
யான் நீயே 9
வீட்டில் சாமி கும்பிட்டு அனைவரும் ஒன்றாக நீண்ட வரிசையில் அமர்ந்து உணவு உண்டனர்.
அனைத்து வகையான அசைவ பதார்த்தங்களும் உணவில் இடம் பெற்றிருந்தன.
வீரனும், லிங்கமும் அருகருகே அமர்ந்திருக்க…
வீரனின் அடுத்த பக்கம் அங்கையும், லிங்கத்திற்கு இந்த பக்கம் மீனாளும் அமர்ந்திருந்தனர்.
மீனாள் அருகில் தற்செயலாக கௌதம் அமர, வீரனுக்கு உள்ளுக்குள் காந்தியது.
இதில் இருவரும் சிரித்து பேசியபடி உண்ண, வீரனிடம் புகைச்சல். லிங்கம் நமட்டுச் சிரிப்பு சிரித்து வைத்தான்.
“அத்தை கருவாட்டு வறுவல் வையுங்க!” அங்கை உணவு பரிமாறியபடி இருந்த அபியிடம் கேட்க…
“செஞ்ச மொத்தமும் மூக்குமுட்ட முங்கிட்டு திரும்ப கேட்கிறவ?” என்ற மகா, “கருவாட்டு கிண்ணம் காலியாகிப்போச்சு. வேற வெஞ்சனம் வச்சி உண்கு” என்றார்.
“ஏம்த்தா கொஞ்சமா செஞ்ச…” என்ற அங்கை யாருடைய இலையிலிருந்து எடுக்கலாமென்று நோட்டம்விட, வீரனே தன் இலையில் இருந்ததை அவளது இலையில் வைத்தான்.
“மாமான்னா மாமா தான்” என்றவள் அவனின் கன்னம் கிள்ளி கருவாட்டில் கவனம் வைத்து, ரசித்து உண்ண… லிங்கம் தன்னுடையதையும் அவளுக்கு வைத்தான்.
அவளின் ரசிப்பான உணவு உண்ணும் முகம் அவனுக்கு அவன் உண்ணாமலே உணவின் சுவையை உணர வைப்பது போலிருந்தது.
“ம்க்கும்…” வீரனின் செருமலில் மீண்ட லிங்கம்,
“மெதுவா உண்கு சின்னகுட்டி” என்று இலையில் தலை கவிழ்த்திட…
“என்னடே மனசு ஆட்டம் காங்குதோ?” வீரனின் கேள்வியில் லிங்கமிடம் அதிர்வு.
“அப்படிலாம் இல்லண்ணே! எப்பவும் ஒரே முடிவுத்தேன்” என்றான். அழுத்தமாக. வீரன் சிரித்துக்கொண்டான். உள்ளுக்குள்.
லிங்கம் தானாக தெளிந்து உணர வேண்டுமென வீரன் நினைத்துக்கொண்டான்.
மூத்த ஆண்கள் ஒரு புறம் தனியாக அமர்ந்து உண்டு கொண்டிருக்க… நல்லான் இலையில் காலியாகும் உணவை அவர் கேட்பதற்கு முன்பே பார்த்து பார்த்து வைத்தனர் மகாவும், அபியும்.
“வயிறு நிறைஞ்சு போச்சுத்தா. அம்புட்டும் கொள்ள ருசி” என்று நல்லான் வாய்விட்டு பாராட்டியதை வசந்தியே நம்ப முடியாது ஆச்சரியமாகப் பார்த்தார்.
லிங்கம் முதலில் எழுந்துகொண்டான்.
வீரனின் பார்வை மீனாளின் இலையில் பதிந்தது.
அவள் இலையில் வைக்கப்பட்ட மீன் யாவும் அப்படியே இருந்தது… அவள் உணரும் முன்பு எட்டி எடுத்தவன், நிமிடத்தில் முள் பிரித்து தனித்தனி துண்டுகளாக அவளது கை பக்கம் நிரப்பிவிட்டான்.
“காரமா இருக்குன்னு சாப்பிடமா ஒதுக்கி வச்சிருக்கேன்னு நினைச்சேன் மீனு” என்று வீரனின் செயலை கவனித்த கௌதம் சொல்லியதோடு, “எல்லாரையும் அக்கறையா உன்னால் மட்டும் தான் கவனிக்க முடியும் வீராண்ணா” என்றான்.
“எனக்கு காரம் ஆவாதுன்னு இம்புட்டு வருசம் செண்டும் உனக்கு நினைவு இருக்குமாட்டிடே?” என்று மீனாள் கௌதமிடம் ஆச்சரியமாகக் கேட்க,
“இங்க எதையும் மறக்க முடியாது மீனு” என்று எதார்த்தமாக அவன் பதில் சொல்ல, வீரனுக்கு மீனாள் தன்னை கடுப்பேற்றுவது புரிந்தது.
“அவென் அவென் காதலை என்னனென்னத்தலையோ காட்டுறான். என் அண்ணேங்க ரெண்டும் சோத்துல காட்டுதுங்க. வெளங்கினாப்புலத்தேன்” என்று நாச்சி புலம்ப…
வரிசையின் இறுதியில் ஓரமாக அமர்ந்திருந்த பிரேம்,
“நீயி ஆசையா ஊட்டுவேன்னு உம் பக்கட்டு வந்து உட்கார்ந்தியாக்க, என்னவோ பொலம்பிட்டு இருக்கவ?” என்று அவள் ஊட்ட மறுத்த கடுப்பில் கடுகடுத்தான்.
“நான் முடிச்சிட்டேன். நீயி பைய்ய வந்து சேரும்” என்ற நாச்சி, சுபாவுடன் எழுந்து கையினை சுத்தம் செய்ய கொல்லைப்புறம் சென்றாள்.
லிங்கம் கால்நடைகளுக்கு வைக்கோல் போட்டுக் கொண்டிருந்தான்.
“கோழியெல்லாம் கவுத்தாச்சாண்ணே?” நாச்சி லிங்கத்திடம் கேட்க,
“வாத்து குட்டையை எட்டி பார்த்துட்டு வா நாச்சியா… எல்லாம் தண்ணியில இறங்கிடுச்சுவளான்னு?” என்று அனுப்பி வைத்தான்.
சில நிமிடங்களில் வந்த நாச்சி,
“எல்லாம் உறங்கிடுச்சுண்ணே” என்றவள் அங்கேயே நின்றிருந்த சுபாவின் அருகில் செல்ல, லிங்கமும் தன் வேலையை முடித்துக்கொண்டு வந்தான்.
“கரியனுக்கு எதுவும் போடலையா?”
“அவென் அண்ணே போட்டாத்தேன் நிறைக்க உண்குவான்” என்ற லிங்கம், “பனி நனையுது உள்ளார வாங்க ரெண்டேறும்” என்றுவிட்டு உள் செல்ல, எதிரில் கௌதம் வருவதை கண்டு,
“நீ போ நாச்சியா. நான் இதோ வாரேன்” என்று சுபா பின் தங்கினாள்.
மீனாட்சியும் நாச்சியை அழைக்க அவள் உள்ளே ஓடிவிட்டாள்.
சுபாவை கவனிக்காத கௌதம் தொட்டியில் நீர் மோண்டு கை அலம்பி திரும்பிட அவனுக்கு முன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தாள் சுபா.
‘எனக்கு முன்னாடி வந்தவங்க ஏன் நிலைப்படியில் ஒளிஞ்சு நிக்குறாய்ங்க?’ என்று நினைத்து வந்த மீனாள் வீரனை தாண்டி செல்ல முற்பட, அவளை இடையோடு கையிட்டு தன்னருகில் இழுத்து மறைத்திருந்தான்.
“என்ன செய்றீய்ங்க? யாராச்சும் பார்த்தா என்னாகுமாட்டிக்கு?” என்று அவனுள் திமிறியவள், பின்னால் திரும்பி வீட்டுக்குள் பார்த்தாள்.
“இப்போதைக்கு இங்குட்டு யாரும் வரமாட்டாய்ங்க” என்றவனின் பார்வை அலையும் அவளது கரு விழிகளில் சடுகுடு ஆடியது.
“அவஸ்தையை கூட்டுறடி” என்றவன் அவளின் நெற்றி முடியை ஊதிவிட,
“என்னைய இப்போ விடப்போறீங்களா இல்லையா?” என்று பல்லை கடித்தாள்.
“அடியேய்… அங்குட்டு பாருடி” என்று வீரன் அவளின் முகத்தை கொல்லை பக்கம் திருப்ப,
“அய்யோ” என்று வீரனின் மார்பிலே முகத்தை மறைத்து மூடியிருந்தாள் மீனாள்.
“என்ன மாமா பன்றாய்ங்க?”
“நான் டெமோ காட்டவாடி?” அவளின் காதில் கிசுகிசுப்பாய் வினவினான் வீரன்.
அப்போதுதான் வீரனின் உறுதியான விரல்கள் தன் வெற்றிடையில் அழுந்த படிந்திருப்பதை உணர்ந்த மீனாள்,
“கையெடு மாமா” என்று அவளுக்கே கேட்காத குரலில் முனகினாள்.
“சாரிடி… நானும் உன்னைய இழுக்குற அவசரத்துல கவனிக்கல” என்று உண்மையைக் கூறிய வீரன், வெகு நிதானமாக வருடியவாறு தன் விரல்களை எடுத்தான்.
சொருகிய விழிகள் பட்டென்று நிலைகொள்ள, அதில் பரவிய ஏமாற்றத்தை கண்டுகொண்ட வீரன் கள்ளத்தனமாக புன்னகைத்து விலகி நின்றான்.
“என்ன பேசிக்கிறாய்ங்க? ஒண்ணும் பிடிபடலை!”
“லவர்ஸ்க்குள்ள ஆயிரம் இருக்குமாட்டி. அதென்னத்துக்கு நமக்கு. நாம நம்ம லவ்ஸ் பத்தி பேசுவோமா?” என்று வீரன் கேட்க,
“எத்தனவாட்டி சொன்னாலும் உன் புத்தியில அம்புடாதா மாமா” என்று கோபமாகக் கூறிய மீனாள், “நான் கையே கழுவுல” என்றவளாக உள்ளே சென்று சமையலறை சன்னல் வழியாக கையினை சுத்தம் செய்து அப்பாத்தவின் அருகில் சென்றுவிட்டாள்.
“பஞ்சாயத்து முடிஞ்சுதுன்னா நான் வரட்டுமாடே?” வீரனின் குரலில் சுபா வேகமாக வீட்டிற்குள் செல்ல…
“சாரி வீராண்ணா!” என்றிருந்தான் கௌதம்.
“என்னடே சடவு?” என்ற வீரன், “யாரு கெஞ்சுறது, யாரு மிஞ்சுறது?” எனக் கேட்டான். கையில் நீரினை ஊற்றியபடி.
“எனக்கு விருப்பமில்லன்னு சொல்லியும் பின்னாடியே சுத்தி படுத்தி வைக்கிறாள். இப்போக்கூட நான் இங்க வரேன்னு தெரிஞ்சு வச்சிக்கிட்டுத்தான் வந்திருக்காள். சொல்லி புரிய வையுங்கண்ணா!” என்று சொல்லி செல்லும் கௌதமிடம்,
“வேணாங்கிறவன் என்னத்துக்குடே அந்த புள்ள கொடுத்ததை வாங்கிட்டு நின்ன? தள்ளிவிட்டு செவுலிலே ஒன்னு கொடுத்திருந்தியான்னா நான் போயி பேசியிருப்பேன்” என்று வீரன் சொல்ல கௌதமின் நடை நின்றது.
“அண்ணா?”
“என்னத்துக்கு மறுக்குற? மொத காரணத்த சொல்லு?”
“ஒத்துவராதுண்ணா. அவ்வளவு தான். அவளை இங்கிருந்து போகச்சொல்லுங்க!” கௌதமின் குரலில் பிடிவாதம்.
“நீயி உன் மாமன் வூட்டுக்கு வந்திருக்காப்போல, சுபா அவ(ள்) அயித்த வூட்டுக்கு வந்திருக்கா(ள்). எங்கிட்டு இருந்து போவ சொல்லுறது?” என்ற வீரனிடம் என்ன பேசுவதென்று தெரியாது கௌதம் வேகமாக உள்ளே சென்றிட,
“என் லவ்வுல மட்டுந்தேன், நான் சுத்தல்ல இருக்கேன் போல. மத்ததுலலாம், இவனுவதேன் கெத்து காட்டி முறுக்கிட்டு திறியிரானுவ?” என்ற முனகளோடு வீரன் உள் வந்தான்.
அடுத்த நாள் காணும் பொங்கல். பொங்கல் நிறைவு நாள்.
குடும்பத்தோடு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வதாக முடிவெடுக்கப்பட்டு மருதன், நல்லான் குடும்பம் கிளம்பிட, பாண்டியன் வீட்டினர் தத்தம் அறைக்குள் புகுந்தனர்.
“இந்த சுபா புள்ள கௌதமை ஒரு மாறி பாக்குதுண்ணே. பார்வைக்கு அர்த்தம் வெளங்குல!” அனைவரும் சென்றுவிட்டதை உறுதி செய்துகொண்டு லிங்கம், தான் கவனித்ததை வீரனிடம் கூறினான்.
“நீயி பச்சமண்ணுடே. வெளங்காது” என்று வீரன் தம்பியின் முதுகில் தட்ட…
“அப்படிலாம் இல்லை. நீங்க என்ன சங்கதின்னு சொல்லும். நான் மண்டையில ஏத்திக்கிறேன்” என்றான் லிங்கம்.
“சுபாவுக்கு கௌதம் மேல விருப்பமிருக்குமாட்டிக்கு” என்றான் வீரன்.
“எப்படிண்ணே! ஒத்த நாளுல லவ்சு?” அதிர்ந்து வினவினான் லிங்கம்.
“இங்க வந்து வந்த லவ்வு இல்லடே!”
“பொறவு எப்படிண்ணே! நாம நேரில் பார்த்தே பன்னெண்டு வருசமாச்சே?” என்று விழி விரித்தான் லிங்கம்.
“அதுங்கதேன் சொல்லணும்” என்ற வீரன், “நாளைக்கு நான் கோவில் வர முடியாதுடே! அம்புட்டு பே(ர்)த்தையும் பார்த்து சூதானமா பைய்ய கூட்டிட்டுப்போயி வந்து சேரு” என்றான்.
லிங்கம் ஏனென்று கேட்டதற்கு,
“சோலி கெடக்கு” என முடித்துக்கொண்டான் வீரன்.
“இந்த பொங்கலுக்கு லான்ஞ் பண்ண புது டிஷ் ரீச் எப்படியிருக்கு?” அதன் பிறகு அண்ணன் தம்பி இருவரும் தொழில் சம்மந்தமாக பேசி, கணக்கு பார்த்து முடித்து அறைக்குச் செல்ல மேலும் ஒன்றரை மணி கடந்திருந்தது.
வீரன் வழக்கம்போல் சன்னல் வழியாக தன்னவளின் அறையை நோட்டமிட, விளக்கின்றி இருளாக இருக்க உறங்கிவிட்டாள் என்பதை யூகித்து தானும் மெத்தையில் விழுந்து கண் மூடிட… அடுத்த நொடி அவனது அலைப்பேசி ஒலித்தது.
“தங்கம்?”
“மாமா நானு அங்கை!”
“என்ன இந்நேரத்துல?” அவனது தங்கப்பொண்ணு என நினைத்து உற்சாகமாக எடுத்தவனிடம் சடுதியில் ஏமாற்றம்.
“கௌதம் அப்பாவுக்கு கள்ளு வேணுமாம். ஐயாவை நாலு மணிக்கு கூட்டிட்டுப்போவ சொல்லியிருக்காரு” என்றவள், “ஐயாதேன் மரமேறி கள்ளை பதனியாக்கிக் கொடுக்கணுமாம். ரெண்டேறும் வூட்டு முன்னாடி வாய்க்காலில் ரகசியம் பேசிட்டு நின்னாய்ங்க. அக்காதேன் கேட்டுட்டு வந்து உங்ககிட்ட சொல்ல சொன்னாள்” என்று அங்கை சொல்லி முடிக்க, மீனாள் நெற்றியில் தட்டிக்கொண்டாள்.
“ஏன் அவிங்க என்கிட்ட சொல்லமாட்டாங்களாமா?” என்ற வீரன் மீனாளிடம் போனை கொடுக்க சொல்ல, வாங்க மறுத்தவளின் கையில் போனை திணித்துவிட்டு அங்கை இழுத்து போர்த்தி படுத்துக்கொண்டாள்.
“ஹலோ…”
“என்கிட்ட பேசுறதுல கூட உனக்கு அம்புட்டு கஷ்டமா தங்கம்?” கேட்ட வீரனது குரல் உடைந்திருந்ததோ?
“அப்படி… அப்படியில்லை” என்றவளின் குரல் அடங்கியே ஒலித்தது.
“ஐயா மரம் ஏறுறது இல்லையே! ஏழு வருசத்துக்கு முன்ன ஏறி விழுந்து கால் உடைஞ்சு கிடந்தாரே! அப்படி எதுவும் ஆகிடுமோன்னு தான் சொல்ல சொன்னேன். அவரு மாமா கேட்டாக்கா போதும். ரோசிக்கவே மாட்டாரே!” என்றாள்.
“இப்போ இம்புட்டு சொல்றதை நீயே மொத சொல்லியிருக்கலாமே தங்கம்.”
“இப்போலாம் நீயி சரியில்ல மாமா. கிட்ட வந்தாலே என்னென்னவோ பண்ணுற!” என்றவளுக்கு அவன் தீண்டிய இடை இப்பவும் சில்லென்று இருந்தது.
“பேச வந்தாலே லவ்சு… அப்படி இப்படின்னு வேற மாறி பேசுற. அதான் அங்கையை சொல்ல சொன்னேன்” என்றாள்.
“அம்புட்டுக்கா உன்னைய தொல்லை பண்ணுறேன்” என்ற வீரன், “மன்னிச்சிடுத்தா!” என்று வைத்திட, மீனாள் அவன் கேட்ட மன்னிப்பில் விக்கித்து நின்றாள்.
******************************
அதிகாலை நான்கு மணியளவில் மருதனும், நல்லானும் ஆற்றங்கரையோரம் வரிசையாக இருக்கும் பனைமரங்களின் இடம் வர, அங்கு அவர்களுக்கு முன்பே வீரனும், லிங்கமும் நின்றிருந்தனர்.
“இவனுவ இங்கென்ன செய்யுறானுவ?”
நல்லானுக்கு வீரனென்றால் அலர்ஜி தான். அதனால் தள்ளி நின்றபடி மருதனிடம் வினவினார்.
“இங்குட்டு நிக்குற மரம் முழுக்க பாண்டியனுக்கு சொந்தமானததேன் மாமா. நொங்கு சீசனுக்கு முன்னுக்கு, கள்ளு இறக்க குத்தகைக்கு விட்டுடுவான்” என்றார் மருதன்.
“ம்” என்ற நல்லான், “நான் அங்குட்டு அவன் பக்கட்டு வரல, இங்கனவே உட்காருறேன். நீயி கொண்டு வா” என்றவர் கரையில் அமர்ந்துவிட்டார்.
“வா மாமோவ். என்னத்துக்கு பனியில உலாத்திட்டு வர?” என்ற வீரன், “அவருக்கு வேணுமின்னாக்கா, அவுக வர வேண்டியதுதானே!” என்றான்.
“வீரா கம்மின்னு இருடே! இன்னமும் அந்த மனுசன் உன்னைய கண்டாக்கா அஞ்சதேன் செய்யுறாரு” என்ற மருதன், “எப்போலயிருந்து இந்த பழக்கம்?” எனக் கேட்டார். இருவரையும் பார்த்து.
“நம்ம ஹோட்டல்ல வந்து தங்கியிருக்க டூரிஸ்ட் கேட்டாங்கன்னு மேனேஜர் சொன்னாரு. அதான் கொண்டு போய் கொடுக்கலாமுன்னு வாங்க வந்தோம். இந்நேரம் தானே இறக்கினதும் சுத்தமானதா கிடைக்கும்” என்று பதில் கொடுத்தான் லிங்கம்.
“சரிடே! இறக்குனதும் ஒத்த கள்ளா அவருக்கு கொடுங்க” என்ற மருதன், “நான் கொஞ்சம் சரிச்சிக்கவா?” என வீரனிடம் கேட்டார்.
அளவான கள்ளு உடலுக்கு நல்லது என்றாலும் அதுவும் ஒரு போதை தானே! அதுக்கு மருதன் அடிமை என்றே சொல்லலாம். அதனை வீரன் தான் அவரை விடவைத்தான். யார் சொல்லியும் கேட்காதவர் வீரனுக்காக மட்டுமே அதனை விட்டும் இருந்தார்.
எங்கு ஆசையாக ருசி பார்க்க தூண்டிவிடுமோ என்று இந்தப்பக்கம் வருவதைக்கூட தவிர்த்திருந்தார்.
இன்று நல்லானுக்காக வந்திருக்க, நாவின் சுவை நரம்புகளை கட்டுப்படுத்த முடியாது கேட்டிருந்தார்.
“இந்தா இப்பவே உம் மாமனை சென்னைக்கு பொட்டிக்கட்ட வைக்குறேன் இரும்” என்று வீரன் வேட்டியை மடித்துக்கட்ட,
“அடேய் வேணாம்டே! நான் கேட்டது தப்புத்தேன்” என்று வீரனின் கையை பிடித்து இழுத்து நிறுத்தியவர், “அழிச்சாட்டியம் செய்யுற அமிழ்தா” என்றார்.
“இருக்கட்டும்” என்ற வீரனிடம், மரத்திலிருந்து இறங்கிய நபர், குளிர்ச்சியான கள்ளை சிறு குடுவையில் ஊற்றி கொடுக்க…
“இந்தா மாமா சுண்ணாம்பு கலக்காதது. கொண்டு போய் கொடு” என்று மருதனிடம் நீட்டினான்.
அவர் தன் கையில் வாங்கியதை ஏக்கமாகப் பார்க்க…
“இது ஆவுறதுக்கில்லை” என்ற வீரன், “நீயி வாளியில வாங்கிட்டு கிளம்புடே லிங்கம். வூட்டுல பிரிட்ஜில் வைய்யீ. நான் ஹோட்டடலுக்கு கொண்டு போயி கொடுத்துக்கிறேன்” என்று மருதனின் கையிலிருந்த குடுவையை வெடுக்கென பிடுங்கிக்கொண்டு நல்லானை நோக்கி வேகமாகச் சென்றான்.
“என்ன அலும்பு பண்ணுதியான் பாரு லிங்கு” என்ற மருதனிடம், “உனக்கு ஆவாது தானே மாமா. அதுக்குதேன் அண்ணே பயப்படுது” என்ற லிங்கம் கிளம்பிவிட்டான்.
“இந்தாருங்க பெரிப்பா, குடிங்க” என்று நல்லானிடம் நீட்டிய வீரன், அவர் அவனை மேலும் கீழும் பார்த்தவாறு வாங்கி மெதுவாக குடித்து முடிக்கும் வரை பொறுமையாக இருந்தவன்,
“நல்லாயிருந்துச்சா?” எனக் கேட்டான்.
நல்லான் “ம்” என்று தலையாட்டியதும்,
“அம்புட்டுதேன். இனி இந்த பக்கட்டு வரக்கூடாது. சொல்லிப்புட்டேன்” என்றான்.
“என்னை கண்ட்ரோல் பண்ணி, இங்குட்டு வரக்கூடாதுன்னு சொல்ல உனக்கு அதிகாரமில்லை” என்ற நல்லான் சிலிர்த்துக்கொண்டு எழுந்து நிற்க, மருதன் வேகமாக அருகில் ஓடி வந்து நின்றார்.
“உங்க மேல அக்கறைப்பட்டு சொல்லல. எம் மாமனுக்கு இது ஒத்துக்காது. அம்பாடுபட்டு அவரை விட்டொழிக்க வச்சிருக்கேன். உங்கக்கூட வந்ததுக்கே குடிச்சிக்கவான்னு கேட்கராறு. ஒரு வாய் ருசியில அடங்குற விசியமா இது. அவரு உடம்புக்கு இது ஆவாது. அத்துக்குத்தேன் சொன்னேன், நீங்களும் இங்குட்டு வராதீங்க. மொத உங்களுக்காகன்னு வருவாய்ங்க. பொறவு, நீங்களே கூட குடிச்சிப்பாருன்னு சொல்லலாம். உங்க பேச்சை தட்டக்கூடாதுன்னு, அவரு திரும்பக் குடிக்கலாம். அந்த கதைக்கெல்லாம் இங்க இடமே இல்லை” என்ற வீரன், “வூடு போவோம் வாங்க” என்று நல்லானை பேசவே விடாது நடக்க வைத்து வீட்டில் விட்ட பின்பு தான், அவன் வீடு சென்றான்.
“சுத்தமான ஒத்த மரத்து கள்ளு குடிச்சு பல வருசம் ஆச்சேன்னு, ஆசைக்கு உன்கிட்ட கேட்ட பாவத்துக்கு, நான் ஏதோ நித்தம் குடிக்குறவனாட்டம் எனக்கு கிளாஸ் எடுத்து கள்ளையே வெறுக்க வச்சிட்டாண்டே உன் மருமவன். இனி அந்தப்பக்கட்டு போகணும் நெனப்பே வராதுடே” என்ற நல்லான் மருதனிடம் புலம்பியபடி கூடத்தில் கிடந்த கட்டிலில் குப்புற கவிழ…
அவர் பேசியதைக்கேட்ட மீனாள்,
‘தேன்க்ஸ் மாமா’ என்று சந்தோஷமாக சொல்லிக்கொண்டாள்.
அவள் பயந்ததும் இதற்காகத்தானே! எங்கே மருதன் மரம் ஏறுவதோடு மீண்டும் இதனை குடித்துவிடுவாரோ என்று. அதனை வீரன் மொத்தமாக தடுத்திருந்ததில் அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி.
உடனடியாக அலைப்பேசி வழியாக அவனுக்கு நன்றியும் தெரிவித்திருந்தாள். சில நிமிடங்களில் பார்த்துவிட்டான் என்று தெரிந்தவளுக்கு, அவன் ஒரு ஹ்ம்ம் கூட சொல்லாதது ஏமாற்றமாக இருந்தது.
“வெரசா போனாதேன், நெரிசலில் மாட்டாம அம்மனை பார்த்திட்டு வெரசா வந்துசேர முடியும்” என்று மகா சொல்ல அனைவரும் குளித்து கிளம்பி வீரனின் இல்லம் வந்து சேர்ந்தனர்.
மீனாட்சியிடம் ஆசீர்வாதம் பெற்று பணம் பெற்றுக்கொண்ட பிள்ளைகள், கோவிலுக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்க மீனாள் வீரனைத்தேடி வீட்டையே வலம் வந்திருந்தாள். அவன் இருப்பதற்கான அடையாளமே இல்லை என்றதும் அவளது முகம் சுருங்கிப்போனது.
‘என்னதான் மீனாள் உனக்கு வேணும்?’ தனக்கு தெரியாத பதில் வேண்டி தன்னையே கேட்டுக்கொண்டவளுக்கு கோவில் செல்ல வேண்டுமென்கிற மனநிலையே மாறியிருந்தது.
“லிங்கு மாமா பால் பொங்குச்சா?”
லிங்கத்தை கண்டதும் அங்கை ஆர்ப்பாட்டமாகக் கேட்க,
“அப்பத்தா, ஐயாகிட்ட வாங்குனது போதலையாக்கும்” என்ற லிங்கம் சட்டை பையிலிருந்து ரூபாய் எடுத்து அவளுக்கு கொடுக்க,
“இன்னைக்கு இப்படி கேட்டாக்கா பணம் கிடைக்குமோ” என்ற கௌசிக்கும் கேட்க,
லிங்கம் அங்கையை முறைத்துக்கொண்டே கௌசிக்கும் கொடுக்க அவன் பின்னால் கௌதம், பிரேம், மீனாள், நாச்சி, சுபா என்று ஒரு வரிசையே நின்றது.
“நீங்க ரெண்டேறும் தான் சம்பாரிக்குறீங்களேடே! பொறவு என்னத்துக்கு என்கிட்ட புடுங்குறீங்க?” என்று கேட்டாலும் அனைவருக்கும் மகிழ்வாகவே கொடுத்தான்.
அடுத்து அபிராமி வர…
பிள்ளைகள் அனைவரும் அவரை சூழ்ந்திட…
“இங்காருங்க பிள்ளைங்களா என்கிட்ட ஆயிரம் தான் இருக்கு. அடிச்சிக்காம பங்கு போட்டுக்கோங்க” என்று அவர் முடித்துக்கொண்டார்.
மகாவும் அதையே செய்ய,
மருதன் தன்னிடம் வீரன் பேசிவிட்ட மகிழ்வைக் கொண்டாடும் விதமாக, கணக்கில்லாமல் கொடுத்தார்.
அனைவரும் கொடுக்கவும் நல்லானும் விறைப்பாக நின்று பணம் கொடுத்தார்.
“தினம் இந்த நாளா இருந்தா எம்புட்டு நல்லாயிருக்கும்?” கௌசிக் அங்கையின் தோளில் சாய்ந்தவாறு சொல்ல…
“ஏன்?” என்ற அங்கை அவனின் கழுத்தில் கை போட்டாள்.
“எங்கப்பா பத்து ரூபாய் கொடுக்க அம்புட்டு ரோசிப்பாரு. இன்னைக்கு கேட்காமலே ஐந்நூறு கொடுத்திருக்காரு. அதுக்குத்தேன் சொன்னேன்” என்ற கௌசிக்கிடம், “அப்போ என் காசும் நீயே வச்சுக்கடே” என்று கொடுத்தவள், அவன் மறுக்க மறுக்க அவனின் சட்டை பையில் தானே வைத்துவிட்டாள்.
“உனக்கு வேணாமா?”
“நான் இம்புட்டு காசு வச்சு என்னடே பண்ணப்போவுறேன். நீயிதேன் காலேஜுக்கு போற, எதாவது செலவு இருக்கும்” என்றவள், “நான் வேணுன்னாக்கா ரெண்டு மாமாகிட்டயும் வாங்கிப்பேன்” என்று கூறினாள்.
என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரியாவிட்டாலும், இருவரும் சிரித்து பேசுவதைப் பார்த்திருந்த லிங்கத்துக்கு அவர்களின் நெருக்கம் குடைச்சலை உண்டாக்கியது. காரணம் தான் புரியவில்லை அவனுக்கு.
‘அவன் தான் மேல சாயுறான்னா… இவளும் கை போடுறா(ள்). லிங்கு மாமான்னு வரட்டும், அந்த பன்னு கன்னம் ரெண்டையும் கடிச்சு வைக்குறேன்’ என்று உள்ளுக்குள் புலம்பினான். அர்த்தம் அவனே விளங்கிக்கொள்ளவில்லை.
“என்ன மாமா சிடுசிடுன்னு இருக்காப்ல இருக்கு?” என்று கேட்டபடி சுபா அவனருகில் வர, முகத்தை சீராக வைத்துக்கொண்டான்.
“கெளம்பியாச்சுன்னா வேனுல ஏறுங்க. புறப்படுவோம்.” லிங்கம் சொல்ல அனைவரும் வண்டியில் ஏறி அமர்ந்தனர்.
“மொத்தக் குடும்பமும் ஒட்டுக்கா போறோம்… டயருல எலுமிச்சை பழம் ஏத்தி ஓட்டு லிங்கு” என்றார் அப்பத்தா.
வண்டியில் அனைவரும் ஆட்டம் பாட்டமென்று கொண்டாட்டமாக வர, சுபா மட்டும் கௌதமை முறைத்துக்கொண்டே வந்தாள்.
“ஏன் மாமா சுபாக்கா உங்களை முறைச்சிக்கிட்டே வாராய்ங்க?” கவனித்து அங்கை கௌதமிடம் கேட்க,
“அதை கண்டுக்காத அங்கை” என்று முடித்துக்கொண்டான் கௌதம்.
கௌதமின் பாராமுகம் அத்தனை வலி கொடுக்க, இருக்கையில் சாய்ந்து கணகளை மூடிக்கொண்ட சுபாவின் கண்ணீர் கன்னம் தாண்டியது.
அருகில் அமர்ந்திருந்த மீனாளுக்கு பதற்றமாகிட…
“சுபாக்கா” என்று தன்னுடைய தாவணியால் யாரும் பார்க்கும் முன் அவளின் முகம் துடைத்துவிட்டாள்.
“நாம உயிரா நேசிக்கிறவங்க, நம்மளோட அன்பை புரிஞ்சிக்கலன்னாலும் பரவாயில்லை. அதை உதாசீனம் செய்யுறது எவ்வளவு வலிக்கும் தெரியுமா மீனு?” எனக்கேட்ட சுபாவின் வார்த்தையிலிருந்த வலியை மீனாளால் உணர முடிந்தது.
அந்த வலியை தானே… தெரிந்தே அவளவனுக்கு அவள் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.
“கௌதம் பக்கம் ஏதும் காரணமிருக்குமே சுபாக்கா. அவங்க உங்களை புரிஞ்சிக்கலன்னா, நீங்க அவரை புரிஞ்சிக்கலாமே?” என்றாள் மீனாள்.
இதைத்தானே வீரனிடத்தில் அவள் எதிர்பார்க்கிறாள்.
“இப்போ உனக்கு புரியாது மீனு” என்ற சுபா, “அப்பாவுக்கு பயந்தவனா இருக்கான்” என்றாள். சலிப்பாக.
நாச்சியும் பிரேமும் சிரித்து பேசியபடி ஒன்றாக ஒரே இருக்கையில் அமர்ந்திருக்க, அவர்களை ஏக்கமாக ஏறிட்ட சுபாவின் பாவனை மீனாளை என்னவோ செய்தது.
‘மாமா என்னை கஷ்டப்படுத்துறார்ன்னா… நானும் தானே அவரை கஷ்டப்படுத்துறேன்.’ என நினைத்த மீனாளுக்கு பழையதை கடந்திட முடியுமென்று மட்டும் நம்பிக்கை இல்லை.
‘உன்னை இழந்திடுவேனா மாமா?’ இதயம் முழுக்க சொல்ல முடியாத வலி உண்டாவதை உணர்ந்தாள்.
“கோயில் வந்துருச்சு இறங்குங்க.”
லிங்கம் சொல்ல அனைவரும் ஒன்றாக கோவில் உள் நுழைந்தனர்.
“அமிழ்தன் வந்திருந்தியான்னா நிறைஞ்சிருக்கும்” என்ற அப்பத்தா இரு கரம் உயர்த்தி அம்மனை வழிபட, ஒவ்வொருவரும் விழிகள் மூடி தங்களின் வேண்டுதலை அம்மன் முன் வைத்தனர்.
மீனாட்சி அம்மன் கோவிலில் கொடுக்கப்படும் தாழம்பூ குங்குமத்தை பெற்றுக்கொண்டு அனைவரும் குளத்தின் பக்கம் வந்து அதன் படிக்கட்டுகளில் அமர்ந்தனர்.
அந்நேரம் சரியாக வந்து சேர்ந்தான் வீரன்.
“அண்ணே வந்திடுச்சே” என்று லிங்கம் சொல்ல…
“பால் பொங்கிடுச்சா அண்ணே” என்றான் கௌசிக்.
“இவனுக்கு இம்புட்டு வாங்கியும் பத்தலை போலிருக்குடா” என்று லிங்கம் அவனின் முதுகில் வலிக்காது அடி வைக்க… அனைவரின் முகத்திலும் சிரிப்பு நிறைந்தது.
மீனாள் மட்டும் வீரனையே பார்த்திருந்தாள்.
எப்போதும் தான் அருகிலிருந்தால் தன்னையே வட்டமிடும் வீரனின் விழிகள் இன்று மற்றவர்களின் மேலிருப்பதை கவனித்தவள் தன் பார்வையை விலக்கிக்கொள்ளவில்லை.
“சாமி கும்பிட்டியா அமிழ்தா?”
“ஆச்சுத்தா!”
“நெத்தியில குங்குமத்தை காணும்” என்ற அபி சற்று நேரத்திற்கு முன் பையில் வைக்கப்பட்ட குங்கமத்தை தேட…
தன் கையில் மூடியிருந்த குங்குமத்தை வீரனின் முன் விரல் பிரித்து நீட்டியிருந்தாள் வீர அமிழ்திறைவனின் தங்கமீனாள்.
ஒரு கணம் அழுத்தமாக அவளின் உள்ளங்கையை பார்த்த வீரன்,
அபி நீட்டிய குங்குமத்தை எட்டி எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டான்.
வரும் போது சுபா சொல்லிய உதாசீனத்தின் வலியை உணர்வுப்பூர்வமா அக்கணம் மீனாள் உணர்ந்தாள். கண்கள் கலங்கிவிட்டது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
29
+1
2
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


மீனாவை வீரா கவனிக்காமல் இருந்தால் தான், மீனா வீராவை விட்டு பிரியக்கூடாது நினைப்ப போல…
ஆமா ஆமா… 😁
லிங்கம் மனதில் சலனம் வந்துவிட்டது.
கூடவே இருக்கும் போது புரியாதது, அதனை விலக்கி வைக்கும் போது புரியும் அது நமக்கு எவ்வளவு முக்கியம் என்று.
ஆளாளுக்கு போட்டி போட்டு அவங்க அவங்க ஆளுங்களை சுத்தல்ல விடுறாங்களே.
என்ன லிங்கம் அந்த புள்ள உன் மேல சாஞ்சாலும் உனக்கு பிடிக்கல, அடுத்தவங்க மேல சாஞ்சாலும் உனக்கு பிடிக்கல.
மீனாள் வீராவை விலக்கி வெச்சு அவளும் கஷ்டப்பட்டு அவனையும் காயப்படுத்திட்டு இருக்கா.
நடந்தத மறந்து கடந்து வரணும் இல்லேனா மறுத்து கடந்து போய்டனும்.
ரெண்டு பக்கமும் போகாம நின்னு வேதனைய எத்தனை நாள் அனுபவிக்க.
சீக்கிரமே முடிவுக்கு வரும் சிஸ்
நல்லா வேணும் மீனா வுக்கு … எங்க வீரா வை ஃபீல் பண்ண வைக்கிறதே வேலை … லிங்கம் லவ்னு தெரியாமலே லவ் பண்றான் … இந்த கௌதம் மீனா என்ன பண்ண காத்திருக்காங்களோ
எல்லாம் நல்லதுக்கே 😁
மீனாள் கலங்கும்போது நமக்கும் வலிப்பதாய்…..