
அத்தியாயம் 23
“அபி இஇஇ… இப்ப வண்டியை நிறுத்த போறயா இல்லையா? எதுக்கு இவ்வளவு வேகத்துல போற…” என்ற சீதாவின் கத்தலில் தன் நினைவிலிருந்து வெளிவந்தவன் காரை ஓரமாக நிறுத்தி விட்டு தாயைப் பார்த்தான்.
” என்ன பண்றன்னு தெரிஞ்சி தான் பண்ணிட்டு இருக்கியா?…” எனக் கேட்டவருக்கு இன்னும் பதட்டம் குறையவே இல்லை…
பெரியவளின் கேள்விக்கு துளியும் பதில் பேசாது ஸ்டீயரிங் வீலை ஓங்கி அடித்தான். மகனின் இந்த செய்கையில் அதிர்ந்து விழித்தார் சீதா. ‘என்னை அடிக்காத குறையாய் இதனை அடிகிறானா?…’ என எண்ணியவருக்கு கோபம் வர மகனை நேரடியாகவே முறைத்தார்.
தாயின் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்தாலும் அதை கண்டுகொள்ளாமல்
ஒரு கையால் கேசத்தை அழுத்தி கோதிக் கொண்டவன் காரை விட்டு இறங்கினான்.
காரியிலிருந்து இறங்கி அடிப்பட்ட
சிறுவரியை போல் அங்கும் இங்கும் நடந்தான். அடங்குவேனா என்றது அவனின் மனம்.
தன் மனதில் அனிதாவை தவிர வேறு எவருக்கும் இடமில்லை என்று அறிந்தும் இப்படி ஒரு கட்டாய திருமணத்தை செய்து வைத்த தாயின் மீது அத்தனை கோபம் வந்தது.
பாவம் அவனுக்கு புரியவில்லை அவனை நன்றாக புரிந்ததால் தான் இந்த கட்டாய திருமணத்தையே நடத்தி வைத்தார் என்று…
ஆனால், அவரது மகன் அத்தனை விரைவில் தான் செய்த காரியத்தை ஏற்க போவதில்லையென்று அப்பொழுது அவருக்கு தெரியவில்லை.
கோபத்தை அடக்கியப்ப்படி நின்றிருந்த மகனை பார்த்த சீதாவோ நீண்ட நெடிய பெருமூச்சுடன் வாகனத்திலிருந்து இறங்கினார்.
“அபி…” என்றழைத்து அவன் அருகில் செல்ல, கை நீட்டி வரவேண்டாம் என்று தடுத்தான்.
மகனின் இந்த கோபம், சீதாவிற்கு திகிலைக் கொடுத்தாலும் தற்போது அபியிடம் பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் அதனாலயே “இதோ பாரு அபி, இப்ப நான் பண்ணது தப்பா தெரியலாம். ஆனால் ஆனந்தி தான் உனக்கு சரியானவன்னு ஒரு நாள் புரிய வரும்… அந்த சமயம் நான் உன்கூட இருப்பனா இல்லையான்னு கூட எனக்கு தெரியாது…” என மெல்லிய குரலில் தன்னிலை விளக்கம் கூறிக் கொண்டிருந்தவரின் பேச்சு “ம்மா,என்னை கொஞ்சம் நேரம் தனியா விடுங்க பிளீஸ்…” என்ற அபியின் கத்தலில் நின்றது.
அதே கணம் இவர்களை கடந்து சென்ற பேருந்து பாதி தூரம் சென்று நின்றதை இருவருமே கவனிக்கவில்லை.
அபி அப்படி கூறவும் பதில் பேசாது காரில் ஏறி அமர்ந்து கொண்டார். அவரின் மனம் முழுவதும் மருமகள் மட்டுமே நிறைந்திருந்தாள்.
மகன், மகனின் கோபம் மட்டுமே பிரதானமாக நினைத்து கொண்டிருந்தவருக்கு தற்பொழுது ஆனந்தியை பற்றி பேசவும் தான் அவளின் நினைவே வந்தது.
இத்தனை நேரம் அவளை பற்றியும் அவளின் விருப்பத்தை பற்றியும் துளிக் கூட எண்ணவில்லையே என நினைத்த சீதாவின் மனம் குற்ற உணர்வில் தவித்தது.
இருவரையும் இணைத்து வைத்து தவறு செய்து விட்டேனோ என்று காலம் கடந்து யோசித்தார்.
அதே யோசனையுடன் அமர்ந்திருந்தவர் அதற்கு பின்
நடந்தவைகளை கவனிக்கவில்லை .
இங்கு வெளியில் நின்ற அபியின் எண்ணங்கள் முழுவதும் தன் திருமணத்தை சுற்றியே வளம் வந்தது.
தான் நினைத்திருந்தால் தாயின் கையை உதறி தள்ளிவிட்டு சென்றிருக்கலாம் அதே நேரம்
மாட்டேன் என்று மறுத்திருந்தால் நிச்சியம் இந்த திருமணம் நடந்து இருக்காது. எது என்னை தடுத்தது? நான் ஏன் இதனை தடுக்க முயற்சிக்கவில்லை? என்று தன்னை தானே கேட்டுக் கொண்டவன் மனதில், கண்களில் கண்ணீர் சூழ அண்ணனின் கையை இறுக பற்றியிருந்த பெண்ணின் முகம் நினைவு வந்தது.
“ஆம்,அவளுக்காக தான், காரிகையின் கண்ணீருக்காக தான் நீ இந்த திருமணத்தை தடுக்க முயற்சிக்கவில்லை…” சமயம் பார்த்து வெளிவந்தது அபியின் வெள்ளை மனம். வெள்ளை மனம் வெளிவர ஆரம்பித்ததுமே ‘அவளின் கண்ணீர் பொய்…’ என்று உரக்க கத்தியது ஆடவனின் கருப்பு மனம்.
அதற்கு மேல் சொல்லவா வேண்டும்
இரு மனங்களின் போராட்டம் அபியினுள் இனிதே தொடங்கியது…
இரு மனங்களில் எது வெற்றியடையும்? எது தோல்வியடையும் என்பதை காலம் தான் பதில் சொல்லும்.
**********
அதே நேரம் இவர்களின் எண்ணத்திற்கு காரணமானவளோ இன்னும் தன் நினைவில் மூழ்கி இருந்தாள்.
“நீ பிளேன் போட்டது போல எல்லாம் நடந்திருச்சுன்னு சந்தோசப்படாத இதுக்கு மேல தான் இந்த அபியோட இன்னொரு முகத்தைப் பார்க்க போற…” என்ற அபியின் வார்த்தைகள் இவளின் செவியை தீண்டும் முன் ஆனந்தியின் கழுத்தில் அபி கட்டிய மஞ்சள் தாலி தொங்கி கொண்டிருந்தது… மார்ப்பில் தொங்கிய மங்கல நாணை அதிர்ச்சி மாறாமல் பார்த்தவள் பார்வை மாறாது அபியை பார்த்தாள்.
மறவோனின் முகமோ பாறை போல் இறுகியிருக்க, கண்களோ பலி வெறியில் ஜொலித்தது. அவன் கண்களில் தெரிந்த பலி வெறியில் நிமிடம் ஆடித்தான் போனாள் ஆனந்தி.
அடுத்தடுத்த நிமிடங்கள் மற்ற திருமண சடங்குகளை கோவில் பூசாரி சொல்ல சொல்ல ஏனோ தானோவென்று செய்து கொண்டிருந்தான் அபிநயன்.
இங்கு ஆனந்தியின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. சில நேரங்களில் நம்மை மீறி நடக்கும் அனைத்தும் கனவாக எண்ண வைக்கும். நம் மொத்த இயக்கத்தையும் நிறுத்தியது போல் ஒரு பிரம்மையை உருவாக்கும் அப்படியான ஒரு நிலையில் தான் இருந்தாள் ஆனந்தி.
மங்கையின் மனம் முழுக்க அவளது அண்ணனின் செயல் மட்டுமே நிறைந்திருந்தது…
சிறு வயதிலிருந்தே தாய், தந்தையை போல் பார்த்து கொண்டவன் மேல் அளவுகடந்த பாசமும், மரியாதையும் இருந்தது.ஆனால் அந்த பாசத்தை பகடைக் காயாக்கித் தன்னை
இந்நிலையில் கொண்டு வந்து நிறுத்தியது சொல்ல முடியா வலியை கொடுத்தது காரிகைக்கு.
இதுநாள் வரையிலும் படிப்பை தவிர பெரியதாக ஒன்றும் ஆசை வைத்திடவில்லை. ஆனால் திருமணத்தில் சின்ன எதிர்பார்ப்பு இருந்தது. அது தன்னவனின் உடலும், மனமும் தனக்கே தனக்கென வேண்டுமென்று விரும்பினாள் ஆனால் நடந்ததோ அவளின் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் வேறல்லவா. அதை நினைத்தவளுக்கு மலுக்கென்று கண்ணீர் வெளிவந்தது.. கண்களை தாண்டிய கண்ணீரை துடைக்க மனமில்லாமல் நின்றிருந்தாள்.
அடுத்தடுத்த நிமிடங்கள் நடந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் பொது பேச்சு வார்த்தைகளையும் முடித்து வெளிவரவே பல மணி நேரங்களாகியிருந்தது.
“குளோரி… குளோரி…” சோழாவின் குரலில் தன்னிலைக்கு மீண்டவள்
என்னவென்பதை போல் சிறுவனை பார்த்தாள். பிள்ளையின் முகத்தில் தெரிந்த சோர்வும், பயமும்
ஆனந்தியை முழுவதுமாக நடப்பிற்கு கொண்டு வந்தது.
நன்றாக நிமிர்ந்து அமர்ந்தவள்
“என்ன தம்பி? ஏதாவது வேணுமா?…” சோழனின் கேசத்தை கோதிக் கொண்டே மென்மையாக கேட்டாள்.
“எனக்கு வாமிட் வருது…” எனக் கூறியப்படி ஜன்னல் பக்கம் செல்ல பார்த்தான்.
அக்கணம் பேருந்து வளைவில் திரும்ப, அவளுமே எதிர்பாராத நேரம் அவளின் மீதே வாந்தி எடுத்திருத்தான் சிறுவன்.
“அச்சோ…” என பதறியவள் அவசரமாக நடத்துனரிடம் பேருந்தை நிறுத்த கூறி, பிள்ளைகளுடன் கீழ் இறங்கினாள்.
பேருந்திலிருந்து இறங்கியதும் சோழாவிற்கு தேவையானதை செய்தவள் தங்களுடன் நின்ற குந்தவியை கவனிக்கவில்லை.
கைப்பையிலிருந்த வாட்டர் பாட்டிலை திறந்து சோழாவிற்கு நீரை புகட்டிவிட்டு அவனின் முகத்தை அழுத்தி துடைத்தப்படி “குந்தவி, சோழாவை பிடுச்சுக்க… நான் என் டிரஸை க்ளீன் பண்ணிடறேன்…” என்றாள். அவளிடம் பதில் வரவில்லை என்றதும் சட்டென பின்னால் திரும்பி பார்க்க அவளோ அங்கில்லை…
“சோழா, அ…க்கா, அக்கா எங்கடா…” பதட்டம் நிறைந்த குரலில் விசாரித்தாள். அவன் தெரியாது என்பதை போல் தலையாட்ட பரபரப்புடன் பார்வையை சுழல விட்டாள்.
இவர்கள் இருவரும் நின்ற இடத்திலிருந்து சில மீட்டர் தூரத்தில் கருப்பு காரின் மீது சாய்ந்து நின்றிருந்தவனை நோக்கி சென்று கொண்டிருந்தாள் சிறியவள். அங்கு நிற்பது யாரென்று அறிய நிமிடம் தேவைப்படவில்லை ஆனந்திக்கு.
காற்றை வாயில் நிரப்பி “உப்…” என்று வெளியில் விட்டவள் சோழாவின் கையை பிடித்தபடி குந்தவியை நோக்கி நடந்தாள்.
கண்களை இறுக மூடி காரின் மீது சாய்ந்து நின்றவனின் அருகில் சென்று அவன் சட்டையை பிடித்தப்படி “அப்பா …” என்றழைத்தாள் குந்தவி.
தீடிரெனக் கேட்ட மகளின் குரலில் அபியின் இரண்டு மனமும் அப்போதைக்கு டாட்டா காட்டிச் சென்றிருந்தது. பட்டென்று கண்களை திறந்தவன் தன் அருகில் நின்ற மகளை பார்த்தான்.
“குட்டிமா. நீ எப்படி இங்க வந்த? அவங்க இரண்டு பேரும் எங்க? …” கேள்வி எழுப்பியப்படி குனிந்து மகளை தூக்கினான்.
“அவங்க அங்க இருக்காங்க..” என கைகாட்டியவள் பஸ்சில் ஏறியதிலிருந்து தற்போது நடந்தது வரை அனைத்தும் கூறினாள்.
“இப்படி சொல்லாம வர கூடாது ம்மா…” மகளின் கூந்தலை சேவியோரத்தில் ஒதுக்கி விட்டப்படி கூறினான்.
“உங்களை பார்த்ததும் வந்துட்டேன் ப்பா, இனிமே சொல்லாம வர மாட்டேன்…” என்றாள் மழலை குரலில்.
மகளின் பதிலை கேட்டபடி ஆனந்தி வரும் பாதையை பார்த்தான். சோழாவின் கைகளை பிடித்தபடி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் இவர்களை நெருங்க சில நிமிடங்கள் கூட தேவைப்படவில்லை…
“அப்பாகிட்ட இரு சோழா…” என்றவள் அபியை மறந்தும் பார்க்கவில்லை. கைப்பையிலிருந்த வாட்டர் பாட்டிலைத் திறந்து தன்னை சுத்தம் செய்தாள்…
நிமிடம் ஆனந்தியை பார்த்தவன் மகளின் முகத்தை அழுத்தி துடைத்தப்படி “பாட்டிகிட்ட போறீங்களா?…” என்றான்.
“ம்ம்…” என்றவள் சீதாவிடம் செல்ல புன்சிரிப்புடன் பார்த்தான் மகளை.
“பாட்டி…” என்றபடி கார் கதவை திறக்க, பட்டென்று கண்களை திறந்தார் சீதா.
“பட்டு, நீ மட்டுமா வந்து இருக்க? அவங்க எங்க டா?…” என்றார் கேள்வியாக…
” அங்க…” எதிரில் நின்ற ஆனந்தியை கைகாட்டியவள் பேருந்தில் ஏறியதிலிருந்து தற்போது வரை அனைத்தும் மீண்டுமொருமுறை சீதாவிடம் கூற ஆரம்பித்தாள்.
இங்கு சோழாவும் அதை தான் அபியிடம் கூறிக் கொண்டிருந்தான்.
மகனிடம் பேச்சு இருந்தாலும் அபியின் பார்வை முழுக்க ஆனந்தியின் மீது தான் கோபமாக படிந்தது.
அவன் பார்வையை அவள் உணர்ந்தாலும் அதனை துளிக் கூட பொருட்படுத்தாமல் தன் ஆடையை சுத்தம் செய்து விட்டு தான் திரும்பினாள்.
“இதுதான் புள்ளைங்களை நல்லா பார்த்துக்கற லட்சணமா?”
” உங்களை விட நல்லாதான் பார்த்துக்கிறேன்னு நினைக்கிறேன்…” அவன் முகம் பார்க்காது வெடுக்கென கூறினாள்.
“ஓ? சரி சொல்லுங்க… அப்படியென்ன என் பசங்களை என்னைவிட நல்லா பார்த்து கிழிச்சுட்டீங்க?…” என கேட்டவன் குரலில் அத்தனை நக்கல் வழிந்தோடியது.
நிதானமாக அபியை பார்த்தவள்
“மூணு, நாலு வருசமா புள்ளைங்க இருக்காங்களா இல்லையான்னு கூட கண்டுகாத நீங்க, இந்த கேள்வியை கேட்கறது தான் சிரிப்பா இருக்கு” என்றதும் முகம் கறுத்தது அபிக்கு… அவனை நக்கல் சிரிப்போடு பார்த்தவள் காரில் ஏறி அமர்ந்தாள்.
மங்கையின் நக்கல் சிரிப்பில் எரிச்சலடைந்தவன் “திமிரு, உடம்பு முழுக்க திமிரு…” சற்றே சத்தமாக முனகியப்படி
காரில் ஏறி அமர்ந்தான். தற்போது வாகனம் சீரான வேகத்தில் சென்றது…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
12
+1
+1
1

