
மெல்லினம் 8 :
“என்னம்மா இப்போ தீடீர்னு ஊருக்கு கிளம்புறேன்னு சொல்லுறீங்க” உடமைகளை எடுத்து வைத்து கொண்டிருந்த மங்கையிடம் கேட்டப்படி வந்தாள் தேன் முல்லை.
“மனசு கொஞ்சம் சரியில்லை ஊருக்கு போயிட்டு அப்புடியே நம்ம குலதெய்வம் கோவில்ல விளக்கு போட்டு வரலாம்னு இருக்கோம்” என்க,
“சரிம்மா போறதா இருந்தா அத்விக்கு ஸ்கூல் இருக்கும்போது போகலாம் தானே சனி,ஞாயிறு லீவுல இப்போ கெளம்புறீங்க நான் எப்புடி மா இவனை வச்சுகிட்டு சாயந்திரம் ரேஷ்மிகா வீட்டுக்கு போக முடியும்??” என,
“இப்போ என்ன ஒரு நாள் நீ அங்க போகமா இருக்க முடியாதா??இல்லை இவனையும் கூட்டிட்டு போக முடியாதா??நாங்க எங்கேயுமே போக கூடாதா என்ன??” என அவர் தீடிரென பேசியதில் அதிர்ந்த தேன் முல்லை
“ம்மா நான் எப்போ உங்கள போக வேண்டாம்னு சொன்னேன். இவனுக்கு ஸ்கூல் இருக்கப்போ போகலாம்னு தானே சொன்னேன்”. என அவள் உள்ளடங்கிய குரலில் கூற,
“என்னவோ இப்போ போகணும்னு மனசுக்கு படுது விடேன். சும்மா தொட்டு நொய்யு நொய்யுன்னு கேள்வி கேட்டுட்டே இருக்க நாங்க போகவே இல்லை போதுமா போ போய் நீ உன் டான்ஸ் க்ளாஸீக்கு கெளம்பு போதுமா?” என மங்கை வெடுக்கென்று கூற,
தேன் முல்லைக்கு லேசாக கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டன.
“மங்கை எதுக்கு இப்போ நீ கத்திட்டு இருக்க போ போயி ரெடியாகு நான் இதை எடுத்து வைக்கிறேன். கொஞ்ச நேரத்துல கார் வந்துடும் போ” என அவரை விரட்டிய சத்யமூர்த்தி,
“விடுடா தேனு அவ ஏதோ மனசு சரியில்லாம சுத்திட்டு இருக்கா? அம்மா பேசுனத எல்லாம் மனசுல வச்சிக்காதடா இன்னைக்கு நீ அங்க போகாம தம்பி கூட இரு நாங்க ஒரு எட்டு போய்ட்டு வந்துடுறோம்” என கலங்கி நின்ற மகளை தேற்றினார் அவர்.
சிறிது நேரத்தில் அவர்களுக்கு வண்டி வந்து விட தேன்முல்லையிடம் பத்திரமாக இருக்க சொல்லி விட்டு கிளம்பினார் இருவரும்.
“தப்பு மங்கை நீ இப்புடி தேனுக்கிட்ட பேசியிருக்க கூடாது பிள்ளை கலங்கிடுசசு” என சத்யமூர்த்தி மெதுவாக தனது ஆதங்கத்தை கூறிட,
“தினம் தினம் அவ வாழ்க்கைய நெனைச்சு நான் கலங்கிட்டு இருக்கேன் அது தெரியுமா உங்களுக்கு அன்னைக்கு கேட்டப்போ சொன்னீங்களே ஹரிஷீக்கு இன்னொரு பொண்ணு கூட பழக்கம் இருக்குறது முன்னாடியே தெரியும் அதனால் தான் நான் விவாகரத்து கொடுத்திட சொன்னேன்னு,
அதை கேட்ட நிமிசத்துல இருந்து துடியா துடிச்சிட்டு இருக்கேன் நான். தப்பு செஞ்ச அந்த நாயே இன்னொருத்திய கட்டிட்டு சந்தோஷமா இருக்கும் போது என் பொண்ணு மட்டும் ஏன் இப்புடி தண்டனை அனுபவிக்கனும்.
இவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்டை இருந்து வேற மறைச்சிருக்கீங்க?? இன்னும் என்னென்ன அவனை பத்தி என்கிட்ட சொல்லாமா இருக்கீங்க அதையும் சொல்லிடுங்க மொத்தமா கேட்டுட்டு போய் சேந்துடுறேன்!” என்க,
“மங்கை போதும் வாயை மூடு கோவிலுக்கு போற நேரத்துல அச்சாணியமா பேசாத?” என் அவர் அதட்டிட,
“ஆமா நான் சொன்னதும் இப்பவே எமன் வந்துட போறானா என்ன? உங்க பொண்ணுக்கு உரைக்கட்டும்னு தான் நான் அப்புடி பேசினேன். கடைசி வரைக்கும் நம்ம அவளுக்கும் துணையா இருக்க முடியாதுன்னு அவ உணரட்டும்னு தான் அப்புடி பேசுனேன்?
எனக்கு மனசு ஆறவே இல்லைங்க எம்பொண்ணுக்கு துரோகம் பண்ணிட்டு அவன் நிம்மதியா சந்தோஷமா இருக்கான் எப்புடி எப்புடி அவனால முடிஞ்சது. நம்ம இருக்க வரை சரி நம்மளுக்கு அப்பறம் அவ நிலைமை!” என முல்லையில் வாழ்க்கையை நினைத்து அவர் புலம்ப சத்யமூர்த்திக்கு அவரை சமாதானம் செய்யவே சரியாக இருந்தது.
என்றைக்கும் கேட்டிராத தாயின் இந்த எரிச்சலான பேச்சினை கேட்ட தேன் முல்லைக்கு மனம் பிசைய ஆரம்பித்தது.
‘ஓ அப்போ உன்னையும் உன் பிளளையையும் மட்டுமே பாத்துட்டு இருக்கணுமா? வேற எங்கேயும் வெளிய கூட போகுறதுககு அவங்களுக்கு உரிமை இல்லையா? கடைசி வரைக்கும் உங்க ரெண்டு பேருக்கும் வேலைகாரியாவே உங்கம்மா இருக்கணும்னு நெனைக்கிறீயா?” என மூளை குத்தி காட்ட,
‘ச்சீ…ச்சீ…நான் அப்புடி எல்லாம் நெனைக்கல நீ உன் இஷ்டத்துக்கு உளறாத’ என மனசாட்சி அதனிடம் மல்லுக்கு நிற்க,
‘அப்பறம் என்ன ஒரு நாள் நீ பெத்த பிள்ளைய உன்னால பாத்துக்க முடியாதா?அப்புடி என்ன ரேஷ்மிக்கு வீட்டுக்கு போகணும்னு அவசியம்!’ என மீண்டும் மூளை முரட்டு தனமாக கூற,
சட்டென எழுந்தவள் சீதாவிற்கு அழைத்து இன்று வர முடியாத என கூறி அதற்கான காரணமான பெற்றோர்கள் ஊருக்கு சென்றிருப்பதையும் கூறிட சீதாவும் சரி என்று விட்டிருந்தாள்.
சத்யமூர்த்தியின் சொந்த ஊர் மதுரைக்கு அருகில் உள்ள சிறு கிராமம் காடுவெட்டி. தொழிலுக்காக இடம் பெயர்ந்து கோயம்புத்தூர் வந்தவர் பின் இங்கேயே செட்டிலாகி விட்டார்.
ஆனால் மங்கையின் மாமனார் மாமியார் அங்கே தான் இன்னமும் இருக்கின்றனர். தேன்முல்லை சிறு வயதில் அங்கே சென்று வந்தவள் பின் ஒரு கட்டத்தில் படிப்பில் பிசியாகி விட்டிருந்தாள்.
தேன்முல்லையை ஹரிஷீக்கு முடிப்பதில் அவ்வளவாக சத்யமூர்த்தியின் பெற்றோருக்கு விருப்பம் இல்லை.ஆனால் மகளின் ஆசையை முன்னிறுத்தி அவர் பெற்றவர்களின் மறுப்பை நிராகரித்து விட அதில் இருவருக்கும் இடையே சில பல விவாதங்கள் நடந்து விரிசல் விழுந்திட போக்குவரத்தை நிப்பாட்டி விட்டிருந்தனர்.
மீண்டும் அத்விதன் பிறந்ததும் போக்குவரத்து இயல்பாகிவிட்டிருந்தது.விவாகரத்து விடயம் அறிந்ததில் இருந்து அவர்களுக்கு வருத்தம் தங்கள் ஒற்றை பேத்தியின் வாழ்க்கை இப்படி ஆனதை நினைத்து.
சிறிது நேரத்தில் அத்வி பசிக்கு சிணுங்க ஆரம்பிக்க மங்கை ஏற்கனவே சாதம் செய்து வைத்திருந்தார்.
குழைந்த சாதத்தில் கொள்ளு பருப்பையும் அதில் வைத்த ரசத்தையும் சேர்த்து சேர்ந்து நன்றாக கலந்தவள் கூட உருளை வறுவலையும் வைத்து அவனுக்கு ஊட்ட, பசியில் இருந்த குழந்தையும் வேகமாக உண்டு முடித்திட அவனை பாயில் தூங்க போட்டிருந்தாள்.
அவ்விதன் உறங்கியதும் இவளுக்கு பசி எடுக்க சாப்பிட ஆரம்பித்தவளுக்கு மங்கையின் முகமும் பேச்சுகளுமே நினைவு வர அடுத்த கவளம் தொண்டையில் இறங்க மறுத்தது.
ஆனால் போட்டு வைத்த சாதத்தை வீணாக்க முடியாது அல்லவா???
உண்டு முடித்து ஒழுங்குப்படுத்தியவளுக்கு மதிய நேரத்தை நெட்டி தள்ளி வேண்டியதாக இருந்தது.
அத்வியின் அருகே படுத்தவளுக்கு தூக்கம் கண்களை அண்டாது சிந்தனைகளும் சில கசப்பான நினைவுகளும் மனதில் ஊர்வலம் வர அதனுள் மூழ்க ஆரம்பித்து விட்டிருந்தாள்.
போதாக்குறைக்கு மங்கையின் இந்த ஒரு வார அமைதி முகமும் இன்றைய பேச்சுகளும் அவளை மேலும் கலங்கடிக்க தீடிரென யாருமற்ற அனாதையாகி விட்ட உணர்வு மேலெழுந்திட சட்டென தலையை பிடித்து கொண்டு எழுந்தமர்ந்து விட்டாள்.
இப்படியே இவள் இருந்தால் சீக்கிரம் பைத்தியம் பிடித்து விடும் மனதை அமைதியான நிலைக்கு திசை திருப்பிட முயல தோல்வியே.
சட்டென அவள் மணியை பார்க்க நான்கு ஐம்பது. சற்றே மனதினை நடனத்தில் திசை திருப்பினாள் நன்றாக இருக்கும் என நினைத்தவள் அதனை செயலாற்ற நினைத்து திரும்பவும் சீதாவிற்கு அழைத்து வண்டி அனுப்ப சொன்னால் நன்றாக இருக்காது ஆட்டோவில் கிளம்பி விடுவோம் என முடிவு செய்தவள் பரபரவென கிளம்பி ஆரம்பித்தாள்.
அத்விதனை கிளம்பி அருகே உள்ளவரிடம் விட்டு விட்டு அவள் கிளம்ப தீடிரென வானம் கருமை நிற அரக்கனால் சூழப்பட்டு காற்றும் பலமாக வீச இதில் எங்கே மழை வரப் போகிறது என அலட்சியமாக நினைத்தவள் ஆட்டோவில் ஏறி கிளம்பி விட்டிருந்தாள்.
இரண்டு மணி நேரம் தான் ஆகும் அத்விதனையும் உடன் அழைத்து செல்லலாம் என்றால் அங்கே ஸ்ருதியின் பேச்சு எப்போது எப்படி தாக்கும் என்று தெரியாததால் வீண் விவாதங்கள் வேண்டாம் என்று நினைத்தவள் அவனை விட்டு விட்டு கிளம்பி விட்டிருந்தாள்.
வரமாட்டேன் என்று சொன்னவள் தீடீரென வந்து நின்றதை கண்ட சீதா ஆச்சரியமடைய,
“அது வீட்டுலயே இருக்க ஒரு மாதிரி இருந்தது அதான் கொஞ்சம் ரிலாக்ஸாக வந்தேன்” என சீதாவின் பார்வைக்கு முல்லை விளக்கம் கொடுக்க,
“நான் பாக்க தான செஞ்சேன் இதுக்கெல்லாமா விளக்கம் சொல்லுவ நீ எப்ப வேணும்னாலும் இங்க வரலாம் முல்லை!!ஆமா பையன் எங்க???”இத்தனை மாதங்களில் சீதா முல்லையை ஒருமையில் அழைக்கும் அளவிற்கு நெருங்கியிருந்தாள்.
“ம்ம் அவனை பக்கத்துல விட்டுட்டு வந்துருக்கேன்”என,
“ஏன் முல்லை அவனை இங்க தூக்கிட்டு வந்துருக்கு கூடாதா? பக்கத்துல விட்டுட்டு வருவா ஆனா இங்க தூக்கிட்டு வர மாட்டியா??”
“அச்சோ இல்லைங்க அவன் ஒரு இடத்துலே அமைதியா இருக்க மாட்டான் துறுதுறு நான் இருந்தா இன்னமும் அதிகமா சேட்டை பண்ணுவான் அதான்…!!” என அவள் இழுக்க அதிலேயே முல்லைக்கு குழந்தையை இங்கே தூக்கி வருவதில் விருப்பமில்லை என தெரிந்திட அமைதியாக இருந்து கொண்டாள் சீதா.
முல்லை வகுப்பை ஆரம்பித்து விட அரை மணி நேரம் கூட இருக்காது தீடிரென கதவுகளும் ஜன்னல்களும் “டமார் டமார்” என்று அறைந்து சாத்திட பயந்தவர்கள் வெளியே பார்க்க சூறாவாளியாய் புழுதிகளை கிளம்பி கொண்டு காற்று அசுரனாய் சுழன்று சுழன்று அடித்ததில் கதவுகள் பிய்த்து கொண்டு போகும் நிலை.
எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மழை வானத்தை பொத்து கொட்டு கொட்ட அடுத்த அரை மணி நேரத்தில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழ வெள்ளக்காடாய் ஆனது கோவை.
வரலாற்றில் இல்லாத மழையை கண்ட ஆய்வாளர்கள் பின் வானிலை அறிக்கையை சோதித்திட தீடீரென மையம் கொண்டிருந்தது புயல்.
மனிதர்கள் தான் நேரத்திற்கு ஏற்ப ஏமாற்றுபவர்கள் என பார்த்தால் இயற்கையும் சதி செய்து ஏமாற்றி இருக்கிறது…
அடுத்த என்ன???எங்கேங்கு வெள்ளம் எத்தனை மரங்கள் விழுந்து கார்கள் நொறுங்கின என்ற செய்தி ப்ளாஷ்பேக்காக ரிப்பீட்டட் மூடில் ஓடி கொண்டிருக்க சாதாரண மழை தானே என நினைத்திருந்த முல்லைக்கு அத்விதனை நினைத்தே அடிவயிற்றில் பயம் எழ ஆரம்த்திருந்தது.
சிறிது நேரத்தில் மின்சாரத்தையும் துண்டித்து விட நிலைகுலைந்து போனாள். “அய்யோ அத்வி அழுவானே” என பதறியவள் எப்படியாவது வீட்டிற்கு சென்று விட வேண்டும் என நினைத்து ஜன்னலின் ஊடே எட்டி பார்க்க
மின்சாரம் இல்லாததில் ஊரே கருமை படர்ந்திருக்க வானத்தையும் கருமை பகவான் நிறைத்திருக்க ஆக மொத்தம் கும்மிருட்டில் கொட்டுகின்ற மழையின் சத்தம் மட்டுமே காதினில் படாரேன்று மோத அரண்டு விட்டாள்.
‘பரவாயில்லை மழை தானே எப்படியேனும் சென்று விடலாம்’ என அத்விதனை நினைத்து அவசர முடிவை எடுத்தவள் வேகமாக கீழிறங்கி வர பாதி நனைந்து கதிரவனும் பிரகாஷீம் உள்ளே வந்தனர்.
இத்தனைக்கும் காரில் தான் வந்திருந்தனர்.
“மேம் நான் நான் வீட்டுக்கு போகணும் மேம் கிளம்புறேன் ப்ளீஸ்” என்றவள் வேகமாக வெளியே செல்ல முயல,
“முல்லை!” என சீதா அழைப்பதற்குள்,
“எங்க போறீங்க வெளிய பாத்தீங்களா எப்புடி இருக்குன்னு இப்போ போய் கிளம்புறேன்னு சொல்லுறீங்க” என பிரகாஷ் இடைமறித்து அவளை நிறுத்திட,
“இல்லை,இல்லை, சார் குழந்தை அங்கே இருப்பான் என்ன தேடுவான் பயந்துக்குவான் நான் போகணும்” என அவள் அவசரப்படுத்த,
அதுவரை அமைதியாக இருந்து அவளை அளவிட்டு கதிர் “ஏன் வீட்டுல உங்கப்பாம்மா இருப்பாங்களே அப்பறம் என்ன பயம்??” என் கூர்மையாக அவன் வார்த்தைகள் வந்து விழ,
அவனின் கூர்மையில் திக்கியவள் அத்விதனை தனியாக விட்டு வந்த தவறை எண்ணி நொந்தவள்,
“அது…அது….வந்து அப்பா, ம்மா ஊருக்கு போயிருக்காங்க. கொஞ்ச நேரம் தானேன்னு நெனச்சு அத்விதன பக்கத்துல விட்டுட்டு வந்தேன்!” என் அவள் சொல்லி முடித்த நொடி….
“அறிவிருக்கா உனக்கு?” என கர்ஜனையாய் வந்தது கதிரின் குரல்.
அனைவருமே அதில் திடுக்கிட முல்லைக்கு உடல் தூக்கி போட்டது….
“உன்னை தான் கேக்குறேன் கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உனக்கு? எதுக்கு அவனை தனியா விட்டுட்டு வந்த ஒன்னு நீ அவனை வீட்டுல இருந்து பாத்துருக்கனும் இல்லை இங்க தூக்கிட்டு வந்துருக்கனும் அதை விட்டுட்டு பக்கத்துல விட்டுட்டு வருவியா நீ?
அப்போ அவுங்கள நம்புற அளவுக்கு கூட இங்க யாரையும் நீ நம்பல இல்லை?” என அவன் கத்திட,
“அப்புடி எல்லாம் இல்லை!” என அவள் சொல்லிய நொடி வானம் இடிந்து விழுந்து விட்டதோ என அஞ்சும் அளவிற்கு இடி பெரும் சத்தத்துடன் இடிக்க,
“அம்மா…ஆ..ஆ” என அலறி பயந்து ரேஷ்மி கத்தி சீதாவிடம் ஓடிட,
இவளிற்கு ஈரக்குலை நடுங்கிற்று. அத்விதனுக்கு இடி என்றாலே பயம் சிறு சத்தத்திற்கு கூட அலறி பயந்து இவளை கட்டி கொள்வான். அப்படிபட்டவன் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறானோ?
நிச்சயம் முல்லையை கேட்டு கத்தி கலாட்டா செய்வான் என நினைத்தவளிற்கு கதிரின் கத்தல்கள் எல்லாம் காதிலும் விழவில்லை. அவள் ஒரு நிலையிலயே இல்லையே. எப்படியாவது அத்விதனிடம் சென்று விடும் வேகம் தான் அவளிற்கு அதிகரித்தது.
“இல்லை நான் போய்க்குவேன் சார்” என்றவள் சட்டென யாரும் எதிர்பார்த்திட நிலையில் கதவினை திறந்து வெளியேறிட முயல,
“ஏய்ய்ய்!” என்றவாறு கதிர் அவளை பிடித்து உள்ளே இழுக்கவும் இவர்கள் போட்டிருந்த கார் செட்டின் மேற்கூரை பிய்த்து கொண்டு விழவும் சரியாக இருந்தது.
“அப்புடியே அறைச்சேன்னு வையி பைத்தியமா உனக்கு அவசரக்குடுக்கை! என்ன ஏதுன்னு பாக்காமா வெளிய போவியா நீ??” என கதிரழகன் அவளிற்கு மேலே எகிறினான்.
அவனிற்கு இன்னமும் படபடப்பு குறையவில்லை. அந்த மேற்கூரை வேறு இரும்பினால் ஆனது முல்லையின் மீது விழுந்திருந்தால் என்ன செய்வது?
“அய்யோ உங்களுக்கு தான் புரியல என் பையன் அங்க எப்புடி இருக்கான்னு தெரியல. நிச்சயம் பயந்துருப்பான் என்ன தேடுவான். என்ன ஆனாலும் சரி நான் எங்க வீட்டுக்கு போகணும் என்னை போக விடுங்க” என அத்விதனை நினைத்த கவலையில் அவள் இயல்பிலிருந்து மாறி கத்த.
யார் சமாதானம் செய்ய முயற்சித்தும் அவள் அடங்கவில்லை. விட்டால் அனைவரையும் தள்ளி விட்டு வெளியே செல்லும் வேகம் அவளிடம்.
அவளை கண்ட கதிருக்கு அத்விதனை காணாது, அவள் அடங்க மாட்டாள் என்பது புரிய சட்டென காரின் கீயை எடுத்தவன்,
“என்ன உனக்கு அத்விய தான பாக்கணும் நா போய் கூட்டிட்டு வர்றேன்” என அவன் கிளம்ப.
“டேய் கதிரு , என்ன பேசுற நீ இந்த நிலைமையில வெளிய போறியா நீ? வெளிய பாத்தியில்ல நெலைமையை” என வீட்டினர் அவனை தடுக்க நினைக்க,
“நானும் வரேன்!” என முல்லையும் அவனுடனேயே கிளம்ப,
“ஏய்ய்! சாவடிச்சிவேன், மரியாதையா உள்ள போடி! இந்த நிலைமையில் நான் போறதே கஷ்டம் இதுல உன்னையும் கூட்டிட்டு போக முடியாது. ஒழுங்கா உள்ளோ போய்டு!” என் அத்விதனை விட்டு வந்த கோபத்தில் கதிரும் தன்னை மீறி கத்திட,
அவனின் “டி” என்ற அழைப்பில் அனைவரும் திகைத்து தான் போயினர் ஸ்ருதி உட்பட..
ஆனால் அதனை உணர வேண்டியவளோ தன் இயல்பில் இல்லாததால் உணராது விட்டு விட்டாள்.
“ம்ம் என்ன பேசுறீங்க அங்க போய் அத்விதனை கூட்டிட்டு இங்க திரும்ப வர்றதுக்கு என்னை கொண்டு போய் விட்டுடலாம். அதை விட்டுட்டு அவனை இந்த மழையில தூக்கிட்டு வருவீங்களா அறிவிருக்கா உங்களுக்கு!” என படபட பட்டாசாய் அவள் பொரிய,
அவள் திட்டியதும் கதிரின் முகம் அஷ்டகோணலாய் மாறி விட, அதனை கண்ட வீட்டினர் சட்டென்று சிரித்து விட,
அதில் அவளை முறைத்தவன் “தேவை தான் எனக்கு உனக்காக நான் இந்த மழையில போறேன்ல, எனக்கு அறிவு இல்லை தான்! சீக்கிரம் வந்து ஏறி தொலைடி, அப்போ இருந்து இப்போ வரைக்கும் என்னை மனுஷனா மதிச்சிடாதா! ச்சே மனுஷனை சாவடிக்கிறா” என திட்டியவன் கிளம்ப அவன் பின்னே சென்று விட்டாள்.
வெள்ளப்பெருக்காய் ஓடி கொண்டிருந்த தெருக்களில் சாலைகளே தென்படாது இருக்க மிகவும் சிரமப்பட்டு தான் வண்டியை செலுத்தி கொண்டிருந்தான் கதிரழகன்.
அடிக்கும் காற்றில் எங்கேனும் மரம் முறிந்து விழுந்து விடுமோ என்ற பயத்தில் அரண்டு போயிருந்தாள் முல்லை.
வீட்டின் உள்ளே இருந்த வரை தெரியாதது வெளியே வந்ததும் தெரிந்தது நிலைமையின் வீரியமும் இயற்கையின் கோர தாண்டவமும்!
இவர்கள் சென்ற நேரம் மழை சற்றே தான் ஆட்டத்தை நிறுத்தியிருக்க, வேகமாக முல்லையின் வீட்டின் முன் காரினை நிறுத்தியிருந்தான் கதிர்.
வேகமாக இறங்கிய முல்லை பக்கத்து வீட்டிற்கு செல்ல அவள் எதிர் கொண்டது அத்விதனின் அழுகையையும் ஹரிஷின் “யோவ் குடுயா பிள்ளைய!”சத்தத்தையும் தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
13
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


முல்லை என்னம்மா பண்ண எங்க கதிரை … உன்மேல இவ்ளோ கோபமா இருக்கான் … நீ எப்படி அவனை மதிக்காம போகலாம் … ஆத்தீ இந்த ஹரிஷ் எப்போ இங்க வந்தான் … என்ன பண்ண போறானோ … போறவன் போய் தொலைய வேண்டியது தான … வந்துட்டான் பிள்ளைய குடுன்னு
🤩🤩🤩 நன்றிகள் பல சிஸ்
மகளை பெற்றவர்களாக அவர்களின் நிலைப்பாடு சரி தான்.
அவர்கள் காலத்திற்கு பிறகு அவளுக்கு நிலையான பாதுகாப்பு வேண்டுமே.
இப்பொழுதும் அவர்கள் உடன் இருந்தாலும் கூட, அவளது உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்து கொள்ள ஒரு துணை அவசியம் அல்லவா!
குழப்ப மனநிலையில் தனது மனதை இலகுவாக்க எண்ணி அவள் செய்த செயல் தவறாய் ஆகிவிட்டது.
கதிரின் உரிமையான கோபம் 😍
அவனோட கோபமும் அழகு, காதலும் அதைவிட அழகு சிஸ்😍😍😍