
மெல்லினம் 32
நாட்களையும், வாரங்களையும், மாதங்களையும் தேன்முல்லையின் நினைவுகளில் கடத்தி, வெற்றிகரமாக ஒரு வருடத்தை கடந்து விட்டவன், இதோ இப்போது, திருவிழாவிற்காக ஆளுக்கு முன்னே கிளம்பி சென்று கொண்டிருக்கிறான் கதிர்.
ஊர் சென்று சேர்ந்தவன், வீட்டினுள் பையை, கிடாசி விட்டு வேகவேகமாக கோவிலுக்குள் செல்ல, அங்கே இவனின் நண்பர்கள் குழு இருக்க ஐக்கியமாகி கொண்டான்.
இவனின் வரவை அறிந்து விஷாலும் வந்து சேர ஆட்டம் ஆரம்பமானது.
திருவிழாவின் முதல் நாள், இரண்டாம் நாள் தான், கடந்து சென்றதே தவிர, அவன் எதிர்பார்த்து காத்திருந்த முல்லை மட்டும் வரவே இல்லை.
இன்று வருவாள், நாளை வருவாள், என அவன் எதிர்பார்த்தே ஏமாற்றமடைந்தது தான், மிச்சமே தவிர திருவிழா முடியும் வரையிலும் கூட, அவளை காண முடியவில்லை.
பிறகு தான் விஷயமே தெரிந்தது, அவள் ஊருக்கே வரவில்லை என்பது. அவளை எதிர்பார்த்து வந்திருந்தவனுக்கு, ஏமாற்றம் நெஞ்சை அடைக்க, கடைசி திருவிழா முடிந்தும் முடியாமலும், ஊருக்கு திரும்பி விட்டவனிற்கு இந்த தடவை அவளின் நினைவுகளாக கூட, எதுவும் கிடைக்கவில்லை.
இது அதோடு மட்டும் முடியாது, அடுத்து வந்த மூன்று வருட திருவிழாக்களிலும் தொடர்ந்தது. இப்போது அவன் கடைசி செமஸ்டர் எழுதி முடித்து, காம்பஸில் செலக்ட் ஆகி அப்பாய்ன்ட்மென்ட் லெட்டருக்காக காத்து கொண்டிருக்கிறான்.
வருடங்கள் கடந்தாலும், முல்லையின் நினைவுகள் நாளுக்கு நாள், அவன் மனதில் ஏறி கொண்டே தான் சென்றது. அவள் மேல் இருப்பது வெறும் ஈர்ப்பல்ல, என எப்போதோ அவன் உணர்ந்து கொண்டான்.
விஷாலிடம் இருந்து அவளை பற்றிய எந்த தகவல்களும் கிடைக்காமல் போக, வெறும் இவளின் ஞாபகங்களை வைத்து மட்டும், நாளை கடத்தி கொண்டிருந்தவனுக்கு பித்து பிடிக்காத நிலை தான்.
அவனும், முயன்ற வழியில் எல்லாம் தேடி கொண்டு தான் இருக்கின்றான். ஆனால் அவளை பற்றி ஒரு துணுக்கு கூட கிடைக்கவில்லை.
யோசனையில் இருந்தவனை அவனின் அலைப்பேசி ஒலி கலைக்க, எடுத்து பார்த்தால் அழைத்தது சதீஷ். சட்டென பரபரப்பானவன் வேகவேகமாக அலைப்பேசியை ஏற்றான்.
நண்பர்களின் சில பல குசால விசாரிப்புகளுக்கு பின், சதீஷ் அவனிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதை கூறி திருமணத்திற்கு அழைப்பு விடுத்தான்.
சதீஷ் ஒரு வருடத்திற்கு முன்பே படிப்பை முடித்து விட்டு, திண்டுகல்லில் உள்ள வங்கியில் பணிபுரிந்து கொண்டு இருக்கிறான்.
நண்பனின் திருமண செய்தி, தித்தித்ததை விட, முல்லை இத்திருமணத்திற்கு வருவாளே, என்ற செய்தி அதிகமாக தித்தித்தது அவனிற்கு.
விஷாலிற்கு அழைத்து, தான் திருமணத்திற்கு வருவதாக கூற, அவனும் வருவதாக கூறினான்.
ஆனால் சதீஷின் திருமணம், அவர்களின் குலதெய்வ கோயிலான சங்கரன்கோவிலில் வைத்திருந்தனர்.
அங்கேயே ஆட்கள் தங்குவதற்கும் கோயிலின் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சதீஷின் திருமண நாளைக்கு முதல் நாள் இரவே கிளம்பி விட்டான் கதிர், வழியில் விஷாலும் பிற நண்பர்களும் இணைந்து கொண்டனர்.
நீண்ட நாள் கழித்து, பார்த்த நண்பர்களின் பேச்சில் கலந்து கொள்ளாமல், அவன் சிந்தை முழுவதும் முல்லையை பற்றியே இருக்க,அதனால் அவன் முகம் பூரித்து கிடந்தது.
ஒருவழியாக மண்டபத்தை அடைத்தவர்களை, அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தஃ அறைக்கு சென்று தயாராகி வருமாறு கூற அதனை மறுத்து சதீஷுடனே தங்கி கொண்டான் கதிர். அவனிற்கு முல்லையை பார்க்கும் நேரம் நீண்டு கொண்டே செல்வதில் விருப்பமில்லை.
கதிர் இருப்பதால், விஷாலும் அங்கேயே இருக்க, அவர்கள் இருவரையும் தவிர்த்து மற்றவர்கள் கிளம்பி சென்று விட்டனர்.
இரவு வேளை, நிச்சயதார்த்தம் நடைபெற மாப்பிள்ளையை விட கதிர் மிகவும் ஆர்வமாக இருந்தான். நீண்ட வருடங்கள் கழித்து அவளை பார்க்க போவதால், சற்றே தயாராக மெனக்கெட்டான்.
சபையில் மாப்பிள்ளைக்கு வேலை இல்லாததால், அங்கே ஒரு ஓரமாக சதீஷ் தனது நட்பு வட்டங்களுடன் அமர்ந்து விட, பெண்ணை அழைத்து வருவதற்காக காத்திருந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்த அந்த நேரமும் வந்து விட, கதிரின் இதயம் படபடத்து முல்லையின் வரவை உறுதி செய்தது.
அவன் நினைத்து போலவே மணப்பெண் தோழியாக, காபி ப்ரவுன் கலரில், பச்சை பார்டர் வைத்த பட்டு புடவையில், தலையில் அளவாக மல்லி பூக்களை வைத்து, அதனை ஒரு தோள்களின் வழியே முன்னால் விட்டு நின்றிருந்தவளை கண்டவனின் இதயம், மீண்டும் ஒருமுறை அவள் காலடியில் சரணடைந்திருந்தது.
கிட்டதட்ட நான்கு வருடங்கள் கழித்து பார்க்கிறான். அவளை கண்ட மகிழ்ச்சியில், ஆனந்த கண்ணீர் துளிகள் அவனது இமையோரம் துளிர்ந்து விட்டிருந்தது.
குழந்தையில் இருந்து, குமரி பருவத்தில் அடி எடுத்து வைத்திருந்தவளின் அழகு, அவனை மொத்தமாக கொள்ளையிட்டது.
அப்பொழுதே, அவளிடம் சென்று பேச பரபரத்த உள்ளத்தை கட்டுப்படுத்தியவன், அவளிடம் பேசுவதற்கான தனிமையை தேட அது அன்று இரவு வரையிலும் அவனிற்கு கிடைக்கவில்லை.
சரி காலையில் பார்த்து கொள்ளலாம் என சற்றே அவன் அசட்டையாகி விட, அடுத்த நாள் விடிந்ததும் திருமண பரபரப்பில் அவளை சரியாக கூட அவனால் காண முடியவில்லை.
எல்லா சடங்கு சம்பிரதாயங்களும் முடித்து சற்றே ஆசுவாசான நிலை ஏற்பட, முல்லையிடம் சென்று பேச எண்ணியிருந்தவனிற்கு இடியாக அவனின் அப்பத்தாவை, மதுரையில் உள்ள மருத்துவமனையில் சீரியஸாகி அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வர, மொத்தமாக இடிந்து விட்டான்.
ஏனெனில் ஒரு வருடத்திற்கு முன்பு தான் அவனின் அப்புச்சி இறந்திருந்தார்.
அடுத்த நொடி எதையும் யோசிக்காது, கிளம்பி விட்டவன் மண்டபத்தை விட்டு வெளியேறும் நொடி, முல்லையை காண பார்வையை சுழற்றி விட்டான்.
அவளை ஒரு முறை பார்த்து விடமாட்டோமா? என ஏங்கியவனின் தவிப்பு, கடவுளிற்கு எட்டியதோ அங்கே மண்டபத்தின் வெளிகேட்டின் அருகே முல்லை அவளது தந்தையுடன் நின்றிருந்தாள்.
அவளை கண்டவனிற்கு நிம்மதி உண்டாக, அவளை கண்களால் நிரப்பியவாறு சென்றவன், அவர்களை கடக்கும் போது மட்டும் நடையை மெதுவாக்கி எட்டு வைத்து நடக்க,
“பாப்பாவ கோயம்புத்தூர்ல **********காலேஜ்ல தான் சேர்த்திருக்கோம். இப்போ தான் மொத வருஷம் படிக்கிற” என கோவையில் உள்ள பிரபல கல்லூரியின் பெயரை கூறிய அவளது தந்தை எதிரில் இருப்பவரிடம் பேச,
கேட்ட விஷயம் இவனை ஆனந்தத்தில் திக்குமுக்காட வைத்தது. இனி எப்போது அவளை காணுவானோ, என தவிப்பில் இருந்தவனிற்கு அவளும் கோயம்புத்தூரில் தான் இருக்கிறாள் என தெரிந்து விட்டதே.
ஆக அருகிலே இருந்திருக்கிறாள்.
அதற்குள் அடுத்த போன் ராகேஷிடம் இருந்து வந்து விட, விரைந்து கிளம்பி விட்டான். அவள் அருகிலேயே இருக்கிறாள் என்ற நம்பிக்கையில் கிளம்பி விட்டான்.
வழியில் விஷாலிற்கு அழைத்து விவரத்தை கூற,
“சரிடா மச்சான் பாத்து போ, அப்பறம் முல்லைக்கிட்ட பேசனும்னு சொன்னியேடா??” என அவன் இழுக்க,
“ஆமாடா ஆனா வெளிகேட் கிட்ட பாத்தேன்டா, பேச தான் முடியல. அவ கோயம்புத்தூர் *******காலேஜ்ல தான் படிக்கிறாளாம்டா. என் பக்கத்துலயே தான் இருந்துருக்கா, அது தெரியாம நான் தவிச்சிட்டு இருந்துருக்கேன். விடுடா எங்க போயிட போறா, இங்க என் பக்கத்துலயே தான இருக்கா, படிச்சு முடிக்கட்டும் டா, அப்பறம் என் காதலை சொல்லிடுறேன். இன்னும் இரண்டு வருஷத்துல என்ன நடந்துட போகுது” என சற்றே அலட்சியமாக கூற,
ஆனால் அவனின் அலட்சியத்தாலும், கவனக்குறைவாலும், முல்லையை இழந்து நிற்பான் என அவன் அறியவில்லை.
சரியான நேரத்தில், சொல்லப்படாத காதல், செல்லாத காசு போல, என அவன் உணரும் காலமும் விரைவில் வரும்.
மருத்தவமனைக்கு சென்றவன் கோதை இருந்த வார்டு நோக்கி செல்ல, மொத்த குடும்பமும் அங்கே குழுமி இருந்தது.
உயிருக்கு ஆபத்து இல்லை இருந்தாலும், கவனமாக பார்த்து கொள்ள வேண்டும், என மருத்துவர்கள் கூறியிருக்க சற்றே ஆசுவாசப்பட்டனர் குடும்பத்தினர்.
ஒருவாரம் மருத்துவமனை வாசம் பின் டிஸ்சார்ஜ் செய்து தங்களுடன் கோதையை அழைத்து வந்து விட்டார் கோபலசுவாமி. அங்கே கிராமத்தில் தனியாக இருக்க அவர் அனுமதிக்கவில்லை.
கதிர் இயல்பாக கிட்டதட்ட ஒரு மாத காலம் ஆனது. இதனிடையே அவன் வேலைக்கும் சேர்ந்திருந்தான். இந்த ஒரு மாதமும் முல்லையில் நினைவு அவனின் மனதில் உறுத்தி கொண்டு தான் இருந்தது.
பின் அவனின் வேலை, கோதையை பார்த்து கொள்வது என அவனின் நேரம் பறந்தது.
நேரமும், காலமும், அசுர வேகத்தில் சுழல ஒரு வருடம் முடிந்திருந்தது. இந்த ஒரு வருடத்தில் கதிர் அவனின் கடினமான உழைப்பினால் கம்பெனிகளில் நல்ல பெயர் பெற்று அடுத்து ஒரு ஆன்-சைட் ப்ராஜெக்ட்டிற்க்கு செல்லும் அளவிற்கு தேர்வாகி இருந்தான்.
இது ஒரு நல்ல வாய்ப்பு கதிருக்கு. அவனின் திறமையை வெளிப்படுத்த, கிடைத்த துருப்பு சீட்டு இந்த ஆன்சைட். இதனை இழக்க அவனிற்கு மனமே வரவில்லை.
அதே சமயம் முல்லையிடம் அவனது காதலை சொல்லாமல் செல்லவும் அவனிற்கு விருப்பமில்லை.
என்ன செய்வது? என்ன செய்வது? என முல்லைக்கும், வேலைக்கும் இடையே திண்டாடியவன் முடிவாக வேலையை தேர்வு செய்தான்.
ஒருவருடம் மட்டுமே அவனிற்கு அங்கு வேலை. இந்த இடைப்பட்ட ஒரு வருடத்தில் என்ன நடந்து விட போகிறது, என அலட்சியமாக நினைத்தவன் இறுதியில் ஆன்-சைட் செல்வது என தீர்மானித்தான்.
அங்கே வேலை முடித்து வந்த உடனே, முல்லையை பெண் கேட்டு விட வேண்டும். என உறுதி எடுத்தவன் பயணத்திற்கு தயரானான்.
ஊருக்கு செல்லும் முன், முல்லையை ஒரு தடவை காண அவன் உள்ளம் ஏங்க, அன்று வார நாள் ஆதலால், சட்டென கிளம்பி அவள் கல்லூரிக்கு சென்று விட்டான்.
வந்துவிட்டவனிற்கு முல்லை இன்று வந்திருக்கிறாளா? என சந்தேகம், அப்படியே வந்திருந்தாலும், கல்லூரி வாகனத்தில் சென்றுவிட்டாள் என்ன செய்வது? என ஏகப்பட்ட சந்தேகங்களும் குழப்பங்களும் அவனிற்கு வர நம்பிக்கையில்லாமல் தான் அங்கே நின்றிருந்தான்.
ஆனால் அவனிற்கு அன்று நல்ல நேரமோ, என்னவோ முல்லையை அழைத்து செல்ல அவளின் தந்தை வந்திருந்தார்.
சத்யமூர்த்தி கல்லூரியின் உள்ளே செல்வதை கண்டவனிற்கு, அதுவரை இருந்த சந்தேகங்கள் எல்லாம் தெறித்து ஓடிவிட்டன.
சில மணி நேரங்கள் இவனை காக்க வைத்துவிட்டே அவர்கள் வந்தனர். அன்று பார்த்ததை விட முல்லை நன்றாகவே மெருகேறியிருந்தாள்.
இருள் பிரியாத நிலா வெளிச்சத்தில், மொட்டாய் இருந்தவளை கண்டே மயங்கி போனவன், இன்று அந்த மொட்டு மலர்ந்து அழகிய முல்லை பூவாய் வாசம் எழுப்பி, மாறி நின்றவளை கண்டவன் இன்னமுமே அவள் மேல் பித்தாகி போனான்.
அவர்கள் அறியாது இடைவெளி விட்டு அவர்களை அவன் பின்தொடர்ந்து சென்றான்.
வாய் மூடாது அவள் தந்தையிடம் எதுவோ பேசி கொண்டு வந்தவளை, கண்டவனிற்கு எப்போது இது போல் அவள் அவன் பின்னே அமர்ந்து, முத்து முத்தாய் அவனிடம் பேசுவாள் என்று ஏக்கம் பிறந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
34
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சூப்பர் கதிர். வருஷக்கணக்கா காதல் பண்றது எல்லாம் உன்னால தான் முடியும்.