Loading

யான் நீயே 18

“இன்னும் வேறென்னவோ நடந்திருக்குமாட்டிருக்கேண்ணே?”

லிங்கம் அவ்வாறு கேட்டதும்…

வீரன் நடந்ததை விவரித்தான்.

வீட்டிலிருந்து புறப்பட்டு வீரன் நேராகச் சென்றது தன்னுடைய அரிசி ஆலைக்குத்தான்.

வீரன் மதுரை மாவட்டத்தில் அவனது ஆலையை வைத்தே மிகவும் பிரபலம். அதிலும் லிங்கத்திற்கு முன்பு அவன் பொறுப்பில் ஹோட்டல்கள் இருந்ததால், தொழில் சங்கம், அரசியல் பிரமுகர்கள் முதற்கொண்டு வீரன் அறியப்படுவான். மற்றவர்கள் புகழின் அடிப்படையில் தங்களுடன் இணைத்துக்கொள்ள விரும்பி தங்களுடன் இழுக்க முயற்சிக்க, தொழிலை மட்டுமே வளர்ச்சியாகக் கொண்டு அனைத்திலிருந்தும் தன்னை ஒதுக்கியே வைத்துக்கொண்டான்.

அவன் தன் தொழில் பலத்தையோ, செல்வ செழிப்பையோ எங்கும் காட்டியது இல்லை. காட்ட முனைந்ததுமில்லை.

அவனின் வளர்ச்சியில் பலர் வஞ்சம் கொண்டு அழிக்க முயன்ற போதும், தன்னுடைய நேர்மையால் மட்டுமே அவர்களை அடக்கி வைத்திருக்கிறான்.

வீரனென்றால் அமைதி மட்டுமல்ல அதிரடியும் வேகமும் உண்டென்று அவனிடம் மோதி தோற்றவர்களுக்கு மட்டுமே தெரியும். அது அவனது குடும்பமே அறிந்திடாத அவனின் மறுபக்கம்.

லிங்கம் ஹோட்டல்களின் பொறுப்பை கையிலெடுத்த பின்னர், பல தடைகள் ஏற்பட…

“என்னண்ணே கீழ இழுத்துவிட இம்புட்டு பயலுவ காத்துக்கிடானுவ. எப்படி சமாளிக்க?” என்று கேட்க,

“நீ உன் சோலியை மட்டும் பாரு லிங்கு. எதாவதுன்னு மறைக்காம என்கிட்ட சொல்லிபுடு. உன்னால முடியுமின்னாக்கா நான் வழிக்காட்டுறேன். இல்லையா நானே பார்த்துக்கிறேன்” என்று அவனின் தம்பிக்கு பின்னே தளபதியாக இன்றளவும் உறுதுணையாக நின்று கொண்டிருக்கிறான் வீர அமிழ்திறைவன்.

வீரனின் இப்பக்கம் அறிந்திருந்த லிங்கத்திற்கு, தன்னுடைய உடன் பிறப்பின் கோபத்திற்கு பின்னே வலுவான காரணமிருக்குமென்று எண்ணம்.

ஓட்டலில் பிரச்சினை செய்பவன் யாரென்று அடித்தது வரை மீனாளிடம் அவன் நடந்துகொண்ட முறைக்காக இருக்கலாம்…

ஆனால் எடுத்ததும் கை வைக்கும் ரகமில்லை வீரன். அதனை லிங்கம் நன்கு அறிவான். அதனால் தான் இன்னமும் என்னவோ உள்ளது என்று கேட்க வீரன், மீனாள் கூறியதோடு தான் ஆலைக்கு சென்ற பின்னர் நடந்ததைக் கூறினான்.

வீரன் ஆலைக்கு சென்றதுமே நேரடியாக தொழில் சங்க தலைவருக்கே அழைத்து குருமூர்த்தியைப் பற்றி அவரின் குணம் பற்றி தெரிந்துகொண்டான். உடன் அவரின் அலைப்பேசியின் எண்ணையும்.

சில நிமிடங்கள் தன்னை நிதானித்து குருமூர்த்திக்கு அழைத்தான்.

எடுத்ததும் அவர்,

“நாளைக்கு எப்போ என்ன ஏதுன்னு விசாரிக்க அழைச்சிங்களாக்கும்?” என்று அவர் வினவ, விடயம் அவர் வரை தெரியுமென்று அறிந்துகொண்டான் வீரன்.

“பொண்ணு வூட்டுல எல்லாம் சொல்லுச்சா? சொல்லியிருக்கும். எம் பையனை வேணாமின்னு சொல்ல முடியுமா?” என்று கேட்டு அவர் சிரிக்க…

“இது ஒத்துவராதுங்க. நீங்க நாளைக்கு இங்குட்டு வந்து அவமானப்பட்டு போவவேணாமின்னு நினைச்சு, வரவேணா சொல்லதாங்க கூப்பிட்டேன்” என்று எவ்வித பூசலுமின்றி வீரன் கூறினான்.

“என்ன தம்பி நான் யாரு… என் செல்வாக்கு என்னன்னு தெரியாம பேசுறீய்ங்க. அவவன் எம் பையனுக்கு பொண்ணை கட்டிக்கொடுக்க லைனுல நிக்கிறானுவ” என்று அவர் கர்வமாக சொல்லிட…

“அந்த லைனுல நிக்குற ஒரு பொண்ணுக்கே உங்க பையனை முடிச்சு வையுங்க” என்றான் பட்டென்று.

“என்ன தம்பி பேச்சு தினுசா போவுது?”

“நான் தன்மையா பேசலாமின்னுதேன் போன் போட்டேன்… அதுவுமில்லாம, இந்த விசயத்தை போனில் பேசாம நேரில் பேசலாமின்னுதான் சந்திக்க நேரம் கேட்கலான்னு போன் பண்ணாக்கா, நீங்க ஒரண்டைய கூட்டுறாப்ல பேசுறீய்ங்க. அப்போ நானும் அதுக்கு தக்கதானே பேச முடியும்?” என்ற வீரனை சாதரணமாக எடைப்போட்ட மடமையை அப்போதுதான் உணர்ந்தார் குருமூர்த்தி.

வீரனை அடக்க வேண்டுமென்று நினைத்தவர்,

“இதுல நேரில் சந்திச்சு பேச என்னயிருக்கு தம்பி… நாளைக்குத்தேன் பொண்ணு பார்க்க வாறோமே அப்போ பேசிக்கலாம்” என்று பேச்சினை முடிக்க பேசினார்.

“நீங்க அப்படியொரு நெனப்போட எங்க வூட்டுக்கு வந்திடக்கூடாதுன்னு தான் பேசிக்கிட்டு இருக்கேன்” என்றான் வீரன்.

“முடிவு சொல்ல நீங்க யாரு தம்பி? நாளைக்கு உங்க மாமனை பார்த்து பேசி நாங்க முடிவு பண்ணிக்கிறோம். நீயி செத்த கம்மின்னு இரு. எதுக்கு வூடால வர?” என்றார்.

“வம்பு பண்ணது உம் பையன்னு தெரிஞ்சதுமே… நீங்க எதுக்கு அடி போடுறீய்ங்க கண்டுகிட்டேன். அது ஒருநாளும் நடக்காதுங்க. சுமூகமா பேச்சோட முடிச்சிக்கலாங்க” என்று அப்போதும் முடிந்தளவு வீரன் தன்மையாகவே பேசிட…

“என்ன தம்பி என்னைப்பத்தி தெரியாம பேசிக்கிட்டே போறீங்களே? நான் இம்புட்டு நேரலாம் பேசியதா வரலாறே இல்லை… நீ என்னைய கண்டுகிட்டங்கிறதால நானும் நேரடியாவே பாயின்ட்டுக்கு வரேன்” என்றவர்,

“மீனாட்சி ஹோட்டலை எம் பேருக்கு முடிச்சு குடுத்துப்புடு. உன் வூட்டு புள்ளையை நான் விட்டுடுறேன்” என்றார்.

வீரனுக்கு கோபம் சுள்ளென்று ஏறிட…

“முடியாதுங்க” என்று பட்டென்று கூறியிருந்தான்.

“அப்போ எப்படி என் கைக்கு கொண்டுவரணுமோ அப்படி கொண்டுவரேன். எதுக்குமே உங்க சம்மதம் எனக்கு வேணாமாட்டிக்கு தம்பி. பையன் ஆசைப்பட்டுட்டான்… முறைப்படி பண்ணுவோமின்னு தான்” என்றவர், “ஒரு நிமிசம் போதும் உங்க பொண்ணை தூக்க…” என்க இதற்கு மேல் இவரிடம் பேசி பலனில்லை. இவரை எப்படி அடிக்க வேண்டுமோ அப்படி அடிக்க வேண்டுமென மனதில் திட்டங்கள் வகுத்தவனாக, அந்நேரத்தில் ஹோட்டலுக்கு விரைந்து வந்தவன் குருமூர்த்தியின் மொத்த ஜாதகத்தையே தனக்கு உண்மையான ஆட்களை வைத்து தன் கைக்கு கொண்டு வந்திருந்தான்.

தங்கள் வீட்டு பெண்ணின் மூலம் தங்களின் தொழிலில் கை வைக்க நினைப்பவனை அவனின் தொழில் மூலமாகத்தான் அடிக்க வேண்டுமென்று காய் நகர்த்திய வீரனுக்கு கோகுலை கடத்தி அடைத்து வைக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் துளியும் இல்லை.

கோகுலாக வந்து மாட்டிக்கொள்ள… மற்றொரு திட்டம் வகுத்தவனாக தன் பாதுகாப்பில் நிறுத்திக் கொண்டான்.

“என்கிட்டவே வந்து பொண்ணை தூக்குவேன் சொல்லுறியான்?” என்று சொல்லி முடித்த வீரன் லிங்கத்திடம் ஆதங்கம் கொள்ள…

“அவனுக்கும் நமக்கும் இதுக்கு முன்னவே சலம்பலாண்ணே?” என்று கேட்டிருந்தான் லிங்கம்.

மருதனும், பாண்டியனும் ஓட்டல் தொடங்கியபோது… அது மூன்று நட்சத்திர அளவில் தான் இருந்தது. அப்போதே குருமூர்த்தி ஐந்து நட்சத்திர ஓட்டல் வைத்திருந்தார். குறுகிய காலத்தில் மீனாட்சி ஓட்டல் பிரசித்து பெற்று வளர்ச்சி பெற ஐந்து நட்சத்திரமாக அதன் தரத்தை உயர்த்திட… குருமூர்த்தியும் தன்னுடைய சிமெண்ட் தொழிற்சாலையில் கவனம் செலுத்திட, குருமூர்த்தியின் ஓட்டல் அதன் வளர்ச்சியை கனிசமாக இழந்தது. அத்தோடு சுற்றுலா பயணிகளிடமும், உள்ளூர் மக்களிடையேயும் மீனாட்சி ஓட்டல் பிரசித்துப்பெற்றது. அதன் பின்னர் குருமூர்த்தி எவ்வளவோ போராடியும், அவரால் ஓட்டலை முன்னேற்ற முடியவில்லை. இன்றளவு இருப்பினும், அதற்கும் தனி வாடிக்கையாளர்கள் இருந்தபோதும்… குருமூர்த்திக்கு மீனாட்சி ஓட்டலின் மீது ஒரு கண்.

அப்போதுதான் வீரன் ஓட்டல் பொறுப்பிற்கு வந்த சமயம்.

சிறியவன் எளிதாக ஏமாற்றிவிடலாமென்று குருமூர்த்தி தப்பு கணக்குப் போட… தொழிலில் அவரையே தூக்கி சாப்பிட்டான் வீரன்.

மருதன் மற்றும் பாண்டியனைக் கூட ஓரளவுக்கு எளிதாக அவரால் நெருங்கிட முடிந்தது. ஆனால் வீரனின் நிழலைக்கூட அவரால் எட்டிட முடியாது போனது.

வீரன் அவரின் தாக்குதலை எல்லாம் கண்டுகொள்ளாது, தொழிலில் கவனம் செலுத்தி ஒன்று என்றிருந்த ஓட்டலின் எண்ணிக்கையை ஏழாக அதிகரித்து மேலும் பல படிகள் முன்னேற்றியிருக்க…

குருமூர்த்தி நேரடியாக எத்தனையோ முறை ஓட்டலை விட்டுத்தரும்படி கேட்டும் வீரன் மறுத்துவிட்டான்.

ஒருகட்டத்தில் குருமூர்த்தி அமைதியாகிவிட… வீரனும் தொல்லைவிட்டது என்கிற எண்ணத்தில் அவரை சுத்தமாக மறந்தே இருந்தான்.

மீனாள் சிமெண்ட் பேக்டரி வைத்திருக்கிறார் என்று சொல்லிய பின்னரே அவரின் இரண்டாவது ஆட்டம் இதென்று கண்டுகொண்டான்.

பலமுறை மோதி பார்த்தும் குருமூர்த்தி வீரனிடம் தோல்வியையே தழுவியிருக்க… சில காலம் விட்டு பிடிப்போம் என்று மட்டுமே நினைத்து பதுங்கியிருந்தார்.

லிங்கம் வந்த பின்னர் அவனை வைத்து காய் நகர்த்தலாம் என்று எண்ணிட… அவன் பின்னால் வீரன் மறைமுகமாக நிற்கிறான் என்பது அறிந்து மேலும் பொறுமையாக இருக்க, அவரின் மகன் கோகுலின் மூலம் வாய்ப்பு வர, அதனை வைத்து ஓட்டலை தன் வசப்படுத்திக்கொள்ள வேண்டுமென நினைத்து மகனின் விருப்பத்திற்கு ஒப்புக்கொண்டு வீரனிடம் மீண்டும் ஒருமுறை மோதி பார்க்க முயன்றுவிட்டார்.

கோகுல் தனக்கு ஒரு பெண்ணை பிடித்திருப்பதாக தெரிவிக்க முதலில் வேண்டாமென்று மறுத்து குதிக்கவே செய்தார் குருமூர்த்தி. கோகுல் மீனாட்சி ஓட்டலின் பெண் என்று சொன்னதும் அத்தனையும் அலசி ஆராய்ந்துவிட்டார்.

ஓட்டல் இன்னமும் மருதன் மற்றும் பாண்டியன் பெயரில் இருந்தாலும், அவர்களது குடும்பத்தின் ஒற்றுமை அறிந்து, மீனாளுக்கு என்றால் மொத்தமாகவே கொடுத்துவிடுவார்களென்று கணக்கிட்டு மகனின் விருப்பத்திற்கு சரியென்றிருந்தார்.

நிச்சயம் அவர்கள் இந்த கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்று தெரிந்தும்… தன் செல்வாக்கின் மூலம் நடத்தி முடிக்க நினைத்து வீரனிடமும் வீராப்பாக பேசிவிட்டார்.

“ரொம்ப பெரிய ஆளோ அவென்?”

“பெரிய ஆளு தான்…. ஆனால் குணம் சரியில்லையே” என்ற வீரன், “ரொம்ப நா செண்டு ஆடிபாக்க நேரம் வந்திருக்கு” என்று தம்பியை பார்த்து கண்ணடித்தான்.

“சிங்கம் களம் இறங்கிடுச்சுன்னு சொல்லணுமோ?” என்று சிரித்த லிங்கம், “இன்னொன்னு கேக்கட்டுமா?” என்றான்.

“கேளுடே…” என்ற வீரன் மேசையில் குதித்து அமர்ந்தான்.

“வசந்தி பெரியம்மா கௌதமுக்கு மீனாக்குட்டியை கேட்டத… அம்மா அப்பத்தாகிட்ட புலம்பும் போது கேட்டேன். நீயும் மாமா கேட்டதுக்கு சரின்னு சொல்லிபுட்டியாம்! ஆனால் இங்குட்டு அவென்கிட்ட பொண்டாட்டின்னு சொல்லுற… அவகிட்ட விலகி நிக்குற… எனக்கு ஒன்னுமே வெளங்கல. உன் முடிவுதேன் என்ன?” என்று கேட்டான்.

“வேணாமிங்கிறதும்… விலகி நிக்குறதும் எம் முடிவு இல்லை. புடிச்சிருக்கு ஆனால் வேணாமின்னு சொல்றவளை வற்புறுத்த சொல்றியா நீயி? எம் மனசால தங்கம் மட்டுந்தேன் என் பொண்டாட்டி. அவ வேணாமின்னு சொல்றதுக்காகலாம் அதை மாத்திக்க முடியாது. அவளுக்கு நான் வேணாங்கிறது அவளோட” என்ற வீரன், “பத்து வருசமா பொண்டாட்டியாவே நெஞ்சுல சுமந்துட்டடேன்… டக்குன்னு மாத்திக்க வரமாட்டேங்குது” என்றான்.

“இப்படியிருக்க நீயி எப்படி அவளை கௌதமுக்கு விட்டுக்கொடுப்ப?” என்றான் லிங்கம்.

“எனக்கு உன் மீனாக்குட்டி மேல நம்பிக்கை இல்லதேன்… ஆனால் என் தங்கப்பொண்ணு மேல அம்புட்டு நம்பிக்கை இருக்கு. அதுவுமில்லாம கௌதமுக்கு சுபா மேல விருப்பம். அவளுக்குந்தேன். ரெண்டும் விரும்புதுங்க. அன்னைக்கு சுந்தரேசன் மாமா போன் போட்டப்போ இதைத்தேன் பேசினேன். அவருக்கு கௌதம் ஓகேதான். ஆனால் வசந்தி பெரிம்மாவை நெனச்சு வெசனப்படுறார். அதைதேன் நிச்சியத்து அன்னைக்கு பேசினார்” என்ற வீரன், “அவருக்கு சுபாவோட விருப்பம்தான் முக்கியமாட்டிக்கு. அது மாதிரி நல்லான் பெரிப்பாவும் இருந்துட்டா அவீங்க லவ் சக்ஸஸ்” என்றான்.

“அப்போ உன் லவ்?”

“உன் மீனாக்குட்டி மனசு வைக்கிறதுல இருக்கு” என்ற வீரனுக்கு இன்று அவள் அவனை கட்டிக்கொண்டு இருந்த இறுக்கம் காலத்துக்கும் வேண்டுமென்று போலிருந்தது.

வீரன் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு மீனாள் மனசு வைப்பாளா?

************************

இரவு பதினோரு மணியைத் தாண்டி மருதனும், பாண்டியனும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.

“இந்நேரத்துக்கு எதுக்கு ஓட்டலுக்கு வர சொல்லியிருக்க? நீங்களும் ரெண்டேறும் இன்னமட்டும் இங்கன என்ன பண்றீங்க?” பாண்டியன் உள்ளே வந்ததும் மகன்கள் இருவரிடமும் கேள்வியை அடுக்கினார்.

வீரனும் லிங்கமும் அமைதியாக நின்றிருக்க…

“என்ன பிரச்சினை?” எனக் கேட்டார் மருதன்.

வீரன் கண் காட்டிட லிங்கம் அனைத்தையும், கோகுலை அடைத்து வைத்திருப்பதை வரை எல்லாம் சொல்லிவிட்டான்.

“புள்ளைக்கு ஒன்னுமில்லையே?” பாண்டியன் பதறி வினவ,

“வூட்டுலதேன் இருக்காள். கொஞ்சம் சுணங்கி இருக்காள். சரியாப்போவும்” என்ற வீரன், மருதனை பார்க்க…

“இந்த குருமூர்த்தி அமைதியா போயிப்புட்டான்னு நெனச்சேனே அமிழ்தா! நம்ம வூட்டு புள்ளை மேல கண்ணு வச்சிருப்பியான் நெனக்கலையே” என்றார்.

“அவனையெல்லாம் நான் மறந்தே போயிருந்தேன்” என்ற வீரன், “போனுல பேசுனவர, நீங்க வந்ததும் நேரிலே போயி ஆட்டம் காட்டிடு வரலான்னு தான் இங்குட்டு வர சொன்னேன். இப்போ அதுக்கு அவசியமில்லை. வூட்டுக்கு போவும். அவரே அரண்டு வருவார்” என்ற வீரன் கையிலிருந்த அலைப்பேசியை சட்டை பையில் போட்டவனாக, வேட்டியை மடித்து கட்டியவாறு வாயில் நோக்கி நடக்க…

“அந்த பையனை எதுக்கு புடிச்சி வச்சிருக்கணும் அமிழ்தா? வுட்டுப்புடலாமே! எதாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்” என்ற பாண்டியனிடம்…

“பேசி தீக்குற ஸ்டேஜெல்லாம் தாண்டியாச்சுங்க ஐயா” என்றான் வீரன்.

“ஏதும் சலம்பல் வேணாம் அமிழ்தா!”

“அவென் என்ன பண்ணாலும் பார்த்துகிட்டு மட்டுமே இருக்கணும் சொல்றீய்ங்களா மாமா?” என்ற வீரன், “அந்த ஆளு நேரடியா வந்து பேசியிருந்தாக்கா சும்மா விட்டிருப்பேனோ என்னவோ… இதுக்குமேல கம்மின்னு இருக்க முடியாது. மொத்தமா அவென் ஆட்டத்தை முடிச்சுட்டுதேன் மத்தது” என்றான்.

“ஐஞ்சாறு நாளுல கல்யாணத்தை வச்சுக்கிட்டு இந்த சலம்பலெல்லாம் வேணாமாட்டி அமிழ்தா. நம்ம புள்ளைய நாம பத்திரமா பார்த்துக்கிடுவோம். அவென் சொன்னாக்கா, தூக்கிடுவானா?” என்று மருதன் கேட்க, “அதானே அப்பு… நாம இம்புட்டு பேரு இருக்கோமே!” என்றார் பாண்டியன்.

யாரென்ன சொன்னாலும் இதனை தான் இத்தோடு விடப்போவதில்லை என்பதைப்போல் வீரன் விறைத்து நின்றான்.

அவன் முடிவெடுத்துவிட்டான் இனி யார் சொன்னாலும் கேட்கமாட்டான் என்பது அவர்களுக்கு புரிந்தது தான்.

அந்நேரம் அவனின் அலைப்பேசி அடித்தது. எடுத்து பார்த்தவன் மீனாள் என்றதும், லிங்கத்திற்கு கண்ணை காட்டிவிட்டு தள்ளிச்சென்று பேசினான்.

“தங்கம்…”

“மாமா!” அவளின் குரலில் தழுதழுப்பு.

“என்னடாம்மா?” அத்தனை கனிவாக ஒலித்தது வீரனின் குரல்.

“எங்க இருக்க?”

“ஒரு சோலியா ஓட்டலில் இருக்கேன்.”

“வூட்டுக்கு வா மாமா. என்னவோ மாறி இருக்கு. நீயி பக்கத்துலே இரு மாமா!” அவளின் குரலில் மாலை தெரிந்த பயமும் பதற்றமும் இன்னமும் அப்படியே இருந்தது.

“அம்மா, அத்தை, நாச்சியாலாம் அங்குட்டு இருக்காய்ங்களே தங்கம்.”

“எல்லாரும் நீயில்லையே மாமா. வான்னா வாயேன். முடியல மாமா” என்றவள் அழைப்பைத் துண்டித்து வீரனுக்கு, கோகுலிடமிருந்து வந்திருந்த தகவல்களை மறுபகிர்வு (forward) செய்திருந்தாள்.

எப்போது அதனை அனுப்பினானென்று வீரனுக்குத் தெரியவில்லை. இங்கு தன் கையில் சிக்கும் முன் அனுப்பியிருப்பானென்று அனுமானித்தான்.

பதினோரு மணி போல் உறக்கம் கலைந்த மீனாள் வீடே இருட்டில் இருக்கவும், தன்னறை விட்டு வெளியில் வந்து கீழே பார்க்க, முற்றத்திலும், கூடத்திலும் தன் குடும்பத்தார் படுத்து உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு மீண்டும் அறைக்குள் முடங்கிக் கொண்டாள்.

‘நாளை கோகுல் அவனது அப்பாவோடு வந்துவிடுவானோ?’ என்று அதிலேயே உழன்றவள் காலினை கட்டிக்கொண்டு அமர்ந்திட்டாள்.

“வீரா மாமா இருக்கும் போது எனக்கென்னத்துக்கு பயம்?” என்று தன்னைத்தானேக் கேட்டுக்கொண்டவள், மனதை திசை திருப்ப அலைப்பேசியை எடுக்க கோகுலின் எண்ணிலிருந்து புலனம் வழி பல தகவல்கள் எம்பி குதித்தன.

யாருடைய எண்ணென்று தெரியாது திறந்து பார்த்தவள் தகவல்கள் யாவும் முகத்தை சுளிக்க வைத்திட, “பொண்டாட்டி” என்றதோடு, “நாளைக்கு பொண்ணு மட்டும் பாக்க வராம அப்படியே தாலியை கட்டி கூட்டிட்டு போயிடுவா?” என்றிருந்தது கோகுல் என்று காட்டிக்கொடுத்திட… இறுதியாக அவன் அனுப்பியிருந்த புகைப்படம் அவளின் கைகளை நடுங்கச் செய்தது.

கோகுல் தன்னுடைய படத்தோடு, மீனாள் படத்தை இணைத்து, மணக்கோலத்தில் இருப்பதைப்போல் எடிட் செய்து அனுப்பியிருந்தான்.

பார்த்ததும் வீரனின் கண்களில் அனல் தெறித்தது.

கை முஷ்டியை இறுக்கி மூடியவன்,

வேட்டியை மடித்துக் கட்டியவனாக, தாவி நடையை வைத்து, கோகுலை கட்டிபோட்டிருக்கும் அறையை நோக்கி அத்தனை வேகமாகச் சென்றான்.

மற்ற மூவரும் பதறியவர்களாக வீரனின் பின்னால் கிட்டத்தட்ட ஓடினர்.

நல்லவேளையாக இரவு நேரம் என்பதால், எந்தவொரு தளத்திலும் ஆட்கள் நடமாட்டம் இல்லை.

பிரசாத் கோகுலை ஒரு இருக்கையில் கட்டிப்போட்டு வைத்திருக்க… போதையில் இருந்தவன் தலை கவிழ்ந்த நிலையில் உறங்கியிருக்க… கோகுலின் முன்னுச்சி முடியை கொத்தாகப் பற்றி அவனின் முகம் உயர்த்தியவன் இரு கன்னங்களிலும் மாற்றி மாற்றி விடாது அறைந்தான் வீரன்.

அடியின் வலியில் போதை தெளிந்து விழித்த கோகுல்…

“ஹேய்” என்று சத்தமிட, அவனின் தொண்டையை பிடித்து ஒற்றை கையால் நெறித்த வீரன்,

“உம் போனை கொடு?” என்றான்.

கோகுல் மாட்டேனென்று நீண்ட சிரிப்போடு தலையை அசைக்க…

வீரன் தன் பிடியை இறுக்கினான்.

“அவளை எனக்கு கட்டி கொடுத்துப்புடு. அதுதேன் அவளுக்கு நல்லது” என்று அவன் கோணலாக சிரிக்க…

“அமிழ்தா என்னயிது? வுடு அவனை” என்று மருதனும் பாண்டியனும் வீரனை இரண்டு பக்கமும் ஆளுக்கொரு பக்கமாக பிடித்து இழுக்க… அவனை அசைக்கக்கூட முடியவில்லை.

“கொடுடே… இல்லை உனக்கு இங்குட்டு இப்போவே சமாதி கட்டிப்புடுவேன்” என்று வீரன் வெறி பிடித்தவனாக மாறியிருக்க…

“அண்ணே எதுக்கு இம்புட்டு ஆவேசம்?” என்றான் லிங்கம்.

“டெக்னாலஜி யூஸ் பண்ணி, என் மீனுவோட எடிட்டிங்கில நான் குடும்பமே நட…” அடுத்து கோகுலால் பேச முடியாதபடி பற்களை ஒரே குத்தில் தட்டியிருந்தான் வீரன்.

கோகுல் முடிக்காத போதும் அவனது வார்த்தைகள் புரிந்திட…

மருதன் அவனை அடிக்க பாய்ந்திட…

“இதுக்குமேல அவனை அடிக்கணுமாட்டி” என்று பாண்டியன் அவரை பிடித்து இழுத்திருந்தார்.

“என்னவேணா பண்ணு. இவனுக்கு இனி நம்ம பொண்ணு நெனப்பே வரக்கூடாது” என்று வீரனிடம் சொல்லிய பாண்டியன், மருதனை அங்கிருந்து அழைத்துக்கொண்டு புறப்பட்டிருந்தார்.

பெரியவர்கள் இருவருக்கும் மீனாளை நேரில் பார்க்க வேண்டும் போலிருக்க கிளம்பியிருந்தனர்.

“புள்ள என்ன பாடுபடுதோ?” மருதன் புலம்பியபடி வர, பாண்டியன் அவரை தேற்றியவாறு இருந்தார்.

வீரன் கோகுலை அடி வெளுத்துவிட்டான்.

“அண்ணே ஒண்ணுக்கெடக்க ஒண்ணு ஆவப்போவுது… விடுண்ணே!” என்ற லிங்கம், “போனு அவன் பாக்கெட்டில் இருக்குதான்னு பாப்போம்” என்க,

வீரன் கோகுலை முழுமையாக ஆராய்ந்திட, தன்னுடைய ஜீன்ஸில் அலைப்பேசியை வைத்திருந்தான்.

எடுத்த வீரன் அதில் கோப்புகளை ஆராய்ந்திட…

கோகுல் சொல்லியது போன்று மீனாளுக்கு தாலி கட்டுவது, மெட்டி அணிவிப்பது போன்றெல்லாம் புகைப்படம், காணொளி என எடிட் செய்து வைத்திருந்தான்.

“வேறு எதுலையும் காப்பி வச்சிருக்கியாடா?” வீரன் அவனது தொடையிலேயே மேசையிலிருந்த முள் கரண்டியை எடுத்து ஆழமாக குத்தி கேட்க… வலியில் துடித்தவன் இல்லையென்று கத்தினான்.

“உண்மையா?” லிங்கம் கேட்டிட… “ரெண்டு நா முன்னாடிதேன் மீனாள் என் காலேஜூன்னே தெரியும். அவள் பிரண்ட்ஸோட பேசிட்டு இருக்கும்போது எடுத்த போட்டோ வச்சு, எல்லாம் போனுலே பண்ணதுதேன்” என்ற கோகுல், “செமயா இருக்குல எங்க பொருத்தம்” என்றிட… லிங்கம் அவனது வயிற்றிலே ஓங்கி குத்தியிருந்தான்.

வீரன் சற்றும் யோசிக்காது, அந்த அலைப்பேசியை அடித்து நொறுக்கி தூள் தூளாக்கியிருந்தான்.

“சும்மா விடக்கூடாது லிங்கு” என்ற வீரன் அக்கணமே, குருமூர்த்திக்கு எதிராக கடந்து சென்ற சில மணி நேரத்தில் தான் சேகரித்த அனைத்து தகவல்களையும் தொழில் சங்கத்திற்கு அனுப்பி வைத்ததோடு… சிமெண்ட் தொழிற்சாலையில் சட்டத்திற்கு புறம்பாக கிரானைட் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதையும் அதற்கு உண்டான ஆதாரங்களையும் அதற்குரிய துறைக்கு அனுப்பி வைத்தான்.

குருமூர்த்தியின் ஓட்டலில் சுற்றுலா பயணிகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும், அங்கு சில தவறான விடயங்கள் நடப்பதாகவும் அதற்குண்டான சாட்சியங்களை அந்த துறை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிக்கு அனுப்பி வைத்தான்.

அதுமட்டுமல்லாமல் தான் அனுப்பியவற்றின் மற்றொரு பிரதியை ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்திட… அடுத்த பத்தாவது நிமிடம் மதுரை மாநகரமே பரபரப்பிற்குள்ளானது.

எந்த செல்வாக்கை வைத்து பொண்ணை தூக்கிவிடுவேனென்று குரு மூர்த்தி மிரட்டினாரோ… அந்த செல்வாக்கையே இரவோடு இரவாக தகர்த்திருந்தான் வீர அமிழ்திறைவன்.

அனைத்தும் முடித்து லிங்கத்துடன் வீரன் வீட்டிற்கு வந்தபோது நேரம் பணிரெண்டை கடந்திருந்தது.

மருதனும், பாண்டியனும் வந்தபோதே நாச்சி மற்றும் அங்கை தவிர்த்து மூத்த பெண்கள் மூவரும் விழித்துக்கொண்டனர்.

தன்னுடைய ஆறுதலுக்கு நடந்தவற்றை மகாவும் ஒருமுறை மருதனிடம் தெரிவித்திட… அவர் மீனாளின் அறை நோக்கிச் சென்றார்.

அதுவரை கட்டிலில் கால்களைக் கட்டிக்கொண்டு அழுதிருந்த மீனாள், வெளியில் கேட்ட பேச்சு சத்தத்தில் தந்தை எப்படியும் தன்னைத் தேடிவருவார் என்று அறிந்து, உடலை குறுக்கி படுத்து கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.

வாயிலில் நின்று எட்டிப்பார்த்த மருதன்,

“ஆத்தா மீனாள்” என்று விளிக்க அவளிடம் அசைவில்லை.

“புள்ள அசந்து தூங்குது போல மாமா. எழுப்பி, என்னன்னு கேட்டு திரும்ப திரும்ப வெதும்பவிட வேணாமாட்டி” என்று மருதனின் பின்னோடு வந்த பாண்டியன் சொல்லியதோடு அவரை அழைத்துக்கொண்டு கூடத்துக்கு வந்தார்.

“நீங்களும் உறங்குங்க மாமா… நம்மை மீறி எவென் புள்ளையை தூக்குறான்னு பாப்போம்” என்ற பாண்டியனின் பேச்சில் அதிர்ந்த மகா,

“என்ன தம்பி என்னமாட்டி சொல்ற. பயந்து வருதே! அவென் அப்படி சொன்னானா?” என்றி நெஞ்சில் கை வைத்து கேட்டார்.

பாண்டியன், வீரன் குருமூர்த்தியிடம் அலைப்பேசியில் பேசியதை முழுதாகக் கூற…

“ஆத்தா மீனாட்சி எம்புள்ளையை காப்பாத்து” என்று மகா தெய்வத்திடம் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

“ச்சூ… அழுவாத மகா. தெம்பா இரு” என்று மீனாட்சி மகளை அதட்டிட…

“தண்ணியை குடிங்கண்ணே… ரொம்ப சோர்ந்து தெரியுறீங்க” என்று மருதனிடம் சொம்பு நிறைய நீரினை அபி கொடுக்க… வாங்கி ஒரே மூச்சாகக் குடித்தவர்… “வயசு புள்ளைய வூட்டுல வச்சிருக்கிறது… மடியில நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கிறதுக்கு சமம்மின்னு ஏன் சொல்றாய்ங்கன்னு இப்போ புரியுது அயித்த. அந்த குருமூர்த்தி லேசு பட்ட ஆளில்லை. சொன்னதை செய்யுற ஆளு. என்னவும் செய்வியான். அவன்கிட்ட சலம்புறதுக்கு… நம்ம புள்ளைக்கு மொத கல்யாணத்தை நடத்திப்புடுவோம். பொண்ணு வூட்டுல இருக்கப்போயிதேனே கண்டதும் பொண்ணு கேக்க வாரேன்னு நிக்குது” என்று தான் எடுத்த முடிவினை கூறிட, பெண்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 40

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
43
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

5 Comments

  1. அவனை சரியாக புரிந்து கொள்ள அவளுக்கு இன்னொரு சந்தர்ப்பம்

  2. வீரனின் தொழில் முன்னேற்றம் வியப்பாக உள்ளது. குடும்பத்தையும் தொழிலையும் கட்டிக்காக்கின்றான். அத்துணை மனதிடம், உறுதி மற்றும் புத்திசாலித்தனம் உள்ளவன்.

    மீனாளின் மீது உயிரையே வைத்திருப்பவனிடம் சென்று அவளை பொண்டாட்டி என்று கூறி இன்னும் அவனது கோவத்தை ஏற்றிவிட்டு கொண்டிருக்கின்றான் கோகுல்.

    வேண்டாம் என்பது அவளோடு. எப்பொழுதும் அவள்தான் என் பொண்டாட்டி. 😍😍

    யார் இருந்தாலும் அது நீ ஆகிடாது என்பவள் மனதை மட்டும் பூட்டி வைத்துக்கொள்வாள்.

    நினைத்ததை போலவே, மருதன் பிரச்சனை எழாமல் இருக்க பெண்ணின் திருமணத்தை விரைந்து நடத்த முடிவெடுத்துவிட்டார்.

    மீனாள் இப்பொழுதாவது மனதை மறைக்காமல் வெளிப்படுத்த செய்வாளா பார்ப்போம்.

  3. Ayayo intha mruthan sir marubadium motho irunthu arambikirarey….
    Veeran pavam maruthan sir

  4. அடேங்கப்பா இன்னைக்கு அத்தியாயம் பயங்கரம் … பரபரப்பா போகுது … வீரன் இறங்கிட்டான் … ஒருவழியா இந்த பிரச்சனை முடிஞ்சது தான் போல … ஆனா மறுபடியும் மீனா கௌதம் கல்யாண பேச்சு வருமோ …