Loading

யான் நீயே 13

செல்லும் அங்கையையே லிங்கம் பார்த்து நின்றிருக்க…

வீரன் அவனின் தோளில் கை வைத்தான்.

“அண்ணே!”

“என்னடே ஆச்சுது?”

லிங்கம் நடந்ததை விவரித்தான்.

“சரி இங்கவே இரு” என்ற வீரன் முதல்வரின் அறைக்குள் சென்று பத்து நிமிடங்கள் கடந்து வெளியில் வந்தான்.

“என்னண்ணே?” லிங்கம் கேள்வியாய் ஏறிட்டான்.

“சின்னக்குட்டி ஆத்திரத்தில் பண்ணான்னா… நீயி கோவத்துல பேசி வச்சிருக்க. இன்னும் ஒன்றை மாசம் பள்ளிக்கூடம் வர வேணாமா?” என்ற வீரன், “சின்னக்குட்டி பாதுகாப்புக்கு அவிங்கதேன் பொறுப்புன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். ப்ரின்சி முன்னுக்கவே, அந்த பையனோட அம்மாகிட்டையும் பேசிட்டு வந்தேன். வா போவோம்” என்று முன் நடந்தான்.

“எது பண்ணாலும், நம்ம பாதுகாப்பையும்… பொறவு என்ன நடக்குமின்னும் ரோசிக்கணும் லிங்கு” என்று தம்பியின் தோளில் தட்டிக்கொடுத்தான்.

“சின்னக்குட்டிக்கு ஒன்னுன்னாக்கா நரம்பு புடைக்குதோ! வசனமெல்லாம் பேசிருக்கவன்” என்ற வீரனிடம் தம்பியை கேலி செய்யும் சிரிப்பு.

“என்னத்தையும் சொல்லாதண்ணே” என்ற லிங்கத்திற்கு வீரனின் கேலி பிடிக்கவே செய்தது.

“என்னவாம்?”

தம்பியை கண்டு கொண்டவனாக வீரன் கேட்க, ஒன்னுமில்லையே என சிரித்து மழுப்பினான் லிங்கம்.

‘நீயி புடிக்க வேண்டிய கையி மாமா!’ அங்கையின் குரல் லிங்கத்தின் செவிகளில் எதிரொலித்தது. அவனின் முகம் விகசித்ததோ எனும் விதமாக மலர்ந்தது. பட்டென்று மறைத்துக்கொண்டான்.

“பேங்குல என்னாச்சு?”

“எல்லாம் ஓகே தேன். அடுத்தவாரம் பணம் தரமின்னு இருக்காய்ங்க” என்ற வீரன், “தொகை பெருசுடே, உன் பேரில் பாதியை ஸ்பிலிட் பண்ணனுமாட்டிக்கு” என்றான்.

“எனக்கு ஹோட்டலே போதுமிண்ணே! உன் பேரில் இருந்தா மட்டும் போதும்” என்றான் லிங்கம்.

“உன்கிட்ட சம்மதம் கேக்கலடே… நாளைக்கு பத்திரம் பதிவு. சோலி ஏதுமிருந்தா ஒதுக்கி வச்சிப்புடு” என்ற வீரனிடம், “அம்புட்டும் உன் உழைப்புண்ணே” என்று லிங்கம் மறுக்க செய்தான்.

அடுத்து வீரன் ஒன்றும் பேசவில்லை. தன் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.

லிங்கம் முகம் சுருங்க ஹோட்டலை நோக்கிச் சென்றான்.

சில மணி நேரத்தில் மீனாள் அழைத்திட, வீரன் அரிசி ஆலையில் இருந்தான்.

“நான் ஆலையில இருக்கேன். லிங்கம் மருதையிலதேன் இருக்கியான். அவனுக்கு போன போடு” என்று வைத்திட்டான்.

அடுத்த பத்து நிமிடத்தில் மீனாளை அழைத்துக்கொண்டு விளாங்குடி திரும்பிக் கொண்டிருந்தான் லிங்கம்.

தேர்வினை நல்ல முறையில் முடிக்க வேண்டுமென்கிற பதற்றத்தில் மறந்திருந்த காலை நிகழ்வு, இப்போது மனதில் எழும்பி மீனாளை அலைக்கழித்தது.

லிங்கம் தன் அண்ணனின் பாரா முகத்தில் வருந்தியபடி இருக்க, மீனாளின் முகத்தை அவதானிக்க தவறினான்.

இருவரும் தங்களின் வருத்தத்தோடு அமைதியாகவே வீடு வந்து சேர்ந்தனர்.

வீட்டிலிருப்பவரிடம் அங்கையின் பள்ளியில் நடந்தவற்றை சொல்லிய லிங்கம், வீரனிடம் பேச முயற்சித்திட… அலைப்பேசியை எடுத்த வீரன் “அவியல் மூட்டை சரி பார்த்திட்டு இருக்கேன்” என்று வைத்துவிட்டான்.

அப்பட்டமான மறைமுக ஒதுக்கம். எப்போது லிங்கம் அழைத்தாலும், சொல்லுடே, லிங்கு என்று விளிக்கும் வீரன் இப்போது அறிவிப்பு போல் பேச முடியாது என்பதை கூறியிருக்க திண்ணையில் கால் நீட்டி அமர்ந்திருந்த மீனாட்சியின் மடியில் சென்று தலை வைத்து படுத்துக்கொண்டான்.

சுபா அன்று மதியம் போல் தன்னுடைய ஊருக்கு கிளம்பியிருந்தாள். அங்கிருந்து சென்னைக்கு தங்கியிருக்கும் விடுதிக்கு செல்ல வேண்டும்.

சுபாவின் தந்தை சுந்தரேசன் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக இருக்கிறார். சுபா மட்டும் தான். அவரின் மனைவி நோய்வாய்ப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன்னவே இறந்துவிட்டார்.

சுபா கௌதமிற்காகவே தந்தையை தனியாக விட்டு சென்னையில் அவன் வேலை செய்யும் நிறுவனத்திலேயே பணி புரிகிறாள். சுந்தரேசனும் மகளின் விருப்பத்திற்கு தடை விதிக்காது சென்னைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

வீரனின் முகப்புத்தகத்தில் கௌதமின் கணக்கு காட்டிட, முகப்பு படம் பார்த்ததும் சுபாவினுள் ஒரு உணர்வு. நாளுக்கு நாள் அவனை பற்றி முகபுத்தகம் வாயிலாகவே அறிந்து கொண்டவள், அவனுக்காகவே சென்னை சென்று… அவனது அலுவலகத்தில் வேலையில் அமர்ந்தாள்.

ஆரம்ப காலங்களில் இருவரும் வெவ்வேறு குழுவில், வேறு வேறு செயல் திட்டங்களில் இருந்திட… நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் ஒரே குழுவில் இணைந்தனர்.

அனு தினமும் கௌதமை பார்த்தே நாட்களை கடத்தியவள், அன்று தான் அவனை முதன் முதலாக பார்ப்பதைப்போல் பார்த்து வைத்தாள். இரண்டு மூன்று வாரங்களில், வீரனின் உறவென்று கௌதமே கேட்கும்படி செய்தாள்.

பல வருடங்களுக்கு முன்னர் சிறு வயதில் பார்த்திருந்தவளை அவனுக்கு சுத்தமாக நினைவில்லை.

தோழியாக நட்பு கொண்டவள், உறவினள் என்று தெரிந்ததும் கௌதமும் நெருங்கியே பழகினான்.

அவனோ நட்பாக பழக, அவளோ காதலாக பழகினாள்.

நல்லானுக்கு பாண்டியன் உறவினர்கள் யாரையும் பிடிக்காது. அவர்களைப்பற்றி பேசுவதைக்கூட விரும்பமாட்டார். ஆதலால் சுபா தன்னுடன் வேலை செய்வதை கௌதம் வீட்டில் சொல்லவில்லை.

சில வாரங்களில் சுபா காதலென்று அவன் முன் நிற்க… என்ன மாதிரி உணர்கிறோம் என்றே புரியாது பதில் ஏதும் சொல்லாது சென்றிருந்தான் கௌதம்.

தன் மனதிலிருப்பதை சொல்லிவிட்டோம். இனி அவனது முடிவு என்று சுபா இலகுவாக அவனிடம் முன்பு போல் பழகிட, அவள் தன்னை காதலிப்பதாக சொல்லியது உண்மை தானா என்ற குழப்பம் அவனுள். குழப்பம் அவனை தடுமாற வைத்தது. தடுமாற்றம் தடம் புரள வைத்தது. அவனுள் மெல்ல மெல்ல சுபா காதலாக தடம் பதித்தாள்.

அச்சமயம் தான் நல்லான் பொங்கலுக்கு விளாங்குடி செல்வது பற்றி வசந்தியிடம் வீட்டில் பேசினார்.

“அண்ணே வூட்டுக்கு போறோமின்னு முடிஞ்ச உறவெல்லாம் ஒட்டி உறவாடாத. நமக்கும் அங்கிட்டு பங்கிருக்கே. அதை விட முடியாது. இன்னும் ஒரு வருசந்தேன் எனக்கு சோலி. ரிட்டையர்ட் ஆகிட்டால் அங்குட்டு தான் போகணும். அதுக்கு நாம இன்னும் எதையும் மறக்கலன்னு காட்டத்தேன் அங்குட்டு போறோம். அந்த பாண்டியன் குடும்பத்தை பார்த்தாலே கடுப்பாவுது. அதுவும் அந்த வீரன்…” என்று பல்லை கடித்தார்.

அப்போதுதான் கௌதமிற்கு நிதர்சனம் புரிந்து தன் காதல் கைக்கூடிட வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தான்.

தன்னால் தன்னவளுக்கு வலி வேண்டாமென்று நினைத்தவன் விலக நினைக்க,

“பத்து நாள் ஆச்சு. என்ன சொல்லப்போற?” கௌதமின் முகம் பார்த்து சுபா கேட்டிட, காதலை பூட்டி வைத்தவனாக முடியாதென்று நிர்தாட்சண்யமாக மறுத்தான்.

“இல்லை. நீ பொய் சொல்ற கௌதம். எனக்கான காதலை நான் உன் கண்ணுல பார்த்திருக்கிறேன்” என்றவள் எவ்வளவோ மன்றாடியும் கௌதம் ஏற்கவில்லை.

அதன் பின்னர் சுபாவின் பார்வை ஏக்கமாக கௌதமை தொடர்ந்திட, வேறு குழு மற்றும் பணி நேரம் ஆகிவற்றை மாற்றிக்கொண்டான். சுபா தான் தவித்துப்போனாள். அவளின் தவிப்பு புரிந்து கௌதம் துடித்துப்போனான். இருப்பினும் மீண்டும் உறவோடு இணையும் வேளையில் தன் காதலால் ஒரு சச்சரவு வேண்டாமென்று தன்னுடைய விலகளில் உறுதியாக இருந்தான்.

கௌதமிற்காக வந்தவளுக்கு அவனை பார்க்கவே நேரம் கிட்டாமல் போனது.

அலுவலகத்தில் கௌதமிற்கும் சுபாவுக்கும் ஒரே நண்பர்கள் என்பதால், கௌதம் பொங்கலுக்கு ஊருக்கு செல்வதை அறிந்துகொண்ட சுபா அவனுக்கு முன்பு அங்கு வந்து நின்றாள். அதில் அவனுக்கு அதிர்ச்சி தான். இருப்பினும் தனக்காக என்று கர்வம் கொண்டான். அவள் மீதான அவனின் புதைக்கப்பட்ட காதல் அதிகரித்து மேலெழும்பியது உண்மை. அதனாலே அன்றைய இரவு அவளிட்ட உதட்டு முத்தத்தை விரும்பியே ஏற்றான்.

இருவருமே நேசம் கொண்டுள்ள நிலையில் வீரனுக்கு அது தவறாக படவில்லை. ஆதலாலே அன்று அமைதியாக இருந்தான். உண்மையில் கௌதமுக்கு விருப்பமில்லாமல் போயிருந்தால், அன்றே சுபாவின் செயலை நிச்சயம் வீரன் கண்டித்திருப்பான்.

மீனாள் பேசிய பின்னர் கௌதமுக்குள்ளும் நல்லதாகவே நினைப்போமே என்று தோன்றிட, மீனாள் பேசிச்சென்ற அன்றைய இரவே கௌதம் வசந்தியின் முன்பு தன்னுடைய காதலை சொல்லும் முடிவோடு நின்றான்.

வசந்தி சரியென்றுவிட்டால், நல்லானை அவர் சம்மதிக்க வைத்திடுவார் என்கிற எண்ணம் அவனுக்கு.

வசந்தி என்னவென்று கேட்டிட,

“நான்… எனக்கு… ம்மா” என்று தடுமாறியவன், “நான் காதலிக்கிறேன் ம்மா” என்று சொல்லிவிட்டு வசந்தி என்ன சொல்லிடுவாரோ என அத்தனை பயத்தோடு அவரை பார்த்தான்.

அவனின் பயம் வீண் என்று, வசந்தி பேசிட கௌதமுக்கு மயக்கம் வராத குறை தான்.

“எனக்கு தெரியும் கௌதம். உன் ஆசைக்கு குறுக்கு நிக்கமாட்டோம்” என்ற வசந்தியின் வார்த்தை அவனுக்கு நெஞ்சுவலியையே கொடுத்தது.

“ம்ம்மா…”

“இதெல்லாமாடா அம்மாகிட்ட சொல்லுவாய்ங்க. போய் லவ் பண்ணுற சோலியை பாருடா. கல்யாணப்பேச்சை பொறவு பார்த்துக்கிடுவோம்” என்ற வசந்தி ”நீயும் மீனாளும் தோப்பில் பேசியதை கேட்டுப்புட்டேன். அதனால் எனக்கு எல்லாம் தெரியுமாட்டிக்கு” என தவறாக நினைத்துக்கொண்டுக் கூறினார்..

கௌதமுக்கு அதீத சந்தோஷம். அப்போதே சுபாவை சந்தித்து தன்னுடைய காதலை சொல்லிவிட்டான்.

தன் காதலை கௌதம் ஏற்றுக்கொண்ட மகிழ்வில் சுபா ஊர் செல்ல…

“நானும் மீனாளும் பேசியதை கேட்டுவிட்டதா சொன்னாங்களே! முழுசா கேட்டாங்களா இல்லை பிற்பாதியா?” என்ற குழப்பத்தோடு, மருதன், மீனாள் மற்றும் கௌதம் திருமணம் என்று சொல்லிய அதிர்வோடு சென்னை சென்று சேர்ந்தான்.

வீட்டிற்கு போனதும் வீரனுக்கு அழைத்துவிட்டான்.

“அண்ணே” என்று விளித்தவனின் குரலில் சுரத்தே இல்லை.

காலையில் நடந்த பேச்சினை வைத்து கலங்கியிருக்கிறான் என்பதை நொடியில் யூகித்த வீரன்,

“எல்லாம் பார்த்துகிடலாம்டே” என்று ஆறுதலாக பேசி வைத்திட்டான். ஆறுதல் சொல்லியவனைத் தேற்றிட யாருமில்லை.

‘வசந்தி ஒருபோதும் இதனை அங்கீகரிக்கமாட்டார். மீனாளும், கௌதமும் உண்மையை சொல்லும் நிலையில் மட்டுமே அவரவர் ஆசை ஈடேற வாய்ப்புள்ளது’ என எண்ணிக்கொண்ட வீரனுக்கு, மீனாள் மருதன் பேச்சை மீறிடமாட்டாளென்றே தோன்றியது.

விரக்தியாக புன்னகைத்துக் கொண்டான்.

மீண்டும் ஒருமுறை அன்னையிடம் பேசி பார்க்கலாமா என நினைத்த கௌதம் வசந்தியை தேடிச்செல்ல, அவரோ நல்லானிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

தன் கணக்கில் வரும் பணத்தைப் பற்றி.

நல்லான் பார்வையிலேயே அடக்கிவிட்டார்.

அது கணவன் மனைவி சண்டையென்று கௌதம் தன்னறைக்கு சென்றுவிட்டான்.

அவர்களின் பேச்சினை அவன் நின்று கேட்டிருக்க வேண்டுமோ?

“உன்னைய கௌரவமா நான் நடத்துறதுக்கு காரணம் உன் கணக்கில் வரும் வரும்படி தான். பண்ணையில வர உன் பங்கு மட்டுமே அம்புட்டு வரும்போது, ஓட்டலுல ஆலையில இன்னும் எம்புட்டு வரும். உன் அண்ணே மவ(ள்) நம்ம கௌதமுக்கு ஒத்து வருமான்னு பார்க்கத்தேன் இந்த ஊரு பயணமே! எனக்கு சிரமம் கொடுக்கமா நீயே கல்யாணப்பேச்சை ஆரம்பிச்சிட்ட. பொறவு நாம கேக்குறதை உன் அண்ணே நமக்கு செஞ்சுதானே ஆவணும். எனக்கு பென்ஷனும் சொல்லிக்கிற அளவு வராது. ஊரோட போயி இருக்கணுமின்னா… அங்க நமக்குன்னு பண்ணயம் இருக்கணுமாட்டிக்கு” என்ற நல்லானின் திட்டத்தில் வசந்தி வாயடைத்துப் போனார்.

இருவருமே ஒருவருக்கொருவர் சரியான ஜாடிகேத்த மூடி என்பதை அறிந்துகொண்டனர்.

**************

சர்க்கரை ஆலை கட்டவிருக்கும் இடம் வீரனின் பெயரில் இருந்தது. அதன் மதிப்பு பல கோடி. மிகவும் பரந்த பெரும் பரப்பு. சட்ட சிக்கல்களை தவிர்ப்பதற்காக மட்டுமின்றி, தன் உடன் பிறந்தவனை பலமாக எண்ணியே… கட்டவிருக்கும் தொழிற்சாலையை லிங்கத்தின் பெயரில் பதிவு செய்ய நினைத்துக் கூறினான்.

“அது உன்னுடைய உழைப்புண்ணே!” என்று லிங்கம் சொல்லியதில் எவ்வித உள்ளர்த்தமும் இல்லையென்றாலும், லிங்கம் பிரித்து கூறியதைப்போல் உருவகம் கொண்டுவிட்டது. வீரனின் மனதில்.

தம்பியைப் பற்றி எல்லாம் தெரிந்தும் வீரனால் இந்த பிரிவு, வேற்றுமை என்பதை மட்டும் எப்போதும் எளிதில் கடக்க முடிவதில்லை.

முன்பு பிரேம் விடயத்தில் மருதன். இப்போது லிங்கம்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவினை உண்ணும் சமயம் கூட யாரிடமும் எவ்வித பேச்சும் பேசாது, விரைந்து உண்டு விட்டு அறைக்குள் வந்திருந்தான்.

தன்னைப்போல் வீரனின் கால்கள் சன்னல் பக்கம் செல்ல, கதவினை அறைந்து சாற்றி, திரையை இழுத்து மூடி கட்டிலில் வந்து விழுந்தான்.

அத்தனை உடல் உழைப்பின் போது ஏற்படாத களைப்பு, மனதின் சிறு சுணக்கத்தில் ஏற்பட, கண்களை மூடி உறங்க முயற்சித்தான்.

சில நிமிடங்களில் லிங்கம் “அண்ணே” என்று அழைக்கும் சத்தம் கேட்டும் அசையாது படுத்திருந்தான்.

வீரனிடம் பதிலின்றிப்போக லிங்கம் கதவினை திறந்துகொண்டு உள் சென்றான்.

வீரன் சீரனா உறக்கத்தில் இருப்பதைப்போல் இருந்தது. சிறிது நேரம் அவனின் காலருகே மெத்தையில் அமர்ந்தான்.

“என்கிட்ட கோச்சிக்கலாம் வருமாண்ணே உனக்கு?” என விழிகள் மூடிய வீரனின் முகம் பார்த்து வினவிய லிங்கத்தின் முகத்தில் அப்படியொரு புன்னகை.

“ஆளும், பேருந்தேன் வீரன். நீயொரு குழந்தைண்ணே” என்ற லிங்கம் வீரனின் கன்னத்தை பிடிச்சு கிள்ள…

“அவுச்… வலிக்குதுடே” என்று கன்னத்தை பிடித்தபடி எழுந்தமர்ந்தான் வீரன்.

“உறங்களையாட்டுக்கு?”

“நீயி பேய் மாறி வருவன்னு பிசாசு கனவுல வந்து சொல்லுச்சு, அதேம் உறக்கம் ஓடிப்போச்சு” என்ற வீரன், “நான் கோவமாத்தேன் இருக்கேன். எதையும் சொல்லி என்னைய சமாதானம் செஞ்சிப்புடலாம் நெனக்காதடே” என்ற வீரன் முகத்தை பொய் கோபமாக வைத்துக்கொண்டான்.

“சர்க்கரை ஆலை உன்னோட எம்புட்டு வருச கனவுண்ணே. முழுக்க முழுக்க உன் முயற்சி. அது உனக்குன்னு மட்டுமே இருந்தாதேன் நல்லாயிருக்குமாட்டிக்கு” என்றான்.

“உன்னையவிட என் கனவு ஆசை பெருசில்லடே! சொத்து ஒன்னா இருந்தாதேன் சொந்தம் ஒன்னா இருக்குமின்னு நினைக்கிற ஆளு நானில்லைடே” என்ற வீரன், “அரிசி ஆலை ஆரம்பிக்கும்போதே, உள்ள ஒரு கணக்கு. ஓட்டலு பண்ணையம் எல்லாம் கூட்டு, நாச்சியாக்குன்னு அதுல நாம பிரிச்சா, நாமலே மாமாவை வேத்துமையா நெனச்சு பிரிச்ச கணக்கா ஆகிப்புடும். மருமவளா மாமா வூட்டுக்கு நாச்சியா போகும்போது, சீருன்னு கொடுத்தாலும் மாமா மனசு வெசனப்படும். அதேன் அதுல பிரேமை கூட்டு வச்சேன். இப்போ என் பங்கை நாச்சியாக்கு மாத்தி வச்சு அரிசி ஆலையை மொத்தமா பிரேம்கிட்ட ஒப்படைச்சாலும், என் தங்கச்சி பேருலதானே இருக்குன்னு சொல்லிடலாம். சொந்த மாமன் வூட்டுக்கே போனாலும் அவளை வெறுங்கையா அனுப்பக்கூடாதுடே அவளுக்குன்னு சுயகௌரவம் ஒன்னு வேணுமின்னுதேன் அது. அந்த மாதிரி என் தம்பிக்குன்னு நானு கொடுக்கணுமே! ஓட்டலு முழுக்க அப்பா, மாமாக்கு சேரும். அதுல உனக்குன்னு எனக்குன்னோ பங்கு வச்சிக்கக்கூடாது. கடைசி காலத்துல அவிங்களை ஒடுங்கி நிக்க வச்சிடக்கூடாது. காலத்துக்கும் அது அவிங்க கணக்குலதேன் இருக்கும். அதுவுமில்லாம இது முழுக்க என் உழைப்புன்னு சொல்லிட முடியாதுடே! ஓட்டலில் வரும் பணத்தையும்தேன் இதுல போடப்போறேன். அப்போ அதுல உழைக்கிற உனக்கும் கட்டப்போற ஆலையில சம உரிமை இருக்கே!” என்றான் வீரன்.

“வசந்தி அத்தை பேசுனப்பேச்சு நாளைக்கு நமக்குள்ள வந்திடக்கூடாதுடே” என்ற வீரன் காலை வசந்தி தன்னிடம் கேட்டவற்றை சொல்ல, லிங்கம் கொதித்தான்.

“யாரோ சொன்னாங்கன்னு நீயி இப்போவே இப்படி செய்வீயா? நாங்க கேட்டோமாக்கும். உன்கிட்ட எங்களுக்கு சொத்து கொடுன்னு?” என்று வீரனை வார்த்தையால் உலுக்கிவிட்டான்.

“எனக்கும், நாச்சியாக்கும் மட்டுமில்லாம, மீனு, சின்னதுக்கும் நீயி பக்காவா சரிபண்ணி கொடுக்கணும் நெனக்கிறது புரியுதுண்ணே. அதுக்குன்னு இருக்கிற எல்லாம் எங்களுக்கே கொடுக்கணும் அவசியமில்லை. உனக்குன்னு என்ன இருக்காம்?” என்றான் லிங்கம்.

“நீயி உன்னுத கொடுத்துப்புடமாட்டியாக்கும். நான் கேட்டாக்க” என்ற வீரனை தாவி அணைத்துக்கொண்ட லிங்கம், “உனக்கு ரொம்ப பெரிய மனசுண்ணே!” என்றான். நெகிழும் நேரத்தில் எப்போதும் இப்படித்தான் ஒட்டிக்கொள்வான் லிங்கம்.

“சேர்த்து வச்சிக்கிறதைவிட கொடுக்கிறதுலதேன் அதீத சந்தோஷம்டே” என்ற வீரன் லிங்கத்து முதுகில் தட்டியவனாக, “என் பலமே நம்ம குடும்பம் தான் லிங்கு. அதுல நீயி எனக்கு… அர்ஜுனனுக்கு தேரோட்டிய கண்ணன் மாறி” என்றான்.

“அத்தை அப்படி பேசுனதால, நாளைக்கு நீயி அந்தமாதிரி என்கிட்ட கேட்டுப்புடுவன்னு இதுல உன்னைய கூட்டாக்கல லிங்கு. அப்படி மனசுல நெனச்சிப்புடாத, எம் பாசம் பொய்யாகிப்போவும்” என்ற வீரன், “எனக்கு சொல்லத் தெரியலடே. உன்னைய என் கைக்குள்ளவே வச்சிக்கணுமாட்டிக்கு. ஒவ்வொன்னா பார்த்து பார்த்து செய்யணுமாட்டிக்கு” என்றான்.

வீரனுக்கு சரியான வார்த்தைகள் இல்லையென்றாலும், அவனின் எண்ணத்தையும், பாசத்தையும் லிங்கத்தால் புரிந்துகொள்ள முடிந்தது.

“என்னடே?”

லிங்கம் புன்னகையோடு வீரனை பார்த்திருக்க, வீரன் கேட்டிருந்தான்.

“லவ் யூண்ணே. எத்தனை சென்மம் வாழ்க்கை இருந்தாலும், நீயி எனக்கு அண்ணனவே வேணும்” என்றான். அவனின் முகம் மட்டுமே சிரித்திருந்தது. குரலும், மனமும் அத்தனை நெகிழ்ந்திருந்தது.

“சின்னக்குட்டி இருந்திருக்கனும்டே. அவிங்க சொன்னாக்கா, நீயி கேட்டுகிட்டு உட்கார்ந்திருப்பியா மாமான்னு என் சட்டையை புடிச்சிருப்பாள்” என்றான்.

லிங்கத்தின் மனநிலையை மாற்றவே வீரன் அவ்வாறு பேசினான். ஆனால் லிங்கமோ வீரன் சொல்லியதில், ‘எம்மேல அம்புட்டு உரிமையா?’ என தனக்குத்தானே கேட்டுக்கொண்டதோடு, அன்று தோப்பில் வைத்து அவள் அழுது கொண்டே பேசியவையெல்லாம் காதுக்குள் எதிரொலிக்க சிலிர்த்து அடங்கினான்.

“உண்மையாவே அவளுது நேசந்தேனா அண்ணே?”

கேட்ட லிங்கத்தை புருவத்தூக்கலுடன் ஏறிட்ட வீரன்,

“எனக்கு உறக்கம் வருதுடே” என்று கவிழ்ந்தடித்து படுத்துக்கொண்டான்.

“அண்ணே சொல்லிட்டு படும்.” வீரனின் புஜத்தை பிடித்து அவனை புரட்டினான்.

“நீதேன், சின்னப்புள்ளை வேணான்னு சொல்லிட்டல… அவளும் புரிஞ்சிக்கிட்டு ஒதுங்கிட்டாள் தானே? பொறவு என்னத்துக்கு கேக்குறியாம்?” நிமிர்ந்து படுத்து தலைக்கு பின்னால் கை கோர்த்து வைத்தவனாக லிங்கத்தை சீண்டினான் வீரன்.

“நீயி ஏதோ சொல்லப்போயி… அவள் அடக்கி வாசிக்கிறாள். அவ்வளவுதான். இன்னைக்கு பள்ளிக்கூடத்துல வச்சு ஒன்னு சொன்னா(ள்). அவள் லேசுல விடமாட்டா(ள்)ன்னு தோணுது” என்றான்.

லிங்கம் என்னவென்று சொல்லாது ஒன்று என்றதுமே அது அவர்களுக்குள்ளான தனிப்பட்ட ஒன்றென புரிந்துகொண்ட வீரன் அதைப்பற்றி கேட்காது,

“காலநேரம், மனசு, பிடித்தம் எல்லாம் மாறும். அப்பவும் லிங்கதேன் உன் விருப்பமா இருந்தாக்கா, அவென் சொல்லுற வயசு காரணத்தை ஒதுக்கி வச்சு, அவனையே உனக்கு கட்டித்தறேன்னு சொன்னேன். அதுக்கு நீயி படிக்கணும். நல்லா படிக்கணும். அதுக்கான வயசு இதுன்னு சொன்னேன். அம்புட்டுதேன்” என்ற வீரன், “பிடித்தமும், புரிதலும் இருந்துட்டாக்கா காதலுக்கு வயசு தடையில்லை லிங்கு. சின்னக்குட்டியை மாத்த முடியாதுன்னு அன்னைக்கே புரிஞ்சிடுச்சு. வயசு வித்தியாசத்துல பிடிப்பு இல்லாம கட்டாயப்படுத்தி கட்டிகிறதுதேன் தப்பு. இந்த விடயத்தில் சின்னகுட்டி ரொம்ப தெளிவு. ஒன்னுமண்ணா பழகும்போது அவளுக்கு வயசு கண்ணுக்குத் தெரியல. வேண்டாங்கிற வலி அவளுக்கும் வேண்டாமாட்டிக்கு. அவ உன்னைய விட்டுடலாம் மாட்டாள். நீயிதேன் இறங்கி வர மாறியிருக்கும். அல்ரெடி உம் மனசு கொஞ்சமா சாய ஆரம்பிச்சிடுச்சு நெனக்கிறேன்” என்றான். அர்த்தமாக.

வீரன் சொல்வது உண்மை தானே. லிங்கத்தின் மனமும் தலும்ப ஆரம்பித்திருக்கிறதே. என்ன முடிவெடுப்பானோ?

லிங்கம் எதுவும் சொல்லவில்லை அப்படியே அமர்ந்திருந்தான்.

அங்கையின் நேசம் தெரிந்த நொடி வீரனுக்கும் அவர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் தான் கண்ணுக்கு உறுத்தலாக தெரிந்தது. சின்னப்பெண் தானே எடுத்து சொன்னால் புரிந்து கொள்வாள் என்கிற வீரனின் எண்ணம் அவளின் அழுத்தத்தில் காணாமல் போனது.

அன்று தோப்பில் லிங்கத்திடம் அவள் பேசிய வார்த்தைகளைக் கண்டு வீரனே இத்தனை நேசமா என்று பிரம்பித்துதான் போனான்.

ஆனால் அன்று லிங்கமும் தன் பிடிவாதத்தில் இருந்ததோடு, அவன் சொல்லில் நியாயம் இருப்பதாகப் படவே அங்கையை தனித்து அழைத்துச் சென்று பேசினான்.

பேசிய சில நொடிகளில் வீரன் தான் தன் முடிவை மாற்றிக்கொள்ளும்படி ஆனது.

“லிங்கு மாமாவை மறந்திடுன்னு சொல்றதை தவிர வேறு ஏதாச்சம் பேசு மாமா” என்றிருந்தாள். எடுத்ததும்.

“லிங்கு சொல்றதுல நியாயம் இருக்குடே குட்டிம்மா!”

“எனக்கும் தெரியுமாட்டிக்கு மாமா. ஆனால் புத்திக்கு உரைக்க மாட்டிக்கே. என்ன பண்ணட்டும்? வயசு வித்தியாசம், புரிதலுக்கு தடையா இருக்குமின்னு தானே வேணான்னு சொல்றீய்ங்க. என்னைத்தவிர என் மாமாவை வேற யாராலும் புரிஞ்சிக்க முடியுமா மாமா? அவிங்க கையிலே வளந்திருக்கேன்… என்னைத்தவிர வேற யாருக்கு அவரைப்பத்தி தெரியுமாட்டிக்கு?” என்றவள், “மாமா என்னை கஷ்டப்படுத்தக்கூட நினைக்கமாட்டாய்ங்க. இப்போவே என்னைய தாங்கு தாங்குன்னு தாங்குற மாமா, கல்யாணத்துக்கு பொறவா புரிஞ்சிக்காம கஷ்டப்படுத்திடுவாறு?” எனக் கேட்டாள்.

இதற்கு வீரனால் என்ன பதில் சொல்லிட முடியும்?

சிறிய பெண்ணாக இருந்தாலும் அவளிடம் காதல் விடயத்தில் இத்தனை தெளிவையும் புரிதலையும் வீரன் எதிர்பார்க்கவில்லை.

இன்று அதனை, அங்கையின் பேச்சை லிங்குவிடம் சொல்லிய வீரன்,

“காதலில் காத்திருப்பு மிக முக்கியமானது. உன் மனசு எத்தனை வருசமானாலும் மாறாதுங்கிற திடத்தோடு நீயி இருக்கிறமாட்டி, லிங்குவும் வேணாங்கிறதுல உறுதியா இருந்தாக்கா ஏத்துக்குற பக்குவத்தை இப்போவே வளத்துக்க. வீட்ல எல்லோரட விருப்பமும், உன் விருப்பமும் ஒன்னா இருந்தாக்கா லிங்கு நம்ம வீட்டாலுவளுக்காக கட்டாயம் உன்னைய ஏத்துப்பான்” என்று அன்று அங்கையிடம் தான் சொல்லியதையும் சொல்லிட…

“அதுக்கு உங்க சின்னக்குட்டி என்ன சொன்னாளாக்கும்?” எனக் கேட்டிருந்தான் லிங்கம்.

“என் மாமா எனக்காகவே என்னைய கட்டிப்பாருன்னா(ள்)” என்ற வீரனின் பதிலில் லிங்கத்தின் உள்ளுக்குள் என்னவோ உருகி ஓடியது.

“காதலை மனசு முழுக்க சுமந்திட்டிருக்க என்னால அதுக்கு பொறவும் அவகிட்ட உன் நெனப்பை மாத்திக்கன்னு சொல்ல முடியலடே. அதேன் படிப்பு, வயசை காரணம் காமிச்சு தள்ளியிருக்க வச்சிருக்கேன். அதனாலதேன் உன்கிட்ட வந்து அப்படி சொல்லிப்போட்டு ஒண்ணுமே நடக்காதமாறி நடமாடிட்டு இருக்கு” என்றான் வீரன்.

“இது எங்குட்டு போயி முடியுமோ?” தள்ளாடும் தன் மனதை மறைத்தவனாகக் கூறியிருந்தான் லிங்கம்.

“இன்னும் என்னடே?”

“இப்பவும் நான் சொல்லிய காரணம் அப்படியேதேன் இருக்காட்டுக்கு” என்றான்.

“காதல் எல்லாத்தையும் வீழ்த்திப்போடும்” என்ற வீரன் நேரத்தை பார்த்துவிட்டு கண் மூடிட, லிங்கமும் தன்னுடைய அண்ணனின் அருகிலேயே படுத்துக்கொண்டான்.

மனம் மட்டும் பலவிதமான எண்ண அலைகளில் உழன்று கொண்டிருந்தது.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 40

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
33
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

10 Comments

  1. நானும் லவ் யூ வீரா லவ் யூ லிங்கம் … அண்ணன் தம்பிங்க இப்படி இருப்பாங்களா … அய்யோ சோ ஸ்வீட் … எனக்கு ராமன் லட்சுமணன் மாதிரி தெரியுது … வீரன் காதல் வலில… காலைல நடந்த குழப்பத்தில தான் கோபமா இருக்கான்னு தெரிஞ்சது … எங்க வீரா ஜன்னல் கதவை மட்டுமில்ல மனசையும் சேர்த்தே மூடி வச்சுட்டான் பா …

    அடேங்கப்பா பெயரை பாரு நல்லான் … நல்ல எண்ணமே இல்ல … இவங்க பிளான் ஒரு பக்கம் … லூசு கௌதம் உன் அம்மா மீனாவை நீ லவ் பண்றதா நினைச்சுகிச்சு …

    1. Author

      மகிழ்ச்சி… மிக்க நன்றி 😍

  2. லிங்கம் உணர்ச்சிவசப்பட்டு செய்ததை வீரன் பக்குவமாக கையாண்டு சரிப்படுத்திவிட்டான்.

    நமது செயலுக்கான எதிர் வினை என்னவாக இருக்கும் என்று யோசித்து, நமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 👏🏼

    கௌதம் மனதின் குழப்பம் தடுமாற்றம் அடைந்து அவன் மனதை தடம் புரள செய்தது. 👏🏼

    அவள் மனது வலிக்க வேண்டாம் கூடவே உறவுகள் இணையும் நேரம் தன்னால் சச்சரவு வேண்டாம் என்று நினைத்து காதலை மறைத்து வைத்திருக்கிறான்.

    வசந்தி வேறொன்றை நினைத்து சம்மதம் கூறி இருக்க, இவன் வேறொன்றை நினைத்து சுபாவிடம் காதலை கூறி விட்டான்.

    வீரனின் ஒதுக்கம் லிங்கம் மனதை வதைப்பதாய்.

    இருவரது உரையாடலும் மிக அழகு. ❤️

    யாதென்று கூறாமல் ஒன்று என்று சொல்லும் போதே அது அவர்களுக்குள்ளான தனிப்பட்ட ஒன்று என்று புரிந்து அதை யாதென்று கேட்கவில்லை. 😍

    வீரன் தனது அறையின் சாளரம் வழியே மீனாள் அறையை பார்க்கும் நொடிகள் உணர்வுபூர்வமாக உள்ளது.

  3. இந்த அன்னான் – தம்பி பிணைப்பும், புரிந்துணர்வும், பந்தமும் அழகான நெகிழ்ச்சி !!!