அத்தியாயம் 5
“உன் வயசு பசங்க தான் கூட வரணும். ஆனா பாரு! இங்க யாரும் அப்படி இல்லையே! நாங்க வந்தா சரியும் இல்ல. சரியா! ஹ்ம்! போய்ட்டு வா!” சுந்தரி சொல்ல, இப்பொழுதே அடிவயிற்றில் ஒருவித புதுஉணர்வு.
ஒருஅடி எடுத்து வைக்க, “அத்தைகிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்க தேவா! மறந்துட்டியோ?” என மீண்டும் அவரே சொல்ல,
“நீ சும்மா இருக்க மாட்டியா! அவளை போய் நச்சு நச்சுன்னு!” என்ற கண்ணகி,
“நீ போ டா!” என சொல்லி,
“நீ வீட்டுக்கு கிளம்பு! பிள்ளைங்க தேட போகுது!” என சுந்தரியிடம் சொல்லி அவருடன் வெளிவாசலுக்கு வந்துவிட்டார்.
“ஆமா கைப்பிள்ளைங்களை வச்சுருக்கேன் பாருங்க!” என சுந்தரி சொல்ல,
“பின்ன இல்லையா? ஒரு தோசையை முதல்ல அஷ்வினியை சரியா வட்டமா ஊத்த சொல்லேன் பார்ப்போம்!” என சிரித்தார் கண்ணகி.
“நீங்க வேற அண்ணி! வாய் பேச சொன்னா ஊரை வித்துட்டு வருவா. அடுப்புகிட்ட போக சொன்னா மட்டும் சமயக்கட்டு பக்கமே போயிர மாட்டா. லீலா அவ்வளவு அமைதியா எல்லா வேலையும் பாக்குற மாதிரி அம்சமா வளத்து வச்சிருக்கா. நான் தான் என்ன பண்ண போறேனோ போங்க!” என சொல்ல,
“அதுக்கேத்த மாதிரி ஒருத்தன் வருவான். சும்மா குறை சொல்லிட்டு இருக்காம போய் இந்த சாப்பாட்டை குடு” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
மணி ஒன்பத்தை தாண்டிவிட்டது. பரமேஸ்வரன் நிரஞ்சன் இருவரும் இன்னும் வீடு வரவில்லை. பசுபதி வீட்டின் வாசலில் அமர்ந்து அவருடன் கதை பேசிக் கொண்டிருந்தார்.
கண்ணகி தான் அவரை அங்கே அனுப்பி வைத்ததும். திருமணம் நடந்த விதத்தை பேச என ஒரு கூட்டமே காத்திருக்கும். அப்படி உள்ளவர்கள் எல்லாம் நேரம் காலம் பார்க்காமல் சென்று லீலாவிடம் எதையாவது பேசி அவள் வருந்தி நிற்க கூடாதே என யோசித்து அங்கே பத்து மணி வரை இருக்க சொல்லி இருந்தார்.
நிரஞ்சன் தூங்கவும் எப்பொழுதும் நேரம் எடுக்குமே என அவனையும் தந்தையுடன் வர சொல்லிவிட்டு வாசலிலேயே அமர்ந்து கொண்டார் கண்ணகி.சுந்தரியுடன் பேசியபடி கண்ணகி வாசலுக்கு செல்வதை பார்த்தபடி தொடர்ந்து சில நிமிடங்கள் அங்கேயே தான் நின்றாள் தேவதர்ஷினி.
மேலே செல்லவே தோன்றவில்லை. திருமணம் நடந்த முறை என்பதை விட அவன் நடந்து கொள்ளும் முறை தான் அவளை அதிகத்திற்கும் யோசிக்க வைத்தது.
இவ்வளவும் நடந்து இரவும் ஆகிவிட்டது இன்னும் ஒரு வார்த்தை அவன் பேசவில்லையே என்ற எண்ணமே அவன் இந்த திருமணத்தை ஏற்று கொள்ளவில்லையோ என யோசிக்கவும் வைத்திருந்தது.
ஆனாலும் அப்படியே இருந்துவிட முடியாது என தெரியுமே. மெதுவாய் நகர்ந்தாள் கார்த்திகைசெல்வனின் அறையை நோக்கி.
“இதெல்லாம் இங்க இருக்கட்டும் கார்த்தி!” என்று சொல்லி அவன் அறைக்குள் சென்று பால், பழம் என சுந்தரி அப்பொழுதே வைத்துவிட்டு,
“இதுல தேவா ட்ரெஸ் எல்லாம் இருக்கு. அவ வந்ததும் எங்க வைக்கணும்னு காட்டிடு!” என்றும் சொல்லிவிட்டு, அவன் தலையில் கைவைத்துக் கொள்வதையும் பார்த்துவிட்டு தான் வந்திருந்தார்.
தேவதர்ஷினி அறைக்குள் வர, அது வரையும் அங்கே அமர்ந்திருந்த கார்த்திகைசெல்வன் எழுந்து நின்றான்.
நிமிடம் தாண்டி மௌனம் தொடர, “நீங்க தூங்குங்க த்தான்!” என்று சொல்லி தேவதர்ஷினி தான் பேசினாள் முதலில்.
அப்போதும் அவளிடம் பேசாமல் அவன் நிற்க தேவதர்ஷினி நகர்ந்து வந்து,
“பிடிக்கலைனா என்கிட்டயாச்சும் சொல்லிருக்கலாமே த்தான். ஏன் இப்படி?” என்று கேட்டேவிட்டாள்.
அதற்கும் பதில் சொல்ல முடியவில்லை.
“அப்போ நிஜமா பிடிக்காம தான் பண்ணிட்டீங்க இல்ல?” என்ற தேவதர்ஷினி,
“அத்தைகிட்ட சொன்னதை நானும் கேட்டேன் த்தான். நிஜம் தான் தெரியும்ன்றதுக்காக கல்யாணம் பண்ணிக்கணும்னு இல்ல. ஆனா இனி அதை பேசி எதுவும் ஆகப் போறதில்ல த்தான். உங்க கஷ்டம் புரியுது. கொஞ்ச நாள் போகட்டும். பார்த்துப்போம். இப்போ தூங்குங்க!” என்றாள்.
இப்படியெல்லாம் பேச வேண்டும் சொல்ல வேண்டும் என அவள் நினைக்கவே இல்லை. ஆனால் கார்த்திகைசெல்வன் நின்ற விதம் நிஜமாய் மனதை முள்ளாய் குத்திவிட்டது. பெரிதாய் ஒரு அச்சமும் இல்லாமல் இல்லை.
அவனுக்காக தான் பேசியது. அத்தோடு இப்பொழுது எதுவும் பேசி முடிவிற்கு வர இதொன்றும் சிறிய விஷயமில்லையே எனவும் தோன்ற தானே தனக்கு தோன்றியதை கூறி இருந்தாள்.
கார்த்திகைசெல்வன் நகரவே இல்லை. மாமன் மகள்கள் என்ற விதத்தில் அடிக்கடி பார்த்து பேசியது என எல்லாம் சகஜமாய் பேசி சிரித்தவர்கள் தான் இத்தனை வருடங்களும்.
ஆனாலும் அஷ்வினியை நேசித்தவன் என்ற விதத்தில் தேவதர்ஷினியை அந்த இடத்தில் வைத்து பார்க்கவே வரவில்லை இப்பொழுது வரை.
இதோ இதுவரை தன் அறை என்ற இடத்தில் இனி அவளுக்கும் இடம் உண்டு தானே? அறிவுக்கு புரிந்தாலும் மனதுக்கு தெரியவில்லை.
இந்த நொடியும் ஒவ்வொரு நிமிடமும் என அஷ்வினியின் என்னவோட்டம் என்னவாய் இருக்கும் என்று தான் மனம் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தது அவனிடம்.
அவன் விழித்து நின்ற விதத்தில் அத்தனை ஆயாசமாய் உணர்ந்தாள் தேவதர்ஷினியுமே!
இத்தனை பேசுபவளே இல்லை. அதுவும் உச்சபட்ச அதிர்ச்சிகளை ஒரே நாளில் சந்தித்து கடந்து பெரியவர்கள் சொல் கேட்டு இவ்வளவு தூரம் வந்து இப்பொழுதும் கூட அவனுக்காக மட்டும் யோசித்து தான் பேசி இருக்க, அதற்கு கொஞ்சமும் செவி சாய்த்ததாய் தெரியவில்லையே கணவனானவன்.
இதற்குமேல் தனக்கும் எதுவும் சொல்வதற்கு இல்லை என்ற அளவிற்கு தன்னால் முடிந்ததாய் சமாதான வார்த்தைகளை கூறி இருந்தவள் சென்று சோஃபாவில் அமர்ந்தாள்.
அவள் நகர்ந்ததில் சிந்தனை கலைந்து கார்த்திகைசெல்வனும் அவளைக் காண, அப்படியே அதில் சாய்ந்து தலை சாய்த்துக் கொண்டாள் குஷனை தலைக்கு வைத்து.
“ப்ச்! தேவா!” என அழைத்துவிட்ட பின் தான் அவளை கட்டிலில் தூங்க சொல்லவா என அவனே நினைத்து நிற்க,
“பரவால்ல த்தான். நீங்க தூங்குங்க!” என்று சொல்லி கைகளை கட்டிக் கொண்டு கண்களையும் மூடிக் கொண்டாள்.
இதுவரை பேசாதவன் இப்பொழுது மட்டும் என்ன சொல்லிவிட போகிறான் என நினைத்து தான் அவள் அவனை பேச தடுத்ததும்.
அறைக்குள் வரும் வரை கூட அத்தனை தயக்கமும் வேறுவேறு எண்ணங்களும் என மனம் அலைபாய தான் செய்தது தேவதர்ஷினிக்கு. ஆனால் இப்போது இல்லை. சுத்தமாய் இல்லை. என்னவோ ஒரு வெறுமையை அவன் பேசாமலே இவளுள் விதைத்துவிட்டிருந்தான்.
அடுத்த நாள் முழுதும் தேவதர்ஷினி, கார்த்திகைசெல்வன் இருவரையும் வீட்டைவிட்டு வெளியில் அனுப்பவில்லை பெரியவர்கள்.
மூன்றாம் நாள் தான் வெளியில் செல்ல வேண்டும் எனும் கட்டடுப்பாட்டுக்குள் அவர்கள் வைக்க, அன்று முழுதும் கார்த்திகைசெல்வன் அவன் அறையிலும் தேவதர்ஷினி கீழே கண்ணகியுடனும் என்று தான் பொழுது சென்றது.
சுந்தரி கணேசன் இருவரும் வந்து பார்த்து செல்ல, கயல்விழியும் வந்து சிறிது நேரம் இருந்துவிட்டு தான் சென்றாள்.
“அஷ்வினி வர்ல?” தேவதர்ஷினி கேட்க,
“அவளுக்கு என்னாச்சுன்னு தெரில. நேத்துல இருந்து மந்திரிச்சுவிட்டது மாதிரியே இருக்கா!” என்றாள் கயல்விழியும்
கண்ணகி சுந்தரியிடம் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.
“இவகிட்ட மாமியார் இடத்துல இருந்து நான் எப்படி கேட்பேன். ஆனா எனக்கே தெரியுது சுந்தரி. அவன் நேத்து இருந்த மாதிரியே தான் உம்முன்னு இருக்கான். இவகிட்ட அவன் பேசி கூட நான் பார்க்கல. என்னவோ இப்போ தான் கொஞ்சம் பயமா இருக்கு!” என கண்ணகி கலக்கமாய் சொல்ல,
“நம்ம தேவாவும் கார்த்திகிட்ட பேசலையா?” என்றார் சுந்தரி.
“அதுக்கு அவன் கீழ வரணுமே! இவ மேல போகல. அவன் கீழ வரல. நான் பார்த்த வர பேசி தெரியல. ஆனா ஒண்ணு மட்டும் சந்தோசம். காலைல வந்து அத்தானுக்கு காபி நான் போடுறேன்னு நம்ம தேவா தான் போட்டு கொண்டு போனா. மதியம் அவன் சாப்பிட வரும் போதும் கூடவே நின்னு பார்த்துகிட்டா!” என்று அத்தனை ரகசியப் பேச்சு வார்த்தை இருவரிடமும்.
“பிறகென்ன அண்ணி? இவ்ளோ போதாதா? எல்லாம் உடனே நடக்கணுமா என்ன? அதெல்லாம் தேவா சூதனமா புள்ள. பார்த்துக்குவா!” என்று ஆறுதல் சொல்லி சென்றார் சுந்தரி.
அன்றைய இரவும் அப்படியே தான் சென்றது. அடுத்தநாள் பெண் வீட்டிற்கு விருந்துக்கு செல்ல வேண்டும்.
தேவதர்ஷினி காலை எழுந்ததுமே பட்டுப்புடவையில் தயாராகி கீழே வந்துவிட்டாள்.
வந்து அவனுக்கு காபி கொண்டு செல்ல, “பத்து மணிக்கெல்லாம் நீங்க உங்க வீட்டுல இருக்கனும் தேவா. அவன்கிட்ட சொல்லி எழுப்பிவிடு!” என்று கண்ணகி சொல்லவும் தானும் அதை அப்படியே சொல்லி காபியை கொடுத்துவிட்டு கீழே வந்துவிட்டாள்.
“சரட்டு சரட்டுன்னு ஓடியாரா. கொஞ்ச நேரம் அவன் கிட்ட இருந்து பேசிட்டு வர வேண்டியது தானே? இதை நானா சொல்ல முடியும்!” என கவனித்து தனியே புலம்பிக் கொண்டார் கண்ணகி.
“நீங்க பைக்ல முன்னாடி போங்க. நாங்க வர்றோம்!” என்று அவர்களை தனியே அனுப்ப, எதற்கும் பெரிதாய் பதிலில்லை கார்த்திகைசெல்வனிடம். ஒரே ஒரு முடிவில் தான் இருந்தான் அப்போதைக்கு.
வண்டியில் வந்து இறங்கவும் “வாங்க மாப்பிள்ள!” என பார்த்த பசுபதி அழைக்கவும் கார்த்திகைசெல்வன் திரும்ப, அஷ்வினியின் பார்வையும் அங்கே அவனிடம் தான் நிலைகுத்தி நின்றிருந்தது.
மூச்சுமுட்டி நின்ற நிலையில் கார்த்திகைசெல்வன் செயலிழந்து நின்ற நிலை அத்தனை மோசமானதாய். அஷ்வினியின் அந்த பார்வையை சந்திக்கவே முடியாததாய் என ஒரு நிமிடம் கூட இல்லாத அந்த நேரம் என்னவோ பல கணங்களை தாங்கி நின்றதாய் தான் தோன்றியது கார்த்திகைசெல்வனுக்கு.
“அட! பொண்ணு மாப்பிள்ள வந்தாச்சா! அண்ணி சரியான நேரத்துக்கு அனுப்புற ஆளாச்சே!” என சுந்தரி உள்ளிருந்து வந்தவர் குரல் கொடுக்க, அந்த சத்தத்தில் கலைந்த அஷ்வினி விறுவிறுவென்று உள்ளே தன் வீட்டிற்கு சென்றுவிட,
“உள்ள வாங்க!” என லீலா இவர்களை வரவேற்றுக் கொண்டார்.
அன்று மதிய உணவை முடிக்கும் வரை அங்கே தான் இருந்தனர். சிரித்து பேசி அங்கும் இங்கும் சென்று என தேவதர்ஷினி எங்கும் நிற்கவே இல்லை.
தன் வீட்டில் அத்தனை நிம்மதியாய் இருப்பதை போன்ற ஒரு மகிழ்ச்சி. கூடவே இப்போதைய தன் ஒவ்வொரு அசைவுகளையும் அன்னை கவனிப்பார் தானே என்ற எண்ணமும் சேர, தானே வளைய புன்னகையுடம் சுற்றி வந்தாள்.
“கயல், அஷ்ஷை பார்த்துட்டு வரட்டுமா ம்மா?” என தேவதர்ஷினி கேட்கவும்,
“தனியா எப்படி டி போக முடியும் நீ? கல்யாணம் ஆகி முதல் முதல்ல போகும் போது வீட்டுக்காரங்க கூட தான் போகனும்!” என்று சொல்லவே கார்த்திகைசெல்வன் உள்ளம் ரயிலின் சத்தத்திலும் வேகத்திலும் துடிக்க ஆரம்பிக்க,
“உன் பெரியம்மா விருந்துக்கு ரெண்டு நாள்ல கூப்பிடுவாங்க தேவா. அப்ப போ. இப்ப போக கூடாது. இப்ப பிள்ளைங்களும் வீட்டுல இல்ல. காலேஜ் போயிருக்கும். மூணு நாள் லீவு போட்டாச்சுன்னு இன்னைக்கு தான் உன் பெரியம்மா அனுப்பி விட போறதா சொல்லுச்சு!” என்று பசுபதி சொல்லவும் தான் மூச்சே வந்தது அவனுக்கு. ஆனாலும் முழுதாய் எல்லாம் இல்லை.
“இதென்ன இத்தனை வலி!” நினைத்தவன் திருமணமான நான்காம் நாள் அதாவது தேவதர்ஷினி வீட்டிற்கு சென்று வந்த அடுத்த நாள் அன்னை சொல்லையும் கேளாமல், அதிர்ந்து நின்ற தேவதர்ஷினியை கவனித்தாலும் மாலை கிளம்பி பெங்களூர் சென்றுவிட்டான் தனியே.
தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
16
+1
1
+1
2