Loading

ப்ரியம் 4

தூத்துக்குடி மாவட்டம் தச்சன்விளை கிராமத்தின் இருந்த முன்னூறு குடும்பங்களில் ஒன்றாக இருந்தது. கோகிலா, சந்திரனின் குடும்பம் வீட்டின் முன் சிறிய பெட்டிக்கடை அமைத்து அதில் வரும் வருமானத்தில் மட்டும் குடும்பம் செயல்படவில்லை. மணிகண்டனின் வருமானத்தில் தான் தக்ஷன்யாவின் கல்லூரி படிப்பும், சந்திரனின் மருத்துவச் செலவுகளுக்கும் உதவியாக இருந்து வருகிறது.

மணிகண்டன் இரண்டு ஊர் தள்ளியிருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறான். படித்ததெல்லாம் சென்னை தான் என்றாலும், அவனுக்குப் பிடித்தம் என்னவோ சொந்த ஊர் தான். சொந்த ஊரை விட்டு எங்கும் சென்றிடக் கூடாது என அவன் நினைக்க மற்றொரு காரணம், அவள் தான் அவனின் மனதிற்கினியவள் . அதே ஊரில் அவன் வீட்டின் எதிரில் குடியிருக்கும் வஞ்சிக்கொடி தான் அவன் மனதிலும் குடியிருக்கிறாள்.

இரவு நேரம் ஆகி விட்டதால் அந்தச் சின்னக் கடையில் வெளியே தொங்கி கொண்டிருந்த அப்பள பாக்கெட்டுகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் கோகிலா. சந்திரனோ பெரிய பெரிய சாமான்களைக் கடைக்குள் தூக்கி வைத்துக் கொண்டிருந்தார்.

எதிர்வீட்டில் வசிக்கும் வஞ்சிக்கொடியோ. தெருவை பார்த்தபடி நிற்க,

“என்னட்டி வஞ்சி ரோட்டையே பார்த்திட்டு நிக்கிறவ” எனப் பேச்சை ஆரம்பித்தார் கோகிலா.

“என் மச்சான் வர்றவளான்னு பாக்கேன்” எனப் பேசியபடி கடையின் அருகே நெருங்கி வந்தாள் வஞ்சி.

“மச்சானா? யாருடி அது?” எனக் கோகிலா வினவ

“உங்க மவன் தான் அத்தை” அவளோ பட்டெனச் சொல்லிவிட்டாள். கோகிலா முகம் மாறியதை கவனிக்காத வஞ்சியோ.

“தக்ஷன்யா சென்னைக்குப் போயிட்டாளா? போன் எதுவும் போட்டாளா?” எனக் வினவினாள் வஞ்சி.

“அதை ஏன் கேட்கிற வஞ்சி. போன இடத்தில போனை தொலைச்சிபுட்டா அந்தக் கிறுக்கி. என்ன செய்யது சொல்லு. இப்படியுமா பொட்டை பிள்ளை இருக்கும்.” எனப் புலம்பியவரை பார்த்தவள்.

“நம்ம தக்ஷா விவரமா தானே இருப்பா அத்தை” என வஞ்சி கேட்க, அவள் அத்தை என்று விழிப்பது கோகிலாவிற்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதைத் துளியும் காட்டிக் கொள்ளாமல்.

“ஏன் வஞ்சி கேட்கிற பனிரெண்டோட போதும் படிப்பை நிறுத்திட்டுக் கல்யாணத்தை முடிச்சிருந்தா. இரண்டு பிள்ளைகளைக் பெத்திட்டு. நம்மளை தாத்தா பாட்டி ஆக்கிருப்பா. டிகிரி படிக்கேன்னு சொன்னா சரி இங்கணத் தானே போயிட்டு வரட்டும்னு விட்டாச்சு. படிச்ச மெட்ராஸ்ல தான் மேல் படிப்பு படிக்கேன்னு போயிருக்கா. இவளால மணிக்கு தான் கல்யாணம் பண்ணி வைக்க முடியாம போகுது. ஐம்பது பவுனு, நூறு பவுனுக்குப் பொண்ணு வருது, தங்கச்சி கல்யாணத்தை முடிச்ச பிறவு தான் அவன் வாழ்க்கையைப் பத்தி யோசிப்பானாம்” எனச் சலித்தபடி சொன்னவரின் எண்ண ஓட்டத்தைக் கணித்து இருந்தாள் வஞ்சி.

அதே நேரத்தில் மணிகண்டன் அங்கே வந்து சேர்ந்தான்.

“ஏன்டா மணி, நேரமே வர்றதில்லையா?” எனக் கோபமாய்க் கேட்ட கோகிலாவை பார்த்தவன்.

“ஏச்சு வாங்கிட்டு போயிடாத, வாழைத்தாரு வாங்கிட்டு வரச் சொல்லி நீ தானே போன் அடிச்ச” எனக் கோபமாய்க் கத்தியவன் வாழைத்தாரை தூக்கி தோளில் வைத்த போது வஞ்சியைப் பார்த்துக் ஒற்றைக் கண்ணைத் திறந்து மூடி அவளை மட்டும் பார்த்து புன்னகைத்தவனை ஏறிட்டவள் முகத்தை அஷ்ட கோணலாய் வைத்தவள் உதட்டை சுழித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் வஞ்சிக் கொடி.

“அடியே கொடி!!” எனச் சத்தமில்லாமல் மெல்ல அழைத்தவனைப் பார்த்து முறைத்துச் செல்வதிலே அவள் கோபமாய் இருப்பதை உணர்ந்து கொண்டான் அவளின் காதலனாய்.

மணிகண்டன் தோளிலிருந்த வாழைத்தாரை மெதுவாகக் கீழே இறக்கி கடைக்குள் வைத்து நிமிர்ந்தவனைப் பார்த்த கோகிலா

“தக்ஷா போன் அடிச்சாளாடா” எனக் கேட்ட தாயிடம் “இல்லை” எனப் பதில் சொன்னவனின் பார்வை எதிர் வீட்டுத் திண்ணையில் அமைதியாய் அமர்ந்திருந்தவளை தொட்டு மீண்டது.

“என்னடா இவ இப்படிச் செஞ்சுபுட்டா” என அழ துவங்கியவரை,

“எம்மா உன் பம்பு செட்டை உடனே தொறந்திறாதே. வார்டன் நம்பர் என்கிட்ட இருக்கு நான் அடிச்சுக் கேக்கேன்” எனச் சொன்னவன் அழைப்பு விடுக்க. இங்கே சென்னையில் வேலன் பல்கலைக் கழகத்தின் பெண்கள் விடுதியின் வார்டன் ஸ்டெல்லா அழைப்பை ஏற்க, தன் தங்கை தக்ஷன்யாவை பற்றி விசாரித்தான் மணிகண்டன்.

“மேடம்! தக்ஷன்யா இருக்காளா? அவ அண்ணே மணிகண்டன் பேசுறேன்” எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“ஒரு பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க தக்ஷன்யாவை பேசச் சொல்லுறேன்” என அவர் அழைப்பை துண்டிக்க. அவர் என்ன சொன்னார் எனக் கேட்காமல்.,

“என்ன ஓடி போயிட்டாளா? உன் தங்கச்சிகாரி, எனக்குத் தெரியும் இங்கே இல்லாத படிப்பு சீமையில கிடைக்கின்னு போகும் போதே தெரியும் அவ ஓடித்தான் போவான்னு” என மூச்சிரைக்கப் பேசிய கோகிலாவை

“உன் வாயில நல்ல வார்த்தையே வராதே. போ போய்க் கடைய பூட்டிட்டு வந்து சோத்தை போடு” எனச் சொன்னவன் லுங்கியை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்திருந்தான். இரண்டு வேளை குளிப்பதை வழக்கமாக வைத்திருந்தான் மணிகண்டன்..

அதே சமயம் மகளிர் விடுதியில் இரவு உடைக்கு மாறி இருந்த தக்ஷன்யா, விட்டத்தைப் பார்த்தபடி புலம்பிக் கொண்டிருந்தாள்.

“ஏன்டி யோகா நம்ம அந்தத் திருமுருகனை பார்த்து பேசிட்டு, என்னோட போனையும் கையோட வாங்கிட்டு வருவோமா?” எனக் கேட்டபடி நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள்.

“நம்ம ஹிட்லரே சிடு சிடுன்னு இருக்காரு அவரோட ப்ரதர் எப்படி இருப்பாரோ? நான் வரலை தாயி. எனக்கு என்னவோ உன் போனை மறந்திடுறது நல்லதுன்னு தோணுது” எனச் சொன்னவள் முகத்தில் ஃபேஸ் பேக் போட்டுக் கொண்டிருந்தாள்.

“என்னடி யோகா இப்படிச் சொல்லிட்ட? எனக்கு இங்கே சென்னையில எங்கே போறது எப்படி வர்றதுன்னே தெரியாதுடி” எனப் பேசிக் கொண்டிருந்த போது, அறையின் கதவு தட்டும் சத்தம் கேட்டு இருவரும் மிரண்டு போய்ப் பார்த்துக் கொண்டனர்.

“யோகா கதவை திறடி எனக்குப் பயமா இருக்கு” எனப் பதுங்கினாள் தக்ஷா.

“நீ தான் தூத்துக்குடிக்காரியாச்சே போ போ”

“நீ தான் மதுரக்காரி, மலேசியாகாரின்னு சொல்லுவியே. நீ திற கதவை” எனச் சொன்னாள் தக்ஷா.

“தக்ஷன்யா, யோகஸ்ரீ கதவை திறங்க” என வார்டன் குரல் கேட்ட பிறகு,

“அப்பாடா பேய் இல்லை” எனக் கதவை திறந்த யோகாவின் முகம் பார்த்து.

“ஆ..” எனக் கத்திய ஸ்டெல்லாவை பார்த்து தக்ஷாவும் “ஆ”வெனக் கத்த.,

“நீ எதுக்குடி கத்துற பக்கி” எனத் தக்ஷாவை திட்டியவள்.

“சாரி ஸ்டெல்லா அக்கா” என மன்னிப்பு வேண்டினாள்.

“முதலில் போய் முகத்தைக் கழுவு” என எரிச்சலுடன் சொன்ன ஸ்டெல்லா.

“தக்ஷா உன் வீட்டிலிருந்து கால் பண்ணியிருந்தாங்க. பேசிட்டு கொடு” என அலைப்பேசியைக் கொடுத்துச் சென்றார். உடனே தன் ஆருயிர் அண்ணனின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள் தக்ஷா.

“ஹலோ அண்ணா எப்படி இருக்க” என அவள் ஆரம்பித்த நொடியில்,

“அவனுக்கென்னமா அவன் நல்லா தான் இருக்கான். நானும் உங்க அப்பாவும் தான் எங்க வீட்டு மஹாராணியைத் தூரா தொலைக்கி அனுப்பிட்டு, வயித்தில நெருப்பைக் கட்டிகிட்டு இருக்கோம்” எனக் கோகிலாவின் குரல் கேட்டவுடன் பதிலேதும் பேசாமல் சிலையாய் சமைந்தாள் பெண்.

“என்ன தக்ஷா அமைதியாகிட்ட போன் கிடைச்சிட்டா?” என அவர் கேட்க அவளோ அமைதியாய் இருந்தாள்.

“உங்க மவளுக்கு வந்த வாழ்வை பார்த்தீயளா? மஹாராணி என்கிட்ட பேச மாட்டாங்களாம். பத்து மாசம் சுமந்து இவளை பெத்ததுக்குக் குழவி கல்லை பெத்திருக்களாம் போல, மாவு ஆட்ட உதவிருக்கும்” எனக் கணவனிடம் முறையிட்டார் கோகிலா.

“அதை எதுக்குமா பெத்துகிட்டு இங்கணத் தானே கிடக்கு எடுத்து உன் கையால ஆட்டு” எனச் சொன்னவன் குளியலறைக்குள் இருந்து வெளிபட்டான்.

“அதானே தங்கச்சிகாரிக்கு ஒன்னுனா இரவணன் மாதிரி இறங்கி வந்திருவான்” எனச் சலித்தபடி அலைப்பேசியை மகனிடம் கொடுத்தவர். அடுக்களைக்குள் நுழைந்து கொண்டாலும் கோகிலாவின் செவி என்னவோ அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தது.

“அண்ணா” தயங்கி ஒலித்தது தக்ஷாவின் குரல்.

“நான் தான் பேசுதேன் சொல்லு தக்ஷா” என்றான் மணி.

“நல்லா இருக்கிற? சாப்பிட்டியா? அப்பா என்ன செய்யுறாங்க?” என அவள் கேள்விகளை அடுக்கினாள்.

“நல்ல இருக்கேன், இனி தான் சாப்பிடனும், அம்மா கடையை அடிச்சிட்டு இப்போ தான் சோறு பொங்குறா. அப்பா மூடையெல்லாம் தூக்கி உள்ள வச்சிட்டு இருக்காவ, நீ என்ன செய்யுத சாப்பிட்டியா” என அவன் கேட்க,

“அதெல்லாம் ஆச்சு அண்ணா, போன் நான் வந்த கேப் டிரைவர்கிட்ட இருக்கு அண்ணா போயி வாங்கணும்” என அவள் புலம்பி தள்ள,

“நான் வந்து வாங்கித் தரவா?”

“இல்லை வேண்டாம் அண்ணா நானே பார்த்துக்கிறேன்” என முந்திக் கொண்டு பதில் சொன்னாள்.

“சரி சரி பார்த்துக்க, அப்ப வைக்கட்டும்?”என அலைபேசியின் அழைப்பை துண்டிக்கச் செல்ல,

“அண்ணா! அண்ணா ! ஒரு நிமிசம்” எனத் தங்கையின் குரல் கேட்டு,

“ம்ம் சொல்லு” என்றான்.

“வஞ்சி எப்படி இருக்கா” என அவன் கேட்ட நொடியில், மணி கண்டனின் முகமோ வெட்கத்தில் சிவந்தது. மீசையை முறுக்கியபடி,

“உன் அண்ணிக்கு என்ன நல்லா தான் இருக்கா.” எனப் பேசியபடி அடுக்களையைத் தாண்டி சென்றவனை முறைத்தபடி நின்ற கோகிலாவோ.

“அப்போ அந்தக் கழுதைக்கும் தெரிஞ்சிருக்கு” என வாய்விட்டு புலம்பினார்.

அதன் பின் சந்திரனும் மணிகண்டனும் சாப்பிட அமர்ந்திருந்தனர்.

உணவுகளை எடுத்து பரிமாறும் முன் தட்டை தூக்கி டம் என்ற சத்ததுடன் மணிகண்டன் முன் வைத்தார் கோகிலா.

“எம்மா ஏன் பொறுமையா தான் வையேன்”

“அதை என்கிட்ட சொல்லதே டா” என நக்கலாய் சொன்னார்.

“பிறவு யாருகிட்ட சொல்லணும்” அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான் மணி.

“நாளைக்கி உனக்குன்னு வரப் போறாளே பொண்டாட்டியா அவகிட்ட போய்ச் சொல்லு” எனப் பேசியபடி உணவை, பரிமாறிக் கொண்டிருந்தார்.

“ஏய் கோகி! என்ன பேச்சு பேசுற. அவனே தங்கச்சி கலியாணம் முடியட்டும் பிறவு என் வாழ்க்கையைப் பார்த்துகிடுறேன்னு தானே சொன்னான். அவன்கிட்ட போய்ப் பொண்டாட்டி அது இதுன்னு பேசிகிட்டு இருக்க. வாயை மூடிகிட்டு சோத்தை எடுத்து வை.” என அதட்டலாய் சொன்னவர் உணவை உண்ண ஆரம்பித்திருந்தார். மணியோ உண்ண மனமில்லாமல் தாயை ஏறிட்டான்.

“உங்களுக்கு உங்க புள்ளைகளைப் பத்தி ஒன்னும் தெரியாது. இரண்டும் சேர்ந்து நம்ம மானத்தை வாங்க போகுதுக. உங்க மவன் உங்களுக்குச் சிரமம் கொடுத்திட கூடாதுன்னு மருமவளை பார்த்து வச்சிட்டான் தெரியுமா” என விசயத்தைத் தேங்காய் உடைத்தது போல் உடைத்திருந்தார் கோகிலா. தாயை முறைத்தபடி அமர்ந்திருந்தான் மணிகண்டன்.

*****

வார்டனின் கைப்பேசியை ஒப்படைக்கும் பொருட்டு, தக்ஷாவும் யோகாவும் வராண்டாவில் நடந்த படி பேசிக்கொண்டே வந்தனர். அண்ணனின் காதல் கதையை யோகாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் தக்ஷா.

“எங்க அண்ணா பாவம்டி. எனக்காகத் தான் காதலிச்ச பிள்ளையைக் கட்டிக்காமல் இருக்கு. வஞ்சியும் ரொம்ப நல்லவ” நாளை அண்ணியாய் வரப் போகிறவளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருந்தாள் தக்ஷா.

“அண்ணியைப் போய் அவ இவன்னு சொல்லிகிட்டு இருக்க” எனக் கண்டித்தாள் யோகா.

“யோகா உன்னை மாதிரி அவளும் எனக்கு ஃப்ரெண்டு தான்டி. அப்படியே பழகிடுச்சு. கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கணும்” என இருவரும் பேசியபடி வார்டனின் அறைக் கதவை தட்டிவிட்டு கைப்பேசியைக் கொடுத்துவிட்டு மீண்டும் தங்கள் அறையை நோக்கி இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த போது.

முக்காடு போட்ட இரு உருவம் அவர்கள் மீது மோதி நிற்க பயத்தில் “ஆ” எனக் கத்த போனவர்களின் இருவரின் வாயை இறுக்கமாய்ப் பொத்தியது அந்த இரு உருவமும்.

“அய்யோ பேய்கிட்ட எதும் மாட்டிக்கிட்டோமா? இருட்டில வேற கண்ணு தெரிய மாட்டேன்தே. நம்ம தான் மாட்டிக்கிட்டோம் சரி இந்தத் தக்ஷா என்ன செய்யுறா? ” என மனதில் நினைத்தபடி தக்ஷாவின் புறம் திரும்பியவளுக்கு அப்போது தான் தெரிந்தது அவளும் மற்றொரு உருவத்திடம் சிக்கியிருப்பது.

“ஹே ப்ளீஸ் டோண்ட் ஷவுட்” என ஆங்கிலத்தில் குரல் கேட்க,

“நம்ம இங்கிலீஷ் படிக்கிறதால இங்கிலீஷ் பேய் வந்திருக்கும் போல, ஆத்தி நம்ம ஊர் பேயினா கூட வேப்பிலை அடிச்சா போயிடும்னு சொல்லுவாங்க. இதுக்குச் சிலுவைல வேணும் சிலுவைக்கு நான் எங்க போறது கர்த்தாவே.” என நினைத்த யோகா மண்டையில் அப்போது தான் தான் உரைத்தது.

“பேய் ப்ளீஸ்ன்னு சொல்லுதே. நம்ம தானே பேய்கிட்ட கெஞ்சணும் பேய் எதுக்கு நம்மகிட்ட கெஞ்சுது. வாயை வேற பொத்திடுச்சுக எவ்வளவு நேரம் தான் மைண்ட் வாய்ஸில் பேசுறது” என உடம்பை ஒரு உலுக்கு உலுக்கி பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள். தன் தோழி தக்ஷாவையும் தன்னோடு இழுத்துக்கொண்டாள்.

“அடியே யோகா என்னடி நடக்குது இங்கே? வா வார்டன் ரூமுக்கு ஓடிருவோம்” எனத் தக்ஷா அழைக்க.

“இருடி தக்ஷா” என எதிரில் முக்காடுடன் நின்றிருந்த உருவத்தின் மீது சுற்றப்பட்டிருந்த போர்வையை இழுத்த நொடியில் இரண்டு பெண்கள் வெளிபட்டனர்.

“பெர்ஃப்யூம் வாசனை வரும் போதே நினைச்சேன் பொம்பளை பேயா தான் இருக்கும்னு” என யோகா சொல்ல,

“ஏய் நல்லா பாருடி பொண்ணுங்க தான்” எனத் தக்ஷா சொன்னபின் கண்களைக் கசக்கி பார்த்தாள் யோகா.

“ஏய் எதுக்கு இப்படிச் செஞ்சீங்க? ஸ்டெல்லா அக்கா கிட்ட சொல்லவா?” என மிரட்டலாய் கேட்டாள் யோகா.

“ஹாய் நான் திவ்யா, இவ சரண்யா, உங்க ரூம் பக்கத்து ரூம்ல தான் நாங்க இருக்கோம். சரண்யாவோட பாய் ஃப்ரெண்ட் லண்டன் போறாரு அவரைச் சென்ட் ஆஃப் பண்ண போகலாம்ன்னு வந்துகிட்டு இருக்கும் போது உங்க கிட்ட மாட்டிக்கிட்டோம்” எனத் திவ்யா விளக்கினாள்.

“ப்ளீஸ் யார்கிட்டயும் சொல்லிடாதீங்க” எனக் கெஞ்சலாய் கேட்ட சரண்யாவின் கையைப் பிடித்த தக்ஷாவோ.

“நாங்க யார்கிட்டயும் சொல்ல மாட்டோம். பட் , எங்களையும் கூட்டிட்டு போகணும்” எனச் சொன்னவள் யோகாவை திரும்பி பார்க்க.

“ஆத்தி! நான் வரலை என்னை ஹிட்லர்கிட்ட கோர்த்துவிட்டது பத்தாதுன்னு அவர் ப்ரதர்கிட்ட கோர்த்து விடப் பார்க்கிற. நான் சிக்கமாட்டேன்” என ஓடியவளை துரத்திச் சென்றாள் தக்ஷா. 

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
5
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்