Loading

யான் நீயே 3

மீனாளிடம் உடலில் அப்படியொரு விறைப்புத்தன்மை. வீரன் பின்னால் அமர்ந்திருப்பதால். அன்றைய அவனின் பேச்சு தன்னைப்போல் மனதில் வலம் வந்திட, கடினமாக மாறியிருந்தாள்.

“எதுக்கு இம்புட்டு வேகம்?”

வீரன் குரல் அவளின் கருத்தில் பதியவே இல்லை.

“மீனா…”

…..

“தங்கப்பொண்ணு…”

உடலும் மனமும் மொத்தமாக சிலிர்த்து அடங்கிட அவளுக்கான வீரனின் பிரத்யேக விளிப்பில் வண்டியை பட்டென்று கிரீச்சென்று சாலையின் மத்தியில் நிறுத்தியிருந்தாள்.

“ஏய்…”

மீனாள் மீது உரசிடாது இடைவெளி விட்டு அமர்ந்திருந்தவன் அவள் மீது மோதி இடித்து தள்ளி பின் நகர்ந்திருந்தான். அவளின் வேகத்தில்.

“எதுக்கு இம்புட்டு அவசரம். பொறுமையா போ” என்றவனை திரும்பிப் பார்த்தவளின் விழிகள் சொல்ல முடியாத பரிதவிப்பை காட்டியது. கலங்கி சிவந்திருந்தது.

வீரனின் இதயம் நின்று துடித்தது.

“என்னாச்சு?”

…..

“நான் ஓட்டவா?”

“ஏன் மாமா? நீயே என்னை உன்கிட்டேர்ந்து தள்ளிப்போற மாதிரி செஞ்சுட்ட. முடியல மாமா. கடைசிவரைக்கும் உன்கிட்ட பழைய மாதிரி இருக்கமுடியாதா மாமா?” அவள் மொத்தமாக உடைந்திருக்கிறாள் என்பது வீரனுக்கு புரிந்தது.

என்ன விளக்கம் கொடுத்திட முடியும்? ஒரு வேகத்தில் பேசியிருந்தாலும், என்ன பேசுகிறோமென்று அறிந்து பேசியவனுக்கு விளக்கம் கொடுத்து சப்பைக்கட்டு கட்டுவதில் உடன்பாடில்லை.

வீரன் அவளின் சிவந்த விழிகளையே பார்த்திருக்க…

“இன்னொருமுறை தங்கப்பொண்ணு கூப்பிடாத மாமா. நீ என் வீரா மாமா இல்லை” என்றவள் பின்னால் வரும் வாகனத்தை கவனித்து வண்டியை செலுத்தினாள்.

அதன் பின்னர் மருத்துவமனை வரும் வரை இருவரிடமும் ஆழ்ந்த அமைதி. காற்றின் ஓசை மட்டுமே ஆட்சி செய்தது.

“டாக்டர் பார்த்துட்டு போன் போடுங்க. பிரின்டிங் சென்டர் போவணும். வந்துடுறேன்” என்று சென்றவளை பார்த்தவாறே சில கணங்கள் நின்றிருந்தவன் மருத்துவரை பார்த்து வெளிவருவதற்குள் வரவேற்பு பகுதியில் காத்திருப்போருக்கான இருக்கையில் அவனுக்காக அமர்ந்திருந்தாள் மீனாள்.

வீரனை கண்டுவிட்டு அருகில் வந்தவள்,

“என்ன சொன்னாய்ங்க?” என்றாள். அவனின் தோளில் கண் பதித்தவளாக. ஆடையை தாண்டி ஒன்றும் தெரியவில்லை.

“ட்ரெஸ்ஸிங் பண்ணியிருக்காங்க. களிம்பு கொடுத்திருக்காங்க” என்றவன், “நீ போன சோலி முடிஞ்சுதா?” எனக் கேட்டான்.

“அது…”

“என்ன?”

“மேல ஐநூறு ஆகுமாட்டிக்கு. கடையில் ஓனர் அண்ணா இல்லை. அவிங்கன்னா பழக்கம். புது பையன் இருக்கான். முழு காசும் கொடுத்தாதேன் வேலையை தொடங்குவேன் சொல்றான்” என்றாள்.

“காசு வேணுமாட்டிக்கு” என்றவன் வாலட்டை எடுத்து திறக்க, அவளின் கண்கள் தன்னைப்போல் அதனில் படிந்தது.

“காலையில சரியா பாக்கலியோ?” என்றவன், பணத்தை எடுத்து கொடுக்க…

“கிடைக்காத ஒன்னு மேல தெரிஞ்சே ஆசையை வளத்துக்காதீங்க” என்றாள்.

“நான் மட்டுந்தேன் ஆசை படுறேனாக்கும்?”

அவளிடம் பதிலில்லை.

“போவோமா?”

“நீங்க இங்கிட்டே வெயிட் பண்ணுங்க. நான் போயிட்டு வாரேன்” என்று மீனாள் நகர,

“எதுக்கு ரெண்டு வேலை. எனக்கு இங்கிட்டு வேற சோலி இல்லையே. உன் வேலையை முடிச்சுட்டு வூட்டுக்கு போவோம். சாமி கும்பிட நேரமாவுது” என்றான்.

இருவரும் வீட்டிற்கு வந்தபோது அனைவரும் அவர்களது வயலுக்கு மத்தியிலிருக்கும் பண்ணை வீட்டிற்குச் சென்றிருந்தனர்.

“எல்லாரும் போயிட்டாங்க போல… நீ போ. நான் குளிச்சிட்டு வாரேன்” என்றவன் உள்ளே செல்ல… வண்டியை திருப்பியவள் வீரன் மருந்து பையை வண்டியிலேயே விட்டுவிட்டதை கவனித்து எடுத்துக்கொண்டு உள் சென்றாள்.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு பின்னர், வீரனின் அறை நோக்கி நடந்தாள்.

வெளியில் நின்று கதவினை தட்டிட, அவனிடம் பதிலில்லை.

‘அதுக்குள்ள குளியலறைக்குள் போயிட்டாங்களா?’ என நினைத்தவள், கதவை திறந்து உள்ளே செல்ல…

“என்ன இன்னைக்கு நடக்கக்கூடாத அதிசயமெல்லாம் நடக்குது?” என்று அவளின் முதுகுக்கு பின்னால் திடும்பென ஒலித்த வீரனின் குரலில் அதிர்ந்து திரும்பினாள்.

“மரு… மருந்து கவர்” என்று அவன் முன் சிறு படபடப்போடு நீட்டியவளுக்கு, அன்றைய தின அவனது பேச்சின் நினைவில் முகம் முழுக்க வியர்த்துவிட்டது.

“ஏய்… என்னடி ஆச்சு? இப்படி வேர்த்துப்போச்சு” என்ற வீரன் தன் கழுத்தில் கிடந்த துண்டினை இடித்து அவளின் முகம் ஒற்ற முயல…

“இம்புட்டு நா(ள்) தள்ளித்தானே இருந்தீ(ய்)ங்க? இன்னைக்கு மட்டும் ஏன்? மொத மாறியே இருந்துக்கலாம். என்னால பழசை கடந்து வர முடியும் தோணல” என்றாள். சிறு விம்மலோடு.

“என்ன சொல்ற நீயி?” மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு தீர்க்கமாக வினவினான்.

மீனாளுக்கு புரிந்துகொண்டு கேட்டபவனிடம் என்ன விளக்கம் அளிப்பதென்று தெரியவில்லை.

“ரொம்ப குழம்பாத! உன்பாட்டுக்கு நீயிரு. நான் தொந்தரவு ஏதும் பண்ணலையே. என் ஆசை எனக்குள்ள மட்டும். உன்னை எப்பவும் கட்டாயப்படுத்த மாட்டேன்” என்றவன், “இது உன்னை என் கையில முதல் முதலா தூக்கிய நாளிலிருந்தே உள்ளுக்க உண்டான ஆசை. இன்னைக்கு உனக்கு தெரியணும் இருந்திருக்கு. நானா சொல்லியிருக்கக்கூட மாட்டேன். எனக்கு என்னைவிட உன்னை அதிகம் புரியும்” என்றான்.

மீனாள் அப்போதும் மௌனமாகவே இருக்க…

“நடுவுல இந்த சலம்பல் எதுவும் நடக்காது… என் விருப்பம் உனக்கு தெரிஞ்சிருந்தாக்கா அப்பவும் வேணான்னு தான் சொல்லியிருப்பியா?”

இதற்கு அவள் என்ன பதிலை சொல்லிடுவாள்?

அவளுக்கு மருதனைவிட வீரன் ஒருகாலத்தில் இன்றியமையாதவனாயிற்றே. அவனை வேண்டாமென்று அவளால் இப்பொதுபோல் அப்போது மறுத்திட நினைத்திருக்கத்தான் முடியுமா?

இப்போதும் கூட அவனது பேச்சு மட்டுமே தடையாய்.

“எனக்குத் தெரியல” என்றவள் வேகமாக ஓடிவிட்டாள்.

‘உன்னை மட்டுமல்ல உன் மனசும் எனக்கு புரியும்டி’ என்றவனின் அதரங்கள் நீண்டு விரிந்தன.

வீரன் அவனாக சொல்லவில்லை. தன் கை பிடித்து ஒட்டிக்கொண்டே திரிந்தவள், கிட்ட வரவே தயக்கம் கொண்டிருக்கும்போது எப்படி சொல்லிடுவான். அவளாகத் தெரிந்துகொண்டாள். மறுக்கவும் செய்திட்டாள்.

வருத்தம் கொள்வதற்கு பதிலாக புன்னகைத்துக் கொண்டிருக்கின்றான்.

மேசை மீது வைத்த தன்னுடைய வாலட்டை எடுத்து திறந்தவன், அதிலிருந்த மீனாளின் புகைப்படத்தை பார்த்து…

“தங்கப்பொண்ணுக்கு வீரா வேணாமாமே! அப்படியா?” என்றவன், இடது கை விரலால் வலது பக்க மீசையின் நுனியை திருகினான்.

“நான் சொல்லாமலே என் காதல் உனக்கு தெரிஞ்சமாட்டிக்கு, நான் கேட்காமலே நீ என்கிட்ட வருவ. எனக்கு கிடைப்ப” என்றவன், “நீ என் பொண்டாட்டிடி” என்றான்.

அவள் மீது கொள்ளை கொள்ளையாய் நேசம் கொண்டிருக்கிறான். அதனை வெளிப்படுத்திட தடையாய் அவனது வார்த்தைகளே!

லிங்கத்திடமிருந்து அழைப்பு வரவும் தன்னுடைய காதலை ஒத்தி வைத்தவனாக வேகமாக கிளம்பி, இரண்டு வீட்டிற்கும் மத்தியிலிருக்கும் தென்னந்தோப்பிற்கு விரைந்து சென்றான்.

கிணற்றடியில் இருக்கும் வேப்ப மரத்தின் முன்பு மகாவும், அபிராமியும் படையல் வைத்துக் கொண்டிருந்தனர்.

போகி அன்று மாரியம்மனை வேண்டி அங்கு வழிபடுவது அவர்களின் வழக்கம்.

“கருவாட்டு குழம்பு வைக்கலையா?” இலையில் வைக்கப்பட்ட பதார்த்தங்களை பார்த்து அங்கை கேட்டிட…

“எப்படியும் மாட்டு பொங்கலுக்கு படையலுக்கு வைக்கணுமே. அதான் இன்னைக்கு முட்டை, கோழி மட்டும்” என்று மகா சொல்லிக்கொண்டிருக்க, வீரன் வந்து சேர்ந்தான்.

“வாய்யா ஆஸ்பத்திரியில என்ன சொன்னாய்ங்க?” கேட்ட அப்பத்தாவிடம் அதற்குரிய பதிலை சொல்லியவன் கிணற்று திண்டில் லிங்கத்தின் அருகில் சென்று அமர்ந்தான்.

வீரன் வரும் வரையிலும் ஒன்றாக சிரித்து பேசியபடி நின்றிருந்த மருதனும் பாண்டியனும் இப்போது முகம் திருப்பி விலகி நின்றனர்.

“என் முன்னுக்க மட்டுந்தேன் இப்படியாடா?”

“உங்களுக்குத் தெரியாதாக்கும்.” லிங்கத்தின் பதிலில் வீரன் அட்டகாசமாக சிரித்திட…

மொத்த பேரும் அவனை ஆச்சரியமாக ஏறிட்டனர்.

வீரன் இப்படி சிரித்து பல வருடங்களாயிற்று. சிரிக்கக்கூடாதென்று இல்லை. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அனைத்திலும் அவனை முன்னிறுத்தி தலைமையை உணர வைத்திட, தானாக அதற்குரிய மிடுக்குடன் வலம் வரத் தொடங்கியிருந்தான்.

பாண்டியனே அவனிடம் எட்ட நின்று தான் பேசிடுவார்.

அதன் பின் தன்னவளின் அழுகைக்கு தானே காரணமாகிவிட்டோம் என்கிற நினைப்பு அவனது சிரிப்பினை அளவாக்கியது.

இன்று அவனது மனம் ஏதோவொன்றால் இதம் கொண்டிருக்க… மனம் லேசாக உணர்ந்ததால் யாவும் மறந்து சத்தமிட்டு சிரித்துவிட்டான்.

“எம்புட்டு வருசமாச்சு. என் ராசா மொகம் இப்படி மின்னுறதுக்கு” என்ற அப்பத்தாவிடம் அத்தனை மகிழ்வு.

“உன் ஆளு கூட போயிட்டு வந்த சந்தோஷமாட்டிக்கு?” நாச்சி இரு அண்ணங்களுக்கு இடையில் அமர்ந்து வீரனிடம் கேட்க,

“அப்படியும் இருக்குமோ?” என்றான் வீரன்.

“அப்போ நாச்சியா சொன்னது நெசந்தானா?” லிங்கம் இழுத்து வினவினான்.

“என்ன சொன்ன அவன்கிட்ட?” வீரன் நாச்சியிடம் கேட்டான்.

“இருக்கிறதை சொன்னேன்.” உண்மையை சொல்லி வீரனிடம் மாட்டிக்கொள்ள அவளிடம் தெம்பில்லை.

அசடு வழிந்தவளாக எழுந்து ஓடிவிட்டாள்.

“தங்கம் எங்கடா?”

“தங்கமா?” என்று யோசித்த லிங்கம், “மீனாளை கேட்கிறியாண்ணே! இந்தப்பெயரை நீயி மட்டுந்தேன் சொல்லுவ. நீயி சொல்லி கேட்டு ரொம்ப நாளாச்சா மறந்தேப்போச்சு” என்றதோடு, “என்ன புதுசா அவளையெல்லாம் கேட்குறீங்க?” என்றான்.

“எல்லாரும் இருக்கோம். என்னை விட்டுப்போட்டு இங்கனதேன் வந்தாள். ஆளை காணோமாட்டிக்கு விசாரிச்சேன்” என்ற வீரனின் பார்வை சற்று தொலைவில் இருக்கும் மருதனின் வீட்டை நோட்டமிட்டது.

“பிரேமும் தான் இங்கிட்டு இல்லை. அவனை கேட்டிங்களா நீங்க?” என்ற லிங்கத்தின் கேள்வியில் வீரன் அசடு வழிந்தான்.

“உன்னைய இப்படி பார்க்கவும் நல்லாத்தேன் இருக்குதுண்ணே” என்ற லிங்கம் வெளியில் சொல்லவில்லை என்றாலும் தன் அண்ணனின் சந்தோஷத்திற்காக அவன் ஆசைப்பட்டது கிடைக்க வேண்டுமென்று அக்கணமே மனதார வேண்டிக்கொண்டான்.

“நாச்சியா இருக்கான்னு அவென் வந்திருக்கமாட்டான்” என்று வீரன் சொல்ல…

“படையல் போட்டாச்சு எல்லாரும் பக்கம் வாங்க. சாமி கும்பிடலாம்.” அபிராமி அழைத்திட அனைவரும் மரத்தின் அருகே சென்றனர்.

“மீனாளுக்கு போன போடுய்யா லிங்கம்.” அப்பத்தா சொல்லிட, லிங்கத்துக்கு முன் வேகமாக வீரன் அழைத்திருந்தான்.

“சாமி கும்பிடப்போறாங்க.” மீனாள் எடுத்ததும் வர சொல்லியவன், பிரேமையும் அழைத்து வரக் கூறினான்.

அந்தப்பக்கம் மீனாள் ஏதும் சொல்லாது அமைதியாக இருக்க, இங்கு அனைவரும் வீரனை எதற்கு எனும் விதமாக பார்த்து நாச்சியை நோக்கினர்.

“அவனும் நம்ம குடும்பந்தேன். அவன் இல்லாம இன்னும் எத்தனை வருசத்துக்கு எல்லாம் செய்வீங்க. எல்லாத்தையும் மறந்து கடந்துதானே வரணும்” என்று அனைவருக்கும் பொதுவாகக் கூறியவன்,

நாச்சியை ஏறிட்டு…

“எதையும் எதிர்கொள்ளுற தைரியமும் பக்குவமும் வேணும். இது புரியாத சின்னபிள்ளையில்ல நீயி” என்றான்.

இவ்வார்த்தை தனக்குமென்று வீரன் சொல்லாமலே மீனாளுக்கு புரிந்தது.

“வெரசா அவனையும் கூட்டிகிட்டு வந்துசேரும்” என்றவன் அலைப்பேசியை வைத்திட…

“நீயும் மறக்கலாமே கண்ணு” என்றார் அப்பத்தா.

மருதனும், வீரனும் நொடிக்கும் குறைவாய் கண்களால் தொட்டு மீண்டனர்.

அன்று பிரேம் மீது அதீத கோபத்தில் இருந்தது வீரன் தான். இன்று அவனுக்காக பேசுவதும் வீரன் தான். பிரேமை ஏற்றுக்கொண்டதைப்போல் மருதனை ஏற்பது வீரனுக்கு அத்தனை எளிதாகத் தெரியவில்லை.

அவனின் பாசம் ஆட்டம் கண்ட நிகழ்வு அது. மருதனிடம் அப்படியொரு பாகுபாட்டை அவன் நினைத்துக்கூட பார்த்ததில்லை. பாண்டியனைவிட எல்லாமாவும் நினைத்த தன் மாமன் பொய்த்துப்போனதை அவனால் கடக்க முடியவில்லை. முயல்கிறான்.

கண்களை மூடி விறைத்து நின்றவன்,

“முடியல அப்பத்தா” என்றிட, அவனின் உடைந்த குரல் மருதனை மனம் நடுங்க வைத்தது.

உடைந்து நின்ற அக்கணமே இயல்புக்கும் மீண்டிருந்தான் வீர அமிழ்திறைவன்.

அனைவரையும் மீட்டிருந்தான்.

“எல்லாம் ஒருநா(ள்) சரியாப்போவும். இப்போ கூடுன வேலையை பாப்போம்.”

மீனாளும், பிரேமும் வந்து சேர்ந்தன.

வீரனின் பக்கம் தாவிய விழிகளை கடினப்பட்டு அடக்கி வைத்தாள் மீனாள்.

லிங்கம் மற்றும் வீரனுக்கு அருகில் சென்று நின்ற பிரேமின் பார்வை முழுவதும் நாச்சியின் மீது தான்.

“டேய்… அவ அண்ணேங்க ரெண்டு பேரும் பக்கத்துல நிக்கும் போதே இந்த பார்வை பாக்குற?” லிங்கம் பிரேமின் விலாவிலே இடித்தான்.

“என் மச்சானுங்க என் காதலுக்கு சப்போர்ட்டு பண்ணுவாய்ங்கங்கிற தைரியந்தேன்” என்று பார்வை மாற்றாது மொழிந்தான் பிரேம்.

“அன்னைக்கு அண்ணே கொடுத்த அடியை வாங்கியுமாடா உனக்கு இந்த நினைப்பு இருக்குமாட்டி?” லிங்கம் கேலியாக வினவினான்.

“அடிச்சது என் மச்சான் தானே!” சளைக்காது பதில் கொடுத்தான் பிரேம்.

“உங்க ஒரண்டைய அப்புறம் வச்சிக்கோங்க. இப்போ சாமி கும்பிடுங்க.” வீரனின் அதட்டலில் இருவரும் கப்சிப் ஆகினர்.

நாச்சி பிரேமை அழுத்தமாக பார்க்க… அவனோ ஒற்றை கண்ணடித்து அவளை கலவர படுத்தினான்.

அன்று பிரேம் செய்தது தான் மற்றவர்களுக்கு தவறாக தெரிந்தது. நாச்சியின் மனம் தெரியாது போனது. இன்று தெரிந்திடுமா? பிரேமிற்கே தன் மனதை காட்டாது இருப்பவளின் விருப்பம் வீரனுக்கு தெரிந்திருக்குமோ?

தீபாராதனை மணியின் யோசையில் அனைவரும் மரத்தின் இருபக்கமும் நின்று கண் மூடி கரம் குவித்து பிரார்த்திக்க… மனதிற்குள் புள்ளி அளவிலான கசப்பும் வருத்தமும் இருந்த போதிலும், உறவுகள் ஒன்றுகூடி நின்றிருக்கும் அக்காட்சி அத்தனை அழகாய் நிறைவாய் இருந்தது.

‘ஒரு ஆலமர விழுதா…
பல உறவு ஒண்ணா வாழும்…
பாக்கும் நெஞ்சம் பாசத்துல ஊஞ்சலாடுதே…
ஒரு கண்ணு கலங்கினாலும்…
பல கைகள் துடைக்க வருமே…
இப்படி ஒரு கூட்டுக்குள்ளதான் வாழ ஏங்குதே…

சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல…
சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா…
சொன்ன கதை இல்லை கேட்ட கதை இல்லை…
இந்த கதை போல வேறேதய்யா…’

என்ற பாடல் பிண்ணனியில் ஒலிக்கவில்லை. அவ்வளவு தான். ஆனால் அனைவரின் மனமும் ஒரு கூடு என்பதில் நிறைவாய் உணர்ந்திருந்தது.

அப்பத்தா அனைவருக்கும் திருநீறு பூசிவிட, போடப்பட்டிருந்த இலைக்கு முன் ஒவ்வொருத்தராக சென்று அமர்ந்தனர்.

இறுதியாக வீரனின் அருகில் ஒரு இலை மட்டுமிருக்க, மீனாள் அவன் பக்கத்தில் அமர்ந்திட தயக்கம் கொண்டாலும், உட்கார்ந்துவிட்டவர்களை மாற்றி உட்கார சொல்வது சரிவராதென்று அவனுக்கு அருகில் அமர விழைந்த வேளை, அந்த பக்கம் பாண்டியனின் அருகில் அமர்ந்துவிட்ட அங்கை வேகமாக எழுந்து வந்து…

“நீ அங்கட்டு உட்காருக்கா” என்றி வீரனின் அருகில் அவள் அமர்ந்துகொண்டாள்.

விருப்பமற்று உட்கார வந்த போதும் அங்கையின் செயலில் மனதில் ஏதோ ஒரு மூலையில் ஏமாற்றம் பரவுவதை மீனாள் நன்கு உணர்ந்தாள்.

வீரன் இருவரையும் கண்டுகொள்ளவே இல்லை.

“நாட்டுக்கோழி கொழம்பு அம்புட்டு ருசி அப்பத்தா. இன்னொரு கரண்டி ஊத்து” என்று உணவில் கண்ணாக இருந்தான். மீனாளை சீண்டினான் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.

“கொழம்பு நீயி வச்சியா அப்பத்தா. அதான் ஒரப்பா… காரம் தூக்குது” என்றான் மேலும்.

“ம்க்கும் கோழி தான் ரொம்ப முக்கியம்” என்று மீனாளின் உதடு மட்டும் மெல்லிய முணுமுணுப்போடு அசைந்தது.

“வாடா மருமவளே. வந்து இங்குட்டு என் பக்கட்டு உட்காரு” என்று பாண்டியன் அழைத்த பின்னரே அங்கு சென்று அமர்ந்தாள். அதுவரை வீரனை முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.

“அண்ணே… உம்ம ஆளு செம காரமா இருக்குது போலயே? ஒருவேளை உரிமை உணர்வு எட்டிப்பாக்குதோ?” லிங்கம் வீரனின் காதில் கிசுகிசுத்தான்.

“ம்க்கும்… உரிமை உணர்வா? நீ வேற ஏண்டா அதுக்குள்ள அம்புட்டு தூரம் ரோசிக்குற… மொத எம்முகத்தை முழுசா நிமிர்ந்து பார்க்க சொல்லு” என்ற வீரனிடம் மீனாள் தன்னைப்போல் தன்னருகில் வர வேண்டுமென்ற அவனது ஏக்கம் அப்பட்டமாக தெரிந்தது.

“ஏன்டி மீனா கோழி கறியை ஒதுக்கி வச்சிருக்கவ?” மகா கேட்டிட…

“காரமா இருக்கும்மா” என்ற மீனாள், மற்ற பதார்த்தங்களை சாப்பிட்டாள். அவளுக்கு சிறு காரமென்றாலும் ஒத்துக்கொள்ளாது. அலறித் துடித்திடுவாள். தோல் சிவந்து புள்ளி புள்ளியாய் தோன்றிடும். அதற்காகவே வீரன் குழம்பு ஊற்ற சொல்லி, அதன் காரத்தை குறிப்பிட்டுக் காட்டினான்.

புரிய வேண்டியவளுக்கு புரிந்ததால், ஒரு வாய் கூட வைக்காது அதனை ஒதுக்கி வைத்திட்டாள்.

“உனக்கு பிடிக்குமாட்டி, மதினி ஆத்தாவை செய்ய சொன்னாய்ங்க. உனக்காக செய்தாக்க ஒரு வா உண்காம தள்ளி வச்சிருக்க” என்று மகா அதட்டிட…

“எனக்கு ஒரப்பு ஆவாது தெரியும்ல. அதுக்கு தக்கன செய்திருக்கணும்” என்று கோபமாக பதில் பேசிய மீனாள், “எல்லாமே காரந்தேன்” என்று இலையில் வைக்கப்பட்டிருந்த கொஞ்சம் மட்டும் உண்டுவிட்டு எழுந்து கொண்டாள்.

“நீங்க காரமா இருக்குன்னு அம்புட்டு அழுத்தி சொன்னதுக்கு காரணம் விளங்குச்சு” என்று லிங்கம் வீரனை பார்க்க…

“அவள் கண்ணு காரத்துல கலங்குனாலும் உள்ளுக்கு வெடிச்சு சிதறுதுடா. இன்னொருவாட்டி அவள் கண்ணுல தண்ணிய பாக்குற தெம்பில்லை. அது காரத்துக்காக வேண்டின்னாலும்” என்று வீரன் எழுந்து கொண்டான். ஆனால் அவளை அவனே தவிக்க வைக்கவிருக்கிறான் என்பது அவனே அறியாதது.

லிங்கத்துக்கு அவனது அண்ணனின் மனம் தெளிவாக புரிந்தது. மீனாள் மீது தன்னுடைய உயிரையே வைத்திருக்கிறானென்று. வீரனின் விருப்பம் அனைவருக்கும் மகிழ்வாய் இருந்தாலும், மீனாளுக்கு?

மீனாள் ஒப்புக்கொள்ள மாட்டாள் என்பது லிங்கத்திற்கே அழுத்தமாகத் தெரிந்தது.

“ஆத்தா… அண்ணே ஆசைப்படுற மொத விசயம். கஷ்டப்படுத்தாம கொடுத்துப்புடு.” உண்ட கையோடு வேப்ப மரத்தை பார்த்து கரம் குவித்திருந்தான் லிங்கம்.

“இன்னும் ஒரப்பா இருக்காக்கா…”

கை கழுவதற்காக கிணற்று தொட்டிக்கு வீரன் வர, நீரினை அள்ளி வாயில் கொட்டிக்கொண்டிருந்த மீனாளிடம் அங்கை கேட்டுக்கொண்டிருந்தாள்.

“நீதேன் கோழிக்கறி சாப்பிடலையேக்கா?”

“மாமா ரெண்டு மூணு வா ஊட்டிவிட்டுட்டாருடி. அவரு ஆசையா நீட்டும்போது எப்படி மறுக்க?”

மீனாளுக்கு நாட்டுக்கோழி அத்தனை பிடித்தம் என்பதால், அவள் உணவினை கொரித்துக் கொண்டிருக்கவும்,

“நல்லா சாப்பிடுத்தா” என்று தன்னுடைய இலையிலிருந்து இரண்டு கை ஊட்டிவிட்டிருந்தார் பாண்டியன். அதன் காரம் தாங்காமலே மகாவிடம் கோபமாக பேசி எழுந்திருந்தாள்.

“அப்பத்தா கயிறு கட்டிவிடுது பாரு.” அங்கையை கை கழுவியபடி விரட்டிய வீரன், அவள் ஓடியதும்…

அருகிலிருந்த பண்ணை வீட்டு திண்ணையில் மீனாளை உட்கார கூறியதோடு கண்ணிமைக்கும் நேரத்தில் தென்னை மரம் ஒன்றில் ஏறி, இரண்டு இளநீர் குலைகளை வெட்டி கீழே தள்ளியிருந்தான்.

சரசரவென ஏறிய வேகத்திற்கு கீழிறங்கி பாதி மரத்திலிருந்து தொப்பென்று தரையில் குதித்திருந்தான்.

நல்ல பெரும் காயாக, தண்ணீர் நிறைய இருக்கும் இளநீரை எடுத்து அதன் தலைப்பகுதியை சீவியவன்,

“ஆவலன்னா வேண்டாங்கிறதுல உறுதியா இருக்கணும். ஐயா ஊட்டிவிட்டா, உனக்கு சேராது தெரியும்ல மறுக்க வேண்டியதுதான. இப்போ அவஸ்தை யாருக்கு? நோ சொல்லி பழகு” என்றதோடு அவள் கையில் இளநீரை திணித்தான்.

“இந்த நோ எல்லாத்துக்குமா?”

அவள் கேட்ட தோரணையில் வீரன் உணர்வற்று நின்றான்.

அவனை பொருட்படுத்தாது இளநீரை குடிக்கத் துவங்கினாள். ஏறியிறங்கும் அவளின் தொண்டைக் குழியில் அவனது இதயம் சிக்கித் தவித்தது.

மீனாள் குடுவையை கீழே போட, மற்றொரு காயை நீட்டினான்.

“போதும். அளவுக்கு அதிகமாகப்போனால் வலி நமக்குத்தான்” என்று பூடகமாகக் கூறியவள் சென்றுவிட…

“நீ நெனச்சு பார்க்க முடியாத அளவுக்கு என் காதல் அதிகமாகி பல வருசமாவுது” என்று இல்லாதவளுக்கு பதில் கொடுத்தான்.

“பிரேம்…”

பிரேம் கண்ணில் தெரிய அவனை அழைத்தான்.

இருவரும் சேர்ந்து வெட்டிய இளநீரை கொண்டு வந்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தனர்.

“நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் பாயுமாம்.” குடித்தவாறு லிங்கம் சொல்லிட…

“என்னடா உளறுற?” என்றார் மருதன்.

“புரிய வேண்டியவங்களுக்கு புரியும் மாமா” என்றாள் நாச்சி.

“என்னவோ” என்றவர் குடுவையை போட்டுவிட்டு நகர,

“மீனாளுக்காக நம்ம எல்லாருக்கும் இளநீர் கிடைச்சுது” என்றாள். வீரனை பார்த்துக்கொண்டே.

“எல்லாருக்கும் வாப்பெட்டி கூடிப்போச்சு” என்று பார்வையால் அதட்டிச் சென்ற வீரனின் முன் வந்த மீனாள்,

“அப்பத்தா கொடுக்க சொன்னாய்ங்க” என்று மஞ்சள் தடவப்பட்ட நூல் கயிற்றை நீட்டினாள்.

அன்றைய தினம் வீட்டிலுள்ளவர்களின் எண்ணிக்கைக்கு தக்க மஞ்சள் தடவிய கயிறு வைத்து படைப்பர். பூஜை முடிந்ததும் அதனை ஆளுக்ககொன்றாகக் கட்டிக்கொள்வர்.

வீரனும், மீனாளும் தண்ணீர் தொட்டி அருகில் இருந்தபோது அனைவரும் கட்டியிருக்க, அவர்கள் இருவரது கயிறு மட்டும் கும்பத்தில் மிட்சம் இருந்தது.

மீனாள் திரும்பி வந்ததும்,

“அமிழ்தன்கிட்ட ஒன்னை கொடுத்துப்போட்டு நீயி ஒன்னை கட்டிக்க” என்றார் மகா. மூன்று பெண்களும் அப்போதுதான் உணவருந்திக் கொண்டிருந்தனர்.

மறுக்க முடியாது இரண்டு கயிறையும் எடுத்து வந்தவள் ஒன்றை வீரன் முன் நீட்டியிருந்தாள்.

சுற்றம் பார்த்தவன்,

கயிறை வாங்கி அவள் நீட்டிய கையினை இறங்குவதற்கு முன்பு கட்டியிருந்தான். மீனாளின் கையில்.

“மூணு முடிச்சு தானே? போட்டாச்சு.”

அவனது கேள்வியில் அவள் அதிர,

“முடிச்சு சரியா போட்டிருக்கேனா கேட்டேன்” என்றான்.

அவள் முறைக்க…

‘இந்த மூஞ்சியை எப்படி பார்த்தாலும் பிடிக்குதே.’ உள்ளுக்குள் சொக்கி சுருண்டான்.

“அம்மா, அத்தைலாம் இந்த கயிறை தாலியில் கட்டிப்பாங்கல” என்று தெரிந்த விடயத்தை தெரியாததைப்போல் கேட்டான்.

“தொந்தரவு பண்ணமாட்டேன்… நீங்களா கேட்கமாட்டிங்கன்னு சொன்னீங்க?”

மீனாள் நேர்கொண்டு அழுத்தமாகக் கேட்டிட…

“எவ்வரித்திங் இஸ் பேர் இன் லவ் அண்ட் வார்” என்றிருந்தான் வீரன்.

மீனாளுக்கு அங்கிருந்த மரத்திலேயே சென்று முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.

அவனைவிட்டு விலகவும் முடியாது, நெருங்கவும் முடியாது மனதில் மருகுகிறாள். தவியாய் தவிக்கின்றாள்.

வீரனின் காதல், அன்பு, பாசம் எல்லாம் புரிகிறது. ஏனோ அதனை இயல்பாய் ஏற்க முடியவில்லை. இப்படிப்பட்ட ஒருவனை மறுக்கும் தான் முட்டாளென்று புரிந்தாலும், அவன் வேண்டுமென்று அவளால் சொல்ல முடியவில்லை.

சட்டென்று அவளின் கண்கள் துளிர்த்துவிட்டன.

“அழுதுடாதடி. பாக்குற தெம்பு எனக்கில்லை” என்றவன், “அடக்கி வைக்க முடியலடி. வேணுன்னு பித்து பிடிச்சு தவிக்குது. என்ன பண்ணட்டும். இல்லைன்னா மனசால செத்திடுவேன் போலிருக்கு” என்றான்.

வீரனிடம் இப்படிப்பட்ட தவிப்பை தனக்காக அவள் எதிர்பார்க்கவில்லை. அவளுள்ளும் ஏதோ ஒன்று அசைந்தது. பழையதை கடந்து அதனை வெளிக்கொணர்ந்திடுவாளா?

“சரி சொல்லி ரெண்டு பேரோட வாழ்க்கையும் நரகமாக்கிட என்னால முடியாது” என்றவளின் மனமே அவளுக்கு எதிராக… ‘வீரன் தான் உன்னவன், அவனின்றி நீயில்லை’ என கூக்குரலிட்டது. தட்டி அடக்கி வைத்திட்டாள்.

வீரனிடம் மெல்லிய புன்னகை.

‘உன்னை நானறிவேன்’ என்ற அவனின் உள்ளத்து வார்த்தை அவளுக்கு புரிந்தது.

அவனுடைய கயிறு அவளுக்கு அவன் கட்டியிருக்க… தன்னுடையதை அவனிடம் இப்போது நீட்டினாள்.

“ஒருநா(ள்) எந்த திரையும் இல்லாம உன் மனசு நான் வேணுன்னு சொல்லும். இப்போ உன் கண்ணு மட்டும் என்கிட்ட சொல்லுறதை உன் உதடும் சொல்லனும்ன்னு துடிக்கும். அப்போ நீயே வந்து கட்டு” என்று இமைகள் படபடக்கும் தன்னவளின் மான்விழிகள் பார்த்துக் கூறியவன், வேட்டியை மடித்துக்கட்டி மீசை முறுக்கியவாறு அவளை கடந்து சென்றான்.

“இருட்டாகிப்போச்சு. அங்கிட்டு வெளிச்சத்துக்கு வா.” செல்லும்போது சொல்லிச்சென்றான்.

அவன் சொல்லியதில் உட்பொருள் இருக்குமோ என்று அவளின் மனம் குழம்பியது.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 37

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
36
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

5 Comments

  1. என்னங்கடே சலம்பலை பண்ணிட்டு திரியிறிங்க … என்ன பிரச்சினைன்னு சொன்ன சட்டு புட்டுன்னு ஒரு நியாயத்தை நாங்களும் சொல்லுவோம்ல … இந்த வீரன்
    என்னாம்மா காதலிக்கிறான் … கண்ணு சொல்றதை உதடு சொல்ல துடிக்குமா … கவித கவித … இந்தா பிள்ள மீனா ரொம்ப பண்ணாத … அப்புறம் அங்கை உனக்கு போட்டியா வந்துற போகுது …

    1. Author

      அங்கை ட்ராக் தனி சிஸ்…

      நன்றி 😍

  2. அவனது வார்த்தைகளால் அவனே அவனிடமிருந்து அவளை விலக்கி விட்டான்.
    மீனாளால் பழையதை மறந்து கடந்து வர இயலவில்லை.
    வீரனோ உணர்ச்சி வேகத்தில் பேசி இருந்தாலும் பேசுவது அறிந்தே பேசியவன்.
    இன்று நேசங்களை வெளிப்படுத்த அன்று வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகள் தடையாய்.
    அவனாக சொல்ல வில்லை அவளாக தெரிந்து கொண்டால் மறுத்தும்விட்டால் தெரிந்தும் நகைக்கின்றான்.
    எது எப்படியோ நிகழ்ந்தாயிற்று இனி ஒன்று கடந்து வர வேண்டும் இல்லையேல் கடந்து விட வேண்டும். ஏன் என்று நினைத்து அதற்குள்ளாக உழல்வது வீண்.
    வீரனில்லாமல் தானில்லை என்ற மனதின் குரலை அடக்கியவளால் அவனை விலக முடியாமல் தவிக்கும் மனதை அடக்க இயலவில்லை பாவம்.
    அவளை விட அவளை நன்கு புரிந்த வீரனது தவிப்பு சிலிர்க்க வைக்கின்றது.

  3. தவிர்க்க முடியாமல் போன சில கட்டுப்பாடுகள்…

    அவற்றுக்குள் அகப்பட்டு தவிக்கும் இவர்களின் நேசம் – நிச்சயமாக வலி மிகுந்தது தான்….