
மெல்லினம் 33:
அவர்களை பின் தொடர்ந்து சென்றவன் அவர்கள் வீடு இருக்கும் ஏரியாவை மட்டும் கண்டு கொண்டு, திருப்பி விட்டான். அதற்கு மேல் சென்றால் சந்தேகம் வந்து விடுமோ? என நினைத்து திரும்பி விட்டான்.
அதோ, இதோ, என அவன் ஊருக்கு செல்லும் நாளும் வந்து விட்டிருந்தது. இதோ விமானநிலையத்தில் அமர்ந்து காத்து கொண்டிருக்கிறான். விஷாலிடம் மட்டுமே அவனின் பயணத்தை தெரிவித்து இருந்தான்.
ஏனோ, அவனின் மனம் முல்லையை நினைத்து நெருடலாக இருக்க, அவளை பிரிவதால் வந்த நெருடல் என நினைத்தவன் ‘இன்னும் ஒரு வருடம் மட்டுமே’ என தன்னை தானே சமாதானப்படுத்தி கொண்டான்.
ஆனால் அந்த நெருடல் அவளை பிரிவதற்காக இல்லை, மொத்தமாக இழப்பதற்காக ஏற்பட்டது, என அவனிற்கு அப்போது புரியவில்லை.
விமானம் ஏறும் வரையிலும், இனம் புரியாத தவிப்பு அவனிடம் இருந்து கொண்டே இருந்தது.
ஆனால் கதிர் நினைத்ததற்கு எதிர்ப்பதமாக அனைத்தும் அந்த வருடத்தில் நடந்து முடிந்து விட்டிருந்தன.
முல்லை-ஹரிஷ் திருமணம் உட்பட.
கல்லூரியின் கடைசி வருடத்தில் நடந்த கல்சுரல் நிகழ்ச்சியில் தான், ஹரிஷ் முல்லையை சந்தித்தான். அவன் அவளிற்கு இரண்டு வருடம் மூத்தவன் அதே கல்லூரியில் பயின்று இரண்டு வருடம் முன்பு வெளியேறி இருந்தவன், கேம்பஸில் செலக்ட் ஆகி நல்ல வேலையிலயும் இருந்தான்.
அதுவும் அவள் கல்லூரியில் நடந்த, கல்சுரல் ப்ரோக்ராமில் கலந்து கொண்டு அவள் ஆடிய நடனம், அனைவரிடமும் பேசு பொருளாக மாறியிருக்க அதன் பொருட்டு முல்லையை சந்தித்தவன், அவளின் அழகில், காதலில் மயங்கி ஒரே வாரத்தில் தனது காதலையும் தெரிவித்து இருந்தான்.
முதலில் முல்லை மறுத்து விட, விடாது அவளை பின்தொடர்ந்து அவன் காதலை கூற, அப்போதும் அவள் மறுத்ததில் மூன்று மாதங்கள் அவளை தொந்தரவு செய்யாது, பின்தொடராது தள்ளி நின்று கண்ணியம் காத்தவன், அடுத்த இரண்டு மாதங்களில் நேரடியாக அவனின் பெற்றோரிடம் பேசி விட்டு இருந்தான்.
சத்யமூர்த்தியும், மங்கையும் முதலில் தயங்க, அவர்களையும் விடாது பின்தொடர்ந்து,, அவனின் பெற்றோரை அனுப்பி அவன் பெண் கேட்க, ஒரு கட்டத்தில் அவனின் நடவடிக்கைகள் பிடித்ததாலும், நல்ல வேலையில் அவன் இருந்ததும் அவர்களுக்கு திருப்தியாக இருக்க திருமணத்திற்கு சம்மதிவிட்டனர்.
அவர்கள் சம்மதித்த நொடி, ஹரிஷ் வீட்டு ஆட்கள் திருமணத்திற்கு அவசரப்படுத்தினர். இப்போது விட்டால், இனி இரண்டு வருடம் கழித்து தான் ஹரிஷிற்கு குருபலன் என அவர்கள் கூற, முல்லை வீட்டினரும் ஒத்து கொண்டனர்.
அதன்படி அவள் இறுதி செமஸ்டரில் கடைசி பரீட்சை முடிந்து, மூன்றாவது நாள் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்து.
ஆனால், இது எதுவும் தெரியாது கதிர் அங்கே இவளின் நினைவால் தினம், தினம் புதிதாக உயிர்த்து எழுந்து கொண்டிருந்தான்.
*************************
அன்று விடுமுறை தினம் ஆதலால், மதியம் ஒரு மணி போல் தனது போனில் எதையோ பார்த்து கொண்டிருந்த கதிருக்கு விஷாலிடம் இருந்து வீடியோ கால் வர,
“என்ன இவன் இப்போ கூப்பிடுறான். இப்போ அவனுக்கு நைட் டைம் ஆச்சே” என தனக்குள் பேசியவாறே, அட்டன் செய்தவன் திரையில் விஷாலின் முகம் தெரிந்த உடன்,
“மச்சான் எப்புடி டா இருக்க? வீட்டுல எல்லாம் நல்லா இருக்காங்களா?? வேலை எல்லாம் எப்புடி போகுது? ஏன் மொகம் ஒரு மாதிரி இருக்கு, என்னடா? அன்டைம்ல கால் பண்ணிருக்க ஏதும் பிரச்சனையா? மலர் விஷயமா? வீட்டுல எல்லாம் பேசியாச்சு ஓகேன்னு தான சொன்ன” என கதிர் கேட்டான்.
ஏனெனில் ஒரு வாரத்திற்கு முன்பு தான், விஷால் போன் செய்து அவன் அப்பாவிடம் அவனது விருப்பத்தை கூறி விட்டதாகவும், அவரும் சம்மதித்து சதீஷ் வீட்டில் பெண்ணும் கேட்டு விட, மலரின் வீட்டில் அவர்களும் சரி என்று கூறியிருந்தனர்.
ஆனால் பேச்சில் மட்டுமே உறுதி செய்திருந்தனர்.
இவன், இவ்வளவு கேள்வி கேட்டும் விஷாலிடம் இருந்து பதில் வராமல் போகவே, சற்றே நிதானித்தவன் அவன் முகம் பார்க்க, ஆரம்பத்தில் இருந்து அவன் மட்டுமே பேசுவது அப்போது தான் கதிருக்கு புரிந்தது.
அவனின் லேசாக கசங்கிய முகம் அவனிற்கு தவறாக பட, துடித்த இதயத்தை அடக்கி, “என்னடா??” என்க,
“மச்சான்.! மச்சான்.. நான் அன்னைக்கே சொன்னேன் இல்லடா? முல்லைகிட்ட உன்னோட விருப்பத்தை சொல்லிட்டு போன்னு, நீ தானடா அவ சின்ன பொண்ணு, காலேஜ் முடிக்கட்டும், படிக்குறப்போ தொந்தரவு பண்ண மாட்டேன். அது இதுன்னு பேசுன” என்றவனின் குரல் லேசாக பிறழ,
“உஃப்ப்ப இது தான் விஷயமா??ஆமாடா நான் தான் சொன்னேன் அதனால என்னடா இப்போ.? இதோ, இன்னும் ஆறே மாசம் வேலை முடிஞ்சு வந்துட்டா, போய் குடும்பத்தோட தூக்கிட்டு வந்துடுவேன் என் ஹனிஃடால” என அவன் சிரிப்புடன் கூற,
“பைத்தியக்காரா பைத்தியக்காரா…! இன்னும் இரண்டு நாளுல, அவ வேற ஒருத்தன் பொண்டாட்டி ஆக போறாடா…!
அவ உன்னோட ஹனிடால் இல்லை, வேற ஒருத்தனுக்கு முழுசா சொந்தமாக போற” என கோபத்தில் ஆரம்பித்தவன் இறுதியில் தழுதழுக்க,
திடீரென கதிர் கேட்ட விஷயம், அவனின் இதயத்தை வாள் கொண்டு அறுக்க,
“என்னடா…? என்ன? சொல்லுற?” என கேட்ட, கதிரின் குரல் நடுங்க.
“ஆமாடா மச்சா,ன் இரண்டு நாளுல முல்லைக்கு கல்யாணம்டா!
இப்போ மலர்கிட்ட பேசும் போது தான் சொன்னா, அவுங்க குடும்பம் எல்லாம் கல்யாணத்துக்கு கிளம்பிட்டு இருக்காங்களாம். அதுவும் காதல் கல்யாணமாம்டா, அவசர அவசரமா கல்யாணத்தை முடிவு பண்ணிருக்காங்க” என்றவனின் குரலில் எவ்வளவு அடக்க முயன்றும், தோற்று இறுதியில் தழுதழுத்து விட்டது.
கதிரின் காதலை கண்கூடாக கண்டு கொண்டவன் அவனல்லவா??
அவன் சொன்ன சேதியில் இமைக்க மறந்து அவனை பார்த்து கொண்டிருந்த கதிரின் விழிகள், இரண்டும் தன்னால் கண்ணீரை சுரக்க கன்னத்தில் வழிந்த கண்ணீரோடு,
“மச்சான்…இப்போ…நீ..நீ…சொல்” என பேச முடியாமல், அவன் தொண்டை அடைக்க, சிரமப்பட்டு “பொய்தானடா??” என உயிரை கண்களில் தேக்கி வைத்து கேட்டவனை கண்டு விஷாலிற்கு உயிரே போயிற்று.
அவன் அங்கே தனியாக இருக்கும் போது, இவ்விஷயத்தை கூறி இருக்க கூடாது என தன்னையே நொந்தவன், சட்டென சுதாரித்து “மச்சான்..! மச்சான் நீ நீ உடைஞ்சுடாதடா, நான் இருக்கேன் இப்பவே போய் பேசி கல்யாணத்தை நிறுத்துறேன். இல்லையின்னா, இல்லையின்னா! நா முல்லைகிட்ட பேசுறேன்டா” என நண்பனின் துயர் அவனை துடிக்க செய்ததில், தெளிவில்லாமல் அவன் பேசிட,
கசந்த முறுவல் ஒன்று வெளிப்பட்டது கதிரிடம்.
“என் மேல சத்தியம்! நீ இந்த விஷயத்தை பத்தி மூச்சு விட கூடாது” என,
“ஏன்டா??” என ஆதங்கம் விஷாலிடம் வெளிப்பட,
“ஏன்னா…! ஏன்னா? நீ தான மச்சான் சொன்ன, இது காதல் கல்யாணம்னு! அப்போ…! அப்போ என்..ஹனி…இல்லை, இல்லை அப்புடி சொல்ல கூடாது. முல்லையும் விரும்பியிருப்பாளேடா, இந்த கல்யாணம் நின்னா, இப்போ எனக்கு வலிக்கிற மாதிரி தான்டா அவளுக்கும் வலிக்கும். வேண்டாம்டா, வேண்டாம் முல்லை இப்புடி ஒரு வலியை அனுபவிக்க நான் விட மாட்டேன். தாங்க மாட்டாடா அவ…!
என் நிலைமை அவளுக்கு வர சத்தியமா நான் விட மாட்டேன். அவ விரும்பி பண்ணுற கல்யாணம். அது நிலைக்கனும்டா சந்தோஷமா இருக்கனும் டா அவ” என உள்ளே கதறி துடித்த காதல் கொண்ட இதயத்தின் கேவலை பொறுத்து கொண்டு அவனிடம் பேசி முடித்தவன்,
“மச்சான் எனக்கு ஒரு கால் வருதுடா நான் அப்பறம் கூப்பிடவா??” என,
“டேய்…டேய் என்னை அவாய்ட் பண்ணாதடா. என்கிட்ட இருந்து உன்னோட உணர்வுகளை மறைக்காதடா” என்க,
“இல்லை, இல்லைடா ஐயம் ஓகே. ஜஸ்ட் ஓன்சைட் லவ் அவ்வளவுதானே” என அவன் பேச, பேச, கண்ணீர் நிற்காமல் வழிய அதற்கு மேலும் கட்டுப்படுத்த முடியாதவன் “மச்சான் சாரிடா” என்ற வார்த்தைகளோடு அழைப்பை துண்டித்தவன்,
அடுத்த நொடி தான் ஆண்மகன் என்பதையும் மறந்து “ஓஓ..ஓஓஓ” என கதறி அழ ஆரம்பித்து விட்டான்.
காதல் கொண்ட இதயம் அவனை குற்றவளாக்கி துடிக்க, அதன் வலிமை தாளாது, அதன் துடிப்பை நிறுத்தி விடுவது போல் தன் நெஞ்சின் மீது கைவைத்து அழுத்தி பிடித்தவனின் கண்கள் கண்ணீரால் நிறைய, அவனின் உதடுகள் விடாது “ஹனிடால் ஹனிடால்” என முணுமுணுத்தது.
“ஹனி…ஹனிபா நீ….நீ எனக்கு இல்லையாடா? நீ எனக்கு இல்லையா டி! நான்..! நான்.. தப்பு பண்ணிட்டேனோ, என் காதலை உன்கிட்ட நான் சொல்லிருக்கனுமோ.
தப்பு தான், நான் சொல்லாம விட்டது இப்போ என் உசுரை மொத்தமா கருகிருச்சே.
முடியலை டி, சத்தியமா முடியலை என்னாலே இந்த வலியை தாங்க முடியலை. ஏன் முல்லை? ஏன்? ஏன் நீ? என்னை விட்டு போற, நீ என்னோட முல்லை இல்லையா ஐயோ! நீ இன்னொருத்தனுக்கு சொந்தமா. என்னால தாங்க முடியாது, முல்லை தாங்க முடியாது. ஏன் முல்லை? என்ன விட்டு போற என்கிட்ட வந்துடு டி! வந்துடு முல்லை” என அவன் கத்தி கதறி அழது துடிக்க, அவனின் இதயமும் அவனிற்கு நிகராய் வலியை அனுபவித்தது.
என்ன? அழுது என்ன பயன்? அவள் இங்கே கதறி துடித்து கொண்டிருந்த நாட்களில், அங்கே முல்லைக்கு திருமணம் முடிந்து விட்டிருந்தது.
அதுவரை விஷாலிடம் மெசேஜிலாவது பேசி கொண்டிருந்த கதிர், முல்லையின் திருமணம் முடிந்த விசயத்தை கேள்விபட்டதில் இருந்து, முற்றிலுமாக அவனை தவிர்த்து விட்டான்.
எந்த வகையிலும் விஷால் அவனை தொடர்பு கொள்ள முடியாத வகையால் அனைத்திலும் அவனை ப்ளாக்(Block)செய்து விட்டிருந்தான்.
முற்று முழுதாக தனது ஜீவனை தொலைத்தவன் நடைபிணமாய் வாழ்க்கைய வாழ ஆரம்பித்து இருந்தான்.
ஆறு மாதத்தில் முடிந்த வேலையை, மேலும் இரண்டு வருடங்கள் நீட்டி அங்கயே இருந்து கொண்டான்.
வீட்டினரிடம் கூட பேசுவதை தவிர்க்க ஆரம்பித்தான். முல்லையின் ஞாபகமாய் அவன் எடுத்து வந்திருந்த கீ-செயினை பார்க்க, அதில் எழுதப்பட்டிருந்த இவனின் பெயர், இவனை பார்த்து கை கட்டி, கொக்கரிக்க, முட்டிய அழுகையே முயன்று இறுக்கியவன்,
‘இனி இதனை பார்க்கும் உரிமை கூட அவனிற்கு இல்லை, என்பதை அவன் உணர்ந்த நொடி’ அதனை சூட்கேஸில் போட்டு இறுக மூடி கொண்டான். அவனின் மனதினை போல்.
கதிரின் இந்த திடீர் மாற்றம் வீட்டினரிடையே பயத்தை ஏற்படுத்த, என்ன முயன்றும் அவனிடம் இருந்து விஷயத்தை அவர்களால் வாங்க முடியவில்லை.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
37
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


எனக்கே மூச்சு விட முடியல பா. கஷ்டமா இருக்கு. நீ அழாத கதிர். எப்படியோ முல்லை உன்கிட்ட வந்துட்டாளே