
ப்ரியம் 3
“கெட் லாஸ்ட் ஃப்ரம் மை சைட்” என அதட்டலாய் சொன்னவன் அங்கிருந்து அகன்று ஸ்டாஃப் ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தவனைத் திக் பிரம்மை பிடித்தது போல் பார்த்திருந்தாள் தக்ஷன்யா.
“இதோ பாருடி தக்ஷா ஷாக் ஆக வேண்டியது நானு. நீ என்னத்துக்கு இப்படி நிக்கிற?”
“யோகா! அவர் ப்ரோஃபசரா?” அதிர்வில் மீளாமல் நின்றிந்தவளை எரித்துவிடுவது போல் பார்த்தவள்,
“எம்மா தாயே! நீயும் வேண்டாம் உன் ஃப்ரெண்ட்ஷிப்பும் வேண்டாம். எங்க அம்மா சொல்லி அனுப்பிச்சு சென்னைக்குப் போனா சூதானமா இருக்கணும்னு. சரி ரூம் மெட்டா இருக்கீயே . பார்க்க பச்சை புள்ளை மாதிரி இருக்க நமக்கு எந்தச் சேதாரமும் ஆவாதுன்னு நினைச்சா , ஒரே நாளில சிதைச்சிபுட்டல்ல. அதுவும் வாத்தியார்கிட்டையே” எனப் புலம்பி தள்ளியவளை பார்த்துச் சிரிப்பு தான் வந்தது தக்ஷாவிற்கு
“என்னது வாத்தியாரா? ப்ரோஃபசர் யோகா” என வாய் மூடி சிரித்தவளை, முறைத்தாள்.
“சரி சரி முறைக்காதே வா, க்ளாஸ் ரூம்க்குப் போகலாம்” என வலுகட்டாயமா இழுத்துச் சென்றாள் தக்ஷா. வகுப்பு முழுக்க மாணவர்களும் மாணவிகளும் நிறைந்திருக்க. வகுப்பின் கடைசிப் பெஞ்ச் மட்டும் காலியாக இருந்த நிலையில் அங்கே சென்று இருவரும் அமர்ந்துக் கொண்டனர். எங்கே வகுப்பறைக்கு அவனே பாடம் எடுக்க வந்து விடுவானோ என்ற பயம் இருவருக் குள்ளும் இருக்க, இருவரும் முகத்தை மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க, அதே பெஞ்சில் மூன்றாவதாக அமர்ந்திருந்தவளோ.
“ஹாய் ஐ யெம் கீர்த்தி” எனத் தன்னை அறிமுகம் செய்துக்கொண்டாள் புதியவள்.
“நான் தக்ஷன்யா , இவ பேரு யோகா” என இருவருக்கும் அவளே அறிமுகம் கொடுப்பதைப் பார்த்து.
“ஏன் யோகா பேசமாட்டாங்களா” எனக் கீர்த்தி வினவ,
“அது வந்து” எனத் தொடங்கியவள் அவள் சென்னை வந்து சேர்ந்த கதை துவங்கி. அலைப்பேசி தவறிவிட்டதையும். காலையில் பேராசிரியரிடம் திட்டு வாங்கியது வரை சொல்லி முடித்தவள் பெருமூச்சு விட்ட படி அமர்ந்திருக்க,
“நீ என்னத்துக்குடி பெருமூச்சு விடுற, திட்டு வாங்கினது நானு., இதோ பாரு கீர்த்தி இவளை நம்பாதே, அந்தச் சிடுமூஞ்சி சித்தப்பாகிட்ட என்னைய கோர்த்து விட்டுட்டா இந்தப் பக்கி” என வெடித்தாள் யோகா.
“நீங்க திருச் சாரை பத்தியா பேசிகிட்டு இருக்கீங்க?” அந்தப் பேரைக் கேட்டு அதிர்வுடன் திரும்பினாள் தக்ஷா
“நான் சொன்னேன்ல யோகா அவர் பேர் திரு ன்னு., என்னை நம்ப மாட்டேனிட்ட”
“நீங்க சொல்ற மாதிரி நடக்கச் சான்ஸே இல்லை., அவர் கேப் டிரைவராக இருக்க ஒன் பெர்சென்ட் கூடச் சான்ஸ் இல்லை.” என அடித்துச் சொன்னாள் கீர்த்தி.
“உனக்கு அவரை எப்படித் தெரியும்” எனக் கேட்டாள் யோகா.
“நான் யூஜி இங்கே தானே படிச்சேன். இன்ஃபெக்ட் அவருக்காகத் தான் பிஜியும் இங்கேயே சேர்ந்திருக்கேன். இந்த இரண்டு வருசத்தில என்னோட ஒன் சைட் லவ்வ டபுள் சைட் ஆக்கி., ஜில்லாவே கண்ணு வைக்க உன் கூட ஜோடியான்னு, பாட்டு பாடி அவர் கைய பிடிச்சிட்டு போகணும்” எனக் கனவில் மிதந்தபடி சொன்னவளை பார்த்த தக்ஷாவுக்கோ அவள் பேசுவதைப் பார்த்துப் புதிதாக இருந்தது.
“அவர் ப்ரோஃபசர் அப்படி எல்லாம் நினைக்கிறது ரொம்பத் தப்பு. பாடம் சொல்லி தர குருவை குருவா தான் பார்க்கணும்” எனத் தக்ஷா சொல்வதைக் கேட்டு, “சில்லி கேர்ள்” எனச் சொல்லி வாய் விட்டு சிரித்தாள் கீர்த்தி.
“அதெல்லாம் இருக்கட்டும். அவர் நமக்குப் பாடம் எடுக்க வருவாரா?” என முந்திக் கொண்டு கேட்டாள் யோகா.
“அதான் தெரியலை, அவர் வரணும் அதைத் தான் வேண்டிகிட்டு இருக்கேன்” எனக் கீர்த்திச் சொல்ல,
“அவர் வந்திடவே கூடாதுன்னு நான் வேண்டிக்கிறேன்” என யோகா சொல்வதைக் கேட்டுக் கோபம் வந்தது கீர்த்திக்கு. இருவருக்கும் மத்தியில் அமர்ந்திருந்த தக்ஷாவோ குழப்பத்தில் அமர்ந்திருக்க,
வகுப்புகள் துவங்க ஆரம்பித்தது. முதல் நாள் என்பதால் வகுப்பிற்கு வந்த பேராசிரியர் எவரும் பாடம் எடுக்கத் துவங்க வில்லை மாணவ மாணவிகளின் பெயர் அறிமுகத்தோடு, கலகலப்பாகச் சென்றது அன்றைய நாள். அந்த நாளின் இறுதி வகுப்பு என்பதால் கலகலப்பான வகுப்பறையில் டொக் டொக் என்ற ஷூ காலடி சத்தம் கேட்டு மாணவர்கள் நொடியில் அமைதியாக, கீர்த்தி முகத்தில் புன்னகை பளிச்சிட்டது.
“ஆத்தி அவரே தான்டி, செத்தேன் குளி தோண்டி புதைக்கப் போறாரு” என டெஸ்கில் தலைக்கவிழ்ந்தாள் யோகா.
வகுப்பிற்குள் நுழைந்தவன் முகத்தில் மருந்திற்கும் புன்னகை இல்லை. கண்டிப்பான பார்வையுடன் மேசை மீது இருந்த வருகை பதிவேட்டை எடுத்து ஒவ்வொரு பெயராக அழைத்தான். ஒவ்வொரு மாணவரும் வருகையைப் பதிவு செய்த போது அவர்களின் முகத்தைத் தெளிவாகப் பார்த்துக் கொண்டான்.
“இதென்னடி கடைசி ப்ரீயட் வந்து அட்டென்டன்ஸ் எடுத்துகிட்டு இருக்காரு.” கிசுகிசுத்தாள் யோகா.
“தெரியலையே” எனத் தலைக்கவிழ்ந்தபடி சொன்னாள் தக்ஷா.
“பேசி தொலையாதீங்க, சாருக்கு பிடிக்காது” பல்லைக் கடித்தபடி வாயை திறவாமல் எச்சரித்தாள் கீர்த்தி. பயத்தில் மற்ற இருவருக்கும் விழி பிதுங்கியது. அட்டென்டன்ஸ் எடுத்து மேசை மீது அவன் வீசிய அழகை பார்த்து
“வாவ்! வாட் எ மேன்” என வாய் பிளந்தாள் கீர்த்தி.
“இந்த ஹிட்லரை பார்த்து இவளுக்கு எப்படி டி லவ் வந்திருக்கும். இஞ்சி கஷாயத்தைக் குடிச்சிட்டு வந்தாப்புல மூஞ்சியை வச்சிருக்காரு அவரைப் பார்த்து ஜொள்ளு ஊத்திக்கிட்டு இருக்கா இந்தக் கீர்த்தி” என யோகா கிசுகிசுக்க. தனக்குத் தெரியாது என்பது போல் தோள்களைக் குலுக்கினாள் தக்ஷா
வகுப்பறையின் அமைதியை கலைக்கும் வண்ணம் ஒலித்தது அவன் குரல். ஆளையே அசரடிக்கும் அழகெல்லாம் இல்லை மாநிறமான இளைஞன். ஆறடி உயரமும், டக்கின் செய்யப்பட்ட சட்டையை முழங்கை வரை மடித்து விட்டிருந்தான். அவன் தோற்றத்தில் இருந்த அதே கம்பீரம் அவன் குரலிலும் இருந்தது.
“குட் ஈவ்னிங்!! ஐ யெம் திருநீலகண்டன், நான் உங்களுக்கு Indian Writing in English இந்தப் பேப்பர் தான் ஹெண்டில் பண்ணப் போறேன். பாடம் நடத்தும் போது டவுட்ஸ் இருந்தால் கேட்கலாம், எனி அதர் கொஸ்டின்?” என அனைவரையும் பார்க்க மருண்டு விழித்துக் கொண்டிருந்த தக்ஷன்யாவை பார்த்தான். அவளுக்கோ உள்ளுக்குள் உதறல் எடுத்தது. நடுங்கிக் கொண்டிருந்த அவளின் கையை இறுக்கமான பிடித்தாள் யோகா.
“ஆள் மாறி தான் போச்சுடி யோகா. அவன் பேர் திருமுருகன்டி” என உதறிலிலும் உளறியவளை ஆழ்ந்து பார்த்தவன்.
“அண்ட் யூ தக்ஷன்யா? என்ன டவுட்” எனக் கேட்ட திருநீலகண்டனை பார்த்து கையைப் பிசைந்தபடி எழுந்து நின்றவள்,
“சார் அது வந்து, பை தி சான்ஸ் உங்களுக்கு உங்களை மாதிரியே ப்ரதர் யாரவது இருக்காங்களா?” என அவள் கேட்ட நொடியில், வகுப்பில் இருந்த அனைவரும் சிரிக்க, தக்ஷாவோ அவன் பதிலுக்காகக் காத்திருந்தாள்.
“நோ பர்சனல் கொஸ்டின்.. மீட் மீ ஆஃப்டர் தி க்ளாஸ்” என வகுப்பை எடுக்கத் துவங்கினான். எந்தப் பேராசிரியரும் இன்று வகுப்பு எடுக்காத நிலையில் அவன் மட்டும் வகுப்பெடுப்பதை வெறுப்புடன் கவனித்துக் கொண்டிருந்தனர்.
“ஏய் தக்ஷா ஒரே நாளில் அவரை மீட் மீ ஆஃப்டர் தி க்ளாஸ்ன்னு சொல்ல வச்சிட்ட., மூணு வருச உழைப்புடி சல்லி சல்லியா நொறுக்கிட்டீயேடி” எனத் தோள்களில் இடித்தாள் கீர்த்தி. ஆனால் தக்ஷன்யாவின் பார்வை திருநீலகண்டனை விட்டு நகரவேயில்லை.
இவன் தான் அவனா? இல்லை அவன் தான் இவனா? என்ற குழப்பம் இருந்தாலும் இருவருக்கும் உள்ள ஒற்றுமையை அவள் கணக்கிட்டுக் கொண்டிருந்தாள்.
“ஏன்டி யோகா நேத்து நைட் வரைக்கும் மாலை போட்டிருந்தவர் ஒரே நாளில கழட்டி இருப்பாரா?”
“தெரியலையேடி” எனப் பேசியபடி அவன் கரும்பலகையில் எழுதிப்போட்டிருந்ததைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர். வகுப்பும் முடிந்து அனைவரும் கலைந்து செல்ல, தக்ஷன்யாவும், யோகாவும் ஸ்டாஃப் ரூமை நோக்கி நடந்தனர்.
“இதோ பாரு தக்ஷா அந்த ஹிட்லர்கிட்ட பேசப் போறதா இருந்தால் நீ மட்டும் போடி, மறுபடியும் என்னைக் கோர்த்து விட்டுடாதேடி பரட்டை. ஏற்கனவே அவர் என்ன பாடம் நடத்தினாருன்னு ஒன்னும் புரியலை. இந்த லட்சணத்தில் நான் வந்தால் வாயை வேற வச்சிகிட்டு சும்மா இருக்க மாட்டேன்டி.” எனப் புலம்பி தள்ளியவளை பார்த்த தக்ஷாவோ.
“நீ இருந்தால் எனக்குக் கொஞ்சம் தைரியமா இருக்கும்டி வாயேன்”
“உனக்குத் தைரியமா இருக்கும்டி, நான் இங்கே பயத்திலேயே பரலோகம் போயிருவேன் தாயி. என் ஆத்தா அப்பன் வந்தால் நீ பதில் சொல்லிருவீயா?” எனக் கேள்வி கேட்க,
“உன்னைக் கூப்பிட்டது தப்பு தான் நானே போய்ப் பேசிக்கிறேன்” என வேக எட்டுகளை வைத்து விரைந்தாள் தக்ஷன்யா.
“எக்ஸ்க்யூஸ்மீ ” என ஸ்டாஃப் ரூம்குள் தலையை நீட்டினாள் தக்ஷா. அதே சமயம் அவன் வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.
“சார்! வரச் சொன்னீங்க?” என அவள் கேட்க, இவர்கள் பேசுவதை மரத்தடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் யோகா.
“ம்ம்” என்ற தலையசைப்புடன் வெளியே வந்தவன், அவளை நேரடியாகப் பார்த்தான்.
“நீ எங்கே தொலைச்சியோ அங்கே தானே போய்க் கேட்கணும்” அவன் சொல்வது புரியவில்லை என்றாலும் ஆம் எனத் தலையசைத்தாள் தக்ஷா.
“அப்பறம் என்கிட்ட வந்து கேட்கிற?” கேள்வியாய் அவளைப் பார்த்தான்.
“பார்க்க ஒரே மாதிரி இருந்தீங்க. கேப் டிரைவரை இருட்டில வேற பார்த்தேன் சார், அதான் குழப்பமாகிடுச்சு” என்றாள் தக்ஷா.
“நீ பார்த்தது என்னோட ப்ரதர் தான்” என அவன் சொன்ன நொடியில் பட்டென அவனை ஏறிட்டாள்.
‘இதை முன்னாடியே சொல்லியிருந்திருக்கலாமே’ என அவள் நினைக்க,
“நீ நினைக்கிறது சரி தான் முன்னாடியே சொல்லியிருக்கலாம். ஆனால் தெட்ஸ் மை பெர்சனல். யூனிவர்சிட்டியில் எனக்குன்னு நல்ல பெயர் இருக்கு. அதைக் கெடுத்து விட்டுடாத” என எச்சரிக்கையாய் சொல்லி நகர்ந்தவனை நோக்கி,
“அப்போ என் போன்” என அவள் கத்தி கேட்க.
“ஷட் அப் நான்சென்ஸ், அவன்கிட்டையே போய்க் கேளு” என விரைப்பாய் சொல்லி நகர்ந்தவனை விழி அகல பார்த்திருந்தாள் தக்ஷா.
அதன்பின் அவனிடம் பேசியதை சொன்னபடி ஹாஸ்டல் வந்து சேர்ந்திருந்தனர் இருவரும்.
“இப்போ அவனைத் தேடி எங்கேடி போறது” என வினவினாள் யோகா.
“தெரியலைடி, தொலைச்ச இடத்திலே கேளுன்னு சொல்றாரு இந்த ஹிட்லர்” எனச் சொன்னவள் யோசனையில் மூழ்கினாள்.
********
தன்னுடைய புல்லட்டில் வீட்டை நோக்கி பயணபட்டுக் கொண்டிருந்தான். அந்த அழகிய ஆண் மகன். வீட்டை வந்து சேர்ந்த நொடியில், ஷூவை வேகமாகக் கழட்டி விட்டு அந்த வில்லா டைப் வீட்டினுள் நுழைந்தான் திருநீலகண்டன்.
“ம்மா! ம்மா அவன் வண்டி சாவி எங்கே?” எனக் கேட்டபடி ஹாலில் சாவி தொங்க விடும் இடத்தைப் பார்த்தான். சாவி அங்கே இல்லை.
“என்னடா திரு வீட்டுக்கு வந்ததும் வராததுமா அவன் வண்டி சாவியைக் கேட்கிற? முதலில் காபியை குடி” எனக் காபியை நீட்டினார் பூரணி.
“முதலில் சாவியை எடுத்துக் கொடுமா” என அவன் கேட்க,
“முருகன் ரூம்ல போய்ப் பாருடா இருக்கும்” என அவர் சொல்ல,
“அவன் ரூம்க்கு நான் போக மாட்டேன்” என உறுதியாய் சொன்னவனைப் பார்த்து. “அவன் கிட்ட பேச மாட்ட , அவன் காரை மட்டும் ஓட்டுவியா டா” எனக் கேட்ட தாயை முறைத்த முறைப்பில். திருமுருகன் அறையிலிருந்த சாவியை எடுத்துக் கொடுக்க.
“எத்தனை நாள் இப்படிப் பேசாமல் இருக்கப் போறீங்கடா இரண்டு பேரும். அவன் உன் தம்பி தானே நீ பொறுத்து போகலாம்ல” என அக்கறையுடன் சொன்ன பூரணியைக் கண்டுகொள்ளாது. பார்க்கிங் நோக்கி நடந்தவன் காரை திறந்து பின்னிருக்கையைப் பார்த்தான் தக்ஷாவின் அலைப்பேசி மிளிர்ந்து கொண்டிருந்தது.
“இது யாருடைய போன்டா திரு” எனப் பூரணி கேட்ட போது அவன் பதிலேதும் சொல்லவில்லை. அலைப்பேசியை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்றான் திருநீலகண்டன்.

