Loading

புயல் 8

“என்ன பிரச்சனை உமா” என அழுத்திக் கேட்க “நீங்கதான் பிரச்சனை.. கொஞ்சம் வெளிய போறீங்களா?” கடுப்புடன் அவள் சொல்லவும் மணியம்மாள் திகைத்தார்.

உமாவின் முகத்தில் அதீத கோபம் இருந்தது. அவள் ருத்ரனைப் பார்த்தாள். அவனோ நீ பேசு என்பதைப் போல்தான் கைகட்டி இருந்தான்.

“ருத்ரா இவளைப் பார்த்தியா என்ன பேசுறான்னு.. நான் இங்க இருக்குறது தான் பிரச்சனையாடா” கண்ணீர் கடகடவென வழியத் தொடங்க “இந்த டிராமாவை வெளியில வச்சுக்கோங்க..” என்றவள் ருத்ரனிடம் திரும்பி “நான் குழந்தைங்க பொறக்குற வரைக்கும் இங்கேயே இருக்கேன். ஆனால் இவங்க இந்த ரூம்க்குள்ள வரக்கூடாது. முதல்ல கிளம்பிப் போகச் சொல்லுங்க. நடுராத்திரியில் தூங்க விடாமல் வந்து பஞ்சாயத்து பண்ணிட்டு” என்று சொல்ல “அம்மா வாம்மா. அவ பாரு இங்கேயே இருக்கேன்னு சொல்லிட்டா.. எனக்கு அதுவே போதும்” என்று சந்தோஷமாய் அம்மாவை இழுத்துச் சென்றான் ருத்ரன்.

“டேய் கையை விடுடா.. உன் பொண்டாட்டி எப்படிப் பேசுறா பார்த்தியா? அவளை என்னென்னு நீ கேட்காமல் என்னை போகச் சொல்லுற? நீயெல்லாம் என் புள்ளையாடா”

“அதுவாம்மா என் தம்பி மாதிரி இனி நானும் புள்ளையா மட்டும் இல்லாமல் பொண்டாட்டியோட பேச்சைக் கேட்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்”

“என்ன சொல்லுற?”

“நான் என்ன சொல்லுறேன்னு உனக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் தெரியாத மாதிரியே கேக்குற பார்த்தியா.. இந்த பிரச்சனையை நாம அப்பறமா பேசிக்கலாம். போய் தூங்கும்மா” அவன் பாட்டுக்குச் சென்றுவிட உமாவின் மீது கோபம்தான் அதிகமானது.

அவன் உள்ளே நுழையும் போதே அவன் மீது தலையணை பறந்து வந்து விழுந்தது.

“என்னடி”

“உள்ள நீ வரக் கூடாது. வெளியே போய் படு”

“இதெல்லாம் அநியாயம் உமா”

“அப்படித்தான் அநியாயம் செய்வேன். நீ பண்ணதோட கம்பேர் பண்ணும் போது இதெல்லாம் ஒன்னுமே இல்லை. மூடிட்டு போய் படு”

“அடியே மாமன் பாவம்டி”

“எனக்குத் தூங்கணும்” அவள் இதுதான் எனது முடிவு என்பது போல் அசையாமல் கிடக்க “என் பட்டு லட்டு பாவம்டி நான் இல்லாமல் தவிச்சுப் போயிடுவாங்க” என்றான் பரிதாபமாக.

“அவங்க தவிச்சுப் போறப்போ கூப்பிடுறேன் இப்போ கிளம்பு.‌.” இம்முறை தலையணை பறந்து வந்து முகத்திலேயே பட்டது.

அதை எடுத்துக் கொண்டு அவன் அறையை விட்டு வெளியே வர உடனே கதவை அடைத்துத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள்.

அவன் அந்த கதவின் அருகேயே தலையணையைப் போட்டுவிட்டு படுத்துக் கொண்டான்.

கஷ்டமாக இருந்தாலும் அவள் உள்ளேதானே இருக்கிறாள் என்பதால் மனதை தேற்றிக் கொண்டு தூங்கிவிட்டான்.

தன்னைத் தாண்டிச் செல்லும் அவளின் ஆடையின் உரசலில் எழுந்துவிட்டான் ருத்ரன்.

“எங்கே டி போற?” என்று கேட்க “பசிக்குது.. காஃபி குடிக்கலாம்னு போறேன்” என்றாள் அவள்.

“இரு நான் வந்து போடுறேன்” அவன் கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டான். அவன் பேச்சைக் கவனிக்காமல் அவள் நகர “அட இரு உமா.. நான் வர்றேன்” அழுத்திச் சொன்னவன் அவளை மெதுவாக அழைத்துக் கொண்டு கீழே வந்தான்.

அப்போதுதான் விடிந்திருந்தது. இன்னும் கண்ணாயிரம் அறைக்குள் இருந்து வெளியே வரவில்லை. மணியம்மா வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்க இவள் கிச்சனுக்குள் நுழைந்தாள்.

“உன்னைத்தான் எதுவும் செய்யக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல. நீ வெயிட் பண்ணு. நானே போட்டுத் தர்றேன்” என்று சொன்னவன் அவளுக்காக பாலைக் காய வைத்தான்.

“பட்டு லட்டு.. உங்களுக்காக அப்பாவே எல்லாமே பண்ணுறேன். வெளியே வந்ததும் அம்மாகிட்ட அப்பாவைப் பத்தி கொஞ்சம் நல்லவிதமாக சொல்லிடுங்க” என பேசியபடியே அவன் காஃபி தயாரித்தவன் பின் அதை தனக்கு வைத்துக் கொண்டு அவளுக்கு பால் ஆற்றிக் கொண்டு வந்தான்.

“தங்கம் இந்தாடி”

“எனக்கு காஃபி வேண்டும்”

“அது வேண்டாம். பாலே குடி. அதுதான் உடம்புக்கு நல்லது”

“இல்லை எனக்குக் காஃபி தான் வேண்டும்” என்று சொல்ல அவனோ தான் குடித்துக் கொண்டிருந்ததை அவளிடம் நீட்டினான்.

வேகமாக அவன் நீட்டியதை வாங்கி வாயிலும் வைத்திருந்தாள். அதென்னவோ அவன் போடும் காபி அவன் அருந்திய பின் அருந்தும் போது அவ்வளவு சுவையாக இருக்கும்.

இவளுக்கு இப்போது அந்த சுவை தேவைப்பட்டது. அவள் பேசாமல் குடித்துக் கொண்டே இருக்கே ருத்ரன் காலைவேளையின் ஏகாந்தத்தினை அனுபவித்தபடி அவளையும் பருகிக் கொண்டிருந்தான்.

அதில் கையிலிருந்த பால் கூட பிடிக்காது என்ற போதும் அவனுக்குள்ளே இறங்கியிருந்தது.

மணியம்மாள் வரவும் “அம்மா அவளுக்குப் பிடிச்சதை செய்ங்க” என்று சொல்லிவிட்டு அவன் நகரப் பார்க்க “அவளுக்கு வேணும்னா அவளையே செய்யச் சொல்லுடா” என்றார் .

“அம்மா என் தம்பி பொண்டாட்டி..”

“நானே பண்ணுறேன் டா. போதுமா!” அவர் உள்ளே சென்றுவிட்டார்.

அடுப்பைக் கூட பற்ற வைக்காமல் போனில் தன் மகளைத்தான் முதலில் அழைத்தார்.

“என்னம்மா இன்னைக்கு சீக்கிரமே போனை போட்டுட்ட. என்ன சமையல் பண்ணுறதுன்னு குழப்பமா?” கவிதா கேட்டாள். ருத்ரனுக்கு அடுத்துப் பிறந்தவள்.

“சமையல் பண்ணனுமான்னு இருக்குடி”

“உன் மகனோட பொண்டாட்டி வீட்டுலயா இருக்கு” அவள் கேட்டதும் “ஆமா” என்றார்.

“நைட்டே போயிடும்னு சொன்னயேம்மா”

“இல்லைடி போகலை. நைட்டும் இரண்டு பேருக்குள்ள பயங்கர சண்டை. நான் போய் இதையே சாக்கா வச்சு இன்னும் பிரச்சனையை பெருசாக்கலாம்னு நினைச்சேன். ஆனால் அவ வெளிய போங்கன்னு மூஞ்சுல அடிச்ச மாதிரி சொல்லிட்டா”

“அவளா அப்படிச் சொன்னா.. அம்மா நான் அங்க வரவா?” கவிதா கேட்க “வர்றயா.. நல்லது.. இந்த பிரச்சனையை முடிச்சால்தான்டி நிம்மதி. நீ வா” என்று போனை வைக்க கிச்சன் வாசலில் கைகட்டி நின்றிருந்தாள் உமா மகேஷ்வரி.

அவளைப் பார்த்ததும் திடுக்கிட்டவர் பின் திரும்பிக் கொள்ள “சதித்திட்டம் எல்லாம் போட்டாச்சுங்களா?” என்றாள் நக்கலாக.

எதுவும் பேசாமல் சமையல் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்

“அப்படியிருந்தும் உள்ளே வந்துட்டேயேன்னு நினைக்கிறீங்க போலயே. ஆக்சுவலி எனக்கு சில விஷயங்கள் நேத்து நைட்டுத்தான் ஸ்ட்ரைக் ஆச்சு. அதான் இங்கேயே இருந்துடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்”

“உன் தலையெழுத்து இதுதான்னா அதை மாத்த யாரால மாத்த முடியும் உமா. வேறொருத்தி கூட வாழ்ந்தாலும் பரவாயில்லைன்னு நீ இந்த வீட்டுக்குள்ள மறுபடியும் வந்ததுலயே தெரியுது உன் தராதரம் என்னென்னு…?”

“ஓ அப்பிடியா.. நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் அது உண்மையா அத்தை..” அத்தையில் அவள் அழுத்தம் கொடுத்தாள்.

“உன் புருஷனைப் பத்தித்தானே அதெல்லாம் உண்மைதான்”

“அதுதான் இல்லை.. உங்க புருஷனைப் பத்தி..”

சட்டென அடுப்பில் அவரது விரல் பட்டுவிட்டது..

“நீ நீ என்ன சொல்லுற?” கைவிரல்களை ஊதிக் கொண்டே அவர் கேட்க,

“அய்யோ சுட்டுடுச்சா அத்தை. பார்த்து வேலை செய்ய மாட்டீங்களா? இதையெல்லாம் உங்க புள்ள பார்த்தால் அப்பறம் இந்த வீட்டுல அடுப்பே எரிக்காதீங்கன்னு புதுசா ரூல்ஸ் போட்டாலும் போட்டுடுவாரு.. அவ்வளவு பாசம் உங்க மேல” நக்கல் தாராளமாக வழிந்தது அவள் பேச்சில்.

“உனக்கு என்ன தெரியும்”

“ஓஹ் அதுவா.. அதெதுக்கு? நீங்கதான் பலவருஷத்துக்கு முன்னாடியே அதுக்கு ஒரு சூப்பரான க்ளைமேக்ஸ் எழுதியிருக்கீங்களே. நான் மிரண்டுட்டேன் அத்தை”

மணியம்மாளுக்குப் படபடவென வந்துவிட்டது.

“சமையல் பண்ணுங்க.. நான் சாப்பிட வர்றேன்” அவரது படபடப்பை ஆழ்ந்து ரசித்துப் பார்த்தாள்.

“என்னனென்னு சொல்லிட்டுப் போ..” என்று சொல்ல “சொல்லுறேன் சொல்லுறேன். எனக்கு இன்னைக்கு சிக்கன் பிரியாணி சாப்பிடணும் போல இருக்கு. அதை மொதல்ல செஞ்சு வைங்க. நான் குளிச்சுட்டு வர்றேன். அதுக்குப் பிறகு நாம சாவகாசமா பேசுவோம். அத்தை இன்னைக்கு செவ்வாய் கிழமை. உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே” சிரித்தபடியே அவள் பாட்டுக்கு மணியம்மாளை திகைப்படைய செய்துவிட்டு சென்றுவிட்டாள்.

“என்னதிது இவ இப்படிப் பேசிட்டுப் போறா.. என்னவா இருக்கும்? மணி அவ பேசுறான்னு நீ அவசரப்பட்டு எதுவும் வாய் விட்டுடாத. முதல்ல சிக்கன் பிரியாணி செய்யலாம்” தனக்குள்ளயே சொல்லிக் கொண்டவர் உடனே கண்ணாயிரத்தினைத் தேடி அறைக்குள் வந்தாள்.

வெளியே செல்வதற்காக கிளம்பிக் கொண்டிருந்தவரிடம் “ஏங்க சிக்கன் வாங்கிட்டு வாங்க” என்றார்.

“இன்னைக்கு செவ்வாய் கிழமை. நீதான் சாப்பிட மாட்டயே. வீட்டுலயும் செய்ய மாட்டயே. அப்பறம் ஏன் சிக்கன் மணி. “

“அது உமா ஆசைப்பட்டுக் கேட்டுச்சு. மாசமா இருக்கப் புள்ளை கேட்டதும் செஞ்சுத் தரணும்ல”

“இதுவும் புதுசா இருக்கே. நீ உமா கேட்டு செஞ்சு தரப் போறயா? நம்ப முடியலையே மணி”

“பாவம்ங்க ரொம்ப வருஷம் கழிச்சு புள்ளை உண்டாகியிருக்கா. என்ன இருந்தாலும் நம்ம வீட்டு இரத்தம்தானே. நீங்க போய் சிக்கன் வாங்கிட்டு வாங்க” என்று சொல்ல அவரோ மீண்டும் மீண்டும் மணியம்மாளைப் பார்த்தபடியே சென்றார்.

கிளம்பி அவன் தயாராக இருக்க அவளும் சென்று குளித்துவிட்டு வந்தாள்.

“உமா எனக்கென்னவோ பயமா இருக்கு”

“ஏன் மாட்டிக்கிடுவோம்னா?”

“ப்ச் நான் ஏன்டி மாட்டிக்க போறேன்”

“நீதானே நேத்து பேசிட்டு இருந்த மீட் பண்ணலாம்னு. நானும் கூடவே வந்தால் அந்த மீட்டிங் கேன்சல் ஆகிடும்னு தானே இந்த பயம்”

“அப்படியெல்லாம் எதுவும் இல்லை. உன்னோட உடல் நிலையை நினைச்சுத்தான் நான் பயப்படுறேன். பட்டு லட்டு பாவம்ல” நேற்றைய ருத்ரனாய் இல்லாமல் இன்று அவன் பேச்சே தயங்கித் தயங்கி தான் வந்தது.

“பட்டு லட்டு எல்லாம் பாதுகாப்பாத்தான் இருப்பாங்க. நீ பாவமா முகத்தை வச்சுக்கிட்டு ஓவரா பெர்பாமென்ஸ் பண்ணாத.. வெயிட் பண்ணு குளிச்சுட்டு வர்றேன். அதுக்குள்ள ஏதாவது திருகுதாளம் பண்ணலாம்னு நினைச்சே மண்டையே உடைச்சுடுவேன்” என்று சொன்னவள் குளிக்கச் சென்றுவிட்டாள். ஆக, அவளைக் கூட்டிட்டு வந்து அவனே அவனுக்கு குழி பறித்துக் கொண்டான்.

—————————–

ஆத்விக் அக்கா அனுப்பிய மெசேஜையே பார்த்தபடி இருந்தான்.

அவனருகே அவனது அம்மா வந்து “என்னாச்சுடா” என்றார்.

“அம்மா இவ அனுப்பியிருக்கதை பாருங்க” எனக் காட்ட “இவ என்னதான் நினைச்சுட்டு இருக்கா..?” கோபத்துடன் பேசினார் அம்மா.

“எனக்குமே அதுதான் புரியலைம்மா. இந்த சமயத்துல ஏன் இப்படிப் பண்ணனும். இவளுக்கு அறிவு மங்கிடுச்சும்மா.. எல்லாம் சகவாச தோசம்” என்று அவன் வாய்க்கு வந்ததைப் பேசினான்.

“அப்பாகிட்ட சொல்லி அவளைக் கூட்டிட்டு வந்துடலாம்டா. எனக்கு அவ அங்க இருக்குறதுல உடன்பாடே இல்லை”

“உங்க மகள் வரணுமேம்மா.. நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன் அவ வரமாட்டுறா?” சலிப்பாய் அவன் சொல்லியபடியே அந்த மெசேஜைதான் பார்த்தான்.

—————————

ருத்ரனுக்கு அதிசயமாக இருந்தது.

“இன்னைக்கு செவ்வாய்கிழமை தானடி”

“ஆமா”

“அம்மா என்னம்மா இது”

“மருமகள் ஆசையாய் கேட்டாடா அதான் பண்ணேன். சாப்பிடு உமாம்மா”

“அம்மா உன் குரல்ல பாசம் தூக்கலா இருக்கே. என்ன விஷயம்?” ஆராய்ச்சியாக அவரைப் பார்த்தான் அவன்.

“நம்ம வீட்டு பேரப் பசங்க. அவங்க நல்லபடியாய் வளரணும்னா உமாவை நாம நல்லபடியா பார்த்துக்கணும்ல. அவளே என்கிட்ட வந்து சிக்கன் பிரியாணி வேணும் அத்தைன்னு கேட்குறப்போ செவ்வாய்க்கிழமையெல்லாம் ஒரு விஷயமா டா” என்று பாசமாய் சொல்ல அவன்தான் இன்னமும் ஆராய்ச்சி பார்வையை கைவிடாமல் இருந்தான்.

“சாப்பிடுங்க ருத்ரன். கடைக்குப் போகணும்” உமா சொல்ல

“மாசமா இருக்கும் போது அலைச்சல் வேண்டாயே உமாம்மா. நீ பாட்டுக்குப் போய் ரூம்ல ரெஸ்ட் எடும்மா” என்றார் மணி.

“அத்தை  இங்க இருந்தால் நான் பழசையே யோசிச்சுட்டு இருப்பேன். உங்ககிட்ட அதைப் பத்திக் கேட்பேன். உங்களால எனக்கு பதில் சொல்ல முடியுமா?” லெக் பீஸை கையில் வைத்தபடி அவள் கேட்க “நீ போயிட்டு வாம்மா” என்றார் அவர்.

ருத்ரனுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு “மாமியாரும் மருமகளும் பாசப்பயிரை வளர்க்குறீங்க போலயே.. நடத்துங்க” என்றவன் சாப்பிட ஆரம்பித்துவிட்டான்.

சாப்பிட்டு முடித்து கடைக்குக் கிளம்பும் போது வாசலில் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய கவிதா முதலில் முறைத்துப் பார்த்தது உமாவைத்தான்.

அவளோ பதிலுக்கு அதைவிட அதீத முறைப்போடு பார்த்துவிட்டு “சிக்கன் பிரியாணின்னு இந்த வீட்டுல எழுதுனாலே எப்படித்தான் மூக்கு வேர்க்குதோ..? கரெக்டா வந்துட வேண்டியது” என்றவாறே காரினை நோக்கி நடந்தாள்..

புயல் தாக்கும்…

 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
17
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்