Loading

அத்தியாயம் 9

அந்த பெரிய வீட்டின் விருந்தினர் அறையில் அமர்ந்திருந்தாள் ஆனந்தி… கையில் பாடப் புத்தகமிருக்க, அதனை ஆழ்ந்து படித்து கொண்டிருந்தவளின் கவனத்தை அலைபேசியின் சத்தம் கலைத்தது.தொடுதிரையில் ஒளிர்ந்த பெயரை பார்த்தவள் உடனே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

“ஹலோ அண்ணி எப்படி இருக்கீங்க…”என்ற நல விசாரிப்புடன் ஆரம்பித்தது ஆனந்தியின் பேச்சு.

“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? வர வாரம் தேர் நோம்பி வருது தெரியும்ல…” என்றாள் எதிர் புறம் இருந்தவள்.

“ஹான் அண்ணி தெரியும்…” சற்றே தயங்கி ஒலித்தது இவளின் குரலும்.

“லீவ் கேட்டுட்டியா? உங்கண்ணன் நேத்தே கேட்டுட்டாரு. நீயும் கேட்டுக்க. கடைசி நிமிசத்தில வேண்டாம்னு சொல்லிட போறாங்க…” அபியை பற்றி கணவன் கூறி இருப்பதால் முன்கூட்டியே கேட்டுகொள் என்றாள் செண்பகம்.

“லீவ் தருவாங்க அண்ணி ஏன் பயப்படறீங்க? வேலைக்கு சேர்ந்ததுலிருந்தே நான் லீவ் எடுக்கல. சோ இப்ப லீவ் எடுக்கறேன் சொன்னாலும் ஒகேன்னு தான் சொல்லுவாங்கண்ணி அண்ட் நம்ம என்ன பெய்ட் லீவா கேட்கறோம் பாத்துக்கலாம்…” அத்தனை திடமாக கூறினாள் ஆனந்தி. அவளின் திடம் அபியிடம் கரைந்து போவதை அறிந்திருந்தால் இப்படி நம்பிக்கையாக கூறியிருக்க மாட்டாளோ என்னவோ…

“ஹ்ம்ம் என்னவோ சொல்ற! இருந்தாலும் இன்னைக்கே கேட்டுக்க ஆனந்தி. நோம்பிக்கு நீ வரலன்னா ஊருல நல்லா கதைகட்டி விட்ருவாங்க” செண்பகம் சொல்ல ஆமென்பதை போல் இங்கிருந்தே தலையாட்டினாள் ஆனந்தி.

“நாங்க அங்க போகும் போதெல்லாம் உன்னை தான் கேட்கறாங்க. உங்க கூடத்தான் இருக்காளா இல்லை எவனையாவது இழுத்துட்டு ஓடி போயிடுச்சானு கேட்காம கேட்கறாங்கன்னு உங்கண்ணன் பொலம்புட்டு இருந்துச்சு.நீயும் ஊருக்கு வந்து வருசம் ஆயிடுச்சு…” என்ற செண்பகத்தின் பேச்சு மேலும் சில நிமிடங்களுக்கு தொடர்ந்தது. அனைத்திற்கும் ம்ம் என்ற பதிலை மட்டுமே கொடுத்தாள் ஆனந்தி.

“சரி, பேசிட்டு சொல்லு” என்று செண்பகம் அழைப்பை துண்டித்தாள்.

 மாலையில் அபி வந்ததும் கேட்டுக் கொள்ளலாம் என நினைத்தவள் மணியை பார்த்தாள்.நான்கு மணியாக பதினைந்து நிமிடங்கள் இருந்தது. சரியாக சிறுவர்கள் இருவரும் வரும் நேரம் என நினைத்தவள் வீட்டிற்கு வெளியில் உள்ள கார்டன் ஏரியாவில் அமர்ந்து கொண்டாள்.

எப்போதும் ஆனந்தி தான் இருவரையும் அழைத்து வர செல்வாள். கடந்த சில வாரங்களாக அபியே இருவரையும் அழைத்து வந்து விடுகிறான்.அவன் போக முடியாத சூழ்நிலை என்றால் மட்டுமே அபியிடமிருந்து இவளுக்கு குறுஞ்செய்தி வரும்.

கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்தவளின் எண்ணம் முழுவதும் ஊருக்கு செல்வதை பற்றி தான் இருந்தது. ஒருவாரம் தான் என்றாலும் குழந்தைகளை விட்டு விலகி இருக்க வேண்டும் என்ற எண்ணம் மனதை அரித்தாலும் ஒரு புறம் சீதா இருக்கிறார் பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கையும் இருந்தது…

கேட் திறக்கும் சத்தத்தில் தன் நினைவில் இருந்து மீண்டவள் நிமிர்ந்து பார்த்தாள். அபியின் கார் உள்ளே வந்து கொண்டிருந்தது… நேராக போர்டிகோவிற்கு அருகில் உள்ள கார் பார்க்கிங் ஏரியாவில் சென்று நின்றது.

குந்தவியும், சோழாவும் கீழே இறங்குவதற்குள் ஆனந்தி காரை நெருங்கி இருந்தாள்.

பின் இருக்கையிலிருந்த பள்ளிப்பையை

எடுத்தவள், அபியை நிமிர்ந்து பாராது குழந்தைகளுடன் பேசியபடியே உள்ளே சென்றாள்.

நேராக பிள்ளைகளின் அறைக்குள் அழைத்து சென்றவள் இருவரையும் குளிக்க வைத்து அவர்களுக்கென்று பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட பழச்சாறை கொடுத்தாள். சிறிது நேரம் அவர்களோடு விளையாடிவிட்டு இன்றைய ஹோம் வொர்க் என்னவென்று பார்த்தாள். அதற்கு பின் நேரம் இறக்கை இல்லாமல் சென்றது அவளுக்கு. சொல்லப்போனால் அபியிடம் பேச வேண்டும் என நினைத்தது கூட மறந்து விட்டது ஆனந்திக்கு.

இரவு எட்டு மணயளவில் பிள்ளைகள் இருவரையும் தன் அருகில் படுக்க வைத்தவள் கதை சொல்ல ஆரம்பித்தாள் அடுத்த சில நிமிடங்களிலயே பிள்ளைகள் இருவரும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தனர்…

****

மேல் தளத்திலிருந்த அபியின் அறையை நோக்கி வேகமாக நடந்தாள் ஆனந்தி…

ஒரு பக்க மனம் தடக் தடக்கென்று அடித்துக் கொண்டே இருந்தது. அபியின் அறையை நெருங்க நெருங்க மூச்சுக் காற்றின் சத்தம் அவளுக்கே கேட்டது. ஆம், அவனின் பிறந்தநாள் அன்று நடந்த நிகழ்வுகளின் தாக்கம் அவளுள் இன்னுமிருந்தது.

‘பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது தான் தைரியம்…’ என மனதில் ஒரு முறைக்கு பலமுறை தனக்கு தானே கூறிக் கொண்டவள் அச்சத்தை அகதிற்குள் மறைத்து தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அபியின் அறையை தட்டினாள்.

“வாங்க…” என்றதும் கதவை திறந்து உள்ளே நுழைந்தவளின் கண்ணிமைகள் விரிந்தது.

அவள் வீட்டின் ஹாலை விட சற்றே பெரிய அறை அது… இன்டீரியர் மற்றும் சிலிங் ஒர்க் அத்தனை அழகாய் செய்திருந்தனர்…

கதவிற்கு நேர் எதிராக வாட் ரோப்பும், வலது புறத்தில் படுக்கையும் அதற்கு நேர் எதிரில் சோபாவும் இருந்தது. கதவிற்கு இடது புற சுவரில் டிவி யூனிட்டும்,கேபினட்டும் இருந்தது. படுக்கைக்கு மேல் அம்முவின் பெரிய புகைப்படமும் அதனை சுற்றி குழந்தைகளின் புகைப்படங்களும் இவனின் புகைப்படங்களும் அழகாக வட்டமாய் வடிவமைத்து இருந்தது. இவை அனைத்தும் நேர்த்தியாகவும் , தூய்மையாகவும் இருக்க அந்த வீட்டின் வேலையாட்களை மெச்சிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை ஆனந்தியால். நிமிடத்திற்குள் அறையை அலசியவளின் பார்வை படுக்கையில் அமர்ந்திருந்தவனின் மேலே விழுந்தது.

அவள் வந்ததிலிருந்து அபியும் ஆனந்தியை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையில் உள்ளம் பதற, வார்த்தை வெளிவர மறுத்தது அவளுக்கு. எச்சிலை கூட்டி விழுங்கியவள் எதிரில் அமர்ந்திருந்தவனை பார்த்தாள்.

இமைக்கும் நேரத்தில் இருவருக்குமான இடைவெளி நூலிடையில் இருந்தது. ‘கஞ்சானா கூட இவ்வளவு ஸ்பீடா லாரன்ஸ் பக்கத்துல போயி இருக்காது டா…’ என நினைத்தும் நினைக்காமல் அந்த காஞ்சானா பேயை போலவே அவளை கழுத்தோடு இறுக்கி அணைத்து “ அனு வா, அனு வா,வா…’ என அபி கத்த, அதே அறையில் மூலையில் அமர்ந்திருந்த அனுவின் உருவம் இவளை நெருங்கி வந்தது…

“ஐயோ அம்மா…” என கனவில் கத்தியவள் நிஜத்திலும் கத்திவிட்டாள்.

ஆம், குழந்தைகளுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தவள் எப்படி உறங்கினால் என்றே தெரியாத அளவிற்கு அவர்களோடு இவளும் உறங்கி இருந்தாள்.

“ஹேய்,என்னாச்சு,கண்ணை முழிச்சு பாரு, ஹேய் மிஸ் ஆனந்தி…” என்ற அபியின் குரலில் இன்னும் இமைகளை இறுக மூடிக் கொண்டாள்.

“இடியட்… கண்ணை திறந்து பாரு…” அபியின் கோபக் குரல் கேட்டாலும் எங்கே அம்மு வந்து விடுவாளோ என்ற பயமே அவளை சூழ்ந்து இருந்தது. எது நிஜம்? எது கனவென்று பிரித்தறிய முடியாத நிலையில் இருந்தவளின் காதில்

“ஆனந்தி என்னமா? என்னாச்சு? குளோரிக்கு என்னாச்சு?…” என்ற சீதாவின் குரலும், குந்தவியின் குரலும் மாறி மாறி கேட்கவும் தான் மெல்ல கண்களை திறந்து பார்த்தாள்…

அவளது விழிகளுக்குள்

இடுப்பில் கை வைத்து முறைத்தப்படி நின்றிருந்தவன் விழுந்தான். அவனது முறைப்பில் சற்றே நிகழ்வுக்கு வந்தவள் ஒரு முறை தலையை குலுக்கி விட்டு மீண்டும் எதிரில் நின்றவனை பார்த்தாள். ‘இவன் எதுக்கு இப்படி நிக்கறான்…’ என நினைத்தவள் அவனை புருவங்கள் உயரத்தி பார்த்தாள்.

“என்னாச்சு ஆனந்தி…” என்ற சீதாவின் குரலில் சட்டென பார்வையை மாற்றியவள்

“அது வந்து மேம்… கெ…ட்…ட க…ன..வு…” தடுமாறி ஒலித்தது அவளின் வார்த்தைகள்.

“அபி…” ஆனந்தியை முறைத்தபடி நின்ற மகனை அழைத்தார் சீதா.

“பசங்களை தூக்கிட்டு போக வந்தேன் மா. ஃபர்ஸ்ட் சோழாவை தூக்கிட்டு போயிட்டேன். இப்ப குந்தவியை தூக்க வந்தேன். அதுகுள்ள இப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா இடியட்” என்றான் கோபமாக.

அவனின் இடியட் என்ற வார்த்தையில் கடுப்பானவள் அதற்கு பதில் பேசும் முன்பே “சரி அபி நீ போ. குந்தவி அப்பா கூட போ…” என இருவரையும் அனுப்பி வைத்தவர் ஆனந்தியின் தலையை வருடிக் கொடுத்து “தூங்குமா…” என்றார்.

மெல்லிய புன்னகையுடன் சரியென தலையாட்டியவள் படுக்கையில் கண்களை மூடி உறங்க முயற்சித்தாள். மீண்டும் அதே கனவு வர பெருமூச்சுடன் எழுந்து அமர்ந்தவள் மணியை பார்க்க ஒன்பது நாற்பது எனக் காட்டியது. இனி உறக்கம் வர வெகுநேரமாகும் என நினைத்தவள் வெளியில் வந்தாள்.

ஹாலில் சீதா அமர்ந்திருக்க நேராக அவரிடம் சென்றவள் சில நிமிடம் பேசிவிட்டு விடுமுறை பற்றி கூறினாள்.

“தாராளமா போயிட்டு வா ஆனந்தி. எதுக்கும் அபிகிட்ட ஒரு வார்த்தை சொல்லிடு. ஆபிஸ் ரூம்ல தான் இருக்கான்…” என்றதும் அவளுக்கு மீண்டும் கனவு நினைவு வர பாவமாக சீதாவை பார்த்தாள்.

மகனை எண்ணி பயப்படுகிறாள் என நினைத்தவர் “நீ போயி கேட்டுட்டு இரு. நான் அவனுக்கு பால் எடுத்துட்டு வரேன்…” எனக் கூறவும் சரியென்றவள் ஆபிஸ் அறையை நோக்கி நடந்தாள்.

‘ஒருவரிடம் கேட்டால் போதாதா…’ என நினைத்தாலும் கைகள் அவனின் அலுவலக அறையை தட்டும் வேலையை சரியாக செய்தது.

“எஸ்…” என்றான் கம்பீரக் குரலில். அவன் குரலில் ஒருபுறம் எழுந்த எரிச்சலை அடக்கியவள் கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.

ஆனந்தி உள்ளே வந்ததும் மடிக்கணினியில் பார்வை பதித்திருந்தவன் நிமிர்ந்து இவளை பார்த்துவிட்டு மீண்டும் மடிக்கணனியில் மூழ்கி விட எரிச்சலாகியது ஆனந்திக்கு…

“என்ன என்பதை போல் புருவம் உயர்த்தி கேட்டிருந்தால் கூட எதற்கு வந்தோமென கூறியிருப்பாளோ என்னவோ? இப்போது அவன் கண்டும் காணாமல் இருப்பது அவளுக்கு அத்தனை எரிச்சலை கொடுத்தது.

சில நொடிகள் பல நிமிடங்களாகியும் அவன் நிமிராமல் அப்படியே அமர்ந்திருந்தான். தற்போது அவளின் எரிச்சல் கோபமாகி அதன் எல்லையை கடந்திருந்தது… அதற்கு மேல் பொறுமையில்லாமல் “சார்”என அழைத்தாள்.

அவள் குரலில் தெரிந்த எரிச்சலை துளியும் கண்டுகொள்ளாமல்

நிதானமாக நிமிர்ந்து பார்த்து என்னவென்பதை போல் புருவம் உயர்த்திக் கேட்டான்.

அது மேலும் எரிச்சலை உண்டாக்க “நெக்ஸ்ட் ஒன் வீக் நான் லீவ்.” செய்தியாக கூறியவள் நிமிடம் அங்கு நிற்காது அறை கதவை நோக்கி நடந்தாள்.

அவள் கூறிய செய்தி பதிப்பு நரம்புகள் மூலம் அவனின் மூளைக்கு சென்றடைந்த சமயம் அவள் அறைக் கதவை அடைந்திருந்தாள்.

சட்டென கோபம் துளிர் விட “ஒகே வீட்டிலேயே இருந்துக்கங்க, நான் வேற ஆளை பாத்துக்கிறேன்…” எல்லா முதலாளிகளும் கூறும் அதே வார்த்தையை இவனும் விட்டான்.

அவன் வார்த்தையில் சட்டென நின்றவள் பின்னால் திரும்பி “தட்ஸ் கூல் சார். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.நானும் வேற வேலையை பாத்துக்கிறேன்…” எனக் கூற பல்லை கடித்தான்.

தான் அப்படி கூறினால் அழுது ஆர்ப்பாட்டம் செய்தாவது விடுமுறை கேட்பாள் என நினைக்கவில்லை என்றாலும் கொஞ்சமாவது அதிர்ச்சியடைவாள் என நினைத்தவனின் எண்ணம் தூள் தூளாக சிதறி விழுந்தது. இருந்தும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் சிறு தோள் குலுக்களுடன் மடிக்கணினியின் பக்கம் கவனத்தை செலுத்தியவனின் காதில்

“ஒகே சார் இந்த மந்த் சேலரியை ஜிபே பண்ணிடுங்க, நெக்ஸ்ட் வொர்க் பார்க்குறேன்…” எனக் கூறி முடிக்கும் முன்பே சீதா வந்து விட்டவர்

“ஆனந்தி என்னமாச்சு, ஏன் வேற வேலை பாக்கறன்னு சொல்லிட்டு இருக்க…” என்றபடி உள்ளே வந்தார் சீதா. அவருக்கு வழி விட்டு விலகி நின்றாள். நேராக அபியிடம் பால் கப்பை கொடுத்தவர் மீண்டும் ஆனந்திடம் திரும்பி அதே கேள்வியை கேட்டார்.

“சார் கிட்ட நெக்ச்ட் வீக் லீவ்ன்னு சொன்னேன் மேம். அதுக்கு சார் தான் நான் வேற ஆளை பாத்துக்கிறேன்,நீங்க போகலான்னு சொல்றாரு…” என்றாள்.

“என்னமா? அவன் தான் அப்படி சொல்றான்னா நீயும் இப்படி சொல்லிட்டு இருக்க…” சலிப்பாக சீதா சொல்லவும் அபிக்கு அத்தனை எரிச்சல் தாயின் பேச்சில்… மடியில் படுக்க வைத்து உணவு மட்டும் தான் ஊட்டவில்லை மற்றபடி அவளை கொஞ்சி தீர்க்கிறார் என நினைத்தவன் ஆனந்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு மடிக்கணினியில் கவனத்தை செலுத்தினான்.

“பின்ன எப்படி மேம் சொல்ல சொல்றீங்க. அவர் அப்படி சொன்னதும் ‘ ஐயோ! சார் இப்படியெல்லாம் சொல்லாதீங்க. என் குடும்பமே இதை நம்பி தான் இருக்கு.என் சேலரி வைச்சு தான் என் ஃபேமிலியே ரன் ஆகுது. பிளீஸ் சார் என்னை வேலையை விட்டு போக சொல்லாதீங்க…’ன்னு கெஞ்ச வேணும்னு சொல்றீங்களா மேம்…” அத்தனை கோபம் அவளுக்கு.

அவளின் கோபம் நியாயம் தானே என நினைத்தவர் அபியை ஒரு பார்வை பார்த்தபடி “நீ போ மா, நான் அவன்கிட்ட பேசிக்கிறேன் போ…” எனக் கூறவும் நாற்காலியில் அமர்ந்திருந்தவனை தீர்க்கமாக பார்த்தபடி அங்கிருந்து வெளியேறினாள் ஆனந்தி.

“என்ன அபி இது…” என்றவரின் குரலிலும் கோபம் இருந்தது.

“என்னன்னா…” பக்கவாட்டிலிருந்த டேபிலில் லேப்டாப்பை வைத்தவன் நாற்காலியில் நன்றாக சாய்ந்தப்படி கேட்டான்.

“அந்த பொண்ணுகிட்ட ஏன் அப்படி பேசன அபி… லீவ் கேட்டா சரின்னு சொல்ல வேண்டியது தானே.

அதை விட்டுட்டு வேற ஆளை பாத்துக்கிறேன்னு சொல்றது சுத்தமா சரியில்லை. நம்ம வீட்டு வேலைக்கு வராங்கன்னா லீவ் எடுக்க கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா? ஏன் அபி இப்படி பண்ற..சொல்லப்போனால் அவ இங்க வந்ததிலிருந்து லீவ் எடுக்கவே இல்லை… அவ கேட்கிற லீவை கொடுத்தா தான் என்ன?” இப்படி செய்கிறானே என்ற ஆதங்கம் அவரின் குரலில் நன்றாகவே தெரிந்தது…

“அவ கேட்ட விதம் சரியில்ல ம்மா. ஏதோ இன்ஃபோம் பண்றது போல சொல்லிட்டு போறா. அவ ஒழுங்கா லீவ் கேட்டு இருந்தா நானும் அதுபோல பேசி இருப்பேன்…” என்றான் சாதரணமாக.

இப்போதும் அவன் செய்ததை இன்ஸ்டன்ட்டாக மறந்து தான் போனான்.பெருமூச்சுடன் அவனை பார்த்தவர் “என்னமோ போ. அந்த பொண்ணுகிட்ட மட்டும் தான் இப்படியெல்லாம் ஸ்ட்ரீட்டாவும் அரகேண்டாவும் நடந்துக்கற…” என்றவர் அங்கிருந்து நகர்ந்தார். பாவம் அவருக்கு தெரியவில்லை அவரால் தான் அவளிடம் அவன் இப்படி கடுமையாக நடந்து கொள்கிறான் என்று

‘ஸ்ட்ரீட் ஒகே அது என்ன அரகேண்டா நடந்துக்கிறேன்…’ எனக் கேட்க நினைத்தாலும் கேட்கவில்லை அவன்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
15
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்