Loading

யான் நீயே 16

“அன்னைக்கு நான் தெரிஞ்சுதேன் பேசினேன். உன்னைய காயப்படுத்துமின்னு தெரிஞ்சிதேன் பேசினேன்” என்ற வீரன் தன் அணைப்பை இறுக்கியவனாக,

“என்னடி பண்ண சொல்லுற என்னைய… அன்னைக்கு பிரேம் பண்ணதை உங்க ஐயா நியாயப்படுத்தவும், ரோசிக்காம சொல்லிப்புட்டேன். நெருஞ்சிமுள்ளா உன் மனசுல குத்திட்டிருக்க அந்த நெனப்பை போக்க… என்ன உன் காலுல விழுகணுமா? விழறேன்டி. உன்னைய என்னுல பாதியாத்தேன் பார்க்குறேன். உன்கிட்ட எந்தவொரு ஈகோவும் எனக்கில்லையாட்டுக்கு” என்ற வீரனின் பேச்சில் அக்கணம் மீனாள் உணர்ந்ததெல்லாம் அப்பட்டமான காதல் மட்டுமே!

தான் கண் மூடி தன்னுடைய உள்ளத்து உணர்வை சொல்லிக்கொண்டிருக்க, வீரன் எப்போது வந்தான்? லிங்கம் எப்படி சென்றான்? என்பதெல்லாம் அவளுக்குத் தெரியவில்லை.

வீரன் இழுத்ததுமே… தன்னவனை கண்டு கொண்டவளுக்கு அந்நேரம் அவனின் அணைப்பு தேவையாக இருக்க, திமிராது அவனுள் பாந்தமாக அடங்கிப்போனாள். கண்ணீர் விழிகளோடு.

நெஞ்சம் முட்டும் ஆர்ப்பரிப்பு அவனிடத்தில் மெல்ல அடங்குவதை அவளால் உணர முடிந்தது.

அதிலும் தன்னை முழுவதுமாக அவளின் காலடியில் சேர்பித்தவனாக அவன் பேசிய வார்த்தைகளில் அவனின் காதலை உணர்ந்தவளுக்கு மனதால் தான் என்ன உணர்கிறோம் என்றே தெரியவில்லை.

மெல்ல வீரனிடமிருந்து பிரிந்தவள்,

“உன்னை ரொம்ப புடிக்கும் மாமா. நான் இதை உனக்கு சொல்லனுமில்லை. உனக்கு என்னைய புரியும். அதுமாறி என் மனசு வெசனத்தையும் புரிஞ்சிக்கோயேன் மாமா” என்றவள், “சரின்னு உன்னைய கட்டிக்கிறேன்னு வைய்யீ… நாம ஒன்னுமண்ணா இருக்குற நேரம் நீயி சொன்ன வார்த்தை நெஞ்சுக்குள்ள வந்துப்போச்சுன்னா?” என்று சொல்லிக் கொண்டிருந்தவள், வீரன் நிறுத்து நின்பதைப்போல் காட்டிய கையின் சைகையில்… தலையசைத்து மறுத்தவள்,

“உனக்கு வலியாகிப்போவும். ரெண்டேருக்கும் வாழ்க்கை நரகமாகிப்போவும். மறந்துட்டு வாழலாம். முடியமாட்டிக்கு” என்றவள், தரையில் மடங்கி அமர்ந்து முகம் மூடி, உடல் குலுங்க அழுதிட…

அவளை தனக்குள் பொதிந்து வைத்து ஆறுதல் அளித்திட துடித்த கரத்தினை அடக்கி, நகர்த்த முடியாது கால்களை நகர்த்தி அழுத்தமான நடையுடன் அங்கிருந்து சென்றிருந்தான்.

அன்று தான் பேசிய வார்த்தையை மறக்க முடியாது தவிக்கிறாள், தன்னுடன் வாழும் காலங்களில் சரிசெய்திடலாமென்றே வீரன் எண்ணியிருந்தான். ஆனால் காலங்கள் கடந்தாலும் அவளது ரணத்தின் வடு மாறாது என்று இப்போது தெரிந்துகொண்டான்.

என்ன தான் இருவருள்ளும் நேசம் வானளவு உயர்ந்து பரந்து இருப்பினும், இந்த நேசத்தால் இருவருக்கும் வலி மட்டுமே மிச்சமென்று புரிந்துகொண்ட வீரனுக்கு விலகலே சரியெனத் தோன்றியது.

பக்கமிருந்து வலி சுமப்பதற்கு, தள்ளி நின்று நேசித்துவிடலாம் என்பதே தற்போதைய அவனின் எண்ணம் மற்றும் முடிவு.

எடுத்த முடிவின் வலி கடந்த கால நிகழ்வை கண் முன் நிறுத்தியது.

அப்போது பிரேம் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்துக் கொண்டிருந்தான். நாச்சியும் மீனாளும் இளங்கலை முதல் வருடம்.

பிரேமுக்கு மீசை முளைத்த நாள் முதல் நாச்சியின் மீது ஈர்ப்பு. வளர வளர அவனுள் அந்த ஈர்ப்பு காதலாக மாற்றம் பெற்றது. மறைத்து வைத்திருந்த காதலை மெல்ல பார்வையாலும், சிறு சிறு சீண்டல் பேச்சினாலும் காட்டிடத் தொடங்கியிருந்தான்.

அவனது பேச்சு செய்கைகள் யாவும் நாச்சியினுள் காதலின் விதையை ஊன்றியது. அவளுக்கும் பிரேமின் மீது பிடித்தம் வேர் பிடிக்கத் துவங்கியது.

இளமை வயதுக்கே உரிய துள்ளலும் வேகமும் பிரேமிடம் அதிகம் இருந்தது.

பிரேமின் பார்வைக்கெல்லாம் நாச்சியிடம் ஒருவித நாணமும் நடுக்கமும் தென்பட அவை யாவும் பிரேமுக்கு அவளை சீண்டிடும் வேகத்தை உண்டாக்கியது.

கண்ணாமூச்சி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நினைத்தவன், தன்னுடைய காதலை வெளிப்படையாக சொல்லிட முடிவெடுத்து நாச்சியை காண வீட்டிற்கு வந்தான்.

அவன் வந்த நேரம் அவனுக்கு சாதகமாக இருந்தது. நாச்சியை தவிர்த்து வீட்டில் யாருமில்லை.

நாச்சியிடம் பிரேம் காதலை சொல்லிட, அவளின் முகத்தில் இதுவரை அவன் பார்த்திடாத செம்மை. இளமையின் உணர்வினை கட்டுப்படுத்த தெரியாத பக்குவமற்ற அவனின் மனம் அவளின் கரம் பற்றத் தூண்டியது.

அவளின் வெம்மை ஒருவித மின்சார சிலிர்ப்பை அவனுள் பரப்பிட, பட்டென்று அவள் உணரும் முன்பு இதழோடு இதழ் பொருத்தியிருந்தான்.

என்னதான் மனதிற்கு விருப்பமுள்ளவனாக இருந்தாலும், திடீரென தன்னுடைய அனுமதியின்றி நடந்த பிரேமின் செயலை நாச்சியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அத்தோடு முதல்முறை ஆணின் ஸ்பரிசம் அச்சத்தை தோற்றுவிக்க, அவனை தன்னிலிருந்து பிரிக்க திமிறியவள், அவனின் இரு பக்க தோளிலும் தன் பலம் கொண்டு அடித்தாள்.

சரியாக அச்சமயம் வீரன் வீட்டிற்குள் வந்திருக்க… கண்ட காட்சி அவனை கொதித்தெழச் செய்திருந்தது.

“பிரேம்” என்று வீடே அதிர கத்தியவன், அவனை பிடித்து இழுத்து கன்னத்தில் தன் பலம் கொண்டு அறைந்திருந்தான்.

ஒரே அடி… பிரேம் சுருண்டு விழுந்திருந்தான்.

நாச்சி பிரேமின் கட்டுப்பாட்டில் அழகாய் பொருந்தி நின்றிருந்தால், அவளுக்கும் விருப்பமென்று அறிந்து வீரன் வந்த தடம் தெரியாது வெளியேறியிருப்பானோ? பின்னர் இருவருக்கும் தனித்தனியாக அறிவுரை வழங்கியிருப்பானோ? இல்லை பிரேமுக்கு கொடுத்த அடியை இணையாக நாச்சிக்கும் கொடுத்திருப்பானோ?

ஆனால் அவனது பார்வையில் தங்கையின் விருப்பமின்றி, அவளை பிரேம் பலவந்தப்படுத்தும் தோற்றமே வீரனக்கு காட்சியாக அமைந்தது.

என்னயிருந்தாலும் இவ்வயதில் இது சரியானதில்லையே!

நாச்சியின் கண்ணீர் முகம் வீரனின் கோபத்தை அதிகரிக்க, பிரேமின் சட்டையை கொத்தாக பிடித்து அவனை தூக்கி நிறுத்தியவன், சரமாரியாக இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தான்.

அந்நேரம் மொத்த குடும்பமும் வர,

மருதனும், பாண்டியனும் பதறி வீரனை இருபக்கமும் பிடித்து தடுத்து நிறுத்திட பிரேம் தப்பித்திருந்தான்.

அனைவரும் என்னவென்று பார்க்க பிரேம் தலை கவிழ்ந்திருக்க… நாச்சி அழுது கொண்டிருந்தாள்.

அதுவே அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவிற்கு யூகிக்க வைத்திருந்தது.

“பிரேம் என்னடே இது?”

“அது வந்து ஐயா… தப்பா எதுவுமில்லை” என்று பிரேம் முடிக்கும் முன் அவனின் வாயிலேயே குத்தியிருந்தான் வீரன்.

“அப்போ நீயி பண்ணதுக்கு என்னடே பேரு… தப்பில்லையாமே!” என்ற வீரனை,

“பேசிட்டிருக்கேன்ல அமிழ்தா… தப்பே பண்ணியிருந்தாலும் என்கிட்ட சொல்லியிருக்கணுமாட்டி. இப்படி அடிக்கிறது சரியில்லை” என்றார் மருதன்.

உதட்டில் ரத்தத்தோடு மகனை கண்டதும், மருதனுக்கு பெத்த பாசம் முன் வந்துவிட்டது.

“மவன் பாசமோ?” என்ற வீரன், “அழுதுட்டு நிக்கிறவளுக்கு என்ன பதிலு சொல்லுவீயிங்க?” என்றான்.

“மொறப்பொண்ணுன்னு கையை பிடிச்சிருப்பியான். அதுக்கு ரத்தம் வர அளவுக்கு அடிப்பாங்களா?” எனக் கேட்டார் மருதன்.

மற்றவர்களும் கையை பிடித்திருப்பான் எனும் அளவுக்குதான் நினைத்திருந்தனர். அவர்களால் அதை தாண்டி பிரேம் வேறு விதமாக நடந்திருப்பான் என்று நினைக்க முடியவில்லை.

“மொறப்பொண்ணுன்னா என்ன வேணாலும் பண்ணிலாமின்னு அர்த்தமா?” என்ற வீரனிடம்,

“உரிமை உள்ள இடத்துல கை வைக்கத்தேன் தோணும்” என்றார் மருதன். அவருக்கு பிரேமின் கசங்கியத் தோற்றம், சிந்தையை மழுங்க வைத்திருந்தது. என்ன பேசுகிறோம் என்பதை உணராது பேசிக்கொண்டிருந்தார்.

“மாமா…” அவர் சொல்லியதன் பொருளில் பாண்டியனே கத்திவிட்டார்.

“உரிமை உள்ள அத்தை மவ(ள்)… தொட்டு தொட்டு பேசி விளையாட இருக்க, ஆம்பள பய மனசுல ஆசை உண்டாகியிருக்கும். அதுல கையை பிடிச்சிருப்பியான்” என்று மருதன் பேசிட அனைவரும், மகாவே அவரது பேச்சில் அதிருப்தியைக் காட்டிட,

“அப்போ என்ன மயக்கத்தேன் உன் மவ மீனாளை என்னோட தொட்டு பேச பழகவிட்டியோ?” என்று கேட்டுவிட்டான்.

லிங்கத்தின் அருகில் நின்றிருந்தவளின் மீது பார்வையை அழுத்தமாக படிய வைத்து… அவனது பார்வையில் மன்னிப்பும், கெஞ்சலும் சரிவிகிதமாக இருந்தது. உன் தந்தைக்கு உணர்த்தவே இப்பேச்சென்று.

வீரனின் சொல் இதயத்தில் ஈட்டியை இறக்கியது போலிருக்க… மீனாளின் கண்ணில் நீர் இறங்கியது.

“அமிழ்தா!” அதட்டிய மீனாட்சி,

“அவென்தேன் கூறுக்கெட்டு பேசுறான்னா… நீயி ஏம்டே மதி இழந்து பேசுற” எனக் கேட்டார்.

“இவர் சொன்ன பதிலையே நானும் சொல்லி, அவரு மவளை என்னவும் பண்ணாக்கா… அப்பவும் உரிமை, ஆசை செஞ்சுபுட்டான்னு அமைதியா இருப்பாரா?” என்று எதிர் கேள்வி கேட்ட வீரனுக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

நீண்ட நேரம் நீடித்த மௌனத்தை உடைத்து, வீரன் தான் அங்கிருந்து முதலில் அகன்றான்.

“என்னயிருந்தாலும் நானு அப்படி பேசியிருக்கக்கூடாது. சரியெதுன்னு ரோசிக்கமா, பிரேம் மொவத்துல ரத்தத்தை கண்டதும் கண்டதை பேசிபுட்டேன். என்னை மன்னிச்சிக்கிடுங்க” என்ற மருதன், “மன்னிச்சிடுத்தா” என்று நாச்சியிடம் சொல்ல அவள் பாய்ந்து வந்து அவரை கட்டிக்கொண்டாள்.

“உன்னைய எண்ணாம பேசிபுட்டேன்த்தா” என்று நாச்சியின் உச்சியில் அழுத்தம் கொடுத்தவர், “பாண்டியா என்னைய அவென் வெறுத்திட மாட்டானே” என்று உடைந்து அழ, அனைவரின் கவனமும் மருதன் பக்கம் சென்றது. மீனாளை கவனிப்போர் யாருமில்லை.

வீரனின் வார்த்தைகள், மீனாளின் உரிமையான பாசம், செயல் எல்லாவற்றையும் வேறுவிதமாக உருவகிப்படுத்தியிருக்க… மனதால் அருவருப்பை உணர்ந்தாள் மீனாள்.

“அப்போ நான் அவரை தொட்டாக்கா அதுக்கு வேற அர்த்தமா? இம்புட்டு நாளும் அவரை நான் தொட்டு பேசி, விளையாடிய எல்லாத்துக்கும் அவர் மனசுல இப்படியொரு எண்ணம் இருந்திருக்குமா? இல்லாம வாய் வார்த்தையா எப்படி வரும்?” இரண்டும் கெட்ட வயதில் வீரனின் மருதனுக்கான பதிலாக மட்டுமே அதனை எடுத்துக்கொள்ள முடியாது துவண்டாள்.

முதல் நாள் தான் அத்தனை கனவோடு, ஆசையோடு வீரனை தான் காதலிப்பதாக லிங்கத்திடம் சொல்லியிருந்தாள்… “இப்போது என் நேசத்தை சொன்னாக்கா, அதுவும் தவறா பார்க்கப்படுமோ?” என்று இன்று மருகி நிற்பவளால், அதன் பின்னர் வீரனை இயல்பாகத் தீண்டிடக் கூட முடியாது தவிக்கிறாள்.

சிறு வார்த்தை என்றாலும் அதன் பொருளின் அடர்த்தி காலத்துக்கும் வதை கொடுத்திடும். அதுவே மீனாளின் நிலை.

மொட்டை மாடி தரையில் தலைக்கு கைகளை கோர்த்து வைத்து படுத்தவனாக, வானில் மின்னும் நட்சத்திரங்களில் தன்னை தன்னுடைய அன்றைய பேச்சினை இன்றும் ஏற்க முடியாது மூழ்கடித்து படுத்திருந்தான்.

இங்கு சன்னல் வழி இருளை வெறித்து நின்றிருந்த மீனாளுக்கு முதல் முறையாக மனம் சரியான பாதையில் சிந்திப்பதாகத் தோன்றியது.

வீரனிடம் இன்று முடியாதென்று நிர்தாட்சண்யமாக சொல்லியிருந்தாலும், இன்று தான் ஒன்றை கண்டு கொண்டிருந்தாள். அது அவளுக்கு மகிழ்வையே கொடுத்தது.

“மாமா!” வெகு நாட்களுக்குப் பின்னர் காதலாக இதழ் பிரித்து முணுமுணுத்தாள்.

காற்றில் மிதந்து வந்த ஒலி வீரனின் செவி நுழைந்ததோ…

“தங்கப்பொண்ணு.” தன்னைப்போல் சொல்லியிருந்தான்.

“நான் உனக்கு வேணாமின்னு அம்புட்டு அழுத்தமா உன்னால சொல்ல முடியுதுன்னாக்கா… உன்னைய என் வார்த்தை எம்புட்டு காயப்படுத்தியிருக்கணும்? மன்னிச்சிடுடி தங்கம். காலம் முச்சூடும் உனக்குள்ள அடங்கியிருக்க தவிக்கிற தவிப்பு உனக்கு வெளங்கலையா? அன்னைக்கு கரும்பு காட்டுக்குள்ள எம்மேல விழுந்து கெடந்தப்பவும், இன்னைக்கு என்னை கட்டிக்கிட்டு நின்னப்பவும் நான் சொன்ன வார்த்தைங்க மண்டையில உதிச்சுதோ? அதேன் அம்புட்டு வீம்பா நான் வேணாமின்னு சொன்னியா?” ஏதேதோ அரற்றி புலம்பியபடி இருந்தவன், அப்படியே உறங்கி போயிருந்தான்.

*******************

வேண்டுமென்றால் போராடி கை சேர்ந்திடலாம். காதல் இருப்பினும் வேண்டாமெனும் நிலையில் என்ன செய்திட முடியும். தன் நெஞ்சம் விரும்புபவர்கள் உன்னால் என் வாழ்வு அமைதி இழந்திடும் என்று சொல்லும் நிலையில், நேசம் கொண்ட இதயம் எட்ட நின்றிடத்தானே முடிவு செய்யும்.

இங்கு வீரனின் முடிவும் அதே!

மீனாளின் மீது எந்த புள்ளியில் காதல் வந்ததென்றெல்லாம் அவனுக்குத் தெரியாது. உயிரில் கலந்த உணர்வாய் கலந்துவிட்டவளிடமிருந்து விலகி இருக்க பலமுறை முயன்றும் முடியாது தவித்தவன், லிங்கத்திடம் அவள் பேசிய வார்த்தைகளைக் கேட்டு உயிர் உடைந்தான்.

அவளின் வார்த்தைகளில் தான் தன்னுடைய வார்த்தைகளின் வீரியத்தின் ஆழம் உணர்ந்தவனுக்கு, என்ன செய்வதென்று தெரியாது, அவளின் வேதனையிலிருந்து தப்பிடவே இழுத்து அணைத்திருந்தான். அக்கணம் அவளுக்கு மட்டுமல்ல அவனுக்கும் வேண்டியதாக இருந்தது அவ்வணைப்பு. காதலுக்கு நிகராக மறுப்பு இருந்தாலும், இருவரும் தன்னுடைய இணையிடம் மட்டுமே ஆறுதல் வேண்டி நின்றனர்.

பல பேர் தோள் கொடுத்திட்டாலும் தன்னவனி(ளி)ன் ஒற்றை அணைப்பிற்கு ஈடாகாது என்பதை வீரன் உணர்ந்துகொண்டான். உணர வேண்டியவள் அறிந்து கொண்டிருப்பாளா?

மறுநாள் முதல் எவ்வித நிகழ்வும் தன்னை பாதிக்கவில்லை என்பதாக வலம் வந்தான்.

தங்கையின் திருமண வேலைகள் அனைத்தையும் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு தன்னை எப்போதும் வேலைப்பளுவாகவே வைத்துக்கொண்டான்.

லிங்கம் கூட தனக்கு ஏதும் வேலையில்லையா எனக் கேட்டும், வீரனே அனைத்தும் பார்த்தான்.

வீரன் வீட்டிலிருப்பதே அறிதென்றானது.

இதற்கிடையில் அங்கையின் தேர்வுகள் முடிந்திருந்தது.

தேர்வு முடிந்த அன்று அவள் கொண்ட உவகைக்கு அளவே கிடையாது. இனி மற்றவர்கள் பார்வையில் அவள் சிறு பெண் இல்லையே. அதுவே அவளின் மகிழ்விற்கு காரணம்.

இன்னும் ஒரு வாரத்தில் நாச்சி, பிரேம் திருமணம்.

மீனாளுக்கு அன்றைய தினம் அந்த வருடத்தின் இறுதி தேர்வு. முடித்துவிட்டு வெளியில் வந்தவள் தன்னுடைய ஸ்கூட்டியை எடுப்பதற்காக வாகனங்கள் தருப்பிக்குமிடம் செல்ல, அங்கு அவளது வண்டியின் மீது ஒரு மாணவன் அமர்ந்திருந்தான்.

மீனாளை பார்த்ததும் “ஹாய்” என்று கையசைத்தவன், வண்டியை விட்டு இறங்காது அவளிடம் பேச்சுக்கொடுக்க முனைந்தான்.

“வண்டி என்னோடது!” மீனாள் வண்டியை சுட்டிக் கூறிட…

“தெரியும்” என்றவன், “நான் இறங்கிட்டால், நீபாட்டுக்கு கெளம்பிடுவியே” என்றான்.

“சரி சீக்கிரம் சொல்லு” என்ற மீனாளுக்கு உள்ளுக்குள் அவன் என்ன வம்பு செய்வானென்று அச்சமாக இருந்தது.

அவன் கோகுல். நகரத்தின் பெரும் புள்ளியின் மகன். அவனது அடையாளமே அவனின் பலம். அவனது தந்தையின் பெயரை வைத்து கல்லூரியில் அவன் செய்த அட்டாகசங்கள் பல.

“நீயி இங்கனத்தேன் படிக்கிறியா?” எனக் கேட்டவன், “உன்னைய ஒரு நா, மீனாட்சி ஹோட்டலில் பார்த்தேன். அது உன் குடும்பத்ததுதேன்ல? முந்தாநா பரீட்சை எழுதிபோட்டு வெளிய வாரேன், எதிர்க்க கிளாசில் நீயி பரீட்சை எழுதிக்கிட்டு இருக்க! உன்னைய எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?” என்றதோடு, “எனக்கு உன்னைய கட்டிக்கணும்” என்று மீனாளின் கையை பிடிக்க முயல, வேகமாக சுதாரித்து இரண்டடி பின் நகர்ந்திருந்தாள்.

“இதெல்லாம் கல்யாணத்துக்கு பொறவுதேன்ல” என்றவன், “உம்மேல பித்து பிடிச்சு கெடக்கேன். நீயி அம்புட்டு அழகு” என்று கண்ணடித்தான்.

மீனாள் பயத்தோடு சுற்றி பார்த்தாள்.

“யாரும் வரமாட்டாய்ங்க. நானும் நீயும் இங்குட்டு இருந்து போனாதேன் வருவாய்ங்க” என்றவன், “நம்ம பயலுவ காவலுக்கு இருக்கானுவ. யாரையும் இங்குட்டு அனுமதிக்க மாட்டானுவ” என்றான்.

“நான் போவனும்.” முட்டி நிற்கும் கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கினாள். அவன் வார்த்தைகளில் விரசமில்லையே தவிர பார்வையாலே அவளைக் கூசச் செய்தான்.

“போவலாம்… செத்த இரு” என்றவன்

“எனக்கு படிப்பு முடிஞ்சுது. சோலிக்கு போவனுமின்னு அவசியமில்லை. எங்க ஐயா நெறய சேர்த்து வச்சிருக்காரு. அம்புட்டையும் ஆயுசுக்கும் செலவு பண்ணாலும் தீராது. நாளைக்கு உம்ம வூட்டுக்கு வாறோம். ஐயாகிட்ட பேசிபுட்டேன். உனக்கு இன்னையோட முடிஞ்சுதுல. நாளைக்கு வூட்டுலத்தேனே இருப்பீய்ங்க? அதேன் சொல்லிட்டு போலாமின்னு உனக்காண்டி காத்துக் கெடந்தேன்” என்றான்.

“இதெல்லாம் வேணாம். எனக்கு ஏற்கனவே வூட்டுல பேசி வச்சிட்டாய்ங்க” என்று சத்தமே இல்லா குரலில் அவள் சொல்லி முடிக்குமுன் கழுத்தை பிடித்து பின்னிருந்த மரத்தில் சாய்த்து ஒரு அடி உயர்த்தியிருந்தான்.

அவனது பிடியின் அழுத்தத்தில் கண்கள் மேல் சொருகியது. காற்றில் ஆடிய கால்கள் நிலையாக நின்றிட அலைப்பாய்ந்தன. மூச்சுக்குத் திணறியவளின் கண்ணீர் கன்னம் வழியவே பிடியை விட்டான்.

நிலைகொள்ளாது கீழே தடுமாறி குத்திட்டு அமர்ந்தவள் இருமிட…

“உனக்கு கல்யாணமே ஆயிருந்தாலும் எனக்கு அதைப்பத்தின கவலை கிடையாது. நாளைக்கு நாங்க வரும்போது எந்தவொரு மறுப்புமில்லாம உங்க ஐயாவை கல்யாணத்துக்கு நா பாக்க சொல்லு” என்றான்.

அவனை நிமிர்ந்து பார்க்காது கால்களை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தவள் தலையை உயர்த்தவே இல்லை.

“பொங்கல் அன்னைக்கு மீனாட்சி கோவிலிலும் உன்னைய பார்த்தேன். கூட ஒருத்தன் கையை புடிச்சிட்டு போயிட்டு இருந்த. யாரவன்?” என்றவன், “உடன் பொறந்தவனாவே இருந்தாலும் இனி நீயி என் கைய மட்டுந்தேன் புடிக்கனும்” என்றான்.

“எங்க புடி பாப்போம்” என்று மீனாளின் முன் கையை நீட்டினான்.

கோகுல் கையை நீட்டிக்கொண்டே இருக்க… மீனாள் அவன் சொல்வதை செய்வதாக இல்லை.

நிமிடங்கள் நீடித்தது.

“இப்போ நீயி புடிக்கலன்னாக்கா, புடிக்கிற வரைக்கும் இங்குட்டு இருந்து யாரும் போவ முடியாது” என்றான்.

தேர்வு முடித்து வந்த மாணவர்கள் வாகனங்களை எடுக்க முடியாது, என்ன நடக்கிறதென்றும் தெரியாது கோகுலின் நண்பர்களால் கட்டுப்படுத்தப்பட்டு ஆங்காங்கே நின்றிருந்தனர். இதில் பேராசிரியர்களும் அடக்கம். யாரும் மீனாளை காப்பாற்ற முன் வரவில்லை. கோகுலின் உயரம் அவர்களை எட்ட நிற்க வைத்தது. மீனாள் அவனின் கையை பிடிக்கும் நிலைக்கு ஆட்பட்டாள்.

“ப்ளீஸ்… வழி விடு. வூட்டுக்கு போவனும்.” அழுகையோடு மன்றாடினாள்.

“என் கைய புடி. போவலாம்.” கோகுல் அசைந்து கொடுக்கவே இல்லை.

“அன்னைக்கு அவென் கைய மட்டும் அப்புடி இறுக்கி புடுச்சிருந்த?”

கோவிலின் உள்ளிருந்து வெளியே லிங்கத்துடன் கடை வீதிக்கு சென்றதை குறிப்பிடுகிறான் என்று மீனாளுக்கு புரிந்தது.

“இப்போ புடிக்கலன்னாக்கா… ரா பொழுது எல்லாருக்கும் இங்கனத்தேன்” என்றவன், “இருட்டுல நீயிம், நானும்” என்று இருபொருள்பட ஏதோ கூற முனைய, அவனின் பேச்சுக்கு கையை பிடிப்பது மேலென்று பட்டென்று பட்டும் படாது பிடித்திருந்தாள்.

கோகுல் கண்கள் சொக்கி அவளின் தொடுகையை ரசிக்கும் பாவனையை முகத்தில் காட்டிட, மீனாள் அருவருப்போடு முகம் சுளித்தாள்.

அக்கணம் அவளுக்கு வீரனின், “தொட்டு பேசி மயக்க பழகவிட்டுடுயோ?” என்ற வார்த்தை செவியில் எதிரொலிக்க, கோகுலின் முகம் வீரனின் வார்த்தைக்கேற்ப மயக்க நிலையில் இருந்திட வேகமாக தன் கையை உதறியிருந்தாள்.

என்னதான் வார்த்தைகள் வீரனுடையதாக இருந்தாலும், அவனது தொடுதலில் பாந்தமாக அடங்கிப்போனவளால் இவனிடம் அப்படியான இயல்பை உணர முடியவில்லையே. வேறு ஆடவன் தான், ஆனால் நண்பனை தொடும் உணர்வில் கூட அவளால் எண்ண முடியவில்லை.

இந்த முடியவில்லை எனும் உணர்வு வீரனின் அன்றைய வார்த்தையின் பலவற்றை அவளுக்கு புரிய வைத்தது.

அவனால் தன் மனம் சில்லு சில்லாக சிதறடிக்கப்பட்டாலும்… அதற்கு ஆறுதலும் அவனால் மட்டுமே அளித்திட முடியுமென்று.

அவளுள் போராடிய போராட்டங்கள் யாவும், கோகுல் என்பவனின் அவள்மீதான விருப்பத்தில் முற்று பெற்றதோ?

“தொட்டாக்கா கூசிப்போற… எல்லாம் இப்போதேன்…” என்றவனை முறைத்துக்கொண்டு இருந்தவளின் மனதில், ‘பிரேம் நாச்சியை சும்மா தொட மட்டுமில்லை. வேறென்னவோ பண்ணியிருக்கியான். அதை புரியாம ஐயா பேசவும், அவருக்கு புரிய வைக்க என்னைய இழுத்து பேசியிருக்கு இந்த மாமா’ என சரியான கோணத்தில் அவள் புரிந்துகொள்ள இத்தனை வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது.

“என்ன மீனு ரோசனை. வூட்டுல எப்படி சொல்றதுன்னா. உனக்கு சங்கடமின்னா சொல்லு, நானே நாளைக்கு நேர்ல நாம விரும்புறோமின்னு சொல்லிடுறேன்” என்றவனின் வார்த்தை பொருளில் விழிகள் தெறித்துவிடும் அளவிற்கு உறைந்து நின்றவள்,

அவளின் அலைப்பேசி அழைப்பில் அதிர…

ஒருவித பதற்றத்திலே எடுத்தாள்.

“ம்மா…”

“என்னட்டி இன்னும் வரல. கா’மணி நேரத்துல வந்துடுவியே! பரீட்சை முடிஞ்சு எம்புட்டு நேரமாவுது?” எனக் கேட்ட மகா, “உடம்பு ஏதும் முடியலையா மீனாள்? குரல் சோர்வா இருந்தமாறி கேட்டுச்சு” எனக் கேட்டார்.

“இல்லைம்மா… இப்போ கிளம்பிடுவேன்” என்றவள் மகா வேறெதுவும் கேட்டிடுவாரோ என வேகமாக அலைப்பேசியை அணைத்து பைக்குள் போட்டவள்,

“அம்மா போன் போட்டுட்டாய்ங்க. லேட்டானா அச்சப்படுவாய்ங்க” என்று கோகுலின் முகம் பாராது கூற,

“ரொம்ப கட்டுப்பாடோ?” எனக் கேட்டவன், “நம்ம கல்யாணத்துக்கு பொறவு நீயி உன் இஷ்டம் போல இருக்கலாம்” என்க, அவளின் அதிர்ச்சி கூடிக்கொண்டே போனது.

“ரொம்ப பயப்படுற நீயி” என்றவன், “நாளைக்கு நம்ம கல்யாணத்தை முடிவு பண்ணதும், நிறைய பேசலாம். அயித்த பாவுமாட்டி, காத்திருப்பாய்ங்க. நீயி கெளம்பு” என்று அவளுக்கு வழிவிட்டு நின்றான்.

எங்கு மீண்டும் பிடித்து வைத்துக்கொள்வானோ என அஞ்சியவள், வேகமாக வண்டியில் அமர்ந்து இயக்கி அங்கு தன்னையே பார்த்திருக்கும் யாரையும் கருத்தில் கொள்ளாது சென்றிருந்தாள்.

அத்தனை வேகம். அவள் இப்படியொரு வேகத்தில் வண்டி ஓட்டியதே கிடையாது.

மதுரைக்கும், விளாங்குடிக்கும் செல்லும் மத்திய சாலையில் தான் வீரனின் ஆலை உள்ளது.

அப்போதுதான் லிங்கம் ஹோட்டலில் ஏதோ வேலையென்று அழைத்திருக்க, முடித்துவிட்டு திரும்பி வந்த வீரன் ஆலையின் கேட்டில் லோடு ஏற்றிய லாரி நிற்கவும், சாலைக்கும் ஆலைக்கும் நடுவிலிருக்கும் சிறு பரப்பில் வண்டியில் அமர்ந்தவாறே என்னவென்று கேட்டான்.

“ட்ரைவரு ரிஜிஸ்டரில் கையெழுத்துப்போட போயிருக்காரு அண்ணே” என்று ஒருவன் சொல்ல,

சரியென தலையாட்டிய வீரன், வண்டியை முடுக்கி உள்ளே செல்ல முனையை சாலையில் மீனாளை கண்டுவிட்டான்.

கையில் கட்டியிருந்த வாட்சில் நேரத்தை பார்த்தவன்,

“இம்புட்டு நேரஞ்செண்டு போறா(ள்). அதுவும் இம்புட்டு வேகம்” என வாய்விட்டே கூறிய வீரன் ஆலைக்குள் நுழையாது, அவள் பின்னால் சென்றான்.

வீரன் அத்தனை வேகம் வந்தும் மீனாளை பிடிக்க முடியவில்லை.

அவளது வீட்டின் முன்னிருக்கும் களத்தில் வண்டியை ஸ்டான்ட் இடாது கீழே விட்டவள், எதிரில் வந்த அங்கையை இடித்ததுக்கூட தெரியாது தன்னறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டாள். தாழிடாது படுக்கையில் கவிழ்ந்து படுத்தவளுக்கு அப்படியொரு அழுகை.

தூரத்தில் வரும்போதே அவள் வண்டியை அப்படியே போட்டுவிட்டு கல்லூரி பையை கூட எடுக்காது சென்றதை கவனித்த வீரன், நேராக மருதனின் வீட்டிற்குத்தான் வந்தான்.

தனது வண்டியை நிறுத்திவிட்டு, மீனாளின் வண்டியையும் தூக்கி நிறுத்தியவன், பையை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல…

“என்ன அமிழ்தா… ஏதும் பிரச்சினையா? அவ ஏதோ கோபமா போனமாறி இருந்துச்சுன்னு அங்கை சொன்னா. என்னன்னு பார்க்கலாமின்னு வந்தாக்கா, நீயி பொறத்தாலே வார?” என்று மகா பயந்து கேட்க…

“எனக்கும் தெரியல அத்தை. ஆலைகிட்ட நின்னுட்டு இருந்தேன். கொள்ள வேகத்துல வண்டியை விரட்டிட்டு போனா(ள்). அதேன் பின்னாலே வந்தேன்” என்றவன் பையை கூடத்தில் வைத்துவிட்டு,

“எங்க?” என்று அங்கையிடம் வினவினான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 41

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
39
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

10 Comments

  1. மீனு உணர்ந்தது சூப்பர்

  2. பிரேம் என்ன வேலையை பார்த்து விட்டிருக்க நீ … மருதன் பெரிய மனுஷனா இப்படி பண்ண கூடாது தப்புன்னு தான் சொல்லியிருக்கணும் … இதான் பஞ்சாயத்துன்னு தெரிஞ்சுருச்சு … இப்போ கொஞ்சம் சரியாகவும் செஞ்சிருச்சு … காதல் தந்த காயத்தை அந்த காதலே சரி பண்ணிடும் …

    புது வில்லனா … ரொம்ப கொடூரமான வில்லனா இருப்பான் போல …

    1. Author

      ஆமா ஆமா 😁😁😁

      நன்றி sis

  3. உண்மையான நேசத்தின் வலியை வெளிப்படுத்தும் இன்னொரு பரிணாமம்…

  4. Irukura ah prachanai pathalanu puthusa ah vera ah inoru prachanaiya ah….

    1. Author

      குடும்பத்துல பிரச்சினைக்கா பஞ்சம் 🤣🤣

  5. அவளது மன ஆர்ப்பரிப்பு அவனது அணைப்பினில் மட்டுமே அடங்கும் என்று புரிந்துகொண்டால் மீனாள்.

    அருகில் இருந்து மன கசப்பை போக்க எண்ணியவன், காலத்துக்கும் அவள் மனதை வருத்தும் என்று அறிந்து கொண்டான்.

    பக்கம் நின்று வலி கொடுக்காமல் விலகி நின்று நேசிக்க நினைத்து விட்டான்.

    இத்தனை அழுத்தமாக வேண்டாம் என்று சொல்ல அவள் மனம் எந்தளவு காயப்பட்டிருக்க வேண்டும் என்று யோசித்து விலகி நிற்க வீரன் முடிவெடுக்க.

    அவளோ, அவன் அணைப்பில் நிம்மதி கொண்ட மனது வேறொருவனின் சிறு தொடுகைக்கு கூட இசைந்து கொடுக்க முரண்டுவது கண்டபின் அன்று கண்ட காயம் காற்றில் போக காண்கிறாள்.

    1. Author

      அழகான கருத்து… நன்றி sis