
மெல்லினம் 11:
“ம்ம்ம் சரி தேனு பாத்து பத்திரம் அந்த தம்பிக்கு என்ன வேணும்னு பாத்து குடு பாவம் உனக்காகவும் அத்விகாகவும் தான் பாதுகாப்பா இருக்காரு சிரமப்படுத்திடாதாடா”
“…………………..”
“இங்கேயும் மழை தான்டா இன்னும் விடல கொஞ்சம் நின்னதும் நானும் அப்பாவும் எப்பிடியாவது கிளம்பி வந்துடுறோம். அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோ தேனு”
“…………………..”
“சரி சரி இங்க சரியான அப்பறமே கெளம்புறோம்…நான் வைக்கிறேன்” என தேன்முல்லையிடம் பேசி விட்டு வைத்த மங்கைக்கு மனம் நிலைகொள்ளவே இல்லை.
ஏதோ கோவத்தில் கிளம்பி வந்தவருக்கு அங்கே புயல் மழை என செய்தியை பார்த்ததில் இருந்து அவர் மனம் பதற ஆரம்பித்திருந்தது.
சரி உடனே கிளம்புவோம் என்றால் மழையால் பேருந்துகள் இயங்கவில்லை என்ற செய்தியே கிடைக்க தவித்துப் போனார்.
‘இந்த மழையில் குழந்தையை வைத்து கொண்டு தனியாக என்ன செய்திறாளோ’ என்று தாயாய் தவித்து தான் போனார்.
“என்ன மங்கை தேனு கிட்ட பேசிட்டியா அத்வி என்ன பண்ணுறானாம் இந்தா டீ எடுத்துக்கோ” என்றவாறு செல்லம்மாள் வர,
“ம்ம்ம் அத்தை பேசிட்டேன் தூங்குறானாம் உங்க புள்ளைக்கு குடுத்துட்டீங்களா த்தை”
“உன் புருஷனுக்கும் என் புருஷனுக்கும் சேர்ந்தே கொடுத்தாச்சு”
“ஹ்ம்ம் எப்ப தான் இந்த மழை விடுமோ அத்தை இன்னும் தூறிட்டு தான் இருக்கு”
“ஆமா மங்கை இங்கயே இப்புடினா கோயம்புத்தூர்ல வரலாறு காணாத மழையால இருக்கு எப்புடி தான் தேனு சமாளிச்சிருப்பாளோ நல்ல வேளை நம்ம துர்க்கையம்மா தான் ஆபத்துவனா அந்த தம்பிய அனுப்பிருக்கு”
“ஆமாத்தை இல்லையினா என்ன பண்ணிருப்போமோ அந்த தம்பி குடும்பமும் ரொம்பவே நல்ல மாதிரி. தேனு, நம்ம எல்லாம் சங்கடப்பட்டப்போ அந்த தம்பியோட அண்ணனும் அண்ணியும் தான போன் பண்ணி நம்ம கிட்ட பேசுனாங்க அங்க இருக்குற நிலைமை பார்த்தும் ‘இன்னமும் உங்களுக்கு சங்கடமா இருந்தா நாங்களும் வேணும்னா கெளம்பி உங்க வீட்டுக்கு போறோம்னு ‘ வேற சொன்னாங்களே அதுலயே நம்ம சங்கடம் எல்லாம் அடிபட்டு போச்சேத்தை இப்ப தான் கொஞ்சம் பயமில்லாம இருக்கு”
“இனி எல்லா நல்லபடியாவே நடக்கும் நம்ம குலதெய்வம் பாத்துப்பாரு” என செல்லம்மாள் சொல்லி கொண்டிருக்கும் போதே சத்யமூர்த்தியும் அவரின் தந்தை ராமமூர்த்தியும் வந்து சேர்ந்தனர்.
“மங்கை தேனுகிட்ட பேசிட்டியா ஒண்ணும் பிரச்சனை இல்லையில” என சத்யமூர்த்தி கேட்க,
“இப்போ நாங்க பேசுனேன் நல்லா இருக்காளாம்”
மகனின் பதட்டத்தையும் பயத்தையும் பார்த்த ராமமூர்த்தி,
“இன்னும் எத்தனை வருஷத்துக்கு தான் நீங்க அவளை காவ காக்க முடியும்னு நெனைக்கிற சத்யா” என அவர் அதட்டலாக கேட்க,
“ப்பா!”
“என்ன ப்பா உன் காலம் வரைக்கும் பாத்துப்பியா இப்ப நம்ம எல்லாரும் நல்லா இருக்கோம் அதனால அவளை பத்திரமா பாத்துகிறோம். எல்லா நேரமும் இப்புடியே இருப்போமா? இல்லை சாகாத வரம் தான் வாங்கிட்டு வந்துருக்கோமா?
நாளப்பின்னை ஏதாச்சு ஆச்சுன்னு அப்போ யாரு இருக்கா உன் மகள பாத்துக்க ஒத்த நாயும் வராது. ஓநாயிங்க தான் வரும் வேட்டையாட அவளை இந்த நாயிங்க மத்தியில பாதுகாப்பா விட்டுட்டு நிம்மதியா சாக கூட முடியாதுடா” என அவர் சற்றே கோவமாக,
“என்னப்பா இப்புடி எல்லாம் பேசுறீங்க?”
“உங்க அப்பா சொன்னதுல என்ன தப்பிருக்கு சத்யா தோ ஒரு நாள் விட்டதுக்கு தவியா தவிச்சுட்டு இருக்கா உன் சம்சாரம் இத்தனைக்கும் மழை தான் அதுக்கே இந்த பயம் அப்படி இருக்கையில அவளை தனியா இந்த உலகத்துல பாதுகாப்பா விட்டுட்டு போக முடியுமா? அது நடக்க தான் விடுவாகளா? வேலி இல்லாத பயிரை தான் சும்மா விடுவாங்களா?” என,
“நான் என்னத்தான் மா பண்ணுறது நல்லவன் பிள்ளைய ஆசைப்பட்டு கட்டுறானே கால பூராவும் வச்சு பாத்துப்பானு நம்பி தானம்மா கட்டி வச்சேன் இப்புடி படுபாவி பாதியிலேயே எம்புள்ளைய நிர்க்கதியா விடுவான்னு எதிர்பாக்கலையே” என்றவரின் குரல் மகளின் வாழ்க்கையை நினைத்து கலங்க,
“டேய் இதுக்கு எதுக்கு கலங்குற எம்மா மங்கை நீ சொல்ல கூடாதா?”
“இல்லை மாமா அவரு கலங்கிட்டாரு நா அழுகல அதான் வித்தியாசம். எம் பொண்ணு வாழ்க்கை இப்புடி ஆனத நெனைச்சு வாய் வார்த்தைய கூட பேச முடியல தேனு எதிர்க்க எங்க பேசி தேனு எதுவும் தப்பா நெனச்சிடுவாளோன்னு உள்ளுக்குள்ளேயே வச்சி மருகுறோம்.
இப்புடி உள்ளுக்குள்ளே வச்சு வச்சே எங்க அவளுக்கு ஏதாவது நல்லது செய்யாம போய் சேர்ந்துடுவேனோன்னு பயமா இருக்குத்தை இப்பல்லாம். அதுவும் அந்த நாயி விவாகரத்து ஆன மூணே மாசத்துல இன்னொருத்திய கட்டிகிட்டான்னு தெரிஞ்ச போதே பாதி உசுரு போய்டுச்சு,
இனி எம் பொண்ணு வாழ்க்கை அவ்ளோ தானான்னு நெனைக்கும் போது எங்களால அவ வாழ்க்கை சரிபடுத்த எதுவுமே செய்ய முடியலன்ற போது பெத்த வயிறு பத்தி எரியுது!” என்ற மங்கையின் கண்கள் கலங்கவில்லை என்றாலும் குரல் முற்றிலும் உடைந்து தளர்ந்திருந்தது.
மகன் மற்றும் மருமகளின் வருத்தத்தை கண் கொண்டு காண முடியவில்லை பெற்றவர்களால்.
“இந்தா என்னத்துக்குடா இப்புடி கரையிற அப்பன் நானிருக்கேன் உனக்கு தைரியமா இரு சத்யா தேனுவ அப்புடியே விட்டுடுவோமா என்ன” என ராமமூர்த்தி உரைக்க,
“இல்லப்பா எனக்கு பயமாயிருக்கு எங்க வேற கல்யாணத்தை பத்தி பேசி தேனு தப்பா எதுவும் முடிவு எடுத்து எங்கள விட்டு விலகிடுவளோன்னு பயந்தே அவ கிட்ட பேச முடியாம தவிக்கிறோம்”
“பயந்த வேலைக்காகுமா சத்யா மங்கை நீ என்னம்மா சொல்லுற” செல்லம்மாள் கேட்க,
“நீங்க சொல்றது தான் த்தை சரி அவளுக்கு பார்த்துக்கிட்டு எல்லாம் அவ வாழ்க்கை எங்கேடோ கெட்டு ஒழியட்டும்னு விட முடியாது. அதுவும் அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு நெனைக்கும் போது எல்லாம் ஆத்திரமா வருது.
எம் பொண்ணுக்கு என்ன குறை அத்தை துரோகம் பண்ணவனோ பொண்டாட்டியையும் நெனைக்கல புள்ளையையும் நெனைக்கல இன்னொரு வாழ்க்கைய தேடிக்கிட்டான்.
எம் பொண்ணுக்கு இன்னொரு வாழ்க்கை அமைச்சு கொடுக்க தகுதி இல்லையா என்ன?”
மனைவியின் இந்த பேச்சினை எதிர்பார்த்தே இருந்தார் சத்யமூர்த்தி. மங்கையின் அமைதிக்கு பின்னிருந்தே பூகம்பம் இப்போது வெளிவந்து விட்டதை உணர்ந்தார்.
“ஆனா மங்கை தேனு இதை எப்புடி எடுத்துப்பா ஒத்துப்பாளா? அவ மனசயும் நம்ம பாக்கணும்ல” என தந்தையாய் மகளின் மனதை பற்றி நினைக்க.
“ஓஹோ உங்க பொண்ணு இதுக்கு ஒத்துக்குவான்னு வேற நெனைப்பு இருக்கா உங்களுக்கு. இதை பத்தி பேச்சையே எடுக்க விடமாட்டா மீறி பேசுனா நம்ம திரும்பவும் அதை பத்தி பேசவே பயப்படுற மாதிரி தான் ஏதாவது செஞ்சு வைப்பா அதனால அவசரகுடுக்கை தனமா இதை போய் அவகிட்ட பேசிட்டு இருக்காதீங்க அப்பறம் எப்பவுமே நம்ம அவளுக்கு வாழ்க்கை அமைச்சு குடுக்கா முடியாம போய்டும் ஏதாவது வரன் பாத்துட்டு அப்பறம் சொல்லிக்கலாம்”
“அப்ப மட்டும் தேனு ஒத்துக்குவாளா?”
“கண்டிப்பா இல்லை தலைகீழ நிப்பா சண்டை போடுவா வீட்டை விட்டு போறேன்னு மிரட்டுவா. அது இதுன்னு காரணம் சொல்லுவா ஆனா இதை எல்லாம் சொல்ல நம்ம அவளுக்கு யோசிக்கவே நேரம் குடுக்க கூடாதுன்னு சொல்றேன். இக்கட்டான சூழ்நிலையில நிறுத்தி அவ போய் தான் ஆகணும்ன்னு இருந்தா அவளால மறுக்க முடியாது. முடிஞ்ச வரைக்கும் அவ கண்டதையும் யோசிக்க நேரம் இருக்க கூடாது!
நீங்க இப்பவே போய் வாய் விட்டிங்கன்னா மொத்தமும் போச்சு, பாக்கலாம் நெறைய போராட வேண்டியிருக்கும் அவகிட்ட அத்விதன வச்சு கூட ஏதாவது பயமுறுத்த பாப்பா ஆனா அவ வாழ்க்கைக்காக அவ வாழ்க்கையோடவே போராட நான் தயாரா இருக்கேன்!
நான் கேக்குறது எல்லாம் ஒண்ணே ஒண்ணு தாங்க எக்காரணத்தை கொண்டும் அவ அழுகையை பாத்து மெரட்டலுக்கு பயந்து நீங்க அவ பக்கம் சாஞ்சிட கூடாது. அது ஒண்ணு தான் நான் வேண்டுறேன் உங்க கிட்ட, எனக்கு பக்கபலமா நீங்க இருக்கணும்” என்க,
“மங்கை என்னென்னமோ சொல்ற எனக்கு எதுவும் புரியல. ஆனா நம்ம தேனு மனசு உடைச்சிடக் கூடாது அத மட்டும் பாத்துக்கோ” என அவர் மங்கையின் பக்கம் தான் என்பதை சொல்லாது சொல்லி விட்டார்.
இப்போது தான் மங்கைக்கு திருப்தியானது.
“அப்பறம் என்ன தேனுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளைய பாத்துட வேண்டியது தான்” என செல்லம்மாள் கூற,
அனைவருக்கும் அதில் சம்மதமே.
*******************************
“அப்பறம் அதி கண்ணா காலையில எழுந்ததும் டீ காபி எல்லாம் குடிக்கிற பழக்கம் இல்லையா? ஆனா எனக்கு இருக்கே பேசாம ராகேஷூக்கு போன போட்டுடலாமா?” என கதிர் சொல்லி கொண்டிருந்த நொடி அவன் முன் டீ கப்பை வைத்து விட்டு சென்றாள் தேன் முல்லை.
“சரி சரி டிபனுக்கு போனை போட்டுக்கலாம்” என சிரிப்புடன் கூறியவன் அதனை எடுத்து பருக ஆரம்பித்தான்.
நேற்றைய இரவில் இருந்து முல்லையை வேறு எதை பற்றியும் யோசிக்க விடாது பம்பரமாய் சுழல விட்டு கொண்டிருக்கிறான்.
கதிரை இங்க தங்க சொல்லி விட்டாலும் முல்லைக்கு மனம் உறுத்த சரியாக மங்கையின் போனும் வர எடுத்து பேசியவள் கதிரின் இருப்பையும் கூற சில நொடிகள் மெளனம் மட்டுமே நீடித்தது.
“ம்மா ம்மா பாத்தில உனக்கும் அவர் தங்குறதுல சங்கடம் தான அதை சொன்ன இவர் ஒத்துக்க மாட்டுறாரு நீ வை மா நான் சீதா மேம்கு கால் பண்ணி பேசுவேன் உனக்கு விருப்பம் இல்லையின்னு” என படபடவென பொரிந்தவள் மங்கை பேச இடம் கொடாது போனை வைத்தவள் அடுத்த நொடி சீதாவிற்கு அழைத்து விஷயத்தினை கூற,
சீதாவும் கதிருக்கு அழைத்து அவன் அங்கே தங்குவதில் முல்லையின் அம்மாவிற்கு விருப்பம் இல்லை என கூற,
“ஓஹ் அப்டியா அப்ப அவுங்க அம்மா நம்பர் வாங்கி நீங்க பேசுங்க அண்ணி இங்க இருக்குற நிலைமைய எடுத்து சொல்லுங்க அப்பவும் அவுங்க அதையே சொன்னாங்கன்னா நான் பேசுறேன்” என்று விட,
இவன் பேசுவதை கேட்டு கொண்டிருந்த முல்லை “அய்யோ இவரா! அதுக்கு சீதா மேம்மே பேசட்டும்” என அலறியவள்,
மங்கையின் நம்பர் கேட்ட சீதாவிடம் மறுக்காது கொடுத்தாள். எப்படியும் மங்கை ஒத்து கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில்.
ஆனால் சீதாவின் பேச்சில் மங்கை இவளிற்கே அழைத்து “உன் பாதுகாப்புகாக தான இருக்காங்க அந்த தம்பி வேண்டாம்னு சொல்லுவியா நாங்களும் அங்கே இல்லாதப்ப யார நம்பி உன்னை விடுறது. அவர் இருக்குறதால கொஞ்சம் பயம் இல்லாம இருக்கோம். அவருக்கு என்ன தேவைன்னு பாத்து செய்” என கூறி அவள் நம்பிக்கையில் மண் அள்ளி போட,
இனி யாரும் தனக்கு உதவ போவதில்லை என்பதை உணர்ந்தவள் அமைதியாகி விட்டாள்.
கதிர் ஹாலில் தூங்க முல்லையும் குழந்தையும் அறையினுள்.
வெளிய கதிர் இருப்பது முல்லைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை தர எதுவும் நினைக்காமல் உறங்க முயல அதற்கு இடம் கொடமல் அதுவரை விலகியிருந்த ஹரிஷின் நினைவுகளும் சற்று முன் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் வலம் வர உறக்கம் வெகு தொலைவு சென்று விட்டது.
அதிலும் ஹரிஷ் பேசிய வார்த்தைகள் இப்போதும் அவள் கண்களில் கண்ணீரை வரவழைக்க ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாத விசும்பி விட அந்த சத்தத்தில் குழந்தை சிணுங்க எழுந்தமர்ந்து விட்டாள்.
எங்கே மேலும் அழுகை வந்து குழந்தை விழித்து விடுவானோ என நினைத்தவள் கதவை திறந்து வெளியேற,
“என்ன இன்னும் தூங்கலையா?? ” என்ற கதிரின் குரலில் அவன் இருப்பது நினைவு வர,
“தண்ணி குடிக்க போறேன்” என,
“வரும்போது எனக்கும் தண்ணி எடுத்துட்டு வா தாகமா இருக்கு” என்றவனின் பேச்சில் வேண்டா வெறுப்பாக கிட்சன் சென்றவள் தண்ணீர் எடுத்து வந்து தந்து விட்டு அங்கேயே நிற்க,
“இங்கேயே இருக்கட்டும் நீ போ” என அவன் கூற வேறு வழியில்லாது மீண்டும் அறைக்குள் சென்றாள்.
ஒரு மணி நேரமாக போரடியும் உறக்கம் அவளை அண்டாமல் இருக்க சற்றே வெளியே காற்றாட நின்றால் தேவலை என தோன்ற,
ஒரு மணி நேரம் ஆகிவிட்டது கதிர் உறங்கியிருப்பான் என எண்ணியவள் இம்முறை கவனமாக மெதுவாக சத்தம் எழுப்பாமல் வெளியேற,
சரியாக அவனை கடந்து செல்லும் நேரம்,
“முல்லை! இன்னும் என்ன வேணும்” என்றவனின் குரலில் பிடிபட்ட பாவனையில் நின்றவள்,
“இல்லை லைட்டா பசிக்குது அதான் ஏதாச்சும் இருக்கான்னு” என அவள் இழுக்க,
“ஓஹ் குட் குட் எனக்கும் பசிக்குது ஏதாவது செஞ்சு எடுத்துட்டு வா போ” என்றவாறு அவன் எழுந்து அமர்ந்து விட,
“இதேதடா வம்பு ” என நொந்தவள் கிட்சன் செல்ல எதுவும் இல்லை, பின் ஃப்ரிட்ஜில் பால் இருக்க எடுத்து காச்சியவள் இரண்டு பிஸ்கட்டுகளையும் சேர்ந்து எடுத்து கொண்டு அவனிடம் நீட்ட மறுக்காமல் வாங்கி கொண்டான்.
‘வந்ததுக்கு ஒரு வேலையா’ என சலிப்புற்றவள் தனக்கு ஒன்றை எடுத்து கொண்டு ஷோபாவில் அமர,
“என்ன இந்த பிஸ்கெட்ட பால்ல தொட்டு சாப்பிடுறதா” என ஆரம்பித்தவன் அதை இதை என வாய் மூடாமல் பேச வேகவேகமாக பாலை அருந்தியவள் அங்கிருந்து எழுந்து செல்ல இவனும் எழ,
“கொடுங்க நான் கழுவிக்கிறேன்” என அவனிடம் இருந்து வாங்கியவள் கழுவி வைத்து விட்டு வெளியே வந்தவள் மீண்டும் அறையினுள் செல்ல முயல,
“முல்லை தூக்கம் வரலைன்னா வாங்களேன் ஏதாவது பேசிட்டு இருப்போம்” என்றவனின் குரலில்,
“ஏதே!” என அலறியவள்
‘இவர் கூட உட்கார்ந்து பேசுறதா அதுவும் இந்த ராத்திரியில அதுக்கு நான் தூங்கலனாலும் பரவாயில்ல’ என நினைத்தவள்,
“தூக்கம் வருது” என சொல்லி விட்டு படுக்கையில் விழுந்தவள் எங்கே முழித்திருந்தால் பேச கூப்பிடுவானோ என அஞ்சி இறுக கண்களை மூடி தூங்க முயல அதில் வெற்றியும் கண்டு விட்டாள்.
இதோ காலையில் எழுந்தவன் அவளை ராகேஷ் பேர் சொல்லி வம்பு செய்ய ஆரம்பிக்க, அதற்கு வாய்ப்பளிக்காது டீயை கொண்டு வந்து வைத்து விட்டே சென்று விட்டாள்.
அடுத்து அவள் டிபனிற்கு ரெடி செய்ய ஆரம்பிக்க கதிர் குழந்தையுடன் பொழுதைகழிக்க என சிறிது சந்தோஷத்தை பூசி அழகாய் மாறியிருந்தது காலை வேளை.
இவர்களுக்கு அழகான விடியலாக மாறிய அதே நேரம் ஹரிஷிற்கும் சுரபிக்கும் அதற்கு நேர்மாறாக மாறியிருந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
16
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கதிர் எப்படியோ அவளை தூங்க வச்சிட்ட … உனக்கு அடுத்த ஆப்பு ரெடி பண்றாங்க முல்லை அப்பா அம்மா .. பேசிகிட்டே இருக்க கதிர் அளவா பேசுற முல்லை .. செம்ம ஜோடி பொருத்தம் ..
தங்கள் காலத்திற்கு பிறகு மகளின் பாதுகாப்பான வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற பயம் இருக்கும் பெற்றோருக்கு.
முல்லையின் பெற்றோர் அவளுக்கு திருமணம் செய்து வைக்க எடுத்த முடிவு சரியே.
எப்படியும் மகள் சம்மதிக்க மாட்டாள் என்கையில், கட்டாய சூழ்நிலையை உருவாக்கி அவளை திருமணம் செய்து வைக்க நினைக்கின்றனர்.
கதிரின் அக்கறை அருமை 😍