Loading

தேன் முல்லை 16

 தன் பிஞ்சு பாதங்களை கொண்டு அவன் ஒவ்வொரு படியாக ஏற, அவனிற்கு ஈடு கொடுத்தவாறு அத்வி கேட்ட அத்தனை கேள்விகளுக்கும், எந்த வித சலிப்பும்‌ இன்றி அவனிடம் பதில் கூறியவாறு‌, குழந்தையின் கால்கள் நோகும் நேரத்தில், அவனை தனது தோள்பட்டையில் மேல் ஏற்றி கொண்டு, தனக்கு முன்னே மருதமலை முருகன் கோவிலில் படிகளில் ஏறி கொண்டிருந்த கதிரவனை கண்ட முல்லையின் மனம், எந்த நிலையில் இருக்கிறது என அவளிற்கு புலப்படவில்லை.

அவனை விட்டு பார்வையை திருப்பியவள், தனது வலப்பக்கம் பார்க்க மகிழ்ச்சியில் திளைத்து, முகம் கொள்ள சிரிப்புடன் செல்லமாவிடமும், கதிரின் அம்மா ஞானத்திடமும் பேசியவாறு மங்கை வந்து கொண்டிருக்க,

இடப்பக்கம் கதிரின் அப்பா கோபலசுவாமி, சத்யா மூர்த்தி, ராமமூர்த்தி என‌ ஆண்கள்‌ அனைவரும் புன்னகை முகமாய் தங்களுக்குள் நாட்டு நடப்பை பற்றி அலசி கொண்டு வர,

இவர்களுக்கு சற்றே பின்னால் ராகேஷீம், சீதாவும் தங்களுக்குள் ஏதோ வழக்கடித்து சிரிப்புடன் வர, ராகேஷின் கைகளில் ரேஷ்மிகா இருக்க, சீதாவின் கைகள் முழுவதும் பைகள் நிரம்பி வழிந்தன.

அவர்களுக்கும் பின்னால் பிரகாஷ் ஸ்ருதி வந்து கொண்டிருக்க, ஸ்ருதியை பார்க்க விரும்பாது பார்வையை திரும்பி கொண்டாள்.

அவளின் ஒற்றை வார்த்தை ஒற்றை சம்மதம் அனைவரையும் இத்தனை மகிழ்ச்சி கடலில் தள்ள முடியுமா?

இதோ கண்கூட காண்கிறாளே, அனைவரின் சந்தோஷத்தையும்!

இன்னமுமே அவளால் தான்‌ எப்படி கதிரை திருமணம்‌ சம்மதம் தெரிவித்தோம், என்பது இன்னமுமே புரியாத புதிராகவே இருந்தது.

என்ன கதிருடன் திருமணமா? என்றால் ஆம் திருமணமே தான்.இதோ இவர்கள் இப்போது மருதமலை முருகனை மட்டும் தரிசிப்பதற்கு செல்லவில்லை.

கதிர் மற்றும் முல்லையின் திருமணத்திற்கும் சேர்த்து தான் செல்கின்றனர்.

அத்விதன் ஏதோ சொல்ல, அதற்கு பெருங்குரலெடுத்து சிரித்த கதிரவனின்‌ சிரிப்பு, அனைவருக்கும் கேட்க அவனை பார்த்தவர்களுக்கு அவனின் மகிழ்ச்சியும் தொற்றி கொண்டது.

அவனின் புன்னகை முகத்தை பார்த்த முல்லைக்குமே சற்று இதமான மனநிலை தான்.

மனம் அவள் சொல் பேச்சையும் மீறி, அவன் அவளிடம் திருமணத்திற்கு சம்மதம் பெற்ற தருணத்திற்கு சென்று நின்றது.

கதிரின் பாரமுகம் முல்லையை பெரிதும் வருத்த, எங்கே அவன் தன்னை அசிங்கமாக நினைத்து விட்டானோ, என அழுகையில் கரைந்தவளை அவளின் அறைகதவு ஒலி சற்றே நிதானத்திற்கு கொண்டு வர,

தற்போது இருக்கும் மனநிலையில் யாரிடமும் பேச விருப்பம் இல்லாமல் போக,

“ம்மா ப்ளீஸ், கொஞ்ச நேரம் என்னை தொந்தரவு பண்ணாம விடுங்கம்மா” என்றவளின் குரல் அழுகையில் தேய்ந்து கமற,

முன்னையும் விட அதிகமாக கதவு ஒலி எழுப்பியதோடு “முல்லை கதவை திற” என்ற கதிரின் கோபமான அழைப்பும் சேர்ந்து வர,

படுக்கையில் இருந்து வேகமாக எழுந்து சென்று கதவை திறந்தவளிற்கு, கதிரின் கோபமான முகமே காட்சியளித்தது.

“உன்னோட வண்டியோடு சாவி நானே எடுத்துட்டு வந்துட்டேன் பிடி” என்றபடி அதனை அவளின்‌ கைகளில் திணித்தவன், பேச்சு முடிந்தது என்பது போல் அவளை முறைத்து விட்டு கிளம்ப,

எதனையோ எதிர்பார்த்திருப்பாளும் போலும்! அது நடக்காததில் மனம் மேலும் துடிக்க மெல்லிய விசும்பல் ஒலி அவளையும் மீறி வெளிவந்து விட,

சட்டென நின்றவன் அங்கே இவர்களை பார்த்திருந்த மங்கையிடம்,

“ஆன்ட்டி ப்ளீஸ், ஒரு பத்து நிமிசம் உங்க பொண்ணோட தனியா பேசணும் பர்மிஷன் தர்றீங்களா?” என்றவன் அவரின் பதிலிற்கு கூட காத்திருக்காது, அழுகையில் இருந்தவளின் முழங்கையை பற்றி இழுத்து, அவளை உள்ளே தள்ளியவன் தானும் அறையினுள்‌ நுழைந்து கதவினை அடைக்கும் முன்,

தன் செயலால் திகைத்த நின்ற மங்கையை கண்டு,

“ஏதும் தப்பா எல்லாம் இல்லை பயப்படாதீங்க. உங்க பொண்ணு காலையில பாக்க வந்தது என்னை‌ தான்.‌ இன்னமும் புரியலன்னா உங்க பொண்ணுக்கு பார்த்த அந்த மாப்பிள்ளை நான் தான்” என‌ அவருக்கு தேவையான தகவலை தந்து விட்டு கதவினை அடைத்திருந்தான்.

அவனின் பேச்சில் திகைத்து நின்றவர், வேகவேகமாக சத்யமூர்த்திக்கு அழைத்து நடந்த நிகழ்வினை சுருக்கமாக கூறியவர் சீக்கிரமாக வீட்டிற்கு வர பணிந்தார்.

அறையினுள் நுழைந்தவன் சட்டமாக அவளின் படுக்கையில் அமர்ந்து கொண்டு அவளையும் இழுத்து அமர வைத்தவன்,

“ம்ம்ம் சொல்லுங்க மேடம், எதுக்கு இப்புடி கதறி கதறி அழுதிட்டு இருக்கீங்க” என கேட்க,

‘இவர் என்னை அசிங்கமா நினைச்சதாலன்னு இவர் கிட்ட சொல்றதா? ம்ஹீம் இல்லை நான் சொல்ல மாட்டேன்‌.‌எதுக்கு சொல்லணும் என்னை தப்பா தானே நெனைச்சிட்டு இருக்காரு, அப்படியே நெனைச்சுகிட்டும்’ என நினைத்தவளிற்கு சட்டென்று ஈகோ தலை தூக்க,

“எதுக்கோ அழுகுறேன் உங்களுக்கு என்ன? சொல்ல முடியாது” என அவள் கத்த,

“பார்ரா ஆனா எனக்கு தெரியுமே. எதனால நீ அழுகுறேன்னு?? சொல்லட்டா? என்னால‌! என்னால் மட்டுமே! எனக்கான அழுகை இது” என சற்றே கர்வமாக அவன் உரைக்க,

“இல்…” என்றவளின் வார்த்தையை முடிக்க முடியாது அவளின் உதட்டில் அழுந்த விரல்களை பதித்து தடை செய்தவன்,

“இல்லையின்னு மட்டும் பொய் சொல்லாத. இந்த கண்ணீர் தவிப்பு எல்லாம் எனக்கானது. நான் எங்கே உன்னை தப்பா நெனைச்சிடுவோனோன்ற பயத்தால வந்த கண்ணீர் இது” என்றவன் அவள் விழிகளை பார்த்து அழுத்தமாக உரைக்க,

அவளிடம் பதில் இல்லை.

“இப்போ கூட உன் மனசு புரியலையா முல்லை.சரி விடு என் கேள்விக்கு பதில் சொல்லு, இத்தனை மாசமா உன் அம்மாகிட்ட கூட மறச்ச விஷயத்தை எதுக்காக என்கிட்ட சொன்ன?

ஒரு வேளை உன்னை பார்க்க வந்த மாப்பிள்ளைன்றனால அப்புடினா, என் இடத்துலே வேற யாரா இருந்தாலும் நீ இந்த விஷயத்தை சொல்லிருப்பியா??” என் அவன் கேட்ட நொடி,

அவனின் கைகளை வேகமாக தட்டி விட்டவள்,

“இல்லை, சத்தியமா இல்லை! வேற யாரு இருந்தாலும் நான் வாயவே திறந்திருக்க மாட்டேன்.நீங்க நீங்கன்றால மட்டுமே, இதை நான் சொன்னேன்”

“அதான் நானும் கேட்கிறேன். அப்புடி நான் மட்டும் என்ன ஸ்பெஷல் முல்லை உனக்கு‌? எதை வச்சி என்கிட்ட அந்த விஷயத்தை சொன்னா?”

“ஏன்னா நீங்க என்னை தப்பா அசிங்கமா நினைக்கமாட்டிங்கன்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையில தான் நான் சொன்னேன். ஆனா நீங்க அப்பிடியில்லை, என் நம்பிக்கைய உடைச்சுட்டீங்க,  என்னை தப்பா அசிங்கமா நெனைச்சுட்டீங்களே?? ச்சீ ஒருத்தன் துரோகம் பண்ணிட்டு போயும் இன்னமும் அவனையே நெனைச்சிட்டு இருக்காளேன்னு கேவலமா நெனைச்சுட்டீங்கள??” என் மேலும் அவள் விசும்ப.,

“நான் அப்புடி சொன்னோனா? நீயா கற்பனை செய்யாத, இப்போ இந்த நொடி உன் மனசுல அந்த நாய் இருக்கானா??”அவன் தாடை இறுக கேட்க,

“இல்லை சத்தியமா இல்லை, இந்த நிமிசம் என் மனசுலயும் சரி, வாழ்க்கையிலையும் சரி அவன் இல்லை. ஆனா அதுக்காக அவனை மொத்தமா மறந்துடேனான்னு கேட்டா அதுக்கும் பதில் தெரியலை‌.கரையான் மாதிரி ஏதோ ஒரு மூலையில அவனோட ஞாபகம் அரிச்சிகிட்டு இருக்குறது உண்மை”என்றிட,

கட்டிலில் அமர்ந்திருந்தவளின் முன்‌ மண்டியிட்டு அமர்ந்தவன், அவள் இருகைகளையும் தன் ஒற்றை கைகளில் அடக்கியவன், மற்றொரு கைகளால் அவள் நாடி தொட்டு நிமிர்த்தி,

“முல்லை.. லிசன், உன் மனசுல ஹரிஷ் இருக்கானா இல்லையா அது எல்லாம் எனக்கு தெரிய வேண்டாம். உன் மனசுல எனக்கான இடம் இருக்கா அதுக்கு மட்டும் பதில் சொல்லு”

“தெரியலையே!!!” என அழுது கரைந்தவளை தேற்றியவன்,

“ஓகே, இத்தனை மாசமா உங்க அம்மாகிட்ட கூட சொல்லாத விஷயத்தை எப்புடி என்கிட்ட சொன்ன என் மேல் இருந்த நம்பிக்கையில தான??”என்க,

“ஆம்” என வேகமாக தலையாட்டினாள் முல்லை.

“என் மேல் இருந்த நம்பிக்கையில உன் மனசுல இருந்த ரகசியத்தை சொன்ன நீ, அதே நம்பிக்கையில ஏன் உன்னோட வாழ்க்கைய என்னோட சேர் பண்ண கூடாது???” என்க,

பேச்சற்று அமைதியானாள்.

“எனக்கொரு சான்ஸ் கொடுடா எனக்கு நீயும் அத்வியும் வேணும். என் மனசுல எந்த அளவுக்கு நீங்க இருக்கீங்கன்னு உங்க கூட வாழ்ந்து காட்டி நான் புரிய வைக்கணும்.

உன் மனசுல நான் இருக்கேன்னு தெரிஞ்சுக்க, ஒரு வாய்ப்பு கொடு! உன் மனசுல ஹரிஷையும் தாண்டி, நான் இருக்கேன்னு உனக்கு புரிய வைக்க, எனக்கொரு வாய்ப்பு கொடு, என் மேல நீ வச்சிருக்குற நம்பிக்கைய நிருபிக்க ஒரு வாய்ப்பு தரமாட்டியா?” என காதலாய் கேட்டவனை கண்டவளின் உள்ளம் சத்தமின்றி உடைந்திற்று. 

“என்ன முல்லை உன்னையும், அத்வியையும் எனக்கே எனக்குன்னு தந்துடுறியா” என்னறவனின் கேள்வியில்,

அவள் தலை தன்னால் சம்மதம் என அசைந்தது.

அவளின் சம்மதத்தில் ஆனந்த உவகை கொண்டவனின் உள்ளம் தாங்க முடியா சந்தோஷத்தை ஏற்படுத்த, அதன் விளைவாக அவன் கண்கள் லோசாக கலங்கிட,

அவள் முகவாயை பிடித்திருந்தவன், லேசாக எக்கி அவளின் நெற்றியில் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் விதமாக அழுத்தமாக ஒரு முத்தத்தினை பரிசளித்திருந்தான்.

அவனின் முத்தத்தின் ஈரத்தினை உணர்ந்தவளிற்கு தான் செய்த செயலின் வீரியம் புரிய,

‘தான் எப்படி சம்மமதித்தோம்’ என அவள் திகைத்த நிற்க,

“தாங்க்ஸ், தாங்க் யூ முல்லை ” என கண்களில் நீருடன் இதழில் பூத்த வசீகர சிரிப்புடன் தன்னிடம் நன்றி கூறியவனை கண்டவளின் குழப்பங்கள் எல்லாம் விலகி ‘ஏன் இவனை திருமணம் செய்தால் தான் என்ன’ என்ற கேள்வியுடன் தெளிவாகின.

“ஏதாச்சும் சொல்லணும்? இல்லை கேட்கணுமாடா??” தன்னையே கண்டவளை கண்டு அவன் கேள்வி எழுப்ப,

“ம்ம்ம், சொல்லனும் எந்த நம்பிக்கையில நான் இதுக்கு சம்மதிச்சேன்னு தெரியலை, ஆனா உங்களை மாதிரி ஒருத்தர அத்விக்கு ஒரு நல்ல அப்பாவ தவற விட எனக்கு விருப்பமில்லை.

நான் சொல்றது எல்லாம் ஒண்ணே ஒண்ணு தான், என்னை பத்தின எல்லா விஷயமும் உங்களுக்கு தெரியும்.

என்னைக்காவது ஒரு நாள் ‘ஏண்டா உங்களை கல்யாணம் பண்ண சம்மதம்‌ சொன்னது தப்போன்ற’ ஒரு எண்ணத்தை மட்டும் எனக்கு எப்பவுமே தந்துடாதீங்க” என அவள் உறுதியுடன் கூற,

“கண்டிப்பா அப்புடி ஒரு நெனப்பை உனக்கு நான் வர விடவே மாட்டேன் முல்லை. அப்புடியும் அந்த நெனைப்பு உனக்கு வந்துச்சுன்னா, அப்போ நான் உயிரோடு இருக்குறதுல அர்த்தமில்ல செத்ததுக்கு சமம்”என்க,

“ப்ச் அந்த அளவுக்கு எல்லாம் பேசாதீங்க. எனக்கு இப்பவும் உங்க மேல நம்பிக்கை இருக்கு அப்புடி ஒரு எண்ணம் வர விடமாட்டிங்கன்னு”என்க,

“இதுக்கு நான் தாங்கஸ் எல்லாம் சொல்ல மாட்டேன் முல்லை.இது நீ என்னை அந்த அளவுக்கு புரிச்சு வச்சுருக்குறத தான் காட்டுது. தேவையில்லாதது எல்லாம் போட்டு மனசை குழப்பிக்காத சரியா” என்றவன் அவளிடம் விடை பெற்று வெளியேற,

அடுத்து என்ன இரு குடும்பத்தாரிடமும் விஷயம் தெரிவிக்க பட்டு ஒரு வாரத்திற்குள் வேலைகள் மளமள என நடைபெற்றன.

அந்த நேரம் பிரகாஷீம் அவன் மனைவியும் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருக்க, அவர்கள் வந்த பின்பு சொல்லி கொள்ளலாம் என கதிர் தடுத்து நிறுத்தி விட்டிருந்தான்.

ஒரு வார காலமும் முல்லையை நிற்க விடாமல் அவனுடனே அலைய வைத்து கொண்டிருந்தான் கதிரழகன்.

அத்வியுடன் விஷயத்தை தெரிவிக்க அவனிற்கு ஏக குஷி. இனி ரேஷ்மா அக்கா மற்றும் கதிருடன் இருக்க போவதை நினைத்து.

அனைத்து வேகலைகளையும் ஒரு வாரத்தில் நடத்தி முடித்து, இதோ இன்று மலையேறி கொண்டிருந்தவனை கண்டவளின் இதழ்கள் “ஆள் மயக்கி!!” என மெல்ல முணுமுணுத்து கொண்டன.

‘பேசியே என்னை கவுத்திட்டாரு’ என நினைத்தவளிற்கு இன்னமும் எப்படி அவனின் பேச்சில் தன்னை மறந்து சம்மதம் சொன்னோம், என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால் ஒன்று முதலில் இருந்த குழப்பங்கள் இன்றி இப்போது அவள் மனம் தெளிவாக இருந்தது.

அனைவரும் கோவிலை சென்றடைய அங்கே ஏற்கனவே திருமணத்திற்கு குருக்களிடம் பேசி முன்பதிவு செய்து வைத்திருந்தான் கதிர்.

முல்லையின் விருப்பம் இங்க திருமணம் செய்ய வேண்டும் என்பது.

சந்நதியின் முன்பு திருமண மேடை போடப்பட்டிருக்க, அங்கே கொண்டு வந்த பொருள்களை எல்லாம் சீதா அடுக்கி வைத்து கொண்டிருக்க அவளிற்கு மற்றவர்கள் உதவ,

கோபம் கொப்பளிக்கும் முகத்துடன் அதனை வெளிக்காட்ட இயலாத ஆத்திரத்தில் அடக்கப்பட்ட கோபத்துடன் அங்கே ஓரமாக நின்றிருந்தாள் ஸ்ருதி.

நேற்று இரவு தான் அவளும் பிரகாஷீம் வீடு வந்து சேர்ந்திருந்தனர். 

நாளை காலையில் சீக்கிரமே கோவில் செல்ல வேண்டும் என்ற தகவல் மட்டுமே வழங்கப்பட்டது.

அதற்கும் முகத்தை சுளித்தவளை ஏன் என்றும் கேட்க ஆளில்லாமல் போய்விட்டது.

அடுத்த நாள் அனைவரும் சீக்கிரமே எழுந்து தயாராக, வேறுவழியின்றி கிளம்பி வந்தவளிற்கு விஷயம் தெரிவிக்கப்பட பேயாட்டம் ஆடிவிட்டாள்.

“ஏய், ஸ்ருதி எதுக்குடி இப்போ கத்திட்டு இருக்க” என பிரகாஷ் அவளை அதட்ட,

“என்ன? என்ன பேசுறீங்க உங்க தம்பிக்கு இன்னைக்கு கல்யாணமா, இப்போ சொல்றாங்க என்ன நெனைச்சுட்டு இருக்காங்க எல்லாரும்?”

“ஆமா கல்யாணம் தான் அதுக்கு என்ன இப்போ”

“என்னங்க இப்புடி கூலா ஆமான்னு பதில் சொல்றீங்க அப்போ, அப்போ உங்களுக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரியுமா??”

“ஆமா தெரியும்”

“எப்போ?எப்போ தெரியும்”

“முல்லை இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட அன்னைக்கே தெரியும்”

“ஏன்? ஏன், இத்தனை நாள் என்கிட்ட சொல்லாம மறைச்சீங்க??”

“சொன்னா மட்டும் என்ன பண்ணிருப்ப??”

“அப்போ எனக்கு என்ன மரியாதை, இந்த வீட்டு மூத்த மருமகளான எனக்கு என்னை மரியாதை “

“ஷ்ஷ்ஷ் சொல்லிருந்தா, என்ன பண்ணிருப்பேன்னு தான் கேட்டேன். அச்சோ நம்ம கொழுந்தன் கல்யாணமேன்னு எல்லா வேலையையும் இழுத்து பிடிச்சு செஞ்சிருப்பியோ??”

“ச்சீ, என் தங்கச்சியை கல்யாணம் பண்ணி ஏமாத்திட்டு, இவன் வேற கல்யாணம் பண்ணுவானாம். அதுக்கு நான் வேற‌ வேலை பாக்கணுமோ ச்சீ கருமம்”

“அடிங்க, கருமம் கிருமம்னு சொன்ன வாய பேத்துருவேன். ஏன் உன் தங்கச்சி பண்ணப்போ தெரியலையா கருமம்னு, வாய் இருக்குங்கறதுக்காக என்ன வேணாலும் பேசின வாயை உடைச்சிருவேன் கிளம்பு”

“என்னால இந்த கல்யாணத்துக்கு வர முடியாது” என அவள் வீம்பு பிடிக்க

ஸ்ருதி பேச ஆரம்பித்த போதே மற்ற அனைவரையும் கோவிலுக்கு கிளப்பியிருந்தான் பிரகாஷ்.

“வாராத, நீ வரனும்னு யாரும் அங்கே எதிர்பார்க்கல. நீ வராம இருக்குறது தான் நல்லதும் கூட, ஆனா ஒரு விஷயம் ஞாபகம் வச்சுக்கோ! என் தம்பி கல்யாணத்துக்கு நீ வரலன்னா? அடுத்த உன் பொறந்த வீட்டு பக்கம் எட்டி கூட பாக்க மாட்டேன் நான்.

ஏற்கனவே, உன் தொங்கச்சி கல்யாணம் பண்ணப்போ, நீ அழுது கெஞ்சுனதுலான அதுவும் கதிருக்கு இதுல எந்த பிரச்சனையும் இல்லைன்னு, அவன் சொன்னதுக்கு அப்பறம் தான், அதுவும் உன் அண்ணங்காரன் மூத்த மாப்பிள்ளையா, நீங்க இருக்கணும்னு கெஞ்சி கதறுனனால தான், போய் தொலையட்டும்னு வந்து தலைய காட்டுனேன்.

மவளே இப்போ நீ மட்டும் வரலையின்னு வையி ஜென்மத்துக்கும் உன் வீட்டு ஆளுங்களோட உறவாட முடியாது. நானும் வர மாட்டேன் உன்னையும் போக விடமாட்டேன். அதையும் மீறி நீ போனேன்னு வையி, அப்புடியே உங்க அம்மா வீட்டோட இருந்துக்க வேண்டியது தான்.

நான் வந்து கூப்பிடுவேன்ல, கனவுலையும் நெனச்சிடாத, வர மாட்டேன்னு உனக்கு நல்லாவே தெரியும். புள்ளைங்க கூட வராதுங்க, நீ அப்புடிய உன் அண்ணன் பசங்களுக்கு சேவை செஞ்சுட்டு காலத்தை ஓட்ட வேண்டியது தான்” என்றவனின் மிரட்டலில் ஆடிப்போனாள் ஸ்ருதி.

ஏனெனில் பிராகஷை பற்றி நன்கு தெரியுமே அவளிற்கு அவன் சொன்னதை எல்லாம் அச்சு பிசுகாமல் செய்ய கூடியவன் என்று.

வேறே வழியின்றி பிரகாஷின் அதட்டலில் அடங்கி கிளம்பியவள் விஷயத்தை சுரபிக்கு தெரிவிக்கும் பொருட்டு போனை எடுக்க

அதனை அறிந்த பிரகாஷ் அவளிடம் இருந்து போனை பறித்தவன்,

“தெரியும் டி கேடி, நீ என்ன பண்ண போறன்னு அது எல்லாம் என்கிட்ட நடக்காது வாயை மூடிக்கிட்டு போய் காருல உட்காரு. அப்பறம் அங்க கோவில்ல வச்சு ஏதும் பிரச்சனைய கிளம்புனன்னு வையி, அப்புடியே உங்க ஆத்தா வீட்டுக்கு தொரத்தி விட்டுடுவேன்.

இது என் தம்பி கல்யாணம் எந்த வித குழப்பமும் பிரச்சனையும் இல்லாம நடத்து முடியனும்‌ அவ்வளவு தான்” 

என்றவனின் கோபத்தில் ஏதும் செய்ய முடியாத கோபத்துடன் கிளம்பி வந்தவளிற்கு சுரபியிடம் கூட விஷயத்தை சொல்ல முடியவில்லையே என்ற ஆதங்கமும் எழ, உர்ரென்ற முகத்துடன் நடப்பதை ஏற்று கொள்ள முடியாமல் ஒரு ஓரமாக நின்று விட்டிருந்தாள்.

இன்னமும் அவளிற்கு முல்லை ஹரிஷின் முன்னாள் மனைவி என்பது தெரிந்திருக்கவில்லை.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
12
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. கதிர் ஆள் மயக்கி தான் சோ ஸ்வீட்.. நேற்று இருந்து கதிர் எப்படியெல்லாம் ஃபீல் பண்ணியிருப்பானோ .. பாவம் இந்த முல்லை இப்படி சொல்லிடுச்சே அப்படின்னு நினைச்சுட்டே இருந்தேன்.. ஆனா இது சுவீட் சர்ப்ரைஸ்..

    கதிர் மனசுல உன் மேல இருக்கிற ஆழமான காதல் தான் உன்னை சம்மதம் சொல்ல வச்சது முல்லை.. கதிர் உன்னோட லவ் சூப்பர்.. எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. புரோபோசல்.. டயலாக்ஸ்.. நெற்றி முத்தம் எல்லாம் சூப்பர்..

    எவ்ளோ பிரச்சினை வந்தாலும்.. கொஞ்சம் உடைஞ்சு போனாலும்.. கோபம் வந்தாலும் டக்குனு மாறிடுற கதிர் கேரக்டர் தர்றது பாசிட்டிவ் வைப் தான்.. 🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻 ஃபார் கதிர் முல்லை அத்வி அண்ட் கதிர் பேமிலி..