட மொத்த காதலையும் சிறு சிறு வார்த்தையில் காட்டியிருந்தாள்.

வீரன் நின்ற இடத்திலிருந்து தன்னிரு கைகளையும் அகல விரிக்க… தாய் பறவையின் இறக்கைக்குள் தஞ்சம் புகும் குட்டி பறவையாய் அவனில் புகுந்திருந்தாள்.

“பழகிக்கோ தங்கம். எப்பவும் ஒண்ணாவே இருக்க முடியாது. ரெண்டு நா, மூணு நா’ன்னு வேலை விசயமா பார்த்துக்காம இருக்குற சூழல் வரும். அப்போலாம் இதேமாறி வெசனப்பட்டுகிட்டே இருப்பியா நீயி?” எனக் கேட்டவன், “தூரம் இருந்தாலும், ரெண்டேறு மனசும் ஒண்ணா இருக்கே! அது போதாதாக்கும். உன் நெனப்பு போதும்த்தா. வாழ்க்கையை ஓட்டிப்புடுவேன்” என்ற வீரனின் இறுதி வார்த்தை மீனாளின் இதழ்களுக்குள் மறைந்தது.

அப்படியொரு வன்மை. வீரன் இதனை முற்றிலும் அவளிடம் எதிர்பார்க்கவில்லை. வீரன் தான் பிரித்து விலகுமாறு ஆனது.

“நீயி இப்படி பண்ணாக்கா… எப்புடிடி போறது?” இன்ப சலிப்பாக வினவினான்.

“போவாத மாமா” என்றவள், “அடிங்க” என்ற வீரனிடம் சிக்காது அறையை விட்டு வெளியேறியவளாக, “கடுங்காப்பி போடுறேன். கெளம்பி வா மாமா” என ஓடிவிட்டாள்.

“சேட்டை” என்று மனைவியை செல்லமாக வைய்தவன், அடுத்த சில நிமிடங்களில் தயாராகி வந்திருந்தான்.

பாண்டியன், மீனாட்சி மற்றும் அபியை எழுப்பி சொல்லியிருக்க அவர்களும் விழித்திருந்தனர்.

மருதன் முகம் வாட்டமாக இருந்தது.

“எய்யா வசந்தி ஏதும் வா துடுக்கா பேசிபுட்டான்னா, கோவப்பட்டுடாத சாமி. பொம்பளை புள்ளை வாழ்க்கை. பார்த்து பதுவிசா பேசிபோட்டு வாங்க” என்றார் மீனாட்சி.

அபியால் சுத்தமாக இதனை நம்ப முடியவில்லை. சுபாவும், கௌதமும் எப்படியென்று?

“அமிழ்தா?” அபி கலக்கமாக வீரனை விளித்திட…

“மாமாவுக்கு ஒரு சொல் வராம நான் பார்த்துகிடுதேன் ம்மா” என்றான். அவரின் கை பிடித்து.

“அதெல்லாம் எம் மவராசன் பார்த்துப்பான். நீயி கண்ணை தொட அபிராமி” என்ற மீனாட்சி, “பார்த்து சூதானமா வண்டி ஓட்டு அப்பு” என்றார் வீரனிடம்.

மீனாள் அனைவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

“விடிஞ்சதும் ஒரு எட்டு அம்மாகிட்ட சொல்லிப்புடு கண்ணு. நல்லா உறங்கிட்டு இருந்தாள். எழுப்ப வேணாமின்னு வந்துபுட்டேன்” என்றார் மருதன். மகளிடம்.

“சரிங்க ஐயா” என்ற மீனாள் வீரனுக்கு காபி கொடுக்க…

“என்னட்டி அப்படி பாக்குற? சுத்தி இருக்கவக அம்புடலையா?” என தம்ளரை கையில் எடுத்துக்கொண்டு வீரன் கேட்டான்.

அவன் ஒரு வாய் பருக…

“இந்த மெரூன் சட்டையில அம்சமா இருக்க மாமா. கடிச்சு திங்கணுமாட்டிக்கு தோணுது” என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு அவள் குனிந்து மெல்லொலியில் கிசுகிசுக்க… குடித்த காபி புரையேறியது அவனுக்கு.

“பார்த்து… பார்த்து குடி மாமா” என்று அவனின் தலையை தட்டிவிட்டவள், “ஒரு கடி கடிச்சிக்கவா மாமா?” என்று கண்ணடிக்க… குப்பென்று சிவந்து விட்ட முகத்தை மறைக்க வீரன் படாதபாடு பட்டுப்போனான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 40

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
39
+1
0
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

5 Comments

  1. கல்யாணத்துக்கு அப்புறம் லவ் பண்றாங்க மீனாவும் வீராவும் .. கௌதம் லவ் பண்றது நீங்க .. சேர்த்து வைக்க வீரா வேணுமா .. என்ன பஞ்சாயத்து நடக்க போகுதோ ..

  2. மீனாள் வேற லெவல்

  3. செம குறும்பு தங்கப்பொண்ணுக்கு……

  4. வீரன் விலகி விலகி போறதுக்கு தன் பேச்சு தான் காரணம்னு புரியாம சுத்தரா மீனாள்.

    பேச்சுக்கு கூட விட்டுட்டு போறேன்னு சொல்ல தோனக்கூடாதுனு நினைக்கிறான் வீரன்.

    கால்நடைகளின் புரிதலுடன் கூடிய அன்பு அருமை. கரியன் பாசம் வியக்க வைக்கிறது.

    மதினி என்டு மரியாதையா பேசணுமா மீனா? 🤣

    கயித்துக்கட்டில் காதல் பேச்சுக்கள் அழகு. 😍😍

    சின்ன சின்ன பிரிவுக்கு எல்லாம் சுணங்கிட்டு இருக்க முடியுமா மீனாள்?

    சுபா அப்பா சொத்து விபரம் தெரியவந்தால் கௌதம் சுபா கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்வார்களோ வசந்தியும் நல்லானும்.

    எல்லோருக்கும் எல்லாவற்றிக்கும் வீரன் உடன் வேண்டும்.

    கல்யாணத்திற்கு பிறகு வீட்டினரிடம் மீனாளின் உரிமை பேச்சு நன்றாக இருக்கிறது.