
ப்ரியம் 6
திருமுருகனை பார்த்த நொடியில் விஷ்வரூபமாய்த் தோன்றி மறைந்தது திருநீலகண்டனின் உருவம். கண்டிப்பான பார்வையும். அவனின் மிரட்டும் உடல் மொழியையும் திருமுருகனிடம் இருக்கிறதா என ஆராய்ச்சியாய் பார்த்தாள் தக்ஷா.
யோகாவோ திருநீலகண்டனே வருவதைப் போல் நினைத்தவளின் கால்கள் கிடு கிடு வென நடுங்க ஆரம்பித்தது.
“ஆத்தாடி ஆத்தா! இதென்னடி ஜெராக்ஸ் அடிச்ச மாதிரி இருக்காய்ங்க இரண்டு பேரும். நீ சொன்னப்ப கூட நான் நம்பலைடி. பார்க்க நம்ம ஹிட்லர் மாதிரியே அச்சு பிசங்காமல் இருக்காரேடி. கீர்த்தி மட்டும் இப்போ இருந்திருக்கணும், உன் ஆள்கிட்ட ஒரு அப்ளிகேசனை போட்டிருப்பா” என யோகா உளறிக் கொண்டிருக்க,
“அடியே! ஆளா? ஃப்ரெண்ட்டு டி. நான் சென்னைக்கு வந்ததும் என்னைக் கருணையோட பார்த்த முதல் முகம் இவர் தான். முதல் நண்பனும் கூட” என அவள் சொல்லிக் கொண்டிருந்த போதே,
“ஹாய் திரு” என கையசைத்தாள் தக்ஷா. அவனும் கையை அசைத்தபடி அவளை நெருங்கி இருந்தான்.
“மேடம் சாரி மேடம். எதுக்கு மேடம் அண்ணன்கிட்ட சொன்னீங்க” என அலைப்பேசியை அவள்புறம் நீட்டினான்.
“அய்யோ திரு! இரண்டு பேரும் ஒரே மாதிரி இருந்ததால வந்த கன்ஃப்யூசன். நான் வேணும்னு போய்ச் சொல்லை” எனப் பேசியவள் தன்னுடைய மொபைல் போனை கையில் வாங்கியிருந்தாள்.
“அட போங்க மேடம் வீட்டில பெரிய கலவரமே பண்ணிட்டான் அவன். உங்க போன் பின்னாடி சீட்ல கிடந்துச்சு அவன் தான் எடுத்துக் கொடுத்தான்”
“அவர் உங்க ட்வின் பிரதரா?” என ஆர்வமாய்க் கேட்டாள் தக்ஷா.
“ஆமா மேடம்!” என்றான் அவன்.
“நேத்தே சொன்னேன்ல மேடம் சொல்லாதீங்க திரு. என்னோட பேர் தக்ஷா. இவ என்னோட ஃப்ரெண்ட் யோகா”எனத் தன் பெயரை மீண்டும் சொல்லி அவன் மனதில் பதிய வைத்தாள். அதோடு தோழி யோகாவையும் அவனிடம் அறிமுகம் செய்தாள்.
“ஹாய் திருமுருகன்! நான் யோகஸ்ரீ” என யோகா சொல்ல அவனும் கையசைத்து வைத்தான்.
“சரிங்க தக்ஷா நான் கிளம்புறேன் வேலை இருக்கு” எனக் கிளம்ப முற்பட்டவனை,
“ஒரு நிமிசம்!” என அவள் தடுத்து நிறுத்தியிருந்தாள்.
“என்ன மேடம்?” என்றவனைப் பார்த்து முறைத்தவள்.,
“நீ எனக்கு ஃப்ரெண்டு தானே? எத்தனை தடவ சொல்லிருக்கேன் என்னைத் தக்ஷான்னு கூப்பிடுன்னு” என அவனை ஒருமையில் விளித்தாள் நட்பாய்.
“சரி சொல்லுங்க தக்ஷா” என்றான்.
“இல்லை நீங்கன்னு நினைச்சு. உங்க அண்ணன் கிட்ட வம்பு வளர்த்திட்டோம். நான் சாரி கேட்டேன்னு கொஞ்சம் சொல்றீங்களா?” எனத் தக்ஷா சொல்லிக் கொண்டிருந்த போதே,
“அதென்னடி நீ மட்டும் சாரி கேட்டு தப்பிச்சிகலாம்ன்னு பாக்குறீயே. நீயாவது சும்மா தான் நின்ன, நான் தான் அவர்கிட்ட லந்தை கொடுத்துபுட்டேன். இதோ பாருங்க தலை யோகஸ்ரீயும் மன்னிப்பு கேட்டானு சேர்த்து சொல்லிபுடுக” என்றாள் யோகா.
“நீங்க இரண்டு பேரும் அண்ணாகிட்ட, நேரடியா சொல்லிடுங்களேன்” என்றான் திருமுருகன் இருவரையும் பார்த்தபடி,
“அதுதானே முடியாது, எப்போதும் விரைப்பா முறைச்சிகிட்டே இருக்காரு. பேசவே பயமா இருக்கு இதில் எங்க போயி சாரி கேட்க” எனப் புலம்பி தள்ளினாள் தக்ஷா.
“சாரி! நானும் அவனும் பேசி மூணு வருசம் ஆச்சு. எது சொல்றதா இருந்தாலும் அம்மா மூலமா தான் என்கிட்ட சொல்லுவான். அப்படித் தான் இந்தப் போன் விசயமும்” என அவன் சொல்ல அதற்கு மேல் திருநீலகண்டனை பற்றித் தக்ஷா பேசவில்லை.
“அப்போ நான் கிளம்பலாமா?” என அவன் கேட்க,
“ஆமா! நீங்க போன் கொடுக்க வந்தீங்களா இல்லை. அவங்க இரண்டு பேரையும் பிக்கப் பண்ண வந்தீங்களா” என அவள் கேட்டுக் கொண்டிருந்த போதே சரண்யாவையும்,திவ்யாவையும் நோட்டமிட்டாள் தக்ஷா. இருவரும் வேறு காரில் ஏறி செல்வதைப் பார்த்த போதே. அவளின் அலைப்பேசியைக் கொடுக்கத் தான் இவன் வந்திருக்கிறான் என அவள் தெரிந்துக் கொண்டாள்.
“இல்லை, போன் கொடுக்கத் தான் வந்தேன்” என அவன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாகவும். சிடு சிடுவென எரிந்து விழாமல் பேசியதே, திருநீலகண்டன் வேறு. இவன் வேறு எனப் புரிந்துக் கொண்டாள் பாவை.
இருள் சூழ்ந்த இரவின் அமைதியை கலைக்கும் வண்ணம். இடி முழங்க பட்டெனப் பயந்தவள் ஆவெனக் கத்தியிருந்தாள்.
“சரி மழை வர மாதிரி இருக்கு. இரண்டு பேரும் கிளம்புங்க. இங்கே ரொம்ப நேரம் நிக்காதீங்க சேஃப் இல்லை” என அவன் அக்கறையுடன் பேசிய வார்த்தைகளால் அவன் மீது அவளுக்கு மரியாதை ஏற்பட்டது. விழிகள் அகலாமல் அவனையே பார்த்து நின்றவள்.
“திரு உங்க போன் நம்பர் கொடுங்களேன்”
“எதுக்கு அதெல்லாம் வேண்டாம் தக்ஷா அண்ணனுக்குத் தெரிஞ்சா அவ்வளவு தான்.”
“இல்லை சென்னையில எனக்கு யாரும் தெரியாது. உங்க நம்பர் கொடுத்தீங்கனா கேப் புக் பண்ண ஈசியா இருக்கும். கொஞ்சம் சேஃபாவும் இருக்கும் ப்ளீஸ்” என அவள் கேட்க அவனின் அலைப்பேசி எண்களைக் கொடுத்து விட்டு நகர்ந்தான்.
அன்று போலவே இன்றும் அவள் கேட்டை தாண்டி உள்ளே செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்தான். இந்த முறை தக்ஷாவும் அவனைத் திரும்பி பார்த்தபடியே சென்றாள்.
அவளுக்குள் நிகழ்ந்த இம்மாற்றத்திற்கு நட்பா? காதலா? எனப் பெயரிடவெல்லாம் அவளுக்குத் தெரியவில்லை.
அவளுக்குத் தெரிந்ததெல்லாம். தன் குடும்பமும் தன் வீடும் தான். இளங்கலை முடியும் வரையிலும் பெண்கள் கல்லூரியில் படித்துப் பழக்கபட்டவள். முதல் முதலாய் பேசிய ஆண்மகனும் அவன் தான். முதல் முதலாய் நண்பனாய் ஏற்றுக்கொண்டதும் அவனைத் தான்.
“திருச் சோ ஸ்வீட்ல டீ யோகா”
“ஆமா! ஆமா பேச்சிலையே சக்கரையா இனிக்கிறாரே” எனப் பேசியபடி தங்கள் ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
“நான் கூடப் போனை தொலைச்சதில இருந்து அது என்கிட்ட வந்து சேரும்ன்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தேன்டி யோகா. ஜெனின்யூனா வந்து கொடுத்தாரு பார்த்தியா மனுசன் அங்க நின்னுட்டாரு”
“எங்கே நின்னாரு உன் ஹார்ட்லையே” என யோகா கேலியாய் கேட்டுவிட்டாள்.
“என்னது லவ்வா? எங்க அம்மாவை பத்தி உனக்குத் தெரியாதுடி என்னைக் கொண்ணு குழி தோண்டி புதைச்சிருவாங்க.நானெல்லாம் சென்னைக்குப் படிக்க வருவேன்னு நினைச்சுக் கூடப் பார்க்கலை. எதோ எங்க அண்ணா தான் கஸ்டபட்டு இந்தக் காலேஜ்ல சேர்த்து விட்டுச்சு. லவ்வுன்னு போய் நின்னேன்னு வையேன் அவ்வளவு தான் நான் செத்தேன்” எனப் புலம்பி தள்ளினாள் தக்ஷா.
“அடியே தக்ஷா! இப்போ நான் உங்க வீட்டை பத்தி குல வரலாறு கேட்டேனா? திருவை உனக்குப் பிடிச்சிருக்கு தானே”
“ஹே சீ போடி யோகா. திரு என்னோட ப்ரெண்ட்” எனச் சொன்னவள் அறையைத் திறந்துக்கொண்டு பொத்தெனத் தன் படுக்கையில் விழுந்தாள். அலைப்பேசியில் திரு என்ற பெயர் போட்டுப் பதிந்திருந்த எண்ணுக்கு
“ஹாய் திருத் திஸ் இஸ் தக்ஷா” என வாட்ஸ் ஆப் மெசேஜை தட்டிவிட்டவள். அவனது டிபியை ஆராய்ந்தாள்.
கருப்பு நிற சட்டை அணிந்திருந்தவனின் நெற்றியில் கீற்றாய் திருநீறும் குங்குமமும் சேர்ந்திருக்க. புன்னகை முகமாய் இருந்தவனை நிழல்படமாய் இருந்தவனைப் பார்த்து தானும் புன்னகைத்தாள் தக்ஷா.
“அடியே தூத்துக்குடிகாரி இதெல்லாம் சரியில்லைடி. ஆயிரம் தான் இருந்தாலும் அவரு ஹிட்லர் தம்பி. ஹிட்லருக்கு இருக்கக் குணம் கொஞ்சமாச்சு திருகிட்டயும் இருக்கும்டியே” என எச்சரிக்கையாய் யோகா சொன்னதைச் சிரிப்புடன் கடந்தாள் தக்ஷா.
அதே சமயம் காரை இயக்கிக் கொண்டிருந்தவனின் அலைப்பேசியில் தக்ஷு என்ற பெயரில் இருந்து மெசேஜ் வந்திருப்பதாய். அலைப்பேசி ஒளிர , ஸ்டேரிங்கில் கை வைத்தபடி சாலையைத் தீவிரமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தவனின். இதழும் விழியும் ஒரே நேரத்தில் சிரித்தது.
“தக்ஷூ” அவளின் பெயரை செல்லமாய் உதிர்த்தது அவனின் செவ்விதழ்கள்.
அலைப்பேசி தொடர்ந்து மின்னி மின்னி மறைந்து யாரோ அழைப்பதை உறுதிபடுத்த. காரை சாலையோரம் நிறுத்தினான் திரு. அலைப்பேசியைக் கையில் எடுத்தான் தாய் பூரணி தான் அழைத்திருந்தார்.
அழைப்பை ஏற்றுப் பதில் ஏதும் பேசாமல் அமைதி காத்திருந்தான் அவன்.
“டேய் திரு எங்கேடா இருக்க? இங்கே முருகன் முழிச்சுட்டான் காரை எங்கேன்னு கேட்கிறான்” எனக் கேட்டார் பூரணி.
“வீட்டுக்கு தான் வந்திட்டு இருக்கேன்” எனப் பதிலை கொடுத்தவன் திருமுருகன் அல்ல திருநீலகண்டன் தான்.
“ஏன்டா திரு இப்படிப் பண்ணுற அவனோட காரை எடுத்தால் அவனுக்குப் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியும் தானே” என அவர் கோபமாய்ப் பேசினார்.
“வேலைக்கி போகாமல் கார் வாங்கி ஓட்ட போறேன்னு சொன்னவன், எப்ப பார்த்தாலும் குடிச்சுட்டு தூங்கிகிட்டே இருக்கான் கார் டியூவை யார் கட்டுறது. என்னோட சம்பளம் வீட்டு செலவுக்கே சரியா போயிடுது, அவனோட கார் டியூவும் நாளைக்கி என் தலையில தானே வந்து விழும். நாளைக்கி என்னை நம்பி வர்றவளுக்குக் கடனை சேர்த்து வைக்கச் சொல்றீங்களா?” எனப் பொரிந்து தள்ளினான் திருநீலகண்டன்.
“அதுகில்லைடா அவன் கோபப்படுறான். ஏற்கனவே இரண்டு பேரும் பேசாமல் இருக்கீங்க” எனச் சொல்ல வந்ததைச் சொல்லாமல் தயங்கினார்.
“அவன் செஞ்ச காரியத்தை நீங்க இவ்வளவு சீக்கிரத்தில் மறந்துட்டீங்க அப்படித் தானேமா” எனக் கேட்டவனின் குரல் கரகரகத்தது. அன்று நடந்ததை இன்று வரை மறக்க முடியாமல் தான் திரு முருகனிடம் பேசாமல் இருக்கிறான்.
அன்று அவன் பேராசிரியராகக் கல்லூரியில் சேர்ந்திருந்த முதல் நாள். அவனுடைய கனவே இந்த வேலை தான். அவனின் தந்தை முத்துக்குமரன் ஆடிட்டராக இருந்தார். அவனையும் ஆடிட்டராக்க பெரும் முயற்சி எடுத்தார். ஆனால் திருநீலகண்டன் பிடித்த பிடியில் உறுதியாக இருந்து தனக்குப் பிடித்த வேலையில் சேர்ந்தும் விட்டான்.
அன்றைய பணிகளை முடித்துவிட்டு தன் தந்தையை அழைத்து வருவதற்காக அவரின் ஆடிட்டர் ஆபிஸூக்குச் சென்றிருந்தான்.
மகன் முதல் நாள் வேலைக்குச் சென்று வந்ததில் அவ்வளவு பூரிப்பு முத்துக்குமரனுக்கு. மகனை பார்த்தவுடன் கட்டி அணைத்துக் கொண்டார் அவர்.
“நினைச்சதை சாதிச்சிட்டபா ரொம்பச் சந்தோசம்” என அவர் நெகிழ்வாய்க் கூறினார்.
“சரி வாங்கப்பா வீட்டுக்குப் போகலாம்” எனப் பைக்கை கிளப்பினான் திருநீலகண்டன். அவரும் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டார்.
“உன்னை மாதிரியே இந்தத் திருமுருகனும் ஒரு வேலையை எடுத்திட்டா போதும் திரு. நான் ரெஸ்ட் எடுத்துகுவேன்” என்றார் அவர்.
“அவன் எங்கப்பா நான் சொல்லுற எதையும் காதில் வாங்க மாட்டேன்றான். ஏகப்பட்ட அரியர்ஸ் வச்சிருக்கான். அவன் சேர்க்கையே சரியில்லைப்பா” திருநீலகண்டன் பதில் கொடுத்தான்.
“அதெல்லாம் இருக்கட்டும் அடுத்து என்ன கல்யாணம் தானே” எனச் சிரித்தபடி கேட்டார் முத்துக்குமரன்.
“நான் சொன்னால் திட்ட மாட்டீங்களே” என அவன் முகம் சிவக்க தந்தையிடம் கேட்டான்
“அதானே என்ன காதலா? யாருடா அந்தப் பொண்ணு. எல்லாப் பசங்களும் காதலியை பத்தி முதலில் அம்மாகிட்ட தான் சொல்லுவாங்க, நீ என்னடா என்கிட்ட சொல்லுற”
“ப்பா! எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்பா, நீ தான் என்னோட இன்ஸ்பிரேசனே, என்னைக்காவது என்னைப் பையன் மாதிரி நடத்திருக்கியா? இல்லை நான் தான் எதாவது உன்கிட்ட மறைச்சிருக்கேனா?”
“சரி சரி ஓவரா ஐஸ் வைக்காமல் விசயத்தைச் சொல்லு. பொண்ணு பேர் என்னடா” என ஆர்வமாய்க் கேட்டார்.
“தக்ஷன்யா அப்பா” எனத் தன்னவளின் பெயரை தன் தந்தையிடம் முதல் முதலில் சொன்னான்.
“அப்போ மருமகளை ரெடி பண்ணிட்டேன், கல்யாண வேலையைப் பாருங்கன்னு சொல்றீயாடா திரு?” எனப் புன்னகை முகமாய்க் கேட்டவரின் முகத்தை ரியர் வியூ கண்ணாடியில் பார்த்தவனுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் கடைசியாகப் பார்த்த தந்தையின் புன்னகை முகம் அது என. தந்தையின் சிரிப்பை பார்த்து தானும் சிரித்தான்.
“அப்படியெல்லாம் இல்லைப்பா நான் இன்னும் அந்தப் பொண்ணுகிட்டையே சொல்லலைப்பா”
“ஓ ஒன் சைட் லவ்வா? அப்போ அவ்வளவு தான்” என நண்பனை போல் கேலி செய்தார்.
“தக்ஷூ இப்போ தான் டிகிரி படிச்சிட்டு இருக்காப்பா”
” முதலில் தக்ஷன்யானு சொன்ன இப்போ தக்ஷூனு சொல்ற செல்லப் பேர் வச்சு கூப்பிடுற அளவுக்குப் பழக்கமா?? எங்கே பார்த்த எப்படிப் பழகின?” எனத் தன் மகனுக்குக் காதல் எப்போது வந்தது எனத் தெரிந்து கொள்ள அவருக்கு அப்படியொரு ஆர்வம்.
“அதெல்லாம் ஒரு நாள் நிதானமா சொல்றேன்ப்பா. இப்போ வீட்டுக்கு போகலாமா?”
“என்னவோ சொல்ற, உன் காதலுக்கு அப்பா எப்போதும் பச்சைக் கொடி தான் காட்டுவேன் கவலை படாதே அதுக்கு முன்னாடி அந்தப் பொண்ணுகிட்ட க்ரீன் சிக்னல் வாங்கிடு” எனத் தன் மகனின் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டியவர்.
“திரு ஒரு நிமிசம் வண்டியை நிறுத்துப்பா. ஒரு மாதிரி வேர்க்குதுப்பா” எனச் சொன்னவுடன் வண்டியை நிறுத்தி இருந்தான்.
அடுத்த நொடியில், முத்துக்குமரனின் உடல் மெதுவாகத் திருவின் முதுகில் சாய்ந்தது.
திருவுக்கு என்ன நடக்கிறது எனப் புரிந்து கொள்ள முடியவில்லை
“அப்பா! நேரா உட்காருங்கப்பா…” அவன் சிரிப்புடன் சொன்னான் தந்தையிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
திரு விரைவாக இறங்கி அவரைத் தாங்கி பிடித்தான். முத்துக்குமரனின் தலை அவன் தோளில் சரிந்தது.
“அப்பா…?” என அந்தச் சாலையில் கத்தியிருந்தான்.
“அப்பா என்னாச்சு ப்பா எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க கண்ணைத் திறந்து பாருப்பா” இந்த முறை அவனின் குரல் மெலிந்து ஒலித்தது.
அவரின் கையை மெல்ல பிடித்தான் அவரின் உடல் குளிர்ந்திருந்தது.
“அப்பா! அப்பா! என்னப்பா இது?” தன் தந்தையை மெதுவாகக் குலுக்கியான்.ஆனால் அவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
சாலையில் வாகனங்கள் தொடர்ந்து சென்றுகொண்டே இருந்தன.ஹார்ன் சத்தம் ஒருபுறம், மக்களின் பேச்சுச் சத்தங்கள் எதுவும் நிற்கவில்லை
திருவின் உலகம் மட்டும் ஸ்தம்பித்து அங்கேயே நின்றது.
“அப்பா! பேசுங்கப்பா! ”அவன் குரல் உடைந்தது. அவன் மடியில் சாய்ந்தபடி உயிரை விட்டிருந்தார் முத்துக்குமரன்.
அந்தத் தார் சாலையின் வாகன நெரிசலுக்கு நடுவே என்ன செய்வதென்று தெரியாமல் திக்கற்று நின்றவன். முதலில் அழைப்பெடுத்தது என்னவோ தன் தம்பி திருமுருகனுக்குத் தான்.
அவன் குடித்துவிட்டு நண்பர்களுடன் இருப்பதாய் தகவல் மட்டுமே கிடைத்தது. அதன்பின் ஆம்புலன்ஸூக்கு அழைப்பு விடுத்து தன் தந்தையை மருத்துவமனையில் சேர்த்திருந்தான். அவர் உயிரோடு இருப்பதாய் நம்பிக் கொண்டிருந்தவனிடம் அவர் இறந்து விட்டதாய் மருத்துவர் வந்து தகவல் சொல்ல, சுக்கு நூறாய் இதயம் கிழிக்கபட்டதைப் போல் அவன் உணர்ந்தான்.
தந்தையின் இறுதி காரியங்களை ஒற்றை மகனாய் நின்று அவன் மட்டுமே அனைத்தையும் செய்வதைப் பார்த்துச் சொன்னார் பூரணி,
“திருமுருகன்னு எனக்கு ஒரு மகனே இல்லை. எனக்கு இருக்க ஒரே மகன் இவன் தான் என் பிள்ளை திருநீலகண்டன்” எனச் சொன்னார்.
தந்தையின் இறுதி காரியங்களுக்குக் கூடக் கலந்துக் கொள்ளாத தம்பி திருமுருகனை அவன் இன்று வரை மன்னிக்கவும் இல்லை மறக்கவும் இல்லை. ஆனால் தன் தாய் எப்படி அந்த விசயங்களை மறந்தார் என்று இன்று வரை அவனுக்குப் புரியவில்லை.
அந்தக் கசப்பான தருணத்தை மனதில் அசைப் போட்டபடி இருந்தவன். காரை வீட்டின் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்திருந்தான் திருநீலகண்டன்.
அவனை முறைத்தபடி நின்றிருந்தான் அவனின் தம்பி திருமுருகன்.
திருநீலகண்டனின் சாயல் கொஞ்சம் கூட அவனிடம் இல்லை சொல்ல போனால் அவர்கள் இருவருக்கும் மூன்று வயது வித்தியாசம் இருந்தது.
திருநீலகண்டனும் திருமுருகனும் இரட்டையர்கள் அல்ல, தக்ஷன்யாவை முதல் நாள் கல்லூரியில் டிராப் செய்ததும் திருநீலகண்டன் தான். பேராசிரியராக அவள் முன் வந்து நின்றதும் அவனே தான்.
அவளிடம் எதற்காக இந்த இரட்டை வேடம். அவளின் மனதை காதலால் வெல்ல நினைக்கிறானா? இல்லை அவளைப் பழிவாங்கும் நோக்கத்தில் இதையெல்லாம் செய்கிறானா? என்பதை அவன் மட்டுமே அறிவான்.
****
பாலிடெக்னிக் கல்லூரியின் வராண்டாவில் நடந்து கொண்டிருந்தான் மணிகண்டன்.அப்போது அவனின் அலைப்பேசி அதிர்ந்தது.. கல்லூரியில் இருப்பதால் அலைப்பேசியைச் சைலண்டாகப் போட்டு வைத்திருந்தான் அவன். தங்கச்சி காலிங் என அலைப்பேசி திரையில் பார்த்த நொடியில் அழைப்பை விரைந்து ஏற்றிருந்தான்.
“அண்ணா!!” உற்சாகமாய் ஒலித்தது தக்ஷாவின் குரல்.
“தக்ஷா போனை கண்டுபிடிச்சிட்டியா?”
“ஆமா அண்ணா திருவே வந்து கொடுத்திட்டாரு”
“திருவா? யாரு தக்ஷா அது?” குழப்பமாகக் கேட்டான் மணிகண்டன்.
“கேப் டிரைவர் அண்ணா” என்றாள் உடனடியாக.
“சரி சரி! கிளாஸ் டைம்ல என்ன போன் பேசிகிட்டு இருக்க” கண்டிப்புடன் கேட்டான்.
“லைப்ரரி பீரியட் தான். லைப்ரரிக்கு தான் போயிட்டு இருக்கேன். அம்மா அதுக்கு அப்பறம் எதாவது சொன்னாங்களா?”
“அதை ஏன் தக்ஷா கேட்கிற? கொடி விசயம் வீட்டில தெரிஞ்சிருச்சு”
“அய்யோ அண்ணா அம்மா சாமி ஆடிருக்குமே”
“ஆமா ஆமா! கொடியை தான் கட்டிப்பேன்னு சொல்லிட்டேன்” என்றான்
“அப்பா ஒன்னும் சொல்லையா?”
“என்னத்த சொல்லிட போறாரு நடக்கிறதை அமைதியா கைய கெட்டி நின்னு வேடிக்கை பார்த்தாரு”
“சரி அண்ணா நான் நைட்டு போன் செய்யுறேன். லைப்ரரி கிட்ட வந்துட்டேன்” எனச் சொல்லி அழைப்பை துண்டித்தவளின் எதிரே. மார்பின் குறுக்கே கைகட்டிக் கொண்டு முறைப்பாய் நின்றிருந்தான் திருநீலகண்டன்.
“கேம்பஸ்குள்ள மொபைல் போன் யூஸ் பண்ணக் கூடாதுன்னு தெரியாதா?” என அவன் கேட்டதற்குப் பதில் சொல்ல முடியாமல் திணறி நின்றாள் தக்ஷன்யா.
“சார் சாரி சார்” என நெளிந்தவளின் அருகில் நின்றிருந்த யோகாவோ பதற்றத்தில் திருத் திரு வென முழித்தாள்
“நீங்க என்ன கேஜி ஸ்டூடண்ட்டா? காமென் சென்ஸ் கொஞ்சம் கூடவா இருக்காது லைப்ரரி பக்கத்தில கத்தி கத்தி பேசிட்டு இருக்கீங்க. கெட் லாஸ்ட் இடியட்ஸ்” என அவன் சொன்ன நொடியில், எப்போது இந்த வார்த்தையைச் சொல்லுவான் ஓட்டம் பிடிப்போம் என்பது போல் காத்திருந்த இருவரும் அங்கிருந்து ஓடியிருந்தனர்.
தக்ஷாவோ அவனைத் திரும்பி பார்த்து முறைத்துச் சென்றாள். அவனோ அவளை ரசனையோடு பார்த்து வைத்தான்.
“என்னடி இந்த ஹிட்லர்கிட்ட வம்பு வளர்த்தது தப்பா போயிடுச்சு போல, எங்கே பார்த்தாலும் வச்சு செய்யுறாரே. வன்மத்துல தான் இருக்கிறார் போல” என யோகா பயத்துடன் சொன்னாள்.
“நீ சொல்றதும் சரி தான்டி யோகா. இவருக்குத் திரு எவ்வளவோ பரவாயில்லைடி. எவ்வளவு சாஃப்ட்டா பேசினாரு பார்த்தியா? “
“ஆரம்பிச்சுட்டாயா இந்தத் திருப் புராணத்தை. இதோ பாருடி தக்ஷா. அந்தத் திரு நல்லவனாவே இருந்திட்டு போகட்டும் அது எனக்குப் பிரச்சனையே இல்லை. மணிக்கொரு முறை திரு நல்லவருன்னு சொல்லி சொல்லியே என்னைக் கெட்டவளா ஆக்கிடாதேடி” என்றாள் யோகா.
“அப்படித் தான்டி சொல்லுவேன், இந்தச் சிடுமூஞ்சி ஹிட்லருக்கு இப்படிப் பாவப்பட்ட தம்பியான்னு போஸ்டர் அடிச்சு ஒட்டுவேன்டி” எனச் சொல்லியபடி நூலகத்திற்குள் இருவரும் நுழைந்திருந்தனர்.
நூலகத்தில் நுழைந்ததும் அமைதி நிலவ, கிசுகிசுப்பாய் பேசியபடி இருவரும் சென்றனர். அவரவருக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஆளுக்கொரு திசையில் அமர்ந்து புத்தகத்தில் ஆழ்ந்திருந்த போது அவளின் அமைதியை கலைக்கும் வண்ணம் அவளுடைய அலைப்பேசி மெசேஜ் வந்திருப்பதாய் அறிய. திரு என்ற பெயரை திரையில் பார்த்ததும் துள்ளல் கொண்டது தக்ஷாவின் மனம். புத்தகம் நடுவே மயிலிறகை போல. அவளின் புத்தகத்தின் நடுவே அடைக்கலாம் ஆகி இருந்தது அவளின் அலைப்பேசி.
“ஹாய் திருத் திஸ் இஸ் தக்ஷா” என அவள் அனுப்பியிருந்த குறுந்தகவலுக்கு இப்போது தான் மறுமொழியாய் பதில் வந்திருந்தது.
“ஹாய் தக்ஷா!” எனப் பதில் வந்திருக்கச் சிரித்தபடி ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்த விழிகளைத் தூரத்தில் நின்றபடி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது அந்த உருவம்.

