
யான் நீயே 27
மீனாளையே பார்த்து நின்றிருந்த வீரன் ஒரு பெரும் மூச்சோடு அவளுக்கு மறுபக்கம் சென்று படுத்த நொடி அவனது கையில் தலைவைத்து அவனோடு ஒட்டி படுத்தாள்.
“இதுக்கெல்லாம் அம்புட்டு நா காத்திருக்க முடியாது. வேணுன்னா நீங்க தள்ளி இருந்துக்கோங்க” என்றவள் தூங்க முற்பட வீரனின் கை அவள் மீது அணைவாக விழுந்தது.
“விசேசம் வரைலாம் நான் ரோசிக்கல மாமா” என்று கண்கள் மூடியபடி அவள் சொல்ல…
“என் தங்கப்பொண்ணுகூட வாழுற வாழ்க்கையை கனவுல வாழ்ந்து முடிச்சிட்டேண்டி” என்று அவளின் நெற்றி முட்டினான் வீரன்.
“அப்போ கனவுல கெழவன், கெழவி ஆகிப்புட்டோமா?” அவள் கிண்டலாக சிரிப்போடு வினவ,
“இம்புட்டு நா உன்னோட இந்த வா பேச்சைத்தேன் ரொம்ப மிஸ் பண்ணேன்” என்று தனக்குள் தன்னவளை இறுக்கிக் கொண்டான்.
என்ன பேசுகிறோமென்று தெரியாது பேசிக்கொண்டே இருந்தார்கள்.
‘ஸ்வீட் நத்திங்.’
அவர்களுக்குள் அர்த்தமற்று பேசவும், காதலாய் புரிந்து கொள்ளவும் நிறைய இருந்தது.
காட்டாத காதலையெல்லாம் மீனாளின் படிப்பு முடியும் வரை காதலர்களாய் காட்டிடலாம் என்று முடிவு செய்திருந்தனர்.
வீரன் தனக்காக யோசிக்கிறான் என்பதிலேயே அவன் மீதான மீனாளின் காதல் பல்கிப்பெருகியது.
எப்போது உறக்கம் அவர்களை தழுவியது என்று இருவருமே அறியார்.
வழக்கம்போல் அதிகாலையே கண் விழித்த வீரன், தன் மார்போடு ஒட்டியிருந்த தன்னவளின் முதுகு சூட்டினை உள்வாங்கியவனாக சில நிமிடங்கள் படுத்திருந்தான்.
பின்னர் மனைவியின் உச்சியில் முத்தம் வைத்தவன் கட்டிலிலிருந்து இறங்கிட…
“நெதம் இது வேணுமாட்டிக்கு” என்றாள் மீனாள். கண்கள் திறக்காது.
வீரன் சிரித்துக்கொண்டே குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
வீரன் வெளி வரும்போது மீனாள் அவனுக்கு சூடான தேநீரோடு நின்றிருந்தாள்.
“நீயி உறங்க வேண்டியதுதானே தங்கம். எனக்கு கொட்டா வேலை இருக்கு. அதுக்குள்ள பண்ணைக்கு ஒரு சுத்தும், ஆலைக்கு ஒரு சுத்தம் போயி வரணுமாட்டிக்கு” என்றவன், தேநீரை பருகினான்.
“இனிப்பு நிறைய இருக்குதுத்தா” என்றவன் ஒரே மூச்சில் குடித்து காலி குவளையை அவளின் கையில் கொடுத்தான்.
“வேற எடுத்துட்டு வந்திருப்பேல?”
“இருக்கட்டும். மொத மொத எம் பொண்டாட்டி எனக்காக போட்டது” என்றவன் கண்சிமிட்டி கீழே செல்ல அவளும் பின்னோடு வந்தாள்.
“அத்தை சமையல் வேலையில இருக்காங்க மாமா. உதவி செய்ய வேணாமா? கொட்டா கட்ட வரவுகளுக்கும் ஆக்கணுமே!” என்றாள்.
“பொறுப்பு கூடிப்போச்சு தங்கம் உனக்கு.” வீரன் சிரித்துக்கொண்டே சொல்ல…
“வீரனோட பொண்டாட்டிக்கு இந்தளவுக்கு கூட பொறுப்பு இல்லைன்னா எப்புடி? நான் ஆளுறதுக்கு எம்புட்டு இருக்கு!” என்றவள், படியில் சட்டென்று நின்று திரும்பி வீரன் பார்த்த சொக்கும் பார்வையில்…
“ஆத்தே!” என்று அலறியவளாக அவனை இடித்துக்கொண்டு கீழேயிறங்கி ஓடிவிட்டாள்.
“ராஸ்கல்… ஒத்த பார்வைக்கு மூச்சு முட்டுறா(ள்).” நினைத்த வீரனின் முகம் கனிந்து இருந்தது.
“பார்வையாலே கட்டிபுடிக்கிறாங்க. ஜாக்கிரதையா இருக்கணும்” என்று முணுமுணுத்தவளாக மீனாள் சமையலறைக்குள் புகுந்திட, எதிரே வந்த நாச்சியின் மீது இடித்துக்கொண்டாள்.
“அச்சோ மீனாள் பைய வர வேண்டியதுதானே?” என்ற நாச்சி “என்னட்டி நடந்துகிட்டே கனவா?” என்று கண்ணடிக்க…
“மதினி நீங்க வேற!” என்றவள் ஓடிவிட்டாள்.
அபிக்கு உதவியபடி மகாவும் சமையலில் ஈடுபட்டிருக்க…
“எப்போம்மா வந்தீய்ங்க?” என்ற மீனாள் அடுப்பு மேடையில் குதித்து அமர,
“இன்னும் சின்ன புள்ளைன்னு நெனப்பாக்கும். இறங்குடி” என்று அதட்டினார்.
“மகா புள்ளைய அதட்டுற சோலியெல்லாம் வேணாமாட்டிக்கு” என்று அங்கு வந்த மீனாட்சி,
“என் ராசா மொவமே எம் பேத்தி இந்த வூட்டுக்கு வந்த பொறவுதேன் மின்னுது” என்று மீனாளின் கன்னம் வழித்து நெட்டி முறித்தார்.
“ம்க்கும்… பவுசு மஞ்சு வாங்குது” என்ற மகாவுக்கும் மீனாட்சியின் இந்த பேச்சு… வசந்தி பேசியதற்கு ஆறுதலாக இருந்தது.
“சின்னக்குட்டி எங்கம்மா?”
“அவள் லிங்கு கூட புல்லு அறுக்க போயிருக்காள்” என்ற மகா, “சேலை கட்டாமல் இதென்னட்டி தாவணியே உடுத்தியிருக்க?” எனக் கேட்டார்.
“புடவை டக்குனு வணங்கலம்மா. பழகிடுதேன்” என்ற மீனாளிடம், “கொட்டா கட்ட ஆளுவ வந்தாச்சு மீனாள். அவீய்ங்களுக்கு இதை கொண்டு போய் கொடுத்துட்டு வா” என்று மோர் நிறைந்த குவளைகள் அடங்கிய தட்டினை நீட்டினார் அபி.
“காலை வெயிலுக்கு சுறுசுறுப்பா இருக்கும்” என்றார்.
நாச்சி வீரனிடம் பேசிக்கொண்டிருந்தாள்.
“மாமா நைட்டு கிளம்புதுண்ணே” என்று அவள் சொல்லும்போது அருகில் வந்த மருதன்…
“ரெண்டு நாளுல அவனை யாரு கெளம்ப சொன்னது? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல!” என்றவர், “பத்து நா செண்டு போவலாம் சொல்லு” என்றார்.
“மாமா அவுங்க வேலையை விட்டுட்டாங்க. நோட்டிஸ் பீரியடில் லீவ் கொடுக்கிறதே கஷ்டம். கல்யாணமின்னு மூணு நாளு லீவு கொடுத்தாய்ங்க. இன்னைக்கு மாமா போனாங்கன்னா ஒரு மாசத்துல மொத்தமா வந்துடுவாங்க” என்று நாச்சி விளக்கமாக, அதே சமயம் பிரேமை அவர் திட்டிவிடக் கூடாதென்று ஒரே மூச்சாக படபடப்போடு சொல்லியிருந்தாள்.
“ஏன் வேலையை விடுறானாம்?”
“அவுங்களுக்கு நம்மோட ஒண்ணா இருக்கத்தேன் விருப்பமாட்டிக்கு” என்று நாச்சி சொல்லிட, பிரேம் அங்கு வந்தான்.
“என்னடே புள்ள ஏதேதோ சொல்லுது?” எனக் கேட்டார் மகனிடம்.
“எனக்கு அம்புட்டு தூரத்துல இருக்கிறது புடிக்கலங்க ஐயா” என்றான் மருதன்.
“இத்தனை வருசம் இருந்தியேடே?” காரணமறிந்த போதிலும் நடந்த நிகழ்வை கொண்டு மகனை வார்த்தையால் கொட்டினார்.
“நடந்ததை பத்தி பேசுனுமாக்கும். அவெனுக்கு என்ன தோணுதோ செய்யட்டுமே மாமா! நாம எல்லாம் ஒட்டுக்கா இருக்க… அவென் மட்டும் ஒத்தையில நிப்பானாட்டிக்கு” என்ற வீரனின் பேச்சிற்கு பின் மருதன் வாய் திறக்கவில்லை. வேலை நடக்கும் இடத்திற்கு சென்றுவிட்டார்.
“கொஞ்சம் தின்க்ஸ் வாங்கணும் மாமா. மருதைக்கு அழகுவை கூட்டிட்டு போயிட்டு வந்துடுறேன்” என்று பிரேம் சொல்ல… வீரன் புன்னகையோடு நகர்ந்து விட்டான்.
தங்கையின் முகத்திலிருந்த ஒளியே வீரனுக்கு நிறைவாக இருந்தது.
அன்று பிரேம் தன் விருப்பத்தை தெரிவித்ததற்காக வீரன் குதித்த குதியென்ன? இன்று அவர்களின் திருமணம் நடந்ததற்கு முக்கிய காரணமே அவனல்லவா?
அன்றைய பிரேமின் செயலே வீரனை கோபம் கொள்ள வைத்தது. புரிந்த நாச்சிக்கு, வீரனின் அன்பு மனதை நெகிழ்த்தியது.
வீரன் வேலை நடக்கும் பின்கட்டிற்கு வர, மீனாள் அனைவருக்கும் மோர் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“ஐயா உங்களுக்கு?” என்றவள் மருதனிடமும் ஒரு குவளையை நீட்டிட வாங்கிக்கொண்டார்.
“சோலி சட்டுன்னு சுருக்க முடியனும் சாமிகண்ணு, கோவிந்தன் அண்ணேகிட்ட சொல்லிப்புடு!” என்ற வீரன், “பழைய கொட்டகையும் நீங்க கட்டினதுதேன். அதுக்கு தக்க மேல கட்டுங்க” என்றதோடு “அளந்தாச்சா?” என்று வினவினான். நாலு மூலைக்கும் சிறு கழியிட்டு கட்டியிருந்த சணலினை பார்த்தவாறு.
“ஆச்சு அமிழ்தா” என்ற சாமிகண்ணு, “மூணு அடி உசரம் போதுமில்ல?” என்க…
“போதுண்ணே… கம்பி தான் வைக்கப்போவுது, மேல கூடாரம் ஸ்டீல் ஷீட் தான். வலது பக்கம் தொட்டி கட்டு. தண்ணிக்கு, கழனி தண்ணிக்குன்னு தனித்தனியா… அது பக்கட்டு சின்னதா ரூம் வைச்சிடுங்க. பருத்திக்கொட்டை, புண்ணாக்கு மூட்டையெல்லாம் போடுற மாறி. இந்தப்பக்கட்டு நாலடியில மேடை கட்டிடுங்க… புல்லு, தக்கையெல்லாம் நறுக்க வசதிப்படும்” என்றவன், பக்க சுவரு முடிஞ்சதும் ஈரத்துலே கம்பி சுவரை பதிச்சிப்போடுங்க. மாடுங்க இடிச்சாலும் அசையக்கூடாது. உறுதியா நிக்கணம்” என்றான்.
வீரன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சொல்ல… அந்த வாயில்லா ஜீவன்களான கால்நடைகளின் மீது அவன் வைத்திருக்கும் அன்பு அலப்பரியதென்று மீனாளுக்கு புரிந்தது. அவனையே கண்ணெடுக்காது பார்த்திருந்தாள்.
“இதை முடிச்சிப்புட்டு… ஆட்டு பட்டியும் ரெண்டு நாலுல கட்டி கொடுத்திடுங்கண்ணே. மர வேலிலாம் வேணாமாட்டிக்கு. கம்பி கேட்டு ரெண்டுக்கும் செய்ய சொல்லியிருக்கு நாலு நாளுல வந்துப்புடும். கையோட முடிச்சிடுங்க” என்றவன் திரும்பிட மீனாளின் பார்வையில் சுண்டி இழுக்கப்பட்டான்.
“தங்கம்.” வீரன் உரக்க அழைக்கவே சுற்றம் உணர்ந்து வீட்டிற்குள் சென்றாள்.
“மாமாவை பக்கத்துல வச்சிக்கிட்டு என்ன சேட்டை பண்ணுறாள்” என்று முணுமுணுத்தவன், “இங்குட்டு வேலை முடியுற வரை ஆலையை நீயி பார்த்துக்க மாமா… அப்படியே சர்க்கரை ஆலை கட்டுறதுக்கு பூமி பூசை போட நா பார்த்திடு. ஐயாகிட்ட சொல்லியிருக்கேன். ரெண்டேறும் ஒரு எட்டு ஐயரை பார்த்துப்புடுங்க” என்றான்.
வீரன் சொல்லியதற்கு எதுவும் சொல்லாது அவர் அவனையே பார்த்தபடி இருக்க…
“என்ன மாமா?” என்று அவர் பக்கம் சென்றான்.
“ரொம்ப அலட்டிக்காதய்யா. பொறுமையா செய்யுவோம். எனக்கு இது குரு மூர்த்தி பார்த்த வேலையாத்தேன் இருக்குமின்னு தோணுது. அடிபட்ட பாம்பு அவென். நாம கொஞ்சம் நிதானிச்சு போவோம்” என்றார்.
“அவென் புள்ள பார்த்த சோலி இது” என்ற வீரன், கோகுல் மீனாளை மிரட்டினானென்று சொல்லாது தன்னிடம் பேசினானென கூறினான்.
“அப்பு…” அதனை கேட்டபடி வந்த பாண்டியன்… “நீயி சொல்லவேயில்லையே!” என்றார் அதிர்வாய்.
“அவென்லாம் ஒரு ஆளு. அவனை அன்னைக்கே முடிச்சிருக்கணும்” என்று கோபத்தோடு கூறிய வீரன் பெரியவர்கள் இருவரின் பார்வையிலும் தன்னை நிதானித்து, “மாட்டுவியான். பார்த்துக்கிடுறேன்” என்று வேட்டியை மடித்து கட்டியவனாக நகர்ந்தான்.
செல்லும் வீரனின் முதுகை வெறித்த இருவருக்குமே அவனின் மனம்… அதிலிருக்கும் எண்ணவோட்டம் பிடிபடவில்லை.
“ரொம்ப சூடாயிருக்கான் போலவே மாமா?”
“ஆனால் காட்டிக்கிடாம என்ன நேக்கா நடந்துக்கிறான் பாரு” என்று பாண்டியனின் கேள்வியில் மருமகனை மெச்சினார் மருதன்.
வீட்டிற்குள் வந்த வீரன் மனைவியைத் தேடிட… அவளோ மீனாட்சியுடன் அமர்ந்து கீரை பறித்துக்கொண்டே அவர் சொல்லும் கதையை கேட்டுக்கொண்டிருந்தாள்.
“அப்பத்தா” என்றவனின் குரலில் கதையை நிறுத்தி வீரனை பார்த்தவர், “என்ன அப்பு?” என்று வாஞ்சையாய் கேட்டிட…
“கருப்பசாமிக்கு படையல் போடணுத்தா. வெள்ளி வச்சிக்கிடலாமா?” எனக் கேட்டான்.
“நான் வூட்டு பொண்ணுங்களை கேட்டுகிட்டு சொல்லுதேன் ராசா” என்ற மீனாட்சி படியேறும் தன் பேரனையே பார்த்திருக்கும் மீனாளின் குமட்டில் இடித்தவராக…
“பார்வையிலே முழுங்கிடாதடி. கோவிலுக்கு போயிட்டு வர வரைக்கும் சுத்தபத்தமா இருக்கணும். கருப்புசாமி காவல் தெய்வம்” என்று எச்சரித்தார்.
“இப்போ என்னத்துக்கு அம்மத்தா படையல்? அதேன் இந்த வருச படையல் முடிஞ்சுதே?” என்றாள்.
அவர்கள் குல தெய்வம் மீனாட்சியாக இருந்தாலும், எல்லையில் ஊரை காக்கும் கருப்புசாமியின் மீது மீனாட்சியின் கணவருக்கு அதீத பற்று. அவர் எது தொடங்கும் முன்பும் கருப்பருக்கு படையலிட்டு தான் செய்வார். வருடா வருடம் தவறாது பொங்கல் வைத்து ஊரை கூட்டி படையல் வைத்திடுவார். அவர் இல்லையென்றாலும் அவரின் வழியை அவரது வாரிசுகள் பின்பற்றி வருகின்றனர்.
“நடக்கக்கூடாதது நடந்திருச்சு… மனசு வெசனம் போவ. அதுமட்டுமில்லமா ஆலை கட்ட பூமி பூசை போட நாள் பாக்கணுமின்னு அப்பு சொல்லுச்சுன்னு பாண்டியன் சொன்னான். அதுக்குத்தேன் பூசை” என்ற மீனாட்சி, “சொன்னது நெனப்பிருக்கட்டும். தள்ளியே இரு கண்ணு” என்று சொல்லிச்சென்றார்.
“நீயி சொல்லலைன்னாலும் தள்ளித்தான் இருப்பாய்ங்க உம் மவராசன்” என்று நொடித்துக்கொண்டு அறைக்குள் நுழைந்த மீனாளை தன் கைவளவிற்குள் சிறை பிடித்திருந்தான் வீரன்.
அறைக்குள் நுழைந்தவளை கதவிற்கு பின்னிருந்து இழுத்து அணைத்திருந்தான் வீரன்.
எதிர்பாராத இழுப்பில் மீனாள்,
“ஆத்தே” என்று கத்திட… கீழிருந்து முற்றத்திலிருந்த மீனாட்சி “கண்ணு” என்று குரல் கொடுத்தார்.
வீரனின் பிடியில் இருப்பதை உணர்ந்தவள்,
“ஒண்ணுமில்லை அம்மத்தா!” என்று தன்னை ஆசுவாசப்படுத்தினாள்.
“எதுக்கு மாமா பயம்முறுத்துறீங்க” என்று கேட்டவளிடம், “நம்ம ரூமில் என்னைத்தவிர வேற யாருடி உன்னை இப்படி இறுக்கி பிடிப்பாய்ங்க. இந்த கத்து கத்துற?” என்று அவளின் மூக்கின் நுனியை பற்கள் படாது கடித்திருந்தான்.
“அம்மத்தா தள்ளி இருக்க சொல்லியிருக்கு” என்றாள். சுரத்தே இல்லாது.
அவளின் இரு விழிகளையும் தன் கருவிழி அலைபாய சுட்டிக்காட்டியவன்,
“மாமா பக்கத்துல நிக்கும்போதே அந்த பார்வை பாக்குற… ராஸ்கல்… அப்புறம் இப்படித்தேன் பண்ணுவேன்” என்றவன், அவளின் கீழுதட்டை தன் பற்களால் இழுத்து விடுத்தான்.
வீரன் அவளை விட்டு விலக…
“இப்படியே இருந்தா என்னவாம்?” என்றாள்.
“படிக்கிற நெனப்பே இல்லையாடி?” என்று திரும்பியவன் தன் இடையில் கைகளைக் குற்றியவனாக,
“இதுக்குத்தேன் இப்போவே கல்யாணம் வேண்டாமின்னேன்!” என்றான்.
“இப்போ நானா மாமா கட்டிபுடிச்சேன், உதட்டை கடிச்சேன். செய்யுறதெல்லாம் செஞ்சிபுட்டு என்னைய குத்தம் சொல்ற?” என்று சட்டென்று கோபம் கொண்டவள், “லீவு முடிஞ்சி தான் என்னென்ன பாடமுன்னு தெரியும். படிக்க முடியும். கோல்ட் மெடலுக்கு இது தெரியாதாக்கும். ஆனாலும் ரொம்ப பண்ற மாமா நீயி” என்றதோடு, “இனிமேட்டு நீயி இந்த ரூமுக்குள்ள இருக்கும்போது நா வரமாட்டேன் போதுமா?” எனக் கேட்டு வேகமாக சென்றுவிட்டாள்.
“தங்கம்…”
“போடா!”
“என்னது?”
“அப்படித்தேன் சொல்லுவேன்” என்றவள் அவனின் சீண்டலில் துளிர்த்த கண்ணீரை துடைத்துக்கொண்டே கீழிறங்கி கூடத்திற்கு வந்தவள் எதிரே வந்த அபியிடம்…
“நான் எங்க ஐயா வூட்டுக்குப் போறேன்” என்று விசும்பினாள்.
“பார்த்தே பக்கட்டு இழுக்கிறா? பொறவு எல்லாம் நானே பண்ண மாறி என்னா கோவம் வருது!” என்று முணுமுணுத்தவன் மேலிருந்து எட்டிப்பார்க்க, மீனாள் அபியிடம் சொல்லியதைக் கேட்டு தலையில் கை வைத்துக் கொண்டான்.
“போச்சுடா!”
“சரித்தா போயிட்டு வெரசா வந்து சேரு” என்று அவர் உள்ளே செல்ல பார்க்க… அவருக்கு தான் சொல்லியது வேறு அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என்று உணர்ந்த பின் தான் உணர்ச்சிவசத்தில் தான் உலறியது விளங்கியது.
“ம்ப்ச்” என்று கால்களை உதறியவள் அங்கேயே தூனருகில் தரையில் அமர்ந்தவள் மேலே விழியுயர்த்தி பார்க்க வீரன் நின்றிருந்தான்.
“போடா” என்று உதடசைத்தவள் அவன் அசையா நிலையில் வேகமாக மாடியேறி வந்து அவனை அணைத்துக்கொண்டாள்.
“போடி” என்று உதறியவன் அறைக்குள் சென்றிட இவளோ விக்கித்து நின்றாள்.
“மாமா” என்று அவள் உள்ளே செல்ல அவனோ குளியலறைக்குள் புகுந்திருந்தான்.
வரட்டுமென்று அவள் காத்திருக்க…
கீழே மகாவின் அழைப்பு.
சலித்தவளாக கீழே சென்றவள் அவர்கள் சொல்லிய வேலைகளில் மூழ்கிப்போனாள்.
வேலை செய்யும் ஆட்களுக்கு காலை மற்றும் மதிய உணவு செய்ய வேண்டுமென்பதால் வீட்டு பெண்களுக்கு சமயலறையிலேயே நேரம் போனது.
வீரனுக்கும் அதன் பின்னர் மீனாளை பார்த்தாலும் பேசிட நேரம் அமையவில்லை.
காலை உணவுக்கு பின்னர் வீரன் அறைக்குள் செல்ல… தன்னை சமையல் வேலை உதவிக்கு பிடித்து வைத்திருந்த மகாவின் கண்ணில் படாது மாடியேறினாள்.
வீரன் சன்னல் திண்டில் அமர்ந்திருக்க…
“எதுக்கு மாமா எம் மூஞ்சியைக் கூட பார்க்காம சுத்திட்டு இருக்க? சாப்பாடு வைக்கும்போதுக்கூட நீயி என்னைய பாக்கல” என்றாள். வருத்தத்தோடு.
அந்நேரம் அலைப்பேசி அழைப்பு வர அவளையும் அவள் கேட்டதையும் கண்டு கொள்ளாதவன்,
“செத்த நேரம் சிலாத்தலா உட்கார வுடுறீங்களாடே?” என்று எதிர்முனையில் இருப்பவனிடம் பேசிக்கொண்டே சென்றுவிட்டான்.
வீரனின் உதாசினத்தில் மனம் வெதும்பிட, முட்டி நிற்கும் கண்ணீரை வெளிக்கொட்டிடாது அடக்கியவளாக கட்டிலில் உடலை சுருக்கி படுத்துவிட்டாள்.
****************
“ரிசல்ட் எப்போ சின்னக்குட்டி?”
“வரும் போது வரும் மாமா” என்று லிங்கத்தின் கேள்விக்கு பதில் சொன்னாலும் அங்கையின் கைகள் லாவகமாக வரப்பின் மீது வளர்ந்திருந்த புல்லினை அறுத்துக் கொண்டிருந்தது.
அவள் அறுக்கும் புல்லினை எல்லாம் நடுநடுவே அடுக்கி வைத்து கட்டியவன், தக்கைகளையும் வெட்டிக்கொண்டிருந்தான்.
“இன்னும் எம்புட்டு அறுக்கனும் மாமா? நேத்து அறுத்த தீனியே பாதி அப்படியே இருக்குன்னு அத்தை சொன்னாய்ங்க. நிறைய அறுத்து வச்சு காய்ஞ்சிப்போவுமே!” என்றாள்.
“இந்த வரப்பு மட்டும் முடிச்சுப்புடு. நான் இந்த சாறியை வெட்டிடுறேன்” என்ற லிங்கம், “மேல என்ன படிக்கலாமுன்னு இருக்க?” எனக் கேட்டதோடு,
“இப்போதைக்கு நம்ம வூட்டுலே அதிகம் படிச்சது அண்ணேதேன். மீனுக்குட்டி படிக்கிற வேகம் பார்த்தாக்கா, இன்னும் படிக்கும் போலிருக்கு. உனக்கும் ஏதும் இம்புட்டு படிக்கணுமின்னு ஆசை இருக்கா?” என்றான்.
“ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பண்ணிட்டு… ஹாஸ்பிடாலிட்டியில் ஹையர் கோர்ஸ் பண்ணனும் மாமா” என்றாள். எவ்வித யோசனையுமின்றி.
“ஏற்கனவே பிளான் பண்ணிட்டப்போல?”
“ஆமாம் மாமா.”
“அப்போ மார்க் கம்மியா வருமோ?” அவளை வம்பு செய்வதற்காக வினவினான்.
“முழு மார்க் வந்தாக்கூட இதேன்” என்றவள், “என் அறுப்பு முடிஞ்சுது” என்று வரப்பில் தளர்வாக அமர்ந்தாள்.
“ஏன்?”
“நீயேன் இந்தபடிப்பு படிச்ச?”
“நான் படிச்சேன்னு நீயும் படிக்கிறியாக்கும்?” முறைப்போடு கேட்டிருந்தான்.
“சொல்லு மாமா? நீயும் பன்னெண்டாப்புல அதிகமாத்தேனே மார்க் எடுத்த?” என சூடாகக் கேட்டாள்.
“நம்ம ஹோட்டல்ஸ்லாம் மேனேஜ் பண்ண… அந்த படிப்பு உதவுமின்னு படிச்சேன்.”
“அதேத்தான் எனக்கும்” என்றவள் “கல்யாணத்துக்கு பொறவு வூட்டுலேலாம் இருக்கமாட்டேன். நீயி சோலிக்கின்னு போனாலும், நானு உன்கூடவே இருக்கணுமாட்டிக்கு. இருவத்தி நாலு மணிநேரமும்” என்றாள்.
தக்கை வெட்டிக்கொண்டிருந்த லிங்கத்தின் கை ஒரு கணம் அப்படியே நின்று தொடர்ந்து.
“என்ன மாமா பதிலே காண்குல?”
அவள் கேட்டதுக்கு பதில் சொல்லாது வேறு பேசினான்.
“அறுத்தாச்சு” என்றவன் “சின்னதா இருக்க கட்டுவுல மட்டும் நீயி தூக்கு. மத்ததை நான் சுமந்துக்கிறேன்” என்றவன் தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து வட்டமாக சுருட்டி அவளின் தலையில் வைத்து புல்லு கட்டினை தூக்கி வைத்தான்.
“பைய்ய போவணும்” என்றவன் தன் தலையில் வைக்க கட்டினை தூக்க குனிய… அங்கை “மாமா” என்று விளித்திருந்தாள்.
“என்னடி?”
ஏற்கனவே அவள் சொல்லிய பதிலில் உள்ளுக்குள் திணறிக் கொண்டிருவனுக்கு, மொத்தமாகவே அவள் பக்கம் சரிந்திட்ட உணர்வு. சிறு பெண்ணிடம் தன் மனம் லயிக்கிறதே என்று தடுமாறிக் கொண்டிருப்பவனுக்கு அவளின் மாமா என்கிற விளிப்பு எரிச்சலையே அளித்தது.
அந்த அழைப்புத்தானே அவளிடம் அவனுக்கு இருக்கும் உரிமையை அடிக்கடி நினைவூட்டி அவள் பக்கம் ஈர்க்கிறது.
முகத்தில் எரிச்சலைக்காட்டது அவள் முன் சென்றவன் என்னவென்று கேட்டிட…
“பாவாடை கொலுசுல மாட்டி சிக்குது மாமா. கொஞ்சம் ஏத்தி குறுக்குல சொருகிவிடு” என்றாள். அவள் சாதாரணமாக சொல்லிவிட்டாள். அவனுக்குத்தான் குப்பென்று வியர்த்துவிட்டது.
தலைக்கு மேலிருந்த கட்டு கீழே விழாமலிருக்க இரு கைகளையும் உயர்த்தி அவள் பிடித்திருக்க… அவள் அணிந்திருந்த சட்டை வேறு சற்று மேலேறி அவளின் இடையை கீற்றாய் காட்டிக்கொண்டிருந்தது.
அவள் வேறு இப்படி சொல்லவும் அவனின் பார்வை அவளது இடையில் படிந்து சடுதியில் மீண்டது.
“என்னால முடியாது” என்றவன், “உன்னோட இம்சைடி” என்றவனாக அவளின் பாவடையை ஒரு பக்கமாக மேலேற்றி மின்னலென இடை சொருகி அவளின் முகம் பாராது சென்றிருந்தான்.
“உனக்கு உரிமை இருக்கு மாமா! இதுக்கே இம்புட்டு வெட்கப்படுற நீயி” என்றவள் அவனின் உணர்வுகளை உள்வாங்கியவளாக சிரித்துக்கொண்டே சொல்லிட…
அவளுக்கு முதுகுக்காட்டி சென்று கொண்டிருந்தவனின் இதழ்கள் நீண்டு விரிந்திருந்தன.
“லிங்கம்… அடக்கி வாசிடா! இப்போவே பித்து புடிக்க வைக்கிறா. உம் மனசும் அம்புட்டுச்சுன்னா உசுரை வாங்கிப்புடுவா. கல்யாணப்பேச்சு ஆரம்பிக்கும் வரைக்கும் இப்படியே மெயின்டெயின் பண்ணு” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவனாக அடுத்த அரை மணி நேரத்தில் தீவினங்களை மாந்தோப்பில் கட்டியிருக்கும் கால்நடைகளுக்கு சேர்பித்திருந்தான்.
ஒவ்வொரு மாடுகளுக்காக உணவினை போட்டுக்கொண்டிருந்தவனை அங்கிருந்த மாமரத்தண்டில் அமர்ந்து காலாட்டியவளாக ரசித்து பார்த்திருந்தாள்.
அவளின் குறுகுறு பார்வையின் தீண்டலை உணர்ந்தபோதும் தன்போக்கில் வேலை செய்து கொண்டிருந்தான்.
“உம் மனசுல நான் நுழைஞ்சிட்டேன்ல மாமா?”
அவளின் கேள்வியில் சட்டென்று தோன்றிய நடுக்கத்தை மறைத்தவனாக… “அப்படியெல்லாம் ஒன்னுமில்லையாட்டி. கண்டதை நெனைச்சிக்காத” என்றான்.
“இப்போ வரை நீயி என்ன திட்டவே இல்லை. இது வேணாம்… சின்னப்பொண்ணு அப்படின்னு மூச்சுக்கு முன்னூறு தடவை அட்வைஸ் பண்ற ஆளு, ஒருமுறை கூட இப்போ அப்படி சொல்லல… அப்போ நான் கேட்டது உண்மைதானே?” என்றாள்.
“மூக்கு கிட்டக்கவே காட்டினாலும் கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாத மாதிரி… உன்னைய எம்புட்டு வஞ்சினாலும் புரியாது. நாந்தேன் நொந்துப்போவனும். அதேன் கம்மின்னு இருக்கேன்” என்று சமாளித்தவனுக்கு, ‘இவளிடம் மனசை மறைப்பது சுளுவு இல்லை போலிருக்கே’ என்றிருந்தது. உள்ளுக்குள்.
“நானு இன்னும் வளருவேனா மாமா?”
அவளை திரும்பி பார்த்தவன், அவளின் முகத்திலிருக்கும் தீவிரம் கண்டு…
“இந்த ஒசத்திக்கு என்ன கொறைச்சலாம். இப்போவே மீனாக்குட்டிக்கு அக்கா மாறிதேன் இருக்க” என்றான்.
“நான் வெயிட்டுல கேட்கல?” என்று உதட்டை சுளித்தாள்.
“வேற என்னவாம்?” என்றவன், “சும்மா உட்கார்ந்திருந்தாக்கா இப்படித்தேன் தேவையில்லாம கேள்வி கேட்கத் தோணுமாட்டிக்கு. அங்கன அவுத்திக்கீரையை கட்டு கட்டா, ஆடுகளுக்கு முன்ன மரத்து கிளையில் கட்டித் தொங்கவுடு” என்றான்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு மாமா?” அடம் பிடித்தாள். சொல்லியே ஆக வேண்டுமென.
“போதுமாட்டிக்கு” என்றான்.
“உன் ஒசரத்துக்கு சரியா இருக்கும்ல?” என்று அவள் கேட்க, கையெடுத்து கும்பிட்டவன், “அப்படி கம்மியா இருந்தாலும் நான் என் குறுக்குல தூக்கி உட்கார்த்தி வச்சிக்கிறேன். பசி உசுரு போவுது தீனி போட்டுட்டு முன்ன வூட்டுக்கு போவணும்” என்றான். பாவமாக. என்ன சொல்கிறோமென்று அறியாமலே சொல்லியிருந்தான். சொல்லிவிட்டு வேலையில் கண்ணாகினான்.
அவன் கூறிய வார்த்தைகளில் புரிய வேண்டிய அவனின் மனம் அங்கைக்கு நன்கு புரிந்தது.
அந்நேரம் அங்கு வந்த மீனாட்சி…
“ரெண்டேறும் வூட்டுக்கு போயி வயித்தை நெறைங்க… இங்கட்டு நான் பார்த்துகிடுதேன்” என்றார்.
“சரி அப்பத்தா” என்ற லிங்கம் கிளம்பிட, அங்கையும் அவனுடன் சென்றாள்.
‘இதுங்க ரெண்டுக்கும் முடிச்சிட்டா என் கட்டை நிம்மதியா சாயும்’ என்று செல்லும் அவர்களின் பொருத்தத்தை கண்டு மனதோடு கூறிய மீனாட்சிக்கு மட்டுமல்ல… புதிதாக உணரும் காதலின் தித்திப்பில் திளைத்தபடி செல்லும் லிங்கத்திற்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அத்தனை எளிதாக அவர்களின் திருமணம் நடந்துவிடாது.
இப்போவே லிங்கத்தை தன் கணவனாக நினைத்து சுற்றி வரும் அங்கையே அவனை வேண்டாமென சொல்லவிருக்கிறாள். காதலில் இன்பம் மட்டுமில்லையே… வலியையும் சுமக்க வேண்டுமென்பது தானே நியதி. அவ்வலியை வலிக்க உணர இருக்கிறான் லிங்கம்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
44
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


எல்லோரிடமும் விளையாடிட்டு தான் மகிழ்ச்சி அவங்களுக்கு அப்படி தானேடா.
காதலாய் காலத்தை கடத்தி செல்கின்றனர் மீனாளும் வீரனும்.
“பவுசு மஞ்சு ஆகிப்போவுது” 🤔
மவுசு ஆகிப்போவதா?
அவளே அவன சீண்டிவிட்டு விளையாடறா, பிறகு அவளே அவன் மேல கோவிச்சுக்குறா.
சின்ன சின்ன முக சுருக்கத்துக்கெல்லாம் இப்படி அழுது வடிஞ்சா எப்படி?
வீரனோட பொண்டாட்டியோட வீரம் அம்புட்டுதானா?
சிறு பெண்ணின் மீது சலனம் கொள்கின்ற தவிப்பு லிங்கத்திடம் . அவனது மனதை அறிந்துகொண்ட உவகை அங்கையிடம்.
இவர்களது காதல் என்ன என்ன தடைகளை தகர்த்து வெற்றி பெறுமோ பார்ப்போம்.
Yen venam nu sola poraru lingam
எம்மா மீனா பிரச்சனையே இன்னும் தீரல .. இதுல அங்கை வேறயா .. பாவம் லிங்கம் கலகலன்னு இருக்கிற ஆளு ..
கல்விக்கு இங்கே கொடுக்கப்படும் முக்கியத்துவம் ரொம்பவே அருமை….