அத்தியாயம் 9
மசாலா காபியை லீலாவின் கைகளில் கொடுத்துவிட்டு அவரருகே வாசலில் அமர்ந்தார் சுந்தரி.
“வேற என்ன சொன்னாங்க கண்ணகி அண்ணி?” லீலா கேட்க,
“அவங்களுக்கு சந்தோசம் தாங்கல லீலா. இன்னும் ஒரு மாசம் இருக்கு. இப்பவே பருப்பு பொடி செஞ்சு வைக்கனும், மசாலா இடிச்சு வைக்கணும், நம்மூர் கைடையில இதெல்லாம் வாங்கி குடுக்கணும்ன்னு ஒரு பெரிய லிஸ்ட்டு போட்டு வச்சிருக்காங்க. அநேகமா உன் பொண்ணு பெங்களூருக்கு போகும் போது ஒரு பத்து கட்டப்பையாவது கூட போகும்” என்று சொல்லி சிரிக்க, லீலாவுக்கும் புன்னகை.
“ஆமா நீ என்ன ரெண்டு நாளா தேவாவை பார்க்க போகவே இல்லையாம்? அண்ணியும் சொன்னாங்க. தேவாவும் அம்மா என்ன பன்றாங்கன்னு கேட்குறா?” என சுந்தரி கேட்க, பசுபதியும் வேலையை முடித்துக் கொண்டு வந்துவிட்டார் அந்த நேரம்.
“இவங்க வரவும் போகலாம்ன்னு தான் இருந்தேன் க்கா. நீங்களே கேட்டுட்டீங்க. தேவாக்கு வேற காய்ச்சல் இன்னும் சரியாகலன்னு சொல்றிங்க. இங்க நம்ம வீட்டுல ஒரு வாரம் வச்சு பாத்துக்க தோணுது. ஆனா அண்ணி என்ன நினைப்பாங்களோன்னும் இருக்கு!” என்று லீலா சொல்ல,
“நல்லா நினைச்ச போ! எல்லாத்துக்கும் எதையாவது நீயே யோசிச்சுட்டு மண்டையை குடுத்துட்டு இருப்பியா நீ? ஏன் தான் இப்படி இருக்கியோ! அங்க உன் பொண்ணும் அம்மா வீட்டுக்கு போக எப்படி கேட்கன்னு கேட்காம இருந்தா அப்படியே இருன்னு சொல்லிடுவியா என்ன?” என்றார் சுந்தரி.
“அது அப்படி இல்ல அண்ணி! அக்கா இப்ப எங்களுக்கு சம்மந்தி வேற! புள்ளைய நாங்க கூப்பிட்டு அவங்க அதுக்கு வேற எதுவும் மனசுல வச்சிக்க கூடாதே. அதான் யோசிக்குறா. சரி தானே? இதுவே நம்ம கார்த்தியும் கூட இருந்தா கேட்க கூச்சமா இருக்காது. ரெண்டு பேருமா வந்து தங்கிட்டு போங்கன்னு சொல்லலாம். அங்க தனியா இருக்க பொண்ணை கூப்பிட தான் இவ்வளவு யோசனையும்!” என்றார் பேசுபதியும்.
“நல்ல பயம் தான் அக்கா மேல! உங்களை எல்லாம் வச்சுக்கிட்டு. போய் புள்ளைய கூட்டிட்டு வாங்க லீலா. கண்ணகி அண்ணி அப்படி நினைக்குத ஆள் எல்லாம் இல்ல. அவ வந்தா கூப்பிட்டுக்குங்க!” என்று சொல்ல, லீலா இன்னும் யோசிக்க தான் செய்தார்.
தேவதர்ஷினி இன்னும் கார்த்திகைசெல்வனின் அழைப்பு கொடுத்த ஆனந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் தான் வீட்டில் வளைய வந்து கொண்டிருந்தாள்.
கண்ணகி கவனித்தாலும் சிரிப்போடு அதை கடக்க,
“என்ன ஆச்சு அண்ணி! தனியா சிரிச்சுட்டு இருக்கீங்க?” என நிரஞ்சன் நேரே கேட்டுவிட, அப்படியே திருட்டு விழியாய் மாறியது தேவதர்ஷினி விழிகள்.
“அய்யயோ! என்ன லுக் இது! நான் ஏதோ எதார்த்தமா தான் கேட்டேன்.” என்றவன்,
“சரி தான்!” என கிண்டலாய் சொல்லிவிட்டு செல்ல, நெற்றியில் தட்டிக் கொண்டாள் தேவதர்ஷினி.
மாலை தேவதர்ஷினிக்கு டீயை தந்துவிட்டு அவளருகே அமர்ந்து மகனுக்கு தன் எண்ணில் இருந்து அழைத்தார் கண்ணகி.
“சொல்லுங்க ம்மா!” என்று கார்த்திகைசெல்வன் அழைப்பை ஏற்றிருக்க,
“என்ன டா காலைல என்னவோ சொன்னியாமே என் மருமககிட்ட!” என்றார் எடுத்ததும்.
“ஏன்? தேவா சொல்லலையா?” கார்த்தி கேட்க,
“தேவா சொன்னது இருக்கட்டும். வீடு பாக்குற விஷயத்தை நீ என்கிட்ட ஏன் சொல்லல? அதுக்கு தான் கோச்சுட்டு இத்தனை நாளும் பேசாம இருந்தேன் உன்கிட்ட. அந்த அக்கறை இருக்கா உனக்கு?“ என மகனை வம்பிழுக்க ஆரம்பித்தார்.
“பேசாம இருந்தாலும் என்ன பண்றேன் என்ன சாப்பிட்டேன்னு தினமும் தான் ஆள் வச்சு கேட்டுட்டு இருந்திங்களே! பின்ன என்ன?” அவனும் கேட்டுவிட,
“ஆள் வச்சு கேட்டேனா?” என்றவருக்கு தேவதர்ஷினியின் பார்வையே பதில் சொல்ல,
“இது வேறயா?” என்று சொல்லியவருக்கு இன்னும் சிரிப்பு தான் வந்தது.
“நாங்க சொல்லும் போதே சரின்னு சொல்லிருந்தா வேஸ்டா இந்த மாசம் வேலைக்குனு இவளை அலைய வச்சிருக்க மாட்டேன். நோட்ஸ் எடுக்குறேன், பேப்பர் திருத்துறேன்னு நைட்டு தூங்கவே மாட்டுறா!” என போகிற போக்கில் மகனிடம் புலம்பி வைத்தார்.
“த்தை!” என தேவதர்ஷினி முறைப்பது குரல் வழி கார்த்திகைசெல்வனை அடைந்தது.
“வீடு உனக்கு பிடிச்சிருக்கா? பிடிச்சிருந்தா தேவாக்கும் வீடியோ எடுத்து அனுப்பு டா. அவளும் பாக்கட்டும்” என்று சொல்ல,
“பார்த்து வச்சிருக்கேன் ம்மா. இன்னும் ஓகே சொல்லல. வேற வீடும் பாக்குறேன். பார்த்துட்டு சொல்றேன்!” என்றான்.
“சீக்கிரம் கூட்டிட்டு போற வழியைப் பாரு. ஒரு மாசத்துல ஓராயிரம் நினைக்க வச்சுட்ட எங்களை” கண்ணகி சொல்ல,
“ஏன் உங்களுக்கு என்னை பார்த்துக்க முடியாதா த்தை?” என்றவள் கேள்வியில்,
“அதான் காய்ச்சல்ல மூக்கை வடிச்சுட்டு இருக்கியே! இங்கேயே இப்படி. அங்க பெங்களூருல எல்லாம் என்னனு நீ தாக்கு பிடிக்க போற?” என கண்ணகி கேட்க,
“அத்தை!” என்று முறைப்போடு சொல்லியவள் சத்தம் பலமாய் வர, புருவங்கள் ஏறி இருந்தது கார்த்திகைசெல்வனுக்கு.
“பாரு! மாமியாரை எப்படி சத்தம் போடுறான்னு!” என்று அன்னை சொல்லவும் மிதமான புன்னகை கூட அவனுக்கு.
“அப்புறம் கார்த்தி! வீடு பார்த்து எல்லாம் ரெடி பண்ணிட்டன்னா எப்போ தேவாவை கூட்டிட்டு போறதுன்னு முன்னாடியே சொல்லிடு. இவ்வளவு நாளும் நீ தனியா போய்ட்டு வந்துட்டு இருந்த. அதனால நானும் கண்டுக்கல. தேவா வரும் போது நாங்க எல்லாரும் வருவோம். அதுக்கேத்த மாதிரி டிக்கெட் எல்லாம் பார்த்து வச்சிக்க!” என அன்னை சொல்ல,
“எல்லாரும்னா?” என்றான் உடனேயே.
“எல்லாரும்னா எல்லாரும் தான் டா. உன் பொண்டாட்டியை மட்டும் நைசா தனியா கூட்டிட்டு போய்டலாம் நினைச்சியோ?” என்று கிண்டல் செய்த கண்ணகி,
“நாங்க, உன் மாமாங்க, அத்தைங்க, அஷ்வினி, கயலு, அப்புறம் அப்பா சொந்தக்காரங்கள கூப்பிட்டா நிறைய வரும். அதை இன்னொரு நாள் பார்த்துக்கலாம்!” என திட்டமிட ஆரம்பிக்க, தேவதர்ஷினி புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.
காலையில் கார்த்தி அழைத்து சொல்லியதில் இருந்து அவர் எண்ணமெல்லாம் என்னென்ன கொண்டு செல்ல வேண்டும், அதில் வீட்டில் தயாரிக்க என்னென்ன வேண்டும், கடையில் என்னென்ன வாங்க வேண்டும், யாரெல்லாம் செல்ல, அங்கே சென்று எத்தனை நாள் தங்கிட என அத்தனை திட்டமிடல் கண்ணகியிடம்.
அவரின் இந்த செயல்களில் அவரின் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறிய மகிழ்ச்சி.
“ஓஹ்!” என்ற கார்த்திகைசெல்வன் யோசிக்க ஆரம்பிக்க,
“சீக்கிரம் வீடு பாரு கார்த்தி! சீக்கிரம்னா ரொம்ப சீக்கிரம்! ஒரு மாசமா எங்களை எல்லாம் பயத்துல வச்சிருந்த மாதிரி தேவாவை தவிக்கவிட்ட மாதிரி இதுக்கும் நேரம் எடுத்துக்காத!” கண்ணகி சொல்ல,
“ம்மா! அதான் சொன்னேனே! இந்த மாசம் ப்ராஜெக்ட் முடிக்க வேண்டிய நேரம். நைட்டும் நான் ஆபீஸ்ல தான் இருக்கேன். வீக்கேன்ட் தான் வீடு தேட முடியும். அப்படி ஓகே ஆனாலும் இந்த ப்ராஜெக்ட் முடிச்சிட்டா தான் இங்க கூப்பிட்டுக்க முடியும் உங்களை!” என்றவன்,
“கண்டிப்பா ஒரு மாசம் டைம் வேணும் ம்மா! அதுவரை எதுவும் எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க!” என்றுவிட்டான்.
“சரி சரி! அது ஒன்னும் பிரச்சனை இல்ல. ஒரு மாசம் எங்களுக்கும் கண்டிப்பா டைம் வேணும். எல்லாம் எடுத்து வைக்கணுமே! பண்டம் பாத்திரம் எல்லாம் வாங்கனும்!” என கண்ணகியும் சொல்ல,
“ஹ்ம் சரி ம்மா! ஒர்க் இருக்கு. அப்புறம் பேசுறேன்!” என வைக்க பார்த்தான் கார்த்தி.
“இரு டா. வேலை தானே? அங்க தான் இருக்கும். தேவாகிட்ட பேசு. குடுக்குறேன்” என்ற கண்ணகி,
“ம்மா! ம்மா!” என்ற மகன் குரலை கேட்காமல் தேவதர்ஷினியிடம் நீட்டிவிட, அழகாய் புன்னகையுடன் கண்ணகி அலைபேசியை வாங்கி காதில் வைத்தாள் அவள்.
தன்முன் இருவரும் பேசியதே இல்லை. எப்போது பேசிக் கொள்கிறார்களோ என அடிக்கடி நினைத்தது உண்டு கண்ணகி.
பார்க்கலாமே என நினைத்து கொடுத்து விட,
“சொல்லுங்க த்தான்!” என இப்போதுமே தேவா தான் ஆரம்பித்து வைத்தாள்.
“ஒர்க்ல இருக்கேன் தேவா!” அன்னையை எண்ணி தலையசைத்துக் கொண்டவன் சொல்ல,
“சரித்தான்!” என்றவள் எதுவும் சொல்லாமல் வைத்துவிட, கார்த்திகைசெல்வன் மொபைலை கையில் எடுத்துப் பார்த்தான்.
‘என்ன நினச்சாளோ!’ இப்படி தான் தோன்றியது. ஆனாலும் தோள்களை குலுக்கிக் கொண்டு அவன் வேலையில் கவனம் வைக்க,
“ஏன் டி வச்சுட்ட?” என கண்ணகி கேட்க,
“வேலையா இருக்காங்க த்தை!” என்று முகம் நிறைந்த புன்னகையுடனே கூறி இருந்தாள் தேவதர்ஷினி.
“நீ எல்லாம் என்ன பொண்ணு டி!” என அவள் கண்ணத்தில் கண்ணகி இடிக்க,
“ஆஹ்!” என தேவதர்ஷினி சத்தமிட,
“தேவா!” என அழைத்தபடி பசுபதியும் சிரித்தபடி அவருடன் வந்தார் லீலா.
“ம்மா, ப்பா!” என எழுந்து கொண்டாள் தேவா.
“வாங்க!” என இழுத்த கண்ணகி,
“பொண்ணுக்கு உடம்பு சரி இல்லையே உடனே பார்க்க வர வேண்டாமா?” என கேட்க,
“அதான் நீ இருக்கியே க்கா. பார்த்துக்க மாட்டியா?” என்றார் பசுபதி சிரித்தபடி.
“அய்யோ! உடம்பெல்லாம் அரிக்குது டி! உன் அப்பா பேச்சை கேட்டியா தேவா?” என்று சிரித்து காபி தயாரிக்க உள்ளே செல்ல,
“இன்னும் சரியாகலையா தேவா? மழையில நனைஞ்சா தான் உனக்கு ஒத்துக்காதே! எதுக்கு இப்படி பண்ணின? இப்ப பாரு யாருக்கு கஷ்டம்!” என லீலா கேட்க,
“லேசா தான் ம்மா. இப்ப பரவால்ல. நீங்க எப்படி இருக்கீங்க? ஏன் மூணு நாளா வர்ல? பெரிம்மாகிட்ட கேட்டேனே சொன்னாங்களா?” என பேசிக் கொண்டிருந்தாள்.
இடையே கணவன் கூறியதையும் தேவா சொல்ல, சுந்தரி சொன்னதாய் சொல்லி மகிழ்ச்சி தெரிவித்தனர் பெற்றோர்.
“நீங்க கேளுங்களேன்!” கண்ணகி காபி தந்து அமர்ந்து கதை பேச, கணவன் காதை கடித்தார் லீலா.
“ம்ம்ஹ்ம்ம்! வேணும்னா நீ கேளு. இல்லைனா பேசாம இரு!” பசுபதியும் முடியாது என்றுவிட, நீண்ட நேர தயக்கத்துக்கு பின் கேட்கவே வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்துவிட்டார் லீலா.
‘எங்க இருந்தா என்ன தேவா சந்தோசமா இருந்தா போதாதா?’ என தன்னைத் தானே சமாதானமும் செய்து கொண்டார்.
“ஆயிரம் இருந்தாலும் உன் அம்மாக்கு நான் அடுத்தவ தான் இல்ல தேவா?” என கேட்கவும்,
“என்ன த்தை சொல்றிங்க?” என்ற தேவதர்ஷினி புரியாமல் விழிக்க,
“அண்ணி! என்ன நீங்க?” என லீலாவும் பதற,
“சுந்தரி அப்பவே போன் பண்ணி சொன்னா… என்கிட்ட கேட்க என்ன டி உனக்கு? உன் பொண்ணை என்ன நான் வீட்டோட கட்டியா வச்சிருக்கேன். கூட்டிட்டு போய் கூட வச்சு பாத்திருந்துட்டு அனுப்புவியா. எவ்வளவு யோசிக்க நீ?” என தானே கேட்டும் விட, தேவதர்ஷினி சிரித்து நின்றவளை கண்ணகி அனுப்பியும் வைத்திருக்க, தேவா அவள் அன்னை வீட்டிற்கு சென்ற இரண்டாம் நாள் தன் வீடு வந்து சேர்ந்திருந்தான் கார்த்திகைசெல்வன்.
தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
18
+1
2
+1
1