Loading

அத்தியாயம் 19

 

லீலாவும் பசுபதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, கணவனை முறைத்தபடி அன்னை வீட்டில் அமர்ந்திருந்தாள் தேவதர்ஷினி.

 

இன்னும் இரண்டு நாட்களில் பெங்களூர் அழைத்து செல்ல என விடுமுறை எடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பே வந்துவிட்டான்.

 

அப்படி வந்ததே அதிசயம் என வீட்டினர் நினைத்திருக்க, வந்தவன் ஒரு நாள் கழித்து தேவதர்ஷினியை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு வந்தவன் அவளிடமும் கூறாமல் நேராய் அவள் தாய் தந்தையிடம் பேச, பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது என்று தான் தெரியவில்லை.

 

“பஸ் போட்டுக்கலாம் அத்தை! நீங்க, மாமா, கணேசன் மாமா, சுந்தரி அத்தை, கயல், அஷ்வினி எல்லாருமே போகலாம்!” என கார்த்திகைசெல்வன் சொல்லவும் லீலாவும் பசுபதியும் பதில் கூறாமல் விழித்தனர்.

 

அவனே தான் வர வேண்டாம் என்று கூறி இருக்க, இன்று அவனே வந்து அழைக்க, பதில் சொல்ல முடியவில்லை.

 

அதுவும் இரண்டு நாட்களுக்குள் கிளம்புவது என்றால் எப்படி என தான் விழித்தனர். முன்பே சொல்லி இருந்தால் பரவாயில்லையோ என்றும் தோன்றாமல் இல்லை.

 

‘நீயாவது சொல்லி இருக்கலாமே!” என மகளை அவர்கள் பார்க்க, அவளுக்குமே தெரியாதே அவன் இப்படி அழைப்பான் என்று.

 

“நீங்க வந்தா தேவாக்கும் சந்தோசமா இருக்குமே! வாங்க த்தை!” என மீண்டும் கூற,

 

“வேலையை அப்படி அப்படி போட்டுட்டு வரணுமே மாப்பிள்ள! அதான் யோசிக்குறேன்! வேற ஒண்ணுமில்ல!” என்றார் பசுபதியும்.

 

‘கூப்பிடு!’ என்பதாய் மனைவியிடமும் அவன் கண்ணசைக்க,

 

“வாங்களேன் ப்பா!” என்றாள் புரிந்து.

 

சில நிமிடங்கள் யோசனைக்கு பின், “சரி பேசிக்குவோம் மாப்பிள்ள! நான் அண்ணேங்கிட்ட பேசிட்டு என்னனு சொல்றேன்!” என பசுபதி சொல்லியும்,

 

“அதெல்லாமில்ல மாமா. நீங்க எல்லாருமே கண்டிப்பா வர்ரீங்க. நான் கணேசன் மாமாவையும் நேர்ல பார்த்து சொல்லிட்டு போலாம்னு தான் வந்தேன்!” என்றவன் சொல்லியது போலவே அங்கேயும் சென்று கூற,

 

“இருக்கட்டும் ப்பா! உடனே கிளம்பிட முடியாதே! இன்னொரு நாள் பார்த்துக்குவோம்!” என்றார் கணேசன்.

 

இரு மகள்களும் கல்லூரிக்கு சென்றிருக்க, இப்பொழுது விடுமுறை எடுக்க முடியுமோ என்னவோ என்பதோடு போட்டதை போட்டபடி போட்டு செல்லவா என தயங்கினார்.

 

“இல்ல மாமா! கண்டிப்பா நீங்க வரணும். அத்தை சொல்லுங்க. அப்புறமும் வரலாம். ஆனா முதல் முறையா தேவா என் கூட வர்ற நேரம். நீங்களும் வந்தா நல்லாருக்கும்னு அவளுக்கு தோணும் தானே?“ என அத்தனை நயமாய் கார்த்திகைசெல்வன் பேச, தேவதர்ஷினிக்கு ஒன்றும் புரியவில்லை.

 

‘இதை அன்றே செய்திருக்கலாம். இப்பொழுது மட்டும் ஏன்?’ என கொஞ்சம் கோபமும் மிச்சமிருந்தது அவளிடம்.

 

“அன்னைக்கு நான் சொன்னதை மனசுல வச்சுக்காதீங்க மாமா. அப்ப அப்படி தோணுச்சு. இப்ப தான் புரியுது எல்லாரும் வந்தா தான் நல்லாருக்கும்னு!” என இன்னுமே அவன் வற்புறுத்த,

 

“என்ன கார்த்தி நீ! அப்படி எல்லாம் எதுவும் நினைக்கல நாங்க” என்ற கணேசன் மனைவியைப் பார்க்க,

 

“லீலா என்ன சொல்றா தேவா?“ என்றார் சுந்தரி.

 

“அவங்க கண்டிப்பா வர்றாங்க. நீங்களும் தான்!” என கார்த்திகைசெல்வனே மீண்டும் கூற,

 

“என்ன டா நீ!” என்று சிரித்துவிட்ட சுந்தரி, “சரி போய் தான் பார்த்துட்டு வந்துடுவோமே!” என்றுவிட்டார் கார்த்திகைசெல்வன் பேச்சில்.

 

“அப்போ பொருள் எல்லாம்?” பசுபதி கேட்க,

 

“நீங்க வர்றதா இருந்தா அங்கேயே போய் வாங்குறது தான் சரியா இருக்கும். இங்க லீலா சின்ன சின்ன பொருள் வாங்கி வச்சிருக்கா இல்ல. அதை மட்டும் எடுத்துட்டு போவோம்!” என சுந்தரி சொல்ல,

 

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பொருள் எல்லாம் என்ன விலை விக்குது. அதுவும் அந்த ஊருல எல்லாம் ஜாஸ்தி தான். இங்க இருந்தே வாங்கி கொண்டு போயிருவோம். எதாவது விட்டு போச்சுன்னா வேனா அங்க வாங்கிக்கலாம். பஸ்ல தானே போறோம். பார்த்துக்கலாம்!” என்றார் கணேசன்.

 

இப்படி அவர்களுக்குள் பேச்சு வார்த்தைகள் அடுத்த கட்டம் நகரவும் அவர்களிடம் சம்மதம் வாங்கி வீட்டிற்கு வந்ததும் தேவதர்ஷினி தன் அத்தையிடம் கணவனை குறையாய் மூச்சு வாங்க கூற, கேட்டுக் கொண்டே அன்னை அருகில் நின்றான் கணவனானவன்.

 

“ஏன் தான் இப்படி நினைச்சு நினைச்சு பேசுறாங்களோ! அன்னைக்கு இவங்க தான் வேண்டாம்னு சொன்னாங்க. இப்ப வந்தே ஆகணும்னு கட்டாயப்படுத்துறாங்க த்தை” என கோபமான கோபமாய் மூச்சு வாங்க அவள் சொல்ல, கார்த்திகைசெல்வன் கண்கள் முழுதும் மனைவியிடம் தான்.

 

“என்ன டா கூட்டிட்டு போய் என்ன பண்ணின? இவ்ளோ கோபம் வருது தேவாக்கு?” என கண்ணகி மகனிடம் கேட்கவும் அவன் சிரித்துவிட,

 

“அத்தை!” என சிணுங்கினாள் அவர் கிண்டலில் தேவதர்ஷினி.

 

“நீயும் ஏன் டா இப்படி பண்ற? நீ சொன்னதால தானே நானும் யாரையும் கூப்பிடல. இப்ப அவங்க என்னை என்னனு நினைப்பாங்க?” என விளையாட்டை விட்டு கண்ணகியும் மகனிடம் கேட்க,

 

“நீங்க தானே தேவா சொல்றதை கேளு கேளுன்னு அப்பப்ப போன் பண்ணி டார்ச்சர் பண்ணீங்க? இப்ப இப்படி சொல்றிங்க? அவளுக்கு அவ அம்மா அப்பா வரனும்னு ஆசை. அதனால நான் கேட்டேன்!” என்றான் நல்லவனாய்.

 

“சரியா தானே சொல்றான்” என்ற கண்ணகி,

 

“அவன் என்னவோ கொஞ்ச நாளா மாத்தி மாத்தி தான் பேசிட்டும் பண்ணிட்டும் திரியுறான் தேவா. என்ன பண்றதுன்னு எனக்கும் புரியல. நீயாவது மந்திரிச்சு விடுன்னு கட்டி வச்சா நீ என்கிட்டயே கூட்டிட்டு வர்றியே!” என சொல்ல, ஆயாசமா மை உணர்ந்தவள் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

 

“ரொம்ப தான் அவளை பண்ற டா நீ!” என அவள் சென்றதும் மகனிடம்bl சொல்லிய கண்ணகி,

 

“என்னவோ இப்ப தான் உருப்படியா ஒரு நல்லது பண்ணிருக்கியேன்னு தான் விடுறேன். போய் அவளை பாரு!” என்று சொல்லி செல்ல, புன்னகையுடன் மனைவியை தேடி வந்தான் கார்த்திகைசெல்வன்.

 

“என்னை எப்பவும் இப்படி குழப்பதுலயே வச்சிருந்தா நான் என்னனு இருக்க? இவங்களை எப்ப தான் நான் புரிஞ்சிக்க?” என புலம்பியபடி தலையில் கைவைத்து அமர்ந்திருந்தாள் தேவதர்ஷினி தங்கள் அறையில்.

 

“என்ன தேவா?” என சாதாரணமாய் கேட்டு கார்த்தி உள்ளே நுழைய,

 

“பேசாதீங்க த்தான்!” என்றாள் அவன் முகம் பாராமலே!.

 

“பேசாம?“ என அவளை உரசிக் கொண்டு வந்து அமர, 

 

“த்தான்! என்னை பைத்தியமாக்குறீங்க நீங்க. ஏன் ஒரு முடிவா இருக்க மாட்டேன்றீங்க” என தாளாமல் அவன் முகம் பார்த்தே கேட்டுவிட,

 

“இனிமே எல்லாமே ஒரு முடிவு தான் தேவா. எடுக்குற எல்லா முடிவும் தெளிவா சரியா இருக்கணுமே! அப்ப எடுத்த முடிவு தப்புன்னு தோணுச்சு. சரி பண்ணிடலாமேன்னு பண்ணிட்டேன்!” என்றான்.

 

“என்கிட்ட சொல்லிருக்கலாமே த்தான்!” 

 

“ஆமால்ல! ஆனா தோணலையே! சரி இனி எதுனாலும் உன்கிட்ட கேட்டு நாம பேசிட்டே முடிவு பண்ணிட்டே நெக்ஸ்ட் மூவ் பண்ணலாம் ஓகே!” என அதற்க்கும் சம்மதித்தான்.

 

“இப்ப உனக்கு சந்தோஷம் தானே? அத்தை மாமா வர்ராங்க. உனக்கு தேவையானதை அவங்களே வாங்கி தரட்டும். வேற எதாவது?” எனவும் கேட்க,

 

“இப்பவும் சொல்றேன் உங்களை என்னனு புரிஞ்சிக்க போறேனோ! அம்மா வர்றது எனக்கு சந்தோஷம் தான். ஆனா இப்படி எல்லாமே சடனா அவங்க செஞ்சி தான் ஆகணும்ன்ற மாதிரியும் இனி நாம சொல்ல வேண்டாம்!” என தேவா கேட்டுக் கொள்ள,

 

“கண்டிப்பா!” என்றான் அவள் கன்னம் தட்டி.

 

அடுத்த இரண்டாம் நாள் ஆளுக்கு ஒரு வேலையாக முடித்துக் கொண்டு மீதியை வந்து பார்த்துக் கொள்ளும் முடிவோடு கிளம்பி இருந்தனர் தன் பிள்ளைகளின் வாழ்க்கைக்காக.

 

அஷ்வினி கயல்விழிக்கு தேவதர்ஷினி போனில் அழைத்து பேசி வர சொல்ல, இருவருமே வந்துவிட்டனர்.

 

நிரஞ்சனும் கயல்விழியும் பேருந்தில் நடனம், பாட்டு, பேச்சு, கேலி என செய்த சேட்டைகள் எல்லாம் ஏராளம். 

 

பெங்களூர் சென்று சேரும் வரை அத்தனை சுருசுருப்பாய் இருந்தது இளைஞர்கள் பட்டாளம்.

 

“இன்னும் ஒன் இயர்ல கார் வாங்கிடணும் தேவா!” என கார்த்தி அவளிடம் சொல்ல, புன்னகைத்தாள் அவள்.

 

இத்தனை நாட்கள் புரியாதது எல்லாம் இப்பொழுது புரிந்து அதற்கேற்ப செயல்பட துவங்கி இருந்தான் கார்த்திகைசெல்வன்.

 

இப்பொழுதும் ஊருக்கு வந்திருந்த நாளில் இரண்டு இரவுகளும் மனைவியின் அருகாமையில் அதிகத்திற்கும் மாற்றம் அவனிடம்.

 

சுத்தமாய் உறக்கம் வரவில்லை. நெருங்கியும் நெருங்காத நிலை தான் இருவருக்கும்.

 

தேவதர்ஷினியும் அவன் நெருக்கத்தை தவிர்க்கவும் இல்லை. விலகவும் இல்லை என்ற நிலை தான்.

 

இருவருக்குமே இன்னும் கொஞ்சம் புரிதல் வேண்டுமாய் ஒரு எண்ணம் இருந்தும் அதையும் விட இந்த பிரிவும் இனி வேண்டாம் என்ற நிலை தான்.

 

அருகாமையில் இருக்கும் நெருக்கமும் புரிதலும் தானே வாழ்வியலை உணர்த்தும் என நம்பி இருந்தனர்.

 

இதை எல்லாம் விட கார்த்திகைசெல்வனுக்கு பெரும் காரணம் ஒன்று அவளை நெருங்கிட யோசிப்பது என்றால் அது அஷ்வினி தான்.

 

இப்பொழுது அஷ்வினியைப் பற்றிய எண்ணங்கள் எல்லாம் துளியும் இல்லை. இருவருமே நேருக்கு நேர் பார்த்து புன்னகைத்திருந்தனர் பேருந்தில் ஏறும் சமயம்.

 

ஆனாலும் நிச்சயம் மனைவியிடம் எதையும் மறைத்து தன் வாழ்க்கையை ஆரம்பிக்கும் எண்ணமும் இல்லவே இல்லை அவனிடம். அவள் புரிந்து கொள்வாள். புரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுதலும் கூட.

 

கூறி இருந்த இடத்தின் முன் வந்து பேருந்து நிற்க, தேவதர்ஷினியுடன் கார்த்திகைசெல்வன் இறங்கும் நேரம் நந்தன் தன் அன்னையுடன் அங்கே நின்றிருந்தான் இவர்களுக்காக காத்திருந்து.

 

“வாழ்த்துக்கள் சிஸ்டர்! வெல்கம்!” என நந்தன் தேவாவை வரவேற்று மற்றவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்ள, மனைவியுடன் முதல் அடியை வீட்டிற்குள் எடுத்து வைத்தான் கார்த்தி.

 

“பரவால்லையே! நல்லா தான் பார்திருக்கான் வீடு. நானும் ரெண்டு பேருக்கு தானேனு சிம்பிளா இருக்குமோ நினைச்சேன்.” என்ற கண்ணகிக்கு அவ்வளவு திருப்தி வீட்டைப் பார்த்ததும்.

 

அனைவரும் அதையே கூற, “குளிச்சிட்டு பிரெஷ் ஆகிக்கோங்க ம்மா. டிபன் தயாரா இருக்கு!” என்றான் நந்தன்.

 

அவனே அனைத்தும் ஏற்பாடு செய்து வைத்திருக்க, “தேங்க்ஸ் மச்சி!” என தோளோடு அனைத்த கார்த்தியை அவன் வயிற்றில் குத்தி “போ டா!” என்று நந்தன் சிரிக்க, தேவாவும் இவர்களை கவனித்திருந்தாள்.

 

அடுத்த மூன்று நாட்களுக்கு அனைவரையும் வெளியில் அழைத்து சென்று இடங்களை காட்டி உறவுகளை எல்லாம் சேர்த்து அத்தனை நிறைந்து இருந்தது வீடு.

 

நான்காம் நாள் காலை முதல் அனைவரும் அன்று மாலை கிளம்ப வேண்டும் என்று ஒவ்வொன்றும் தேவதர்ஷினிக்கு தனியே இருக்கும் முறைகளை சொல்லிக் கொடுக்க, அன்று விடிந்தது முதலே அவ்வளவு அழுகை அவளிடம்.

 

“எனக்கு இங்கேயே இருந்திட்டா என்னனு தோணுது. பெங்களூர் எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு!” என கயல்விழி சொல்ல,

 

“அப்போ உனக்கும் பெங்களூர் மாப்பிள்ளையா பார்த்திட வேண்டியது தான்!” என நிரஞ்சன் சொல்ல,

 

“அதெல்லாம் வேண்டாம்! தேவாக்கா மாதிரி பேசாம அமைதியா இருந்து உள்ளுக்குள்ள அழ எல்லாம் எனக்கு தெரியாது. அதுக்கு நான் சரிபட்டு வரமாட்டேன். கோழி பிடிக்குறவனா இருந்தாலும் நம்மூர் காரனே போதும்!” என்ற கயல்விழி தலையில் நங்கென கொட்டினார் சுந்தரி.

 

“அப்படி போடு! வாயைப் பாரு!” என கண்ணகியும் அவர்களுடன் பேசி சிரித்தார்.

 

“பழகிடும் தேவா! அதான் கார்த்தி ரெண்டு மாசத்துக்கு ஒருக்கா வீட்டுக்கு வர்றோம்னு சொன்னானே! அழாத. இனி நீ தான் எல்லாம் பார்த்துக்கணும்!” என லீலா இன்னும் இன்னும் மகளுக்கு அறிவுரை கூற,

 

“நீ சொல்ல சொல்ல தான் அவ அழுவுறா! என் பொண்ணு தங்கப் பொண்ணு. நீ சும்மா இரு!” என கண்ணகி கூற, அதற்கும் ஒரு அழுகை தேவாவிடம்.

 

இப்படி அனைவரும் சொல்லிக் கொண்டு கிளம்ப, அன்று நடுஇரவில் மொத்தமும் சேர்ந்து சோர்ந்து காய்ச்சலில் தள்ளிவிட்டது தேவதர்ஷினியை.

 

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
15
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்