Loading

மெல்லினம் 23:

கதிருக்கும் முல்லைக்கும் திருமணம் நடந்ததில் இருந்து, ஒரு வித மன அழுத்தத்தில் தான் சுற்றி கொண்டிருந்தனர் ஹரிஷீம் சுரபியும்.

எதற்கு எடுத்தாலும் கோபம், ஆத்திரம், என தங்களையே வருத்தி கொண்டு நிம்மதியில்லா வாழ்வினை வாழ்ந்து கொண்டிருந்தனர்.

ஹரிஷ், அன்று அத்வியினை மழை நாட்களில் சென்று பார்த்து பிரச்சனை ஆனதில் இருந்து, சீக்கிரம் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என சுரபி தீர்மானித்திருந்தாள்.

ஆனால் அவள் மட்டும் தீர்மானித்தாள் போதுமா என்ன?

ஒவ்வொரு மாதமும் குழந்தையினை எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்ச,

அதுவே கோபமாக மாறி, அதிகப்படியான மன உளைச்சலில் தள்ளியிருக்க, அதில் கதிரின் திருமணமும் சேர்ந்து கொண்டதில் இன்னமுமே பாதிக்கப்பட்டாள்.

சரி, ஹாஸ்பிட்டல் சென்று ஒரு செக்கப் செய்து விடுவோம், என தீர்மானித்து ஹரிஷை அவள் அழைக்க,

“என்ன, இப்போ குழந்தைக்கு அவசரம் வரும் போது வரட்டுமே” என அவன் அசட்டையாக அதில் கோபம் அடைந்தவள்,

“ஓஹோ,அப்போ அதுவரைக்கும் சார் என்ன பண்ணுவீங்களாம்.  உன் மொத பொண்டாட்டி பிள்ளைய போய் கொஞ்சிட்டு வருவியோ??” என அவள் நிதானம் இழந்து கத்த, என ஒரு யுத்தமே நடந்து முடிந்தது இருவரிடம்.

பின் ஹரிஷ், ஒரு மனதாக இறங்கி வந்து மருத்துவமனை செல்ல ஒத்து கொள்ள, மகப்பேறு மருத்துவரை சென்று அணுகினர்.

இருவரையும் புஃல் பாடி செக்கப் செய்து முடித்த மருத்தவர் ,கேட்ட ஒரு கேள்வி “இதுக்கு முன்னாடி ஏதும் நீங்க கன்சீவா இருந்து அபார்ட் ஆகி இருக்கா??” என்க,

பதில் சொல்ல தடுமாறி “ஆமா டாக்டர்” என்றாள் சுரபி.

“ஓஹோ,எப்போ அபார்ட் ஆச்சு. கரு தானே கலைச்சிருச்சா இல்லை??” என் அவர் இழுத்தி நிறுத்த,

“இல்லை, நாங்க தான் அபார்ஷன் பண்ணிட்டோம். ரெண்டு தடவை, அப்போதைக்கு பேபி வேண்டாம்னு” என அவள் தயங்கி நிறுத்த,

“எப்போ பண்ணிங்க??”

“ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஒண்ணும் அதுக்கப்பறம் எட்டு மாசம் கழிச்சு ஒண்ணும்” என்றவளிற்கு உள்ளுக்குள் சற்று பயம் வர,

ஹரிஷோ இதை எல்லாம் எதற்கு கேட்கிறார் என்ற எரிச்சலில் இருந்தான்.

“கடவுளா கொடுத்தப்போ வேண்டாம்னு சொல்லிட்டு இப்போ ஏங்குறீங்க” என மருத்துவர் கூற,

“டாக்டர் ஏதும் பிரச்சனையா ப்ரக்னன்ட் ஆக முடியாதா??” என சுரபி படபடக்க ஹரிஷூக்கும் சற்றே அந்த பயம் வந்தது.

“ரொம்ப பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை.‌இரண்டு தடவை அபார்ஷன் ஆனதால உங்க உடம்பு கொஞ்சம் பலவீனமா ஆகியிருக்கு. அதை நீங்க அப்பவே பாத்து கவனிக்காம விட்டதால இப்போ கரு உண்டாக தாமதம் ஆகுது.

அதுவும் இல்லாம ரெண்டு பேருமே ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸ ரெஸ்ட்டலஸ இருக்கீங்க. மொதல்ல மனசை அமைதியா நிம்மதியா வச்சுக்கோங்க,

யோகா, உடற்பயிற்சின்னு செஞ்சு மனசை அமைதிப்படுத்தி உடம்பையும் ஆரோக்யபடுத்துங்க. அப்பறம் கொஞ்சம் ரிலாக்ஸா ஏதாவது ஹில்ஸ் ஸ்டேஷன் ஏரியாவுக்கு ஒரு டிரிப் போய்ட்டு வாங்க,

உங்களை ஏது ரொம்ப டிப்ரஸன்ஷல தள்ளி விடுதோ, அத கொஞ்சம் அவாய்ட் பண்ணுங்க போதும். மத்தபடி நா கொடுக்கிற மெடிசன்ஸ் பாலோ பண்ணுங்க ரொம்ப ப்ரஷ்ஷர் ஏத்திக்காதீங்க” என்ற டாக்டர் அறிவுரை கூற‌ சரி என்று கிளம்பி விட்டனர்.

ஹரிஷ்ஷிற்கும் எங்காவது சென்று வந்தால் பரவாயில்லை என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. கொஞ்ச நாள்களாகவே இருவரும் தங்கள் இயல்பில் இருந்து மாறி தானே இருக்கின்றனர்.

இருவருக்கும்‌ மனமாற்றம் தேவைப்பட‌, சரியென‌ ஏற்காட்டிற்கு, டிக்கெட் புக் செய்து சுரபியையும் அழைத்து கொண்டு வந்து விட்டான்.

ஆனால் வந்த இடத்தில் கதிரையும் முல்லையையும் கண்டு இன்னமும் அவர்களின் டிப்ரஷன் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

அதுவும் சற்று முன் அவர்கள் கண்ட காட்சி!!!!

கதிர் மற்றும் முல்லையின் மகிழ்ச்சியையும் சிரிப்பினையும் காண காண பற்றி கொண்டு வந்தது இருவருக்கும்.

என்ன மறுத்தும், அவர்களின் முந்தைய திருமண வாழ்க்கை நினைவு வருவதை தடுக்க முடியவில்லை இருவராலும்.

அதுவும் முல்லை கதிரை அணைத்து நின்றதை பார்த்த இருவருக்கும், ஏன் என்றே தெரியாத கோபமும், ஆத்திரமும் எழ அதன் தாக்கத்தில் குருட்டு தைரியத்தில் இருவரின் வழியையும் மறைத்து நின்று விட்டனர்.

முல்லை இடை மீது உரிமையாக படிந்த கதிரின் கரங்களை இப்போது நினைக்கையிலும் கொலைவெறி எழுந்தது ஹரிஷ்ஷிற்கு.

தன்னை அவமானப்படுத்தி விட்டு, சென்றவனை கண்ட சுரபியின் மனம் கொதிக்க, அவனின் மகிழ்ச்சி நிறைந்த முகம் மேலும் மேலும் ஆத்திரத்தை கிளப்பியதில், என்ன செய்தாவது அவனின் மகிழ்ச்சியினை அழித்து விட வேண்டும் என்ற விபரீதமான எண்ணம் எழுந்திட,

“போலாம் வாங்க ஹரிஷ்” என அவனை இழுத்து கொண்டு அவர்களின் பின் சென்றவள், அவர்கள் இருவரின் காரினையும் பின்தொடர்ந்து சென்றனர்.

அவர்களின் நல்ல நேரமோ, இல்லை கதிரின்‌ கெட்ட நேரமோ அவர்களும் கதிர் இருந்த அதே ரெஸ்டாரண்டில் தான், இன்று காலை ரூம் புக் செய்து வந்திருந்தனர்.

அதனை கண்ட சுரபிக்கு உள்ளுர அல்ப சந்தோஷம்!!!

இங்கே, கோபத்தில் இறுகிய முகத்துடன் முல்லையின் கையினை, பிடித்த பிடியினை விடாது ரூம் வரை அழைத்து வந்த கதிரினை கண்ட முல்லைக்கு, அவனின் சிவந்த முகத்தினை‌ கண்டு சற்றே பயம் எழுந்தது.

ரூம்மின் உள் நுழைந்ததும், நேராக கட்டிலில் சென்றமர்ந்தவன், கைகளால் தலையினை அழுந்த கோதியவன் முழுங்காலில் கையினை ஊன்றி அமர்ந்து விட்டான்.

கதிரின் மனதில் கோபம் எரிமலையென பொங்கி கொண்டிருந்தது. சுரபி ஹரிஷினை சுத்தமாக அவன் எதிர்பார்க்கவே இல்லை.

அதிலும் ஹரிஷின் பார்வை முல்லையை தழுவிய விதத்தை நினைத்தால், இப்போதும் அவனின் கழுத்து நரம்புகள் கோபத்தில் புடைத்தன.

“எவ்வளவு தைரியம் இருந்தா என் முல்லைய தொட வருவா ராஸ்கல்…நாதா….” என கோபத்தில் முனங்கியவனுக்கு ஆத்திரத்தில் சுரபியினை‌ திட்ட வார்த்தைகள் தாறுமாறாக வந்து விழ, முயன்று தன்னை கட்டுக்குள் அடக்கியவனுக்கு,

கோபம்!! கோபம்!! கோபம் மட்டுமே உள்ளமெங்கும்.

சிறிது நேரம் தன் கோபம் வடிய அமைதியாக அமர்ந்திருந்தவனிற்கு சட்டென முல்லை மற்றும் அத்வியின் ஞாபகம் வர,

நிமிர்ந்து பார்க்க அறையினுள் யாரும் இல்லை. எங்கே என யோசித்தவனின் செவிகளில் மெல்லிய சத்தம் கேட்க காதினை கூர்மையாக்கி அவன் கேட்க, அத்வியின் மெல்லிய அழுகை சத்தம் அவன் காதில் வந்தடைய, பதறியவன் சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க பால்கனியில் சென்று நிறைவடைந்தது.

முல்லை அத்வியை இடுப்பில் தூக்கி வைத்திருக்க அவனின் கண்கள் முழுக்க கண்ணீரில் நனைத்திருக்க,

கருவிழிகள் இரண்டும் நீரில் மிதக்க, இரண்டு கன்னங்களிலும் அழுகை அருவியாய் வழிந்து கொண்டே, “அங்கி….அம்மா….அங்கி” என தேம்பியபடியே முல்லையிடம் கதிரை கேட்டு உள் நோக்கி கை காட்டி கொண்டிருக்க, பார்த்த கதிருக்கு துடித்து விட்டது.

விரைந்து அவளிடம் சென்று அத்வியை தூக்கி கொண்டவன் “அதி கண்ணா செல்லம்! அங்கிடா! வந்துட்டேன். அழதடா குட்டி” என அத்வியின் கண்களை துடைத்து விட்டு கதிர் அவனை கெஞ்ச,

“ம்ம்ம், அங்கி அதி உங்களை பாக்கணும் சொன்னா அம்மா அடிச்சி, ம்ம்ம்ம்…பேட் மம்மி, வலிக்குது” என கதிரின் கழுத்தை கட்டி கொண்டு அத்வி இன்னும் விசும்பியவாறே எல்லாவற்றையும் கூறிட,

ஏற்கனவே அத்வியின் அழுகையில் ‘அப்படி என்ன இருவரையும் மறந்த யோசனை எனக்கு அந்த பரதேசிகளை பற்றி’ என குற்றவுணர்வில் இருந்தவனுக்கு, அத்வியின் பேச்சும் அழுகையும் மேலும் குற்றவுணர்வை தூண்டி கோபத்தை உண்டாக்க,

முல்லையை கோபத்துடன்‌ முறைத்தவன் “அடிச்சியா அவன???” என இறுகிய குரலில் கேட்க,

அவனின் குரலில் உள்ளம் சிறுது நடுங்கினாலும் “இல்லை, அது…வந்து…உங்ககிட்ட போகணும்னு. அதான்‌ கோபத்துல” என்றவளை இடைமறித்தவன்,

“அறிவு இருக்கா டி உனக்கு? புத்தி கித்தி கெட்டு போச்சா! முட்டாள்!முட்டாள்! இப்புடியா டி பச்ச புள்ளைய அடிப்பா…”???என அவன் கோபத்தில் கத்திட,

அவனின் கோபத்தில் கண்கள் கலங்கி விட்டது முல்லைக்கு. இதற்கு முன்பும் அவளிடம் கோபப்பட்டிருக்கிறான் தான். ஆனால் அது எல்லாம் திருமணத்திற்கு முன்பு, அவனின்‌ மனைவியான பின் அவளிடம் அவன் காட்டிய முதல் கோபம். கண்கள் இரண்டும் உடைப்பெடுக்க, இருந்தும் சமாளித்தவள் அவனிற்கு புரிய வைக்கும் நோக்குடன்,

“இல்லைங்க, உங்க கிட்ட வரணும்னு ரொம்ப அடம் பண்ணான்.‌ கொஞ்சம் அதட்டுனேன், லேசாதாங்க அடிச்சேன்” என்றவளை உறுத்து விழித்தவன்,

“எவ்வளவு தைரியம் உனக்கு இதை என்கிட்ட சொல்லுறதுக்கு? என்கிட்ட வரணும்னு சொன்னா அனுப்பி விடாமா அடிப்பியா நீ??? என் பிள்ளை என்னை தேடியிருக்கான் அது பிடிக்கலையா உனக்கு? சொல்லு, சொல்லு டி. அவன் என் பிள்ளை தான???என்கிட்ட தான வரணும்னு சொன்னா, அதுக்கு அவனை அடிப்பியா??” என அப்போதும் கண்முன் தெரியாத கோபத்தில் அவன் எகிற,

“இல்லைங்க, நீங்க ஏதோ யோசனையில இருந்தீங்க டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு” என அப்போதும் அவள் கரைகடந்த பொறுமையை இழுத்து வைத்து பேச,

“என்ன, என்ன? நான் யோசனையில இருந்து என் பிள்ளை என்கிட்ட வர கூடாதா! நீ அனுப்ப மாட்டியா?எவ்வளவு கொழுப்பு உனக்கு? இதுல பிள்ளைய லேசாதான் அடிச்சாளாம். லேசா அடிச்சதுக்கு தான் இப்புடி அழுகுறானா??உன்னை அடிச்சிருந்தா தெரியும், அந்த வலி. இன்னொரு தடவை என் புள்ளை மேல கை வச்ச அவ்வளவு தான், நான் மனுஷனாவோ இருக்க மாட்டான்.

போ டி இங்கிருந்து,என் கண்ணு முன்னாடி நிக்காத, புள்ளைய அடிச்சிட்டு அதுக்கு நியாயம் வேற பேசிட்டு வர, போய்டு பாத்துக்க கோபத்துல அடிச்சிட போறேன்” என கோபத்தில் அவன் என்ன பேசுகிறோம் என தெரியாது வார்த்தைகளை வரம்பு மீறி கொட்டிட,

“சப்…!” என்று அவனை அறைந்திருந்தாள்‌ முல்லை.

ஏற்கனவே அவன் அத்வியை‌ மட்டும் தாங்கி பேசி கோபம் கொண்டதில் ‘அப்போ நான் இவருக்கு யாருமில்லையா? அத்வி மட்டும் தான் அவரோட உறவுன்ற மாதிரி பேசிட்டு இருக்காரு. நான் அவரு பொண்டாட்டி தான, ஏன் இப்புடி என்னை பேச்சால ஒதுக்கி வைக்கிறாரு’ என எண்ணி கலங்கி இருந்தவளுக்கு அவனின் வரம்பு மீறிய வார்த்தைகள் அவளுள் ஆத்திரத்தை எழுப்ப, எதனையும் யோசியாது அவனை அறைந்திருந்தாள்.

முல்லையிடம் இருந்து இப்படி ஒரு செய்கையை எதிர்பார்த்திராதவன் திக்பிரம்மை பிடித்து நிற்க,

“என்ன? என்ன? வார்த்தைக்கு, வார்த்தை உன் பிள்ளை உன் பிள்ளைன்னு சொல்லுற, அப்போ நான் யாரு உனக்கு. அவ்வளவு அக்கறை இருக்குறவன் எதுக்கு வந்ததும் அவனை கண்டுக்காமா இருந்த, உனக்கு தெரியாதா அவன் எந்நேரமும் உன்னை தான வால் பிடிச்சு சுத்துறான்‌ நம்ம கல்யாணம் ஆனதுல இருந்து!!! அவன் தேடுவான்னு உங்களுக்கு தெரியாதா???

இத்தனைக்கும் அவனும் சரி, நானும் சரி நாலஞ்சு தடவை கூப்பிட்டு பாத்தோம். அப்பவும் நீங்க டிஸ்டர்ப்பா இருக்கவும் தான், சரின்னு அவனை தூக்கிட்டு வந்துட்டேன். நீங்க வருவீங்கன்னு தெரியும், அதுக்குள்ள இவன் உங்களை கேட்டு ஒரே அடம்! அடக்கி பாத்து என்னால முடியல அதான் லேசா தான் அடிச்சேன்.

முழுசா என்ன நடந்ததுன்னு தெரியாமா வார்த்தையை விடுவீங்களா?? என்னல்லாம் பேசுறீங்க. அவன் உங்களை தேடுறது, எனக்கு, எனக்கு பிடிக்கலையா?இதுல அடிப்பாராம்ல போடா…டேய்” என பதிலுக்கு கத்தியவள், கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

அவள் பேச, பேச அவள் கண்ணீரை கண்டவனிற்கு தன் தவறு புரிய, தன்னையே நொந்து கொண்டு கலங்கி இருந்தவனுக்கு, கடைசியில் அவள் சொல்லி விட்டு சென்றதை கேட்டு சிரிப்பு வந்து விட சட்டென்று சிரித்தவன்,

“அடேய் மகனே, இது தான் சாக்குன்னு உங்க அம்மா என்னை அடிச்சிட்டு ‘டா’ போட்டு பேசிட்டும் போய்ட்டா, இன்னும் நிறைய நி வா, போ ன்னு பேசினா. விட்டா ப்ளோஃல கெட்ட வார்த்தையும் போட்டுருப்பா. எத்தனை நாள் ஆசையோ உன் ஆத்தக்காரிக்கு இன்னைக்கு நிறைவேத்திட்டா? ஆனாலும் டா உங்க அம்மா அவ்வளவு போர்ஸா அடிச்சே எனக்கு வலிக்கல, அப்போ உன்னை லேசாதான அடிச்சேன்னு சொன்னா கண்டிப்பா உனக்கு வலிச்சிருக்காது.

அடேய் அப்பிடினா, நீ வலிச்ச மாதிரி நடிச்சியாடா. உண்மை சொல்லு அங்கி கிட்ட, அம்மா அடிச்சது வலிக்கலை தான??” என கிச்சு கிச்சு மூட்ட,

கதிர் பேசிய மற்ற அனைத்தும் புரியவில்லை என்றாலும் அவன் கடைசியாக கேட்ட கேள்வி புரிந்து விட “ஹி…ஹி….ஹி ஆமா அங்கி ” என சிரித்தவாரு கூறியவன் அவன் கன்னங்களை தடவி “பேட்…மம்மி வலிக்குதா ” என பாவமாக கேட்டிட,

“ஏண்டா டேய், நீ சொன்னதை நம்பி வேற நான் அவ கிட்ட ஒரு மூன்றாம் உலகப் போர நடத்தி வச்சிருக்கேனேடா??அதோட எஃபெக்ட் எப்புடி இருக்கும்னு தெரியலையா, அதுக்கு சாம்பிள கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி காட்டிட்டு போய்ருக்கா.

ம்ஹீம், கடைசியில உங்க அம்மா ஆசை நிறைவேறிடுச்சு. எத்தனை நாள் ஏக்கமோ என் பல்லை உடைக்கணும்னு” என அங்கலாய்த்தபடி திரும்பியவன் பேச்சு, அங்கே கைகளை கட்டி கொண்டு இவனை அனல் தெறிக்க முறைத்தவாறு நின்றிருந்தவளை கண்டதும், பட்டென்று நின்று விட்டது.

அவளின் முறைப்பிலேயே அவன் பேசிய அனைத்தும் கேட்டு விட்டாள், என புரிய ‘அடேய் கதிரு உன் வாய் அடங்கவே அடங்காதாடா. உன் வாய் தான்டா உனக்கு எதிரி போச்சு. திரும்பவும் வந்து அறைய போறா’ என அவன் மனதினுள் அலறியவன்,

“முல்…” என பாவமாக முகத்தை வைத்து கொண்டு கூற‌ ஆரம்பிக்க வெடுக்கென அத்வியை அவனிடம் இருந்து பிடுங்கியவள் உள்ளே சென்றிட,

“இருக்கு, இன்னைக்கு ஒரு பெரிய சம்பவம் இருக்கு.‌ நீ பேசுன பேச்சுக்கு தேவைதாண்டா. கொஞ்சமாவ பேசின, அப்போ அனுபவி, அவ்வ்வ்…செம்ம காண்டுல இருக்கா போலயே, அப்பனே முருகா, எந்த சேதாரமும் இல்லாமா என்னை பத்திரமா எங்க அம்மா கிட்ட கொண்டு போய் சேர்த்துடு முருகா” என தன்னை தானே திட்டி கொண்டு வாய் விட்டு புலம்பியவன் மனதினை திடப்படுத்தி கொண்டு ஒரு புயலினை சந்திக்க சென்றான்.

“தேனுடா மா” என அவன் அவளை பாவமாக அழைத்து கொண்டு போக, அதனை எல்லாம் துளி கூட கண்டு கொள்ளாது, ஆர்டர் செய்திருந்த உணவினை அத்விக்கு ஊட்ட தொடங்க சமர்த்தாக வாங்கி கொண்டவன் கதிரை நோக்கி சிரிக்க,

“அடேய் கிரதகா உன்னால தான்டா சண்டையே” என பல்லை கடித்தவன் மீண்டும் சமதான அம்பை எய்ய அதனை திருப்பி அவனிற்கே அனுப்பினாள் முல்லை.

“முல்லை மா எனக்கும் பசிக்குது டி ஆ…” என வயிற்றை தடவி விட்டவன் அவளிடம் வாய் திறக்க,

பசி என்றவனிடம் அவளால் முகம் திருப்ப முடியவில்லை அமைதியாக அவனிற்கும் அவள் ஊட்ட,

அதை வைத்தே அவன் மேலும் பேச்சை வளர்க்க ம்ஹீம் அவளிடம் பேச்சே இல்லை.

“தேனுடா……முல்லை மா….. தேனு குட்டி…. தேன்முல்லை….ஹனி டாவ்” என வித விதமாக அவனை கெஞ்ச வைத்து தன் பின்னே அலைய விட்டாள் முல்லை.

அவன் பேசிய எதற்கும் அவள் மசியவில்லை. கடைசியில் படுக்கையில் அத்வியை நடுவில் விட்டு இவள் சுவர் ஒட்டி படுத்து கொள்ள கொதித்து விட்டான் கதிர்.

இதுவரை அத்வியை அணைத்தவாறே அவளும் இருவரையும் அணைத்தவாறு கதிரும் என உறங்கி தான் பழக்கம்.

இன்று, முதல் முதல் நடந்த சண்டையில் முல்லை தன் கோபத்தினை இதில் காட்டிட,

“முல்லை, ஒழுங்கா எப்பவும் போல படு இது என்ன புதுசா. சண்டை தான போட்டோம் உடனே இப்புடி பண்ணுவியா நீ “என அவன் எகிற,

பதில் இல்லை அவளிடம்!!!!!

அதில் கடுப்பானவன் அவளை முறைத்தவாறே நிற்க, அவனை கண்டு கொள்ளாது விளக்கினை அணைத்து விட்டு அவள் படுத்து விட,

அதில் மேலும் காண்டானவன், அத்வியை தூக்கி, அவன் இடத்தில் இவன் படுத்து, அத்வியை தனதருகில் படுக்க வைத்து கொண்டவன், அவனை கட்டி கொண்டு முல்லைக்கு முதுகு காட்டி படுத்து விட்டான்.

“போடி ரொம்ப தான்” என முணுங்கியவன் உர்ரனெ படுத்திருக்க,

“அங்கி….மம்மி….போனும்” என அத்வி தூக்க கலக்கத்தில் சிணுங்க,

“அதெல்லாம் வேண்டாம்டா குட்டி, வெரி பேட் உங்க மம்மி ” என கதிர் அவனை அனுப்ப மறுக்க,

அதில் சிணுங்கிய அத்வி உதடுகளை பிதுக்கி அழுகைக்கு தயராக,

கதிரின் செயலில் கடுப்புற்ற முல்லை, எழுந்தமர்ந்து அத்வியை அவனிடம் இருந்து தூக்க, விட மறுத்த கதிரின் கைகளில் பட்டென அடியை போட்டவள், அத்வியை தூக்கி கொள்ள,

“என்ன டி நீ சும்மா சும்மா அடிக்கிற” என்று எகிறியவனை கண்டு கொள்ளாது மீண்டும் அவனை இருவருக்கும் நடுவில் படுக்க வைக்க முயல, அதனை புரிந்த கொண்ட கதிர், சட்டென அவளை நெருக்கமாக ஒட்டி இடம் விடாமல் படுத்து, அமர்ந்திருந்தவளின் இடுப்பை வளைத்து கொள்ள,

அவனின் அடாவடியில் விழி பிதுங்கியது இவளிற்கு. வேறு வழியின்றி அத்வியை எப்போதும் போல் அவள் சுவர் ஒட்டி படுக்க வைத்து விட்டு, இவனை நகரு என்பது போல் பார்க்க.

“அதெல்லாம் முடியாது” என கூறியவன் தான் சற்றே நகர்ந்து அவனை இழுத்து படுக்க வைத்திருந்தான்.

அத்வியை அவள் தட்டி கொடுக்க மெல்ல உறங்கியிருந்தான் அவன்.அதற்கே காத்திருந்தவன், இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியை, ஒரே அசைவில் அவளை நெருங்கி படுத்து, இடத்தினை நிரப்பி அவளின் இடையோடு சேர்த்து இழுத்து தன்னுடன் அணைத்தவன், பின்பக்கம் இருந்து அவளின் கழுத்தில் முகம் புதைத்து கொள்ள,

இருவரிடமும் அமைதியே. சில நொடிகள் கடந்து அவனின் கண்ணீர் அவள் கழுத்தில் பட கூடவே “சாரி முல்லை, நான் தெரிஞ்சு பேசல, கோபத்துல தான் டி பேசிட்டேன் தெரியாம, சத்தியமா தெரிஞ்சே பேசல டி மன்னிச்சிடு” என குரல் தழுதழுக்க கூறியவனை கண்டு, அதற்கு மேல் கோபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை முல்லையால்.

முதலில் அவன் மீது கோபம் இருந்தாலும் பின் அதில் மறைத்திருந்த அவனின் பிள்ளை பாசத்தில் மன்னித்து விட்டிருந்தாள், இருந்தும் இனி அவன் இப்படி வார்த்தைகளை விட கூடாது, என நினைத்து கோபத்துடன் இருப்பதாக காட்டி கொண்டவளிற்கு அவனின் கண்ணீரை கண்டதும் தாங்கவில்லை.

திரும்பி‌ அவனை‌ முழுதாக அணைத்தவள் “விடுங்க, நானும் சாரி…இதை பத்தி பேச வேண்டாம்” என்றவள் அவனின் கன்னத்தை தடவி “வலிக்குதா??” என்க,

அவளின் செயலில் முல்லை கோபத்தை கை விட்டு விட்டாள் என உணர்ந்து கொண்டவன் “இல்லை, குளு குளுன்னு இருக்கு, அடிச்சுட்டு இப்போ கேட்குறா பாரு வலிக்குதா? இனிக்குதான்னு” என அவன் வாய் அடங்காது பேச,

அதில் அவனை முறைத்தவள், திரும்பி கொள்ள பார்க்க அதற்கும் வழி விடாது இறுகி அணைத்தவன்,

“தோ பாரு முல்லை, நான் பேசினதுக்கும் நீ அடிச்சதுக்கும் சரியா போச்சு. சண்டை முடிச்சிடுச்சு இனி அதை வச்சே என் கிட்ட முறுக்கிகனும்னு நெனைக்க கூடாது புரியுதா?? அதுக்கு நான் விடவும் மாட்டேன். சண்டை இனி இல்லை அவ்வளவு தான் தூங்கு எனக்கு தூக்கம் வருது” என்றவன் அவள் கழுத்தில் முகத்தை அழுந்த புதைத்து உறங்கிட,

அவனின் பேச்சில் முழுதாக கோபம் மறுந்து சிரித்தவள்

அவன் அணைப்பினில் நிம்மதியாக அடங்கி போனாள். 

ஆனால் அவள் நிம்மதி எல்லாம் கதிரும் சுரபியும் பேசுவதை கேட்கும் வரை மட்டுமே. அதுவும் கதிரின் ரகசியத்தை தெரிந்து கொள்ளும் வரை மட்டுமே நிலைத்திருந்தது.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 35

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
43
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அய்யோ என் செல்லக்குட்டி கதிரை யாருடா டென்ஷன் ஆக்குனது.. அழ வேற வச்சுட்டீங்களே பாவிகளா. பாசிட்டிவ் வைப் போட சுத்திட்டு இருந்தவனை இப்படி பண்ணிட்டீங்க. என்ன முல்லை புயலா மாறிடுச்சு. முல்லை பாவம்னு நினைச்சா கதிர் தான் பாவம் போலயே 😜😜😜😜அதெப்படி நீ எங்க கதிரை அடிக்கலாம்.

    கதிரோட ரகசியமா அது என்ன?? எல்லாம் நல்லபடியா நடக்குதுன்னு பார்த்தா பெரிய பூகம்பம் வரும் போலயே..