Loading

அத்தியாயம் 26

 

அத்தனை தெளிவான பதிலை அஷ்வினியிடம் எதிர்பார்க்கவில்லை தேவதர்ஷினி.

 

இன்னும் இந்த திருமணத்தில் அவள் விருப்பம் எப்படியோ என நினைத்து தான் கேட்காமல் விட முடியாதே என்ற எண்ணத்தோடு ஒரு சகோதரியாய் அக்கறையாய் தேவதர்ஷினி அஷ்வினியிடம் கேட்க,

 

“வேலைக்கு போகணும்னு தான் நினைச்சேன் தேவாக்கா. ஆனா அம்மாக்கும் அப்பாக்கும் அவ்வளவு இஷ்டம் இந்த சம்மந்தத்துல. வேற நல்ல வரன் பின்னாடி கிடைக்கலாம் தான். ஆனாலும் இப்போ அவங்க எதிர்பார்ப்பை பார்க்கும் போது வேற என்ன வேணும்னு தோணுச்சு. சரினு சொல்லிட்டேன்!” என்ற அஷ்வினி,

 

“உங்களை மாதிரினு கூட வச்சுக்கலாம் க்கா. அம்மா அப்பா நமக்கு கெட்டது செஞ்சிடுவாங்களா என்ன?” என்றவளை பார்த்து தேவதர்ஷினி புன்னகைக்க,

 

“அவங்ககிட்ட கூட தனியா பேசினேன். அப்புறம் தான் ஓகே சொன்னேன்!” என அஷ்வினி சொல்ல, தேவதர்ஷினிக்கு எதுவும் சொல்ல தோன்றவில்லை.

 

“எல்லாம் நல்லதா தான் நடக்கும் அஷ்!” என்று கூறி இருந்தாள்.

 

அன்று மாலையே பூவைக்கும் படலம் அத்தனை சிறப்பாய் வீட்டில் நடைபெற, மாப்பிள்ளை வீட்டினர் செயல்களும் அனைவர்க்கும் திருப்தியாய் தான் அமைந்தது.

 

நல்லபடியாய் வைபவம் நடந்து முடிந்திருக்க, அடுத்து பெரியவர்கள் ஒரு வாரத்தில் நிச்சயமும் இரண்டு மாதங்களில் திருமணமும் என பேசி விழாவை முடித்திருந்தனர்.

 

*****************************************

 

தலையை குனிந்து கொண்டு அடிக் கண்ணால் கணவனை பார்ப்பதும் அவன் பார்க்கும் நேரம் குனிந்து கொள்வதும் என நல்ல பிள்ளையாய் அமைதியாய் தேவதர்ஷினி சோஃபாவில் அமர்ந்திருக்க, கபோர்டுக்கும் கட்டிலுக்கும் என தன்னுடைய ஒவ்வொரு துணியாய் அங்கும் இங்குமாய் நடந்து எடுத்து வைத்து இடை இடையே மனைவியை முறைத்துக் கொண்டிருந்தான் கார்த்திகைசெல்வன்.

 

அவன் பேசினாலோ திட்டினாலோ கூட கேட்டுவிட்டு எழுந்து கீழே சென்றிருப்பாள் போல. இப்படி அமைதியாய் இருக்கிறானே என அது தான் தேவாவையும் அமைதியாய் இருக்க வைத்தது.

 

அவன் பேசாதது ஒரு பக்கம் இருக்க, மணி இரண்டு! இன்னும் இரண்டு மணி நேரத்தில் கிளம்பிவிடுவானே எனும் எண்ணமும் கவலையும் வேறு ஒரு பக்கம்.

 

எத்தனை மெதுவாய் ஒவ்வொரு துணியாய் என எடுத்து வைத்தும் ஊருக்கு வரும் பொழுது எடுத்து வந்த நான்கு சட்டைகளை எடுத்து வைத்து கிளம்பும் வேலை முடிந்திருக்க, அடுத்து என்ன என்பதாய் அறையை சுற்றிலும் பார்த்தான் கார்த்திகைசெல்வன்.

 

அறைக்குள் அவன் வேண்டாம் என ஹாலில் போடப்பட்டிருந்த சோஃபா மீண்டும் அவன் அறைக்குள்ளேயே வந்திருந்தது.

 

“ஏன் மறுபடியும் சோஃபாவை ரூம்க்குள்ள கொண்டு வந்திங்க?“ என வந்ததும் அன்னையிடம் கேட்டதற்கு,

 

“இங்க ஹால்ல இடமில்ல. நீ தானே என் ரூம்க்கு வேணும்னா வேணும். அதுல இருந்து தான் எனக்கு வேலை செய்ய முடியும்னு வாங்கிப் போட்ட? இப்ப ஹால்ல போட்டா ஹால்ல ஏற்கனவே இருக்குற சோஃபாவை நான் தலையில தூக்கி வச்சுக்கவா முடியும்?” என கண்ணகியும் பதில் சொல்லி இருந்தார்.

 

இப்போது தேவா அதில் அமர்ந்திருக்க, துணிகள் அடங்கிய தோள்பையை அவன் கையில் எடுக்கவும் இப்பொழுதே அவன் கிளம்பிவிட்டதை போல பதறி எழுந்தாள் தேவதர்ஷினி.

 

“பாக் இங்கேயே இருக்கட்டுமே த்தான். போகும் போது எடுத்துக்கலாம்ல?” என அவள் கேட்க,

 

“போகும் போது ரூம்க்கு வர மாட்டேன்!” என்றான் முறைத்தப்படியே!

 

அதில் அத்தனை வருத்தம் தேவாவிற்கு. வேண்டும் என்றே சொல்கிறான் என தெரிந்தாலும் இப்படி சொல்கிறானே என்று தான் இருந்தது. நிஜமாய் அவ்வளவு கோபம் அவள் மேல் கார்த்திக்கு.

 

“அடுத்த வாரம் நிச்சயத்தை வச்சுட்டு இப்ப எப்படி நீ போக முடியும்? மறுபடியும் அலையனும் தானே? அவன் போய்ட்டு வரட்டும். நீ இரு!” என கண்ணகி சொல்ல,

 

“ம்மா! அப்போ ஒரு வாரம் நான்?” என அங்கேயே சட்டென்று கேட்டிருந்தான் கார்த்தி.

 

லீலாவும் பசுபதியும் அங்கிருந்தவர்கள் கார்த்தியின் பேச்சைக் கேட்டு மகளைப் பார்க்க, அவளுமே கணவனை கண்கள் விரிய தான் பார்த்திருந்தாள்.

 

“ஏன் இத்தனை வருஷமும் அவ தான் கூட இருந்து உன்னை பார்த்துகிட்டாளோ?” என நக்கலாய் கண்ணகி பதில் சொல்லவும் அன்னையை முறைத்தவன் மனைவியைப் பார்க்க, அவள் ஒரு வார்த்தை பேசவில்லை.

 

அது தான் அவன் கோபமே! அவளும் சொல்லி இருந்தால் அனுப்பி இருப்பார்கள் தானே என அத்தனை கோபம் மனைவி மேல்!

 

தான் மட்டும் எவ்வளவு கேட்டாலும் அவளை அனுப்ப போவதில்லை என்பதை போல அத்தனை தெளிவாய் அடுத்த ஏழு நாட்களுக்கு தேவாவின் வேலைகள் என பெண்ணுக்கு புடவை எடுப்பது, தைப்பது, என அடுத்தடுத்த வேலைகளை வரிசைப்படுத்த, தேவா கப்பென வாயை மூடிக் கொண்டாள்.

 

இப்பொழுதும் பாவம் போல தன் முன் நிற்பவளை கடத்தி கொண்டு சென்றுவிட்டால் என்ன என்று தான் தோன்றியது அவனுக்கு.

 

“இப்பவும் பேசமாட்டல்ல. அப்போ அவங்க சொல்றதை கேட்டுட்டு இங்கேயே இரு!” என்று சொல்லி அவன் நகர போக,

 

“த்தான்!” என்றாள் அழுவதை போல.

 

“முகத்தை அப்படி வச்ச!” என்றவன்,

 

“ப்ச்!” என கோபமாய் பேகை தூக்கி கட்டிலில் போட, மெதுவாய் நகர்ந்து அவனருகே வந்தாள்.

 

“அவங்க இருக்கனும் சொல்லும் போது நான் எப்படி போகணும்னு சொல்ல முடியும்? புரியலையா த்தான் உங்களுக்கு?” என்றாள் மெதுவான குரலில்.

 

“பேசாம போயிரு தேவா! நீயும் நானும் என்ன கிழவன் கிழவியாvவா ஆகிட்டோம்? நமக்கும் இப்ப தானே கல்யாணமாச்சு! அந்த அறிவு வேண்டாம் அவங்களுக்கு!” என்றவனை அவன் பேச்சை என கேட்டு தேவதர்ஷினி வாயில் கைவைக்க,

 

“இவங்க கூட்டிட்டு போனு சொன்னா கூட்டிட்டு போனும். விட்டுட்டு போனு சொன்னா விட்டுட்டு போனும். நீயும் பொம்மை மாதிரி தலையை தலையை ஆட்டுவ!” என்றதும் மீண்டும் அவள் குனிந்து கொள்ள,

 

“எனக்கென்ன! நீ இரு! உனக்கு தான் கதை பேச, விளையாடனு நல்லா நேரம் போகுமே! அம்மா போரடிச்சா உன் அம்மா வீடு, அங்கேயும் போரடிச்சா கயல் அஷ்வினினு நேரம் போறதே தெரியாதே உனக்கு தான்” என்றவன்,

 

“தாலி கட்டி நான் விட்டுட்டு போனப்ப கூட கொஞ்சமும் என் நியாபகம் இல்லாம கயல் அஷ்வினி கூட விளையாடினவ தானே நீ?” என்றும் கேட்க, தேவாவிற்கு தலையெல்லாம் சுற்றியது அவன் பேச பேச.

 

“விட்டுட்டு போனப்ப அந்த அக்கறை இருந்திருக்கணும். இப்ப மட்டும் வலிக்குது!” தேவதர்ஷினியும் முணுமுணுக்க,

 

“என்ன?” என்றான் அவள் சத்தம் கேட்காததில்.

 

“சொன்னவங்களை விட்டுட்டு என்னை வந்து கடிக்குறிங்க நீங்க. நான் என்ன பண்ணுவேன்? இப்ப நான் உங்க கூட வந்தா ஒரு வாரத்துல மறுபடியும் இங்க வரணும் தானே நிச்சயத்துக்கு?” என அவளும் கொஞ்சம் சத்தமாய் கேட்க,

 

“ஆமா! அதானே! இவன் எப்படி போனா என்ன? அதானே! இருந்துக்கோ! இங்கேயே இருந்துக்கோ!” என்றவன்,

 

“உனக்கு இருக்கு டி!” என்றான் கோபமாய்.

 

“ஏன் த்தான் இப்படி பண்றீங்க?” தேவதர்ஷினி கேட்க,

 

“உனக்கென்ன தெரியும்? சிவனேனு இருந்தேன். இருக்க விட்டிங்களா? கூட்டிட்டு போய் வாழ ஆரம்பிச்சு அதுவும் இத்தனை நாள்ல? எனக்கு தானே கஷ்டம். உனக்கென்ன?” என்றவனுக்கு நிஜமாய் மூச்சு முட்டியது பெங்களூருக்கு தனியே செல்ல நினைத்தாலே!.

 

‘இப்பவும் கிட்ட வர்றாளா பாரு!’ என நினைத்து கூடுதலாய் முறைக்க, நினைப்பதெல்லாம் புரிந்திட முடியுமா என்ன?.

 

“சரி நான் அத்தைகிட்ட சொல்றேன். நானும் வர்றேன்!” என்றாள் சோகமாய்.

 

பேச்சுக்கு சொல்கிறாளோ என அவன் அவள் முகம் பார்க்க, நிஜமாய் தான் கூறினாள்.

 

இப்படி புலம்பி அவன் அங்கே சென்றால் மட்டும் நிம்மதியாய் இருந்து விடுவானா? எத்தனைக்கு தன்னை தேடும் என்பதை புரிந்து பேசுபவனை அப்படியே தனியே விடவும் மனதில்லை இப்பொழுது தேவாவிற்கு.

 

கண்ணகி நிச்சயம் திட்டுவார் தான். கேட்டு கொள்ளலாம். கணவனுக்காக தானே என நினைத்து வாசல் வரை அதே சீரியசான முக பாவத்தோடு அவள் சொல்ல,

 

“ப்ச்! ஏய்!” என கைப்பிடித்து இழுத்து உள்ளே அழைத்து வந்துவிட்டான் கார்த்தி.

 

“என்ன த்தான்? அதான் பேசுறேன் சொன்னேனே?” என தேவா சொல்ல,

 

“என்ன சொன்னேனே? அப்பவே சொல்லி இருக்கனும். இப்ப சொன்னா நான் தான் மிரட்டி சொல்ல வச்சேன்னு மறுபடியும் என்கிட்ட தான் பாய்வாங்க!” என்றவனை அவள் விழித்துப் பார்க்க,

 

“ஒன்னும் வேண்டாம். நீ இருந்துட்டே வா!” என்றான் மெதுவாய்.

 

“நிஜமாவா?” 

 

“அப்போ உனக்கே வர விருப்பம் இல்லை அதானே? இவன் புலம்புறானேனு தானே வர்றேன்னு சொல்ற?“ என மீண்டும் சப்தமிட,

 

“த்தான்!” என அவன் வாயை கைகளால் மூடி மற்றொரு கையால், “ஷ்ஷ்!” என அவள் உதட்டில் வைத்தாள்.

 

மொத்தமாய் என்ன பேசினோம் என்பதையே அந்த அருகாமையிலும் அவள் செய்கையிலும் மறந்து போனான் கார்த்திகைசெல்வன்.

 

“சரி! என்ன வேனா நினைச்சுக்கோங்க! எனக்கு உங்க கூட வரணும்னு இருக்கு ஆனா இங்கே இருக்கணும்னும் இருக்கு. உங்களோட தான் அங்க எப்பவும் இருக்க போறேன். இப்ப ஒரு வாரம் தானே!” என அவன் பார்வை மாற்றத்தை கண்டவள் அவன் வாயில் இருந்து கையை எடுத்தாலும் அவன் அருகாமையில் நின்றே அவனை பாராமல் சொல்லிவிட,

 

“அதான் சொன்னேனே! உனக்கு வர இஷ்டம் இல்லைனு!” என்றவன்,

 

“நீ வேனா பாரு! அடுத்த வாரம் வருவேன்! இன்னும் கல்யாணத்துக்கு ஒரு மாசம் ஒன்றரை மாசம் தான் இருக்குன்னு உன்னை இங்கேயே இருக்க வைக்க போறாங்க. அப்ப தெரியும் உனக்கு!” என்று அவன் சொல்லவும் அங்கும் இங்குமாய் விழித்தாள்.

 

‘வாய்ப்பிருக்கிறது’ என்றே அவள் நெஞ்சமும் கூறியது.

 

“இம்சை!” என்றவன் அவள் இடையோடு சேர்த்து மொத்தமாய் அணைக்க, விழிகள் விரிந்து முகம் சிவந்தவள், “ம்ம்ஹுஹ்ம்ம்!” என தலையசைத்ததில் அத்தனை குறும்புன்னகை கார்த்தியிடம்.

 

“ஒரு வாரத்துக்கு தாங்கணுமே நான். அப்புறம் என்ன ம்ம்ஹும்ம்? ஹ்ம் மட்டும் தான்!” என்றவன் அவளிடம் சேட்டைகளை கூட்ட, சத்தமில்லாமல் அவன் நெஞ்சில் சாய்ந்து இறுக்கமாய் அணைத்துக் கொண்டவளை தானுமே இணைத்துக் கொண்டான்.

 

நான்கு மணிக்கெல்லாம் கார்த்திகைசெல்வன் கிளம்பும் நேரம் அவனை விடவுமே வாடியது என்னவோ தேவதர்ஷினி தான்.

 

கண்ணகி சுந்தரியின் வீட்டில் இருக்க, கார்த்தி அனைவரிடமும் சொல்லிக் கொண்டு தன் வீட்டிற்கு வந்து பெங்களூர் கிளம்பும் நேரம் தானும் அவனோடு அவன் வீட்டிற்கு வந்துவிட்டாள்.

 

“நீ தனியா போனும் மறுபடி. அங்கேயே இருக்க வேண்டியது தானே? என்ன கூடவா வர போற?” என சொல்லி தான் அழைத்து வந்தான் கார்த்தி.

 

“பரவால்ல நடந்தே போய்ப்பேன்! நீங்க தனியா போகணும்ல?” என்றவள் தவித்த முகம் பார்த்து இவனுக்குமே அத்தனை தவிப்பானது.

 

இப்படி ஒரு நாள் வரும் என அவன் நினைத்தும் பார்த்தது இல்லை.

 

 

அவள் கன்னம் தட்டி தலையசைத்து கிளம்பியவனை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவளை தானுமே கவனித்து தான் கிளம்பி சென்றான்.

 

இதற்கேவா என்பதை போல அந்த ஒரு வாரமும் மொத்தமாய் அத்தனை வெறுத்து போன நாட்கள் கார்த்திகைசெல்வனுடையது.

 

வருடகணக்கில் தனியே அங்கே வாழ்ந்து வந்தவனுக்கு மனைவியை பிரிந்த இந்த ஒரு வாரம் அதுவும் இருவரின் புரிதலுக்கு பின் வந்த இந்த பிரிவு அத்தனை உணர்த்தியது வாழ்க்கையை.

 

முன்பு புரியாத தன் மனைவியின் நறுமணத்தை இன்று தன் அறையில் தேடி தொலைந்தான் கார்த்திகைசெல்வன்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
21
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்