Loading

அத்தியாயம் 1

இந்தியாவின் பின்னலாடைத் தலைநகரம் என்றழைக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அவினாசி நகரம் தான் நம் கதைக் களம்…

அங்கே, அவிநாசி சேவூரிலுள்ள இரண்டு படுக்கையறை கொண்ட மாடி வீட்டின் சமையலறையில் வேர்க்க விறுவிறுக்க அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தாள் அவள்.

“மழை வர மாதிரி இருக்கு, பின்னுக்கு துணி காயப் போட்டிருக்கேன் எடுத்து வா…” அறைக்குள் இருந்து அதிகாரமாக ஒலித்தது அந்த குரல்.

“சரி அண்ணி…” என்றவள் தன் ஈரக் கைகளை நைட்டியில் துடைத்தப்படி பின் புறத்தை நோக்கி வேகமாக ஓடினாள்.

‘காலங்காத்தால உன்னை யாரு வர சொன்னா? எப்ப பாரு ராங்க் டைம்ல வரதே வேலையா போச்சு உனக்கு’ மழை மேகங்களை மானசீகமாக திட்டியப்படி கொடியில் காய்ந்திருந்த துணிகளை எடுத்தாள்.

மங்கையின் கோபத்தைத் தணிக்க நினைத்த கருமேகங்கள் வெண்ணிற துளிகளாய் மாறி அவளின் கண்ணிமைக்களில் பட்டுத் தெறித்தது.

“இன்டர்வியூ வேற போகணும், இது வேற வந்து இம்சையை கூட்டிட்டு இருக்கு…” என முனகி கொண்டே வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள்.

அவளின் கைகள் தன்னை தீண்டாது,அவளின் கண்கள் தன்னை ரசிக்காது போனதில் கடுப்பான கருமேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடி சத்தத்தைக் கொடுக்க அதை துளியும் சட்டை செய்யாது கையில் வைத்திருந்த துணிகளை முற்றத்திலிருந்த சோபாவில் போட்டுவிட்டு மணியை பார்த்தாள். மணி ஏழரையைத் தாண்டி சென்றுக் கொண்டிருந்தது.

“அச்சோ லேட் ஆயிடுச்சு…” சட்டென தொற்றிக் கொண்ட பரபரப்போடு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

என்னை விட பரிசுத்தமானவன் இவ்வுலகில் இல்லையென எப்போது புரிந்து கொள்வாய் பெண்ணே..

உனக்காக நான் இருக்க, என்னைவிட்டு விலகி செல்வதெனடி…

என ஏக்கமாய் கவிதை வாசித்துவிட்டு அங்கிருந்து விலகி சென்றது கருமேகங்கள்….

அவள் ஆனந்தி. தாய், தந்தை இல்லாமல் அண்ணன், அண்ணியின் வளர்ப்பில் வளர்ந்தவள். இருபத்தி நான்கு வயதான அரிவை. ஐந்தடி உயரம், உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு. இடையை தாண்டிய கேசம், அதற்கு மேல் கண், காது மூக்கென்று தனித்தனியா வர்ணிக்கும் அளவிற்கு பேரழகில்லை என்றாலும் பார்க்க பார்க்க அவளும் அழகு தானென்று கூறுமளவிற்கு அழகி தான்.

காலை எட்டரை மணிக்கு நேர்காணல் என்பதால் மழை நின்றும் நிற்காது வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள் ஆனந்தி…

கையில் கட்டியிருந்த கை கடிகாரத்தை பார்த்துக் கொண்டே தன் இரு சக்கர வாகனத்தை உயிர்ப்பித்தவள் நேராக சென்றது என்னவோ அந்த சி. பி. எஸ்.சி பள்ளிக்கு தான்…

திருப்பூரில் உள்ள முக்கிய பள்ளிகளில் இதுவும் ஒன்று. அந்த பள்ளியின் அடிப்படை சம்பளமே பல்லாயிரங்களில் தான் ஆரம்பிக்கும். எப்படியாவது இந்த வேலையில் தேர்வாகி விட வேண்டுமென்று கடவுளை வணங்கி கொண்டே பள்ளியை நோக்கி சென்றாள்…

சரியாக இருபது நிமிடத்தில் பள்ளியை அடைந்தவள் வாட்ச்மேனிடம் தகவலை கூறிவிட்டு பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தியவள் பள்ளி அலுவலகத்தை நோக்கி நடந்தாள்.

 சமூக வலைப்பின்னல் செயலி

மூலம் தனது சாரத்தை அந்த பள்ளியின் இணையத் தளத்தில் விண்ணப்பித்திருந்தாள். மங்கையின் சுயவிரவத்தைப் பார்த்த இரண்டே நாட்களில் அவளை நேர்காணலிற்கு அழைத்து விட, இதோ இன்று நேர்காணலிற்காக பள்ளிக்கு வந்திருக்கிறாள்.

பத்து நிமிட காத்திருப்பிற்கு பிறகு அவளை உள்ளே அழைத்தனர்…

முதலில் செயல்முறை வகுப்புகள் நடந்தது.. துளியும் தயங்காது நிமிர்ந்து செயல்முறை வகுப்புகளை போர்டில் நடத்தினாள். பின்னர் அவர்கள் எழுப்பிய சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கும் பதில் கூறினாள்.

ஆனந்தியின் பதிலும், பாடம் நடத்தும் விதமும்,அவளின் குரல் வளமும் நன்றாக இருக்கவே அவளை பணிக்கு தேர்வு செய்ய முடிவெடுக்கும் நேரம் அவர்களில் ஒருவருக்கு அழைப்பு வந்து அவளின் பணியைத் தட்டி சென்றது.

ஆனந்தியை விட மனதே இல்லாமல்

இரண்டு நாட்களுக்குள் அழைக்கிறோம் என கூறி அவளை அனுப்பி வைத்தனர்.

அலுவலக நேர்காணலிற்கு வந்து போனில் அழைக்கிறேன் என கூறிவிட்டாலே அந்த வேலை நிச்சியமில்லை என்பது அறியாதவளா ஆனந்தி? கரும்பலகையில் ஒரு கண் இருந்தாலும் மற்றொரு கண் அவர்களின் மேல் இருக்க தான் செய்தது. ரெக்கமென்டேஷன் என்பது இருக்கும் வரை ஆனந்தியை போன்ற திறமைசாலிகள் ஒதுக்கப்படுவது நடந்து கொண்டு தான் இருக்கும்.

பெருமூச்சுடன் அங்கிருந்து வந்தவளுக்கு அண்ணன், அண்ணியிடம் என்ன பதில் கூறுவதென தெரியவில்லை. அவர்கள் தன் விருப்பப்படி படிக்க வைத்ததே பெரிய விஷயமா தெரிந்தது ஆனந்திக்கு.

ஆம்,இன்றைய காலத்தில் யார் செய்வார்கள். என் பிள்ளைகளை பார்க்கவே முடியவில்லை இதில் நீ வேறயா? ‘ நீ படிச்ச வரைக்கும் போதும் எங்களுக்கு ஒத்தாசையா இரு’ என்று கூறாமல் நீ படி என்று விட்டதே பெரியதாக தான் தோன்றியது. அந்த விஷத்தில் அவளது அண்ணன் ராமன் மீதும் அண்ணி செண்பகத்தின் மீதும் அத்தனை மரியாதை பெண்ணிற்கு.

உண்மையை சொல்லப்போனால் அவர்கள் படிக்க வைக்க ஒரே காரணம் ஆனந்தி படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தாள். பள்ளி, கல்லூரி அனைத்திலும் இவள் தான் முதலிடம்.

அதேப் போல் ‘தாய், தகப்பன் இல்லாத பிள்ளையை நன்றாக பார்த்துக் கொள்கிறாள், நன்றாக படிக்க வைக்கிறாள் என்ற பாராட்டு செண்பகத்திற்கு ஒரு போதையாக இருந்தது. அதனால் தான் ஆனந்தியின் படிப்பு விஷயத்தில் அவள் எவ்வித பிரச்சனையும் செய்யவில்லை.

அதே சமயம் படிப்பைப் பொறுத்தவரை அனைத்தும் ஆனந்தியின் இஷ்டம். அவளது வேலைக்கும் அப்படி தான். இதோ இன்றுவரை அவர்களாக வேலைக்கு செல்லென்று கூறவில்லை என்றாலும் தற்போதைய குடும்பச் சூழலில் அவள் வேலைக்கு செல்வது அவசியமென்பது புரிந்தது.

ஆம் ராமனுக்கு, செண்பகத்திற்கும் இரண்டு மகவுகள், அவர்களது படிப்பு செலவுகளை ராமன் ஒருவனால் மட்டுமே கவனிக்க முடியவில்லை.

ஆனந்தி படித்தது அனைத்தும் அரசு பள்ளி, கல்லூரி என்பதால் அவர்களுக்கு பெரிதாக செலவு என்பதில்லை. ஆனால் ராமனின் பிள்ளைகள் படிப்பது தனியார் பள்ளியில் என்பதால் வீட்டு சூழல் சற்றே இறுக்கமாக செல்கிறது. இந்த சூழலை சமாளிக்கத் தான் ஆனந்தி வேலைத் தேடிக் கொண்டு இருக்கிறாள். அவளது நேரமோ என்னவோ அவள் விரும்பிய, அவளது படிப்பிற்கு ஏற்ற வேலைக் கிடைக்கவில்லை.

அதே நேரம், வேலை தேடிய இந்த கொஞ்ச நாட்களிலியே நேர்காணல் மீதிருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்திருந்தது. இனி என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுத்தவளாக வீட்டை நோக்கி பயணித்தாள்.

********

அதிகாலை கதிரவனின் கதிர்களை தரணியின் மேல் விழாது காவல் காத்துக் கொண்டிருந்தது கருமேகங்கள். காலை கதிரவனின் வெளிச்சம் எத்தனை அழகோ அதை விட பேரழகு கருமேகங்களின் ஆட்சி, நால்புறமும் கருமேகங்களால் சூழ்ந்த அக்காலை பொழுதை ரசிக்கும் மனமில்லை போலும் அவனுக்கு. பால்கனியில் நின்று வானத்தை வெறித்துப் பார்த்து கொண்டிருத்தவனின் மனம் முழுவதும் வெற்றிடம் மட்டுமே நிறைந்திருந்தது…

வாழ்கையில் எவராலும் சாதிக்க முடியாத ஒன்று, வெறும் மூன்று ஆண்டுகளுக்குள் தொழில் துறையில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது என்பது.இதோ இன்று அதையும் சாதித்து காட்டி விட்டான்.

இவனின் உழைப்பிற்கு ஏற்ற பல விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கிறான். எண்ணிடலங்கா சொத்து மதிப்புக்களுக்கு சொந்தக்காரன். இவனிடம் இருக்கும் சொத்து மதிப்புகளை அறிந்தே சில தொழில் அதிபர்கள் இவனிடம் நட்பு பாராட்ட தவம் இருக்கிறார்கள்.

இப்படி பல சாதனைகளை தொழில் துறையில் படைத்து கொண்டிருப்பவனின் மனதில் சந்தோசம், மகிழ்ச்சி என்பது இருக்கிறதா எனக் கேட்டால் நிச்சியம் அவனின் பதில் தெரியவில்லை என்று தான் வரும்.

அவனை பொருத்தவரை அபிநயன் என்பவன் என்றோ இறந்து விட்டான். இப்போது உயிர் மட்டுமுள்ள உணர்வற்ற ஜடம்.. கற்சிலையாய் நின்றவனின் மேல் மழைகாற்று மோதி நான் இருக்கிறேன் என்பதை போல் அவனை தழுவி கொண்ட நேரம் தன் நினைவிலிருந்து வெளி வந்தவன் மழை காற்றின் அரவணைப்பை துட்சமென எண்ணி அங்கிருந்து நகர்ந்தான்.

சிறிது நேரத்திலயே அலுவலகம் செல்ல கிழே வந்தவனின் பார்வை அந்த பிரம்மாண்ட வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்த அவனின் அன்னை சீதாவின் மேல் பதிந்தது. மாடி படிகளிலிருந்து கீழிறங்கி வந்தான்.

“பசங்க இரண்டு பேரும் எங்க ம்மா காணோம்…”என வினாவிக் கொண்டே சோபாவில் அமர்ந்தவன் டீபாயிலிருந்த செய்தித் தாளை கையில் எடுத்தான்.

“இரண்டு பேரும் தூங்கிட்டு இருக்காங்க…” என்றவர் நொடி நேர அமைதிக்கு பின் “நேத்து நைட் அம்மா வேணும்னு ஒரே அடம். அவங்களை பத்தி கொஞ்சம் யோசி அபி, உனக்கு பொண்டாட்டி வேண்டாம், ஆனா அவங்களுக்கு அம்மா வேணும்…” என்க

“சரி நான் போயி பார்க்கிறேன்” சீதா கடைசியாக கூறியதை ஸ்கி்ப் செய்து விட்டு முதல் கேள்விக்கு மட்டும் பதில் கூறியபடி குழந்தைகளின் அறையை நோக்கி நடந்தான்…

அறைக்குள் நுழைந்ததுமே உறங்கி கொண்டிருந்த குழந்தைகள் இருவரையும் நெருங்கினான்.

“சோழா, குந்தவி…” மெல்லிய குரலில் அழைக்க, அசந்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் சிணுங்கினர். அவர்களது சிணுங்கல் அவனது மனைவியை மெல்லிய புன்னகையோடு அங்கிருந்து வெளியேறினான்.

“ஏன் வந்துட்ட? எழுப்ப வேண்டியது தானே…”

“அசந்து தூங்கிட்டு இருக்காங்க மா, எழுப்ப மனசே வரலை. அவங்க எழுந்ததும் கூப்புடுங்க, நானே அவங்களை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறேன்…” என்றவன் தன் அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டான். செல்லும் மகனையே இமைக்காமல் பார்த்தார் சீதா…

குழந்தைகள் இருவரும் எழுந்ததும் சீதா அவர்களை குளிக்க வைத்து, துணிமணிகளை அணிவித்து, இருவருக்கும் சாப்பாடு ஊட்டி முடிக்கவும், அபி வெளியில் வரவும் சரியாக இருந்தது.

அடுத்த சில நிமிடங்களில் பிள்ளைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியேறி விட்டான்.

அபிநயனுக்கு பிறந்த இரட்டையர்களில் மூத்தவள் குந்தவி, இளையவன் சோழன் இருவரும் ஒன்றாம் வகுப்பும் படிக்கின்றனர். மேலும் இவர்களை கதையின் போக்கில் அறிந்து கொள்வோம்.

காரில் ஏறியதும் இருவரும் அத்தனை ஆர்ப்பாட்டமாக, அமர்க்களமாக வருவார்கள். ஏனோ இன்றைக்கு இருவரும் மெளனமாய் வர “என்ன இரண்டு பேரும் அமைதியா இருக்கீங்க? என்னாச்சு…”சிறு சிரிப்போடுக் கேட்டான்.

“எங்களை அம்மாச்சி வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்களா ப்பா…” எனக் கரகரத்த குரலில் குந்தவி கேட்டதும் சட்டென வாகனத்தை நிறுத்தியவன் குழந்தைகள் இருவரையும் பார்த்தான்.

 அதே நேரம், அபியின் வாகனத்திற்கு பின்னால் வந்து கொண்டிருந்த ஆனந்தி, அவனது கார் நின்றதும் சட்டென சுதாரித்து சடன் பிரேக் போட்டு, தனது வண்டியை நிறுத்த முயற்சித்து, பின் தடுமாறி கீழே விழுந்தாள்.

விழுந்த வேகத்தில் எழுந்து கொண்டவளின் உள்ளங்கையில் சீராய்ப்பு ஏற்பட்டிருக்க, தடுமாறியப்படி எழுந்தவள் வாகனத்தை நிறுத்திவிட்டு முன்னால் நின்ற காரை பார்த்தாள்.

அந்த கார்க்காரனோ பின்னால் ஒருவள் விழுந்து எழுந்ததை கூட கவனிக்காது வாகனத்தை உயிர்ப்பிக்க, அத்தனை கோபம் வந்தது ஆனந்திக்கு.

அதே நேரம் காரினுள் “என்னடா., என்னாச்சு?” பதறி போய் மகளிடம் கேட்டான்.

“சாரதா பாட்டி எங்க கூடயே இருப்பாங்க, எங்களை அடிக்க மாட்டாங்க,..” உதடு பிதுக்கி அழ தயாராக இருந்தாள் குந்தவி.

“அப்பம்மா உங்களோட தானே எப்பவும் இருக்காங்க…” குழந்தையின் கேசத்தை செவியோரத்தில் ஒதுக்கி விட்டப்படி கூறினான்.

“இந்த பாட்டி திட்டிட்டே இருக்காங்க ப்பா… நேத்து நைட்டு சோழாவை அடிச்சிட்டாங்க…” கரகரத்த குரலில், மழலை மொழி மாறாமல் கூறினாள். அக்காவின் அழுகை கண்டதும் இளையவனுக்கும் அழுகை வந்தது. அவனும்,அவளை போலவே உதட்டை பிதுக்கி அழுக ஆரம்பிக்க, இருவரையும் ஒன்றாக தூக்கி மடியில் அமர வைத்தவனுக்கு தாயின் மீது அத்தனை கோபம் வந்தது.

“எங்க அடிச்சாங்க, ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல,..” எவ்வளவு முயன்றும் அவனின் குரலில் கோபம் வெளிப்பட்டது.

“அப்பாகிட்ட சொன்னா…” சோழன் ஏதோ சொல்ல வர,குந்தவி வேண்டாமென தலையாட்ட, அக்காவின் தலையாட்டலை அழகாய் புரிந்து கொண்ட இளையவன் சட்டென வாயை மூடி கொண்டான்.

குழந்தைகளை நன்றாகவே பயப்படுத்தி வைத்திருக்கிறார் என்று நினைத்தவனுக்கு அத்தனை கோபம் வந்தது.

அடிவயிற்றிலிருந்து கிளம்பிய பெருமூச்சுடன் “நேத்து நைட்டு இரண்டு பேரும் சாப்பிட்டீங்களா?…” எனக் கேட்டான். இருவருமே இல்லையென தலையாட்டினர்.

குழந்தைகள் இருவரும் இல்லையென தலையாட்டியதும் ஆடவனின் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை சட்டென தன் காரை வீட்டிற்கு காரை திருப்பினான். இத்தனை சம்பாட்சனைகளும் சில நிமிடங்களிலே முடிந்திருந்தது.

அதே நேரம், தான் கீழே விழுந்ததைப் பார்த்து கார்கரான் பதறி போய் கீழே இறங்கி வருவான், தன்னிடம் மன்னிப்பை யாசிப்பான் என்று நினைத்திருந்த ஆனந்திக்கு அவனது அலட்சிய போக்கும், தன்னை கண்டுக் கொள்ளாமல் காரை உயிர்ப்பித்ததும் அத்தனை எரிச்சலைக் கொடுத்தது.

 அவன் இறங்கி வந்து மன்னிப்பு கேட்டிருந்தால் நிச்சியம் மன்னித்து இருப்பாளோ என்னவோ அவன் இறங்கி வராதது இவளுக்கு எரிச்சலோடு, கோபத்தை கொடுக்கவும் தன் இரு சக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு காரை நெருங்கி சென்றாள்.

அவள் காரை நெருங்கி சென்றதும் கார் பின்னால் வந்து மீண்டும் திரும்பி செல்ல “பயந்தாங்கோலி…” என கத்தியவள் காரில் குழந்தைகள் இருப்பது அறியாது ரோட்டின் ஓரத்தில் இருந்த கல்லை காரை நோக்கி எறிந்தாள். நல்லவேளை அவள் எறிந்த கல் காரின் சைடு மிரரில் பட்டு விழுந்தது.

அதே சமயம் காரில் கல் விழுந்ததும் குழந்தைகள் இருவரும் பயத்துடன் தன் தந்தையை பார்த்தனர் “ஒன்னும் இல்லை டா…” என்றவன் காரின் வேகத்தை குறைத்து ஆனந்தியை ஒரு முறை பார்த்துவிட்டு தான் அங்கிருந்து நகர்ந்தான்.

“சோறு தான திங்கற கடன்கார. கீழை தள்ளி விட்டுட்டு ஒரு சாரி கூட கேட்காம போறான் பாரு பரதேசி. இவனுங்களுக்கு எல்லாம் கார் வைச்சுட்டு இருக்கறதே

பிளைட் வைச்சிருக்கறதா நினைப்பு,…” என ஆனந்தி கத்திய கத்தல் எல்லாம் காற்றோடு தான் போனது.

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்