Loading

யான் நீயே 23

புலர்ந்தும் புலரா விடியல்…

நிலவவன் மறைந்திட… கதிரவன் மேலெழும்பத் தொடங்கியிருந்தான்.

மண அலங்காரம் முடிந்து கண்ணாடி முன்பு அமர்ந்திருந்த மீனாளுக்கு இனிய படபடப்பு.

காலம், நடந்து முடிந்த பல அனர்த்தங்களின் வீரியத்தை தன்னைப்போல் குறைத்திடும் என்பது நியதி.

அதேபோல் தான்… மீனாளின் மனதும் தேவையில்லாமல் தூக்கி சுமந்த வீரனின் கோப வார்த்தைகளை அவன் தனக்கே உரியவனாகப்போகிறான் என்ற மகிழ்வில் தூக்கி எறிந்தது.

இதில் முக்கிய பங்கு கோகுலுக்குத்தான். அன்றைய நிகழ்வு அத்தனை உணர்வாய் மீனாளுக்கு கடந்திருக்கவில்லை என்றால், வீரன் பேசிய வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் மட்டுமே என்று மீனாளுக்கு புரிந்திருக்காது.

பெண்ணழைப்பு முடிந்து… அதிகாலையே கோவிலுக்கு செல்ல வேண்டுமென்பதால் அனைவரும் வேலையை சீக்கிரம் முடித்து உரங்கச் சென்றுவிட்டனர்.

மீனாள் மட்டும் ஏதேதோ நினைத்து குழம்பி உறங்காதிருக்க… லிங்கம் வந்து துணையாக பேசியபடி இருந்த போதும் அவளிடம் அலைப்புறுதல்.

தன் பேச்சில் மீனாளின் கவனம் இல்லையென்றதுமே…

“அண்ணேகிட்ட நேரா போய் பேசிடு மீனாக்குட்டி. இல்லாட்டி சந்தோஷமா கடக்க வேண்டிய தருணத்தை குழப்பத்தால அனுபவிக்காம விட்டுடுவ” என்று சொல்லி உறங்கிட சென்றுவிட்டான்.

மேலும் சில நிமிடங்கள் கழிந்திட இதற்கு மேல் தான் மட்டுமே உள்ளுக்குள் போராட முடியாதென நினைத்த மீனாள் மெல்ல அறையிலிருந்து எட்டிப்பார்க்க வீடே இருளில் மூழ்கி அமைதியாக இருந்தது.

கொலுசின் சத்தம் கேட்டிடாதவாறு அடி மேல் அடி வைத்து மேலேறி வீரனின் அறைக்கு முன்பு சென்று நின்ற பின்னரே…

வீரன் உள்பக்கம் தாழிட்டிருந்தால் என்ன செய்வதென யோசித்தாள்.

“அண்ணே கொண்டி மாட்டாது.” லிங்கத்தின் குரல் மட்டும் கேட்டது.

லிங்கத்தின் அறையும் அங்கு மேல் தளத்தில் தான் என்பதால், அவனது அறை சன்னல் பக்கம் பார்க்க, அவள் பார்ப்பதற்காகவே நின்றிருந்தவன், புன்னகைத்து சன்னலை மூடிக்கொண்டான்.

கதவினை தள்ளி ஓசையின்றி திறந்தவளுக்கு, அறையின் இருட்டு பழகிட சில நொடிகள் ஆயிற்று.

வீரன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

பேச வேண்டுமென வந்தவள் அவனை பார்த்தது பார்த்தபடி கன்னத்தை கையில் தாங்கி அமர்ந்துவிட்டாள்.

அவன் முன்பு மனம் நிர்மலமாக மாறுவதை உணர்ந்தவளுக்கு, தன் வலியை போக்கும் நிவாரணியும் அவனே என்று புரிந்தது.

வீரனின் முன்னுச்சி கேசம் காற்றில் அசைந்தாடிட… அதனை கையால் ஒதுக்கி அவனது பரந்த நெற்றியில் முத்தம் வைத்திட பேராவல் கிளம்பியது அவளிடம்.

யாரோ தன்னை பார்வையால் ரசனையாக துளைப்பதை தூக்கத்தில் உணர்ந்தானோ வீரன்! மெல்ல விழி மலர்ந்தவன் தனக்கு முன்பு அமர்ந்திருந்த மீனாளை ஒரு கணம் ஆழ்ந்து நோக்கியவனாக கண்களை மூடிக்கொண்டான்.

“இன்னைக்கு மட்டுந்தேன் கனவுல. நாளியிலிருந்து என் தங்கப்பொண்ணு என் கைக்குள்ள” என்று உறக்கத்திலே உளறியவனாக நிமிர்ந்து படுத்தான்.

வீரன் இப்படி கண் திறப்பானென்று எதிர்பார்த்திடாத மீனாள், சிலையென உறைந்திருக்க… அவனது பேச்சு அவளை சுயமீட்டு சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தது.

அவன் தன்னை ஒதுக்குகிறான், விலக்குகிறான், தள்ளி வைக்கின்றான் என்ற அவளின் எண்ணத்தையெல்லாம் தன்னை அறியாது முறியடித்து இருந்தானே!

வீரனின் கன்னம் கிள்ள… “லவ் யூ மாமா” சொல்லிட துடித்த கைகளையும் வாயினையும் கட்டுப்படுத்தியவள்,

“நான் சொன்னன்னு உன்னால முடியலன்னாலும் தள்ளியிருக்கியா மாமா? எனக்காகவா?” என்று மெல்லொலியில் வினவியவள், “உன் வார்த்தை நினைவு வந்துச்சுன்னா என்ன பண்ண கேட்டேனே! நினைவு வருதான்னு டெஸ்ட் பண்ணி பாப்போமா?” என்றவளாக மெல்ல அவனின் முகம் அருகே குனிந்து, “உன்னை அப்படியே கட்டிக்கணும் போலிருக்கு மாமா. ஆனால் நீயி முழிச்சிருக்கும்போது இந்த தைரியம் வருமா தெரியுமாட்டிக்கு” என்று ஏதேதோ உறங்குபவனிடம் காதலாக பிதற்றினாள்.

மீனாளின் மூச்சுக்காற்று வீரனின் முகத்தில் மோதிக் கொண்டிருந்தது.

நேரம் நீண்டது மீனாளிடம் மாற்றமில்லை.

அவனின் மீசையை முறுக்கிவிட மேலெழும்பிய கையை வேகமாக இழுத்துக்கொண்டாள்.

“எம்புட்டு கோவம் வருது உனக்கு? இந்த மூக்கு மேல” என்றவள், மூக்கினை பிடிக்காது இரு விரலால் ஆட்டினாள்.

“என்கிட்டயும் கோவப்படுவியா மாமா நீயி?” எனக் கேட்டவள், கீழே கேட்ட அரவத்தில், நேரமானதை அறிந்தாள்.

“அதுக்குள்ள விடியப்போவுதா?” என்று தனக்குத்தானே கேட்டவள், “உன்னைய பார்த்துகிட்டு இருந்தா நேரம் போறதே தெரியமாட்டிக்கு மாமா” என்றாள்.

தன் கையோடு கொண்டு வந்திருந்த மஞ்சள் தடவிய கயிற்றை அவனின் கையில் கட்டிவிட்டாள்.

“நான் வேணுமின்னு அழுத்தமா தோணும். அப்போ வந்து கட்டுன்னு சொன்னியே மாமா. கட்டிப்புட்டேன்” என்றாள்.

அபி, மீனாள் என்று அழைக்கும் சத்தம் கேட்க…

“போச்சு போச்சு இப்போ எப்படி கீழப்போறது” என்று யோசித்தவளுக்கு வழி ஏதும் இல்லாது போகவே… “சமாளிப்போம்” என்று எழுந்து நின்றாள்.

செல்வதற்கு முன்பு வீரனின் முகம் பார்த்தவள், அவனது முன்னுச்சி கேசம் ஒதுக்கி நெற்றியில் பட்டும் படாது இதழ் ஒற்றி விலகி… அங்கிருந்து வேகமாக கீழிறங்கினாள்.

வீரன் பட்டென்று கண் திறந்திருந்தான்.

“தங்கப்பொண்ணுக்கு டெஸ்ட் பண்ணனுமா? நைட் பண்ணிடலாமே” என்றவனிடம் மந்தகாசப் புன்னகை.

கண் திறந்த நொடி கனவென்று தான் அவனும் நினைத்தான். கண் மூடிய பின்னரும் அவனது மனம் அவளின் இருப்பை உணர்ந்திட என்ன செய்கிறாள் என்பதை அறியவே உறங்கியவனாக இருந்து கொண்டான்.

“உன் மூஞ்சிய பார்த்தாக்கா கோவமே வராதுன்னு சொன்னா நம்புவியா நீயி” என்றவன் தன் நெற்றியைத் தொட்டு பார்த்தான்.

தன் கையை தூக்கிப் பார்த்தவன், அவள் கட்டிச்சென்ற கயிற்றை பார்த்து மனம் நிறைந்தான். அதுவே அவனுக்கு அவனது தங்கப்பொண்ணுவின் மனதை புடம்போட்டு காட்டிக்கொடுத்திட்டது.

“தங்கப்பொண்ணுக்கு தைரியம் வந்திருச்சே” என்று எழுந்தவனாக, கீழே எப்படி போனாள் என்பதை அறிய மேலிருந்து எட்டிப்பார்த்தான்.

நாச்சியின் அறைக்கு முன் நின்றிருந்த அபி, மீனாளை காணவில்லை என மீனாட்சியிடம் சொல்லிக்கொண்டிருக்க, அவரோ தன் மருமகளின் முகம் திருப்பி பின்னால் பார்க்கச் செய்தார்.

மீனாள் படியிறங்கி வந்திட…

“எங்கட்டி மேலிருந்து வர?” என்று அபி அதிர்ச்சியாக வினவ, முதலில் தடுமாறினாலும்… அடுத்து, “எம் மாமனை பார்த்து கொஞ்சிட்டு வாரேன் அயித்த” என்று அவரின் கன்னம் இடித்தவளாக அறைக்குள் ஓடிவிட்டாள்.

“அத்தை இது நம்ப மீனாளா?” என்று வினவிய அபி, “என்னால நம்ப முடியலங்களே! புள்ளை பேசுனா சத்தமே வராதே அத்தை. இவள் ஒத்த வரியில இந்த போடு போட்டுட்டு போறாள்” என்றார்.

மீனாட்சி சிரித்திட…

உள்ளிருந்து எட்டிப்பார்த்த மீனாள்,

“மொத நீங்க எனக்கு அத்தை மட்டுந்தேன். இப்போ மாமியாரும் கூட. அதுக்கு தக்கன நான் பேசனுமில்லையா?” என்றாள்.

“இம்புட்டு நா இந்தப் பேச்செல்லாம் எங்க ஒளிச்சு வச்சிருந்தியாம்?”

“என் மாமன் முதுகுக்கு பின்னால” என்றவள், “சும்மா கேள்வி கேட்காம போயி வேலையப்பாரு அத்தை. குளிச்சிட்டு கூப்பிடுறேன், வந்து புடவை கட்டிவிடு” என்றாள்.

“என்னட்டி அதிகாரம் தூள் பறக்குது?” அபி சிரித்துக்கொண்டே வினவ,

“உனக்கு கோவமா நடிக்கக்கூட வரல அத்தை” என்று சிரித்தாள்.

மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த வீரனுக்கு நான்கு வருடங்களுக்கு பின் அவனது பழைய தங்கப்பொண்ணு திரும்பி வந்திருந்த உணர்வு.

“லவ் யூ டி தங்கப்பொண்ணு” என்று உதடசைத்தவன் “நீயி மெதுவா சொன்னதுல சரியா கேக்கல… உரக்க எம் மொவம் பார்த்து எப்போ சொல்லுவ?” எனக் கேட்டான்.

“என்னண்ணே தனியா பேசிட்டிருக்க?” என்று வந்த லிங்கம் அவனின் பார்வையை தொடர்ந்து கீழே பார்த்துவிட்டு,

“ம்ம்ம்… என்ஜாய்” என்று நகர்ந்தான்.

வீரனின் குரல் மீனாளை தீண்டியதோ…

விழி உயர்த்தி மேலே பார்த்தாள்.

வீரன் தங்களை கவனிக்கிறான் என்றதும், “இவிங்க எப்போ எழுந்தாய்ங்க தெரியலையே” என்று தனக்குள் அசடு வழிந்தவளாக அறைக்குள் தன்னை மறைத்துக்கொண்டாள்.

“சரி சரி பேசிக்கிட்டே நிக்காம, சட்டுப்புட்டுன்னு எல்லாரும் கிளம்புங்க. முகூர்த்தம் முடியும் முன்ன ரெண்டு கல்யாணம் நடந்திருக்கணும்” என்று அப்பத்தா விரட்டிட ஒவ்வொருத்தராக தயாராகிக் கிளம்பிட ஆயத்தமாகினர்.

“அங்க வண்டி அனுப்பிட்டியாடே?” என்று கேட்டபடி வீரன் வர, லிங்கம் தன் அண்ணனின் தோற்றத்தை பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தான்.

லிங்கத்தின் தோளில் தட்டி “என்னடே?” என்று வீரன் வினவ, “இம்புட்டு அழகையும் எங்குட்டுண்ணே மறைச்சு வச்சிருந்த” எனக் கேட்டான் லிங்கம்.

“போடா” என்ற வீரன் தன் வெட்கத்தை மறைத்திட…

“அப்பு” என்று அருகில் வந்த மீனாட்சி தன்னிரு கரங்களாலும் வீரனின் முகம் வழித்து நெட்டி முறித்திட…

“ஆயுசுக்கும் உம் மொவம் இப்படியே சிரிச்சமாறி இருக்கணுமப்பு” என்று ஆசீர்வதித்தார்.

“மாமா வூட்டுல பொண்ணு மாப்பிள்ளையோட கெளம்பிட்டாங்களாம். நாமும் வண்டியில் ஏறுனாக்கா சரியா இருக்கும்” என்று பாண்டியன் சொல்லிட… ஒவ்வொருவராக சென்று ஏறினர்.

வீரன் தன் பார்வையை சுழற்றினான். மீனாள் தட்டுப்படாது போகவே, வண்டியில் ஏறி அமர்ந்திட அபி மீனாளை அழைத்து வந்தார்.

மெல்லிய அலங்காரம். அவளவனுக்கு அப்ஸரசாக தோற்றம் கொண்டாள்.

யாரும் அறியாது வீரன் தன் நெஞ்சினை நீவிக்கொண்டான்.

மீனாள் அபியுடன் அமர்ந்திட…

“அமிழ்தன் பக்கட்டு போயி உட்காருத்தா” என்றார் மீனாட்சி.

உறவினர்களையும் அழைத்துச்செல்ல வேண்டுமென்பதால் பேருந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

வீரன் இருவர் அமரும் பக்கம் வெளி இருக்கையில் அமர்ந்திருக்க… மீனாள் சன்னலோர இருக்கைக்கு சென்றிட வேண்டும்.

வீரனோ அவள் தன் பக்கம் வந்து நிற்பதை அறிந்தும் தீவிரமாக அலைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தான்.

“ம்க்கும்…”

‘நைட்டு அம்புட்டு தைரியமா முத்தமெல்லாம் கொடுத்துப்போட்டு… இப்போ பயந்து நடுங்குற மாறி சீன் போட வேண்டியது’ என்று மனதிற்குள் அவளை கொட்டியவன் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை.

மீனாளும் அப்படியே நின்றிருக்க…

ஓட்டுநர் இருக்கைக்கு எதிரில் அமர்ந்திருந்த பாண்டியன் அனைவரும் ஏறிவிட்டதாக சொல்ல… ஓட்டுநர் வண்டியை இயக்கினார்.

வண்டியை முடுக்கிய வேகத்தில் நின்று கொண்டிருந்த மீனாள் நிலை தடுமாறி வீரனின் மீது விழ, அவனோ சடுதியில் அவளின் இடையோடு கையிட்டு தன் மடியில் அமர்த்தியிருந்தான்.

கணப்பொழுதில் இருவருக்குமிடையே அதீத நெருக்கம். ஒருவரின் வாசம் மற்றவரின் சுவாசப்பை நிறைத்தது.

அடுத்தவர் பார்க்கும் முன் சரிந்து இருக்கைக்கு இடம் பெயர்ந்திருந்தாள்.

மீனாள் சன்னல் பக்கம் திரும்பி தன்னை ஆசுவாசம் செய்துகொள்ள மூச்சினை ஆழ்ந்து சுவாசித்து வெளியேற்றிட… பிறர் கவனம் ஈர்க்காது அவள் பக்கம் நெருங்கியவன்,

“இப்போ தொட்டனே உனக்கு பழசு ஏதும் நெனவு வந்துச்சா?” என்று கேட்க, மீனாள் வீரனை விழி விரித்து பார்த்தாள்.

“இது நமக்கான மொமெண்ட். எதையும் நெனக்காம என்ஜாய் பண்ணு தங்கம்” என்றவன், “நைட் கொடுத்ததும், சொன்னதும் நல்லாயிருந்துச்சு” எனக்கூறி கண்ணடித்திட… மீனாள் ஆவென்று அதிர்ந்தாள்.

“கேடி மாமா.” மறுபக்கம் திரும்பி முணுமுணுத்தாள்.

“என்ன சொல்ற? கேட்கல…”

“அது… நீங்க தூங்கிட்டிங்கன்னு நெனச்சு…”

“முழிச்சிருந்தாலும் நீயி கொடுக்கலாம் தப்பில்லை” என்றவன்

“செமயா இருக்கடி தங்கப்பொண்ணு” என்றிட… வீரனின் புதிய பரிமாணப் பேச்சில் மீனாள் தடுமாறினாள். மனதின் தடம் மாறினாள்.

இத்தனை நாள் மனதிலிருந்த இறுக்கமெல்லாம் காணமல் போவதை மனமார உணர்ந்தாள்.

“உன் கழுத்துல தாலி கட்டுறதுக்கு முன்னுக்க… சிலது நான் சொல்லணும் தங்கம்” என்ற வீரன், “அன்னைக்கு உன்னை காயப்படுத்தும் தெரிஞ்சித்தேன் அப்படி பேசினேன். ஆனால் நான் மாமாவுக்கு புரிய வைக்க பேசுன பேச்சுன்னு நீயி புரிஞ்சப்ப நெனச்சு பேசிபுட்டேன். உனக்கு என்னை புரியும் நெனச்சேன். அது உன்னைய இம்புட்டு காயப்படுத்தும் அறிஞ்சு பேசல” என்றதோடு, “மன்னிச்சிக்கிடு தங்கம்” என்றான்.

வீரனிடம் எப்போதும் மீனாள் மன்னிப்பை எதிர்பார்த்தது இல்லை. இன்று அவன் கொடுத்த விளக்கத்தில்… அவனை, தான் புரிந்துகொள்வோம் என்கிற அவனின் எதிர்பார்ப்பு தான் பொய்த்து போய் உள்ளது. அப்படியிருந்தும் வருடங்கள் சென்றும் தனக்காக மன்னிப்பு வேண்டியவனை அக்கணம் அதிகத்திலும் அதிகம் பிடித்தது.

“ஆம்பளை சட்டுன்னு இறங்கி வரமாட்டாய்ங்க.” இதனை மகாவே அடிக்கடி சொல்லி அவள் கேட்டிருக்கிறாள். ஆனால் அதற்கு விதிவிலக்காய் வீரன்.

எவ்வித பகுபாடுமின்றி தன்னிடம் மன்னிப்பு கேட்கிறானென்றால்… அன்னைக்கும் காலில் விழுறேன் என்றானே! அவனில், தான் எத்தனை ஆழமாக பதிந்திருக்க வேண்டும். நினைத்த மாத்திரம் ஆழ் மனதில் தெளிவு. அமிழ்த்தி வைத்திருந்த அவனின் மீதான அவளுக்கான காதல் பொங்கி பிரவாகம் எடுத்தது.

“எங்கு கௌதமுக்கு கட்டி வச்சிடுவாங்களோன்னு அச்சத்துல… எம் மேல நேசமிருந்தாலும், இம்புட்டு நா வேணாமின்னு இருந்தவ, இப்போ என்னைய கட்டிக்கிட நெனச்சியோன்னு எனக்கிருந்த சிறு உறுத்தலுக்கான பதில் ராத்திரியே நீயி கொடுத்து, என்னை தெளிவாக்கிட்ட…” என்று கயிற்றை கண் காண்பித்தான்.

“உன்னைய தெளிவாக்குற கடமை எனக்கிருக்கே அதான் இப்போவே என் மனசுல இம்புட்டு நாளா உனக்கு கொடுக்க நெனச்சிருந்த விளக்கத்தை கொடுத்துப்புட்டேன்” என்றவன், மீனாளின் விழிகளோடு சந்தித்து…

“நீயி என் பொண்டாட்டியாகும் கணம், நம்ம ரெண்டேறும் மனசுலையும், நேசத்தை தவிர வேறெதுவும் இருக்கக்கூடாது” என்றான்.

சுற்றம் மறந்து அவனின் புஜத்தோடு கரம் கோர்த்து பிடித்தவள், அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

வீரனுக்கு அத்தருணம் அத்தனை நிறைவாய்.

********

நாச்சியை பெண்ணழைத்து வந்ததும் அனைவரும் உறங்க சென்றிருந்த நேரம், பிடிவாதம் பிடித்து நாச்சியை வீட்டிற்கு பின்புறம் இருக்கும் கிணற்றடிக்கு வரவைத்திருந்தான் பிரேம்.

அங்கு ஏற்கனவே கௌதம் சுபாவிடம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க…

“இங்க அல்ரெடி புக்ட்” என்ற பிரேம் நாச்சியை மாடிக்கு அழைத்துச் சென்றான்.

வந்து அரைமணி ஆகியும் நாச்சி பிரேமை நேருக்கு நேர் பார்த்தாளில்லை.

ஆனால் பிரேம் வஞ்சனையின்றி தன்னவளை ரசித்தான்.

“என்ன பேசிணுமின்னு சொன்னீனா… நான் போய் படுப்பேன். அங்கை முழிச்சிக்கிட்டா, என்னைத் தேடுவாள்” என்று எங்கோ பார்த்துக்கொண்டு நாச்சி கூறினாள்.

“நாளைக்கு நமக்கு கல்யாணம் அழகு. நெனவிருக்கா?” என மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு வினவிய பிரேம், “எம் மொவம் பார்க்கக்கூட மாட்டேங்கிற. என்ன சடைப்பு உனக்கு?” என்று கேட்டிருந்தான்.

“எனக்கென்ன… ஒன்னுமில்லையே” என்றவளின் குரல் சட்டென கலங்கி ஒலித்தது.

“ஹேய்… அழகு என்னாச்சுடி” என்றவன் அவளின் தோள் தொட்டிட, அவனது மார்பில் தஞ்சம் புகுந்தாள்.

“என்னன்னு சொன்னாத்தேன் தெரியுமாட்டி…” என்று அவளின் தலை நீவினான்.

“கல்யாணம் முடிஞ்சதும் என்னைய வுட்டுப்போட்டு நீயி பெங்களூரு போயிடுவியா?” என்று கேட்டவளின் பிடி இறுகியது.

நாச்சி திடீரென இப்படி அணைத்து கேட்பாளென்று அவன் எதிர்பார்க்கவில்லை.

தனக்கான தவிப்பை அவளிடம் கண்டு கொண்டவன் சீண்டி பார்த்திட ஆசை கொண்டான்.

“உனக்குத்தேன் நம்ம குடும்பம் இருந்தாக்கா போதுமே!” என்றான்.

அவனை பிரிந்து இரண்டடி தள்ளி நின்றவள்,

“அப்போ நீயி என்னோட இருக்கமாட்டியா?” என்றவள், “எப்போ போவ, தாலி கட்டியதுமா? இல்லை ரெண்டு நா இருப்பியா?” என்று கேட்டவளுக்கு கண்ணீர் கன்னம் தாண்டியது.

“நீதானடி சொன்ன… என்கூட வரமாட்டன்னு” என்ற பிரேம் அவளை நெருங்க, பின் நகர்ந்தாள்.

“அதுக்கு வுட்டுப்புடுவியா?” எனக் கேட்டவள், “எனக்கு உன்கூடவே இருக்கணும். நீயி ஒரு இடம் நானு ஒரு இடமெல்லாம் முடியாது. எனக்கு நம்ம குடும்பத்தோட இருக்க விருப்பந்தேன். அதுக்குன்னு உன்கூட இருக்கமாட்டேன்னு இல்லை. உன்னைய வேலைய விடுன்னு சொல்லமாட்டேன். படிச்ச படிப்புக்குத்தானே வேலை பார்க்க முடியும்” என்றதோடு, “என்னையும் கூட்டிட்டு போ… லீவு கிடைக்கும் போதெல்லாம் இங்கன வந்துபுடலாம்” என்றாள்.

அவனுக்காக பார்த்து அவள் பேசியதில்… எப்போதும் அவனிடம் அவள் சொல்லாத காதலை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

“இதைத்தான் மண்டையல உருட்டிக்கிட்டு என்கிட்ட பேசாம இருந்தியாக்கும்!” நாச்சியை இழுத்து தன் கை வளைவில் கொண்டு வந்திருந்தவன், அவளின் கன்னத்தோடு தன் கன்னம் இழைத்தான்.

கூசி சிலிர்த்தவள் அவனில் தன்னை புதைத்துக்கொள்ள…

நாச்சியின் காதோரம் இதழ் குவித்து ஊதிய பிரேம்…

“என் பொண்டாட்டிக்காக அந்த வேலையை விட்டுட்டேன். பேப்பர் போட்டுட்டேன். அல்ரெடி ரெண்டு மாசம் ஓடிப்போச்சு. இன்னும் ஒரு மாசம் அங்கன இருந்தாக்கா போதும்” என்றவனின் பேச்சில் இன்பமாக அதிர்ந்தவள்… அவனை இறுக்கி அணைத்து விடுத்தாள்.

“எனக்காகவா?”

“நமக்காக” என்ற பிரேம், “பிடிக்காத வேலை. பிரச்சினை இல்லாம இருந்திருந்தாக்கா… படிப்பு முடிச்சதுமே லிங்கு மாதிரி ஒரு ஹோட்டலில் போய் உட்கார்ந்திருப்பேன். இப்போ உன்னைய விட்டு இருக்க முடியாதுன்னு எனக்கே தெரியும் போது… அங்கன தனியா உட்கார்ந்துட்டு என்ன செய்யப்போறேன்” என்றான்.

சட்டென்று எம்பி பிரேமின் கன்னத்தில் முத்தம் வைத்து அவன் உணரும் முன்பு கீழே ஓடியிருந்தாள்.

பிரேமுக்கு தடைகள் தாண்டி நாச்சியின் கையினை காதலாக பற்றிடப்போகும் மகிழ்வு அக்கணம் அதீத ஊற்றெடுத்தது.

******

“சுபா நான் சொல்றதை கொஞ்சம் கேளு!”

கௌதம் சுபாவிடம் மன்றாடிக் கொண்டிருந்தான். அவள் அவனிடம் பேசிடத் தயாராக இல்லை.

“இன்னும் எவ்வளவு கெஞ்சுறது?”

ஆயாசமாக நெற்றியை தேய்த்துக் கொண்டான்.

“உன் பின்னாடி நான் தானே சுத்தி சுத்தி வந்தேன். அதனால நான் உனக்கு ஈஸியா போயிட்டேன்ல?” என்ற சுபாவின் கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.

“இப்படி அழுவாத சுபா. அதான் ஒண்ணுமே நடக்கலையே! நீ அழுவுறது கஷ்டமா இருக்குடி” என்றவன் அவளின் கரம் பற்றிட முயல, வேகமாக தள்ளி நின்றாள்.

“நான் உன்னையே சுத்தி வந்தன்னு பாவப்பட்டு ஓகே சொன்னியா கௌதம்?” சுபா அவ்வாறு கேட்டதும் பிரேம் உள்ளுக்குள் உடைந்தே போனான்.

“கோவத்துல பார்த்து பேசு சுபா” என்று கடினமாகக் கூறியவன், “ஒருநாள் கூட நீ என் காதலை உணரவே இல்லையா?” எனக் கேட்டிருந்தான்.

“மீனாள் நிறுத்தாம இருந்திருந்தால்?” சுபாவின் அழுகை அதிகமாகியது.

கௌதமின் பொறுமை எல்லை மீறும் போலிருந்தது.

அவளின் இந்த அழுகை கோபமெல்லாம், அவனுக்காக அல்லவா. அதனாலே கரை உடைக்க காத்திருக்கும் பொறுமையை இழுத்து பிடித்திருந்தான்.

அவளின் அழுகையையும், சோகத்தையும் குறைக்கும் வழி தெரியாதவன் சடுதியில் இழுத்து இதழோடு இதழ் பொறுத்தியிருந்தான். சில நொடிகள் மட்டுமே நீடித்தது. அதிர்வில் அவளின் அழுகை நின்றிருக்க…

“அடேய் அண்ணா!” என்ற கௌசிக்கின் விளிப்பில் கௌதம் விலகியிருந்தான்.

கௌசிக் வாயில் கை வைத்து நின்றிருக்க,

கௌதம் அவனை கண்டுகொள்ளவே இல்லை.

“மீனாள் நிறுத்தாம போயிருந்தால், நானே நிறுத்தியிருப்பேன். எனக்கு எல்லார் முன்னாடியும் எப்படி சொல்றது தெரியாமதான் பொறுமையா இருந்தேன். அதுகூட மருதன் மாமாவிடம் பேசி நிறுத்திடலாங்கிற ஐடியாவில் தான்” என்றவன், “நீ என்னையே சுத்தி வந்ததில் எனக்கு அப்படியொரு சந்தோஷம். அதான் சுத்த விட்டேன்” என்று சொல்லி வீட்டிற்குள் சென்றுவிட்டான்.

சுபாவின் மனம் சமாதானம் அடைந்தது அவனின் இறுதி வரியில்.

அழுத முகத்தில் விரிந்த புன்னகையோடு கௌதம் செல்வதை பார்த்தபடி சிலையாகியிருந்தாள்.

“அண்ணா போயி ஒரு நாளாகுது. உள்ள வாங்க” என்று சுபா சுயம் மீட்டு உள்ளே அழைத்துச்சென்ற கௌசிக்,

“பக்கத்துல படுத்திருந்தவனை காணோமுன்னு தேடி வந்ததுக்கு ஒரு சின்னப்பையன் என்னவெல்லாம் பார்க்க வேண்டியதாப்போச்சு” என்று புலம்பினான்.

நின்று அவன் பக்கம் திரும்பிய சுபா,

“கௌசிக்” என்று தயக்கமாக ஏறிட…

“நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் மதினி” என்றான்.

அவன் மதினி என்று சொல்லியது அவளுக்கு அத்தனை இனித்தது.

“தேன்க்ஸ்.”

கௌசிக் இரு கரம் உயர்த்தி ஆசீர்வதிப்பது போல் பாவனை செய்து சென்றுவிட, அறைக்குள் வந்த சுபா…

“லவ் யூ அ லாட்” என்று கௌதமுக்கு தகவல் அனுப்பினாள். சில நொடிகளில் அவனிடமிருந்து கண்களில் இதயம் மின்னும் எமோஜியுடன் “லவ் யூ டூ” என்று பதில் வர… அப்படியே அவர்களின் உரையாடல் நீண்டது.

இருவருக்குமான பிணக்கு நீங்கியிருந்த போதும்… உள்ளுக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே இருந்தது. வசந்தி மற்றும் நல்லானை நினைத்து.

*****

அதிகாலைக்கு முன்னவே வீட்டில் ஆள் நடமாட்டம் தென்பட இரவில் அழுது, திட்டி, கோபம் கொண்டு, மனதினை பரிமாறிக் கொண்ட காதல் ஜோடியும், திருமண ஜோடியும் துயில் கலந்து அன்றைய நாளுக்காக பரபரப்பாகினர்.

அங்கையும், சுபாவும் சேர்ந்து நாச்சியை தயார் செய்திட…

“அங்கன மீனாளுக்கு யார் செய்வா இதெல்லாம்?” என்ற சுபாவிடம்,

“அபி அத்தை சூப்பரா ரெடி பண்ணிடுவாய்ங்க” என்று பதில் கொடுத்தாள் அங்கை.

“சும்மா பேசிக்கிட்டு நேரத்தை கடத்தாம வெரசா கெளம்புங்க. அங்கன எல்லாரும் கெளம்பிட்டாய்ங்கன்னு உங்க அப்பாரு குதிச்சிட்டு நிக்கிறாக” என்ற மகா தானும் வேகமாக கிளம்பி வெளியேறினார்.

அதற்குள் உறவினர்கள் அனைவரும் வண்டியில் ஏறியிருக்க… வீட்டு ஆட்களுடன் மண மக்கள் ஏறியதும் வண்டி கிளம்பியது.

இரு வண்டியும் ஒரு சேர கோவில் வந்து சேர்ந்தது.

அந்நேரத்திலும் கோவிலில் கூட்டத்திற்கு பஞ்சமில்லாது இருந்தது.

அம்மனின் சன்னிதானத்தில் இவர்களுக்கு முன்பு ஒரு ஜோடி நின்றிருக்க… அவர்களின் திருமணம் முடியும் வரை காத்திருந்தவர்கள்…

முதலில் வீரன், மீனாளின் திருமணத்தை முடிக்க முடிவு செய்து, இருவரையும் அம்மன் முன்பு நிற்க வைத்தனர்.

அம்மனின் பாதத்தில் தாலியை வைத்து… வீரன் மற்றும் மீனாளின் பெயருக்கு அர்ச்சனை செய்து வந்த ஐயர்… அம்மன் மேல் போட்டிருந்த இரு மாலைகளை இருவரின் கையிலும் கொடுத்து மாற்றிக்கொள்ள கூறினார்.

மீனாளின் விழி வழி சம்மதம் பெற்ற வீரன், அவளின் கழுத்தில் மாலையை அணிவித்து… அவளுக்கு வாகாக குனிந்து மாலையை பெற்றுக்கொண்டான்.

“நம்ம அமிழ்தன் குனிந்து மாலையை வாங்கிரதை பார்த்தாக்கா… இனி வூட்டுல மீனாட்சி ஆட்சிதேனாட்டுக்கு” என்று பெரியாத்தா கேலி பேசிட அங்கே சிரிப்பலை பரவி விரவியது.

சுற்றத்தாரின் கூட்டத்திற்கு நடுவில், அம்மனின் சாட்சியில், ஐயர் திருமாங்கல்யத்தினை வீரனின் கையில் கொடுத்திட… தன் அப்பத்தா, பெற்றோர் மற்றும் மீனாளின் பெற்றோரையும் பார்த்தவன் அவர்களின் பூரண மகிழ்வில் தன்னவளின் முகம் கண்டு… அவள் மூடி திறந்த இமை அசைவில், தன்னுடைய தங்கப்பொண்ணை மட்டுமே நெஞ்சில் நிறுத்தி அவனவளின் கழுத்தில் தாலியை அணிவித்திருந்தான்.

சிறு சிறு செயலிலும் தன் அனுமதி பெற்று தன்னை அவனுடைமை ஆக்கிக்கொண்டதில் மீனாளுக்கு அத்தனை கர்வம்.

அடுத்து ஐயர் அங்கேயே கருவறை படியில் பெண்ணின் காலை வைத்து மெட்டி அணிவிக்க சொல்ல…

வீரன் ஒரு கால் குத்திட்டு தன்னவளின் முன்பு மண்டியிட்டவனாக, குத்திட்ட காலின் தொடையின் மீது மீனாளின் பாதம் வைத்து மெட்டி அணிவித்தான்.

மீனாளின் மீதான வீரனின் இத்தனை அன்பை அவனின் குடும்பத்தாரே எதிர்பார்க்கவில்லை. கண்கள் பனிக்க ஆனந்தத்தோடு அக்கணத்தை கடந்தனர்.

வீரனின் மீது உயிரே வைத்திருப்பவர்களுக்கு அக்கணம் தோன்றியது ஒன்றே ஒன்று தான், ‘தங்களின் ஏற்பாட்டின் படி மீனாளுக்கும் கௌதமுக்கும் மணம் முடித்திருந்தால், வீரனை தாங்களே உயிரோடு கொன்றதற்க்கு இணையாகியிருக்கும்’ என்று.

அங்கு வசந்தி மட்டுமே வேண்டா வெறுப்பாக எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்தார்.

தன் மகனை வேண்டாமென்று சொன்ன மீனாளின் மீது அத்தனை கோபமிருந்தது அவருக்கு.

‘நீயி எப்படி நல்லா வாழ்ந்திடுறேன்னு பாக்குறேன்’ என்று தெய்வத்தின் முன்பு கோவிலில் நின்று கொண்டு நல்லது நடக்கும் நேரம் வஞ்சமாக நினைக்கிறோமென்ற உணர்வில்லாது மனத்திற்குள் சூளுரைத்தார்.

அதுவும் மீனாளின் முகத்தில் தேஜஸ் போல மின்னிய மகிழ்வு அவரின் கண்களை உறுத்திட… ‘இந்த சிரிப்பை உனக்கு இல்லாம ஆக்குறேன்’ என்றார்.

“கீழே வணங்கி எழுங்கோ?” என்ற ஐயர், “அவா விழுந்ததும் அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்யுங்கோ” என்க, ஐயரின் வார்த்தை அப்படியே நடந்தேறிட வீரன் மீனாளின் திருமணம் இனிதே நடந்தேறியது.

அதேபோல் பிரேம், நாச்சியின் திருமணமும் சுற்றம் சூழ மகிழ்வாய் நிறைவாய் நடந்திருக்க அனைவரும் கோவிலுக்கு வந்தது போலவே இரு பேருந்துகளில் மீனாட்சி தலைமை ஹோட்டலிற்கு வந்தனர்.

அங்கு தான் திருமண விருந்து.

தடபுடலாக அரங்கேறியது.

இரண்டு திருமணம் ஒன்றாகா நடைபெற்றிருக்க அதுவே கண் வைத்தது போலிருக்குமென்று, பிரேம் நாச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு கூட வேண்டாமென்று மீனாட்சி மறுத்துவிட்டதால்… வரவேற்பு வைக்கவில்லை.

உணவு நேரம் முடிந்து உறவினர்கள் சென்றிட, குடும்பத்தார் மட்டும் இரு ஜோடிகளுடன் மீண்டும் மீனாட்சி அம்மன் கோவில் சென்று நிதானமாக பிரகாரம் சுற்றி அம்மனை வழிபட்டு வீடு வந்து சேர்ந்தனர்.

வீரன், மீனாள் மருதன் இல்லம் செல்ல… பிரேம், நாச்சி பாண்டியன் இல்லம் வந்தனர்.

அங்கு நடக்க வேண்டிய சடங்குகள் முடிய, மாலை போல் தத்தம் இல்லம் சென்றிருந்தனர்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 45

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
43
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

9 Comments

  1. வீரன் அதிரடியான அன்பு. பிரேம் அழகான அன்பு. கௌதம் பேர் வருகிற இடத்தில் பிரேம் இருக்குடா மாற்றம் செய்யுங்கள். கௌதம் அமைதியான அன்பு.

    1. Author

      சரிங்கக்கா… மாத்திடுறேன். நன்றி அக்கா 😍

  2. என்ன காலையில இருந்து எல்லாரும் ரொமான்ஸ் சீனா போடுறாங்க .. ஒருவழியா கல்யாணம் முடிஞ்சிடுச்சு .. இப்போ ஜோடி இல்லாம இருக்கிறது கௌசிக் தான் .. அவனுக்கும் ஒரு ஜோடியை போடுங்க .. பிரேம் உன்னோட லவ் சூப்பர் பா .. கௌதம் சுபா கிட்ட வாங்கினதை திருப்பி கொடுத்துட்ட போல 😜😜

    1. Author

      கொடுத்துதான ஆகணும்… நன்றி 😍

  3. Intha vasanthi ku vera velaiye ilaya ah
    Yepo than thirunthumo therila….
    Veeran superb
    Prem itha twist un kita irunthu na yethir pakavey ila

  4. அவனின் விளக்கமும் தெளிவும் அருமை…

  5. வீரனின் வாய்ச்சொல் அன்றைய அவனது கோபத்தின் விளைவு, பிறகு அவன் கூறிய சொல்லின் மீது மீனாளின் கோபம்.

    இருவருக்கும் ஆற்றாமையினால் விழைந்த கோபமே அன்றி வெறுப்புணர்வு இல்லை.

    அதனை கோகுலின் செயல் தோற்றுவித்த வெறுப்பின் மூலம் அறிந்து கொண்டால் மீனாள்.

    வீரனை கண்ணால் காண்பதே அவன் இருக்கும் இடத்தினில் இருப்பதே மீனாளுக்கு மன நிம்மதியை தோற்றுவிக்கிறது.

    “நான் வேண்டும் என்ற அழுத்தமான எண்ணம் வரும் நேரம் மஞ்சள் கயிறை கட்டு” 😍

    இருவரும் ஒருவருக்கொருவர் மனதை வெளிப்படுத்தி தெளிந்த பின்னர் நேசம் நிறைந்த மனதுடன் திருமணத்தை ஏற்கின்றனர்.

    அவளும் மனதார மஞ்சள் கயிறை கட்டி வீரனை தனது வாழ்க்கைக்குள் வளைத்துக்கொண்டாள், அவனும் மஞ்சள் கயிறை கட்டி உயிரானவளை தனது வாழ்வாக்கிக்கொண்டான்.