Loading

ப்ரியம் 9

அந்தி நேரம் மெதுவாகப் பூமியைத் தொட்டுக் கொண்டிருந்தது.சூரியன் தன் வெப்பத்தை ஒதுக்கி வைத்து, ஆரஞ்சு நிற ஒளியை வானம் முழுக்கப் பரப்பி இருக்க.

சாலையின் இருபுறமும் நெல் வயல்கள்.காற்று வீசும் போதெல்லாம் அலை போல் அசைந்து கொண்டிருந்த பச்சைத் தழைகள்.அந்த காற்றில் அவள் பின்னலிட்ட கூந்தலில் சூடியிருந்த டிசம்பர் பூ மெதுவாக அசைந்தது.

மாலை காற்று இருவரின் முகத்தையும் வருடியது.வஞ்சி மணியை விட்டு விலகியே அமர்ந்திருந்தாள்

சாலையில் ஒரு பள்ளம் வந்தது. அதில் ஏற்றி இறக்கிய நொடியில் பைக் சற்றுக் குலுங்கியது. வஞ்சி பட்டென அவன் தோள்களில் கைவைத்து சற்றே அழுத்தினாள்.

மணியின் உதடுகளில் சின்னச் சிரிப்பு.

“பயமா?” என்றான்.

“வேகமா ஓட்டாதீய,” அவள் மெதுவாகச் சொன்னாள்.

“நான் இருக்கேன்ல கொடி பிறவென்ன பயம்” என்றான் அவன்.

சாலையின் இருபுறமும் விளக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒளிர்ந்தன. அவர்கள் நகரத்தை நெருங்கிவிட்டார்கள் என்பதற்குச் சாட்சியாக

பைக்கின் கண்ணாடியில் பிரதிபலித்த வஞ்சியின் முகத்தை மணி ஒரு நொடி பார்த்தான்.

மாலை ஒளி அவள் கன்னத்தில் தங்க நிறம் பூசியது போலிருந்தது. காற்றில் பறக்கும் அவள் கூந்தல் அவன் முகத்தைத் தொட்ட நொடியில் அவன் பார்வை சற்றே மென்மையாக மாறியது.

அவர்களின் முதல் பைக் பயணம். இரண்டு வருடக் காதலில் இன்று தான் அவள் அவனுடன் வரச் சம்மதித்திருக்கிறாள்.

வஞ்சி அவன் பார்வை கண்ணாடி வழியாகத் தன்னைத் தொடுவதை உணர்ந்தவள்,

“ரோட்டைப் பார்த்து ஓட்டுங்களான்” என்று சொல்லிவிட்டு மீண்டும் சற்றே தள்ளி அமர முயன்றாள்.

“ரோட்டை பார்த்து தான் ஓட்டுதேன்,” என்றான் அவன் மெதுவாய்.

“நல்லா பொய் பேசுதீய” அவள் சொன்னாள். அவனோ பதிலுக்குச் சிரித்து வைத்தான்.

பைக் நகரத்தை நெருங்கியபோது சாலை சற்றே கூட்டம் கொண்டது. வண்டிகளின் ஹார்ன், கடைகளின் விளக்குகள், சாலையோர தேநீர் கடையில் பெருசுகளின். பேச்சுகளும் இளசுகள் ஊதி தள்ளும் புகையிலும். குமரி பெண்களின் சிரிப்பு சத்தங்களையும் கவனித்தபடி அமைதியாய் அமர்ந்திருந்தாள் வஞ்சி.

அவள் கண்களில் சின்னத் தயக்கம்.இங்கே யாராவது தெரிந்தவர்கள் பார்த்துவிட்டால்? அவளின் பயம் அதீதமானது

டவுன் பஜாரின் முதல் வளைவை எட்டியபோது, விளக்குகள் முழுமையாக ஒளிர்ந்திருந்தன. கண்களே கூசும் அளவிற்குக் களைகட்டியது அந்தக் இடம்

துணிக்கடையில் வண்ண சேலைகள் காற்றில் ஆடியது. பழக்கடையில் விளக்கின் கீழ் ஆரஞ்சு, ஆப்பிள் மின்னியது.

சாலையின் நடுவில் பேருந்து நின்று. அந்த நிறுத்ததிற்கு இறங்க வேண்டிய பயணிகளை இறக்கி விட்டு நகர்ந்தது.

மணி மெதுவாகப் பைக்கை ஓரமாக நிறுத்தினான்.

“இங்கே இருந்து நடந்துகிடுவியா? இல்லை கடைக்கி முன்னே போய் நிறுத்தவா?”

வஞ்சி தலையசைத்தாள்.இறங்கும்போது அவள் தாவணியின் ஓரம் பைக்கில் சிக்கியது. அவன் சற்று குனிந்து அதை விடுவித்தான். அந்த நெருக்கமான நொடியில்,இருவரின் மூச்சும் கலந்தது. இருவரின் பார்வையும் ஒரே கணத்தில் சந்தித்தது.

வஞ்சி பட்டென விலகி எழுந்து நின்றாள்.

“நான் மட்டும் போய் வாங்கிட்டு வர்றேன். இங்கேயே நில்லுங்க எங்கேயும் போய்டாதீய” என்று சொல்லி நடக்கத் தொடங்கினாள்.

“ஏன் கொடி! நான் வரக்கூடாதா” என அவன் கேட்டதில் அவளின் நடை தடை பட்டு நின்றது.

“இரண்டு நிமிசத்துல வந்துடுவேன்” எனச் சொன்னவள் கடையை நோக்கி ஓடினாள்.

வஞ்சி ஒரு துணிக்கடைக்குள் நுழைந்தாள்.கண்ணாடி மேசையின் மீது பரவியிருந்த லேஸ்களைப் பார்த்தபடி, இருந்தவளின் மனம் என்னவோ அவனிடம் நெருக்கமான அந்த நொடியை மனதில் ஓட்டி பார்த்தது.

அவன் குனிந்து தாவணியை விடுவித்தது,அவன் மூச்சு தன்னைக் தொட்ட உணர்வு, இப்போதும் அவள் மீது படர்வதாய் உணர்ந்தாள் பெண்.

“என்னம்மா எத்தனை மீட்டர்?” கடைக்காரன் கேட்ட குரலில் அவள் திடுக்கிட்டாள்.

“அ… அஞ்சு மீட்டர்,” என்று சொல்லி பெருமூச்சு விட்டாள்.

அதே நேரத்தில், கடை கண்ணாடி வழியாக வெளியே பார்த்தாள்.மணி பைக்கில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தான்.

அவன் பார்வை கூட்டத்தைக் கடந்து அவளைத் தேடிக் கொண்டிருந்தது.அந்த பார்வையைப் பார்த்தவளுக்கு உள்ளே ஒரு நிம்மதி. கூட்டத்தின் நடுவில் தன்னைத் தேடிக் கொண்டிருந்த காதலனை ரசித்துக் கொண்டிருந்தாள்.

அவள் கையில் இருந்த லேஸை மடித்துக் கொடுத்த கடைக்காரனிடம் பணம் கொடுத்தாள்.

“இன்னும் ஏதாவது வேணும்மா?” என்றார் கடைக்காரர்

“நூல் கண்டு வேணும்” என்றாள் அவள்.

“எந்தக் கலரு வேணும்” என்று கேட்டார் கடைக்காரர்.

“பாக்ஸூல இருக்குமே எல்லாக் கலரும் சேர்ந்தாப்புல இருக்குமே அதை எடுத்து காட்டுங்க” எனக் கேட்டு வாங்கியவள், கடைக்காரரிடம் உரிய பணத்தைக் கொடுத்து விட்டு கடையிலிருந்து வெளியே வந்தாள் வஞ்சி.

அவளின் வருகைக்காகக் காத்திருந்தவன் சாலையைக் கடந்து அவளருகே வந்து நின்றான்.

“நான் தான் வருவேன்ல ஏன் இப்படி ஓடி வரிய? நான் எங்க போயிட போறேன்” எனப் பேசிக் கொண்டிருந்தவளின் கரத்தை மெல்ல பற்றினான். அவளின் பேச்சுத் தடைப்பட்டது. காதலுடன் தன்னவனை ஏறிட்டாள் பெண். அவனோ அவளைப் பாராமல் சாலையைப் பார்த்தபடி நின்றிருந்தான். அவன் என்னவோ இயல்பாகத் தான் நின்றிருந்தான். வஞ்சிக் கொடி தான் அவன் தொடுதலில் தவித்துப் போனாள்.

அவள் கையை மேலும் இறுக்கமாய்ப் பிடித்தவன் சாலையைக் கடந்து சென்று. அங்கிருந்த துணி கடையினுள் அவளையும் இழுத்துக் கொண்டு வந்தான்.

“கைய விடுதீயளா? யாரவது பார்த்திட போறாக” என்றாள் தயங்கிய படி,

“யார் பார்த்தால் என்ன பார்க்கட்டும் கொடி. நீயும் நானும் விரும்புறோம்னு தெரிஞ்சிகிடட்டும்” எனச் சொல்லியவனின் பிடி மேலும் இறுக்கமானது.

“எதுக்கு இப்போ இங்கே வந்திருக்கோம். இருட்டு ஆயிடுச்சி. பாட்டி எனத் தேடிகிட்டு இருக்கும்” எனப் பயத்துடன் சொன்னாள்.

“எங்க அம்மைக்கி சீலை வாங்கணும். எது நல்லா இருக்கும்னு பார்த்து சொல்லு” என்றான் மணி.

அவள் விழிகளைச் சுழல விட்டாள். அவளின் இடது பக்கம் பெண்கள் சேலை பிரிவு. நீளமான ரேக்குகளில் பல வண்ணங்களில் மடித்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த சேலைகள். கீழ் ரேக்கில் பருத்தி, மேலே பட்டு, அதற்கு மேலே டிசைனர் கலெக்ஷன். என எல்லாம் இருந்தது.

கடை முழுவதும் புதிய துணியின் மணம். விளக்கின் ஒளியில் பட்டுச் சேலைகள் மென்மையாய் மின்னிக் கொண்டிருந்தது.

“அக்கா என்ன மாடல் பார்க்கீய” என்று ஆர்வமாய்க் கேட்டாள் அங்கிருந்த பெண்.

“ஸ்பேஸ் ஸில்க் இருக்கா? நெட்டுல ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கே அதான்” என வஞ்சி பதில் கொடுத்தாள்.

“உங்கக அம்மைக்கி ஸ்பேஸ் சில்க் வாங்கணும்னு. போன தடவ துணி தைக்கக் கொடுத்தப்பவே சொன்னாவ. வாங்கிக் கொடுங்க அவியவளுக்குப் பிடிக்கும்” எனச் சொன்னவளை இமைக்காமல் பார்த்திருந்தான்.

“அப்படியா?” என்றான் ஆச்சரியமாய் வஞ்சி திரும்பிப் பார்த்தாள்.

“ அவிய லைட் கலர்ல தான் போட ஆசைப்படுவாவ. இது நல்லா இருக்குதா பாருங்களேன்”

“உனக்கு எது பிடிக்கோ அதை எடு” என்றான் மணி. விற்பனை பெண்ணோ ஒவ்வொரு புடவையாய் விரித்துக் காட்டினாள்.

முதலில் இளஞ்சிவப்பு.

பிறகு மஞ்சள் கலந்த கிரீம்.

பின்னர் லைட் நீலம், அதன் ஓரத்தில் மென்மையான வெள்ளி ஜரி.

ஒவ்வொரு சேலையும் மேசையின் மேல் விரிக்கப்பட்டபோது, விளக்கின் ஒளியில் சேலைகள் மின்னியது.அதன் மென்மையைக் கைத் தொட்டவுடனே உணர முடிந்தது.வஞ்சி ஒவ்வொன்றையும் கை கொண்டு தொட்டுப் பார்த்தாள்.

“இது நல்லா இருக்கு பாருங்களான்” என அவள் ஒரு புடவையைத் தேர்ந்தெடுக்க, அது கையில் வாங்கிப் பார்த்தான்.

“சரி இங்கே வா” எனக் கடையில் இருந்த ஆளுயர கண்ணாடி முன் அவளை நிறுத்தியவன்.

சேலையை வஞ்சியின் தோள்மீது வைத்தான். அந்த நொடி வஞ்சியின் மூச்சு நின்றது.

“இது உனக்குச் சரியா இருக்கும்” என்றான் அவளின் தோள் தொட்டு அவள் செவிகளில் கிசுகிசுப்பாய்ச் சொன்னான்.

அந்த நொடியில் வஞ்சி மூச்சே வாங்க மறந்தாள்.

“அது உங்க அம்மாக்கி தானே…” என்று திணறினாள் பெண். அவள் திணறுவதைப் பார்த்து அவள் தோளிலிருந்து கையை எடுத்து மெல்ல சிரித்தான் மணி.

ஆளுயர கண்ணாடியில் அவர்கள் இருவரும் பிம்பமாய்த் தெரிய அவள் தோள்மீது மென்மையாக விரிக்கப்பட்ட பீச் நிற ஸ்பேஸ் சில்க். அவளை மேலும் அழகாய்க் காட்டியது. விளக்கின் ஒளியில் அவள் கன்னம் சிவந்தது.

கடையில் வேலை செய்யும் பெண்களின் பார்வை இருவரின் மீதும் பொறாமையாய் விழுந்தது.

“அம்மைக்கி இல்லை உனக்குத் தான்” எனச் சொன்னவன். “இதைப் பேக் பண்ணிருங்க” எனச் சொல்லி அவளை விட்டு நகர,

விற்பனை பெண் சேலையை அழகாய் மடித்துக் கவரில் போட்டாள்.

வஞ்சி இன்னும் கண்ணாடி முன் நின்றபடியே இருந்தாள்.அந்த பீச் நிற சேலை அவள் தோளிலிருந்து எடுக்கப்பட்டாலும் அதன் நினைவு இன்னும் அவள் மீது போர்த்தியபடி இருந்தது.

“வீட்டுக்கு போகலாமா” என அவன் குரல் கேட்டு நிதானித்தாள் வஞ்சி.

“எனக்கு எதுக்குச் சீலையெல்லாம். உங்க வீட்ல தெரிஞ்சா எதாச்சு பேசுவாவ” என்றாள் பயத்துடன்.

“நான் எங்க வீட்டில சொல்லமாட்டேன். நீ சொல்லுவீயோ?” என்றவனின் இதழ்கடையோர சிரிப்பில் வஞ்சியின் இதயம் சற்று நழுவ பதில் சொல்ல இயலாமல் பார்வையைத் தாழ்த்தினாள்.

வெளியே வந்தபோது பஜாரின் சத்தம் மீண்டும் அவர்களைச் சுற்றிக் கொண்டது.மழை பெய்யாமல் இருந்தாலும் காற்றில் ஈரம்.விளக்குகள் சாலையில் பிரதிபலித்து ஒளிர்ந்தன. பைக் அருகே இருவரும் வந்து நின்ற போது. அவளின் கையைப் பிடித்துத் தன்னோடு இழுத்தான் மணி.

“என்ன செய்தீய விடுங்க மணி” என நெளிந்தவளின் கரம் பற்றியவன். முதல் முறை அவள் தன்னைப் பெயரிட்டு அழைத்ததில் குழைந்து போனான்.

“ஏங்கே இன்னொருக்கா கூப்பிடு” என அவன் சொன்னதில் நாணம் கொண்டாள் பெண். அவளின் கரம் பற்றியிருந்தவன்.

தன் பைக்கில் வைத்திருந்த கவரில் இருந்த கண்ணாடி வளையல்களை அவள் கைகளில் பூட்டினான். அவளின் ஸ்பரிசம் பட்டு கண்ணாடி வளையல்கள் சிணுங்கியது.

“பிறந்த நாள் வாழ்த்துகள்டி என் தங்க மயிலு” என அவளின் நெற்றிமுட்டி சிரிக்க, வஞ்சியோ அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

“எப்படித் தெரியும்??” எனக் கேட்டவளின் விழிகளில் உவர் நீர் வழிந்தோட, தன் கரம் கொண்டு துடைத்தவன். அவள் நெற்றியில் இதழ் பதித்த நொடியில்.

மேகங்கள் உரசி மின்னல் வெட்டிய சமயத்தில் சின்னச் சின்னத் துளிகளாய் அவர்கள் மீது விழுந்தது முதலில் ஒரு துளியில் துவங்கி அடைமழையாய் கொட்டி தீர்க்க,

வஞ்சி இமைகள் மூடியபடி நின்றாள்.அந்த முத்தத்தின் வெப்பமும் மழைத்துளியின் குளிர்ச்சியும் ஒரே நேரத்தில் அவளைச் சுற்றிக் கொண்டது.

மழை பலமாய்க் கொட்டியது.சாலையில் நீர் ஓடத் தொடங்கியது.விளக்குகள் தண்ணீரில் இரண்டாகப் பிரதிபலித்தது.அவள் கைகளில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்கள் மழையில் நனைந்து சிணுங்கியது.மழையுடன் சேர்ந்து இசை மீட்டியது.

அப்போது தூரத்தில் நின்றபடி ஒரு உருவம் இவர்கள் இருவரையும் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

******

அன்று நடந்தவற்றைப் பற்றிப் பேசியபடி யோகாவும் தக்ஷாவும் விடுதியின் மெஸ் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

“இந்தக் கீர்த்திப் புள்ளை மூஞ்சிய பார்த்தியாடி? சார் உன்னைப் பாராட்டினாரு ன்னு தெரிஞ்சதும். அவளைப் பார்க்கணுமே” என நகைத்தாள் யோகா.

“ஹே விடுடி யோகா அதையே பேசிக்கிட்டு இருக்க. வா ராத்திரிக்கி சாப்பிட என்ன இருக்குன்னு பார்ப்போம்” என்ற தக்ஷா தோழியுடன் சேர்ந்தே நடந்தாள்.

விடுதியின் மெஸ் கதவை தள்ளி உள்ளே நுழைந்தனர்.பெரிய ஸ்டீல் டப்பாக்களில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த உணவுகள் கண்ணுக்கே சோர்வாகத் தோன்றியது.

சில மாணவிகள் தட்டில் எடுத்துக் கொண்டு முகத்தைச் சுளிக்க, சிலர் அமைதியாக அமர்ந்து கைபேசியில் மூழ்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்த சாப்பாத்தியை பார்த்த யோகா.

“என்னடி தக்ஷா இது தீச்சு வச்சிருக்காய்ங்க. சரி எடுத்து தீண்போம்” என்றவள் தட்டை எடுத்துத் தக்ஷாவிடம் கொடுக்க. ஆளுக்கு இரண்டு சப்பாத்திகளையும் குருமாவையும் எடுத்து ஊற்றிக்கொண்டு. உட்கார்ந்து உண்ண ஆரம்பிக்க. முதல் வாயை எடுத்து தக்ஷா வைத்தாள்.

“என்னடி இது உறைக்கி” எனத் தக்ஷா சொன்னாள்.

“உறைக்கியா? அப்படினா” புரியாது விழித்தவளுக்கு. சாப்பாத்தியை குருமாவில் முக்கி எடுத்து யோகாவின் வாயில் திணித்தாள் தக்ஷா. முதலில் மெதுவாய் உண்ண ஆரம்பித்தாள் யோகா.

“ஆத்தாடி! என்னா காரமா இருக்கு. சுள்ளுன்னு காரம் மண்டைக்கி ஏறுதுடி தக்ஷா. தண்ணியைக் கூட எடுக்காமல் வந்துட்டேனே.”

“இதைத் தான் உறைக்கின்னு சொன்னேன்”

“எம்மா தாயே புரிஞ்சுதும்மா உன் பாஷை. அதுக்காக என்னை வச்சி எக்ஸ்பிரிமெண்ட் பண்ணாத தாயி. முதலில் தண்ணிய கொடு. செத்துக் கித்துப் போயிடப் போறேன் பக்கி” எனப் புலம்பி தள்ளியவளின் முன் தண்ணீரை வைத்தபடி அமர்ந்தார்கள் சரண்யாவும் திவ்யாவும்.

“என்னதிது சைத்தான் சைக்கிள்ல வருது?” வாய்விட்டு புலம்பிய யோகா தண்ணீரைக் குடித்தாள்.

“அன்னைக்கி நீங்க உங்க ஆளா பார்த்தீங்களா?” ஆர்வமாய்க் கேட்டாள் தக்ஷா.

“எங்கடி இரண்டு பேரும் பார்க்க விட்டீங்க? இனி என்னோட பாய் ஃப்ரெண்ட் அடுத்த வருசம் தான் வருவான். உங்களால தான் அன்னைக்கி லேட் ஆச்சு” என்ற சரண்யா சோகமாய் அமர்ந்திருக்க,

“அன்னைக்கி அவ பாய் ஃப்ரெண்டை பார்க்காமல் போனதில் இருந்து சரண்யா சாப்பிடவே இல்லை தெரியுமா” எனத் திவ்யா சொல்ல.

“அய்யோ பாவம். சாரி சரண்யா நாங்க வேணும்னு பண்ணலை” எனச் சமாதனம் செய்ய முயற்சித்தாள்.

“ஆமா இந்த மெஸ் சாப்பாட்டைச் சாப்பிட்டுடாலும். நானே இந்தத் தீஞ்ச சப்பாத்தியையும் கார தண்ணியையும் எங்கே போய்க் கொட்டுறதுன்னு முழிச்சிட்டு இருக்கேன். இவளுக வேற வந்திட்டு லவ் ஃபீலிங்ல புலம்பிகிட்டு இருக்காளுக” என வாய்விட்டு புலம்பினாள் யோகா. அவள் புலம்பியதை பார்த்து மூவரும் சிரித்துவிட,

“வெளியே போய்ச் சாப்பிடலாமா” எனச் சோகமாய் அமர்ந்திருந்த சரண்யா உற்சாகமாய்க் கேட்டாள்.

“இப்போ தானேடி தக்ஷா இவ சோக கீதம் பாடிட்டு இருந்தா” எனத் தக்ஷாவை கேட்க அவளோ தோள்களைக் குலுக்கினாள்.

“அவ அப்படித் தான். மூட் ஸ்விங்ஸ்ல இருக்கா போல.” எனச் சொன்னாள் திவ்யா.

“மூட் ஸ்விங்ஸா? இதுக்குப் பேரு பசி ஸ்விங்!” என யோகா மீண்டும் தட்டைப் பார்த்தாள். அங்கிருந்த நால்வருக்கும் பசிக்க ஆரம்பித்திருந்தது.

“சரி கிளம்பலாம். வாடி தக்ஷா போயிட்டு வரலாம்” என யோகா சொல்ல.

“முதலில் தட்டுல இருக்கிற சப்பாத்தியை எப்படிப் போய்க் கொட்டுறதுன்னு வழியைப் பார்ப்போம். அங்கே பாரு கை கழுவுற இடத்தில் தான் ஸ்டெல்லா மேம் நிக்கிறாங்க” எனத் தக்ஷா கையைக் காட்டினாள்.

“கிழிஞ்சுது போ” எனத் தலையில் கை வைத்து அமர்ந்தாள் யோகா.

வார்டன் ஸ்டெல்லா கை கழுவும் இடத்தில் நின்றபடி, மாணவிகளை ஒவ்வொருவராகக் கவனித்துக் கொண்டிருந்தார்.

“இப்போ என்ன பண்ணலாம்?” எனச் சரண்யா மெதுவாய் கேட்டாள். அப்போது ஸ்டெல்லா அலைப்பேசியில் பேசிக் கொண்டிருக்க, அதைத் தங்களுக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொண்ட தக்ஷாவும் யோகாவும். கையைக் கழுவி விட்டு தட்டையும் கழுவி உரிய இடத்தில் வைத்துவிட்டு. இருவரும் மெல்ல நகர்ந்து சென்றனர்.

அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து சரண்யாவும் திவ்யாவும் சென்றனர்.

“இனி அந்த வாட்ச்மேன் தாத்தாவை வேற சமாளிக்கணுமா.? இனி ஆவியா தான் எடுப்பாளுக” எனப் பேசியபடி தக்ஷாவின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டை நோக்கி நடந்தாள் யோகா.

மெஸ் கட்டிடத்தின் பின்புறம் இருந்து ஹாஸ்டல் கேட் வரை செல்லும் பாதை நீளமாக விரிந்திருந்தது. இரவு நேரம் என்பதால் கூட்டம் இல்லை. மஞ்சள் நிற லைட்டுகள் இடைவெளி விட்டு எரிந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு லைட்டுக்கும் நடுவே சிறிய இருள் துளிகள்.

மெல்லிய மஞ்சள் விளக்குகள் இரண்டு மூன்று இடைவெளியில் மட்டும் எரிந்து கொண்டிருந்தன. அவற்றின் ஒளி தரையில் நீண்ட நிழல்களைப் போட்டது. நால்வரின் நிழல்கள் நீண்டு நீண்டு ஒன்றோடொன்று கலந்தது.

“என்னடி யோகா இது நம்ம நிழலை பார்த்தாலே பேய் மாதிரி இருக்கு” எனச் சிரித்தாள் தக்ஷா. அவளுடன் சேர்ந்து சிரித்த யோகா.

“இப்போ நான் தக்ஷா பேயை மிதிக்கப் போறேன்” எனத் தக்ஷாவின் காலை மிதித்திருந்தாள்.

“ஆஆஆ. !” எனக் கத்தியவள் யோகாவை துரத்த. அவளோ கேட்டை நோக்கி ஓடினாள்.

“இந்தக் கொல்லி வாய் பிசாசுகிட்ட இருந்து யாரவது காப்பாத்துங்களேன்” என யோகா கத்திக் கொண்டு ஓடியவள் தடுக்கி கீழே விழ. அவளைத் துரத்திக் கொண்டு ஓடியவள் எதன் மீதோ மோதி நின்றாள்.

“இன்னைக்கி ஏழரையைக் கூட்டிட்ட செத்தோம்” எனப் புலம்பியபடி எழுந்து நின்ற யோகாவிற்குக் கால்கள் கிடுகிடுவென நடுங்க ஆரம்பித்தது.

தக்ஷா மோதி நின்ற உருவம் மெல்ல அசைய., படபடக்கும் இதயத்துடன் நிமிர்ந்து பார்த்தவள்.

“திரு..” என அவள் இதழ்கள் உச்சரிக்க. பட்டென விலகி நின்றாள்.

“இந்தப் பக்கியை வச்சிகிட்டு என்ன செய்யப் போறேனோ? அண்ணனுக்கும் தம்பிக்கும் வித்தியாசம் தெரியாமல் திரியுது” எனப் புலம்பிய யோகா.

“அடியே தக்ஷா அது நம்ம ஹிட்லர் டி” என அவளின் காதுகளில் கிசுகிசுக்க, தக்ஷாவின் விழிகள் பெரிதாகியது.

“இந்த நேரத்தில் எங்கே போறீங்க?” என அவனின் கம்பீரம் குரல் தக்ஷாவை பயமுறுத்தியது. அவனை நிமிர்ந்து பார்க்க பயந்து கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தாள் தக்ஷா. வார்த்தைகள் தொண்டையில் சிக்கி நின்றது.அவனை நிமிர்ந்து பார்க்கத் தயக்கம்.கொண்டு தலை தாழ்த்தினாள். அவளின் இதயம் மட்டும் தப்பித்து ஓட எச்சரிக்கை விடுத்தது.

அவளின் அவஸ்தையை மனதிற்குள் ரசித்தான் அந்தக் கள்வன்.

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்