
யான் நீயே 2
பாண்டியனின் வீட்டுக்கு பின்னால் நேரெதிர் தான் மருதனின் வீடு. சற்று கூப்பிடும் தூரம் தான். நடுவில் மட்டுமல்லாது இரு வீட்டையும் சுற்றியிருக்கும் வயல்கள், தோட்டங்கள், தோப்புக்கள் யாவும் இருவருக்குமானது.
ஊரிலிருந்து சற்று தள்ளி தங்களது வயலிலேயே இருவரும் வீட்டை கட்டிக்கொண்டனர். முதன்மை சாலையிலிருந்து விளாங்குடி ஊருக்கு செல்லும் சாலை முதலில் தொடுவது இவர்களின் வீட்டையும், காட்டையும் தான். அதன் பின்னான மூன்று நிமிட பயணத்திற்கு அடுத்து தான் ஊரே வரும். விளாங்குடிக்கு இவர்களது வீடு தான் எல்லை.
மருதனின் வீட்டிற்கு சாலையிலிருந்து வயல் பாதை வழியாகவும் செல்லலாம், பாண்டியனின் வீட்டுக்கு பின்னாலிருக்கும் தோப்பு வழியாகவும் செல்லலாம்.
வீரனின் தாத்தா காலத்தில் ஊருக்குள் தான் இருந்தனர். பாண்டியன் மற்றும் மருதனின் திருமணத்திற்கு பின் தான், இருவரும் அருகருகே இருக்க விருப்பம் கொண்டு தங்களுக்கு சொந்தமான வயல்களுக்கு அருகே வீட்டை கட்டிக்கொண்டனர். இது விவாசயத்துக்கும் குடும்பத்துக்கும் வசதியாகவும் ஆகிவிட்டது. ஊருக்குள்ளும் முன்னர் வாழ்ந்த வீடு இருக்கிறது. ஊரின் விசேடங்களின் போது இரு குடும்பத்தாரும் அங்கு தான் கூடிடுவர்.
வீரன் மருதனுக்கு இடையே பிளவு வந்த போதும்… அது மட்டும் மாறாமல் உள்ளது. மாமனும் மருமகனும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளும் சந்தர்ப்பங்களை முற்றிலும் தவிர்த்துவிடுவர்.
அதனாலேயே நேற்றைய இரவிலும், எங்கோ பார்த்தபடி நேர் பார்வையை தவிர்த்திருந்தனர்.
அத்தனை பாசமாக இருந்த இவர்களுக்குள் விரிசல் வந்ததே அன்றைய நிகழ்வு தானே காரணம். முக்கிய புள்ளியான பிரேம் மீது உண்டாகாத கோபம், வீரனின் மீது ஏற்பட்டதற்கு அவனின் பேச்சு தானே! அதுவும் மீனாளை சம்மந்தப்படுத்திய வீரனின் பேச்சு. அவன் பேசியது தவறாகவே இருந்தாலும், சூழ்நிலையை எடுத்துக்காட்டிட தான் பேசியதில் எந்த தவறும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை.
வீரனின் கோபமெல்லாம்… தன் தங்கைக்கு என்ற போது வராத அவரின் கோபம், அவரின் மகளென்றதும் வந்ததோ என்பது தான். அப்போ அவர் தங்களுக்குள் வேற்றுமை பார்ப்பதாகத்தானே அர்த்தம் என்ற வீரனின் எண்ணம் இன்று வரை மாறவில்லை. அவன் மாற்றிக்கொள்ளவும் முயலவில்லை.
என்னதான் சொந்த பிள்ளைகள் போல் அன்பு பாராட்டி சீராட்டினாலும், பெற்ற பிள்ளைகள் தவறே செய்தாலும் அவர்களின் பக்கம் பெற்றோர் நிற்பது தானே நியதி. அதைத்தான் அன்று மருதனும் செய்தார்.
பாசத்தைவிட சொந்த ரத்தம் பெரிதென்று காட்டிவிட்டாரே என்ற ஆதங்கமே அன்றைய வீரனின் கோபத்திற்கு முக்கிய காரணம்.
அனைத்தும் அறிந்திருக்கும் லிங்கத்திற்கு தங்கை சொல்லிச்சென்றதில் சுத்தமாக நம்பிக்கையில்லை.
“அண்ணாவ ஏன் சீண்டுற?” என்று லிங்கம் கேட்டதற்கு, அவள் சொல்லிய பதிலில் ஆச்சர்யம் தான்.
இதனை ஒருநாளும் லிங்கம் கவனித்தது கிடையாது.
அன்றைய பிரச்சனையின் போது அங்கையை தவிர அனைவருக்குமே நன்கு விவரம் அறிந்த வயது.
பிரேம் தவறை சுட்டிக்காட்டிட வீரன் மீனாளை வைத்து பேசியதாகவே இருந்தாலும், அதனின் பொருள் மீனாளை இன்றளவிலும் வீரனிடமிருந்து எட்ட நிற்க வைத்திருக்கும்போது எப்படி காதல், கல்யாணம் என்கிற விருப்பம் ஏற்படும். ஆதலாலே நம்ப முடியாது குழம்பினான்.
“மீனாள் மேல அண்ணாக்கு விருப்பம் அண்ணே! அதனாலதான் விலகியே இருந்தாலும், எதிலும் அவளை விட்டுட்டு நமக்கு தனியா எதுவும் செய்யுறதில்லை” என்றாள்.
இது இயல்பானது. வீரனுக்கு கீழ் சிறியவர்கள் ஐவர் இருக்கும்போது அவள் ஒருத்தியை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களுக்கு எப்படி ஒன்றை செய்திட முடியும்? இதிலென்ன தனிப்பட்ட விருப்பம் இருக்கிறது?
லிங்கத்தின் கேள்விக்கு நாச்சியாவிடம் தெளிவான பதிலில்லை. ஆனால் தான் சொல்வது உண்மையென்று சத்தியம் செய்யாத குறையாக சொல்லிச்செல்ல…
“அப்படியொன்னு நடந்தாக்கா சந்தோஷந்தேன்” என்று அப்பேச்சினை கடந்துவிட்டான் லிங்கம்.
வீரன் வீட்டிற்குள் வரும்போது…
“இந்த வருசம் கரியனை இறக்க வேண்டாமப்பு” என்றார் மீனாட்சி.
ஏற்கனவே வீரன் எடுத்திருந்த முடிவு தான் அது. ‘கரியன் களத்தில் இறங்குவதால் பல வீரர்களுக்கு பயம். அந்த பயம் தான் அவனை களவாட வைத்தது. அதுமட்டுமில்லாது கரியன் இறங்காது போனால், மற்ற காளைகளின் மவுசு உயரும். கொஞ்சம் ஒதுங்கி நிற்போம்’ என்று எண்ணியிருந்தான். அதையே மீனாட்சியும் சொல்ல ஏன் என்பதைப்போல் பார்த்தான்.
“எதுக்கப்பு ஊர் பொல்லாப்பு. கரியனை கடத்த பார்த்தவனுவ வஞ்சம் உம் பக்கட்டு திரும்ப எம்புட்டு நேரமாவப்போவுது. அடுத்த வருசம் பார்த்துக்கிடலாம்” என்றார்.
வீரன் எப்போதுமே பெரியவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நடப்பவன். அவர்கள் சொல்வது ஏற்புடையது எனும் நிலையில் தவறாது செய்திடுவான். இப்போதைய மீனாட்சியின் பேச்சுக்கு பின்னால் தன்னை குறித்த பயமே காரணமென்று அறிந்தவனுக்கு, அதனை போக்கிடத்தான் தோன்றியது. ஆதலால் சரியென சொல்லிவிட்டான்.
“லிங்கா” என்று தம்பியை அழைத்த வீரன்,
“ஹோட்டல் கணக்கு வழக்கு சரிபார்த்து மாமாகிட்ட காட்டிடு. இயர் எண்ட் ரிப்போர்ட் அவர்கிட்ட காட்ட வேணாமா?” என்றான்.
“வொர்க்கர்ஸ்க்கு பொங்கல் போனஸ் கொடுத்த லிஸ்ட்டும் காட்டிடு” என்க தலையை சரியெனும் விதமாக ஆட்டிக்கொண்டிருந்த லிங்கம்…
“நீயி காட்டும் சொல்லுறீரு… அவிங்க, இதெல்லாம் நான் பார்த்து என்னமாட்டிக்கு ஆவுதுன்னு கேட்குறாவ” என்று இறுதியாக முணுமுணுத்தான்.
“பணத்தை வச்சு ஒரு சலம்பல் வேணாம்டா” என்றான் வீரன்.
“அன்னைக்கு நம்ம மேல தப்பு இல்லையே!”
சொல்லிய லிங்கத்தை அழுத்தமாக பார்த்த வீரன் ஒன்றும் பேசாது சென்றுவிட்டான்.
ஆலைக்கு செல்ல கிளம்பி வந்தவனிடம்…
“போவியலு (போகி) அதுவுமா போவனுமாப்பு?” என்று வினவினார் அபிராமி.
“பஞ்சாப்புக்கு லோடு அனுப்பனும். படையலுக்கு வந்துடுவேன்” என்ற வீரன் புறப்பட்டிருந்தான்.
“வெரசா வாங்கப்பு” என்ற மீனாட்சிக்கு தலையசைத்து சென்றான்.
“நானும் மாமா வூட்டுக்கு போயி கணக்கை காட்டிபோட்டு வந்துடுறேன்” என்று தோப்பு வழியாக லிங்கம் சென்றிட…
காலையிலிருந்து விடாது அடித்துக்கொண்டிருக்கும் தன்னுடைய அலைப்பேசியை மொத்தமாக அணைத்து வைத்தாள் அழகு நாச்சியார்.
லிங்கம் மருதனின் வீட்டிற்கு வந்த போது… வீடே சத்தமாக இருந்தது.
“என்ன காலையிலே சலம்பலா இருக்கு. வம்பை கூட்டுனது யாரு?” என்றவாறே வீட்டின் முன்னிருந்த திண்ணையில் அமர்ந்தான்.
“வாய்யா மாப்பிள்ளை. கரியன் சவுரியமா?” என்று வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த மருதன் கையினை துண்டால் துடைத்தவாறு லிங்கம் அருகே வந்தார்.
“ராத்திரி பார்த்தீய்ங்க தானே? பொறவு என்ன விசாரணை” என்ற லிங்கம், “மீனா சத்தம் அம்புட்டு தொலைவு கேட்குது. என்னவாம்?” என்றவன், அவர் கையில் சில பதிவேட்டுகளை திணித்தான்.
“அந்த பெரிய மனுசன் காட்ட சொன்னானாக்கும்?” என்று நொடித்த மருதன் அந்த பதிவேட்டை திறந்துகூட பார்க்காது திண்ணையின் ஓரம் வைத்தார்.
“மகா… உம்ம மருமவன் வந்திருக்கியான் பாரு” என்று உள்நோக்கி குரல் கொடுத்தார்.
“யோவ் மாமா… நான் கொண்டு வந்ததுக்காவது அதை தொறந்து பாரேன். உனக்காகத்தான் கம்ப்யூட்டர் கணக்கில்லாம நோட்டுலையும் எழுதியாறேன்” என்றான் சலிப்பாக.
“நான் கேட்டமாட்டிக்கு, லந்து பேசாதடா. காட்ட சொன்னவண்டே போய் கொடு. இனியொரு முறை நோட்டை தூக்கிட்டு வந்தேன்னு வைய்யீ…” என்று விரல் நீட்டியவர், “எம் பாண்டியனே என்கிட்ட இதெல்லாம் காட்டுனதில்லை. அதெல்லாம் நம்பிக்கை நிறையவே இருக்குன்னு சொல்லு” என்றார்.
“இந்த நம்பிக்கை அன்னைக்கு இல்லாமத்தான் அம்புட்டு பேச்சு பேசுனீங்களோ?”
“மாமா…”
மீனாளின் அதட்டலான விளிப்பிலே தான் என்ன கேட்டுவிட்டோம் என்பது புரிந்து மருதனை வருத்தமாக ஏறிட்டான் லிங்கம்.
நொடியில் மருதனின் முகம் வாடிப்போனது.
“மன்னிச்சிக்கிடு மாமா. ஏதோ ரோசனையில சொல்லிப்புட்டேன்” என்று அவரின் கையை பிடித்து லிங்கம் மன்னிப்பு வேண்டிட…
“அவனுக்கு என்னை நல்லாவே புரியும்டே” எனக்கூறி அவனின் தோளில் தட்டியவராக நகர்ந்தார்.
“ராங்கா கேட்டுப்புட்டேனாக்கும்!”
அங்கு நின்றிருந்த மீனாளிடம் உதடு பிதுக்கி வினவினான்.
“விடு மாமா. சரியாப்போகும். நீயுமென்ன வேணுமாட்டிக்கா கேட்ட” என்ற மீனாள், “ஆலைக்கு போவியோ?” எனக் கேட்டாள்.
“இல்லைடா. வாழைக்கு உரம் வைக்குது. லோடு அனுப்பனுமாட்டிக்கு, வெரசா போனாங்க ஆலைக்கு. அதனால நான் வாழை தோப்புக்கு போவனும்” என்றான்.
“ஓ…” என்று அவள் உதடு குவிக்க…
“என்னவாம்?” என்றான்.
“அவிங்க செல்ல மருமவனுக்கு பலகாரம் கொண்டுபோய் கொடுக்கணுமாம்” என்றாள். உள்ளே எட்டி பார்த்துக்கொண்டே அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
“அதுக்குத்தேன் அம்புட்டு சத்தமா அத்தைகிட்ட கத்திட்டு இருந்தியா?” என்றவன், “பிரேம் வரலையா?” என்றான்.
“வெள்ளன வந்தான். உறங்கிட்டு இருக்கிய்யான்” என்றவள், “என்ன காலையிலே கட்டுத்தறியில வட்ட மேசை மாநாடு போயிட்டு இருந்துச்சு?” என தான் மாடியில் முடியை உலர்த்திக்கொண்டிருக்கும் போது அவர்கள் மூவரும் நின்று பேசியதை கவனித்தவளாக வினவினாள்.
“அப்போ நீயும் பார்த்திருக்க?”
‘நாச்சியா சொன்னது ஒருவேளை உண்மையா இருக்குமோ?’ மனதில் நினைத்தவாறு கேட்டிருந்தான்.
“நான் யாரையும் பாக்கல” என்று சட்டென்று தடுமாறினாள்.
“நான் குறிப்பிட்டு சொல்லலையே!” இப்போது லிங்கத்தின் மனதில் சந்தேகம் விழுந்தது.
‘நாச்சியா சொன்னமாறி அண்ணேக்கு மட்டுந்தானா? இல்லை இவளுக்குமா?’ மீனாளை பார்த்தபடி நின்றிருந்தான்.
“ஏய் இந்தாடி. கொண்டு போய் கொடுத்துட்டு சுருக்க வந்து சேரு” என்று இரு கையிலும் பையோடு வந்த மகா… ஒன்றை மீனாளிடம் கொடுத்துவிட்டு, மற்றொன்றை லிங்கத்திடம் கொடுத்தார்.
“பெரிய மருமவனுக்கு மட்டும் ஸ்பெஷலா போகுதுமாட்டிக்கு?” என்றான் அவர் கொடுத்த பையினை வாங்கியபடி.
“வீரன் ஆலைக்கு போனதை பார்த்தேண்டா. மதினி வேற போன் போட்டாய்ங்க, சாயங்காலம் கிணத்தடியில போவி படையலு ஒண்ணா போட்டுக்குலான்னு. அப்போதேன் பெரியவன் சாப்பிடாமல் வேலன்னு போயிட்டான் சொன்னாய்ங்க. சூடான்னா ரெண்டு சேர்த்து திம்பியான்! அதான் அவனுக்கு தனியா கொடுத்தனுப்புறேன்” என்று விளக்கம் கொடுத்தார்.
“என்னடி என் மூஞ்சியையே பார்த்திக்கிட்டு நிக்குறவ? கிளம்பு. பணம் கேட்டியே அவன்கிட்டவே வாங்கிக்க. டவுனுக்கு போயிட்டு சீக்கிரம் வா” என்று மீண்டும் சொல்லி உள்ளே வேலையிருப்பதாக மகா செல்ல…
“பிரேம் எழுந்ததும் வாழை தோப்புக்கு வர சொல்லு அத்தை” என்றான் லிங்கம்.
“மாமா உன்கிட்ட இருந்தால் ஏழாயிரம் பணம் கொடு?” என்றாள் லிங்கத்திடம்.
“இப்போவா?” என்ற லிங்கம் “ஜிபே பண்ணவா?” எனக் கேட்க,
“ப்ரொஜெக்ட் ரெக்கார்ட் பொங்க லீவு முடிஞ்சு கொடுக்கணும் மாமா. டவுனுல ஒரு பக்கத்துக்கு பதினோரு ரூவா கேட்குறா(ய்)ன். அதில்லாமல் டைப்பிங்க்கு தனியா கேட்க்குறான். இன்னைக்கே கொடுத்தா தான், லீவு முடிஞ்சு காலேஜ் போறன்னைக்கு பைண்ட் பண்ணித் தருவான். அம்மா அம்புட்டு காசு கையில இல்லங்குது. ஐயாவை கேட்டா, நடவு ஆளுக்கு கூலி கொடுத்தாச்சு. நாளைக்கு தரேன் சொல்றாங்க. கடையில அவன் பணமா கொடுங்கிறாய்ங்க” என்றாள்.
“என்கிட்டையும் இப்போ கையில இல்லையே மீனாக்குட்டி” என்ற லிங்கம், “நீ அண்ணாகிட்டவே வாங்கிக்கோ” என்றான்.
“போயா” என்றவள் லிங்கத்தின் தலையிலே கொட்டிவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு முகம் சுருக்கியவளாக ஆலையை நோக்கிச் சென்றாள்.
வண்டியில் சென்று கொண்டிருந்த மீனாளின் நினைவுகள் யாவும் கடந்த காலத்தில் பயணித்துக் கொண்டிருந்தது.
அவளுக்கு வீரனென்றால் அறியாத வயதிலேயே அத்தனை பிடித்தம். உடன்பிறந்த பிரேம்மைவிட வீரனிடத்தில் ஒட்டுதல் அதிகம்.
அன்று அவன் பேசிய வார்த்தைகள் அவன்மீது ஒதுக்கத்தைக் கொடுத்திருக்க… இன்று வரை அதிலிருந்து மீள முடியாது தள்ளி நிற்கிறாள்.
வீரன் எதற்காக அப்படி பேசினானென்று தெரிந்திருந்த போதிலும்,
என்ன வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கட்டும், சுட்டிக்காட்டிட நீயும் அதுபோல் பேசிவிடுவாயா என்கிற குமுறல் அவளிடம்.
அன்றே பார்வையால் மன்னிப்பை யாசித்திருந்தான். ஏனோ அவளால் ஏற்க முடியவில்லை.
தன்னுடைய மாமாவா இப்படி பேசியதென்கிற வலி அவளுக்கு.
பிரேம் செய்தது கூட அவளுக்கு கோபத்தை தான் கொடுத்தது, வீரன் பேசியது அத்தனை வலியை இன்று வரை கொடுக்குமென்று நினைத்திருக்கமாட்டாள்.
சிறு வயது முதலே மீனாளுக்கு ஒன்றென்றால் வீரன் வேண்டும். அது பாடம் சொல்லிக் கொடுப்பதாகட்டும், ஆடை தேர்வு முதல், வகுப்பில் தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவு வரை அவளுக்கு அவனது கருத்து வேண்டுமாய் இருக்கும்.
அங்கையிடம் அதீத பிரியமாக இருக்கின்றானென்று… அதில் கூட அவளுக்கு பொறாமை தான்.
ஆனால் இப்போது இவை யாவும் அதே பிணைப்போடு உள்ளதா? அவளுக்கே இல்லையென்று தெரியும். வீரனின் வார்த்தைகள் அவளை மனதால் கொன்றிருந்தது.
ஆலையின் வாயில் பகுதியில் நுழைந்ததும் அவளது சிந்தனையும் நிகழ் மீண்டது.
மிகப்பெரும் பரப்பு. பரந்து விரிந்து அத்தனை பெரிய ஆலை. ஆங்காங்கே களத்தில் நெற்குவியல்கள் வெயிலில் தங்கமாக மின்னின.
ஒரு பக்கம் நெல் உலர்த்தப்பட, மற்றொரு பக்கம் தூறிவிடப்பட்டது.
ஒரு பக்கம் மூட்டை பிடிக்க, மற்றொரு பக்கம் அடுக்கப்பட்டது.
நெல் அவியல் வாயு குமிழியில் கரும் புகை ஆவியாக வளிமண்டலம் சென்று கொண்டிருக்க… கழிவுகள் பகுதியை சேதப்படுத்தாதளவிற்கு, கழிவு நீர் வெளியேறும் இடங்களில் நீரை உறிஞ்சி, நிலத்தடி சுத்திகரிப்பு செய்யும் பலவகையான மரங்களும், செடிகளும் வைக்கப்பட்டிருந்தன.
வெளியில் நின்றே சுற்றி பார்த்தாள். வேலை நேரத்தில் அவன் அறையில் உட்கார்ந்திருக்க மாட்டானென்று அறிந்தவளாக. வீரன் எங்கும் தென்படவில்லை.
அலைப்பேசியை எடுத்து அழைப்பு விடுத்தாள்.
முழுதாய் ஒலித்து அடங்கியது.
“என்ன கண்ணு மாமன தேடுறியாக்கும். பின்னால குடவுன் பக்கட்டு லோடு ஏத்திக்கிட்டிருக்கு. அப்பு கணக்கு பார்த்திட்டிருக்கு.” அங்கு வேலை செய்யும் பெண்மணி கூறிட,
‘அங்கவே போய் கொடுத்திடுவோம்’ என மீனாள் வண்டியை முடுக்கிட, வீரன் திருப்பி அழைத்துவிட்டான்.
“அம்மா இறைச்சி பலகாரம் கொடுத்தனுப்புனாங்க.”
இவள் ஹலோ என்றும் ஆரம்பிக்கவில்லை, அவன் என்னவென்றும் கேட்கவில்லை. வந்த காரணத்தை நேரடியாக சொல்லியிருந்தாள்.
“அறையில வச்சிடு” என்றவன்,
அவள் துண்டிக்காது அமைதியாக இருக்கவும்,
“வேறென்ன?” எனக் கேட்டிருந்தான்.
“பணம் வேணும்.” அவள் தயங்கவில்லை. உரிமையுள்ள உறவாயிற்றே! விலகியிருந்தாலும், மனதில் வேற்றுமை கொண்டுவிடுமா?
“என் அறை மேசை இழுவையில் வாலட் இருக்கு. எடுத்துக்கோ” என்றான்.
“தொகை கொஞ்சம் அதிகம்.”
வீரன் எவ்வளவென்று கேட்காது எடுத்துக்கொள்ள சொல்லவும், பணமாக அவ்வளவு வைத்திருப்பானா? என்கிற சந்தேகத்தில் கூறினாள்.
“உள் ரூம் லாக்கரில் அவியல் போட்டதுக்கு வரவேண்டிய தொகை இப்போ வந்ததுன்னு வாங்கி வச்சேன். மேசை இழுவையில் லாக்கர் சாவி இருக்கு” என்றவன், “வேறெதுவும்?” என்றான்.
“ஆங்… இல்லை” என்று தடுமாறியவள், “நீங்களே வந்து எடுத்து கொடுங்களேன்!” என்றாள்.
“நான் இங்கனக்குள்ள சோலியா நிக்கேன்…”
“ஹோ… வாலட்டில் எம்புட்டு இருக்கு?”
“அஞ்சு ரோஸ் கலர் நோட்டு இருக்கு.”
“அது போதும்” என்றவள் அலைப்பேசியை அணைத்திட…
‘மொத்தமும் அவளுக்குத்தான். லாக்கரில் கை வைக்க இம்புட்டு ரோசிக்கிறா(ள்)’ என்று தனக்குள் முனங்கிய வீரன் சட்டென்று நினைவு வந்தவனாக, அதி வேகத்தில் ஆலைக்கு உள்ளிருக்கும் தன்னுடைய அறை நோக்கி ஓடி வந்தான்.
வீரன் அறையின் கண்ணாடி கதவில் திறந்திட கை வைத்திட, மீனாள் மேசை இழுவையை மூடிக்கொண்டிருந்தாள்.
வேலையாட்களுடன் தானும் சேர்ந்து மூட்டை அடுக்கிக்கொண்டிருந்த வீரன், உள் பனியனோடு மூச்சிரைக்க சட்டென்று முன் வந்து நிற்கவும், ஒரு கணம் மிரண்டு பின் வாங்கியவள்…
என்ன என்பதைப்போல் ஏறிட…
அவனோ ஒண்ணுமில்லை என்பதைப்போல் தலையாட்டிவிட்டு திரும்பி நடக்க,
“அச்சோ இதென்ன காயம்” என்று பல வருடங்களுக்குப் பின்னர், பதற்றத்தில் தன்னைப்போல் அவனருகில் சென்று தோள்பட்டையில் ரத்தம் உறைந்து காணப்பட்ட காயத்தில் விரல் வைத்து தொட்டு பார்த்திருந்தாள்.
அவளின் தீண்டல் அவனுள் எதையோ கட்டவிழ்த்தது. முதுகுக்காட்டியபடியே கண் மூடிக்கொண்டான்.
“எம்புட்டு பெருசா இருக்கு” என்று அவனின் காயத்தில் மட்டும் கண்ணாக இருந்தவள், அவனின் வலியை உணர்ந்தவளாக தன்னுடைய இதழ் குவித்து காயத்தில் ஊதினாள்.
எரிச்சல் மட்டுபடுவதற்கு, அவனது தேகம் தீப்பிடித்தது.
சட்டென்று விறைத்தவன்,
“சின்ன காயம் தான். ராத்திரி சலம்பல்ல எவனோ கிழிச்சிபுட்டான்” என்று இரண்டடி நகர்ந்து நின்றான்.
“ஏதே காயம் சிறுசா இருக்கா? எம்புட்டு நீளம்? வூட்டுல யாரும் கவனிக்கலையா?” என்று மீனாள் மீண்டும் அவனை நெருங்கி என்னவென்று ஆராய…
“ஹேய் போடி” என்றிருந்தான்.
சட்டென்று மீனாளின் கண்கள் துளிர்த்துவிட்டன.
“ம்ப்ச்… இம்சையை கூட்டாதடி. வூட்டுல யாருக்கும் சொல்ல வேணாம். நான் ஆஸ்பத்திரி போறேன். நீயி கெளம்பு” என்றான். அவளின் கண்ணீர் முகம் பிடிக்காதவனாக. திரும்பி நின்று.
அவனது கோபமும் விலகளும் ஏனென்று தெரியாத வலியை கொடுக்க விழிகளை துடைத்துக்கொண்டே ஓடிவிட்டாள்.
“இவள் பக்கட்டு வந்தால் என்ன இப்படி ஃபீலாவுது…” தலையை இருபக்கமும் உலுக்கிக்கொண்டான்.
“படுத்துறா(ள்)!” என்றவன் நினைவு வந்தவனாக தன்னுடைய வாலட்டை எடுத்து பார்த்து…
“இதை பார்த்திருப்பாளா?” என தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்.
“பார்த்திருந்தால் சாதரணமா இருந்திருக்கமாட்டாளே! அப்போ பார்க்கலையோ?”
“வீரா ரொம்ப குழம்பாதே. பார்த்திருந்தாக்கா எப்பவும் முறைக்கிற கண்ணுல இன்னைக்கு டோஸ் கூடியிருக்கும்” என்று தனக்குத்தானே சமாதானம் செய்தவனாக வேலையை கவனிக்கத் தொடங்கினான்.
சில நிமிடங்களில் அவனது அலைப்பேசி விடாது ஒலிக்கத் துவங்கியது.
மூட்டை கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தவன்,
“வூட்டுல வத்திவச்சுட்டாள் போல” என்று முணுமுணுத்தான்.
“அண்ணே உங்க போனு தான். நீரு எடுக்காம அமியாது போல” என்று ஒருவன் சொல்ல,
“நீயி லாரியை ஒழுங்கா ஓட்டிக்கிட்டு போடா. பாதி ராத்திரியில சரக்கு சேர்ந்திருக்கணும்” என்று அவனை அதட்டி, சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு, அங்கிருந்த மேலாளரிடம் பார்த்துக்க சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.
ஒலிக்கும் அலைப்பேசி நிறுத்தாது சத்தமிட்டுக் கொண்டே இருந்தது.
சாலையிலிருந்து வீட்டுக்கு இறங்கும் பாதையில் வண்டியை செலுத்தியதுமே காணும் காட்சியை நம்பாது விழி விரித்திட்டான்.
அவன் வீட்டுத் திண்ணையில் மருதன் அமர்ந்திருந்தார்.
‘இவரு இங்கனக்குள்ள உட்கார்ந்திருக்கும் போது மத்தவங்க எங்குட்டு போனாய்ங்க?’
எண்ணியவனாக வீட்டிற்குள் நுழைந்தவன், ஒட்டு மொத்தமாக அனைவரும் ஒன்று கூடியிருப்பதை கண்டு, அங்கு முற்றத்து தூணில் சாய்ந்து நின்றிருந்த மீனாளை நன்கு முறைத்தான்.
மீனாள் லிங்கத்தின் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டாள்.
“என்னவாம்? உங்க அண்ணே பாசமா பாக்குறமாட்டிக்கு இருக்கு?” லிங்கத்தின் முதுகிடம் முணுமுணுத்தாள்.
“செத்த உரக்க கேளு. பதில் சொல்லுவாரு” என்ற லிங்கத்தின் முதுகிலே குத்தியிருந்தாள் மீனாள்.
லிங்கம் வலி தாங்காது நகர்ந்திட…
“உன்னைய சொல்லாதன்னு சொன்னனா இல்லையா?” என்று மீனாளை விரல் நீட்டி அதட்டினான்.
“அவளை ஏன் அப்பு வைய்யிற? புள்ள அது சோலியைக்கூட மறந்து, அழுதுகிட்டே வந்து விசயத்தை சொல்லுச்சு” என்ற மீனாட்சி, வீரனின் சட்டை பொத்தானில் கை வைத்தார்.
“அப்பத்தா என்ன செய்யுற நீயி?” விலகி நின்றான்.
“முதுவு பக்கம் தோள்பட்டையில காயமுன்னு சொன்னா(ள்). பாக்க வேண்டாமா?” என்றார் மீனாட்சி.
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்” என்ற வீரன் மாடியேறப்போக…
“அதேன் காட்ட சொல்றாய்ங்களே, எதுக்கு வீம்பு பண்ணிக்கிட்டு” என்று வெளியிலிருந்து குரல் கொடுத்தார் மருதன்.
“உனக்கு என்னமோன்னு இந்தப்பக்கமே வராத மாமா(மருதன்) வந்திருக்கிறாரு கண்ணு. செத்த சொக்காவை கழட்டேன்” என்றார் பாண்டியன்.
“அச்சோ ஐயா” என்ற வீரன் மீண்டும் மீனாளை முறைத்தான்.
“ஏன் மாமா சண்டித்தனம் செய்யுற. சொக்காவை கழட்டு. நான் பார்க்கிறேன், காயம் சிறுசா பெருசான்னு” என்று அங்கை முன்வர,
“இம்புட்டு நேரமாட்டிக்கு எங்கட்டு மறைஞ்சு நின்ன?” என்ற வீரன்,
“உன் சேக்காலி புள்ள ரம்யா அண்ணகிட்ட உனக்கென்ன பேச்சு?” எனக்கேட்டான்.
“உன் காயத்தை மறைக்க ஒண்ணுமில்லாத விசயத்தை வூடால கொண்டுவராத மாமா” என்று வீரனுக்கு மேல் சத்தமிட்டாள் அங்கை.
வீரன் அப்படியொன்றும் இல்லாத விடயத்திற்கு சத்தமிடமாட்டான் என்பதால், மொத்த குடும்பமும் அங்கையை பார்க்க…
“பாரு நீ சொன்னதும் நானென்னவோ தப்பு பண்ணிட்ட கணக்கா பாக்குறாய்ங்க” என்ற அங்கை வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு, “சாயங்காலம் நாங்க வர நேரத்துக்கு ரம்யா அண்ணனும் வர்றாங்க. பஸ் வரவரைக்கும் அவக்கூட நிப்பாங்க. அப்போ சும்மா பேசிக்கிறதுதேன்” என்றாள்.
வீரன் அங்கையை அழுத்தமாக ஏறிட,
“உன் மேல அப்புக்கு அதிக அக்கறை ராசாத்தி. அதான் சூதானமா இருக்கணுமாட்டிக்கு கேட்கிறான்” என்ற அபிராமி,
“நீ மொத காயத்தை காட்டு. ஆஸ்பத்திரி வேணுன்னா போயி வருவோம்” என்க, வெளியிலிருந்து மருதனும் அவன் சட்டையை கழுட்டுவானா எனும் விதமாக அவனையே பார்த்திருந்தார்.
அங்கிருந்த அனைவருமே அங்கை விடயத்தை எளிதாக எடுத்துக்கொண்டனர். சொல்லப்போனால் அச்சமயம் அது அவ்வளவு பெரியதாகவே அங்கிருக்கும் யாருக்கும் தெரியவில்லை. பொண்ணு பையனிடம் பேசக்கூடாதென்று நினைக்கும் கட்டுப்பட்டித்தனம் கொண்டவர்கள் இல்லையே. ஆதலால் அதனை அத்தனை சீரியஸாக பார்க்கத் தவறிவிட்டனர்.
மீனாள் மட்டுமே காரணமின்றி வீரன் எதையும் சொல்லிடமாட்டானென்று மாற்று கோணத்தில் தங்கையை ஏறிட்டாள். பின்பு விசாரிக்க வேண்டுமென்றும் நினைத்துக் கொண்டாள்.
“எம்புட்டு நேரம் அண்ணே நிக்குறது காயத்தை காட்டு” என்று நாச்சி அவனருகில் வர,
‘இதற்குமேல் விடமாட்டார்கள்’ என்று சட்டையை கழட்டி காயத்தை காண்பித்தான்.
பார்த்ததும் லிங்கம் வேகமாக வீரனருகில் வந்தான்.
“ராத்திரி உங்கமேல அடி விழுந்த மாதிரியே இல்லையேண்ணே… இம்புட்டு நீளமான வெட்டு எப்படி?” என்ற லிங்கம், “நாங்க எப்படி கவனிக்காம விட்டோம்” என்றான்.
“எனக்கே அடிபட்டது தெரியலடா. விடுங்க” என்றவனை உட்கார வைத்து ஒவ்வொருவரும் பொங்கல் அதுவுமா இப்படியாகிப்போச்சே என்று வருந்திட… அங்கை வீரனின் காலுக்கு அருகில் அமர்ந்து அழுதே விட்டாள்.
“ஹேய் அழாத. ஒன்னுமாவல. வலிக்கக்கூடயில்லை” என்று அங்கையின் கண்ணீரை துடைத்துவிட்டான்.
“பொய் சொல்லாத மாமா. எம்புட்டு நீட்டா இருக்கு” என்ற அங்கை அவனின் மடியிலேயே படுத்து தேம்பிட…
“சுத்தி உட்கார்ந்து வெசனப்பட்டா ஆச்சா? ஆழமா இருக்கும் போலவே! ஆஸ்பத்திரி போகச்சொல்லுங்க” என்று வெளியிலிருந்து குரல் கொடுத்தார் மருதன்.
அடுத்து மொத்த குடும்பமும் லிங்கத்துடன் அவனை மருத்துவமனை செல்ல தொல்லை செய்திட…
வேண்டா வெறுப்பாக எழுந்தான்.
“சரிம்மா நானும் மருத(மதுரை) போயிட்டு வரேன்” என்று மீனாள் கிளம்பிட..
“காலையிலே போறேன்னு போன?” மகா வினவினார்.
“ஆலைக்கு போயிட்டு மருத போவாம்மா வந்துட்டேம்மா. இன்னைக்கு கொடுக்கலன்னா சரியான நேரத்துக்கு தரமாட்டான்” என்ற மீனாள் பையினை மாட்டிக்கொண்டு வெளியில் வந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தை உயிர்ப்பிக்க…
ஏற்கனவே தனக்காகக் காத்திருந்த லிங்கத்தின் வண்டியில் அமராது, மீனாளின் பின்னால் சென்று அமர்ந்தான் வீரன்.
“அண்ணே!”
லிங்கம் அழைத்திட…
“இவளும் மருத தான் போறாள். மாட்டிவிட்டாள் தானே! கூட்டிட்டுப்போவட்டும்” என்றான் வீரன்.
வாயில் முனங்கியவளாக மீனாள் வண்டியை செலுத்தியிருந்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.



மதுரை வட்டார வழக்கு அழகாக உள்ளது. மிக நேர்த்தியான இயல்பான உரையாடல்கள் அதுவும் அந்த மண்ணின் மனம் மாறாமல்.
நெல் ஆலை பற்றிய விவரிப்பு அழகு.
ஒருத்தன் கம்ப்யூட்டர் பதிவு பத்தாம கையில எழுதியாரான் பாவம் அவன மதிக்க கூட மாட்டேங்கிறாரு மாமனார். 🤣
சொல்ல வேண்டியது தானே அந்த கட்டுத்தறி வட்டமேசை மாநாடு உன்னுடைய முடி உலர்தலை பற்றியது என்று. 🤣
உரிமையுள்ள உறவுகள் பாசம் இருப்பினும் ஏதோ ஒரு மனகசப்பில் விலகி நிற்கின்றன.
வீரன் சுட்டிக்காட்டி பேசிய ஏதோ ஒரு விடயம் இன்னும் மீனாளின் மனதினில் நெருடலாய். என்னவாக இருக்கும்? பார்ப்போம்.
உங்களது கருத்தும் மிக அழகு… மனமார்ந்த நன்றி ❤️❤️