அத்தியாயம் 14
அஷ்வினி சென்றதின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடிந்தது. அவள் இங்கில்லை என்பதாலேயே அவனாலும் கொஞ்சம் இலகுவாய் இருக்கவும் முடிந்தது.
ஆனாலும் எத்தனை நாட்களுக்கு? இதையும் கடந்து மறந்து தான் செல்ல வேண்டுமா? என்ற எண்ணத்தோடு இப்பொழுது புதிதாய் தேவதர்ஷினியிடம் இதைப் பற்றி பேச வேண்டுமா எனும் எண்ணமும் சேர்ந்திருந்தது கார்த்திகைசெல்வனுக்கு.
இவ்வளவுக்கு எல்லாம் அவன் யோசித்ததில்லை இப்பொழுது யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
தன் வாழ்க்கையின் மீதியாய் இனி முழுதும் தன் உடன் பயணிக்க இருக்கும் பெண் எனில் தன்னில் பாதியாய் வர இருப்பவளிடம் உண்மையாய் இருப்பது தானே சரி? அது தானே முறையும் கூட?
சரி தான் என்றாலும் அதை சொல்லுவது என்ன அவ்வளவு எளிதா? சொல்லி அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதோடு எப்படி சொல்லிவிட முடியும்? என ஒரு மனம் அத்தனைக்கு தவித்தது.
“த்தான்!” என கயல்விழி வந்து அழைத்ததில் சிந்தனை கலைந்து அவளைக் கண்டான் கார்த்திகைசெல்வன்.
“சாப்பிட பணியாரம் குடுத்தாங்க சித்தி!” என அவள் கொடுக்கவும் வாங்கிக் கொண்டவன்,
“தேவா எங்கே கயல்?” என்றான்.
“வந்துட்டேன் த்தான்!” என்றவள் கையை இன்னும் உதறியபடி வந்தாள்.
“வலிக்குதுன்னா இங்க அத்தைகிட்ட வேற மருந்து இருக்குதான்னு கேளு தேவா!” என்றான்.
“அதெல்லாம் இப்ப வலி இல்லை த்தான். பணியாரத்தை சூடா கையில எடுத்துட்டேன்!” என்றவளைப் பார்த்து அவன் சிரிக்க, கயல் உள்ளே சென்றாள்.
“உங்களுக்கு ஸ்வீட் பிடிக்குமா காரம் பிடிக்குமா?” தேவதர்ஷினி கேட்க,
“ரெண்டுமே சாப்பிடுவேன்!” என்றவன் கையில் இருந்ததை எடுத்துக் கொள்ள,
“சாப்பாடு ரெடியாக அரைமணி நேரம் ஆகும் த்தான்!” என்றவளும் அவன் பார்க்க கீழே அமர்ந்தாள்.
வாட்சப்பில் செய்தி வந்த ஒலி கேட்டு அதை எடுத்துப் பார்த்த கார்த்திகைசெல்வன்,
“இதை பாரு!” என அவளிடம் காட்டவும்,
“வீடு பார்த்தாச்சா த்தான்?” என அவள் கேட்க,
“இது பிரண்ட் வீடு பக்கத்து வீடாம். கோவில்ல இருக்கும் போது கால் பண்ணி சொன்னான். இப்ப போட்டோ அனுப்பிருக்கான். போய் அதையும் பார்க்கணும்!” என்றான்.
சாப்பிட்டபடி பேசிக் கொண்டிருந்தவர்களுடன் கணேசன், பசுபதி, கயல்விழி என இணைந்து கொள்ள, லீலாவுடன் சுந்தரியும் தேவாவும் இணைந்து கொண்டார்.
சாதாரணமாய் பேசிக் கொண்டிருந்த கார்த்தியின் கண்கள் அவ்வபோது வெளியில் தலை காட்டும் மனைவியிடம் சென்று வந்தது.
இத்தனை வருடங்களில் இல்லாத ஒரு கவனிப்பு அவளிடம் கொண்டு வந்தான்.
தேவதர்ஷினி அதிகம் பேச மாட்டாள். கேட்பவற்றுக்கு மரியாதையுடன் அளவான பதில் இருக்கும். கயல்விழி அஷ்வினிக்கு அப்படியே எதிர் தான் என மட்டும் தெரியும்.
“அம்மா போன் பண்ணினா கார்த்தி. அடுத்த வாரம் ரிசெப்ஷன் வைக்கலாம்னு சொல்லிட்டியாமே!” என சுந்தரி கேட்க,
“நல்லது கார்த்தி. அடுத்த மாசம் தேவாவை கூட்டிட்டு போறதுக்கு முன்னாடி வச்சுட்டா தான் ஊர் வாயில விழ வேண்டாம். கல்யாணத்தை விட கிராண்டா பண்ணனும்” என்றார் கணேசன்.
“பண்ணிடலாம் மாமா! ஆனா நான் அன்னைக்கு காலைல தான் வர முடியும். இங்க அப்பாக்கும் உங்களுக்கும் தான் வேலை இருக்கும் அதிகமா!” என கார்த்திகைசெல்வனும் கூற,
“அடேயப்பா! பெரிய வேலை தான் போ! ஆளாளுக்கு ஒன்னை எடுத்து செஞ்சா முடிஞ்சிட போகுது. நம்ம பிள்ளைங்களுக்கு செய்யுறதுல என்ன? நீ பொறுமையா வா. நீ வரும் போது பொண்ணுல இருந்து எல்லாமே தயாரா இருக்கும்!” என சுந்தரி சொல்ல, கார்த்திகைசெல்வன் தேவதர்ஷினியைக் காண, அவளும் அவனை தான் பார்த்திருந்தாள்.
“அப்புறம்! பெங்களூருக்கு எப்படி போறது வசதி? எல்லாரும்னு அக்கா சொன்னா. பேசாம இங்க ஒரு பஸ் சொல்லிடுவோமா?“ என கணேசன் கார்த்தியிடம் கேட்க,
“பின்ன! கண்டிப்பா பஸ் சொல்லணும் ண்ணே. நாமெல்லாம் குடும்பமா வெளில போய் நாலு வருஷம் இருக்காது?” பசுபதி உடனே மகிழ்ச்சியாகிவிட்டார் இந்த பேச்சில். மகள் வீட்டிற்கு அனைவருமாய் செல்வதில் அத்தனை சந்தோஷம்.
“டேய்! உடனே முடிவு பண்ணாத. பஸ் பிடிச்சு போனா செலவு எவ்வளவுன்னு யோசிக்க வேண்டாமா? இதுவே ஒரு தனியார் பஸ்ல டிக்கெட்னா மொத்தம் பத்து பேருக்கு பத்தாயிரம்ல இருந்து பதினைஞ்சுகுள்ள வரும். திரும்பி வர்றதுக்கு ஒரு ரேட் வரும். எல்லாத்தையும் பேசி தெரிஞ்சிகிட்டு முடிவு பண்ணுவோம்” என கணேசன் சொல்ல, விழித்தான் கார்த்திகைசெல்வன்.
அன்னை பேசும் போதே சொல்லி இருக்க வேண்டுமோ என பயமாகிவிட்டது இப்பொழுது.
“என்ன கார்த்தி நீ ஒன்னும் சொல்லல. என்ன நினைக்குற. எதுவா இருந்தாலும் சொல்லு” என்றார் சுந்தரி.
“இல்ல த்தை. இப்ப பார்க்க போறது வாடகை வீடு தான். அதுவும் வீடும் வீடு இருக்குற ஏரியா, அதோட ஓனர்னு பேசணும். இப்ப தான் பார்க்கவே போறோம். அதான் எல்லாரும் உடனே போகவானு யோசிக்குறேன்!” என்றவனை தேவதர்ஷினியில் இருந்து அனைவரும் பார்க்க,
“அதுவும் சரி தானே! என்ன ஏதுன்னு தெரியாம எப்படி கூட்டம் சேர்த்து போக? பேசாம நீங்க போய் அங்க ஆளும் பேரும் தெரிஞ்சு ஒரு ஒரு மாசத்துக்கு அப்புறமா இங்க எல்லாரையும் கூட்டிட்டு போக ஏற்பாடு பண்ணேன்!” என சுந்தரி சொல்ல, தான் பேசியதை எவ்வாறு புரிந்து கொண்டார்களோ எனும் அவஸ்தையில் இருந்தான் கார்த்திகைசெல்வன்.
ஆனால் நிச்சயம் இப்பொழுதே அனைவரையும் கூட்டி செல்ல அவன் தயாராய் இல்லை.
இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலேயே இன்னும் நிறைய புரிதல்கள் வேண்டி இருக்க, அங்கே தங்களுக்கான நேரமும் வேண்டும் என நினைத்தான். கூடவே அனைவரும் என்றால் அதில் அஷ்வினியும் சேர்த்தி தானே!
என்னவோ எதில் ஆரம்பித்தாலும் அஷ்வினியிடம் எண்ணம் சென்றால் மனம் சிறு வருத்தமான சலனத்தை கூட்டுவதை தடுக்க முடியவில்லை.
இப்படி சில எண்ணங்களுக்கு பின் தான் அனைவரையும் கூட்டி செல்ல வேண்டாம் எனும் திட்டத்திற்கு வந்திருந்தான். அதை அன்னையிடமே முதலில் சொல்லி இருக்க வேண்டுமோ என இப்பொழுது காலம் கடந்த கவலை ஆனது.
“இல்ல மாமா! தப்பா எதுவும் நினைச்சுக்காதீங்க. எனக்கும் அங்க எல்லாம் புதுசா இருக்கும். அதான்!” என அவ்வளவு தயக்கமாய் அவன் சொல்ல,
“அட என்ன மாப்பிள்ள நீ! இதுக்கு ஏன் இவ்வளவு மென்னு முழுங்கணும்! சரி தான். முதல்ல பொண்ணை கூட்டிட்டு போனா போதாதா எங்களுக்கு?” என்று பசுபதி சிரித்தபின் தான் அவனுக்கும் நிம்மதியே. லீலாவும் சமாதானமாய் புன்னகைக்க,
“உன் விருப்பம் போல பண்ணு டா. நாங்க எதுவும் நினைக்கல!” என்றுவிட்டார் கணேசனும்.
“அப்போ நான் இப்ப பெங்களூரை பார்க்க முடியாதா?” என கயல்விழி பாவமாய் கேட்க,
“பார்க்கலாம் கயல். ஒரு ரெண்டு மாசம் மட்டும் வெயிட் பண்ணு. உன் காலேஜ் லீவ் வரும்ல அந்த டைம் கண்டிப்பா சொல்றேன்!” என்றான் புன்னகையுடனே கார்த்தி.
அதன்பின் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டு பேசி சிரித்து என நேரம் சென்றதும் மாலை மூன்று மணிக்கு கார்த்திகைசெல்வன் மனைவியுடன் கிளம்பி இருக்க, நான்கு மணிக்கு மேல் தான் வீடு திரும்பி இருந்தாள் அஷ்வினி.
வீட்டிற்கு வந்ததும் தேவதர்ஷினி தன் அத்தையிடம் கணவன் சொல்லியதாய் அங்கே பேசியதை சொல்ல,
“ஏன் டா இப்படி தான் விருந்துக்கு போன இடத்துல பேசி வச்சுட்டு வருவியா நீ? ஏன் என்கிட்ட சொன்னா நான் மெதுவா சொல்லி இருக்க மாட்டேனா? ஏன் தான் இப்படி பண்ற நீ?” என ஆரம்பித்துவிட்டார் கண்ணகி.
“வந்ததும் மாட்டிவிட்டியா நீ? “ என மனைவியை கார்த்தி முறைக்க,
“அய்யோ இல்ல த்தை. நான் அப்படி சொல்லல” என பதறி கண்ணகியிடம் வந்தாள் தேவா.
“இவனுக்கு பயந்துட்டு இருக்கியா நீ? ம்ம்ஹும்! இப்படி இருந்தா அவன் இன்னும் தலைக்கு தான் ஏறுவான்!” என கண்ணகி மருமகளுக்கு சொல்லி கொடுக்க, ஒரு தலையசைப்புடன் அறைக்கு சென்றுவிட்டான் கார்த்திகைசெல்வன்.
அன்று இரவும் அறைக்கு வந்த தேவதர்ஷினி சோஃபாவிற்கு செல்ல, அதை அவளிடம் பேசவும் சொல்லவுமே அவனுக்கு அவ்வளவு தயக்கம்.
“தேவா!” என ஆயாசமாய் அவன் அழைக்கவும் என்னவென்று பார்த்தாள் தேவதர்ஷினி.
“என்ன பண்ற நீ? போன நாள் எல்லாம் போனதாவே இருக்கட்டும். இங்க வந்து தூங்கு!” என வேகமாய் அவன் சொல்லிவிட,
“இல்ல த்தான் இருக்கட்டும்!” என்றாள் புன்னகையோடே!.
“என்ன இருக்கட்டும்? சொல்றேன்ல?” என அதட்டலாய் அவன் கேட்க,
“வேணாம் த்தான். எல்லாம் சரியாகட்டும். “ என்றாள் அப்போதும் பொறுமையாகவே.
“என்ன சரியாகணும்? இப்படி இருந்தா எப்படி சரியாகும்?” அவன் கேட்க,
“நிஜமா ஒண்ணுமில்லையா த்தான். நான் அங்க வந்தா எல்லாம் சரியாகிடுமா?” என ஆழ்ந்த பார்வையோடு அவள் கேட்க, அந்த பார்வையில் நிஜமாய் சில நொடிகள் தடுமாறி நின்றுவிட்டான் அவன்.
“நீங்க மாறி இருக்கீங்க. அது புரியுது தான். ஆனா இந்த கல்யாணம் உங்களுக்கு விருப்பம் இல்லாம நடந்தது நடந்தது தானே? ஒரு மாசத்துல எல்லாம் மாறிடாதுன்னு எனக்கும் தெரியும் த்தான். இப்ப நீங்க நீங்களா என்னை ஏத்துகிட்ட மாதிரி எல்லாமே தானா நடக்கணும் த்தான். நடக்கட்டும்!” என கூறியவளை அவன் பார்த்து நிற்க,
“தப்பா எதுவும் நான் பேசல த்தான். நமக்குள்ள நிறைய புரிஞ்சிக்க வேண்டியது இருக்கு. மெதுவா தெரிஞ்சிப்போம் த்தான்” என்றவள் படுத்து கண்களை மூடிக் கொள்ள, அவளின் இந்த வகையான பேச்சில் ஒருவித மலைப்பு தான் வந்தது கார்த்திகைசெல்வனுக்கு.
பல விதத்தில் அவள் கூறுவதும் சரி தான். அவனுக்குமே அவளிடம் கூற வேண்டிய விஷயங்கள் ஏராளம் தான். ஆனாலும் அதற்காக இப்படி தன் அறைக்கு வந்தும் தன் அருகில் வர இவ்வளவு யோசிக்க வேண்டுமா என அவன் நினைக்கும் போதே,
‘நீ மட்டும் என்ன அவளை உன்னோடு இணைத்துக் கொள்ளவா இடம் கேட்கிறாய்? படுக்கையில் மட்டும் இடம் கொடுக்க தானே நீயும் தயாராய் இருக்கிறாய்? அந்த இடம் உன் மனதோடும் கிடைக்க தான் அவள் நேரம் கேட்கிறாள் என அவனின் மனம் எடுத்து சொல்ல, ஒரு பெருமூச்சு அவனிடம்.
“சீக்கிரம் எல்லாம் சரியாகும் தேவா!” வாய்விட்டே சொல்லிக் கொண்டான்.
அடுத்த நாளே மாலை அனைவரிடமும் சொல்லிக் கொண்டு பெங்களூர் கிளம்பி சென்றவன் மூன்று நான்கு வீடுகள் பார்த்துவிட்டு பின் அடுத்த இரண்டு நாட்களில் எல்லாம் தன் நண்பன் நந்தன் வீட்டருகே இருக்கும் வீட்டையே பேசி முடித்துவிட்டான்.
தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
19
+1
1
+1
3