Loading

அத்தியாயம் 2

 

“ம்மா! அப்பா பணம் குடுத்தாங்களாமே! வாங்கிட்டு வர சொன்னாங்க. எடுத்து குடுங்க!” என மண்டபத்தில் இருந்து வந்து நின்றான் நிரஞ்சன். 

 

“நீ சாப்பிட்டியா நிரஞ்சா?” என வாசலில் இருந்த சுந்தரி கேட்க,

 

“இல்ல த்தை! அப்பாகிட்ட பணத்தை குடுத்துட்டு வந்து சாப்பிடுறேன்!” என்றான்.

 

“ஆமா அஷ்வினியும் கயலையும் மண்டபத்துல பார்த்தியா? வீட்டுக்கு போய்ட்டாங்களா? இங்க வர சொல்லிட்டு வந்தேனே?” என சுந்தரி கேட்க,

 

“கயல் அப்பவே வீட்டுக்கு போய்ட்டா த்தை! அஷ்வினி மண்டபத்துல தான் இருக்கா. உடம்பு எதுவும் சரியில்லையா அத்தை அவளுக்கு? என்னவோ மாதிரி இருந்தா. அப்பா தான் பேசிட்டு இருந்தாங்க!” என்றான் நிரஞ்சன் தனக்கு தெரிந்ததாய்.

 

அஷ்வினி, கயல்விழி இருவரும் சுந்தரியின் மகள்கள். அஷ்வினி கலை கல்லூரியில் இளங்கலை இறுதி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். கயல்விழி அதே கல்லூரியில் இப்பொழுது தான் சேர்ந்து முதல் வருடத்தில் இருக்கிறாள்.

 

“என்னவாம் அவளுக்கு? இருக்குற பிரச்னை போதாதுன்னு எதையும் இழுத்து வச்சுக்கிட்டாளா? சட்டு சட்டுனு எதுக்கெடுத்தாலும் கோவம் வந்துருது. என்னனு எனக்கு பிறந்தாளோ!” என சுந்தரி சொல்ல,

 

“உங்க பொண்ணு உங்களை மாதிரி தானே இருக்கும்!” ஏன சிரித்த நிரஞ்சனை,

 

“டேய்! அத்தைகிட்ட என்ன பேச்சு இது?” என கண்டித்தபடி வந்துவிட்டார் கண்ணகி.

 

“கொழுப்பை பாரேன்! உனக்கு இருக்கு டா!” என கூறினாலும் அதை பெரிதாய் நினைக்கவில்லை சுந்தரியும்.

 

“தேவா அண்ணி எங்க?” நிரஞ்சன் புன்னகைத்து கேட்க,

 

“இப்ப தான் தலையை ஃபேன்ல காய வைனு அனுப்பிவிட்டேன். இதை பத்திரமா கொண்டு போ!” என அவன் கையில் பணத்தை கொடுத்துவிட்டார் கண்ணகி.

 

“குடுத்துட்டு சாப்பிட வா. மணி என்னாச்சு பாரு!” என செல்பவனைக் கண்டு சத்தமாய் சுந்தரி கூற,

 

“சரித்தை!” என்று சொல்லி சென்றான் நிரஞ்சன்.

 

மதியம் வீட்டில் இருப்பவர்களுக்கு என உணவு சமைக்க கண்ணகி தயாராக, சுந்தரியும் அவருக்கு உதவியவர் கணேசன் வரவும் கண்ணகியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டார்.

 

கண்ணகி வீட்டிற்கும் கணேசன் பசுபதி வீட்டிற்கும் பெரிதாய் தூரம் அதிகம் இல்லை. கால்மணி நேரம் தான். பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்து வர சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட, கண்ணகி சமையலை முடித்தவர் தேவதர்ஷினியை தேடி சென்றார்.

 

அப்பொழுது தான் உறக்கத்திற்கு சென்றிருந்தாள் அவள். பார்த்ததும் சிறு புன்னகை தான் வந்தது கண்ணகிக்கு.

 

கள்ளம்கபடம் அறியாத முகம். வீட்டினர் சொல்லுவதை அப்படியே ஏற்று கொல்பவள். அதை நிரூபிக்க தான் இன்று காலை இவ்வளவு கலவரமோ என்பதை போல, “கார்த்தி உன்னை நல்லா பார்த்துப்பான் தேவா. உன் வாழ்க்கை நல்லாருக்கும்!” என்று கண்ணகி சொல்லவுமே சரி என்று தான் தலையை அசைத்திருந்தாள்.

 

வந்த சுவடு தெரியாமல் மெதுவாய் கதவடைத்து மகனைக் காண படியேறி செல்ல, அறைக் கதவை பூட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான் கார்த்திகைசெல்வன்.

 

“கார்த்தி!” என கதவை தட்டி அன்னை குரல் கொடுக்க, இரண்டு மூன்று முறை அழைத்த பின்பே வந்து கதவை திறந்தான்.

 

“கதவை திறக்க இவ்வளவு நேரமா டா? முதல்ல ஏன் உள்ள பூட்டின?” என்று கேட்க, முறைப்பாய் ஒரு பார்வை மட்டும் தான் அவனிடம்.

 

“என்ன டா கார்த்தி?” என அவனருகே சென்று அமர, பேசவே இல்லை அவன்.

 

“அம்மா மேல கோவமா? அங்க நடந்ததை பார்த்த தான? உன் மாமா சிதைஞ்சு நின்ன கோலம் இன்னும் என் கண்ணை விட்டு போகல. லீலா ஏற்கனவே பயந்தவ. இப்ப கல்யாணம் நின்னு போச்சுன்னு அவ எதாவது பண்ணிக்கிட்டா? இதையெல்லாம் பார்த்துட்டு என்னனு சும்மா இருக்க நான்?” என மனமுருக பேசிய கண்ணகி,

 

“அதுவும் பசுபதியும் கணேசனும் இல்லைனா நாம இந்த நிலைக்கு இன்னைக்கு வந்திருக்க முடியுமா? கல்யாணம் கட்டிக்குடுத்த நாலு வருசத்துல உன் அப்பா சீட்டு பிரிச்சு அவ்வளவு ஜனங்களும் அவரை ஏமாத்தி நம்ம மொத்த காசையும் உருவிட்டு தெருவுல நிறுத்திட்டாங்க. என் தம்பிங்க இல்லைனா அன்னைக்கு நாம ரோட்டுல தான் நின்னிருக்கணும். அப்போ தங்க இடம் குடுத்து உன் அப்பாவுக்கு ஜவுளிக்கடை வச்சு குடுத்து நம்மள தூக்கி விட்டதே அவங்க தானே டா?” என்று பழையதை நினைவுக்கு கொண்டு வந்து கண்களை துடைத்துக் கொண்டு,

 

“லீலாவுக்கும் சுந்தரிக்கும் பொம்பள புள்ளைங்க மட்டும் தான். பொம்பள பசங்கள வச்சுட்டு நமக்கு ஏன் செய்யணும்னு நினைச்சிருந்தா இன்னைக்கு நாம என்னாகி இருப்போமோ” என்று சொல்லி அவர்களை எண்ணி வாஞ்சையாய் புன்னகைக்க, கார்த்திகைசெல்வன் அவரை தான் பார்த்திருந்தான்.

 

“நம்ம தேவாக்கு கல்யாணத்துக்கு வரன் பாக்குறோம்ன்னு சொல்லவுமே நான் உனக்கு தான் கேட்டேன் அவளை. உன் அப்பா தான் சொந்தத்துல வேண்டாம் இப்படியே இருந்தா தான் உறவு நிலைக்கும் என்னென்னவோ பேசி என்னை பேச விடாம பண்ணிட்டாரு. இப்ப நான் நினைச்சது தான் நடந்திருக்கு. தேவாக்கு என்ன டா குறை?” என அவன் முகம் பார்த்து கேட்க,

 

“இத்தனை பேரை யோசிச்சிங்க நீங்க என்னை கடைசி வரை யோசிக்கவே இல்லையே ம்மா!” என்று கார்த்திகைசெல்வன் கேட்கவும் தான் மனம் திடுக்கிட்டது கண்ணகிக்கு.

 

“கார்த்தி?” என கேள்வியாய் அழைத்து பயமாய் அவர் பார்க்க,

 

“தேவாவை போய் எனக்கு…. ஏன் ம்மா அப்படி பண்ணீங்க? எவ்ளோ கெஞ்சுனேன்!” என கேட்க கேட்க தான் அவர் அதிகத்திற்கும் பயந்தார்.

 

மண்டபத்திலும் கூட இதே கெஞ்சல் தான். இதையும் விட அதிகமாய் தான் கெஞ்சினான். ஆனால் அதெல்லாம் கண்ணகி கருத்தில் அப்பொழுது பதியவே இல்லை.

 

தன் தம்பிக் குடும்பத்தின் நிலைகுலைந்த தோற்றத்தில் வேறெதுவும் அவர் கண்களுக்கு அகப்படவே இல்லை.

 

“நான் தான் தப்பு பண்ணிட்டேன். கல்யாணத்துக்கு வர கூடாதுன்னு தான் இருந்தேன். அடுத்த வாரம் வரலாம்ன்னு இருந்தேன்” என தலையில் கைவைத்த கார்த்திகைசெல்வன்,

 

‘எல்லாம் அவளை சொல்லணும்!’ என பல்லைக் கடித்துக் கொண்டான்.

 

“கார்த்தி! என்ன டா பெரிய வார்த்தை எல்லாம் பேசுற? தேவாவை உனக்கு தெரியாதா?” கண்ணகி கேட்க,

 

“தெரியும் ம்மா! தெரியும்ன்றதுக்காக கல்யாணம் பண்ணிக்கனுமா?” என விருட்டென நிமிர்ந்து அன்னையைப் பார்த்து கூறிய கார்த்திகைசெல்வன் அதன்பின் தான் அவருக்கு பின் பார்க்க, வாசலில் நின்றிருந்தாள் தேவதர்ஷினி.

 

அவன் பார்வை சென்ற திசையில் தானும் பார்த்த கண்ணகியும் ஒரு நொடி அதிர்ந்தவர் பின் சுதாரித்துக் கொண்டார்.

 

“வா தேவா!” என கண்ணகி அழைக்க,

 

“பக்கத்து வீட்டு ஆண்ட்டி கூப்பிடுறாங்க த்தை உங்களை. அப்பவே வந்துட்டாங்க. உங்ககிட்ட தான் பேசணுமாம்!” என்றவள் கார்த்திகைசெல்வனைப் பார்க்க, அவன் முகத்தை திருப்பி அமர்ந்திருந்தான்.

 

பக்கத்து வீட்டில் இருப்பவர் வந்து ஐந்து நிமிடங்கக்கு மேல் ஆகிவிட்டது. “அத்தை வீட்டில் இல்லை போல” என சொல்லியும் குறுகுறுவென்ற அவர் பார்வையை சமாளிக்க முடியாமல் தான் மேலே பார்த்து வருவதாக சொல்லி வந்திருந்தாள்.

 

“ப்ச்! நான் ஒருத்தி! உன்னை தனியா விட்டுட்டு வந்தேன் பாரு!” என்ற கண்ணகி,

 

“அவளுக்கு என்னவாம்?” என்று சொல்லி,

 

“நான் போய் பாக்குறேன். நீ கொஞ்ச நேரம் வேணா கார்த்திகிட்ட பேசிட்டு இரேன்!” என சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த கார்த்திகைசெல்வன் பல்லைக் கடித்து அன்னை புறம் திரும்ப, கவனித்துவிட்ட தேவதர்ஷினியும்,

 

“இல்ல இருக்கட்டும் த்தை!” என்று சொல்லி அவருக்கு முன் கீழே சென்றுவிட்டாள்.

 

மகன் என்னவோ நினைத்து மருகுகிறான் என புரிந்து திரும்பி அவனைக் கண்ட கண்ணகி,

 

“கார்த்தி!” என கவலையாய் அழைக்க, இன்னும் திரும்பிக் கொண்டான் கோபமாய்.

 

என்னவோ போலானது கண்ணகிக்கு. இப்படி எல்லாம் மகன் செய்ததும் இல்லை செய்வதும் இல்லையே என்ற நினைவோடு தான் கீழிறங்கி சென்றார்.

 

“வெல்கம் ஹோம் அண்ணி!” என தேவதர்ஷினியிடம் சொல்லிக் கொண்டு நிரஞ்சன் வீட்டிற்குள் நுழைய, புன்னகைத்தாள் தேவதர்ஷினி.

 

கூடவே பரமேஸ்வரனும் வர, “மாமா!” என எழுந்து கொண்டாள்.

 

“உட்காரு ம்மா! எங்க உன் அத்தை?” என கேட்க,

 

“சாப்பாடு ரெடி பண்ணினாங்க. பின்னாடி வாழை இலை அறுத்துட்டு வர்றேன்னு போனாங்க!” என்றாள்.

 

“நல்லா பசி அண்ணி. காலைலயே சாப்பிடல. நீங்க சாப்பிட்டீங்களா?” நிரஞ்சன் கேட்க,

 

“காலைல சாப்பிட்டேன் நிரஞ்சா! உக்காருங்க மாமா. நான் எடுத்து வைக்குறேன்!” என்று சமையலறை தேவதர்ஷினி செல்ல, மேலே மகன் அறையை பார்த்த பரமேஸ்வரன் பெருமூச்சுடன் அமர்ந்தார்.

 

“வந்துட்டீங்களா?” என்று சொல்லி இலையை கொண்டு வந்து இருவருக்கும் வைக்க, தேவதர்ஷினி சாதத்துடன் வந்தாள்.

 

“நான் தான் வர்றேன்ல? தள்ளு! நீ போய் அவங்க கூட உக்காரு!” என்று சொல்லி கண்ணகி தானே அனைத்தையும் எடுத்து வர,

 

“கார்த்தியை கூப்பிடு!” என்றார் பரமேஸ்வரன்.

 

அவனை அழைக்கவே மனதுக்குள் என்னவோ செய்தது கண்ணகிக்கு. இத்தனை நேரமும் மற்றவர்களை அடக்கி அத்தனை வாய் பேசி வந்தவர்களை ஒரு கை பார்த்து அனுப்பி விட்டவர் மகனை சாப்பிட அழைக்க அத்தனை தயங்கினார்.

 

“என்ன நிக்குற?” பரமேஸ்வரன் கேட்க,

 

“அம்மா படியேறி போகும் முன்ன விடிஞ்சிடும். இருங்க நான் கூப்பிடுறேன்!” என்ற நிரஞ்சன் தன் அலைபேசியில் இருந்து அவனுக்கு அழைக்க, இரண்டு முறை அழைத்தும் கார்த்திகைசெல்வன் எடுக்கவே இல்லை.

 

“கார்த்தி!” என கணீர் பரமேஸ்வரன் குரலில் தான் மீண்டவன் எழுந்து வெளியே வந்தான்.

 

வரும் போதே அவனை உன்னிப்பாய் கண்ணகி கவனிக்க, கவலையாய் மகனை கவனித்தார் பரமேஸ்வரன்.

 

“ம்மா! பார்த்துட்டே நிக்கிறீங்களே! எடுத்து வைங்க!” என நிரஞ்சன் தான் அழைத்தான்.

 

“நீ கார்த்தி பக்கத்துல உக்காரு தேவா!” என கண்ணகி அப்போதும் தேவதர்ஷினியை அவனுக்கு உணர்த்த மறக்கவில்லை.

 

அவனும் கண்டு கொள்ளாதவனாய் அவர்கள் அருகில் அமர்ந்திருக்க, தன்முன் இருந்த உணவை வெறித்த பார்வை பார்த்த மகனை,

 

“சாப்பிடுப்பா!” என தோள் தட்டிக் கூறினார் பரமேஸ்வரன்.

 

கார்த்திகைசெல்வன் மட்டும் இன்றி இப்பொழுது தேவதர்ஷினிக்குமே சுத்தமாய் உணவு உள்ளிறங்கவில்லை.

 

‘தெரியும்ன்றதுகாக கல்யாணம் பண்ணிக்கனுமா?’ என்ற குரல் உள்ளுக்குள் சத்தமாய் ஒலிக்க, இத்தனை நடந்தும் பதறிடாத நெஞ்சம் கொஞ்சம் அசைந்து தன் பயத்தை உருவி எடுத்துக் கொண்டிருந்தது தேவதர்ஷினியுள்.

 

“ப்ளீஸ் த்தான்! எனக்காக வாங்களேன்! கல்யாண வீடுன்னா எவ்வளவு ஜாலியா இருக்கும். உங்களை பாக்கணும். எவ்ளோ நாளாச்சு நான் உங்களை பார்த்து!” என கெஞ்சி அழைத்தவள் முகம் கண்ணில் தோன்றி இம்சிக்க, தொண்டைக்குள் என்னவோ சிக்கிக் கொண்ட உணர்வில் அமர்ந்திருந்தான் கார்த்திகைசெல்வன்.

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
20
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்