
அத்தியாயம் 25
தன் அறையிலிருந்து வெளி வந்தவனின் கோபம் உச்சியில் நின்றது. மடவோள் பேசியதற்கு பதிலுக்கு பதில் பேசிவிட்டு வந்திருந்தாலாவது கோபம் குறைந்திருக்குமோ என்னவோ… தற்போது பதில் பேசாமல் கோபத்தை அடக்கியப்படி வந்தது ஒருபக்கம் அவன் மீதே அவனுக்கு கோபம் வந்தது.
“சேறா நான்… இந்த சேறு என்ன பண்ணும்னு பாரு…” அகங்காரமாக கத்தியது ஆடவனின் மனம்.
இதுவே முன்பிருந்த அபியாக இருந்திருந்தால் மனதின் ஆணவப் பேச்சிற்கு செவி சாய்த்திருக்க மாட்டானோ என்னவோ.
தற்பொழுது இருப்பது தொழிலதிபர் அபிநயன் அல்லவா நன்றாகவே தன் மனதின் ஆணவப் பேச்சிற்கு செவி சாய்த்தான். அதன் விளைவு சீதா அழைத்ததைக் காதில் கூட வாங்காமல் வீட்டை விட்டு வெளியேறினான்.
சீதாவின் அழைப்பை செவி சாய்த்திருந்தால் பின்வரும் அசம்பாவிதங்களை தடுத்து இருப்பானோ என்னவோ.
அடுத்த சில நிமிடங்களில்
திருப்பூர் மத்திய சாலையில்
அதிவேகமாக சென்று கொண்டிருந்தது அபியின் வாகனம்.
ஆடவனின் மனம் முழுக்க ஆனந்தி பேசிய வார்த்தைகள் மட்டுமே ரீங்காரம் போல் கேட்டுக்
கொண்டிருந்தது. கோபத்தை வாகனத்தின் வேகத்தில் காட்டினான். காரிலேயே சுற்றி திரிந்தவன் கண்களில் விழுந்தது
பண்ணையார் ஏசி பார் என்ற பெயர் பலகை… அடுத்த நிமிடம் துளியும் யோசிக்காமல் அந்த நவநாகரீக பாரில் காரை விட்டான்…
*****
இங்கு… அபி அங்கிருந்து நகர்ந்ததும் பொத்தென்று தரையில் அமர்ந்தவளுக்கு கண்ணீர் நில்லாமல் வழிந்தது. நேற்றைய நாளிலிருந்தே அதீத மன அழுத்தம் பெண்ணிற்கு… எத்தனைத் தான் தாங்குவாள் அவளும்.
நேற்று செண்பகத்தின் வார்த்தைகளில் அவமானப் பட்டுப் போனாள் என்றால் இன்று அபியின் வார்த்தையில் காயப்பட்டுப் போனாள்.
அதுவும் திட்டமிட்டு திருமணத்தை நடத்திக் கொண்டாய் என்றது அவளின் மனக்காயத்தை மீறிய கோபத்தைக் கொடுத்தது. அந்த கோபத்தின் வெளிப்பாடு தான் சற்று முன் அவனிடம் கத்தியது கூட…
அதற்கு ஆனந்தி துளியும் வருத்தப்படவில்லை. அபி பேசியதற்கு தான் பேசியது சரியென்றே எண்ணினாள்.
கன்னத்திலிருந்த கண்ணீரின் தடத்தை ஒரு முறை அழுத்தித் துடைத்துக் கொண்டவளுக்கு அப்போது தான் உரைத்தது இன்னும் அபியின் அறையில் இருக்கிறோம்
என்று…
தீ சுட்டார் போல் எழுந்து நின்றவள் அறைக்கதவை நோக்கி நடக்க அனிதாவின் டைரி கால்களுக்கு இடையில் தட்டுப்பட்டது. அதனை புருவங்கள் சுருங்க பார்த்தவள் டைரியை கையில் எடுத்தாள்.
‘யாரோடதா இருக்கும்? யாருதுன்னு திறந்து பார்ப்போமா?…’ என நினைத்த கணம் “ஆனந்தி..” என்ற சீதாவின் குரல் கேட்டது.
பெரியவளின் குரல் கேட்டதும் தான் அபியை எதற்கு அழைக்க வந்தோம் என்ற நினைவே வந்தது ஆனந்திக்கு. “வரேன் மேம்…” எனக் குரல் கொடுத்தவள் கையிலிருந்த டைரியை மேசையில் வைத்துவிட்டு அபியின் அறையிலிருந்து வெளியேறினாள்.
வேகமாக வெளியில் வந்து கொண்டிருந்தவளின் எண்ணங்கள் முழுவதும் அபியின் அறைக்கு வரும் முன்பு நடந்த கணத்தை அசைப் போட்டது…
பிள்ளைகள் இருவரையும் அவர்களின் அறையில் உறங்க வைத்து விட்டு வந்தவளை அழைத்தார் சீதா…
“அபிக்கு கால் பண்ணேன் மா, எடுக்கவேயில்லை… மாமா வந்து இருக்காருன்னு சொல்லிக் கூட்டிட்டு வா…” என்றவர் அவளின் பதிலை கேட்காது வந்தவரிடம் பேச்சு கொடுக்க,இவளுக்கோ பத்திக் கொண்டு வந்தது.
சீதாவை அழுத்தமாக பார்த்தவள் மேல் தளத்திலிருந்த அபியின் அறையை நோக்கி நடந்தாள்.
அவள் நினைத்திருந்தால் மாட்டேன் என்று கூறியிருக்க முடியும் தான் இருந்தாலும் வீட்டிற்கு வந்தவரின் முன்பு பெரியவளின் வார்த்தையை மறுக்க தோன்றவில்லை பாவைக்கு. அதனாலயே மறுப்பு சொல்லாமல் அபியின் அறைக்கு சென்றாள்.
அவனது அறைக்குள் ஆனந்தி நுழைந்ததும் அவன் வீசிய வார்த்தைகளும், அதற்கு ஆனந்தியின் பதில்களும் நாம் அறிந்தவை தான்…
“வா மா ஆனந்தி,அண்ணா உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்காரு…” என்ற சீதாவின் குரலில் தன் நிலைக்கு வந்தவள் ஹாலில் நின்றிருந்தவரை அப்போது தான் கவனித்தாள்.
ஐம்பதைந்து வயதிற்கு மேற்பட்டவர் என்பது அவரின் தோற்றத்திலேயே தெரிந்தது… வாங்க என்பதைப் போல் தலையசைத்தாள்.
மடவோளைப் பார்த்து புன்னகைத்தவர் “நான் கிளம்பறேன் கண்ணு…” என்றார். அப்பொழுது அவளிருந்த மனநிலைக்கு வந்தவரிடம் வேறு எதுவும் பேச தோன்றவில்லை சரியென்று மட்டுமே தலையாட்டினாள்.
“அபி வந்தா ஒரு வார்த்தை நான் வந்துட்டு போனாதா சொல்லு சீதா…” என்றார் வந்தவர்.
“கண்டிப்பா சொல்றேன் அண்ணா.. இப்ப ஏதோ முக்கியமான விஷயமா போறான் போல அதான் நீங்க இருக்கிறதை கூட கவனிக்கலன்னு நினைக்கிறேன் தப்பா எடுத்துக்காதீங்க…” மீண்டுமொருமுறை மகனின் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார் சீதா.
“அதுல என்னமா இருக்கு. நம்ம அபியை பத்தி எனக்கு தெரியாதா? நான் அவனை பார்த்து பேசுகிறேன். ஃபோன்ல பேசலாம் ஆனா இப்ப சூழ்நிலைக்கு சரி வராதுன்னு தான் நேர்லயே வந்தேன். நான் அவனுக்கு கூப்பிட்டு மத்த விவரத்தை பேசிக்கிறேன் மா…” நடந்தப்படியே கூறினார் வந்தவர்.
“சரிங்க அண்ணா, கொஞ்சம் சாப்பிட்டு போங்கன்னு சொன்னா வேண்டவே வேண்டாம்ன்னு நிக்கிறீங்க…” அவரோடு நடந்தபடியே பேச்சு கொடுத்தார் சீதா.
“இதுல என்ன மா இருக்கு.. இன்னொரு நாள் வந்து சாப்பிட்டு போறேன்…”என்றார் அவரும்.
அவருடன் இணைந்து நடந்தப்படியே வாசல் வரை சென்றவர் அவரை வழியனுப்பி விட்டு அவசரமாக வீட்டினுள் நுழைந்தார் சீதா. அவரின் கண்கள் ஆனந்தியை தான் தேடியது. அவள் தான் எப்பொழுதோ அங்கிருந்து சென்றிருந்தாளே.. ஆனந்தி எங்கே என்பதை போல் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவர் அவளது அறையை நோக்கி நடந்தார். மங்கையின் கன்னத்தில் இருந்த கண்ணீர் தடத்தை பார்த்ததிலிருந்து மனம் அடித்துக் கொண்டது.
சிறு பெண்ணின் அழுகைக்கு தான் காரணமாகி விட்டோமே என நினைத்தவருக்கு அத்தனை வருத்தம்… மனம் கனக்க ஆனந்தியின் அறைக்கு சென்றார். தாழிடாமல் வெறுமேன சாத்தி வைக்கப்பட்டிருந்த அறைக்கதவை மெல்ல திறந்து பார்த்தார். கண்களை இறுக மூடிப் படுத்திருந்தாள் மாயோள்.
பெண்ணின் கருவிழிகளின் அசைவே இன்னும் உறங்கவில்லை என்று கூறியது. நிமிடம் மாயோளையே இமைக்காது பார்த்தவருக்கு அப்பொழுது தான் அவள் உண்ணாமல் இருப்பது நினைவு வந்தது… ஆனந்தியை எழுப்பி உணவுக் கொடுக்கலாமா என நினைத்தவர் பின் என்ன நினைத்தாரோ பழங்களை மட்டும் மேசையில் வைத்து விட்டு சென்றார்..
மாலை ஆறு மணியை கடந்தும் ஆனந்தி எழுந்த பாடில்லை. சீதாவும் அவளை எழுப்பவில்லை. பிள்ளைகளையும் எழுப்ப விடவில்லை. நன்றாக தூங்கி எழுந்து விட்டாலே மன அழுத்தம் பாதியாக குறைந்து விடும் என்பது அவரின் நம்பிக்கை.. அதனாலேயே ஆனந்தியை உறங்கட்டும் என்று விட்டுவிட்டார்.
ஆனால்… பாவையின் அரைஜான் வயிறு நானும் இருக்கிறேன் என்று சத்தமிட ஆரம்பித்தது. அதன் விளைவு ஆனந்தியின் உறக்கம் கலைந்தது. கண்களைத் தேய்த்து கொண்டே எழுந்து அமர்ந்தவளை மெல்லியதாக வருடி விட்டது மழைக் காற்று… சட்டென திரும்பி ஜன்னலைப் பார்த்தாள் மழை வருவதற்கான அறிகுறியாய் வானில் இடியும், மின்னல்களும் தாளமிசைத்து கொண்டிருந்தன… அதே சமயம் வெளியில் சூழ்ந்திருந்த இருட்டு இன்னும் விடியவில்லை என்றது.
‘அதிகாலையிலயே எழுந்து என்ன செய்ய…’ என நினைத்தவள் கண்களை இறுக மூடி அப்படியே படுத்து கொண்டாள். வயிறு என்னைக் கொஞ்சம் கவனி என்று மீண்டும் சத்தமிட்டு கத்தியது.
இதற்கு மேல் தூங்க முடியாது என நினைத்தவள் மின் விளக்கை எரிய விட்டு மணியை பார்த்தாள் அதுவோ இரவு எழு மணியை காட்டியது. ‘அப்ப இது காலையில இல்லையா…’ மனம் ஒருபக்கம் அதிர்ச்சியாக கத்தியது…
அதே நேரம் இன்று காலையில் தொடங்கி மதியம் அபியின் அறைக்கு சென்றது வரை அனைத்தும் நிழல் படம் போல் கண்களில் ஓடியது…
நீண்ட நெடிய பெருமூச்சுடன் எழுந்து நின்றவள் முகத்தை குளிர்ந்த நீரால் அடித்துக் கழுவிவிட்டு தனது அறையிலிருந்து வெளியில் வந்தாள்.ஹாலில் சீதாவோடு அமர்ந்திருந்தனர் பிள்ளைகள் இருவரும்… நேராக அவர்களின் அருகில் சென்றாள் பெண்..
இவள் வரும் காலடி சத்தம் கேட்டு சீதா திரும்பி பார்த்து
“வாமா…” என்றார்.
“சாரி மேம், எப்படி தூங்கினேன் தெரியல தூங்கிட்டேன், நீங்க எழுப்பி விட்டு இருக்கலாமே…’ என்றாள் தயங்கி.
“பரவாயில்ல மா, இதுல என்ன இருக்கு.. நீயும் நேத்து நைட்ல இருந்து தூங்கல தானே அதான் தூங்கட்டும்ன்னு விட்டுட்டேன்…” பிள்ளைகளை ஒரு பார்வை பார்த்தபடி கூறினார்.
அவரைத் தொடர்ந்து அவளின் பார்வையும் பிள்ளைகளின் மீது விழுந்தது… தீவிரமாக இருவரும் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
“மன்னிச்சிடு மா…” என்றவரின் குரலில் பிள்ளைகளின் மீதிருந்த பார்வையை அகற்றி சீதாவைப் பார்த்தாள் ஆனந்தி.
“நேத்து எனக்கு உன் வாழ்க்கை தான் முக்கியமா தோணுச்சு மா… டிவி சேனல் வரைக்கும் உன் பேர் கெட்டு போகும் போது அதைப் பார்த்திட்டு என்னால சும்மா இருக்க முடியல… அதான் உன் விருப்பத்தை கேட்காம கூட நானே உங்க கல்யாணத்தின் நடத்துனேன். ஆனா இப்ப உங்க இரண்டு பேரையும் பார்க்கும் போது தப்பு பண்ணிட்டோமோன்னு தோணுது…” என்றார் வருத்தமாக.
அவளுக்கும் இது தெரியும் தானே முதலில் இவள் மறுத்ததற்கு சீதா மறுப்பேச்சு பேசவில்லை. விஷயம் தீவிரமாகவும் தான் சீதா முடிவை அவரது கையில் எடுத்தார்… தூங்கி எழுந்ததாலோ என்னவோ முன்பிருந்த இறுக்கமும்,கோபமும் இல்லை…
கணம் கண்களை இறுக மூடித் திறந்தவள் பெரியவளைப் பார்த்து
” நேத்து சூழ்நிலையிலிருந்து யோசிச்சு பார்த்தா நீங்க செஞ்சதும் சரின்னு தோணுது மேம்…” அதற்கு மேல் பேசாமல் “சோழா, குந்தவி கார்டன் போலாம் எழுங்க” என்றழைக்க
“மழை வர மாதிரி இருக்கே மா…” வெளியில் பார்த்தபடி கேட்டார்.
“பரவாயில்ல மேம்,ரொம்ப நேரம் போன் யூஸ் பண்ணிட்டு இருக்காங்க நினைக்கிறேன். கொஞ்சம் நேரம் வெளியில கூட்டிட்டு போறேன்…” என்றாள் இளையவர்களின் கையிலிருந்த அலைபேசியை பார்த்தபடி
“குளோரி… பிளீஸ்…” அலைபேசியை இறுக்கமாக பிடித்தபடி கெஞ்சிய பிள்ளைகளை கண்டுக் கொள்ளாமல் அவர்களிடமிருந்து அலைபேசியை வாங்கி சீதாவிடம் கொடுத்துவிட்டு இருவரையும் தோட்டத்திற்கு அழைத்து வந்தாள்.
கார்டனிலிருந்த ஊஞ்சலில் பிள்ளைகளை உட்கார வைத்து ஆட்டினாள். அதற்கு பின் அவர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்… அடுத்தடுத்த நிமிடங்கள் பிள்ளைகளின் சிரிப்பொலி மட்டுமே அந்த வீட்டில் எதிரொலித்தது.
மழையும், நான் வருகிறேன் வருகிறேன் என்று சத்தமிட்டு கத்திக் கொண்டிருந்ததே தவிர வந்த பாடில்லை… அதற்குள் பிள்ளைகள் இருவருக்கும் உணவைக் கொடுத்து, பள்ளிப் பாடங்களை முடிக்க வைத்து இருவரையும் உறங்க வைத்தவள் மீண்டும் கார்டனில் வந்தமர்ந்தாள்.
அவள் வெளியில் வரவும் தடாலடியாக தரணியை நோக்கி வந்தது மாமழை… மழையை முற்றிலும் வெறுப்பவள் கொட்டும் மழையில் நனைந்தப்படி அமர்ந்திருந்தாள். மழை நீரோடு பெண்ணவளின் கண்ணீரும் கலந்து கரைந்து போனது…
அக்கணம் அத்தனை வேகமாக வீட்டினுள் நுழைந்தது அபியின் நான்கு சக்கர வாகனம்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
15
+1
2
+1
2


மின்னலே என் நெஞ்சிலே - பிரியதர்ஷினி S