
ப்ரியம் 5
யோகாவை துரத்திச் சென்ற தக்ஷா, வராண்டா முடிவில் அவளைப் பிடித்து இழுத்து நிறுத்தினாள். அவள் கையில் இருந்து திமிறிக் கொண்டிருந்தாள் யோகா.
“யோகா ப்ளீஸ்டி” கெஞ்சலாய் ஒலித்தது தக்ஷாவின் குரல்.
“ஆத்தி! நான் வரலை அந்த ஹிட்லரோட தம்பியும், விரைப்பா உராங்குட்டான் மாதிரி மூஞ்சியைக் காட்டி பயமுறுத்திவாரு. நான் வரலை”
“இந்த ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுடி” பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டாள் தக்ஷா.
யோகா முகத்தைச் சுழித்தபடி கைகளைக் கட்டிக்கொண்டாள்.
“தக்ஷா.. மூஞ்சியை இப்படிப் பாவமா மட்டும் வைக்காதேடி. நசநசன்னு பண்ணுறடி. இப்போ என்ன உன் கூட வரணும் அம்புட்டு தானே. வந்து தொலைக்கிறேன். இதெல்லாம் நம்ம பழக்க வழக்கத்துக்குப் பண்ணுறேன் பார்த்துக்க. கோர்த்து விட்டுடாதே டி பரட்டை” எனத் தக்ஷாவின் சுருள் முடியை தொட்டுச் சொல்ல., விரைந்து தன் தோழி யோகாவை கட்டிக் கொண்டாள் தக்ஷா.
ஒரு நாள் பழக்கம் தான். ஆனால் யோகாவின் துணையில்லாமல் எதையும் செய்துவிட முடியாது எனும் அளவிற்கு ஆகி விட்டாள் தக்ஷா. யோகாவின் கள்ளம் கபடம் இல்லாத நட்பு தக்ஷாவை அவளிடம் சார்ந்திருக்க வைத்தது. சார்ந்திருப்பதும் ஒரு வகை அன்பு தான். நீ இன்றி நானில்லை என்ற நிலை காதலில் மட்டும் இல்லை நட்பிலும் உண்டு. அப்படி ஒரு நிலையில் தான் தக்ஷா இருந்தாள்.
“சரி வாங்க யோகா வர்றாளாம். வார்டன்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு அப்பறம் போகலாம்” எனச் சொன்ன தக்ஷாவை விசித்திரமாய்ப் பார்த்து வைத்தார் திவ்யாவும் சரண்யாவும்.
“வார்டன்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு போறதுக்கு எதுக்குடி முகமூடி கொள்ளைக்காரி மாதிரி இவிங்க ரெண்டு பேரும் திரியணும்? அடியே தக்ஷா! உன்னை ஆராத்தி எடுத்து வழி அனுப்பி வைப்பாங்கன்னு நினைச்சிகிட்டு இருக்கியாடி ? பத்து மணிக்கி மேல் ஒருத்தரும் வெளியப் போகக் கூடாதுடி பக்கி. வெளிக் கேட்டை வாட்ச்மேன் இழுத்து மூடியிருப்பாரு டி” என மூச்சிரைக்கப் பேசியவள், “தண்ணி எடுத்து கொடுடி தக்ஷா செத்துக் கித்துப் போயிட போறேன்” என யோகா கேட்க தன்னுடைய பிங்க் நிற பாட்டிலை கொடுத்தாள் தக்ஷா.
தண்ணீரை பருகியவளுக்கு என்னவோ அதீத பயத்தில் இருந்தாள். ஏற்கனவே பேராசிரியர் எனத் தெரியாமல் திருநீலகண்டனிடம் பிரச்சனை ஆகியதும். இப்போது அவன் சகோதரனிடமே சென்று அலைப்பேசியை வாங்கி வர வேண்டிய சூழலை தவிர்க்க முடியாமல் திண்டாடி போனாள் யோகா.
“சரி நீங்க ரெண்டு பேரும் வரலையா? நாங்க போகட்டுமா?” என ஒரே குரலாய் கேட்டனர் திவ்யாவும் சரண்யாவும்.
“அய்யோ ப்ளீஸ் போயிடாதீங்க. நாங்களும் ஏர்போர்ட்க்கு தான் போகணும்” எனப் பதறினாள் தக்ஷா.
“ஏன் உங்க பாய் ஃப்ரெண்டும் அப்ராட் போறாரா?” எனச் சரண்யா ஆர்வமாகக் கேட்டாள்.
“இல்லை அதெல்லாம் இல்லை என்னோட போன்” என உளர வந்தவளின் கால் மிதித்து அவளைச் சொல்ல விடாமல் தடுத்திருந்தாள் யோகா.
“ஆ..!” எனக் கத்தியவள் “என்னத்துக்குடி என் காலை மிதிச்ச” கோபமாய்க் கேட்டாள் தக்ஷா.
“அதெல்லாம் அப்பறம் சொல்றேன். முதலில் வெளிய போறதுக்கான வழியைப் பார்ப்போம்” எனச் சொன்னவள்.
“சரி வாங்க போகலாம். எப்படிப் போறது” என யோகா கேட்க,
“கேப் புக் பண்ணியிருக்கோம் கேப் பைவ் மனிட்ஸ்ல வந்திடும். வாட்ச்மேன்கு பைசா கொடுத்தா கேட் திறந்துவிடுவாராம் சீனியர் அக்கா சொன்னாங்க” எனத் திவ்யா விளக்கினாள்.
“அப்போ சிசிடிவி” எனத் தக்ஷா கேட்க,
“அது ஒன் மன்த்தா ஒர்க் ஆகலை” எனச் சரண்யா சொல்ல,
“அப்பறம் என்ன வாங்க போகலாம்” என ஆயத்தம் ஆன யோகாவை பார்த்து மற்ற மூவரும் சிரித்தனர்.
“என்னத்துக்குடி மூணு பேரும் பல்லை காட்டுறீங்க”
“இப்படியேவா வரப் போற யோகா” உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள் தக்ஷா.
“எனக்கென்னடி குறைச்சல்” எனக் கேட்டவள் நைட்டி அணிந்திருந்ததோடு . முகத்திற்கு ஃபேஸ் பேக்கும் அப்பியிருக்க,
“நைட்டி ஒரு தேசிய உடைடி.” எனச் சொல்லியபடி விரைந்து பாத்ரூம் சென்று உடையை மாற்றியதோடு முகத்தையும் கழுவி வெளிபட்டாள்.
அதன்பின் நால்வரும் பதுங்கி பதுங்கி நடந்து மெயின் கேட்டை வந்தடைந்த சமயம் வாட்ச்மேன் அந்த இடத்தில் இல்லை என்ற பயத்துடன் நால்வரும் நிற்க,
“எங்க போறீங்க” என்ற ஆணின் குரல் நால்வரின் பின்புறமும் கேட்க.
“யோகா பேய்டி” எனத் தக்ஷா யோகாவை கட்டிக்கொண்டு நடுங்கினாள்.
“காலையில எந்திரிச்சதும் உன் முகரை கட்டையில முழிச்ச பாவத்துக்கு நாள் முழுக்கப் பீதியிலையே பொழப்பு ஓடுது. கண்ணைத் திறந்து பாருடி அது வாட்ச்மேன் தாத்தாடி” எனத் தக்ஷாவை தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தியவள்.
“ஏன் தாத்தா! ராத்திரி நேரத்தில புகை வண்டி ஓட்ட போனதெல்லாம் சரி தான் இப்படிப் பின்னாடி வந்து கட்டை குரல் கண்ணாயிரம்னு கத்தி பயமுறுத்தலாமா? யூ நாட்டி தாத்தா” எனக் கேலியாய் யோகா பேசினாலும் அவர் முறைப்புடன் விரைப்பாய் நின்றிருந்தார்.
“தாத்தா அப்படிக் கோபமா இருக்கக் கூடாது. நீங்க நைஸா கேட்டை திறந்து விட்டீங்கனா நாங்க நாலு பேரும் சைஸா போயிட்டு வந்திருவோம்” என யோகா பேச அவரோ பதில் அளிக்காமல் தொண்டையைச் செறுமினார்.
“ஏன்டி பக்கிகளா!! நான் என்னமோ என்னோட ஆளை பார்க்க போற மாதிரி தாத்தாகிட்ட மல்லு கட்டிகிட்டு இருக்கேன். நீங்க மூணு பேரும் என்னங்கடி என் வாயை வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க. பேசி பர்மிஷன் வாங்குங்க நான் இதுல உட்கார்ந்திருக்கேன்” எனப் பேசியபடி வாட்ச்மேன்கு போடப்பட்டிருந்த நெகிழி நாற்காலியில் அமர்ந்தாள். சற்று நேரத்தில் சரண்யாவும் திவ்யாவும் கொடுத்த பணத்தைப் பெற்றுக்கொண்டு கேட்டை திறந்துவிட்டார் அந்த முதியவர்.
தூரத்தில் நின்றிருந்த காரை பார்த்தவுடன். சரண்யாவும் திவ்யாவும் விரைந்து ஓட ஆரம்பிக்க. அவர்களுடன் சேர்ந்து ஓட நினைத்த தக்ஷாவின் கைப்பிடித்துத் தடுத்து நிறுத்தினாள் யோகா.
“என்ன யோகா பண்ணுற? வா போகலாம்”
“ஏய் ஒரு நிமிசம்டி தக்ஷா. உன்னோட போன் நம்ம ஹிட்லரோட தம்பிகிட்ட இருக்கு சரி தானே?”
“ஆமாம்” என்பது போல் தலையசைத்தாள் தக்ஷா.
“அந்தத் திரு உன்னை நம்ம காலேஜ்ல தானே வந்து ட்ராப் பண்ணினாரு”
“ஆமாடி யோகா, இப்போ அதுக்கு என்னடி”
“அப்போ ஏன்டி உன் போனை அந்தத் திரு அதான் ஹிட்லரோட ப்ரோ வந்து உன்கிட்ட கொடுக்கலை. ஹிட்லர் வீட்ல போயி சொல்லியிருக்க மாட்டாரா? நீ போனை தேடி அலைஞ்சிட்டு இருக்கன்னு தெரிஞ்சு இன்னேரம் வந்திருக்கணுமே” என யோகா சரியாகக் கேட்க,
“எனக்கு எப்படித் தெரியும்டி யோகா” எனச் சொன்னவள் தூரத்தில் நின்றுக்கொண்டிருந்த காரை பார்த்தாள். வந்திருப்பது ஒருவேளை அவனாக இருக்குமோ எனத் தோன்றியது.
“யோகா ஒருவேளை இந்தக் கேப் டிரைவர் திருவா இருந்தால்?” எனத் தன் கோலிக்குண்டு கண்களை உருட்டிக் கேட்டாள் தக்ஷா.
“அப்போ வாடி முதலில் ஓடிப்போய் என்னன்னு பார்ப்போம்” இந்த முறை யோகா தக்ஷாவின் கைப்பிடித்து இழுத்துச் சென்றாள்.
அவர்கள் காரை நெருங்கிய போது. கதவை திறந்துக்கொண்டு வெளிபட்டான் திருமுருகன்.நேற்று அவள் பார்த்த அதே தீட்சண்யமான விழிகள். நெற்றியில் திருநீற்றுப் பட்டை. மரகத மணிகளால் ஆன மாலை அவன் சட்டை காலரை உரசி இருக்க. அழகாய் சிரித்தபடி தக்ஷாவை பார்த்து நடந்து வந்தான் திருமுருகன். அவன் புன்னகை முகத்தை அசையாது பார்த்திருந்தாள் தக்ஷா.
********
தட்டு நிறைய உணவை வைத்து விட்டு அதை உண்ணாதே என்பது போல் இருந்தது கோகிலாவின் செயல். மகனின் காதல் விசயத்தை நடு வீட்டில் சிதறு தேங்காய் உடைத்தது போல் சொல்லியவர். கணவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என ஆர்வமாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். சந்திரனோ தன் காதில் எதுவும் விழவில்லை என்பது போல் போட்டு வைத்த உணவை உண்டுவிட்டுக் கைக் கழுவி எழுந்தார்.
மணிகண்டனோ சாப்பிடாமல் எழ,
“ஏலே நில்லு., நீ கேட்டன்னு தானே சோத்தை போட்டேன். திண்ணுட்டு போயான்” எனக் கோகிலா சொல்வதைக் கேட்டு அருகில் வந்த சந்திரனோ.
“அவனை எங்க திங்க விட்ட? சோத்தை போட்டு வச்சிட்டு தான் பஞ்சாயத்து பண்ணுவியோ? அப்படி என்ன தலை போற காரியம்னு கேட்டேன். ஊர்ல ஆயிரம் சொல்லுவாங்க அதுக்காக நம்ம பிள்ளைகளைப் பத்தி நமக்குத் தெரியாதா? ” முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு பேசினார் சந்திரன்.
“உங்க மவனைக் கேளுங்க நான் சொன்னது பொய்யான்னு?” எனச் சொன்னவர் சாமி படத்தின் அருகிலிருந்த திருநீற்றுத் தட்டில் கற்பூரத்தை பற்ற வைத்து, மேசை மீது வைத்தவர் எரிந்துக் கொண்டிருந்த அக்னியில் மேல் கைவைத்துச் சொன்னார், “உங்க மவன் எதிர் வீட்டு வஞ்சிக் கொடியை விரும்புறான். இதுக்கு உங்க ஆசை மக தக்ஷாவும் கூட்டு. எங்க உங்க மவனை இல்லைன்னு சொல்ல சொல்லுங்க” எனச் சொன்னவரின் முகத்தில் அப்படி ஒரு பளபளப்பு அவர் எண்ணம் எல்லாம் இதைக் காரணம் காட்டி தக்ஷாவின் படிப்பை நிறுத்திவிட்டு அவளுக்குத் திருமணத்தை முடித்து வைக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது.
“ஆமா வஞ்சிக் கொடியும், நானும் லவ் பண்ணுதோம். இப்போ என்ன?” எனக் கத்தியவன் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு வெளியே செல்ல முற்படத் தடுத்து நிறுத்தியிருந்தார் கோகிலா. மணிகண்டன் சொன்ன வார்த்தையில் உரைந்தே போயிருந்தார் சந்திரன். திருமணம் வேண்டாம் என்று தானே சொல்லிக் கொண்டிருந்தான். இப்போது என்ன காதலிப்பதாய்ச் சொல்கிறான் என ஆழ்ந்த யோசனையுடன் மகனை ஏறிட்டார்.
முப்பது வயதை தாண்டியும் தன் குடும்பப் பொறுப்புகளைத் தோளில் சுமந்து கொண்டிருக்கும் தன் மகனுக்குத் திருமண ஆசை வந்தது ஒன்றும் தவறில்லையே என்று அவருக்குத் தோன்றியது. அவனின் பார்வையில் பயமில்லை அவன் காதலிலும் உறுதியாகத் தான் இருக்கிறான் என்பதை அவனுடைய கண்களைப் பார்த்தே உறுதி செய்தார் சந்திரன். இருந்தாலும் இந்த விசயம் எப்படிக் கோகிலாவிற்குத் தெரிந்தது. என யோசிக்க,
“இதோ பார்லே மணி, அவிய குடும்பத்துக்கு நமக்கும் ஏணி வச்சாலும் எட்டுமா? வீட்டுல உள்ள பொருளையெல்லாம் வித்து உன்னைப் படிக்க வச்சோம். அந்த எதிர் வீட்டு கழுதை எட்டாவது ஃபெயில். நீ ஒன்னும் பள்ளிக்கூடத்துல வாத்தியார் இல்லை. பெரிய காலேஜ்ல வாத்தியாரா இருக்க, அவ ஒவ்வொரு வீடா துணியை வாங்கித் தச்சு கொடுத்திட்டு திரியா. எல்லாத்தையும் விடுல அதுவே அநாதை பிள்ளை. அந்தக் கிழவியைக் கிடந்தது பார்த்திட்டு இருக்கு. எந்தச் சொந்தம் வந்து நகை போட்டு கட்டி கொடுக்கும் சொல்லு. நீ என்னத்துக்கு அவ பின்னாடி சுத்திகிட்டு திரியா?” என மூச்சு விடாமல் பேசி முடிந்தவரை பார்த்து முறைத்தவன்.
“எனக்குக் கொடியை தான் பிடிச்சிருக்கு அவளைத் தான் கட்டிக்கிவேன். பாப்பா பிடிப்பை முடிச்சிட்டு வரட்டும் பிறவு இதைப்பத்தி பேசிக்கலாம்” எனச் சொன்னவன் அவனின் அலைப்பேசியை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு விரைந்திருந்தான்.
எப்போதும் தன்னைப் பார்த்து நாணம் பூசி சிரித்துச் செல்லும் வஞ்சிக் கொடி இன்று அவனை முறைத்து பார்த்துச் சென்றது அவன் நினைவில் வர. வஞ்சிக்கொடியின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தபடி மாடியில் நின்று எதிர் வீட்டு திண்ணையைப் பார்த்தான் அங்கே அவள் இல்லை. அவனுடைய அழைப்பையும் அவள் ஏற்கவில்லை என்றவுடன். எதோ நடந்திருக்கிறது எனப் புரிந்தவனாய் மீண்டும் இரண்டும் முறை அழைப்பெடுத்தான் அவள் பதிலளிக்கவில்லை.
அவனின் பொறுமை காற்றில் கரைய ஆரம்பித்திருந்த நிலையில். அவளின் வீட்டிற்கே சென்ற பார்த்துவிடலாம் என அவன் திரும்பிய போது. தட்டில் உணவுடன் வந்து நின்றாள் வஞ்சிக் கொடி. அவள் முகம் வாட்டமாக இருந்தது.
“ஏய் கொடி! நீ எப்படி இங்கே வந்த யாரும் பார்க்கலையா உன்னை?” என அவன் ஆச்சரியமாகக் கேட்டான்.
“மீதி வைக்காமல் சாப்பிடுங்க” என்றவள் அங்கிருந்து திண்டில் உணவை வைத்துவிட்டு நகரச் சென்றவளை இழுத்து தன்னோடு அணைத்திருந்தான் மணி.
“என்னைப் பாருட்டி! என்னத்துக்கு மூஞ்சியைத் தூக்கி வைச்சிட்டு இருக்க?”
“என்னை விடுங்க, உங்களுக்குத் தான் ஐம்பது பவனு, நூறு பவுனுக்குப் பொண்ணு வருதாமே பிறவு என்னத்துக்கு. என்னைய கட்டிக்கிட்டு நிக்கிறீய?”
“உனக்கு யார் சொன்னது?” என்ற அவன் கேள்விக்குப் பதில் கொடுக்காமல் அவனை விட்டு விலகி நின்றாள் பெண்ணவள்.
“பதில் சொல்லுடி. உனக்கு யார் சொன்னது எனக்கு ஐம்பது பவுனு, நூறு பவுனுக்குப் பொண்ணு வருதுன்னு” அவள் முகத்தை நேரடியாய் பார்த்து அவன் கேட்ட போது பதில் தர முடியாமல் தவித்தவளை இமைக்காமல் பார்த்திருந்தான் அவளின் மணி.
“இப்போ சொல்றீயா இல்லையா?”அவன் சற்றுக் குரலுயர்த்திக் கேட்ட நொடியில்.
“உங்க அம்மை தான் சொன்னாவ, என்கிட்ட அவ்வளவு நகை பணமெல்லாம் இல்லை மணி. இதோட நிறுத்திகிடுவோம். உனக்கு ஏத்த மாதிரி நல்லா படிச்ச பொண்ணா, பார்த்தது கெட்டிக்க மணி.” எனச் சொல்லி நகர முற்பட்டவளை,
“அப்படி விட்டுட்டு போறதா இருந்தா. உன் கையாலேயே என்னைக் இங்கேயே கொண்ணு புதைச்சிட்டு போடி” எனச் சொன்னவனை விரைந்து கட்டியணைத்தவள் கதறி அழ ஆரம்பித்திருந்தாள்.
“ஆயிரம் பவுனு கொடுத்தாலும், உன்னை விட்டு போகமாட்டேன்டி. என் கொடியோட அன்புக்கு முன்னாடி இதெல்லாம் தூசிக்குச் சமம். என் அம்மை சொன்னா என்னை விட்டுட்டு போயிருவியாடி கிறுக்கி” என அவன் அன்பாய் கோபம் கொள்ள, அவன் அணைப்பில் இருந்தவள் மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.அவள் விழிகளில் வழிந்தோடிய கண்ணீரை தன் கரம் கொண்டு அவன் துடைக்க,
“பாட்டி தேடும் நான் போகவா?” அவன் அணைப்பில் இருந்தபடிக் கேட்டாள் வஞ்சி.
“ம்ம் போ” என்றான் சாதாரணமாக.
“விட்டால் தானே போறதுக்கு விடுங்க” என அவள் நெளிந்தாள்.
“நான் சாப்பிடலைன்னு உனக்கு எப்படித் தெரியும்?” எனப் பேசியபடி மேலும் தன்னோடு அவளைச் சேர்த்தணைத்தான்.
“உங்க அம்மை கத்துறது தான் ஊருக்கே கேட்குதே, எதிர் வீட்டில இருக்க எனக்குக் கேட்காதா? விடுங்க பாட்டிக்கு மருந்து கொடுக்கணும் பாவம் ஒத்தையில போட்டுட்டு வந்திருக்கேன்” என அவள் சொல்ல மெல்ல அவன் பிடியிலிருந்து விடுவித்தான். அவனைப் பார்த்து சிரித்தபடி படியிறங்கியவளை முறைத்தபடி நின்றிருந்தார் கோகிலா.
இந்த முறை அவரைப் பார்த்ததும் வஞ்சி பயம் கொள்ளவில்லை. மாறாக அவரை முகத்திற்கு நேராய் எதிர் கொண்டாள். அந்தத் தைரியத்தை அவள் மணியின் மீது வைத்திருந்த காதல் வெளியே கொண்டு வந்திருந்தது.
“பட்டினியா தூங்கினால். அல்சர் வந்திடுமாம் அத்தை அதான் உங்க மவனுக்கு, இல்லை இல்லை என் மச்சானுக்குச் சோறு கொண்டாந்தேன். சாப்பிட்டதும் தட்டை கழுவி வையுங்க பிறவு வந்து எடுத்துகிடுதேன். என் ஆசை அத்தை வரட்டா” எனச் சொல்லி சென்றவளை இமை தட்டாது பார்த்து நின்றார் கோகிலா. அவள் இப்படித் துணிச்சலுடன் பேசிச் செல்வாள் எனக் கோகிலா எதிர் பார்க்கவில்லை.
நடப்பதை வீட்டின் பின்வாசலில் நின்று கவனித்துக் கொண்டிருந்த சந்திரனுக்கோ. கோகிலாவுக்குச் சரியான மருமகள் வஞ்சிக் கொடி தான் என்று தோன்றியது. தன் மகன் சரியாகத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறான் என அவர் மனம் நிம்மதியடைந்தது.
தன்னவள் வீட்டினுள் செல்லும் வரை பார்த்து நின்றவன். அவள் வைத்துச் சென்ற உணவை எடுத்து உண்ண ஆரம்பித்தான். அமிர்தம் போல் இதமாய் அவன் தொண்டையில் இறங்கியது அவள் வைத்துச்சென்ற உணவு.

