Loading

யான் நீயே 26

கண்கள் உடைப்பெடுக்கும் போலிருக்க… ஊருக்குள் சென்று வருகிறேனென சென்றிருந்த வீரனை வெகுவாக எதிர்பார்த்தாள் மீனாள். அவன் இன்னும் வந்தபாடில்லை.

மெத்தையில் சுருண்டு படுத்துக் கொண்டவளின் இதயம் நடுங்கிக் கொண்டிருந்தது.

யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை.

கூறினால் வீட்டிலோருப்போரின் கவலையை அதிகரித்தது போல் ஆகிவிடுமோ என்று அஞ்சினாள்.

அறையின் கதவு திறந்தேயிருக்க, இருளில் படுக்கையில் உடலினை குறுக்கி படுத்திருந்த மீனாளின் தோற்றம் வித்தியாசமாகத் தெரிந்தது.

அப்போது தான் மாடியேறி வந்த லிங்கத்திற்கு.

கதவில் கை வைத்தவன், “மீனாகுட்டி” என்றழைக்க. பதறி குதித்து எழுந்தமர்ந்தாள்.

“ஏய்… நான் தான். எதுக்கு இம்புட்டு அச்சம்?” எனக் கேட்டவன், அறைக்குள் சென்று விளக்கினை ஒளிரச் செய்தான்.

“என்ன பண்ணுது மீனு? முகமெல்லாம் வெளுத்த மாறியிருக்கு?” என்றவன் அவளின் நெற்றியில் கை வைத்து பார்த்தான்.

உடல் வெப்பநிலை சீராக இருந்தபோதும் அவள் சீராக இல்லையென்பது புரிந்தது.

“யாரும் ஏதும் சொன்னாய்ங்களா?”

மீனாளின் தலை இல்லையென மெல்ல அசைந்தது.

“பொறவு என்னத்துக்கு இம்புட்டு சோகம் மூஞ்சில” எனக் கேட்டான்.

மீனாள் அமைதியாக இருக்க…

“உன் அத்தை நடந்ததுக்கு உன்னைய காரணம் காட்டினதுக்கு வெசனப்படுறியாக்கும்?” என்றான்.

மீனாள் வாய் திறப்பதாக இல்லை.

“என்னன்னு சொன்னாத்தான தெரியும்த்தா” என்றவன், சட்டென்று வழிந்த அவளின் கண்ணீரில் பதறியவனாக அருகில் அமர்ந்து கண்ணீரை துடைத்து…

“என்னத்துக்குத்தா மருகிற? என்னான்னு சொன்னாக்கா சரி செய்யலாமில்லையா?” என்றான்.

மீனாள் தலை கவிழ்ந்து அழுதபடி இருக்க…

“ஒன்னும் சொல்ல வேணாமாட்டிக்கு. நீயி உறங்கு” என்றவன் அவளின் முகம் உயர்த்தி வாஞ்சையாக பார்வையை வீசிட…

“மாமா” என்று லிங்கத்தின் தோள் சாய்ந்தாள்.

“இப்போ என்னாச்சு? அண்ணே எல்லாத்தையும் சரி பண்ணிப்போடும். நீயி அழுதுகிட்டு இருக்கிறதுல அண்ணே மனசுதேன் வேதனப்படும்” என்றவன் மீனாளின் கையினை தட்டிக்கொடுத்தான்.

“சொல்லணும்… சொல்லாம இருக்கக்கூடாது” என்றவள், “எப்படி சொல்லன்னு தெரியலையே!” என்க…

“எல்லாரையும் மாதிரி வாவால தான் சொல்லணுமாட்டிக்கு” என்று வீரன் உள் நுழைய… இருவரின் நிலையிலும் மாற்றமில்லை.

அவர்களின் நிலை வீரனுக்கும் தவறாக தெரியவில்லை. தவறாக தெரிந்திடத்தான் முடியுமா? அவர்களின் ஒருவருக்குள் ஒருவருக்கான அந்நியோன்யம், உடன் வளர்ந்த அவனுக்கு தெரியாதா என்ன?

வீரன் இல்லாது மீனாளின் அருகில் அதுவும் இரவு நேரத்தில் தான் அமர்ந்திருக்கிறோம்… வீரன் வந்தால் என்கிற பயமோ பதற்றமோ இருவரிடமும் இல்லை.

அவர்களைப்பற்றிய புரிதல் வீரனுக்கு இருந்திடும் போது, இவர்களுக்கு வீரனிடத்தில் புரிதல் இருக்காதா என்ன?

வீரனை விடவே மீனாளுக்கு பிடித்தம் லிங்கத்திடம் தானே அதிகம். ஒட்டுதலும், நெருக்கமும் உறவை தாண்டிய உறவல்லவா!

யாரின் மனதிலும் சிறு கசடுமில்லை.

“என்னடே எம்புட்டு நேரமா அழுதுகிட்டு இருக்கா?” சட்டையை கழட்டி ஆங்கரில் மாட்டியபடி வீரன் லிங்கத்திடம் கேட்க,

“நீயி போனதுலேர்ந்தேன்னு நெனக்கேன்” என்றான்.

“ஹ்ம்ம்” என்ற வீரன், “என்னவாம் தங்கப்பொண்ணுக்கு?” எனக் கேட்க,

“நீயி பார்த்துகிடுண்ணே” என்ற லிங்கம் வீரனிடமாவது அவள் சொல்லுவாளென்று எழுந்து செல்ல முற்பட…

“நீயும் இரு மாமா” என்ற மீனாள் வீரனின் அலைப்பேசியை வீரனிடம் கொடுத்தாள்.

‘யாரோ போன் போட்டிருக்காய்ங்க!’ நொடியில் யூகித்து விட்டான்.

“யார் மிரட்டினது?”

கேட்ட வீரனை லிங்கம் அதிர்ச்சியாக நோக்கினான்.

“என்னண்ணே! யாரு மீனாளை மிரட்டபோறாய்ங்க?” எனக் கேட்டான் லிங்கம்.

“தொழுவத்தை பத்த வச்சவனா இருக்கணும்” என்ற வீரனின் பதிலில் லிங்கத்திற்கு அதிர்வு கூடியதென்றால், மீனாளுக்கு விழிகள் விரிந்தது. எப்படி தான் எதுவும் சொல்லாது சரியாக யூகிக்கிறானென்று.

“அப்போ யாரோ வேணுமின்னு செஞ்சிருக்காய்ங்களா?” லிங்கம் சந்தேகமாகக் கேட்டிட, வீரன் ஆமென்றான்.

நடந்த நிகழ்வு லிங்கத்தை எதுவும் சிந்திக்க விடவில்லை. ஆனால் வீரன் அனைத்தையும் நான்கு கோணங்களிலும் பார்ப்பவனாயிற்றே! தீயினை அணைத்து முடிப்பதற்குள் யாரோ வேண்டுமென செய்ததென்று கண்டுகொண்டான்.

“நெருப்பு பிடிச்சது விபத்தா இருந்தால்… வாத்துங்க எப்புடி சாவும்? அதுவும் எல்லாமே?” என்ற வீரன், “வாத்து குளத்தில் எவனோ விஷம் கலந்த புழு தீவினத்தை போட்டிருக்கான். ஆட்டு பட்டியையும் வேலியை திறக்க முடியாதளவுக்கு கம்பி வச்சி நெருக்கிருக்கான். தொழுவத்துல பெட்ரோல் வாசனை வந்தது” என்று விளக்கிய வீரன், “என்னோட கணிப்பு சரின்னக்கா… போன் போட்டது குரு மூர்த்தி இல்லன்னாக்கா கோகுல்” என்றான்.

“எப்படிண்ணே நாம இத்தனை பேர் இருந்தும் அவென் வந்திருக்க முடியுமா?” அப்போதும் லிங்கம் நம்ப முடியாது வினவினான்.

“அவன்னா… அவென் ஆளு யாராவதுடே. அதுவுமில்லாம கல்யாண வூடுடே… உறவுகாரங்க மாறி வந்திருக்கலாம். வூட்டுலையும் அலுப்புல எல்லாரும் சீக்கிரம் உறங்கியாச்சே” என்றான் வீரன்.

மீனாள் அதிர்ச்சி விலகாது எதுவும் சொல்லாதிருக்கவே கோகுல் தானென்று கணித்துவிட்டான்.

“என்ன சொன்னான்?”

வீரன் மீனாளின் பக்கம் அமர்ந்தான்.

வீரன் சென்ற சில நிமிடங்களில் அறைக்குள் வந்த மீனாள், அவனின் அலைப்பேசி விடாது ஒலிக்கவே யாரென்று எடுத்து பார்த்தாள். சேமிக்கப்படாத எண்ணாக இருக்க… முதலில் எடுக்காது விட்டாலும் தொடர்ந்து வரவே ஏற்றிருந்தாள்.

“கல்யாண வூடு கலை கட்டுது போலிருக்கே?” எடுத்ததும் திடும்பென ஒலித்த குரலே யாருடையதென்று மீனாளுக்கு காட்டிக்கொடுத்திட பயத்தில் “கோ…கு…ல்” என்று மெல்ல திணறலாய் மொழிந்திருந்தாள்.

“ஹேய்… மீனு! நீ எடுப்பன்னு எதிர்பார்க்கவே இல்லை. வாட் அ சர்ப்ரைஸ்” என்று அட்டகாசமாக சிரித்த கோகுல்… “அப்புறம் பர்ஸ்ட் நைட் எப்புடி போச்சு?” என்று சரசமாகக் கேட்டிட…

“ச்சீய்” என்றிருந்தாள் மீனாள்.

“அதான் நடக்கவுடாம பண்ணிப்போட்டனே” என்றவனின் பேச்சில் மீளா அதிர்விற்குள்ளானாள் மீனாள்.

“என்ன சொல்ற நீயி?” அதிர்ச்சியோடு வினவினாள்.

“ஹ்ம்ம்… நீயி எனக்குத்தான்னு சொல்றேன். உம்மேல ரொம்ப ஆசைப்பட்டுட்டேண்டி. அதுக்கு நீயும் உம் குடும்பமும் அவஸ்த்தைபடப்போறிங்க. எம்புட்டு தெனவு இருந்தாக்கா எம் அப்பனை ஸ்டேஷனுக்கு போவ வச்சு, என்னையும் அடிச்சிருப்பான். அதுக்கான சாம்பிள் தான் உன் வூட்டு ஆட்டு, மாட்டையெல்லாம் கதற வுட்டது. எல்லாம் சாம்பலா போகனுமின்னு பண்ணலடி. நேத்து உனக்கும் அவனுக்கும் நடக்க வேண்டியதை தடுக்கத்தான் அது. சும்மா மிரட்டதேன் பண்ணேன். வாத்துங்களை கூட கொல்ல நெனக்கலை… என்னை அடிச்சதுக்கு அதைக்கூட செய்யலன்னா எப்புடி?” என்றவன், “பச்சை பட்டுல அந்த மீனாட்சி அம்மன் மாதிரியே இருந்தடி. எம்புட்டு அழகு நீயி” என்று சொக்கும் குரலில் அவன் கூறிட, மீனாளுக்கு அறுவருத்துப்போனது.

“உன்னைய ரொம்ப நேசிக்கிறான் போல… கண்ணுல அம்புட்டு காதலு. பார்த்தேன்… நான் கட்ட வேண்டிய தாலியை அவென் கட்டுனதை. சும்மா விடமாட்டேண்டி. நீயி எனக்குத்தேன்” என்றவன், “அவன் சாவு என் கையிலதேன் சொல்லிப்புடு” என்றான்.

“அப்புறம் நீயி நெனைக்கலாம்… தினமுமா உங்க முதலிரவை தடுக்க முடியுமின்னு… ஆனால் நேத்து நடக்காம போனது ஆயுசுக்கும் மறக்காதுல?” என்றவன், “அவென் புள்ளை உம் வயித்துல வந்தாலும் நீயி எனக்குத்தேன்” என்று வெறி பிடித்தவனாக சிரித்தான்.

மீனாளுக்கு உடல் கூசியது. அவனது பேச்சில்.

‘இப்படியும் ஒருவனா?’ என்று.

கோகுல் இப்படி செய்யவில்லை என்றாலும் அவர்களுக்குள் நேற்று ஒன்றும் நடந்திருக்காது என்பதே உண்மை. அதற்கான விளக்கத்தை தான் வீரனால் மீனாளிடம் சொல்ல முடியாது போனது. நேற்றைய நிகழ்வால்.

மீனாள் சொல்லி முடிக்க லிங்கம் வேட்டியை மடித்துக் கட்டியவனாக,

“அவனை அன்னைக்கே சாவடிச்சிருக்கணுமிண்ணே. போனா போவுதுன்னு விட்டாக்கா என்ன செஞ்சு, என்னா பேச்சு பேசுறான். போயி வெட்டிப்போட்டு வந்துடுறேன்” என்று சீற, “லிங்கு” என்று அழுத்தமாக விளித்தான் வீரன்.

வீரனின் அந்த குரலை லிங்கத்தால் மட்டுமல்ல அவர்களது குடும்பத்தார் யாராலும் மீறிட முடியாதே!

“அவனை சும்மா வுட சொல்றியாண்ணே?”

“நாம ஒதுங்கிப்போவோம் சொல்றேன். மேற்கொண்டு என்ன செஞ்சிட முடியும் அவனால. இப்படி சில்லறைத்தனமா தான் ஏதும் பண்ணுவியான். பார்த்துகிடலாம். அவனைப்பத்தி ரோசிச்சு நீயி மண்டை சூடாகாதடே. பார்த்துக்கிடுவோம்!” என்ற வீரன், “உனக்குந்தேன். கண்டதை உருட்டாத” என்று மீனாளின் தலையில் வலிக்காது தட்டினான்.

லிங்கம் வீரனின் பேச்சுக்கு சரியென்றவனாக அங்கிருந்து வெளியேறினான்.

மீனாளிடம் ஆழ்ந்த அமைதி.

அன்றைய நாள் வீரனின் மனமும் வெகுவாக களைத்திருக்க… மீனாளின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான்.

தானாக மீனாளின் கரம் உயர்ந்து வீரனின் சிகை கோதியது.

வீரன் கண்களை மூடியிருந்தாலும் மீனாளை அவதானித்தபடி இருந்தான்.

“என்ன ரோசிக்கிற தங்கம்?”

“ஹான் ஒண்ணுமில்லை மாமா!” என்றவள், “என்னால எம்புட்டு சங்கடம்!” என்றாள்.

“புரியல?”

“இப்போ நடந்ததுலாம் என்னாலதானே? எம்புட்டு வாத்து. கரியனுக்கு கூட காயம். லிங்கு மாமாக்கும். ஆடு மாடெல்லாம் எம்புட்டு பயந்துச்சு. வசந்தி அத்தை கூட நான்தான் காரணமுங்கிற மாறி சொன்னாங்களே” என்றவள் மொத்தமாக தன்னை காரணம் காட்டினாள்.

“அந்த கோகுல் இம்புட்டு பண்ணுவான் நெனக்கலை. இப்பவும் அவென் காலேஜுல என்கிட்ட” என்று அதற்கு மேல் சொல்ல முடியாது அழுகையில் கரைந்தாள்.

“எல்லாம் என்னாலதேன். என்னால உனக்கு எப்பவும் கஷ்டந்தேன் மாமா” என்று அழுபவளை தேற்றும் வழி தெரியாது வீரனும் ஆயிரம் சாமதனாங்கள் செய்தான். அவளின் அரற்றலும் புலம்பலும் நிக்காது இருக்க…

சடுதியில் அவளின் இதழில் தன் இதழ் இணைத்து முத்தத்திற்குள் ஆழ்ந்தான். அவளையும் தன் அதரத்திற்குள் அமிழ்த்தியிருந்தான் அமிழ்திறைவன்.

இமை குடை விரிந்த அவளின் நயனங்கள், தன் அதிர்வை அவளவனின் விழித்திரையில் பிம்பமாய் கண்டது.

தொடங்கியவன் மென் சுவையில் கரைந்திட… அவனவளோ அவனின் ஒற்றை முத்தத்திற்கே துவண்டு கரைந்தாள். தானாக அவளின் கைகள் உயர்ந்து, ஒன்று அவனது பின்னந்தலையையும் மற்றொன்று அவனது பரந்த முதுகிலும் அழுத்தமாக பதிந்தது.

நிமிடங்கள் தொடர்ந்திட… இதழணைப்பு முடிவிலியாய் நீண்டது.

தொடக்கம் அவனதாக… நீட்டிப்பு அவளின் வதனம் சேர்ந்தது.

முத்தத்தில் உயிர் உருகி மெய் கரைந்தனர்.

“மீனாள்…” எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போல் குரல் மீண்டும் மீண்டும் கேட்டது

கீழிருந்து ஒலித்த அபியின் குரலில் அவள் பிரிய முயல… அவன் விடாது அடம் பிடித்தான்.

வீரனின் மார்பில் கை வைத்து தள்ளியவள், தனது நுதலை அவனின் பற்களின் பிடியிலிருந்து இழுத்து விடுத்துக்கொண்டாள்.

வீரன் அவளின் கரம் பிடிக்க…

“மாமா அத்தை கூப்பிடுறாய்ங்க” என்றாள். குரலில் சிணுங்கள் மிச்சமிருந்தன.

“அடியேய் முகத்திலிருக்கும் முடியை ஒதுக்கிட்டு போடி” என்றவன் சொல்லியதை செய்துமிருந்தான்.

கீழே சென்றவள் இரண்டு நிமிடங்களில் மேலேறி வர,

“என்ன தங்கம் போனதும் வர, எதுக்கு கூப்பிட்டாய்ங்க?” என்றான் வீரன்.

“சாப்பிடக் கூப்பிடுறாய்ங்க மாமா!” மீனாள் சொல்ல வீரன் சன்னல் பக்கம் சென்று நின்றான். அவனின் பார்வை எரிந்து கருமை படர்ந்து கிடந்த இடத்தை வெறித்தது.

“மதியமே நீயி சாப்புடலன்னு யாரும் சாப்பிடல மாமா. அம்மத்தாலாம் பட்டினி கிடந்தால் உடம்பு என்னத்துக்கு ஆவும். ரெண்டு வா உண்கு மாமா” என்றழைத்தாள்.

ஒருவழியாக குடும்பத்தினரை காரணம் காட்டி வீரனை உணவு உண்ண அழைத்து வந்திருந்தாள் மீனாள்.

“வாப்பு” என்ற மீனாட்சி அவனுக்கு உணவு பரிமாற முன்வர,

“பொழுதுக்கும் யாரும் சாப்பிடலதானே? இப்போவே மணி பத்துக்கு மேல ஆவுது. எல்லாரும் உட்காருங்க. ஒட்டுக்கா சாப்பிடலாம்” என்றவனின் பேச்சினை மீற முடியாது அனைவரும் அமர வீரனே உணவினை எடுத்து வைத்தான்.

“நான் வைக்கிறேன் அமிழ்தா” என்ற அபிக்கும் தட்டு வைத்து உணவினை வைத்தவன் “சாப்பிடுங்க” என்றான்.

மீனாள் அவனை பார்க்க…

“சாப்புடு தங்கம்” என்று பார்வையாலே அதட்டினான்.

“நீயி சாப்பிடலையாண்ணே?” லிங்கம் கேட்டிட… “சாப்பிடுறேன்” என்றவன் தனக்கும் தட்டு வைத்திட… வெளியே வாகன சத்தம் கேட்டது.

“நான் பாக்குறேன்” என்று பாண்டியன் எழ,

அவரின் கை பிடித்து தடுத்த வீரன்,

“பாதி சாப்பாட்டுல எங்கன போறீங்க? உட்காருங்க. நான் பாக்குறேன்” என்றவன், “எல்லாரும் சாப்பிட்டுதேன் எழணும்” என்று அடர்த்தியாய் சொல்லி செல்ல… அவனது பேச்சினை மீறிடுவார்களா என்ன?

செங்கல், மணல், சிமெண்ட், கம்பிகள் என் கொட்டகை அமைப்பதற்கான மூலப்பொருட்கள் யாவும் லாரியில் வந்திருந்தன.

“எங்கண்ணே எறக்கட்டும்?” வண்டியிலிருந்த ஒருவன் கேட்டிட,

“வண்டியை இந்த பக்கட்டு வழியா கொஞ்சம் உள்ளுக்க கொண்டு வாங்க” என்று கை காண்பித்த வீரன் முன்னே சென்றான்.

“இங்கவாண்ணே?”

“ஹான்… இங்குட்டுதேன். எறக்குங்க” என்ற வீரன், “மொத்தமா நான் கேட்ட சரக்கு கொண்டாந்துட்டிங்கல?” எனக் கேட்டான்.

“ஆமாண்ணே… மொத்தமா இருக்கு” என்றவன் தன்னுடன் வந்த ஆட்கள் இருவருடன் பொருட்களை இறக்க ஆரம்பித்துவிட்டான்.

டிரைவர் குடிக்க தண்ணீர் கேட்டிட உள்ளே சென்ற வீரன், “செங்கல் எல்லாம் வந்திருக்குங்க ஐயா” என்றவனாக சொம்பு நீரை கையிலெடுத்தவாறு “சாப்பிட்டுபோட்டு கருப்பட்டி பானம் கலந்தெடுத்தாம்மா. நாலு பேரு இருக்காய்ங்க” என்று சென்றான்.

சிறிது நேரத்தில் பானகத்தோடு வந்த லிங்கம்…

“நீயி போயி சாப்பிடுண்ணே. நான் பார்த்துக்கிறேன்” என்க, “நேரமாவுதுல, சுவரை இடிச்சது. இடத்தை சுத்தம் பண்ணதுன்னு உடம்பு வலியா இருக்கும். போயி உறங்கு” என்றான்.

“ஏன் உனக்கு வலியா இருக்காதா?” எனக் கேட்ட லிங்கம், வீரன் பார்த்த பார்வையில் பேசாது சென்றுவிட்டான்.

“அமிழ்தனை சாப்பிட சொல்லத்தான?”

“ம்க்கும்… அதை சொல்லித்தேன் வாங்கிக்கட்டிட்டு வந்திருக்கேன். போங்க போயி எல்லாரும் உறங்குங்க. அவரு எல்லாருக்கும் பாப்பாராம். நாம அவருக்குன்னு ரோசிக்க கூடாது. ஒத்த பார்வையாலே அதட்டுறது. இதுக்கு வஞ்சிட்டாலும் தேவல” என்று பாண்டியனிடம் பொருமியவன், “தூங்கபோங்க… பொறவு அதுக்கும் வந்து கடிவாரு” என்று மாடியேறிவிட்டான்.

“இனி அந்த இடம் பழையபடி மாறும் வரை அவன் அவனா இருக்கமாட்டியான். போங்க… போயி படுங்க” என்ற பாண்டியன் பெரிய மகனின் பிடிவாதம் அறிந்தவராக ஒரு பெரு மூச்சுடன் “நான் மாந்தோப்பு போறேன். மாமாவையும், பிரேமையும் வூட்டுக்கு அனுப்பனும்” என்று சென்றுவிட்டார்.

“வந்தவனுவ செத்த நேரம் செண்டு வந்திருக்கக்கூடாது!” அபி அங்காலாய்ப்பாக தன் மாமியாரிடம் சொல்லிட…

மீனாட்சி “நீயி போத்தா” என்றார் மீனாளை.

“இருக்கட்டும் அம்மத்தா. மாமா வரட்டும். இன்னும் சாப்பிடலையே!” என்றவளின் பார்வை வாயிலிலே படிந்திருந்தது.

அவளின் மனம் அறிந்தவர்கள் இளையவர்களுக்கு மத்தியில் நாமெதற்கு அதிகப்படியென நினைத்து…

“அப்போ நான் போயி குறுக்க சாய்க்கிறேன்” என்று மீனாட்சி எழுந்து சென்றிட…

“நானும் போற(ன்)த்தா. மாடுக பின்னால அலைஞ்சது அசதியா இருக்குமாட்டிக்கு. உடம்பு நோவுது. அவென் சாப்பிட்டதும் எல்லாம் அங்கனவே இருக்கட்டும். காலையில பார்த்துகிடுதேன். நீயி எடுத்து வைக்கிறேன்னு அல்லாடாத” என்றவராக அறைக்குள் சென்று முடங்கிவிட்டார் அபிராமி.

வெளியில் சென்று திண்ணையில் நின்று மீனாள் எட்டிப்பார்க்க…

வீரன் அலைப்பேசியில் பேசியபடி, இறக்கும் பொருட்களை சரி பார்த்துக்கொண்டிருந்தான்.

செங்கலே அப்போதுதான் இறக்கி முடித்திருக்க… மற்றவை அடுக்கிட இன்னும் அரைமணி நேரமாவது ஆகுமென நினைத்தவள் உள்ளே வந்து… சத்தத்தை குறைத்து வைத்து டிவி முன்பு அமர்ந்துவிட்டாள்.

வீரன் எல்லாம் சரிபார்த்து கணக்கு முடித்து வர, வீடே இருட்டில் இருந்தது.

வெளிக்கதவை அடைத்துவிட்டு உள் வந்தவன் பார்த்தது, தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்க, நீண்ட மர இருக்கையில் சம்மணமிட்டு அதன் பிடியில் கை முட்டி வைத்து கன்னம் தாங்கி உறங்கி அமர்ந்திருந்த மீனாளைத்தான்.

அவள் முன் வந்து ஆழ்ந்து பார்த்தவனுக்கு, சிறிது நேரமே என்றாலும் தனக்காக காத்திருப்பவளின் காத்திருப்பு அதிகம் பிடித்தது. அக்கணம் இனிமையாய்.

அலைபேசியை எடுத்து அவளின் நிலையை பதிவு செய்தவன், தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அவளின் உறக்கம் கலையாது தூக்கிக்கொண்டு மாடியேறினான்.

தன்னவனை உணர்ந்து வாகாக அவனின் மார்பில் தலை வைத்தவள், “சாப்பிடலையா மாமா?” என்று உளறலாகக் கேட்க, அவனோ அவளின் நெற்றியில் இதழ் ஒற்றினான்.

படுக்கையில் படுக்க வைத்தவன் குளியலறைக்குள் புகுந்திட… கதவு திறந்து மூடிய சத்தத்தில் படக்கென விழித்தவள், தான் அறையில் இருப்பதை அறிந்து…

“உறங்கிட்டனோ?” என்றவளாக, வீரன் தான் தூக்கி வந்திருப்பான் என உதட்டில் பூத்த புன்னகையோடு கீழே சென்று கிண்ணத்தில் உணவு வைத்து எடுத்து வந்தாள்.

“முழிச்சிட்டியா?” என்று கேட்டபடி வீரன் தலையில் நீர் சொட்ட வர,

“இந்நேரத்துல தலைக்கு எதுக்கு தண்ணீய ஊத்துனீங்க?” என்று அருகில் சென்றவள், “தோளில் தான் துண்டு கிடக்கே” என்று பூந்துவாலையை எடுத்து அவனின் தலை துடைத்துவிட முயல உயரம் போதவில்லை.

“மண்ணு, செங்கலுன்னு மேலலாம் புழுதி தங்கம். அதேன் குளியல போட்டேன்” என்று அவன் பதில் சொல்லும்போதே…

வேகமாக கட்டிலுக்கு அருகில் கூட்டி வந்து நிறுத்தியவள், மெத்தை மீதேறி நின்று அவனின் தலையை துவட்டிவிட வீரன் சத்தமாக சிரித்துவிட்டான்.

“இப்போ எதுக்கு மாமா இம்புட்டு சிரிப்பு உனக்கு?” என்று கோபமாகக் கேட்டவள் துவட்டி முடித்து நகர, அவள் அசைய முடியதவாறு இறுக்கி அணைத்திருந்தான்.

வீரனின் முகம் மீனாளின் இதயத்தில் புதைந்தது.

இன்ப அவஸ்த்தையானாள்.

“நீயி குட்டியா இருக்கிறது ரொம்ப பிடிச்சிருக்கு தங்கம். எப்புடி எனக்குள்ள அடங்கியிருக்க பாரு” என்று அவன் சொல்ல, வீரனின் உச்சியில் நாடி பதித்திருந்தவள்… “நீயி என்னத்துக்கு இம்புட்டு ஒசரம் வளர்ந்த மாமா? எனக்கு கீழ நின்னா உன் நெத்தியே எட்டல” என்று அழகாகக் குறைபாட்டாள்.

“இதுக்கென்னத்துக்கு வெசனம்… உனக்கு எப்போலாம் என் நெத்தியில முத்து கொடுக்க விருப்பமோ சொல்லு நான் உன்னைய தூக்கிக்கிறேன்” என்று நிமிர்ந்தவன் தன் முகம் பார்த்து தாழ்ந்திருந்த மீனாளின் நெற்றி முட்டி விலகினான்.

“இது நல்லாதானே இருந்துச்சு.” மீனாள் மெல்ல முணுமுணுத்தது அவனுக்கும் கேட்டது.

“எம்புட்டு நேரம் தலை தாழ்த்தி நிப்ப? கழுத்து நோவாதா?” என்றவன் அவளை பார்த்தவாறு சன்னல் திண்டில் சென்று அமர்ந்தான்.

அவனின் பார்வை வெளியில் பதிய…

கட்டிலிலிருந்து குதித்து இறங்கியவளின் சத்தத்தில் திரும்பியவன்,

அவளின் சிறு பிள்ளை செயலை கண்டு சிரித்தவனாக மீண்டும் வெளியில் பார்த்தான்.

தண்ணீர் மற்றும் கிண்ணத்தோடு அவனின் முன் அமர்ந்தவள்,

“இன்னமும் என்னத்துக்கு வருத்தம் மாமா?” எனக் கேட்டவாறு உணவை அள்ளி கையினை அவன் வாயருகே நீட்டினாள்.

“ரொம்ப லேட்டாச்சே தங்கம் இப்போ எப்படி உண்குறது?” வீரனுக்கு வாயில்லா ஜீவன்கள் கதறிய ஓலத்தில் பசியென்பதே மரத்திருந்தது. நினைக்க நினைக்க நெஞ்சம் கனத்தது.

“நீயி இப்படி சொல்லுவன்னு தெரியும். அதேன் வாழைப்பழம் கலந்து பால் சோறு கொண்டாந்தேன். எதுவும் காரணம் சொல்லாம வா தொற மாமா” என்றவளிடம் அதற்கு மேல் அவனால் மறுக்க முடியவில்லை.

“நாயென்ன குழந்தையா?” அவள் கையிலிருக்கும் கிண்ணத்தை பார்த்து வினவியபடி அவள் ஊட்டிய உணவினை மென்றான்.

“உனக்கு இது புடிக்கும் எனக்கு தெரியும் மாமா. இப்பவும் பண்ணைக்கு காவலுக்கு நிக்கிற நேரம் நீயி இதான் சாப்பிடுவன்னும் தெரியும்” என்றவள் கிண்ணத்தை காலியாக்கிய பின்னரே எழுந்தாள்.

மீனாள் கை கழுவி வர,

“நம்மளை பார்த்தாக்கா வருச கணக்கா பேசாம வீம்பு புடிச்சிக்கிட்டு திரிஞ்ச மாறியே தெரியல!” என்றான்.

“நாந்தேன் வீம்பு புடிச்சு இருந்தேன். நீயி எப்பவும் என்கிட்ட பேசிக்கிட்டுதேன இருந்த? நான் தான் தேவையில்லாட்டு உன்னைய கஷ்டப்படுத்திப்புட்டேன். இப்பவும் கஷட்படுத்திக்கிட்டு இருக்கேன்” என்றவளின் குரல் நொடியில் கலங்கியிருந்தது.

தனக்கு முன் நின்றிருந்தவளை சுண்டி இழுத்தவன் தன் மடியில் அமர்த்தியிருந்தான். வீரனின் ஒரு கை வலது பக்கமிருந்து அவளின் கழுத்தை சுற்றியவாறு தன்னோடு அழுத்தியவனாக அவளின் இடது பக்க தோளில் பதிந்திருக்க… மற்றொரு கரத்தினை அவளின் கரத்தோடு கோர்த்திருந்தான்.

“பழசு நெனப்பே உனக்கு வேண்டாமாட்டிக்கு தங்கம். மறந்துபோடு. இந்த ரெண்டு நா என்னவேணாலும் நடந்திருக்கட்டும். நீயி என் பக்கட்டு இருக்கிறது அம்புட்டு நிம்மதியா, சந்தோஷமா இருக்குது” என்றவன் அவளின் வெற்று தோளில் தன் முகம் பதித்து அவள் வாசம் நுகர்ந்தான்.

“மாமா…” அவனின் பின் சாய்ந்தவள் மெல்ல இமை மூடியிருந்தாள்.

தலையை பின்னுயர்த்தி தன் மார்பில் பதிந்திருந்த தன்னவளின் சிவந்த முகம் அவனை கட்டி இழுத்திட… அவளின் உதட்டில் தன் உதட்டை பொருத்த முயன்ற கணம் தன்னுடைய கட்டுப்பாடுகள் நினைவிற்கு வர, அவளின் கன்னத்தில் கடித்தவனாக, அவளோடு சேர்ந்து சன்னல் திண்டிலிருந்து இறங்கியிருந்தான்.

சட்டென அறுந்த உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவர முடியாதவள் தவிப்போடு அவன் முகம் பார்க்க…

“உன் படிப்பு முடியட்டும் தங்கம்” என்றவன் திரும்பி படுக்கையை நோக்கி நகர…

“யோவ் மாமா நில்லு” என்றிருந்தாள்.

“யோவ்வா?” என்று அதிர்வோடு திரும்பியவன்,

“தங்கம்…” என்றான்.

“தங்கத்துக்கு என்னவாம்” என்றவள் அவன் முன் வந்து உரசி நிற்க… வீரன் இரண்டடி பின் நகர, அவளும் பிடிவாதமாக அவனை ஒட்டி முன் நகர்ந்தாள்.

“ம்ப்ச்… என்னட்டி?”

மீனாளின் படிப்பு முடிந்துதான் திருமணமென்று உறுதியாக இருந்தான். சந்தர்ப்ப சூழ்நிலையால் அது முறியடிக்கப்பட்டிருக்க… தங்களுக்குள் மற்றதெல்லாம் அவளின் படிப்பு முடிந்த பின்னர் என்பதில் தெளிவாக முடிவெடுத்திருந்தான்.

அவள் முன் அவனுடைய முடிவு தன் கட்டுப்பாட்டை இழந்தாலும் முயன்று இழுத்துப்பிடித்துக் கொண்டிருக்கிறான். அதனை அவள் சோதித்தாள் அவனும் என்னதான் செய்வான்.

“அது மூணு மணி நேரத்துக்கு முன்ன உதட்டுல கிஸ் அடிக்கும்போது ரோசிச்சிருக்கணும். கொஞ்ச முன்னுக்க இங்கன கட்டிபிடிச்சிக்கிட்டு நின்னப்ப ரோசிச்சிருக்கணும். செத்த முன்ன கட்டிக்கிட்டு மடியில் வச்சு கொஞ்சுனப்போ ரோசிச்சிருக்கணும். இப்போ வந்து இப்படி சொன்னா என்ன அர்த்தம்?” என்றாள். அவனின் கால் மீது ஏறி நின்று கழுத்தை சுற்றி தன்னிரு கைகளையும் மாலையாய் கோர்த்து பிடித்தவளாக.

“வேண்டாமா?” என்று கரகரப்பான குரலில் இமைகள் படபடக்க அவன் கண் பார்த்து வினவ…

அவளுக்கு இணையாக கையிட்டு அணைப்பில் அழுத்தம் கூட்டியவன்,

“மொத்தமும் மிட்சமில்லாம வேணும்” என்றதோடு, “இந்த சூழ்நிலையில் இல்லை. உன்கிட்ட பேசிட்டு இருந்தாலும், மண்டைக்குள்ள பலதும் ஓடுது. அது எதுவுமில்லாம நீ நான்னு மட்டும் இருக்கும்போது தானா நடக்கணும்” என்றிருந்தான்.

மீனாள் தன்னிலை மாற்றமில்லாது இருக்க…

“சுகர் பேக்டரி வேலை தொடங்கணும், உன் படிப்பு முடியணும்” என்றவன், “படிக்கும்போது… ம்ப்ச்” என்று தடுமாறியவனாக “இப்போ ஆரம்பிச்சு அப்பப்போ தள்ளி நிற்க முடியாது தங்கம். நடுவுல ஏதும் விசேஷமாகிப்போட்டா… எப்புடி காலேஜ் போவ? புரிஞ்சிக்கோயேன்” என்றான்.

அவனையே சில கணங்கள் ஆழ்ந்து நோக்கியவள், “சரி மாமா” என்றவளாக அவன் கால் மீதிருந்து இறங்கி கட்டிலில் சென்று படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 44

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
44
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. லிங்கம் மற்றும் மீனாளின் ஒட்டுதல் அருமை. 😍

    அவர்களது அன்பின் செயல்பாடுகளை நன்கு புரிந்து கொண்டவனாக வீரனும், தங்களது நேசத்தை புரிந்து கொண்டவனை நன்கு அறிந்தவர்களாக மீனாளும், லிங்கமும்.

    இருவரது நெருக்கத்தையும் இயல்பாக எடுத்துக்கொள்ளும் புரிந்துணர்வு வீரனிடம்.

    ஒரு விடயத்தின் அனைத்துக் கோணத்தையும் அலசி ஆராயும் பக்குவம் உள்ளது வீரனிடம்.

    கோபப்பட்டு மீண்டும் கோகுலை சீண்டி விடாமல் இப்போதைக்கு ஆகும் காரியங்களை பார்த்துக்கொள்ள எண்ணுகின்றனர்.

    மீனாளின் படிப்பு காரணம் அவன் தன்னை கட்டுபடுத்திக்கொண்டு இருந்தால், இவள் அவனை சீண்டுகிறாள்.

  2. ஒரு அழகான குடும்பம் .. லிங்கம் மீனா பாண்டிங் சூப்பர் ..