
யான் நீயே 25
அறையின் உட்பக்கமாக சன்னலில் திண்ணை போன்ற அமைப்பு இருக்க அதில் வீரன் கால்களை தரையில் பதித்து அமர, மீனாள் அவன் புறமாக பார்த்து திண்டு சுவற்றில் சாய்ந்தவளாக கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்தாள்.
சில்லென்ற குளிர் காற்று தேகம் தீண்டிட… வீரன் கரம் தன்னவளின் பாதம் தொட்டது.
சன்னலுக்கு வெளிப்புறம் ரசித்திட, கருமை, நிலவு, நட்சத்திரம், மின்மினி என இயற்கையின் அழகு ஏராளம் இருக்க…
மீனாள் வீரனையே பார்த்திருந்தாள்.
“பார்வையெல்லாம் பலமா இருக்கே!”
“அழகா இருக்க மாமா!”
“சைட் அடிக்கிறியா?”
“அப்படியும் வச்சிக்கலாம்.”
வீரன் இதழ் நீண்டு விரிந்தது.
“ரெண்டு மூணு நாளா ரொம்ப அழகா சிரிக்கிற மாமா.”
“என் தங்கப்பொண்ணு நான் வேணுமின்னு சொன்னாளே! அதனால இருக்குமாட்டிக்கு.”
வீரனின் பேச்சில் நாணம் அழையா விருந்தாளியாக முகத்தில் ஒட்டிக்கொள்ள, முகத்தை திருப்பிக்கொண்டாள்.
எளிமையான புடவையிலும் ஒப்பணைகளின்றி அவனின் கண்களுக்கு பாந்தமாக மிளிர்ந்தாள்.
இரவு நேரமென்பதால் அவனுமே எப்போதும் உடுத்தும், வேட்டி, டி சர்ட்டில் தான் இருந்தான்.
“என்னாலதேன் இம்புட்டு அமைதியாகிட்டியா தங்கம்?”
அந்த நிகழ்வுக்கு முன்பு வரை துறுதுறுவென ஓடியாடி… கலகலத்து வம்பிழுத்து பேசும் மீனாளின் அமைதி அவனுக்கு பல நாள் தன்னால் தானோ என்று தவிக்க வைத்திருக்க… இன்று தான் கேட்கும் சூழல் கிட்டியது.
“சொல்லிட முடியாது மாமா. மேல் படிப்பு. ஏறுற வயசு. அந்தநாள் உன்னுடைய வார்த்தையில ஒரு பக்குவம் தானா வந்திடுச்சு. அமைதியாகிட்டேன்” என்றாள்.
“எல்லாம் முடிஞ்சிபோனது மாமா. இனி நமக்குள்ள அதெல்லாம் வேணாமாட்டிக்கு. ஒண்ணாகிட்டோம். சந்தோஷமா இருப்போம் மாமா” என்றாள்.
அள்ளி அணைத்திட துடித்த கைகளை அடக்கிட கோர்த்துக்கொண்டான்.
இருவருக்குமே இத்தனை வருடம் விலகியிருந்த ஒதுக்கம் சிறிதுமின்றி தங்களது இணையின் இருப்பை இலகுவாகவே உணர்ந்தனர். பேச்சுக்களும் இயல்பாகவே வந்திட, என்ன பேசுவதென்று தான் தெரியவில்லை.
என்ன தான் மனம் முழுக்க ஒருவரையொருவர் அளவுக்கு அதிகமாக சுமந்து நின்றாலும், அன்றைய இரவின் தனிமை அவர்களின் பேச்சுக்களுக்கு தடுமாற்றத்தை கொடுத்தது.
அமைதியாக இருந்திட அர்த்தமற்று பேசி சிரித்தனர். அதுவும் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது.
மீனாள் கால்களைக் கட்டிக்கொண்டு பக்க சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்திருக்க… அவளின் பாத விரல்கள் வீரனின் தொடையை தொட்டும் தொடாதும் பதிந்திருந்தது.
மருதாணியிட்ட கால்கள் அவனை ரசனையாக கவனிக்க வைத்தது. மெட்டி போடும் போது முத்தமிடத் தூண்டிய ஆவல் இப்போதும்.
“இங்குட்டு இப்போ ஒன்னும் நடக்கப்போறதில்லை” என்று சொல்லிவிட்டு எப்படி முத்தமிடுவது என்று உள்ளுக்குள் எழுந்த பெரும் தவிப்பை தனக்குள் அடக்கியவன், அவளின் பாதத்தின் மீது தன் உள்ளங்கை வைத்தான்.
“மாமா…” மீனாளின் குரல் காற்றாகியது.
அவனின் தொடுகை இது முதலல்ல… இன்று ஏனோ மின்னல் பாயும் வேளை உயிரில் குளர்ச்சியாய் ஒன்று இறங்கியது.
“மருதாணி எப்பவும் வச்சிக்கோ தங்கம்” என்றவன் அவளின் பாதத்தினை மெல்ல விரல் கொண்டு வருடினான். அவனின் பார்வையில் அத்தனை ரசனை.
விரல் தீண்டலுக்கே உணர்வு பிரவாகத்தில் மூச்சு முட்டியவள் இமை மூடிட, அவளின் முகம் அவனுக்கு வேறு கதை பேசியது.
பட்டென்று தன் நெற்றியில் தட்டிக்கொண்டவன், ‘இதுக்குத்தான் இப்போ கல்யாணம் வேண்டாமின்னேன்’ என்று மனதிற்குள் தன்னையே நிந்தித்தான்.
மீனாளுக்கு படிப்பென்பது பெரும் கனவு. அது தங்களின் திருமணத்தால் தடைப்பட்டுவிடக் கூடாதென்கிற எண்ணம் வீரனுக்கு.
“தங்கம்.”
“ஹான்… மாமா… என்ன மாமா?”
தன்னை மீட்டவன், அவளை மீட்டிட சத்தமிட்டிருந்தான்.
எங்கோ அவனுள் கட்டுண்டிருந்தவள் பதறி விழி திறந்திருந்தாள்.
“ஹேய்… எதுக்கு இம்புட்டு பதட்டம்?” என்றவன், “தண்ணீ குடி மொத” என்று எழுந்து சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.
சிறிதளவு குடித்தவள் அவனின் முகத்தை ஆராய்வாக பார்த்தாள்.
“என்னவாம்? என்ன கேக்குணுமாட்டிக்கு?” என்றவன் குவளையை சென்று எடுத்த இடத்தில் வைத்துவிட்டு வந்து மீண்டும் அவளருகில் அமர்ந்தான்.
“கல்யாணம் ஏன் மாமா வேணாமின்னு சொன்ன மாமா?”
“இன்னும் ஒரு வருச படிப்பிருக்கே தங்கம். அதை ரோசிச்சு சொன்னேன். அதிவுமில்லாட்டி, எவனுக்கோ பயந்துகிட்டு அவசரவசரமா பண்ணனுமான்னு ரோசனை” என்றான். அவள் கேட்டதும் யோசிக்காது எவ்வித தடுமாற்றமுமின்றி அவன் சொன்னதிலே அதுதான் உண்மை காரணமென்பது அவளுக்கு விளங்கியது.
“இன்னும் அந்த மணடைக்குள்ள உருட்டிக்கிட்டு அலை மோதுற கேள்வி இருந்தாக்கா கேட்டுப்புடு தங்கம். இன்னொருவாட்டி ரெண்டேருக்கும் இடையில மன வருத்தம் வந்து தள்ளி இருக்கிறதெல்லாம் ஆவாத காரியம்” என்றான்.
“போட்டோ…?” அதனை எப்படி கேட்பதென்று தெரியாது இழுத்தாள்.
“சிலது நமக்குன்னு… நமக்கே நமக்குன்னு இருக்குணுமாட்டி. அதை நாலு பேருக்கு காட்சியாக்க எனக்கு விருப்பமில்லை” என்றான்.
“இப்போ உன்னைய கட்டிக்க சொல்றியா? கட்டிக்கிடுறேன். பொறத்தால இருந்து புடிச்சிக்க சொல்றியா? புடிச்சிக்கிறேன். உன்னையவே பார்க்கணுமா? பார்க்குறேன். கன்னத்துல என்ன? வேறெங்க முத்தம் வேணுமின்னாலும் சொல்லு கொடுக்கிறேன். இதெல்லாம் நீயி கேட்டு நான் செய்யணும். இல்லாட்டி எனக்கா தோணி நான் செய்யணும். போட்டோவுக்காக அவனுங்க செய்யுன்னா செய்ய முடியாது” என்றான்.
வீரன் என்னவோ அவள் கேட்ட கேள்விக்கு விளக்கமாக பதில் கொடுப்பதாக நினைத்து சொல்ல… மீனாள் அவனது பேச்சிலும் பார்வையிலும் தவித்துப் போனாள்.
“மாமா…”
“வருத்தப்பட்டியாக்கும்?” அவளின் நிலை அறிந்தும், கண்டுகொள்ளாதவனாக வினவினான்.
மீனாள் பதில் சொல்லும் நிலையில் இல்லை.
அவளின் படிப்பினை கருதி அவன் வேண்டுமானால் உணர்வுகளை அடக்கி திடமாக இருக்கலாம்.
ஆனால் அவளோ அவன் காட்டும் சிறு சிறு காதல் பேச்சிலும் அவனால ஈர்க்கப்பட்டாள். இழுக்கப்பட்டாள்.
“வேணுமின்னா இப்போ எடுத்துப்போம்” என்றவன், மேசையிலிருந்த தன்னுடைய அலைப்பேசியை எட்டி எடுத்து, இருவரும் காமிராவில் தெரியுமாறு உயர்த்தி பிடிக்க… அவனின் தோளில் இரு கரத்தினையும் கோர்த்து வைத்து அவன் முகம் பார்க்க நெருங்கியவள், பட்டென்று அவனது கன்னத்தில் முத்தம் வைக்க அவன் விரல் காட்சியை பதிவு செய்திருந்தது.
கண்கள் மூடி அவனது கன்னத்தில் இதழ் பதித்தபடியே மீனாள் உறை நிலையில் ஆழ்ந்திருக்க…
அலைப்பேசியை பிடித்தவாறு அதில் பதிவாகிய காட்சியை பார்த்தபடி தன்னவளின் மென் இதழ்களின் குளுமையை உள்வாங்கியவனின் கட்டுப்பாடுகள் எல்லாம் தகர்க்கப்பட்டது.
வீரனது தோளில் பதிந்திருந்த மீனாளின் கரங்களில் ஒன்று அவனது பிடரியில் நுழைய மற்றொரு கரம் அவனது மறு கன்னத்தில் பதிந்து அவனின் முகம் திருப்பியது. அவளுக்கு வாகாக. அவனுமே தன் தடைகள் உடைத்து அவளின் கரங்களில் தன்னை ஒப்புவித்தான். மீனாளின் அதரங்கள் அவளவனின் முகத்தில் ஊர்வலம் செய்திட… வீரனின் இமை குடைகள் கவிழ்ந்தன.
அக்கணம்,
திடீரென ஒலித்த மாடுகளின் சத்தமும்… சன்னல் உயரத்திற்கு கொழுந்துவிட்டு எரிந்த தணலும்… இருவரின் உறை நிலையை மீட்டிருந்தது.
“மாமா… தீ” என்று பதறியவள் சன்னல் வழி எட்டிப்பார்க்க…
“கட்டுத்தறி தீ பிடிச்சிருக்கு மாமா” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்பு வேட்டியை மடித்து கட்டியவனாக, கதவினை திறந்து கொண்டு மூன்று மூன்று படிகளாக தாவி இறங்கியவன் தொழுவம் நோக்கி ஓடினான்.
மாடுகள், ஆடுகள் அனைத்தும் நெருப்பில்… கட்டியிருந்த கயிற்றில் நகர முடியாது முட்டி மோதிக் கொண்டிருந்தன.
வீரனின் பின்னாலே மீனாள் வந்திருக்க…
“எப்படி மாமா பத்துச்சு” என்றவளிடம், “மோட்டார போடு. அந்த பைப்பை கிணத்து குழாயில் சொருகி நெருப்புல நீரை விசுரு” என்று சொல்லிக்கொண்டே ஓடியவன், ஆடுகளிருந்த பட்டியின் வேலியினை காலால் உதைத்து சரித்திருக்க, ஆடுகள் யாவும் அலைமோதி வெளி வந்தன.
உறங்கியிருந்ததால் நான்கு கால் உயிரினங்களின் அலறல் சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்து வந்து பார்த்தவர்களுக்கு உயிர் வற்றிப்போனது.
“அய்யோ… எஞ்சாமிங்க” என்று மீனாட்சி நெஞ்சில் அடித்துக்கொள்ள…
அங்கு அதிர்ந்து நின்றிருந்த லிங்கத்திடம்…
“என்னடே பார்த்துகிட்டு நிக்க? கயித்த அத்து வுடு” என்றான் வீரன்.
வீரன் ஒருபக்கம் மாடுகளின் கயிற்றை அறுத்துவிட, லிங்கம் ஒரு பக்கமென அறுத்துவிட்டுக் கொண்டு வந்தான்.
மீனாளிடமிருந்த குழாயினை வாங்கி பாண்டியன் தீயில் காட்டிட, அபிராமி தண்ணீரை வாளியில மொண்டு விசிறி அடித்தார். சுந்தரேசன் மற்றொரு பக்கம் குழாயினை இழுத்து வந்து காட்டிட… தீயின் போக்கு மட்டுப்படுவதாக இல்லை. வைக்கோல் கட்டுகள் ஆங்காங்கே இருந்ததால் நன்கு கொழுந்து விட்டு எரிந்தது.
வீட்டின் முன்னிருக்கும் களத்தில் கயிற்று கட்டிலில் படுத்திருந்த மருதன், இனம் புரியா ஒலியில் உறக்கம் கலைந்து எழ, தென்னந்தோப்பு கடந்து தெரிந்த புகை மண்டலத்தில் பதறியடித்து வந்திருந்தார்.
“என்னாச்சு?”
“தெரியலையே அப்பு. எப்புடி என்னான்னு அம்புடலையே!” மீனாட்சியின் கதறல் அதிகமாக, மருதனும் களத்தில் இறங்கினார்.
அவிழ்த்த மாடுகளை கரியன் வெளியில் செல்லும் வகையில் முட்டித் தள்ளிக்கொண்டிருந்தது.
மேலெரிந்து கொண்டிருந்த மர சாரம் வீரனின் மேல் விழயிருக்க கரியன் வேகமாக வந்து வீரனை எதிர்பக்கம் தள்ளியது. சாரம் கரியனின் திமிலில் பட்டு கீழே விழுந்தது.
“அப்பு அமிழ்தா?” பெரியவர்கள் பார்த்த நிகழ்வில் பதறி அழைக்க…
“கரியா!” வீரனின் குரல் கரகரப்பாக எதிரொலித்தது.
மாடுகள் அனைத்தும் வெளியேறியிருக்க… லிங்கம் வீரனிடம் வந்து அவனை ஆராய்ந்தான்.
தொழுவம் முழுவதும் பற்றியிருக்க… தீயினை அணைக்க கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலானது.
“எனக்கு ஒன்னுமில்லைடே” என்ற வீரன் லிங்கத்தின் கையில் பட்டுவிட்ட காயத்தினை கண்டுவிட்டு “என்னடே?” என்று கடிந்தான்.
“சின்னது தாண்ணே… நெருப்பு பொறி பட்டிடுச்சு” என்றான். அதற்குள் மீனாள் மருந்தினை கொண்டு வந்து லிங்கத்தின் கையில் தடவிவிட… வீரன் கரியனிடம் சென்றான்.
பெரியவர்கள் நால்வரும் விலங்குகளுக்கு தண்ணீர் காட்டிக்கொண்டிருந்தனர். கத்திய கத்தலில் அனைத்தும் களைத்து போயிருந்தன. கன்றுகள் யாவும் தரையில் மடங்கி சுருண்டிருந்தன. ஆடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன. இன்னமும் விடாது கத்தின.
பார்க்கும் காட்சி நெஞ்சை பதைபதைக்க வைத்தது.
“கரியா!” வீரன் கரியனின் முகத்தினை தடவி கொடுத்தவனாக திமிலினை ஆராய்ந்தான்.
“ஒண்ணுமாவலையே மாமா?” லிங்கத்திற்கு மருந்தினை பூசிவிட்டு வீரனிடம் வந்த மீனாள் கேட்டிருந்தாள். கரியனின் நெற்றியில் கை வைத்தாள். அழுத்தமாக.
“லேசா தோல் உராய்ஞ்சிருக்கு. நாலு நாளில் சரியாப்போவும்” என்ற வீரன் கரியனின் காயத்தில் வேப்பெண்ணெய் பூசினான்.
கரியன் மட்டும் வீரனை சரியாக தள்ளிவிடாது இருந்திருந்தால் நினைக்கவே பயந்தவளாக, வீரனின் புஜத்தினை இறுகப் பற்றிக்கொண்டாள்.
“தங்கம்… நான் நல்லாயிருக்கேன்” என்றவன், அவளின் கண்ணில் கண்டுவிட்ட நீரில் பதற்றம் கொண்டான்.
“அழுவாதடி எனக்கு ஒன்னுமாவல.”
“நீயி…” என்றவள் ஒன்றும் சொல்லமுடியாது அனைவரையும் மறந்தவளாக வீரனை வயிற்றோடு கட்டிக்கொண்டு மார்பில் தலை முட்டி விசும்பினாள்.
லிங்கம் கண்டும் காணாதவனாக பெரியவர்கள் இருக்கும் பக்கம் நகர்ந்திட்டான்.
“எல்லாம் நல்லாயிருக்குங்களா?” லிங்கம் கேட்டிட, “அஞ்சி கிடக்குதுங்க?” என்ற மீனாட்சி, “தீ எப்புடி புடிச்சிருக்கும்?” என்று சந்தேகமாகக் கேட்டார்.
“காலையிலதேன் ஆராயணும்” என்ற லிங்கம், “வாத்து குளம் போயி பார்த்தீங்களா யாரும்?” எனக் கேட்டவனாக அங்கு செல்ல… கண்ட காட்சி இதயத்தை நடுங்க வைத்திட…
“அண்ணே” என்று உரக்க கத்தியவனாக சரிவில் இறங்கியவன் தடுமாறி உருண்டோடி குளத்தில் விழுந்ததோடு, இறந்து கிடந்த வாத்துகளை கையிலெடுத்தவனாக கதறினான்.
**********************
வீட்டின் பின் கட்டில் ஆளுக்கு ஒரு மூளையாக அனைவரும் இடிந்து போயி அமர்ந்திருந்தனர்.
எப்போதும் கோவிலுக்குள் நுழைந்தது போல் அத்தனை நிம்மதியை கொடுக்கும் அவ்விடம்… இன்று அதன் தன்மையை இழந்து தீக்கு இரையாகி கருமை பூசி காணப்பட்டது.
பாண்டியன் மற்றும் மருதனின் இல்லம் ஊர் பகுதியிலிருந்து தள்ளி பண்ணையில் இருப்பதால், இரவின் அவலம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. விடிந்த பின்னரே செய்தி அறிந்து ஒவ்வொருவராக வந்து நலம் விசாரித்துச் சென்றனர்.
வாத்தோடு போனதே என்றிருந்தது. வந்து சென்றவர்களுக்கு.
ஆனால் வீட்டினருக்கு… அவையும் அவ்வீட்டின் அங்கத்தினராயிற்றே.
அதிகாலை வாசல் தெளிக்க வெளிவந்த மகா, கணவரை காணாது தேடிட… தன் பிறந்த வீட்டின் பக்கம் மெல்லிய புகை வந்து கொண்டிருக்க… கையிலிருந்த வாலியை அப்படியே போட்டுவிட்டு…
“பிரேம்” என்று கத்தியபடி பதறியடித்துக் கொண்டு அங்கு வந்தார்.
அன்னையின் சத்தத்தில் வெளிவந்த பிரேம் என்னவென்று மாடியிலிருந்து பார்த்திட… கண்ட காட்சி பதைபதைப்பை அளிக்க நாச்சியை எழுப்பி விரைந்து அங்கு வந்தான்.
மகா கத்தியபடி மார்பில் அடித்துக்கொண்டு ஓடுவதை அப்போது தான் எழுந்து வெளியில் வந்த அங்கையும், சுபாவும் என்னவென்று புரியாது மகாவின் பின் ஓடினர்.
“ஆத்தே… எஞ்சாமிங்க குடியிருந்த கோயிலாச்சே இது” என்று வெடித்து அழுத மகா, இரவே ஏன் அழைக்கவில்லை என்று கோபம் கொண்டார்.
பிரேமும் நாச்சியும் கண்ணீரோடு நிற்க, மீனாள் நாச்சியை அணைத்துக்கொண்டாள்.
இறந்து கிடக்கும் வாத்துக்களை பார்த்தவாறு வீரன் இறுகி நின்றிருக்க, அவனருகில் செல்லவே அனைவருக்கும் அச்சமாக இருந்தது.
அங்கை லிங்கத்திடம் சென்று…
“எல்லாம் செத்துப்போச்சுதா மாமா?” எனக்கேட்டு விசும்பிட லிங்கத்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
கௌதம், கௌசிக் கூட வந்து விட்டனர்.
யாருக்கு யார் தேறுதல் சொல்வதென்றே தெரியாது ஆளுக்கு ஓரிடமாக அமர்ந்திருக்க… முதல் நாள் தான் இரண்டு கல்யாணம் நடந்த வீடென்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.
குட்டி வாத்துக்களும் இறந்து கிடக்க… அதனை கையிலெடுத்த அங்கை, முகத்தில் வைத்துக்கொண்டு கதறிட,
அனைவரின் கண்களிலும் நின்றிருந்த கண்ணீர் மீண்டும் உடைபெடுத்தது.
“எம்புட்டு நேரம் இப்படியே இருக்க அமிழ்தா? ஆவதை பார்ப்போம்.”
எது ஒன்றென்றாலும் அனைத்துக்கும் முன்னின்று வழிநடத்தும் வீரன், இன்று அமைதியாய் இருந்திட அடுத்து செய்யவேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாக நினைத்த மருதன் ஆக வேண்டியதை பார்த்தார்.
“வாத்துக்களை புதைக்கணுமே அயித்த… நம்ம கிணத்தடியில புதைச்சு வாழையை நட்டுப்புடலாமா?” என மீனாட்சியிடம் கேட்டார்.
அப்போதுதான் மெல்ல அசைந்து கணவனுடன் வந்த வசந்தி, அங்கிருந்த கோலம் கண்டு…
“மொத்தமா சாம்பலாகிப்போச்சா?” எனக்கேட்டு வருத்தப்படுவதைப்போல் உச்சுக்கொட்டினார்.
யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை.
“நல்லவேளை என் குடும்பம் தப்பிச்சுது!” என்ற வசந்தி அனைவரின் பார்வையிலும் தன்னை நிதானித்து,
“காலடி வச்சு வந்தன்னைக்கே வூட்டை பத்தவச்சி பார்த்துப்புட்டாள். அமிழ்தன் மேல சாரம் விழ பார்த்துச்சாமே… எந்த சாமி புண்ணியமோ தப்பிச்சிருக்கான். தாலி கட்டி கூட்டி வந்த நேரம் நல்ல நேரந்தானா? இல்லை அவளுக்கு ஏதும் தோஷமிருக்கான்னு ஜாதகத்தை எதுக்கும் பாருங்க. அவசரத்துல ஏற்பாடு பண்ண கல்யாணம் தானே” என்று நீட்டி முழக்க…
மீனாளின் கண்ணில் நீர் திரண்டது. உதடு துடிக்க நின்றிருந்தாள். நாச்சி ஆதரவாக கரம் பற்றிக்கொண்டாள். சுபா அவளின் மற்றைய பக்கம் அணைவாக நின்றாள்.
“நிறுத்துறீங்களா?” என்று வீரன் கத்திய கணம், தன் கொண்டையை முடிந்தவராக ஆவேசமாக எழுந்து வசந்தியின் பக்கம் சென்ற மீனாட்சி…
“அவள் எம் வூட்டு மீனாட்சிடி. அவ நேரத்தாலதேன் அதிக சேதமில்லாம வாத்தோடு போச்சு. உன் கருப்பு எண்ணத்தை வேறெங்காச்சும் கொண்டு போயி வச்சிக்க” என்றார்.
“இந்த முடிஞ்சி விடுற சோலியெல்லாம் இங்கன வேண்டாம் க்கா. இப்படியொரு எண்ணத்தை வச்சிக்கிட்டு இனி எம் வூட்டு படியை மிதிக்காதீங்க.” அபிராமியே கோபம் கொண்டு வெடித்திருந்தார்.
“கூட பொறந்த பொறப்புக்காக கம்மின்னு இருக்கேன்” என்று மருதன் சொல்லிட…
“என்ன மச்சான் பேசுறீங்க” என்று நல்லான் அப்போது வாய் திறந்திட,
இதற்கு மேல் அன்னையை இங்கு விட்டு வைத்தால் உறவையே முறிக்க வைத்திடுவாரென்று நினைத்த கௌதம்…
“வந்த வேலை முடிஞ்சுதுல கிளம்புங்க!” என்று பத்து நிமிடத்தில் தாய் தந்தையை விரட்டி ஊருக்கு கிளம்பிவிட்டான்.
புறப்படும் போது அவன் மட்டுமே கௌசிக்குடன் வந்து அனைவரிடமும் தன் தாயின் பேச்சுக்கு மன்னிப்பு வேண்டி விடைபெற்றான்.
“நீயி அழுவாத கண்ணு… மனசு சுத்தமில்லாத பேச்செல்லாம் கண்டுக்கக்கூடாது” என்று மீனாட்சி மீனாளின் கண்களை துடைத்துவிட, அபிராமி தன் மடி சாய்த்துக்கொண்டார்.
அடுத்து மருதனும் பாண்டியனும் வயல்வெளியில் இருக்கும் அவர்களது கிணற்றடியில் வாத்துக்களை புதைத்துவிட்டு… அவ்விடத்தில் வாழை கன்றுகளை நட்டு திரும்பி வந்தனர்.
“வெசனம் தான். அதுக்குன்னு எம்புட்டு நேரம் இப்படியே மருகி உட்கார்ந்திருக்க… டேய் லிங்கு எழுந்திரு… ஹோட்டலுக்கு இன்னும் போவாம இருக்க? உச்சி வெயில் கடக்குது பாரு” என்று அவனை விரட்டிய பாண்டியன், “எல்லாரும் எழுந்து குளிச்சிப்போட்டு சோலியை பாருங்க என்றார்.
எரிந்து கிடந்த தொழுவம் நெஞ்சத்தை உலுக்கிட பாண்டியன் அப்பக்கமே பாராது வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
எப்படியிருந்த இடம் அது?
“குளிச்சிப்போட்டு மொத மீனாட்சிக்கு ஒரு பூஜையை போடு அபி” என்ற மீனாட்சி, பிரேம் நாச்சியின் தோற்றம் கண்டு “நீங்க ரெண்டேறும் என்னத்துக்கு பராக்கு பார்த்திட்டு இருக்கீய்ங்க? ஏய் மகா கூட்டிட்டு போ. ஆக வேண்டியதை பாரு” என்று விரட்டினார்.
முகத்தை துடைத்துக்கொண்டு எழுந்த மகா, அபியின் கைகளைப்பற்றிக்கொண்டு…
“உனக்கும் வசந்தி பேச்சில்…” என்று ஆரம்பிக்க…
“நான் தூக்கி வளர்த்த பொண்ணு மதினி அவள். ஒத்த வார்த்தை சொல்ல ஆவுமா? ஏதோ நடக்கணுமின்னு இருந்திருக்கு நடந்துப்போச்சு. அதுக்கு நம்ம புள்ளைய நாமே காரணம் காட்டுறதா? வெசனமே உனக்கு வேணாமாட்டி. எதையும் நெனக்காம வூட்டுக்கு போ” என்று அனைவரும் தங்களின் வருத்தத்தை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு மாற்றி மாற்றி ஆறுதல் அளித்துக்கொண்டனர்.
மகா பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு தன் வீடு செல்ல… அபி மீனாளுக்கு வீரனை கண் காட்டிவிட்டு உள் சென்றார்.
வீரன் தன்னிலையில் மாற்றமில்லாது உடல் விறைத்து இறுகி அங்கிருந்த கல்லில் அமர்ந்திருக்க, அவனருகில் செல்லவே அஞ்சியவளாக அடி வைத்து சென்ற மீனாள் அவன் முன் தரையில் முட்டியிட்டு அமர்ந்து வீரனின் கரத்தினை பிடித்து “மாமா” என்று அழைத்தாள்.
அவளின் விளிப்பில் பார்வை தாழ்த்தி அவளின் முகம் பார்த்தான்.
“அழனுமின்னா அழு மாமா. உக்கி போவாத” என்றவள், “என்னாலயா?” மாமா என்று கேட்டுவிட்டாள்.
வசந்தி பேசியதன் தாக்கம் அவளிடம்.
வேகமாக தன் மடியில் அவளின் தலையை அழுத்திக்கொண்டான்.
“இது யாரோ வேணுமின்னு பார்த்த வேலை தங்கம். யாருன்னு தெரியல. கண்டுபிடிக்கணும். அதுக்குள்ள யாரோ என்னமோ சொன்னாய்ங்கன்னு நீயும் அப்படியே நெனப்பியா? நீயி இந்த வூட்டுக்கு நேத்துதேன் மொத தரம் வந்தியாக்கும். கண்டதையும் உருட்டாதத்தா” என்ற வீரன்… கட்டுத்தறியில் நின்றிருக்கும் கால்நடைகள் யாவும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைத்த மர நிழலில் கட்டியிருக்க உயிர்வதை கொண்டான்.
“நெஞ்சடைக்குது தங்கம்” என்றவன் அவளை கட்டிக்கொண்டு ஆவென்று அவ்விடமே அதிர கத்தினான்.
வீட்டிற்குள் இருப்பவர்கள் வீரனின் உணர்வு பிடியிலான கத்தலில் அரண்டு நின்றனர்.
மீனாட்சி தான் “சரியாகிடுவியான்” என்று அனைவரையும் திசை திருப்பினார்.
“நீயே இம்புட்டு உடைஞ்சு நின்னா?” என்ற மீனாள் அவனின் மடியிலே கண்ணீர் உகுக்க… நீர் நிறைந்திட்ட கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்த வீரன், தன்னிலிருந்து மீனாளை பிரித்து…
“இன்னும் நாலு நாளுல இந்த இடம் பழையமாறி இருக்கும்” என்று அப்போதே வேலையில் இறங்கிவிட்டான்.
“நீயி உள்ள போயி உம் வேலையை பாரு தங்கம்” என்றவன், சிதைந்து கிடந்த தொழுவத்தை அப்புறப்படுத்தும் பணியில் இறங்கிவிட்டான்.
“சாப்பிட்டுபோட்டு பொறவு பாக்காலமே மாமா!”
“அங்கன பாரு” என்று கால்நடைகள் படுத்திருந்த இடத்தை காட்டிய வீரன், “அதுங்க வெயிலில் உட்கார்ந்திருக்கும்போது என்னால நிம்மதியா சோறு உண்க முடியுமா?” எனக் கேட்டான்.
அதுங்களின் முகத்திலும் சோகம் அப்பட்டமாகத் தெரிந்தது.
மீனாள் பதிலேதும் சொல்லாது உள்ளே செல்ல…
“லிங்குவை வர சொல்லு” என்றான்.
வதங்கிய முகத்துடன் ஹோட்டல் செல்ல கிளம்பிய லிங்கத்தினை வீரன் அழைப்பதாக தெரிவித்த மீனாள் மோரினை கலக்கி கொண்டு வர வீரன் பிடிவாதமாக மறுத்தான்.
“கிணத்து மேட்டு வயலுக்கு நான் ஓட்டிக்கிட்டு போறேன் மாமா. அங்கன புல்லு இருக்கும்ல. இல்லைன்னாலும் தக்கை வெட்டி போடுறேன். நீயி குடி இதை” என்றவள் பார்வையால் கெஞ்சிட, அவளுக்காக பாதி பருகியவன் போதுமென்றான்.
“மாமா உனக்கும் தான். தனியா சொல்லனுமா? குடிச்சிப்போட்டு சோலியை பாரு” என்றவள் லிங்கத்தின் கையில் குவளையை திணித்தாள்.
“குடிடே!” வீரன் குரலுக்கு ஒரே மூச்சில் வாயில் சரித்தவன், “தனியா போவாத… அம்மாவை கூட்டிக்கோ” என்றான் லிங்கம்.
அன்றைய இரவுக்குள், எரிந்ததால் கருமை படிந்து இடிந்து கிடந்த தொழுவத்தின் சுற்று சுவற்றை முழுவதுமாக இடித்து அவ்விடத்தை சுத்தம் செய்திருந்தனர் வீரனும், லிங்கமும். பாண்டியனும் மருதனும் ஹோட்டல் ஆலையென்று சென்றிருந்தனர்.
சுந்தரேசனுக்கு விடுமுறை கிடைக்காததால் அவர் சுபாவை கூட்டிக்கொண்டு மாலை கிளம்பியிருந்தார். இந்நிலையில் உதவிடாது செல்ல வேண்டியிருக்கே என்று வருந்தியவரை அபி தான் ஏதேதோ சொல்லி அனுப்பி வைத்தார்.
வீரன் குளித்து முடித்து கீழே வர அப்போதுதான் மாலை கால்நடைகளை ஓட்டிச்சென்ற அபியும், மீனாளும் வீடு வந்து சேர்ந்தனர்.
“பசியாருச்சுங்களா?”
“எங்க? அதுங்க கண்ணுக்கு முன்னவே எல்லாம் எரிஞ்சிருக்கு. மனுசங்களை விட அதுங்களுக்கு உணர்வுகள் அதிகமாச்சே அமிழ்தா… வெட்டிப்போட்ட புல்லு, தக்கையெல்லாம் பாதிக்குமேல அப்படியே கிடக்கு. இங்குட்டு எங்க கட்டுறதுன்னு மாந்தோப்புல கட்டிப்போட்டு வந்திருக்கோம். அப்பாரு வந்ததும் அங்குட்டு காவலுக்கு போவ சொல்லணும். அதுவரை பிரேம் இருக்கன்னு சொன்னியான்” என்றார் அபி.
கேட்டுக்கொண்டேன் என்பதற்கு ஏதுவாக ம் என்றவன்…
“நான் கொத்தனாரை பார்த்துப்போட்டு வரேன்” என்று வெளியேறியவனை,
“காலையில் பார்த்துக்கக்கூடாதாப்பு” எனக் கேட்டார் மீனாட்சி.
“காலையில வேலை ஆரம்பிக்கணும் அப்பத்தா” என்ற வீரன், “வரும்போது ஐயாவை சிமெண்ட், செங்கல் மத்ததுக்குலாம் சொல்ல சொல்லிட்டேன். இன்னும் செத்த நேரத்தில வந்தபுடும். நான் அதுக்குள்ள ஒரு எட்டு ஊருக்குள்ள போயி கோவிந்தன் அண்ணே கிட்ட சொல்லிப்போட்டு வாரேன்” என்றவன் கிளம்பிவிட்டான்.
“அந்த இடம் பழையபடிக்கு ஆகும்வரை அவன் மனசு ஆறாது” என்று மீனாட்சி வருந்தினார்.
வீரன் அலைப்பேசியை வீட்டிலேயே விட்டுச்சென்றிருக்க சேமிக்கப்படாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
முதல் முறை எடுக்க வேண்டாமென தவிர்த்த மீனாள்… மீண்டும் மீண்டும் விடாது ஒலிக்கவே, அழைப்பினை ஏற்றாள்.
எதிர்முனை கேட்ட குரலில் உடல் நடுங்க அலைப்பேசியை கீழே தவறவிட்டவளின் கண்கள் மிரட்சியில் அகண்டது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
40
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


பெரிய வேலையா பார்த்து விட்டிருக்காய்ங்க .. எல்லாரும் கஷ்டப்படுற மாதிரி ஆகிடுச்சு ..
gokul paartha vaylaiyo
Yara irukum phne la peysunathu
கோகுல் தானா?.
தனிப்பட்ட பழிவாங்கல்….
மீனாளின் கலகலப்பு குறைந்து அமைதியாகிவிட்ட காரணம் கேட்டறிந்து வீரனும், வீரன் தங்களது திருமணத்தை உடனே நடத்த தயங்கிய காரணத்தை மீனாளும் கேட்டறிந்து தெளிந்துவிட்டனர்.
உயிரினங்களின் அன்பு எப்பொழுதுமே வியப்பானது தான். உற்றவருக்கு ஒன்றென்றால் உயிரை பொருட்படுத்தாது நொடிகளில் செயல்படும்.
வீரன் மீதான கரியனின் அன்பு வியக்க வைத்தது.
வளர்க்கும் விலங்குகள், பறவைகள், செடி கொடிகள் இல்லாது போனால் ஏற்படும் வலி மிகக் கொடியது.
வெறுப்பினை சமயம் பார்த்து உமிழும் வசந்தியின் கொடிய வார்த்தைகள். 😵
இந்த வன்மம் கொண்ட செயலை செய்தவர் யாராக இருப்பர்? வசந்தி அந்த அளவுக்கு இறங்கியிருப்பாரா பார்ப்போம்.