Loading

ப்ரியம் 7

 

தச்சன்விளை கிராமத்தில் பொழுது விடிந்ததற்குச் சாட்சியாய். காலையிலேயே வியாபாரம் ஏக போகமாக நடந்து கொண்டிருந்தது. கோகிலா காலில் பம்பரம் கட்டி விட்டது போல் அங்கும் இங்கும் சுழன்று வாடிக்கையாளர்கள் கேட்கும் பொருளை சுறுசுறுப்பாய் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

“கோகி அக்கா பத்து ரூவா பால் பாக்கெட்டு, இரண்டு ரூவா ப்ரூ தூளு” எனக் கேட்ட சிறிய பெண்ணுக்கு கேட்ட பொருட்களைக் கொடுத்துவிட்டு மீதி சில்லறையும் கவனமாக எடுத்துக் கொடுத்த கோகிலா. விரைந்து அடுக்களைக்குள் சென்று பொங்கிக் கொண்டிருந்த பாலை கீழே இறக்கி வைத்துவிட்டு அடுப்பை அணைத்தார்.

“காலையில இருந்து ஒரே மண்டை இடியா இருக்கு. கடைய பார்க்கதா? இல்லை இந்த அடுப்பை பார்க்கதா? இவரு இப்போதான் குத்தால அருவியில குளிக்கப் போவாரு” எனப் புலம்பிய படி குளியலறையின் கதவை தட்டினார்.

“மணி அப்பா விரசா வாங்களான். சோத்தை வடிக்கணும்” எனச் சொல்லி விட்டு கரண்டியை வைத்து இன்னொரு அடுப்பில் இருந்த சோற்றைக் கிண்டி விட்டவர் செவியில் விழுந்தது அந்தக் குரல்.

“அத்தை” எனக் கடையின் முன் நின்று அழைத்தாள் வஞ்சிக்கொடி.

“எவடி அவ, என்னைய அத்தை ன்னு கூப்பிடுறது” எனத் திட்டியபடி கடைக்கு வந்தார் கோகிலா.

“உரிமை உள்ளவ தான் கூப்பிடுதேன்.” எனப் புன்னகை முகமாய் நின்றிந்தவளை எரித்து விடுவது போல் பார்த்தார் கோகிலா.

“சாமான் வாங்க வந்தா வாங்கிட்டு இந்தத் திசை பக்கம் பார்க்காமல் போயிடணும். இந்த அத்தை சொத்தைன்னு கூப்பிடுத வேலையெல்லாம் வேண்டாம். என்ன வேணும் சொல்லு” எனக் கண்டிப்பாய் சொன்னார் கோகிலா.

“கார்த்திகா சீயக்கா இரண்டு. கருப்பட்டி இருக்கா?” எனக் கேட்டாள் வஞ்சிக்கொடி.

“இந்தா சீயக்கா” எனச் சரமாய்த் தொங்கிக் கொண்டிருந்த பாக்கெட்டில் இரண்டை கிழித்து முன் வரிசையில் கண்ணாடி ஜாடியில் வைக்கப்பட்டிருந்த கடலை மிட்டாய் மூடியின் மீது டப் என்ற சத்ததுடன் வைத்தார் கோகிலா.

“கருப்பட்டி இல்லை பதினொரு மணிக்கு மேல வா. அவியளை டவுன்ல வாங்கிட்டு வரச் சொல்லுதேன்” எனக் கோகிலா சொல்ல,

“பாட்டி கடுங்காப்பிக் கேட்டாவ” எனப் புலம்பிய படி சீயக்காயை கையில் எடுத்தவள். பத்து ரூபாயை நீட்டினாள் வஞ்சி. அதைக் கோகிலா வாங்கி மீதம் சில்லறையைத் தேடிக் கொண்டிருந்த சமயம்.

“இந்தா கொடி கருப்பட்டி” என அவள்புறம் நீட்டியிருந்தான் மணிகண்டன்.

“ஏலே உனக்கென்ன கிறுக்கா? அது நம்ம வீட்டுக்கு வச்சிருந்ததுலே” எனக் கரைந்தார் கோகிலா.

“நீ போய்ச் சோத்தை வடி நான் வியாபாரத்தைப் பார்த்துக்கிடுதேன்” எனச் சொன்ன மகனை முறைத்தபடி நகர்ந்தார் கோகிலா.

“இவன் அவளைப் பார்த்து பல்ல பல்ல காட்டுறதும். அந்தச் சிறுக்கி இவனைப் பார்த்து குழையாதுமால நாடகம் நடத்துறாவ. இதுக்கு ஒரு முடிவு கட்டுதேன்” எனப் புலம்பி கொண்டே அடுக்களைக்குள் அவர் நுழைய,

“என்னடி என்ன முடிவு கெட்ட போற? அதான் நான் வந்துட்டேன்ல, கடைய நான் பார்த்துகிடுதேன்” எனத் துவாலை மட்டும் கட்டியபடி வந்த சந்திரன் கேட்க,

“போங்க கடைக்கி தானே. நல்லா இடுப்புல துண்டை மட்டும் கெட்டிகிட்டு தொப்பையும் காட்டிகிட்டு போய் நில்லுங்க. அங்கே உங்க மவனும் மருமவளும் காதலிச்சிட்டு இருக்காவ போய்ப் பார்த்திட்டு வாங்க” எனப் பொரிந்து தள்ளினார் கோகிலா.

“நான் அவன்கிட்ட பேசுதேன். நீ ஒன்னும் சொல்லாதடி பாவம் அதுவே அநாதை பிள்ளைடி. நம்மளை மாதிரி தாய் தகப்பன். இருந்திருந்தா அந்தப் பிள்ளை படிச்சு பெரிய ஆளா வந்திருக்கும். ஒத்தை பொட்டை பிள்ளையா அந்தக் கிழவியும் பார்த்துகிட்டு யார்கிட்டையும் கையேந்தாமல். சுயமா நிக்கிற பிள்ளைடி. இது வரைக்கும் ஒரு கடங்காரன் அந்தப் புள்ளை வீட்டு வாசல்ல நின்னு பார்த்திருக்கியா? அவ்வளவு தன் மானத்தோட அந்தப் புள்ளை இந்த ஊர்ல அதுவும் ஒத்தையில காலம் தள்ளிகிட்டு கிடக்கு. அந்தப் புள்ளை மனசு நோவுற மாதரி எதுவும் பேசிபுடாத.” என மகனின் காதலுக்கு ஆதரவாய் பேசிய சந்திரனை முறைத்த கோகிலா.

“யப்பா சாமி! நான் வாயை மூடிகிடுதேன். ஊர் வாயை எப்படி மூடுவீக. இவிய இரண்டு பேரும் சும்மாவா இருக்காவ? ஒட்டிக்கதும் உரசிகிடதுமால இருக்காவ.”

“உனக்கென்ன ஊர் வாயை தானே மூடணும். அடுத்த வெள்ளிக்கிழமை மணிகண்டனுக்கும், வஞ்சிக் கொடிக்கும் பரிசம் போட்டிருவோம்” எனச் சந்திரன் சொன்ன நொடியில் அதிர்ந்து நின்றார் கோகிலா. சந்திரன் அறைக்குள் சென்று உடை மாற்ற சென்று விட, இதை எப்படித் தடுத்து நிறுத்துவது என்ற யோசனையில் முழ்கி போனார் கோகிலா.

வீட்டிற்குள் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் வஞ்சிக் கொடியிடம் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசிக் கொண்டிருந்தான் மணி.

“கொடி!”

“ம்ம் சொல்லுங்க, இங்கணத் தானே நிக்கேன். எத்தனை தடவை தான் கொடி கொடின்னு கூப்பிடுவிய? மேல சொல்லுங்க” என்றாள் வஞ்சி.

“இல்லை எங்க அம்மைகிட்ட அன்னைக்கி என்ன சொன்ன?” என்றவனின் பார்வையில் குறும்பு தெரிந்தது.

“நான் ஒன்னும் சொல்லலையே உங்க அம்மை தான் என்னை ஏசிபுட்டாவ, நானும் வருங்கால மாமியாராச்சேன்னு மன்னிச்சு விட்டுபுட்டேன். இப்போ அது எதுக்கு நினைச்சிட்டு இருக்கிய. பெரியவங்க அப்படித் தான் இருப்பாக. அவிய மனசு இறங்கி வரட்டும்” என அவன் கேட்டதற்குச் சம்மந்தம் இல்லாத பதிலை சொல்லி கருப்பட்டியை கையில் எடுத்துக் கொண்டு நழுவ சென்றவளை,

“ஏய் கொடி! நான் என்ன கேக்குதேன்னு உனக்குத் தெரியும். அதைச் சொல்லிட்டு போ” என்றவனைப் பார்த்து நாணப் புன்னகை சிந்தியவள்.

“அடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டேன் வாத்தியாரே” எனக் கத்திச் சொல்லியவள். ஓலையில் கட்டி வைத்திருந்த தட்டியை திறந்து கொண்டு தன் வீட்டிற்குள் சென்றவள். வாசலில் நின்று அவனைப் பார்த்து சிரித்தாள். கத்திப் பூ  நிற தாவணியில் அவன் விழிகளுக்குக் கொள்ளை அழகாய் தெரிந்த தன்னவளை இமை தட்டாமல் பார்த்தவன்.

“அடியே கொடி.. ஒருநாள் என்கிட்ட சொல்லி தான் ஆகணும்”

“என்னத்தப்பா சொல்லணும்” என்றபடி கடைக்குள் நுழைந்த சந்திரன், வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்தார்.

“அய்யோ! மாமா வந்துட்டாவ” என வஞ்சி அலறி அடித்து வீட்டிற்குள் நுழைந்திருந்தாள்.

“அது ஒன்னும் இல்லைப்பா, காலேஜ் கிளம்பணும் நேரமாகிடுச்சு” என வாய்க்கு வந்ததைத் தந்தையிடம் சொன்னான்.

“லுங்கியோட கடையில வந்து உட்கார்ந்தால் நேரம் தான் ஆகும்.” எனச் சொன்னவர் கடையில் போட்டிருந்த கட்டை நாற்காலியில்  அமரவும் புரிந்து கொண்டான் மணிகண்டன்.

சந்திரன் தன்னிடம் எதையோ பேச நினைக்கிறார் என்று. அதை ஊர்ஜிதம் செய்தவனாய்,

“அப்பா!” என அழைத்தான்.

“இதில உட்காருப்பா, என அங்கிருந்த சிறிய நாற்காலியை கை காட்டினார் சந்திரன். தந்தை சொல்லை தட்டாத பிள்ளைப் போல் அதில் அமர்ந்தான் மணி.

“இதோ பாரு மணி, உன் அம்மை இருக்காளே ஒரு வாரமா என் உயிரை வாங்கிட்டு கிடக்கா.”

“வஞ்சிக் கொடி விசயம் தானேபா” என முந்திக் கொண்டு கேட்டான்.

“ஆமாம் மணி” என்றார்.

“எனக்கு எந்த அவசரமும் இல்லைப்பா. தக்ஷா கல்யாணத்துக்குப் பிறவு நான் பண்ணிகிடுதேன். கொடியும் எனக்காகக் காத்திருப்பா அப்பா” என உறுதியாய்ச் சொன்னான்.

“எல்லாம் சரிதான். ஆனால் நீ அந்தப் புள்ளைய நினைச்சு பார்த்தியா.? ஊரே உன்னையும் வஞ்சியையும் வச்சி தப்பா பேசுது. நாளைக்கி நம்ம வீட்டுக்கு வரப் போற பிள்ளை. ஊர் வாயில விழுந்துகிட்டு கிடக்கு. உன் அம்மையும் சேர்த்து தான் சொல்லுதேன்”

“இப்போ என்னப்பா செய்யுறது? நீங்க என்ன சொன்னாலும் செய்தேன். அவளை மறக்க மட்டும் சொல்லிடாதிய. அவளை எனக்கு ரொம்பப் பிடிக்கும்பா” என முதல் முறை தன் தந்தையிடம் மனம் திறந்து அவன் சொல்லியிருந்தான் மணிகண்டன்.

“அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை உனக்கும் வஞ்சிக் கொடிக்கும் பரிசம் போட்டு பட்டு கட்டிடலாமா?” என மகனின் முகம் பார்த்து கேட்க, பட்டென எழுந்தவன்.

“எதுக்கு இவ்வளவு அவசரப்படுறீக? தங்கச்சி கல்யாணம் முடியாமல் எனக்குக் கல்யாணம் செய்ய விருப்பம் இல்லைப்பா.” எனச் சொன்னவனை முறைத்தபடி அமர்ந்திருந்தார் சந்திரன். அனைத்தையும் மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த கோகிலாவிற்கு மணி பேசுவது ஆனந்தத்தை அளித்தது.

தங்கையின் திருமணத்தை அவன் முன் நிறுத்தி பேசுவது தான் அதற்குக் காரணம். தக்ஷா சென்னையில் தங்கி படிப்பது பிடிக்காமல் தான் அவளைக் கரை சேர்த்தாக வேண்டும் என நினைக்கிறார் கோகிலா. அவளும் காதல் என்று வந்து நின்று விட்டால் என்ன செய்வதென்ற பயமும் பதற்றமும் அவருக்கு இருக்கத் தான் செய்தது.

“இதோ பாரு மணி, ஒன்னு நீ அந்தப் பிள்ளையைக் கல்யாணம் கட்டிக்க இல்லை தங்கச்சி கல்யாணத்தை முடிச்சிட்டு தான் உன் வாழ்க்கையைப் பத்தி யோசிப்பன்னா, தக்ஷாவுக்கு முதலில் மாப்பிள்ளையைப் பாரு” எனச் சொன்னவர் கோபமாய் எழ,

“அப்பா அவ படிக்கான்னு தெரிஞ்சு தான் பேசுறியளா?”

“எல்லாம் தெரிஞ்சு தான் பேசுதேன். ஊர்ல நாக்கு மேல பல்லு போட்டு பேசுறானுவ. நீ லவ் பண்ணிக்கோ என்னமோ செஞ்சிக்கோ. ஒரு பொட்டை புள்ளைய பத்தி ஊர்ல உள்ள சல்லி பயலுவ எல்லாம் பேசிட்டு திரியானுவ. உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு அந்தப் புள்ளை ஊர் வாயில விழுந்திட்டு கிடக்கு. அந்தப் பிள்ளையை நீ உண்மையா காதலிச்சிருந்தீனா. நான் சொல்லுறது உன் மதியில விளங்கும்” எனச் சொன்னவர்,

“டவுன் வரைக்கும் போயிட்டு வாரேன் கோகி” என வீட்டில் இருந்து தன் டிவிஎஸ் பிஃப்டியை கிளப்பியிருந்தார் சந்திரன்.

மணிகண்டன் தான் அப்படியே சிலையாய் நின்றிருந்தான். அவர் கடைசியாய் சொல்லி சென்ற வார்த்தைகளில் அவன் மனம் காற்றழுத்த தாழ்வு நிலைப் போல ஒரே இடத்தில் மையம் கொண்டது.

“என்னலே மணி உங்க அப்பா இந்த எதிர் வீட்டு சிறுக்கிய வேண்டாம்னு சொல்லுவாருன்னு பார்த்தா. அவளுக்கு இப்படி வக்காலத்து வாங்கிட்டு போறாரு. யார் என்ன சொல்லிருப்பாவ. உனக்கு ஏதும் தெரியுமா?”

“ம்மா சும்மா இருந்துக்க நானே என்ன செய்யதுன்னு தெரியாம மண்டை காஞ்சு போய் இருக்கேன்” எனக் கோபமாய்ப் பேசினான் மணி.

“நான் ஆயிரம் தடவ கிளி பிள்ளைக்கி சொன்ன மாதிரி சொன்னேன் அந்தக் கழுதை படிச்சதெல்லாம் போதும்னு. இப்ப படிப்ப பாதியில நிறுத்தி அவளைக் கெட்டி கொடுக்கப் போறீய. காலேஜுக்கு கட்டின பீஸ் தண்டம் தானே” எனப் பணத்தை முதன்மையாய் வைத்து அவர் பேச,

“அதெல்லாம் பார்த்துகிடுதேன். நீங்க கவலை பட வேண்டாம்” எனக் கோபமாய்ச் சொல்லி அங்கிருந்து அகன்றிருந்தான் மணி.

*******

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் வேலன் பல்கலைக்கழகத்தில் என் எஸ் எஸ் கேம்ப் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் இன்று ஆங்கிலப் பிரிவை சேர்ந்த மாணவ மாணவிகள், சுய ஆர்வம் கொண்ட மாணவ மாணவிகளை அழைத்துச் சென்று சேவை செய்யச் செல்வார்கள்.

அப்படித் தான் அன்றும் ஆங்கிலத் துறையைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வமாய்த் தங்கள் பெயர்களைக் கொடுத்துக் கொண்டிருக்க, கீர்த்தி ஒவ்வொருவரின் பெயரையும். கேட்டு எழுதிக் கொண்டிருந்தாள்.

“தக்ஷா என்னடி வாடி நம்மளும் ராலில (rally) கலந்துப்போம்” என வம்படியாய் இழுத்து வந்தாள்.

“நான் வரலைடி இதுக்கு ஹாஸ்டல்ல போய் ஒரு குட்டி தூக்கம் போடலாம்” என்றாள் அவள்.

“ஆமா உன்னைய ஹாஸ்டலுக்குப் போய்த் தூங்க விடுவாய்ங்க. அங்கே க்ளாஸ் எடுக்க ரெடி இருக்காங்கடி போயட்ரி மேம் வந்து உட்கார்ந்திருக்காங்க. இரண்டு ஹவர் கட் அடிக்க நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு ஒழுங்கா வாடி” எனத் தக்ஷாவை சம்மதிக்க வைக்க முயற்சித்ததாள் யோகா.

“போயட்ரீ க்ளாஸ்லாம் நான் கட் பண்ணமாட்டேன்” என அவள் வகுப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“சரி போ போ, அடுத்த க்ளாஸ் ஹிட்லரோடது குதூகலமா இருக்கும். நான் கீர்த்திக் கூடச் சேர்ந்து ராலி போறேன்”

“என்னடி யோகா சொல்லுற. ஹிட்லர் கிளாஸா?அப்போ நானும் வர்றேன்”எனச் சம்மதிருந்தாள் தக்ஷா. திருநீலகண்டனின் மீது அவளுக்கு அப்படியொரு பயம்.

“அடியே கீர்த்தி எழுதிக்கோடி எங்க பேரை, தக்ஷன்யா, யோகஸ்ரீ ஸ்பெல்லிங் மிஸ்டெக் விடாம எழுதுடி என் சிப்ஸூ” எனத் திமிராய் சொன்னாள் யோகா.

“ஏய் யோகா சும்மா இருடி எல்லாரும் நம்மளை தான் பார்க்கிறாங்க கொஞ்சம் மெதுவா தான் பேசேன்” எனக் கண்டிப்புடன் அவள் மீதுள்ள அக்கறையிலும் சொன்னாள் தக்ஷா.

“அதெல்லாம் முடியாது. ஹிட்லர் க்ளாஸை கட் அடிச்சுட்டேன். இனி இந்த யோகாவை யாரலையும் கையில பிடிக்க முடியாது. ஆடிக்கிட்டே இருப்பேன்” எனச் சந்தோசத்தில் குதித்தாள் யோகா.

“கீர்த்தி நேம் நோட் பண்ணிக்கோ” என நகரச் சென்றவளுக்குத் திடுக்கென எதோ தோன்றியவளாய் யோகாவின் காதுகளில் கிசுகிசுத்தாள் தக்ஷா.

“அட ஆமால தக்ஷா, ஹிட்லர் க்ளாஸை கீர்த்தி மிஸ் பண்ணுறதுக்கு வாய்ப்பே இல்லையே. இதோ புலன் விசாரணையைத் தொடங்கிடுவோம்”

“இந்தா புள்ள கீர்த்தி!” என அவள் அருகில் நெருங்கியிருந்தாள் யோகா. அவளைப் பின் தொடர்ந்து சென்றாள் தக்ஷா.

“ஏய் வொர்க்ல இருக்கேன்னு தெரியுதுல டிஸ்டர்ப் பண்ணாமல் போங்கடி இரண்டு பேரும்” என எரிந்து விழுந்தாள் கீர்த்தி.

“கீர்த்திக் கோவப்படாதே! இன்னைக்கி நம்ம திருநீலகண்டன் சார் க்ளாஸ் இருக்கே அதைக் கட் பண்ணிட்டா ராலி போற” எனத் தக்ஷா பொறுமையாய் கேட்க,

“ஓ இது தான் விசயமா? சார் தான் கிளாஸுக்கு வர மாட்டாரே” எனப் புன்னகை முகமாய்ச் சொன்னாள் கீர்த்தி.

“ஏன்டி சார் க்ளாஸுக்கு போகமாட்டாரு?” யோகா அவசரமாய்க் கேட்டாள்.

“உங்களுக்கு விசயமே தெரியாதா? சார் நம்ம கூடவே தான் வருவாரு” என இமை தட்டி சிரித்தாள் கீர்த்தி.

இந்த முறை தக்ஷா யோகாவை முறைத்துக் கொண்டிருந்தாள்.

“இதுக்குத் தான் போயட்ரீ க்ளாஸுக்கு போகலாம்ன்னு சொன்னேன் கேட்டியாடி யோகா? இப்போ என்னடி பண்ணுறது?” கோபமாகவும் அதே சமயம் பயத்துடன் கேட்டாள் தக்ஷா.

“நம்ம கீர்த்தித் தானே பேர் அடிக்கச் சொன்ன அடிச்சிடப் போறா”

“அடியே கீர்த்தி எங்க பேரை அடிச்சிடேன்” என உரிமையாய் கேட்ட யோகாவை முறைத்தபடிச் சொன்னாள் முடியாதென்று.

“செத்தோம் போ ஏற்கனவே நமக்கும் அவருக்கு வாய்கா தகராறு. இதில வாலண்டியரா, வாலண்டியர்ஸ் கூப்பிட்டாங்கன்னு வந்து மாட்ட கூடாத இடத்தில வந்து மாட்டிக்கிட்டோம் பாரு” எனப் புலம்பி தள்ளினாள் தக்ஷா.

“புலம்பி தொலையாதே பக்கி, இந்தக் கீர்த்திகிட்ட பேசுறேன்”

“கீர்த்தி ப்ளீஸ்டி” எனக் கெஞ்சலாய் ஒலித்த யோகாவின் குரல் கேட்டு அவள் புறம் திரும்பியவள்.

“இரண்டு பேரும் விளையாடிகிட்டு இருக்கீங்களா? திருச் சாருக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? நீங்க இரண்டு பேரும் ரெஸ்பான்ஸிபிளா இல்லாததுக்கு நானும் அவர்கிட்ட திட்டு வாங்க தயாரா இல்லை. இந்த லிஸ்ட்ல இருந்து எந்தப் பேரையும் அழிக்கவும் முடியாது திருத்தவும் முடியாது. அப்படி அடிச்சு எழுதினால் திருச் சாருக்கு பிடிக்காது. நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க சார் தான் என் எஸ் எஸ்க்கு இன்சார்ஜ் தெரியுமா. இந்த நேம் லிஸ்ட் வச்சி தான் பார்டிசிபேசன் சர்டிஃபிகேட் தருவாங்க. நேம் இனிஷியல் எல்லாமே பராப்பரா இருக்கனும் திருச் சார் சொல்லியிருக்காரு” எனக் கீர்த்திப் பேசிக் கொண்டிருந்த போதே

சுற்றி இருந்த மாணவர்கள் அமைதியாக ஆரம்பித்தார்கள். அந்த அமைதி ஏதோ ஒன்றை எதிர்பார்த்தது போலக் கனமாக அந்த இடத்தில் பரவியது. புயலுக்கு முன் அமைதி என்பதற்கு இணங்க. அந்த அமைதியை கிழித்துக் கொண்டு கேட்டது அந்த ஷு காலடி சத்தம்.

அனைவரின் பார்வையும் ஒரே திசையை நோக்கி திரும்பியதை கவனித்தவள், மெதுவாக அந்தத் திசையை நோக்கி திரும்பினாள் தக்ஷா.

அவள் யாரை நினைத்து இவ்வளவு நேரம் பயந்து நடுங்கி கொண்டிருந்தாளோ? அவனே அவளின் எண்ணத்திற்கு வர்ணம் சேர்த்தது போல வீரநடையிட்டு வந்தவனைப் பார்த்து. மாணவர்கள் விலகி வழிவிட்டதோடு. காலை வணக்கம் சொல்ல அவன் தலையசைத்தபடி வந்தவனைப் பார்த்தவளுக்குக் கேப் டிரைவராகத் தன்னிடம் அறிமுகமான திருவின் நினைவுகள் பெண்ணவளின் மனதை உரசிச் செல்ல, அவனைப் பார்த்தபடி,

“திரு” என வாய்விட்டு உளறிய தக்ஷாவை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி.

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்