Loading

கோபிசெட்டிபாளையம், ஈரோட்டில் இருந்து முப்பத்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரம்மியமான நகரம்.  சின்ன கோடம்பாக்கம், மினி கோலிவுட் என்ற அடைமொழிக்கு சொந்தமான ஊர். 

 

மார்கழி மாதம் அதிகாலை வேளையில் அந்த தெருவில் வசிக்கும் இல்லத்தரசிகள் தன் வீட்டுக்கு முன் தங்களால் முடிந்தவரை பெரிய கோலத்தை போட்டுக்கொண்டு கதையளந்து கொண்டு இருக்க, 

 

அனைத்து வீட்டிலும் பெண்கள் மட்டுமே இருக்க, ஒரு வீட்டின் முன்பு மட்டும் தன் ஆசை மனைவிக்கு துணையாக தூக்கத்தை தியாகம் செய்து விட்டு மனைவி கோலம் போடும் ஆழகை ரசித்து கொண்டு இருந்தார்,  அவர் தான் அருள்மொழி. 

 

“என்ன கொழுந்தனாரே…. நாங்க தான் வாசல் தெளிச்சு கோலம் போட இவ்வளவு சீக்கிரம் எழுந்து இருக்கோம், நீங்க எதுக்கு குளிரில் வெள்ளத்தை வர வைச்சிட்டு இருக்கீங்க விட்டா நீங்களே கோலம் போடுவீங்க போல” என்று எதிர் வீட்டில் இருக்கும் அருளின் அண்ணன் மனைவி ஜோதி கேலி செய்ய, 

 

“கோலம் போட நான் ரெடியா தான் இருக்கிறேன் அண்ணியாரே!!  என் பொண்டாட்டி ஓகே சொன்ன போதும் என் கை வண்ணத்தை காட்டிடுவேன்” என்ற கணவனை முறைத்த சித்ரா, 

 

“உள்ள போங்க முதலில், அக்கா கேலி பண்றாங்க உங்களுக்கு என்ன சின்ன பையன்னு நினைப்பா..  இப்ப நீங்க உள்ள போகல இரண்டு வாரம் உங்க கிட்ட பேச மாட்டேன்” என்றதும் உடனே உள்ளே சென்றுவிட்டார் மனிதர். 

 

இதை பார்த்து சிரிக்கும் ஜோதியை சமாளிக்கும் விதமாக இளித்து வைத்தார் சித்ரா. 

 

ஒரே மாதிரி எதிர் எதிர் இருக்கும் வீட்டுகள்  தான் இந்த தெருவின் அடையாளம்.  பிரகாசம் மற்றும் அருள்மொழி இருவரையும் அறியாதவர்கள் யாரும் அங்கே இருக்க முடியாது. 

 

இருவரின்  இளம்வயதிலேயே தந்தை மறைந்து விட தந்தையின் தொழிலை கவனித்து கொண்டு தன்னை விட ஆறு வயது குறைவான தம்பியை படிக்க வைத்தார் பிரகாசம். 

 

பிரகாசத்துடன் திருமணம் முடிந்து இந்த வீட்டில் அடியடுத்து வைத்தார் ஜோதி.  இவர்களுக்கு மூன்று பெண் செல்வங்கள். பல வருடம் காத்திருப்புக்கு பின் பிறந்தவள் ஹர்ஷிகா, தன் சித்தப்பா பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறாள்.  அடுத்து இரட்டையர்கள் ஜீவிகா, மிஷ்கா.  ஜீவிகா நான்காம்  ஆண்டு மருத்துவ மாணவி.  மிஷ்கா வீட்டில் யாருக்கும் அடங்காத வாலில்லாத குரங்கு. லாயர் தான் ஆக வேண்டும் என்று குறிக்கோளை சிறுவயதில் இருந்தே வளர்த்து கொண்டு இப்பொழுது அதற்கு தான் படித்துக் கொண்டு இருக்கிறாள். ஆனால் அவள் படிப்பதோ டெல்லியில்.

 

அருள்மொழி, நாற்பத்து நான்கு வயதானாலும் மனதளவில் இன்றும் இருபதில் வாழும் இளைஞர். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஊரின் பெண்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி நடத்தி வருகிறார்.  இவரது மனைவி சித்ரா, நாற்பத்து ஒன்று இவரின்  மொத்த உலகம். கல்யாணம் நடக்கும் போது இருவருக்கும் சிறுவயது.  சித்ராவிற்கு பதினாறு இவருக்கோ பத்தொன்பது.  அன்றில் இருந்து இந்த இருபத்து ஐந்து வருடங்களில் அவர்களின்  காதல் பல மடங்கு கூடியதே தவிர துளியும் குறையவில்லை. 

 

இவர்களின் ஒரே புதல்வன் சைதன்யா. சென்னையில் மிக பிரபலமான மென்பொருள் நிறுவனத்தில் சமீபத்தில் தான் பணியமர்த்தப்பட்டான். இருபத்தி மூன்று வயதின் கலகலப்பான குணமும் குடும்பத்தின் மீது பாசத்தை பொழியும் இளம் தலைமுறை. 

 

வெண்மதி அருள்மொழி மற்றும் பிரகாசத்தின் தாய் தனக்கு எங்கே இருக்க தோன்றுகிறதோ அங்கே இருப்பார். முக்கால்வாசி நேரம் பெரிய மகன் வீட்டில் தான்  பகல் நேரத்தை கடத்துவார். அங்கே தானே பேத்திகள் இருப்பார்கள். இரவில் சின்ன மகன் வீட்டுக்கு வந்து விடுவார். 

 

எப்பொழுதும் போல் அன்றும் காலை சமையலை முடித்து விட்டு தன் மக்களுக்கு காத்திருக்க, அதற்குள் பிரகாசம் சாப்பிட வந்துவிட்டார். அவரை கவனிக்க சென்றார் ஜோதி.  அப்படியே ஒவ்வொருவராக தயாராகி வந்தனர்.

 

பிரகாசம்  “ஒரு வரன் வந்திருக்கு புள்ள, பெரியவளுக்கு பொருத்தமா இருக்கும். அடுத்த வாரம் ஒரு நல்ல நாளா பார்த்து வை. நம்ம இரண்டு பேர் மட்டும் முதல போய் பார்த்துட்டு வந்திடலாம். மனசுக்கு ஒப்புச்சுனா மேல பேசலாம்”  என்று அனைவருக்கும் கேட்கும் படி பொதுவாக சொல்லி விட்டு சென்றார்.  

 

ஜோதியும் “சரிங்க”  என்று பள்ளிக்கு கிளம்பும் ஹர்ஷிகாவிற்கு சாப்பாடு எடுத்து வைக்க, கேட்ட செய்தியில் சாப்பாடு இறங்க மறுத்தது ஹர்ஷிக்கு.  வேகமாக இரண்டு இட்லியை வாயில்  அடைத்து வயிற்றை பாதி நிரப்பி விட்டு தன் வண்டியில் கிளம்பி விட்டாள். 

 

வழியில் கொண்டத்துக்காளியம்மன் கோவில் கண்ணில் பட, அங்கே வண்டியை நிறுத்தி விட்டு சென்னையில் இருக்கும் தன் தம்பிக்கு அழைப்பு விடுத்து காத்திருந்தாள். 

 

சென்னையில், அடுக்கு மாடி குடியிருப்பில்  மூன்றாம் தளத்தில் இருக்கும் கடைசி வீட்டில் சமையல் அறையில் குக்கர் விசிலை விட சத்தமாக ஒருவன் புலம்பிக் கொண்டு இருந்தான்.

 

“எங்க வீட்டுல நான் தான் ராஜா கணக்கா எல்லாரையும் வேலை வாங்கிட்டு இருப்பேன். எப்ப சென்னைக்கு வந்து இவன் கூட ப்ரெண்ட் ஆனேனோ அப்ப போச்சு என் நிம்மதி….” என்று குக்கரை இறக்கி வைத்து விட்டு, தோசையை  வார்க்க தவாவை அடுப்பில் வைத்து விட்டு, கையில் பால் கிளாஸ்வுடன் ஒரு அறைக்கு சென்று,  “அடேய் எழுந்துக்கோ டா.  மணி எட்டு ஆகுது.  எருமை மாடு கணக்கா இருக்காதே”  என்று அவனை எழுப்பி பாலை தந்துவிட்டு, 

 

“நேற்றே சென்னேன் தானே  இன்றைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு காலையில் எனக்கு கொஞ்சம் உதவி பண்ண சொல்லி,  தலையை தலையை ஆட்டி விட்டு தோற்க போறோம்னு தெரிஞ்சும் அந்த வினாபோன ஃபுட்பால் மேட்ச்யை நைட் முழுக்க பார்க்க வேண்டியது” என்று காதில் கேட்க முடியாத பல நல்ல வார்த்தையில் அவனை திட்ட, 

 

“போதும் டா போதும். உன் ரேடியோவை கொஞ்சம் ஆப் பண்ணு. காலையே  உன் சுப்ரபாதத்தை கேட்கனும்னு என் தலைவிதி. யாரால மாற்ற முடியும். பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு” என்று தன்னை திட்டும் நன்பனான கிஷோரை கேலி செய்து கொண்டே எழுந்தான் சைதன்யா. 

 

கிஷோர்  “உனக்கு ஏன்டா அந்த ஃபுட்பால் மேல அவ்வளவு கிரேஸ்.  அதுவும் வூமன் ஃபுட்பால் மேட்ச்யை தோற்க போறாங்கனு தெரிஞ்சும் எதுக்கு நைட் முழுக்க  கண்ணு முழிச்சு பார்க்கணும் இப்ப எழுந்துக்க முடியாம கஷ்டப்படணும்” என்றதும், 

 

“விளையாட்டில் என்ன ஆண்  பெண் எல்லாம்.  நம்ம நாட்டில் கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டு போல மற்ற விளையாட்ட எல்லாம் மதிக்க கூட மாட்டீங்களே. நம்மை விட நில அளவிலும் சரி மக்கள் தொகையில் சரி பல மடங்கு குறைவான நாடுகள் எல்லாம் ஃபுட்பாலில் வேல்ட் கப்பை ஜெயிக்கும் போது நாம மட்டும் அதுக்கு தகுதி பேறவே போராடிட்டு இருக்கோம்.  பல கோடி மக்கள் தொகை கொண்ட நம்ம நாட்டில் 11 திறமையான ஃபுட்பால் பிளேயர் இல்லையா…… 

 

நீ கேட்டியே தோற்கிற மேட்ச்யை எதுக்கு பார்க்கிறனு…. அந்த டீம்யை பற்றி என்ன தெரியும் உனக்கு.  இரண்டு வருடம் முன்ன நம்ம ஹண்டர் 20 வூமன் டீமை பார்த்து உலக்கத்தில் இருந்த நம்பர் ஒன் டீம் கூட பயந்துச்சு..  அடுத்த வருசம் நடக்கப்போகிற வோல்ட் கப் நமக்கு தான்னு இருந்த டைம்ல  நம்பர் ஒன் பிளேயர் மற்றும் நம்ம டீம் கேப்டன் ஜிஷ்யா பிரேக் எடுத்துக்கிட்டாங்க…. ஒரு வருசம் ஆச்சு அவங்களை பற்றி ஒரு நியூஸ் கூட தெரியலை. அசாம் மாநிலத்தில் இருக்காங்க அவ்வளவு தான் அவங்களை பற்றிய விவரம். 

 

அவங்க மட்டும் இப்ப டீமில் இருந்து இருந்தால்  நம்ம டீம் கண்டிப்பாக கப் அடிச்சி இருப்பாங்க  டா” என்று கவலையோடு சைதன்யா சொல்ல, 

 

“எப்பா சாமி தெரியாமல் சொல்லிட்டேன் டா. காலையே ஆரம்பிக்காத  சீக்கிரம் ரெடியாகிட்டு வா. நம்ம கிளம்பனும்  நேரம் ஆகுது பார்” என்று கிஷோர் சென்று விட, 

 

அவன் குளிக்க செல்லும் போது அவனது போன் அலறியது.  தன் அக்கா தான் அழைப்பது என்று அறிந்து உடனடியாக எடுத்து  “ஹாய் ஹர்ஷி… என்ன இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்க” என

 

“தனு…. உன் கிட்ட ஒரு உதவி கேட்கணுமே” என்று இழுக்க,

 

“சொல்லுக்கா யாராவது பிரச்சினை பண்றாங்களா” என்று கேட்க,  “அது எல்லாம் இல்லடா. வந்து… காலையில் வீட்டில் அப்பா… வந்து” என்று தடுமாறி கொண்டு இருக்க, 

 

“நீீ எப்ப சொல்லி நான் அதை எப்ப கேட்கிறது சீக்கிரம் சொல்லுக்கா” என்றதும்  “அப்பா எதோ மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க டா… எனக்கு….. நான்… ” எனும் போதே

 

“ஹர்ஷி…. யாரையாவது லவ் பண்றியா. வீட்டில் சொல்ல பயமா இருக்கா. நான் சண்டே அங்க வரேன் நீயும் லவ் பண்றவங்களை வீட்டுக்கு வர சொல்லு பேசிக்கலாம்” என்று அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டே சொல்ல,

 

“தனு அது இல்லைடா”   என்றதும்  “அப்ப நீ லவ் பண்ணலையா” என்று சைதன்யா கேட்க, 

 

“என்னை முதலில் பேச விடுடா. நான் லவ் பண்றேன் தான். அவங்களும் அப்ப லவ் பண்ணாங்க தான்” என்று மேலும் சொல்ல இயலாமல் இழுக்க,

 

“லவ் பண்ணாங்களா…. அக்கானு கூட பார்க்க மாட்டேன் அசிங்கமா திட்டிட போறேன். முதலில் இருந்து ஒழுங்கா சொல்லு”  என்று சற்று அழுத்தமான குரலில் கேட்க, 

 

“எட்டு வருசம் முன்ன நான் ஒரு போட்டிக்காக என் காலேஜ் சார்பாக பெங்களூரு போனேன்ல… அப்ப அவங்களும் அந்த போட்டிக்கு வந்தாங்க…. நான் கோயம்புத்தூர் காலேஜ் சார்பா வந்தேன் அவங்க சென்னை காலேஜ்  சார்பில் வந்தாங்க. எல்லாரும் யூ ஜி.  பட் அவங்க மட்டும் பிஜி. 

 

இரண்டு நாள் போட்டி முடிஞ்சு நைட் கிளம்ப நாங்க ரெடி ஆகிட்டு இருக்கும் போது சீனியர் வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டாங்க. 

 

நான் திட்டிட்டு வந்துட்டேன். பட் கொஞ்ச நாளிலே அவங்களை மிஸ் பண்ற மாதிரி இருந்துச்சு.  அவங்களை பற்றி நினைக்க கூடாதுனு நினைச்சு நினைச்சு இப்ப என் மனசு முழுக்க அவங்க தான் இருக்காங்க டா. எனக்கு என்ன பண்றதே தெரியலை டா” என்று வேதனை தொண்டையை அடைக்க சொல்லி முடிக்க, 

 

“உன்னையும் பெண்னா மதிச்சு ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டா, அப்ப அவரை திட்டி விட்டு இப்ப இப்படி சொன்னா நான் என்ன பண்றது. சரி அவங்க பெயர் என்ன” என்றதுக்கு

 

“தெரியாதே” என்றதும் வாயில் கண்டமேனிக்கு வரும் வார்த்தையை வாயோடு அடக்கி கொண்ட சைதன்யா “நீ நல்லா தானே இருக்க இல்ல படிச்சு படிச்சு பைத்தியம் ஆகிட்டியா.   லவ் பண்றாலாம் ஆனால் பெயர் கூட தெரியாதாம்.  எட்டு வருசம், முழுசா எட்டு வருசம் நீ வேண்டாம்னு சொன்னதால் இன்னும் உனக்காக அவங்க என்ன காத்திருப்பாங்களா. நீங்க இரண்டு பேரும் காதலிச்சிருந்தா கூட பரவாயில்லை. உனக்காக காத்திருக்கலாம். அதுவும் இங்க இல்ல,  அவங்களுக்கு என்ன தலையெழுத்தா உன்னையே நினைச்சுட்டு வாழ, இதனால் தான் இத்தனை நாளா வீட்டில் பார்த்த எந்த மாப்பிள்ளையும் பிடிக்கலைனு சொன்னியா.  இதை  எல்லாம் மறந்திட்டு வீட்டில் சொல்றவங்களை கட்டிக்கிட்டு வாழ்ற வழியை பாரு… என்ன சொல்றது புரிஞ்சுதா” என்று நடப்பு புரியாமல் பேசும் அவளின் மேல் உள்ள கோபத்தில்  காட்டமாக சொல்ல,

 

சுரத்தே இல்லாமல் “ம்ம்ம்” என திரும்ப அவனே  “அக்கா… ஸாரி கோபத்தில் கத்திட்டேன்.  நீயும் கொஞ்சம் ப்ராட்டிகலா யோசித்து பாரு. இப்ப அவங்களுக்கு கல்யாணம் கூட ஆகிட்டு இருக்கும். இதை எல்லாம் மறந்திடு அக்கா. எனக்கு ரொம்ப லேட்  ஆச்சு ஒரு முக்கியமான மீட்டிங் வேற இருக்கு. நைட் பேசறேன்” என்று அவளது பதில் மொழி கேட்க கூட இவனுக்கு நேரம் இல்லை. அவசரமாக தயார் ஆகி கிஷோருடன் சென்று விட்டான். இருவரும் ஒரே கம்பெனியில் தான் வேலை செய்கிறார்கள். 

 

இங்கு ஹர்ஷிகா நிலையோ மோசமாக இருந்தது.  சைதன்யா ‘அவருக்கு கல்யாணம் கூட ஆகிட்டு இருக்கும்’  என்றதிலே இவளது உலகம் இருண்டு விட்டது. “அவருக்கு கல்யாணம் நா…. நான்… என்ன பண்ணுவேன். எனக்கு அவர் இல்லைனா அந்த விசயத்தை அப்பவே மறக்க வைத்து இருக்கலாமே… கிருஷ்ணா!!!! தினமும் அவரையே நினைக்க வைத்து அவருக்காக தானே இத்தனை வருசமா காத்திருக்கிறேன். என் காதல் வாழ்றத்துக்கு முன்னாடியே செத்து போச்சே. நானே கொன்றுட்டேனே.  அவங்க இடத்தில் வேற ஒருத்தரை நினைக்க கூட முடியலையே. இப்ப நான் என்ன பண்ணுவேன்” என்று வண்டியை எடுத்து பள்ளிக்கு செல்ல, மூளையும் மனமும் அதையே யோசித்து கொண்டு இருக்க கைகளோ வண்டியை ஒன் வேவ்வில் வேகமாக இயக்கி கொண்டு இருந்தது.  ஏதிரே அதிவேகத்தில் லாரி வருவது கூட இவளது கவனத்தில் பதியவில்லை. அந்த லாரி வந்த வேகத்தில் இவளது வண்டியை இடித்து விட்டு நிற்காமல் சென்று விட, இடித்த வேகத்தில் தூக்கி எறியப்பட்டாள் ஹர்ஷிகா. 

 

அதே நேரத்தில் மங்களூரில் இருக்கும் ஒருவனது இதயம் பதட்டமாக வேகமாக துடித்து கொண்டு இருந்தது. துடிக்கும் இதயத்தின் சொந்தம் இவளோ???

 

மந்திரங்கள் தொடரட்டும்

நிலானி 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்