
“என்ன மாமா உறக்கம் வரலையாட்டுக்கு” என்ற வீரன், ” என்னத்த ஆத்தமாட்டாம மனசுக்குள்ள போட்டு உ ழப்பிக்கிற? ” என்று அவரின் முகம் பார்த்து வினவினான்.
” அதெல்லாம் ஒன்னுமில்லை அமிழ்தா” என்ற மருதனின் முகமே ஏதோ உள்ளது என்பதை வீரனுக்கு காட்டிக்கொடுத்தது.
” சொல்ல விருப்பமில்லையாட்டுக்கு” என்ற வீரன் “பொறவு என்னத்துக்கு இங்கன இப்படி உட்கார்ந்து இருக்கீரு” என்று கேட்டான்.
அதற்கு மேல் மருதனால் வீரனிடம் சொல்லாமல் விட முடியவில்லை.
கோவிலில் வசந்தி பேசியது, வீட்டில் தாங்கள் கலந்து பேசியது என அனைத்தையும் ஒன்றுவிடாது சொல்லிவிட்டார். தாங்கள் எடுத்த முடிவில் மகா, அபியின் விருப்பமின்மையையும் மறைக்கவில்லை.
சில நிமிடங்கள் வீரனிடம் ஆழ்ந்த அமைதி. ஆனால் அவனின் உள்ளம் எரிமலை நெருப்பு கங்குகளாக வெடித்து சிதறிக்கொண்டிருந்தது. அத்தனை தகிப்பு. தனலாய் சுருண்டான்.
“என்ன மாப்பிள்ளை அமைதியாகிப்புட்ட?”
“இதில் நான் சொல்ல என்னயிருக்கு மாமா? எது சரிவருமின்னு உங்களுக்குலாம் தெரியாதா?” என்றான். அடைத்த தொண்டையை வெகு சிரமப்பட்டு மறைத்தான்.
“வசந்திக்காக எல்லாரோட விருப்பத்தையும் கொல்லனுமான்னு இருக்குய்யா” என்ற மருதன், “மொத பிரேம் நாச்சி கல்யாணத்தை முடிக்கலாம் பார்த்தாக்கா… இந்த வசந்தி இப்படியொன்னை ஆரம்பிச்சு மனசை குழப்பிவிட்டுபுட்டா(ள்)” என்று தன் போக்கில் பேசிக்கொண்டிருந்தார்.
“எல்லாம் நாம நெனச்சா ஆவுமா? காலமும் நேரமும் என்ன நெனச்சு சுழலுதோ அதுபடித்தேன் விதி அமையும். ரொம்ப ரோசிக்காதீரு. இப்போ முடிவு பண்ணியிருக்கமாறி பேசி பாரும்” என்று முடித்துக்கொண்டான்.
‘தங்கப்பொண்ணை எனக்கு கொடுத்துப்புடேன் மாமா?’ மனம் உந்தி தள்ளி வாய் வரை வந்துவிட்ட வார்த்தையை ரணப்பட்டு தொண்டைக்குள் விழுங்கி வைத்தான்.
*******************************
கண்கள் உடைப்பெடுக்கும் போலிருக்க… ஊருக்குள் சென்று வருகிறேனென சென்றிருந்த வீரனை வெகுவாக எதிர்பார்த்தாள் மீனாள். அவன் இன்னும் வந்தபாடில்லை.
மெத்தையில் சுருண்டு படுத்துக் கொண்டவளின் இதயம் நடுங்கிக் கொண்டிருந்தது.
யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை.
கூறினால் வீட்டிலோருப்போரின் கவலையை அதிகரித்தது போல் ஆகிவிடுமோ என்று அஞ்சினாள்.
அறையின் கதவு திறந்தேயிருக்க, இருளில் படுக்கையில் உடலினை குறுக்கி படுத்திருந்த மீனாளின் தோற்றம் வித்தியாசமாகத் தெரிந்தது.
அப்போது தான் மாடியேறி வந்த லிங்கத்திற்கு.
கதவில் கை வைத்தவன், “மீனாகுட்டி” என்றழைக்க. பதறி குதித்து எழுந்தமர்ந்தாள்.
“ஏய்… நான் தான். எதுக்கு இம்புட்டு அச்சம்?” எனக் கேட்டவன், அறைக்குள் சென்று விளக்கினை ஒளிரச் செய்தான்.
“என்ன பண்ணுது மீனு? முகமெல்லாம் வெளுத்த மாறியிருக்கு?” என்றவன் அவளின் நெற்றியில் கை வைத்து பார்த்தான்.
உடல் வெப்பநிலை சீராக இருந்தபோதும் அவள் சீராக இல்லையென்பது புரிந்தது.
“யாரும் ஏதும் சொன்னாய்ங்களா?”
மீனாளின் தலை இல்லையென மெல்ல அசைந்தது.
“பொறவு என்னத்துக்கு இம்புட்டு சோகம் மூஞ்சில” எனக் கேட்டான்.
மீனாள் அமைதியாக இருக்க…
“உன் அத்தை நடந்ததுக்கு உன்னைய காரணம் காட்டினதுக்கு வெசனப்படுறியாக்கும்?” என்றான்.
மீனாள் வாய் திறப்பதாக இல்லை.
“என்னன்னு சொன்னாத்தான தெரியும்த்தா” என்றவன், சட்டென்று வழிந்த அவளின் கண்ணீரில் பதறியவனாக அருகில் அமர்ந்து கண்ணீரை துடைத்து…
“என்னத்துக்குத்தா மருகிற? என்னான்னு சொன்னாக்கா சரி செய்யலாமில்லையா?” என்றான்.
மீனாள் தலை கவிழ்ந்து அழுதபடி இருக்க…
“ஒன்னும் சொல்ல வேணாமாட்டிக்கு. நீயி உறங்கு” என்றவன் அவளின் முகம் உயர்த்தி வாஞ்சையாக பார்வையை வீசிட…
“மாமா” என்று லிங்கத்தின் தோள் சாய்ந்தாள்.
“இப்போ என்னாச்சு? அண்ணே எல்லாத்தையும் சரி பண்ணிப்போடும். நீயி அழுதுகிட்டு இருக்கிறதுல அண்ணே மனசுதேன் வேதனப்படும்” என்றவன் மீனாளின் கையினை தட்டிக்கொடுத்தான்.
“சொல்லணும்… சொல்லாம இருக்கக்கூடாது” என்றவள், “எப்படி சொல்லன்னு தெரியலையே!” என்க…
“எல்லாரையும் மாதிரி வாவால தான் சொல்லணுமாட்டிக்கு” என்று வீரன் உள் நுழைய…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
9
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இந்த பேச்சுநடை ரொம்ப அழகா இருக்கு 💝💝
மகிழ்ச்சி 😍.. நன்றி சிஸ் 🥰