Loading

அத்தியாயம் 2

அந்த எழுபதடி தார் சாலையில் அதீத வேகத்தில் சென்று கொண்டிருந்தது அபியின் நான்கு சக்கர வாகனம். அவனது மனம் முழுக்க கோபம் நிரம்பி வழிந்தது.

வீட்டில் பெரியவர் இருக்கிறார் குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நினைத்து தானே இரவு பகலெனப் பாராது மாடாக உழைக்கிறான். ஆனால் அவரோ குழந்தைகளை அடித்தது மட்டுமல்லாமல் சாப்பிடக் கூடக் கொடுக்கவில்லை என்பது அவனின் கோபத்தை மேலும் அதிகரித்தது.

கோபத்தை முகத்தில் காட்டாது இருந்தாலும் அவனின் மெளனமும், கார் ஒட்டும் விதமுமே கூறியது அவன் கோபமாக இருக்கிறான் என…

தன் தந்தை கோபமாக இருக்கிறார் என புரிந்துக் கொண்ட குழந்தைகள் இருவரும் வாயே திறக்கவில்லை..

அடுத்த சில நிமிடங்களில் பிள்ளைகளை அழைத்து கொண்டு வீட்டினுள் நுழைந்தான் அபிநயன்.

வழமை போலவே சீதா சீரியலில் மூழ்கி இருக்க அவரை ஒரு பார்வை பார்த்தவன் “வேலண்ணா வேலண்ணா…” என கர்ஜிக்கும் குரலில் சமையல்காரனை அழைத்தான்.

இடியே விழுந்தாலும் என் கண்கள் சீரியலை விட்டு ஒருபோதும் விழகாது என்பதை போல் சீதா அமர்ந்திருக்க, கோபத்தில் என்ன செய்கிறோம் என்று அறியாது கையில் வைத்திருந்த அலைபேசியை ஓங்கி தரையில் வீசி “வேலா…” என கத்தினான்.

 மகனின் கத்தலில் திடுக்கிட்டு திரும்பினார் சீதா. அவனின் செயலில் பெரியவள் மட்டுமல்ல சிரியவர்களும் பயந்து தான் போனார்கள். வேலன் அவசரமாக சமையலறையில் இருந்து வெளியில் வர

“நேத்து நைட்டு எங்க இருந்தீங்க…” என சிங்கம் போல் சீறி வந்தது வார்த்தைகள்…

“தம்பி…,” வார்த்தைகள் வரவில்லை அவருக்கு, நேற்று மாலை சிறிது நேரத்திலேயே கிளம்பி இருந்தார். அதனால் இரவு நடந்தது எதுவும் அவருக்கு தெரியாது அதனாலயே தயங்கி நின்றார் கூடவே பயமும்.

“அவரு நேத்து சீக்கிரமே கிளம்பிட்டாரு…” என சீதா சொல்ல சட்டென அவரை திரும்பி முறைத்தவன்

“ஓ அவரை அனுப்பி விட்டுட்டு தான் என் புள்ளைங்களுக்கு சோறு கூட போடமா அடிச்சு தூங்க வைச்சீயா…” எனக் கேட்டான் கோபமாக

அவனின் நேரடியான பதிலில் சிறிது தடுமாறினாலும் “எல்லாத்துக்கும் அடம் பண்ணா அடிக்க தான் செய்வேன். உன்னையும் இப்படி தானே வளர்த்தேன். என்னமோ நான் புள்ளையே வளர்க்காத மாதிரி பேசற…” அவனை விட கோபமாக கேட்டான் கேட்டார் சீதா.

“என்னை, நீ அடிச்சு வளத்து இருந்தாலும் சாப்பிடாம விட்டது இல்லை…” என்றான் பற்களை கடித்தபடி..

“ஒரு வேளை சாப்பிடலன்னா உன் புள்ளைங்க ஒன்னும் ஆக மாட்டாங்க…” என சீதா அலட்சியமாக பதில் கூறினார்…

தாயின் இந்த பதில் இவனுக்கு மேலும் கோபத்தைக் கொடுத்தது. கண்களை இறுக மூடித் திறந்தவன் பாக்கெட்டிலிருந்த மற்றொரு போனிலிருந்து தன் பி. ஏ ராமனுக்கு அழைத்தான்.

“ஹலோ ராமன், என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்கு தெரியாது. இம்மீட்டியட்டா என் குழந்தைகளை பார்த்துக்க கவர்னஸ் வேணும், எவ்வளவு சேலரி வேணும்னாலும் கொடுக்க நான் தயார். வீட்டோட இருக்கிற மாதிரி வேணும், வேலைக்கு வரவங்க படிச்சு இருக்கணும் சொல்லிட்டேன், யாரை வேணுமுன்னாலும் கொண்டு வரலாம்னு நினைசுக்காத,சீக்கிரம் பாரு…” என கட்டளையிட்டவன் அழைப்பை துண்டித்து குழந்தைகள் இருவரின் கையைப் பிடித்தப்படி டைனிங் டேபிளை நோக்கி நடந்தான்.

அதே சமயம் எதிர் முனையில் இருந்த ராமனுக்கு தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. பின்னே திடீரென அழைத்து கவர்னஸ் வேண்டும் என்றால் ரோட்டில் செல்பவர்களையா பிடித்துக் கொண்டு வருவான். காலையிலயே இப்படி கடுப்பேற்றுகிறானே என நினைத்தவன் வழக்கமாக அழைக்கும் கன்சல்டன்ட்டிடம் அழைத்து கேட்டான்.

‘உடனே கிடைக்காது சார் இரண்டு, மூன்று நாட்களாவது ஆகும்’ என்று விட்டனர். அவர்களை அடுத்து வேறு சில கன்சல்டன்ட்டிடம் விசாரித்தான். அவர்களும் இதே பதிலை தான் கூறினார்கள். இப்போது என்ன செய்வது பேப்பரில் விளம்பரம் கொடுக்கவும், செயலியில் பெயர் கொடுக்கவும் நேரம் இல்லை. அவன் கூறியது போல் செய்யவில்லை என்றால் நிச்சியம் கோபப்படுவான் என நினைத்தப்படி அமர்ந்தவனின் அருகில் வந்த அவனின் மனைவி செண்பகமோ

“என்னாச்சு மாமா, ஏன் இப்படி

உட்கார்ந்துட்டு இருக்கீங்க? சாப்பிடுங்க…” என்றாள் அவனின் தோள் தொட்டு

“சரி மா..” என்றவன் மீண்டும் அலைபேசியில் ஏதோ பார்த்தபடி இருந்தான்.

“அப்படி என்ன பார்த்துட்டு இருக்கீங்க மாமா, ஆபீஸுக்கு டைம் ஆச்சு,..” என சிறு அதட்டல் குரலில் கூறினாள்.

“அட, வேலை விசயமா தான் பார்த்துட்டு இருக்கேன்…” என்றவன் ஏதோ யோசனை வந்தவனாக

” உன் ப்ரெண்ட்ஸ் யாராவது கவர்னஸ் வேலைக்கு வருவாங்களா விசாரிச்சு பாக்கிறயா? உடனே வேணும், நல்ல சம்பளம், தங்க இடம், சாப்பாடு எல்லாமே அவங்களே பாத்துக்குவாங்க, படிச்சு இருந்தா போதும்…” என கேட்டவன் மனைவியின் பதிலை எதிர் நோக்கி அவளையே பார்த்திருந்தான்.

“எனக்கு தெரிஞ்சு யாரும் வர மாட்டாங்க மாமா, எதுக்கும் ஆனந்தியை விசாரிக்க சொல்றேன்…” என கூறிக் கொண்டிருக்கும் போதே ஆனந்தி உள்ளே நுழைந்தாள்.

“இதோ அவளே வந்துட்டா கேளுங்க…” என செண்பகம் வீட்டினுள் நுழைந்தவளை பார்த்தபடி கூறினாள்.

பள்ளியில் தன்னை நிராகிக்கரித்தது, அதற்கு பின் அவளெடுத்த முடிவு, வரும் வழியில் கார்கரான் தான் கீழே விழுந்தும் கண்டுக் கொள்ளாமல் சென்றதென ஒவ்வொன்றாக நினைத்தபடி வீட்டினுள் நுழைந்தவளின் காதில் செண்பகதின் பேச்சு கேட்டது. மனம் முழுவதும் உலைகளமாக கொதித்து கொண்டிருந்தாலும் அதை வெளிக் காட்டி கொள்ளாமல்

“என்ன கேட்கணும் ண்ணா…” என நேரடியாக விசயத்திற்கு வந்தாள்.

“எங்க எம்.டி குழந்தைகளை பார்த்துக்க கவர்னஸ் வேணும் ஆனந்தி. உன் ப்ரெண்ட்ஸ் யாராவது இருக்காங்களா? இம்மீட்டியட் ரெக்யூர்மெண்ட், நல்ல சம்பளம். அங்கேயே அவங்க வீட்டிலேயே ஸ்டே பண்ணிக்கிறது போல தான் இருக்கும். புது இடமுன்னு பயப்பட தேவையில்லை… சாரோட அம்மா எப்பவும் இருப்பாங்க…குழந்தைங்க ஸ்கூலுக்கு போயிட்டு வந்து முழுசும் அவங்களோட தான் இருப்பாங்க” ராமன் முற்றும் முழுதாக பேசி முடிக்கும் முன்பே

“நான் வேணும்னா போகட்டுமா?” எனக் கேட்டாள் ஆனந்தி. அவளது பதிலை இருவருமே எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களது அதிர்ந்த முகமே சொல்லியது.

“என்னாச்சு அண்ணா” ராமனின் அதிர்ந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“அதெல்லாம் வேண்டாம், வேற யாராவது இருந்தா சொல்லு…” அவன் குரல் இறுகி வெளிவந்தது.

” வேற யாராவது போறதுக்கு நானே போறேன் அண்ணா…”

“அதெல்லாம் வேண்டாம் ஆனந்தி…” இப்பொழுது செண்பகம் மறுக்க

“இல்லை அண்ணி, நம்ம வீட்டு கஷ்டம் எனக்கும் தெரியும்ல, இப்ப அந்த ஜாப்பா முக்கியம்? பணம் தானே முக்கியம்…” இப்பொழுது ஆனந்தியின் குரல் பிடிவாதத்திற்கு தாவி இருந்தது.

‘என்னங்க,இப்படி சொல்றா’ என்பதை போல் செண்பகம் ராமனை பார்த்தாள்.

“பிடிவாதமா படிக்கிறேன்னு சொல்லும் போது பெருமையா சரின்னு சொன்னேன். அதே பிடிவதாமா ஜாப் போறேன்னு சொன்னாய் அதுக்கும் சரின்னு சொன்னேன். ஆனால் இதுக்கு நான் சரின்னு சொல்லுவேன்னு நினைக்காத ஆனந்தி…” என்றதும் அதிர்ந்து விழித்தாள் பெண்.

“உன் படிப்புக்கு தகுந்த வேலைக்கு போறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த வேலை உனக்கு வேண்டாம். நான் வேற யாராவது பாத்துக்கிறேன்…” சற்று கோபமாகவே கூறினான் ராமன்.

பின்னே பள்ளி முதல், கல்லூரி வரை அனைத்திலும் முதலிடம் இவனது தங்கை. அத்தனை பொறுப்பு, அத்தனை திறமைசாலி அவள். அப்படியானவளை போயும் போயும் ஆயா வேலைக்கு அனுப்ப முடியுமா? நினைக்கவே முடியவில்லை அவனால்.

“நீ தானே சொன்ன, நல்ல சம்பளம், வேலை அதிகமா இருக்காது பிள்ளைகளை மட்டும் பார்த்துக்கிட்ட போதும்னு…” ஆனந்தி பேச பேசவே

“உனக்கு புரியுதா ஆனந்தி. நீ நல்லா படிச்சிருக்க, காலேஜ் ரேங்க் ஹோல்டர். இப்ப வெளிய போனா கூட உனக்கு ஜாப் கொடுக்க கியூல நிப்பாங்க…” என்றான் ராமன். அண்ணனின் பேச்சில் சற்று முன்னர் பள்ளியில் நடந்தது நினைவு வர கசப்பான சிரிப்பை உதிர்த்தவள்

“வேற வேலை கிடைக்கற வரைக்கும் போறேன் அண்ணா…” என்றாள். அவளை அதிருப்தியுடன் பார்த்தான் ராமன்.

அவனுக்கு புரிந்தது வீட்டின் வறுமையை பார்த்து தான் இப்படியான முடிவை எடுத்திருக்கிறாள் என்று. இருந்தும் இந்த வேலைக்கு போக வேண்டுமா? வேறு வேலையே கிடைக்காத என்ற எண்ணம் எழாமல் இல்லை…

“ஏன் இப்படி அடம் பிடிக்கிற ஆனந்தி. நீ நல்லா படிச்சு இருக்க, உனக்கு என்ன வெண்டுதலா கவர்னசா போக வேணும்னு…”செண்பகம் சற்று அதட்ட

“நீங்களும் பார்த்திட்டு தானே இருக்கீங்க… இந்த மூணு மாசமா நானும் வேலைக்கு ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன். ஒரு வேலையும் கிடைக்கல, இப்ப கிடைக்கிற வேலைக்கு போறேன் அண்ணி, மத்ததை அப்பறம் பாத்துக்கலாம்…” என்றவள் அவர்களின் பதிலை கூட கேட்காது அங்கிருந்து நகர்ந்தாள்.

****

‘அம்மு, அம்மு எழு ‘ என அவசரமாக அனிதாவை எழுப்பினான்.

‘போ அபி, தூக்கம் வருது’ என சிணுங்கினாள் பெண்ணவள். அவளின் சிணுங்களை இப்பவும் ரசிக்க தோன்றியது அவனுக்கு. தன் மனம் போன போக்கை நினைத்து தன்னையே நொந்து கொண்டவன்

‘ஏய் ஜில்லு, எழு டி பசங்களும், அத்தையும் வந்து இருக்காங்க…’ மெல்லிய குரலில் கூறினான்.

‘அத்தை தானே…’ என்றவள்

‘ஐயோ என் அம்மாவா?’ என அவசரமாக எழுந்து அமர்ந்து திருதிருவென விழித்தாள்.

‘ஐயோ டெம்ப்ட் பண்ற டி நீ…’ என்றபடியே அவளின் இதழில் இதழ் பதித்து விட்டு நிமிர்ந்தான்.

இதோ இன்றும் அவளின் ஈரமான இதழ்களின் அணைப்பை உணர துடித்தது அவனது மனம். கண்களை இறுக மூடிக் கொண்டான். தன்னவளின் பரிசத்தையும், அவளின் வாசத்தையும் தனக்குள் உணர நினைத்தவன் ஆழ்ந்து காற்றினை சுவாசித்தான். அவன் சுவாசிக்கும் காற்றில் தன் உயிரில் கலந்தவளின் மூச்சினை தேடி தோற்றான்.

விழிகளுக்கு புலப்படாத

காற்றில் கூட

உன்னை தேடி தேடி

தோற்று கொண்டே

இருக்கிறேனடி

என கவிதை வாசித்து கொண்டிருந்தவனின் நாசியில் புதியதொரு மூச்சு காற்று சேர்ந்ததை அவன் மனம் உணர்ந்ததோ என்னவோ சட்டென அல்லி விழிகளை திறந்தான்.

விழிகளுக்குள் செக்யூரிட்டியிடம் சண்டையிட்டு கொண்டிருப்வள் விழுந்தாள். அவளை ஆராய்ச்சி பார்வையுடன் பார்த்தவன் என்னவென விசாரிக்க போனில் செக்யூரிட்டிக்கு அழைத்தான்.

“சார் நீங்க தான் வேலைக்கு வர சொன்னதா சொல்றாங்க சார். கால் லெட்டர் இருக்கான்னு கேட்டா ‘வேலையில ஜாயின் பண்ணிட்டு வாங்கி தரேன்’ னு நக்கலா பதில் சொல்றாங்க சார்…” என செக்யூரிட்டி குற்ற அறிக்கையை வாசிக்க.

“நீ என்னவோ சொல்லிகொள்…” என்பதை போல திறந்திருந்த கேட்டினுள் தன் இரு சக்கர வாகனத்தை விட்டாள் ஆனந்தி.

“சொல்லிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு உள்ள போற ம்மா…” என கத்திய செக்யூரிட்டியின் குரல் அலைபேசியில் இருந்த அபிக்கு மட்டும் தான் கேட்டது.

“நான் பாத்துக்கிறேன்…” என்றவன் அழைப்பை துண்டித்து ராமிற்கு அழைத்தான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்