Loading

ப்ரியம் 8

அவன் நெருங்கி வருவதற்குள் தக்ஷாவோ தடதடக்கும் இதயத்துடன் அவனையே பார்த்து நின்றாள். அவனைப் பார்க்கும் போதெல்லாம் தன்னை மறந்து நின்றுவிடுகிறாள் பெண். அவளின் கருவிழிகள் இரண்டும் அவனையே நிலைக்குத்தி நின்றது. அவளையும் மீறி அவளது எண்ணங்கள் தறிகெட்டு கேப் டிரைவராகப் பார்த்த திருவை நோக்கி ஓடியது.

திருநீலகண்டனை பார்த்துத் தன்னை மறந்து நின்றவளுக்கு. அவள் பார்த்த கேப் டிரைவரும் அவன் தான். பேராசிரியராகத் தன் முன் தோரணையாய் நடந்து வருபவனும் அவன் தான் என அறியா பாவையவளோ,

“திரு” என வாய்விட்டு உளறிய நொடியில் அருகில் நின்றிருந்த கீர்த்தியோ பட்டெனத் திரும்பி அவளை முறைத்தாள்.

“ஏய் தக்ஷா சாரை சைட் அடிக்கிறீயா? அவர் என் ஆளு. உரிமையாய் பேரை வேற சொல்லுற” எனத் தக்ஷாவின் தோளை இடித்து மீண்டும் முறைத்தாள் கீர்த்தி.

“ஏய் சீ அப்படியெல்லாம் இல்லைடி கீர்த்தி” என அப்போது சமாளிப்பாய் சொன்னாள் தக்ஷா.

“ஏன் நீ மட்டும் தான் சைட் அடிக்கணும்னு எழுதி வச்சிருக்கா? தக்ஷா நீ பாருடி இவ என்ன சொல்லுறது.” என யோகா மல்லுக்கு நின்ற நொடியில், அவன் அவர்கள் மூவருக்கும் நடுவில் வந்து நின்றான்.

“இதென்ன ஃபிஷ் மார்கெட்டா? ஏன் எலிமென்ட்ரி ஸ்கூல் பசங்க மாதிரி பிகெவ் பண்ணுறீங்க? வாட்ஸ் கோயிங் ஆன்?” எனக் கேட்டவனின் பார்வை அவ்வப்போது தக்ஷாவை தொட்டு மீண்டது.

“சார்! இவங்க இரண்டு பேரும் நேம் கொடுத்திட்டு இப்போ க்ளாஸுக்கு போறோம் நேம் அடிச்சிருன்னு சொல்றாங்க” எனத் தக்ஷாவையும் யோகாவையும் கைகாட்டி மாட்டி விட்டிருந்தாள் கீர்த்தி.

“இன்னைக்கி பொங்கச் சோறு நம்ம தான்டி. சும்மாவே மிரட்டி விட்டுருவாரு. இன்னைக்கி சம்பவம் தான்டியே” என யோகா தக்ஷாவின் காதைக் கடித்தாள்.

“படிப்பில தான் இன்ட்ரெஸ்ட் இல்லை. அட்லீஸ்ட்,” என அவன் திட்ட ஆரம்பிக்கும் முன்,

“சாரி சார்” எனத் தக்ஷா ஆரம்பிக்க, அவளைத் தொடர்ந்து யோகாவும் மன்னிப்பு கேட்க.

“அப்படியெல்லாம் இந்த முறை விட முடியாது. நீங்க தான் ஃப்ர்ஸ்ட் ரோ ல நிக்கணும்” எனக் கண்டிப்பாய் சொல்லிச் செல்ல, சரி என்பது போல் இருவரும் தலையசைத்த நொடியில். தக்ஷாவின் கையில் ஒரு பதாகையைக் கொடுத்தான் திருநீலகண்டன்.

அந்தப் பதாகையில் Life is Precious – Don’t Inject Poison எனப் போதை பழக்கத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதியிருந்தது.

பதாகையைப் பிடித்த அவளது விரல்கள் நடுங்கின.ஆனால் அதைவிட அதிகமாக நடுங்கியது அவளது இதயம். ஏனென்றால்அந்த பதாகையைக் கொடுத்த போது, அவனின் விரல்கள் அவளது விரல்களைச் சற்றே உரசியது. மின்னல் மேகங்களை ஒரு நொடி தொட்டு மீண்டது போல் இருந்தது.

தக்ஷாவையும் யோகாவையும் முன் வரிசையில் நிற்க வைத்ததோடு, அவனும் அவர்களுடன் சேர்ந்து நின்றான். அப்போது பத்திரிக்கையிலிருந்து வந்திருந்த புகைப்படக் கலைஞர்கள் ராலி செல்வதற்கு முன் புகைப்படங்களைக் கிளிக்கிட.

“பேனர் நல்லா தெரியுற மாதிரி பிடிங்க.” என அறிவுறுத்தினான் திருநீலகண்டன். அவன் சொன்னதைக் கேட்டு அப்படியே செய்தாள் தக்ஷா. போதை பழக்கத்திற்கு எதிராகப் பேரணி துவங்கியிருந்தது.

மாணவர்களுடன் சேர்ந்து அவர்கள் சோர்வில்லாமல் நடக்க அவர்களை ஊக்குவித்தபடி வந்தான் திருநீலகண்டன்.

வகுப்பறையில் எப்போதும் கடினமாய் முகத்தை வைத்திருப்பவன் இன்று அவ்வப்போது சிரித்தான். இந்தத் திருநீலகண்டன் தக்ஷாவின் விழிகளுக்குப் புதிய மனிதனைப் போல் தெரிந்தான். இவருக்குச் சிரிக்கலாம் தெரியுமா? என்பது போல் நினைத்துக் கொண்டிருந்தவளின் செவிகளில் கணீரென விழுந்தது அவனின் குரல்.

“காமான் காய்ஸ் நம்ம காலேஜ் கெத்தை காட்ட வேண்டாமா? ஸ்லோகன்ஸை கத்தி சொல்லுங்க. பப்ளிக் காதில நீங்க சொல்லுற ஸ்லோகன்ஸ் கரெக்ட்டா போய் விழணும். கச்ச முச்சான்னு கத்தக் கூடாது” எனத் திருநீலகண்டன் அறிவுறுத்த அவன் அருகில் நின்றிருந்த மல்லிகா பேராசிரியர் சிரித்தார்.

“என்ன மல்லி மேம் சிரிக்கிறீங்க!” எனப் புன்னகைத்தபடி அவன் கேட்டான்.

“இல்லை நம்ம நடத்துற ராலியை பார்த்தா இந்த மக்கள் திருந்திட போறாங்க? இண்டு இடுக்கு மூலை முடுக்குன்னு எல்லா இடத்திலையும் ட்ரக்ஸ் ஈசியா கிடைக்குது சார். இவ்வளவு ஏன் நம்ம டிபார்ட்மென்ட்லையே பசங்க யூஸ் பண்ணி மாட்டிகிட்டானுக சார்” எனக் கேட்டார் மல்லிகா பேராசிரியர். பார்ப்பதற்கு அவனை விட இரண்டு மூன்று வயது பெரிய பெண்ணாகத் தெரிவார். ஆனால் அவனை விடச் சின்னப் பெண் தான் அவர். இருந்தாலும் மரியாதை நிமித்தமாக மேடம், சார் என இருவரும் பேசிக்கொள்வார்கள்.

சொல்ல போனால் மல்லி திருநீலகண்டனுக்கு நல்ல தோழியும் கூட. மாணவ மாணவிகள் முன் தங்களின் நட்பை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.

நட்பையை வெளிபடையாய் காட்டிக் கொள்ளாதவன். தன் காதலை பற்றிக் கடுகளவு கூடக் கசிய விடாமல் வைத்திருக்கிறேன். அதில் மிகவும் கவனத்துடனும் இருந்தான் திருநீலகண்டன்.

“மல்லி மேம்! நமக்குக் கொடுத்த வேலையை சரியா செய்யணும் அவ்வளவு தான் என்னோட மோட்டீவ். நம்ம இங்கே இருந்து மூணு கிலோ மீட்டர் சுத்தி நடந்து வரணும். அதுக்குள்ள பசங்க டையர்ட் ஆகிடுவாங்க. ஸ்லோகன் சொல்லிட்டு வரும் போது அவங்க டையர்ட்னஸையே மறந்திடுவாங்க.க்ளாஸ் ரூம்ல தான் ஸ்டிரிக்ட்டா இருக்கோம் லெட் தெம் என்ஜாய் மேம்” எனத் திருநீலகண்டன் மல்லியிடம் சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்திருந்தாள் தக்ஷா.

திருநீலகண்டன் மல்லியிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த தக்ஷாவின் உள்ளத்தில் ஏதோ புதிதாய்க் கிளர்ந்தது.

அவனின் குரலில் இருந்த உறுதியும், சிரிப்பில் இருந்த சுடரும், இரண்டும் சேர்ந்து அவள் இதயத்தை மெல்ல உருகச் செய்தது. கல்லுக்குள் ஈரம் இருப்பது போல் அவனுக்குள்ளம் ஒரு மென்மையானவன் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தாள் பாவை பெண்.

“ஏய் இந்தாடி தக்ஷா” என அவள் தோளை இடித்தாள் கீர்த்தி. ராலி நகர்ந்து கொண்டே இருந்தது.

“எதுக்குடி என்னை இடிச்ச” கோபமாய்க் கேட்டாள் தக்ஷா.

“சாரை முழுங்குற மாதிரி பார்க்கிற? அவரை அப்படிப் பார்க்காதே ஹீ இஸ் மைன்” எனச் சொந்தம் கொண்டாடினாள் கீர்த்தி.

“வச்சுக்கோ போடி! இங்கே இருக்க முக்கால்வாசி பொண்ணுங்களோட கண்ணு அவர் மேல தான் இருக்கு. முடிஞ்சா எல்லாரோட கண்ணையும் கட்டிவிட்டு விடிய விடிய நீ மட்டும் உட்கார்ந்து பார்த்திட்டு இருடி” என நக்கலாய் சொன்னவள் யோகாவுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள். ஆனால் அவளின் பார்வை திருநீலகண்டனை விட்டு நகரவில்லை.

“என்னடி தக்ஷா கேப் டிரைவர் திரு நியாபகம் வந்திடுச்சா என்ன?” யோகா கேட்ட போது. இல்லை என்பது போல் இட வலமாய்த் தலையசைத்தாள் தக்ஷா.

“அடியே தக்ஷா! எதோ காணாததைக் கண்ட மாதிரியில அவரையே பார்த்திட்டு இருக்க. என்ன விசயம்னு தான் சொல்லேன்”

“இல்லைடி நான் சாரை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்திருக்கேன்” எனச் சொன்னவளின் பார்வை இன்னும் அவனிடம் இருந்து மீளவில்லை

“அதான் அவர் ப்ரோவை பார்த்திருக்கியேடி. இன்னும் அந்தக் கன்ஃப்யூசன்ல இருந்து நீ வெளிய வரலையா?” யோகா ஆர்வமாய்க் கேட்டாள்.

“இல்லைடி யோகா! இவரை நான் எங்கயோ இவ்வளவு பக்கத்தில பார்த்திருக்கேன். நான் திருவை இரண்டு முறை பார்த்திருக்கேன் ராத்திரியில தான் பார்த்திருக்கேன். இந்தச் சிரிப்பு. இந்தக் குரல் எனக்கு ரொம்பப் பழக்கப்பட்ட மாதிரி இருக்குடி” எனப் புலம்பிக் கொண்டிருந்தவளின் குரல் அவன் செவிகளை எட்ட,

‘தக்ஷு!! இன்னுமா என்னை யாருன்னு உனக்குத் தெரியலை’என நினைத்தவன் மெல்ல திரும்பி அவளைப் பார்த்தான். இருவரின் பார்வையும் ஒரே நேரத்தில் சங்கமிக்க. அவனோ வலுக்கட்டாயமாகப் பார்வையை வேறு திசையில் திருப்பினான்.

“கனா எதுவும் கண்டியாடி? நம்ம ஹிட்லரையெல்லாம் நீ பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. அப்படியே பார்த்திருந்தாலும் காலேஜ் அட்மிசன் போட வரும் போது பார்த்திருப்ப.” என யோகா சொல்ல, மீண்டும் யோசனையில் முழ்கியவளை.

“தக்ஷன்யா” எனத் திருநீலகண்டன் அவளை அழைக்க,

“யெஸ் சார்” பயத்துடன் அவனைப் பார்த்தாள்.

“என்னைப் பார்த்தால் பேய் மாதிரி இருக்கா தக்ஷன்யா?” என அவன் கேட்ட நொடியில்.

“அய்யோ இல்லை சார்” அவசரமாய்ப் பதில் கொடுத்தாள் தக்ஷா.

“அப்பறம் எதுக்கு இந்தப் பயம், ஜெஸ்ட் ரிலாக்ஸ்” என அவள் விழி பார்த்து அவன் சொன்ன போது., அவள் கண்கள் அவனை நேராகச் சந்திக்கத் தயங்கின.

“நான் பயப்படல சார்” என்று சொல்ல முயன்றாலும், குரல் மெல்ல தளர்ந்தது

 

“அப்போ ஓகே! ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”

“சார் நான் பண்ணுறேன் சார்” தக்ஷாவின் பின்னே நின்றபடி மெல்ல கை உயர்த்திக் குரல் கொடுத்தாள் கீர்த்தி.

“ஓகே கீர்த்தி யோகாவையும் சேர்த்துகோங்க” என அவன் சொல்ல,

கீர்த்தி ஆர்வமாய் நின்றாள். யோகாவும், தக்ஷாவும் பதில் சொல்லாமல் நிற்பதை பார்த்தவன்.

“சே எஸ் ஆர் நோ” எனக் கடுமையாய் அவனிடமிருந்து வார்த்தைகள் விழ.,

“எஸ் சார்! பண்ணுறோம்” ஒரே நேரமாய் இருவரும் பதில் கொடுத்தார்கள்.

“ஃபாஸ்ட்டா ஓடிப்போய் ஃபோர் ஹண்ட்ரட் மீட்டர்ல ரெஃப்ரெஸ்மென்ட் ஸ்டால் வச்சிருக்கோம். டீ, பிஸ்கெட்ஸ் அண்ட் ஜூஸ் வச்சிருக்கோம். எல்லா ஸ்டூண்ட்ஸ்க்கும் வரணும். எதுவும் குறைஞ்சிடக் கூடாது. ஸ்டாஃப்க்கும் சேர்த்து தான். கம் ஆன் ரன்” என அவன் சொன்ன நொடியில் மின்னல் வேகத்தில் ஓட ஆரம்பித்தாள் கீர்த்தி.

தக்ஷாவோ அசையாமல் அங்கேயே நின்றாள். யோகா தகஷா வருவதற்காகக் காத்திருந்தாள் யோகா.

“தக்ஷன்யா! போங்க கோ ஃபாஸ்ட்” அவன் துரிதப்படுத்தினான்.

“சார் நேம் லிஸ்ட்” என அவள் கேட்க, மறுக்காமல் அவளிடம் கொடுத்த நொடியில் யோகாவை இழுத்துக் கொண்டு ஓடினாள் தக்ஷா.

ரெஃப்ரெஷ்மென்ட் ஸ்டால் வந்தடைந்தனர்.

பெரிய டேபிளில் டீ கப்புகள், ஜூஸ் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது.

“ஹே! முதல்ல ஸ்டாஃப்க்கு கொடுக்கணும்,” என்று யோகா நினைவூட்டினாள்.

“இல்லைடி முதலில் ஸ்டூண்ட்ஸ்கு. அப்பறம் தான் ஸ்டாஃப்க்கு” எனத் தக்ஷா சொல்ல

“இல்லை நான் முதலில் திருச் சாருக்கு தான் கொடுப்பேன்” எனக் கீர்த்திச் சொல்ல.

“நீ என்னமோ செய் போடி” எனச் சொன்ன தக்ஷா. பெயர் பட்டியலை பார்த்தாள். மாணவர்களின் எண்ணிக்கை இருநூறை தாண்டியிருந்தது. ஆனால் அங்கு வைக்கப்பட்டிருந்த குளிர்பானத்தில் எண்ணிக்கை நூற்று ஐம்பது தான் இருந்தது. இதைத் திருநீலகண்டனிடம் சொல்லியாக ஆகவேண்டும் என நினைப்பதற்குள் மாணவர்கள் முண்டி அடித்துக்கொண்டு வரிசையில் நிற்க ஆரம்பித்தனர்.

“யோகா ஜூஸ் கம்மியா இருக்குடி. சார்கிட்ட இல்லைனா மல்லி மேம்கிட்ட இன்ஃபார்ம் செய்யணும்டீ நீ சொல்றீயா நான் டீயும் வாட்டர் பாட்டிலும் கொடுக்க ஸ்டார்ட் பண்ணுறேன்” எனத் தக்ஷா யோகாவிடம் கேட்டாள்.

“நான் இதைப் போய் ஹிட்லர்கிட்ட கேட்டேன்னு வையி. நீ குடிச்சிட்டியான்னு கேட்பாரு. நான் எடுத்துக் கெடுக்கிறேன். நீ அவர்கிட்ட கேட்டுட்டு வா”

“பயமா இருக்கேடி”

“ஏன் சொல்லலை ன்னு திட்டு வாங்க வச்சிடாதேடி பரட்டை. கேட்டுட்டு வாடி” என யோகா சொல்ல தயங்கி தயங்கி அவனை நெருங்கியிருந்தாள் தக்ஷா. கீர்த்தியோ அவனிடம் ஜுஸை நீட்டிக் கொண்டு இருக்க, அவனோ.

“கீர்த்தி!! பசங்களுக்குக் கொடுங்க அப்பறம் பார்த்துக்கலாம்” எனச் சொல்ல. கீர்த்தி அங்கிருந்து நகர,

“சார் ஜுஸ் கம்மியா இருக்கு” எனத் தயங்கி சொன்னவளை.

“எப்படிக் கம்மியா இருக்குனு சொல்றீங்க” திருநீலகண்டன் கேட்க,

“சார்! நேம் லிஸ்ட்ல டூ ஹண்ட்ரட் ஸ்டுடென்ட்ஸ் இருக்காங்க. பட் ஜூஸ் ஒன் ஃபிப்டி தான் இருக்கு” எனச் சொல்லியவள் மருண்டு விழித்தாள்.

“குட் அனலைஸ் அண்ட் நைஸ் வொர்க்மா. பசங்களை ஆல்ரெடி அனுப்பிட்டேன். நீங்க இருக்கிற வரைக்கும் கொடுங்க. ஜுஸ் வந்திடும்” என அவன் சொல்லி விட அவளுக்கோ தலை கால் புரியவில்லை. முதல் முறை அவனிடம் பாராட்டு பெற்றிருக்கிறாள்.

“தேங்க்யூ சார்” எனச் சொன்னவள் புள்ளி மானைப் போல் துள்ளி குதித்து யோகாவை நோக்கி ஓடியவளை பார்த்து நின்றவன்.

‘தக்ஷூ மளிகை கடைக்காரர் பொண்ணுன்னு நிரூபிச்சிட்டியே’ என மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

விரைந்து ஓடிவந்தவளின் முகத்தில் அப்படியொரு சிரிப்பு. வரிசையில் நின்றிருந்தார்கள் ஜூஸை எடுத்துக் கொடுத்தவள் கொடுக்கக் கொடுக்க. பெயர் பட்டியலில் குறித்து வைத்துக் கொண்டாள்.

“யோகா என்னாச்சு தெரியுமா?” என அவள் குளிர்பானத்தை எடுத்துக் கொடுத்தபடி பேசினாள்

“என்னத்த ஆகிட போகுது. அவர் எப்பயும் சொல்லுவாரே. முகத்தைச் சீரியஸா வச்சிகிட்டுக் கெட் லாஸ்ட் அப்படின்னு சொல்லியிருப்பாரு”

“அதான் இல்லையே” எனச் சொன்னவளின் முகம் பொழிவாய் மாறியது.

“அப்பறம்” என்ன சொன்னாரு எனக் கேட்ட யோகா டீயை மாணவர்களுக்குக் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

“நல்லா அனலைஸ் செஞ்சிருக்க, நைஸ் வொர்க்னு சொல்லி என்னைப் பாராட்டினாரு” எனச் சொல்லி புன்னகைத்தவளை முறைத்தபடி நின்றிருந்தாள் கீர்த்தி.

**********

அந்தி சாயும் பொழுதில் தச்சன்விளை கிராமத்தின் பேருந்து நிலையத்தில் கருப்பு நிற தாவணியில் வெள்ளை பூக்கள் பூத்திருக்க, அழகாய் பின்னலிட்ட கூந்தலில் டிசம்பர் பூவை சூடி இருந்த வஞ்சிக்கொடி பேருந்து வருகிறதா? எனத் தலைச் சரித்துப் பேருந்து வருகிறதா எனப் பார்த்தாள்.

“ஏய் பாப்பா என்ன பஸூ வருதா இல்லையா?” என அங்குப் பேருந்து நிழற்குடையில் அமர்ந்திருந்த முதியவர் கேட்க,

“இல்லை தாத்தா வரலை. வந்தா சொல்லுதேன்” எனப் பதில் கொடுத்தாள் வஞ்சிக் கொடி. அப்போது வண்டி சத்தம் கேட்க மீண்டும் தலை சரித்துப் பார்த்தாள். தன்னுடைய பல்சர் வண்டியை முறுக்கிக் கொண்டு வந்தான் மணிகண்டன். தன்னவளை பார்த்தவுடன் அவன் கண்களில் சிறிய பளிச்சிடல்.

வஞ்சி தான் அவனைப் பார்த்தவுடன் அங்கிருந்து நகர முற்பட்டாள்.

“தாத்தா இந்தப் பஸ் வந்த பாடில்லை நான் வீட்டுக்கு போறேன்” எனச் சொன்னவள் அவரிடமிருந்து பதில் கூட எதிர்பாராமல் வீட்டை நோக்கி நடையைக் கட்டினாள்.

“ஏய் கொடி நில்லுடி” என அவளின் முன்னே வந்து வண்டியை நிறுத்தினான் மணி.

“என்ன பண்ணுதீய? ஏற்கனவே ஊரெல்லாம் பேர் நாறினது பத்தாதுன்னு. இப்போ குறுக்க வண்டியை வந்து நிறுத்திறீய” என வஞ்சி அவனுக்குக் கோப முகத்தைக் காட்டினாள். கல்லூரியில் இருந்து நேராய் வீட்டுக்கு வந்திருப்பதால் கல்லூரியின் அடையாள அட்டை அவன் கழுத்தில் தொங்கி கொண்டிருந்தது. அவனோ அவளைப் பார்த்துச் சிரித்தான்.

“இப்போ என்ன நடந்திட்டு? எதுக்காகப் பார்த்தும் பார்க்காத மாதிரி போற?”

“அதான் உங்க அப்பா சொல்லிட்டாவளே தக்ஷா க்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி. எனக்குத் தான் படிக்கக் கொடுத்து வைக்கல படிக்கிற பிள்ளை படிப்பை கெடுத்து அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணுமா. நம்ம வாழ்க்கைக்காக அந்தப் பிள்ளை வாழ்க்கைய கெடுக்கணுமா?” எனப் பேசியவளின் விழிகளில் கண்ணீரின் சாயல்.

“அதெல்லாம் பிறவு பேசிக்கலாம். நீ முதலில் வண்டியில ஏறு” என்றான் உணர்ச்சிகளை வெளிக்காட்டாது.

“இல்லை நான் வரமாட்டேன்” எனச் சொன்னாள் வஞ்சி.

“பயராம வா, கொடி நான் தான் இருக்கேன்ல, தக்ஷா படிப்பை நிறுத்தாமல் என்ன செய்ய முடியும்னு பார்கேன். அவளை இந்த வாரம் போயி பார்த்திட்டு வந்து சொல்லுதேன் சரியா?” என அவன் விவரிக்க,

“சரி” எனத் தலையாட்டினாள் வஞ்சி.

“பஸூக்கு தானே காத்திருந்த. பிறவு எதுக்கு இந்த மாரா போற?”

“தைக்கதுக்கு நூல் கண்டு, லேஸ்லாம் வாங்கனும் அதான் டவுனுக்குக் கிளம்பினேன். நீங்க வர்றீயன்னு பார்த்த பிறவு தான் வீட்டுக்கு போலாம்னு” வார்த்தைகளை உள் இழுத்தாள் வஞ்சி.

“சரி வா, நான் கூட்டிட்டு போறேன்” என்றவனின் பார்வை அவள் மீது ரசனையாய் விழுந்தது. பார்வையிலே வசியம் செய்தவனின் வார்த்தையை மீற முடியாமல் அவனுடன் பைக்கில் ஏறிச் சென்றாள் வஞ்சிக்கொடி

பைக்கின் கண்ணாடியில் பிரதிபலித்த வஞ்சியின் முகத்தைப் பார்த்த அந்தக் கணம் வார்த்தைகளின்றிக் காதலால் நிரம்பியது அந்த அழகிய தருணம்.

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்