
யான் நீயே 12
மருதனின் அதிர்ந்த அதிரடியான அழைப்பில் வசந்தி நடுங்கித்தான் போனார். ஆனால் அதனை அசட்டை செய்தவராக நின்றிருந்தார். அவருக்கு அண்ணனின் உணர்வுகள் ஒரு பொருட்டென்றால் பாண்டியனின் விடயத்தில் அன்றே அண்ணன் பக்கம் நின்று இருப்பாரே! பாண்டியனை மறுத்திருக்க மாட்டாரே!
“யாரை கேள்வி கேட்குற நீயி?” என்று வசந்தியின் முன் மருதன் வர,
“உனக்கு எக்ஸாம் இருக்குல? கெளம்பு நீயி!” என்றான் வீரன். மீனாளிடம்.
அவள் அங்கு என்ன நடக்குமோ என்று தயங்கிட…
“சொல்றது கேக்கலையா?” என்றான்.
“நீயி என்னடே அவளை அதட்டுறது?” என்று வசந்தி அதற்கும் வீரனிடம் எகிறிட…
“என்னையவிடவே அவனுக்குத்தேன் உரிமை அதிகமாட்டிக்கு” என்ற மருதன், “அவன் சொன்னாக்கா எம் பொண்ணு மட்டுமில்லை… நானும் கேப்பேன்” என்றார்.
வசந்தியின் முகம் விழுந்துவிட்டது.
“நாளைக்கு உன் ஆசைப்படிக்கு கௌதமுக்கும் மீனாளுக்கும் கல்யாணமே ஆனாலும்,”
இந்த இடத்தில் கௌதமும், மீனாளும் ஒருங்கே அதிர்ந்தனர். நேற்றிரவு வீரன் பேசிய பேச்சுக்கெல்லாம் பொருள் இக்கணம் மீனாளுக்கு விளங்கிற்று.
“அவ(ள்) என் மருமவன் பேச்சை கேட்கத்தேன் செய்வாள். அவளுக்கு அத்தை மாமன் முறைக்கு நீயி இதுவரைக்கும் என்னத்த செஞ்சிருக்க? அவள் பொறந்ததுலேர்ந்து பாண்டியன் செஞ்சான். ருதுவான நாலுலேர்ந்து அமிழ்தன் செய்யுறான். இனியும், அவள் காலத்துக்கும் செய்வியான்” என்றவர், “சரி இப்போ இந்தப் பேச்செதுக்கு… நீயி அமிழ்தனை பார்த்து கேட்ட கேள்விக்கெல்லாம் அவென்கிட்ட மாப்பு கேட்டுப்புடு” என்றார்.
“மாமா…” வேண்டாம் என்பதைப்போல் வீரன் இருபுறமும் தலையசைக்க…
வசந்தி முகத்தில் அதிர்ச்சியைக் காட்டினார்.
கடிகாரத்தில் மணியடிக்க…
“பிரேம்” என்று உரக்க அழைத்திருந்தான் வீரன்.
கீழே நடக்கும் கலவரம் தெரியாது மாடியில் நின்று தன் நண்பனிடம் உரையாடிக் கொண்டிருந்த பிரேம், வீரனின் குரலுக்கு அடித்து பிடித்து கீழிறங்கி விரைந்து வந்தான்.
அதனை வசந்தி ஆச்சரியமாகப் பார்க்க,
“இது அமிழ்தன் மேலிருக்கும் பயமில்லை. அவென் காட்டும் எல்லையில்லா அன்புக்கான மருவாதி” என்றார் மருதன். தங்கையின் எண்ணம் என்னவாக இருக்குமென்று யூகித்தவராக.
“தங்கத்துக்கு நேரமாவுது. நீயி வெரசா கூட்டிட்டுபோயி விட்டுப்போட்டு வா” என்ற வீரன், “வைவா முடிஞ்சு போன் போடு. பஸ்சுக்கு காத்திருக்க வேணாம். லிங்கத்தை அனுப்புறேன். அவென் மருதையிலதேன் இருப்பான்” என்றான். இன்னமும் அதிர்விலிருந்து மீளாத மீனாளின் தலை சரியென அசைந்தது.
பிரேம் மீனாளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
“இதுதேன் வீரன். வெளிப்பார்வைக்கு இல்லை இது. அவென் குணமே அதுதேன். நாம சலம்பிக்கிட்டு இருக்க நேரங்கூட… புள்ளையோட பரீட்சையை மனசுல வச்சு நடந்துகிட்டான் பாரு. எனக்கு தோணுச்சா இது?” என்ற மருதன், “நம்ம காசுல அவென் மேல வரல. அவென் உழைப்புலதேன் நாம உயர்ந்து நிக்குதோம். உன் கணக்கு அம்புட்டும் உன் வீட்டுக்காரர் வங்கி கணக்குக்கு பட்டா பட்டம் சரியா அனுப்பி வச்சிட்டு இருக்கான். உனக்கு இது தெரியலங்கிறதுக்கு காரணம் நாங்கயில்லை. உன்கிட்ட சொல்ல வேண்டிய ஆளு சொல்லிருக்கணும். நீயி நியாயம் கேட்க வேண்டியது அமிழ்தன்கிட்ட இல்லை” என்றார். மிக மிக அடர்த்தியாக.
மருதன் சொல்லிய உண்மையில் வசந்தியின் முகத்தில் ஈ ஆடவில்லை. நியாயமாக அவர் சண்டை போட வேண்டிய ஆளே அவரது கணவராயிற்றே. வீரனிடம் கேட்ட அனைத்து கேள்வியையும் நல்லானிடம் வசந்தி கேட்டிட முடியுமா?
“பண்ணையத்துல மட்டுந்தேன் குடும்பக்கூட்டு. உனக்கும் எனக்கும் பங்கிருக்கு. ஓட்டலு நானும் பாண்டியனும் ஆரம்பிச்சிருந்தாலும், அதோட வளர்ச்சி கிளை பரப்ப முழு காரணமும் அமிழ்தன். அவனுக்கடுத்து லிங்கம். அதுல நான் பக்கக்கூட்டு மட்டுந்தேன். அதுக்கு அவென் என் கணக்கை சரிவர கொடுக்கிறானா இல்லையான்னு எனக்கு தெரிஞ்சா போதும்” என்று மருதன் சொல்லியதில் வசந்தியின் முகம் கருத்து சிறுத்தது.
“அரிசி ஆலை அவனோட சொந்த முயற்சி. அப்படியிருந்தும், அதுல பிரேமை இணைச்சு சரிபாதி லாபம் கொடுத்திட்டு இருக்கியான். சர்க்கரை ஆலை கூட அவனோட ஆசை. இப்போதேன் நேரங்கூடி வந்திருக்கு. மொத்தமும் அவென் உழைப்பு இது. எல்லாம் ஒன்னாயிருக்க, இது எனக்கு மட்டும் என்னத்துக்குன்னு இதுலையும் என்னை சேர்க்கத்தான் கையெழுத்து. இது தொடங்கினாலும் நான் போயி சோலி பாக்கப்போறதில்லை. ஆனால் பங்கை சரி பாதியா எனக்கு கொடுத்துப்புடுவான். அதுதேன் என் அமிழ்தன். இந்த குடும்பத்தோட மொத்த சொத்தே அவெந்தேன். இதை நானில்லை… சின்னகுட்டியும் சொல்லுவாள்” என்றவரிடம் அப்படியொரு பெருமை.
“இனிமேட்டுக்கு கேள்வி கேட்க முன்ன ஆயிரத்தையும் அலசி தெரிஞ்சிக்கிட்டு கேளு” என்று இறுதியாக வார்த்தையால் வசந்திக்கு கொட்டு வைக்கவும் அவர் மறக்கவில்லை.
வீரனுக்கு மருதனின் பாசம் தெரியும். அவை அன்று அவர் மகன் என்று மட்டும் நடந்து கொண்டதில் ஏற்பட்டிருந்த வருத்தம் யாவும், இன்றைய மருதனின் பேச்சில் கரைந்து காற்றில் கலந்திருந்தது.
அவர் பெற்ற பிள்ளைகளைக் காட்டிலும் அவர் மனதில் தனக்கு எப்போதும் சிறப்பான இடம் தானென்று மகிழ்ந்து போனான். அன்றைய கவலை முழுதாய் அவன் மனதிலிருந்து நீங்கியிருந்தது.
“அமிழ்தன் பக்கட்டு பேசிப்புட்டேன்னு அதுக்கும் மோடி வச்சிக்காத. உடன் பொறந்தவங்கிற நெனைப்பு எப்பவும் நெஞ்சில இருக்கும். வேணாமின்னு நெனச்சாலும் வுட்டுப்போவாது. தொப்புள்கொடி உறவாச்சே! புடிக்கலன்னு விலகிக்க முடியுமா என்ன?” மருதனிடம் உன்னிடம் இதனை எதிர்பார்க்கவில்லை எனும் அதிருப்தி அப்பட்டமாக தெரிந்தது.
நேற்று மீனாளை கௌதமுக்கு கொடுக்கவில்லை என்றால் உறவை முறித்துக்கொள்ள தயங்கமாட்டேனென்று சொல்லிய வசந்திக்கு, மருதன் சொல்லிய பிடிக்காத உறவு என்பதில் விலக்கி வைத்துவிடுவாரோ என்று பயம் வந்துவிட்டது.
“மன்னிச்சிக்கிடு அமிழ்தா!” உடனடியாக பச்சோந்தியாக மாறியிருந்தார் வசந்தி. மருதனை மலையிறக்க மட்டுமே அந்த பொய்யான மன்னிப்பு.
வீரன் அவரின் மன்னிப்பை ஏற்றதாக சிறு குறிப்பும் காட்டவில்லை.
வெளியில் நல்லான் வரும் அரவம் தெரிய…
“உன் ஆசைப்படி கௌதமுக்கே மீனாளை கட்டிக் குடுக்குறேன். ரெண்டேறுக்கும் விருப்பம் இருந்தாக்கா” என்ற மருதனின் பேச்சில் தான் கௌதமின் அதிர்வே நீங்கியது.
கௌதம், மீனாளின் பேச்சினை அரைகுறையாக கேட்டிருந்த வசந்தியும், இதுவே போதும் பின்னாளில் அவர்களின் விருப்பம் வைத்து ஆட்டி வைத்திடலாமென மனக்கணக்கு இட்டவராக சரியென்றார்.
“இப்போ பரிசம் போட்டுக்கிட முடியாது. படிக்கிற புள்ள மனசை கலைச்சிட்ட மாறியிருக்கும்” என்ற மருதன், “கல்யாண நேரம் வரட்டும், அப்போவே எல்லாம் வச்சிக்கலாம்” என்றார். அழுத்தமாக. இதுதான் என் முடிவு. உன் விருப்பத்துக்கு வளைந்து கொடுக்க முடியாதென தெளிவாகவேக் கூறிவிட்டார்.
மருதன் உண்மையில் திருமணம் பற்றி தன்மையாக பேசிட வேண்டுமென்றுதான் வார்த்தைகளை மனதில் உருப்போட்டபடி இருந்தார். வீரனை வசந்தி கேள்வி கேட்டதில், கோபம் வர பெற்றவர் அனைத்தையும் கட்டளையான அறிவிப்பு போலவே சொல்லிவிட்டார்.
“பண விடயம் அது உனக்கும் மாமாவுக்கும் நடுவுல. நீயி அவரை கேக்குற, கேக்காம விடுறியோ! அது உம்பாடு” என்றவர், “நல்ல நாள் பார்த்து சொல்லியனுப்புறேன். உம் பங்கை பிரிச்சு விட்டுடுறேன். அமிழ்தன்கிட்டையே இம்புட்டு கேக்குற நீயி நாளைக்கு என்னைய கேக்க எம்புட்டு நேரமாவும்? பண்ணையம் மட்டுந்தேன் நம்ம ஐயாவும், மீனாட்சி அயித்தையும் ஒன்னா பார்த்துகிட்டாய்ங்க. அயித்த ஒரு நாளும், என்னுத கொடுன்னு நம்ம அய்யன்கிட்ட கேட்டதில்லை. அது அப்படியே நம்ம தலைமுறை வரைக்கும் தொடர்ந்துப்போச்சு. இனி ஒட்டுக்கா இருந்தாக்கா உனக்கும் எனக்கும் சலம்பலாகிப்போவும். பிரிச்சு எழுதி கொடுத்திடுப்புடுறேன். நீயி ஆளு வச்சு பார்த்துக்குவியோ இல்லை இங்கிட்டு வந்து நீயி பண்ணையம் செய்வியோ அது உம்பாடு” என்று நல்லானுக்கு கேட்டுவிடக் கூடாதென்று ஒரே மூச்சில் வேகமாக சொல்லி முடித்தவர்,
“எப்போ கெளம்புற?” என்று கேட்டபடி வசந்தி பதில் சொல்வதையும் பொருட்படுத்தாது, வீரனை கூட்டிக்கொண்டு வெளியில் சென்றுவிட்டார்.
‘இந்த சேத்துல நான் பண்ணையம் பாக்கணுமா?’ வசந்தி அதிர்ந்துபோனார்.
கௌதம் இது தேவையா என்று வசந்தியை ஏறிட… உனக்கெல்லாம் இதுவே கம்மி எனும் எண்ணத்தோடு மகா சென்றுவிட்டார்.
வீரனும், மருதனும் வீட்டு வாயிலை அடைய, நல்லான் உள்ளே அடி வைத்தார்.
“காருல ஏத்த வேண்டியதெல்லாம் ஏத்திப்புட்டேன் மாமா. எப்போ கெளம்புறீங்கன்னா, தோப்புக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துபுடுவேன்” என்றார்.
மருதன் அவ்வாறு கேட்டதும் நல்லானும், “காலை உணவை முடிச்சிக்கிட்டு கெளம்பினாதேன் சாயங்காலகுள்ள வூடு போவ முடியும்” என்றார்.
மருதன் தலையசைத்தவராக திண்ணையில் அமர, உடன் வீரன்.
“மாமா.” வீரன் ரொம்பவும் நெகிழ்ந்திருந்தான்.
“எனக்காக நீயி அமைதியா போனதுக்கு நன்றியப்பு” என்ற மருதன், “நீயி பேசியிருந்தால் கதை வேறமாறியாகியிருக்கும்” என்றார்.
“இந்த சம்பவத்தால மீனாள் விடயத்தை எப்படி சொல்றதுன்னு மருகாம, இதுதான்னு திடமா சொல்ல முடிஞ்சுது. அது போதும்” என்றவருக்கு சர்க்கரை ஆலையின் பங்குதாரர் உரிமம் பற்றி விளக்கம் விவரித்தான். அவர் கேட்கிறாரோ இல்லையோ!
“இதெல்லாம் என்னத்துக்கு சொல்லிட்டு இருக்குற, எங்கனக்குள்ள கையெழுத்துப்போடனும்” என்று கேட்டு போட்டார்.
வீரன் வங்கி சென்ற ஒரு மணி நேரத்தில் வசந்தி தன்னுடைய குடும்பத்தோடு புறப்பட்டுவிட்டார்.
கௌதம் மருதனிடம் தனியாக தனது அன்னையின் செயலுக்கு வருத்தம் தெரிவித்தான்.
“உனக்கு அம்மா ஆகும் முன்னவே, எனக்கு அவ தங்கச்சிடே” என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.
வசந்தி செல்லும் முன்னர்,
“எதையும் மனசுல வச்சிக்காதண்ணே! மீனாளை கௌதமுக்கு கொடுக்க ஒத்துக்கிட்டது சந்தோஷம். உன் வார்த்தையை நம்புறேன்” என்று கூறிட,
‘எப்பவும் இவளோட எண்ணந்தேன் பெருசு’ என்று மருதன் மனதிற்குள் பொருமினார்.
“வரட்டா அங்கை!” வசந்தி சொல்லிட,
உதட்டை இழுத்து தலையாட்டி வைத்தாளே தவிர ஒரு வார்த்தை அவரிடம் அவள் பேசவில்லை. அவளின் வீரா மாமாவை அவர் பேசிவிட்ட கோபம் அவளுக்கு.
அந்நேரம் பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தவள், விடயமறிந்து… “நானிருந்திருக்கணும் எம் மாமாவை பேசுன சில்லு வாவை உடைச்சிருப்பேன்” என்று மகாவிடம் வெளிப்படையாகவே புலம்பியிருந்தாள்.
கௌசிக்கிற்கு தான் அந்த இயற்கை சூழல், பாசம் மட்டுமே காட்டும் உறவுகளை விட்டு செல்ல விருப்பமே இல்லாமல், அதுவும் தன்னுடைய புதிய தோழியான அங்கையை பிரிந்து செல்ல மனமே இன்றி…
“அடுத்த வருசம் உன் காலேஜில் சேர்ந்துடுறேன். ரெண்டேறும் ஒன்னா இருக்கலாம்” என்று அங்கை சொல்லி சமாதானம் செய்த பின்னரே சென்றான்.
கௌதம் மட்டுமே ஒருவித யோசனையுடனும், குழப்பத்துடனும் சென்றான்.
“இப்போதேன் வூடு பழையபடிக்கு இயல்பா இருக்குது” என்று மகா சற்று ஓய்வாக தூணில் சாய்ந்து அமர்ந்தார்.
அங்கையின் பள்ளி பேருந்து சென்றுவிட்டதால், மருதன் அவளை பள்ளியில்விட செல்ல, மகா தன் பிறந்த வீட்டிற்கு சென்று இங்கு நடந்த அனைத்தையும் ஒரு வார்த்தை விடாது சொல்லி…
“அந்த மனுசன் தங்கச்சியை காய்ச்சி எடுத்ததை என்னால நம்பவே முடியல அபி” என்று ஆச்சரியப்பட்டுப்போனார்.
“இதுல வியப்பு என்னட்டி கிடக்கு, மருதனுக்கு வசந்தியை விட அமிழ்தன் மேல பிரியம் ஜாஸ்தி. அதுவும் நியாயமாத்தானே பேசியிருக்கியான்” என்றார் மீனாட்சி.
“பிரியமிருந்து என்னத்த செய்ய, வசந்தி கையில இல்ல மீனாளு வாழ்க்கை போவப்போவுது. என்ன ஆட்டி வைக்கப்போறாளோ?” ஒரு தாயாக மகா இப்போதே கவலைக் கொண்டார்.
******************************
தன் பின்னால் அமர்ந்து வரும் தங்கை உம்மென்றிருக்க… பிரேம் என்னவென்று வினவினான்.
“என்ன மீனு ரொம்ப சைலண்ட்டா வார?”
வசந்தி வீரனை பார்த்து கேட்டது மற்றும் தானிருக்கும் வரை மருதன் பேசியதென எல்லாம் கூறினாள்.
“அதேன் முற்றத்துல அம்புட்டு பேரும் நின்னுட்டு இருந்தாய்ங்களா?” என்ற பிரேம், “இப்போவாச்சும் ஐயா அவிங்க தங்கச்சியை எதிர்த்து பேசினாறே… சந்தோஷந்தேன்” என்றதோடு, “அதுக்கென்னத்துக்கு நீயி இம்புட்டு வெசனமா இருக்குற? மாமாவை பேசிபுட்டங்கன்னா?” என்று வினவினான்.
“யாரென்ன பேசினாலும், மாமாவுக்கு தக்க பதிலடி கொடுக்கத் தெரியுமாட்டிக்கு. அவரு எல்லாத்தையும் பார்த்துப்பாரு” என்ற மீனாள், “நான் சொன்னதுல எல்லாம் ஒழுங்கா கேட்டியா நீயி?” என்றாள்.
“எதை கேக்குற மீனு?”
“போ’ண்ணே!” என்றவளின் குரலில் சுரத்தே இல்லை.
“என்னாச்சு?”
“அத்தை கௌதமுக்கு என்னை கேட்டிருப்பாய்ங்க போல… ஐயா முடிவு என்னன்னு தெரியல! ஆனாக்கா, இந்த பேச்சுல அவருக்கும் சம்மதமாட்டிக்குத்தேன் சொன்னாரு” என்றாள்.
“மாமாக்கு தெரியுமா?” அதிர்ச்சியாகக் கேட்டான்.
“தெரியும். நேத்து ராத்திரி” என்று பிரின்ட்டிங் கடைக்கு சென்று திரும்பியபோது வீரன் பேசியவற்றை கூறியதோடு, “ஐயா சொல்லும்போது கௌதம் முகத்துல வந்த அதிர்வு மாமா முகத்துல இல்லை. அவருக்கு முன்னவே தெரிஞ்சிருக்குமாட்டிக்கு” என்றாள்.
“என்னயிருந்தாலும் முடிவு உன் கையிலதேன் மீனு. இந்தப்பேச்சை உன்கிட்ட ஆரம்பிக்கும்போது உன் விருப்பம் என்னவோ அதை சொல்லு” என்றான். பெரியவர்களின் முடிவுக்கு முன்பு பிரேமாலும் ஒன்றும் செய்ய முடியாதே!
“ஐயா நேராக் கேட்டாருன்னாக்கா தலை தானா ஆடிப்போடும் அண்ணே!” என்றவள் என்றோ நடக்கவிருப்பதை எண்ணி இப்போதே வருத்தம் கொண்டாள்.
“இப்போதைக்கு உன்கிட்ட இதைப்பத்தி பேசமாட்டாய்ங்க. பேசும்போது நீயி தெளிவாயிருந்தாக்கா போதும். இல்லைன்னா மாமா பார்த்துக்கும்” என்ற பிரேமின் இறுதி கூற்றில் மீனாளுக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.
வீரன் பார்த்துக்கொள்வான் என்றால், அவனிடம் பேசாது இன்று வசந்தியிடம் மருதன் தன்னை கௌதமோடு சேர்த்து பேசியிருக்கமாட்டார். வீரன் சம்மதித்து தான் இந்தப் பேச்சு சபை வந்திருக்குமென்று சரியாக கணித்து வருந்தினாள்.
‘என்னை வெறுத்துட்டியா மாமா?’ மனம் அலறினாள்.
அக்கணம் அவளின் மொத்த வீம்பும் காணாமல் போனது.
கல்லூரி வந்திருந்தது. வாடிய முகத்துடன் இறங்கி சென்ற தங்கையின் முகம் காண பிரேமுக்கு வருத்தமாக இருந்தது.
தன்னுடைய விருப்பத்தை குடும்பத்தின் முன் திடமாக சொல்லியவனுக்கு, தங்கையும் அப்படி சொல்வாளென்ற எண்ணம். ஆனால் இங்கு மனமும் எண்ணமும் ஆளுக்கொன்றாக மாறுப்பட்டிருக்கும் என்பதை அறியாது போனான்.
“மீனு…”
“பிரசன்டேஷன் அண்ட் வைவா நல்லா பண்ணு” என்றான்.
விரிந்ததோ எனும் விதமாக இதழ் விரித்தவள், அனைத்தையும் ஒதுக்கி வைத்து தன் வகுப்பு நோக்கிச் சென்றாள்.
லிங்கம் அன்றைய தினம் மாலை, ஓட்டலில் பெரும் புள்ளி ஒருவரின் வீட்டு விசேட விருந்து நடைபெற இருப்பதால் அதற்கான ஏற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான்.
அந்நேரம் அவனை அழைத்த வீரன்,
“சின்னகுட்டி ஸ்கூலுக்கு போடே! யாரோ பையன் மண்டையை உடைச்சிட்டாளாம்! மாமாக்கு வரச்சொல்லி போன் வந்திருக்குமாட்டிக்கு. அவரு அலங்காநல்லூரில் வேற சோலியா மாட்டிக்கிட்டாரு. பேங்கில் இப்போதேன் ஃபார்ம் பாஸ் ஆகியிருக்கு. கையெழுத்து போட்டு கொடுத்ததும் பின்னாலே வந்துடுறேன். புள்ளைய ஏதும் ஏசிடப்போறாய்ங்க. வெரசா போ” என்றான். அத்தனையையும் நிமிடத்தில் சொல்லியிருந்தான்.
“பையன் மண்டையை உடைக்குற அளவுக்கு தைரியமா அவளுக்கு” என்று நினைத்த லிங்கம், “அவென் என்ன ஒரண்டையை இவகிட்ட கூட்டினானோ?” என்று எண்ணியவனாக, செய்து கொண்டிருந்த வேலையை மேனஜரிடம் ஒப்படைத்துவிட்டு விரைந்து அங்கையின் பள்ளி நோக்கிச் சென்றான்.
அங்கு பள்ளி முதல்வர் அறையின் வெளியில் அங்கை விறைப்பாக நின்று கொண்டிருந்தாள்.
லிங்கத்தை நேருக்கு நேர் அழுத்தமாக பார்த்தவளின் விழிகளில் தான் தவறு செய்யவில்லை எனும் பொருள்.
“என்ன பண்ணான்?”
அங்கு அவளது வகுப்பு ஆசிரியரிலிருந்து முதல்வர் வரை அனைவரும், பையனை அடித்ததற்காக அவளை திட்டினார்களேத் தவிர ஏன்? எதற்கு? அவன் என்ன செய்தான்? என்று இப்படி யாரும் கேட்கவில்லை. அங்கை மீது தான் தவறு என்பதைப்போல் நடந்துகொண்டிருக்க… தன்னை நம்பி தன்மீது தவறு இருக்காது. தான் அடித்திருக்கிறேனென்றால் அவன் ஏதோ வம்பு செய்திருக்கிறானென்று கேட்ட லிங்கத்தின் மீதான விருப்பம் வீரனின் அன்றைய பேச்சினை கடந்து மேலெழும்பியது.
அங்கை நடந்ததை சொல்லிட முயன்ற நொடி, பியூன் வந்து…
“மேடம் கூப்பிட்டாங்க?” என்று சொல்ல, அங்கையின் கை பற்றி முதல்வர் அறைக்குள் அடி வைக்க சென்ற லிங்கத்திடம்…
“உங்களை மட்டுந்தேன் வர சொன்னாய்ங்க” என்றான் பியூன்.
“குற்றம் எங்க புள்ளை மேலத்தானே! அவள் இல்லாம என்ன விசாரணை?” என்ற லிங்கம், பியூனை தாண்டி அங்கையை கூட்டிக்கொண்டு உள் சென்றான்.
“வாங்க மிஸ்டர்.லிங்கம்” என்ற முதல்வர் அங்கையை முறைத்துக்கொண்டு, “மருதய்யன் வரலையா?” என்று வினவினார்.
வீரன் முதல் அனைவரும் அந்த பள்ளியில் தான் பயின்றனர். அதனால் முதல்வருக்கு மீனாட்சியின் குடும்பத்தில் அனைவரையும் தெரியும். அதுமட்டுமல்லாது பள்ளியில் அங்கைக்கான பெற்றோர் கூட்டத்திற்கு மருதன் வரமுடியாத பல தருணங்களில் வீரனோ, லிங்கமோ தான் வருவார்கள்.
“மாமா ஒரு சோலியா வெளியூர் போயிருக்காரு?” என்ற லிங்கம், “நீங்க என்ன சொல்லணுமோ என்கிட்டக்கவே சொல்லுங்க” என்றான்.
“உங்க பொண்ணு என்ன தப்பு பண்ணாங்கன்னு கேளுங்க லிங்கம். உங்க அண்ணனிலிருந்து, உங்க வீட்டு பிள்ளைங்க எல்லாரையும் பார்க்கிறேன். யாரும் இவளை மாதிரி அரகெண்ட் கிடையாது. எப்படி ஒரு ஆம்பளை பையன் மண்டையை உடைச்சிருக்காள் பாருங்க” என்று அவ்வறையில் ஓரமாகக் கிடந்த இருக்கையில் தலையில் கட்டுடன் அப்பள்ளி ஆசிரியருடன் அமர்ந்திருந்த மாணவனை திரும்பிப் பார்த்தான் லிங்கம்.
“இன்னும் ஒரு மாசத்துல போர்ட் எக்ஸாம் இருக்கு. அதுக்காகத்தான் யோசிக்க வேண்டியதா இருக்கு. இல்லைன்னா இப்போவே டிசி’யை கிழிச்சுக் கொடுத்திருப்பேன்” என்றார். அத்தனை காட்டமாக.
“சரிங்க மேடம் கிழிச்சிக்கோங்க” என்று பட்டென்று சொல்லிய லிங்கம், “நீயி வா வூட்டுக்கு போவோம்” என்று அங்கையின் கையை பிடிக்க… முதல்வர் பதறினார்.
“லிங்கம் நீங்க முதலில் உட்காருங்க” என்று வந்தது முதல் நிற்க வைத்தே பேசிய முதல்வர் இப்போது தன்மையாக அவனை அமரும்படி வலியுறுத்தினார்.
“இருக்கட்டும் மேடம். நீங்க ஏதோ கிழிச்சிடுறேன் சொன்னீங்களே அதை செய்ங்க. எப்படி பரீட்சை எழுத வைக்கணுமோ அப்படி எழுத வச்சிக்கிறேன்” என்று லிங்கம் தன் வார்த்தையில் உறுதியாக நிற்க, முதல்வரே எழுந்து வந்து அவனை உட்காரும்படி இருக்கையை நகர்த்தி கை காண்பித்தார்.
“நல்லா படிக்கிற பொண்ணு. பள்ளி மூலமாக எக்ஸாம் எழுதினாத்தானே பெருமையா இருக்கும்” என்று சிரித்துக்கொண்டேக் கூறினார்.
“இப்போதேன் கொஞ்சம் முன்னுக்க அரகண்ட் அது இதுன்னு ஏதோ சொன்னீங்க?” என்றான். அவனின் குரலில் நக்கல் இருந்ததோ?
முதல்வர் மனதில் நொந்து கொண்டார். அங்கை நன்றாக படிக்கும் பெண். அதே சமயம் பள்ளியில் அதீதச்சுட்டி. அவளின் படிக்கும் திறனை மனதில் வைத்தே அவளின் சேட்டைகளை மன்னித்துக் கொண்டிருந்தனர். இன்று ரத்தம் வருமளவிற்கு ஒரு மாணவனை அவள் அடித்திருக்க, மிரட்டுவதற்காகவே லிங்கத்திடம் அவ்வாறு பேசினார்.
இந்த வருட போதுத்தேர்வில் பள்ளி நிர்வாகம் அங்கையை நம்பித்தான் இருக்கிறது. அவள் முதல் மதிப்பெண் பெருவாள் என்பது நிச்சயம். அதற்காகவே லிங்கத்தின் செயலில் பதறி தழைந்து போகப் பேசினார் முதல்வர்.
“உன்னைய ஏதும் வஞ்சாங்களா அங்கை?”
“படிக்கிற திமிரு. பொட்ட புள்ளையா லட்சணமா இல்லைன்னா எவன்கிட்டயாவது மாட்டி சின்னப்படுவ. எம் மவன் மேலயே கையை வச்சிட்டியா? உன்னைய இந்த ஸ்கூல் விட்டே துரத்துறேன்னு… அந்த மேம் பேசுனாய்ங்க” என்று அடி வாங்கிய மாணவனின் அருகில் அமர்ந்திருந்தவரை கை காட்டிய அங்கை, “அவங்க இங்க இங்கிலிஷ் மேம். அதனால பிரின்சியும் அவங்களுக்குத்தேன் சப்போர்ட். படிப்புல மட்டுமில்லாம ஆளும் லட்சணமா இருக்க கொழுப்புன்னு பேசுனாய்ங்க. பரீட்சை எழுத விடாம செய்யுறேன்னு ஐயாவுக்கு போன போட்டு என்ன ஏதுன்னு தன்மையா சொல்லாம, என்ன பிள்ளை பெத்து வச்சிருக்கீங்கன்னு கேட்டாய்ங்க” என்று ஒன்றுவிடாது கூறினாள்.
அடிபட்ட மாணவன் அந்த ஆங்கில ஆசிரியையின் மகன் என்றதுமே, அங்கை மீது நிச்சயம் தவறு இருக்காது, அவரின் மகனை காக்க அவளை பேசவிடாது கட்டம் கட்டியிருக்கிறார் என்பதை லிங்கம் புரிந்து கொண்டான்.
“நான் அடிச்சேன் தான். ஆனால் எதுக்குன்னே என்னைய சொல்லவே வுடல மாமா” என்றாள். குற்றமாக.
“சரி இப்போ சொல்லு” என்றவன் தன் பார்வையை முதல்வர் மீது அழுத்தமாக பதித்தான்.
“எப்போ பாரு என் ஜடையை புடுச்சி இழுத்துவிட்டுட்டே இருக்கான் மாமா. கிளாசில் ஸ்டாஃப் யாரும் இல்லைன்னா என்னைய ஒரண்ட இழுக்கிறதுதேன் இவன் வேலையே! யாருக்கிட்டயோ சொல்றதுக்கு இவன் அம்மாகிட்டவே சொல்லலான்னு இங்கிலிஷ் மேமிடம் சொன்னா, கூடப்படிக்கிற பிள்ளைன்னு விளையாடுறான் இதெல்லாம் சீரியஸா எடுப்பங்களான்னு கேட்குறாய்ங்க. காலையில கிளாஸ் வந்ததும் ஏதோ பேப்பரை குடுத்து கண்ணடிக்கிறான். நான் அதை வாங்கவே இல்லை. ஸ்நாக்ஸ் நேரம், பாட்டிலில் தண்ணி பிடிக்க போயிட்டு வரும்போது வழிமறிச்சு ஜடையை பிடிச்சு இழுத்தான். விடுடேன்னு சொன்னதுக்கு கையை பிடிச்சு உரசர மாறி கிட்ட வந்தியான். அதான் கையில வச்சிருந்த வாட்டர் பாட்டிலாலே தலையில ஒன்னு போட்டேன்” என்றவள் “பாட்டில் ஸ்டீல், மண்டை பொளந்துடுச்சு” என்று இலகுவாகக் கூறி தோள்களை உயர்த்தி இறக்கினாள்.
“பார்த்தீங்களா மேம்… எவ்வளவு திண்ணக்கம்? அடிச்சதையும் அடிச்சிட்டு நக்கல் வேற” என்று ஆங்கில ஆசிரியை முதல்வரிடம் முன்வர,
“அவள் கடைசியாட்டு சொன்னது மட்டுந்தேன் கேட்டீங்களோ?” என்று இருக்கையைவிட்டு எழுந்துவிட்ட லிங்கம், “இங்க அவென் அம்மா வொர்க் பண்ணாக்கா கூடப்படிக்கிற புள்ளையோட கையை புடுச்சி இழுப்பானா அவென்” என்று எகிறினான்.
“நியாயமா அவனுக்கு தான் நீங்க தண்டனை கொடுக்கணும். என்ன ஏதுன்னே விசாரிக்காம இப்படித்தேன் புள்ளைங்க படிப்பில் கை வைக்க நினைப்பீங்களா?” என்று முதல்வருக்கும் கொட்டு வைத்தான்.
ஆசிரியர் பொய் சொல்லமாட்டாரென்று முதல்வர் அசட்டையாக அங்கையை விசாரிக்காமல் விட்டதற்கு மன்னிப்பு கேட்டிட…
“இனியாவது பசங்க தப்பே பண்ணாலும், அவங்ககிட்ட எப்படி பேசனுமோ அப்படி பேசுங்க. திமிரு, பொட்டப்புள்ள, லட்சணம் அப்படின்னு குணம், தோற்றத்தை வச்சு தரமிறக்கி பேசாதீங்க. ஆண், பெண் வேறுபாடு இல்லைன்னு சொல்லிக்கொடுக்க வேண்டிய நீங்களே… இப்படி பண்ணாக்கா என்ன அர்த்தம்?” என்றான்.
லிங்கம் பேசுவதை அங்கை அதிசயத்து விழிவிரித்துப் பார்க்க…
‘தன்னிடம் படித்த பையன் தனக்கு புத்தி கூறும்படி செய்துவிட்டாரே இந்த இங்கலிஷ் மேடம்’ என்று முதல்வருக்கு பொடுபொடுவென வந்தது.
“இனி இதுபோல தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் மிஸ்டர்.லிங்கம்” என்ற முதல்வரிடம், “அவனுக்கான தண்டனையாவது நல்ல முறையில குடுங்க” என்று சொல்லி அங்கையை கூட்டிக்கொண்டு வெளிவந்தான்.
முதல்வர் அந்த ஆசிரியரையும் மாணவனையும் வார்த்தையால் பிடிபிடிவென பிடிப்பது இருவருக்கும் வெளியில் நன்றாகவே கேட்டது.
“நான் கிளாஸ் போறேன் மாமா” என்று அங்கை நகர,
“அவென் பண்ணது தப்புத்தேன், அதுக்குன்னு மண்டையை பொளப்பியா நீயி. ஒண்ணுக்கெடக்க ஒன்னு ஆகிப்போயிருந்தாக்கா என்னாவுறது?” எனக்கேட்ட லிங்கம், “எல்லா நேரத்துலையும் நிதானம் ரொம்ப முக்கியம் சின்னக்குட்டி” என்றான்.
“நீயி புடிக்க வேண்டிய கையி… அவென் தொட்டதும் எனக்கு என்ன செய்யுறது தெரியல” என்று நீர் ததும்பி நின்ற விழிகளோடுக் கூறியவள், லிங்கத்தின் பார்வையில் என்ன இருந்தது என்பதை பார்க்கத் தவறியவளாக சென்றிருந்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
28
+1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அதான லிங்கம் பிடிக்க வேண்டிய கையை வேற யாராவது பிடிச்சா அம்புட்டுதேன் … இந்த வீராவும் மீனாவும் என்ன பண்ண போறாங்களோ …
அங்கை சபாஷ்.
லிங்கமும் அண்ணனை மாதிரியே தெளிவா முடிவெடுக்கறான்…
அண்ணனின் உணர்வுகள் முக்கியமில்லை தான் தான் தான் மட்டுமே எண்ணம் வசந்திக்கு.
மருதன் அன்று வார்த்தைகளால் காயப்படுத்திய தனது வீரனின் மனதை இன்று அவரது வார்த்தைகள் மூலமாகவே குணப்படுத்தி விட்டார்.
“என்னை விடவும் அவனுக்கு அவள் மேல் உரிமை இருக்கு”, “இது பயம் இல்லை மரியாதை”, “நம்ப காசுல அவன் உயரல அவன் உழைப்புல தான் நாம உயருரோம்”.
வசந்தியின் சண்டை நல்லதில் முடிந்தது, அடங்கி போய் பேச நினைத்த மருதன் அதிகாரமாக கட்டளையிட்டுவிட்டார்.
வீரனை தாண்டித்தான் இந்த பேச்சு சபைக்கு வந்திருக்கும் என்டு சரியாக யூகித்துவிட்டாள் மீனாள்.
அங்கை மண்டைய உடைக்குற அளவுக்கு தைரியமா இருக்காளே. லிங்கம் பாவம் பார்த்து இருந்துக்கோபா.
Ayo superb super