Loading

புயல் 23

“பழியை அவன் மேல தூக்கிப் போடாத ருத்ரா. வீராவைப் பத்தி எனக்குத் தெரியும்?” மணியம்மாள் இப்படித்தான் சொல்லுவார் என்று தெரிந்ததுதானே அவனிடம் இருந்து கசந்த புன்னகை ஒன்று வந்தது.

“அவன் மேல அவ்வளவு நம்பிக்கை. ம்ஹ்ம்.. ஆனால் அதுல கொஞ்சம் கூட என் மேல ஏன் இல்லாமல் போச்சு. ஏன்னா சொன்னது உங்க புள்ளை. அதனால உடனே நம்பிட்டீங்க அப்படித்தானே. அதையே உமாகிட்ட சொல்லி இந்த லூசும் அப்படியே வீட்டை விட்டுப் போயிடுச்சுன்னு சந்தோஷப் பட்டீங்க.. என்ன இருந்தாலும் நியாயம்னு ஒன்னு இருக்குதுல அம்மா. அது அவ்வளவு சுலபமா விட்டுடாது”

“ஓஹோ இப்போ வீராவை சொல்லி இந்த குடும்பத்தை உடைக்கணும். அதானே”

“ஏற்கனவே இந்த குடும்பம் உடைஞ்சதுதான். இனியும் உடைக்க எல்லாம் ஒன்னுமே இல்லை அத்தை. உங்க பையன் சொல்லுறது தான் உண்மை”

“நீ வாயை மூடுடி. நீ என்னைக்கு இந்த வீட்டுக்குள்ள காலெடி எடுத்து வச்சயோ அன்னைக்கிருந்தே இப்படித்தான் குடும்பத்துல மாத்தி மாத்தி பிரச்சனை. இப்போ குடும்பத்தை பிரிச்சுட்ட. ரொம்ப சந்தோஷம். எப்படியோ சந்தோஷமா இரு போ”

அந்த தோரணை நீ எப்படி சந்தோஷமாய் இருப்பாய் என்று பார்க்கிறேன் என்பது போல் இருந்தது.

“நான் குடும்பத்தைப் பிரிக்கணும்னு நினைச்சிருந்தால் மூனு வருசமா வெயிட் பண்ணி பிரிக்கணும்னு அவசியமே இல்லை. வந்த உடனே பிரிச்சுக் கூட்டிட்டுப் போயிருப்பேன். மனசாட்சியே இல்லாமல் நீங்க நடந்துக்கிட்டதுக்கு எல்லாம் எப்பவோ பதிலுக்கு பதில் பேசியிருப்பேன்”

“அப்படி என்ன மனசாட்சி இல்லாமல் நடந்துக்கிட்டேன்”

“பட்டியல் ரொம்ப பெருசா போகும் பரவாயில்லையா?”

“ருத்ரா உன் பொண்டாட்டியை பேச வேண்டாம்னு சொல்லி வை. தேவையில்லாதது எல்லாம் பேசிட்டு இருக்கா”

“அவ பேசுறது எல்லாம் தேவையோடதான்”

“அப்போ முடிவு பண்ணிட்டீங்க. சரி எப்படியோ போங்க. ஆனால் கடையை வீராவுக்குக் கொடுத்துடு. நீ என்னமோ பண்ணு”

“நீங்க இப்படித்தான் சொல்லுவீங்கன்னு தெரிஞ்சுதான் முதல்லயே அப்பாகிட்ட எல்லாத்தையும் பேசியாச்சு. அவரும் சரின்னு சொல்லிட்டாரு”

“அதுக்கு நான் சரின்னு சொல்லணும் ருத்ரா. எல்லாத்தையும் நீ மட்டுமே எடுத்துட்டால் நான் என்ன விரல் சூப்பிட்டு போறதா..”

“அய்யோ நீங்க ஏன் அப்படிப் போகணும் கொழுந்தனாரே.

எவ்வளவு பணம் நீங்க எடுத்துச் செலவு செஞ்சிருக்கீங்க. அந்த கணக்குக்கு கடையோட பார்ட்னர்ஷிப்ல இருந்து நீங்க விலகித்தானே ஆகணும்”

“உங்ககிட்ட நான் பேச வரலை”

“ஏன் நாடகம் போடணும்னா தான் என்கிட்ட பேசுவீங்களா”

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே, “இங்க என்ன நடக்குது?” லட்சணா உள்ளே வர, வீரா பம்மினான்.

“வா லட்சுமா. ஒரு பிரச்சனையும் இல்லை. நீ ரூமுக்குப் போம்மா.. ” மணியம்மாள் அவளிடம் சொன்னார்.

“இல்லை லட்சணா. நீ இரு. நாங்க பேசிட்டு இருக்கோம். நீ இல்லைன்னு குறை இருந்தது. இப்போ அது சரியாகிடுச்சு” அவளை தடுத்து நிறுத்தினாள் உமா.

“என்ன விஷயம் அக்கா”

“நாங்க வேற வீட்டுக்குப் போகப் போறோம்”

“தனிக்குடித்தனம் போறீங்களா? சரி “

“கடையை எங்க பேர்ல மாத்தியாச்சு”

“அது பொதுதானே..”

“இப்போ பொது கிடையாது”

“அப்போ வீரா?”

“வீராவுக்கு கடையில இருக்குறதுல இஷ்டம் இல்லையாம். உனக்கே தெரியும். அவனை கடையில பார்க்குறதுலாம் அதிசயம்னு” என்றான் ருத்ரன்.

அது உண்மை என்பதால் அவளும் அமைதியாக இருந்தாள். அவளும் சில முறை சொல்லியிருக்க அவன் கேட்டதே இல்லை. எல்லாத்தையும் அண்ணன் பார்த்துக்குவான் என்று முடித்துக் கொள்பவனிடம் மேற்கொண்டு அவள் எதுவும் சொல்லவில்லை. ஆனால் இப்படியொரு நாள் வரும் என்று எதிர்பார்த்திருந்தாள்.

“சரிங்க மாமா.. நான் அப்பாகிட்ட பேசிக்கிறேன். இவருக்கு தேவையானதை என் அப்பா செஞ்சு தந்துடுவாரு” என்று சொல்லவும் “அப்படிச் சொல்லு மருமகளே.. எல்லாரும் காணாததை கண்டது மாதிரி இங்கிருந்து வழிச்செடுத்துப் போகத்தான் பார்க்குறாங்க.. உன்னோட மனசு யாருக்கு வரும்” என்றார் மணியம்மாள். இதற்காகத்தானே அந்த வீட்டுப் பெண்தான் வேண்டும் என்று லட்சணாவை மருமகளாக்கிக் கொண்டது.

“அம்மா நீ வேற ஏன்மா. பேசாமல் இரு. லட்சணா நீ பேசாத. அவ என்ன சொல்லுறது. என்னால எல்லாம் கடையை அப்படி விட்டுக் கொடுக்க முடியாது”

“ஏன்?” லட்சணா கேள்விக் கேட்டாள்

“அது பொதுதானே”

“அதனாலதான் பொதுச் சொத்தை எடுத்து அந்த பொம்பளைக்கு வாரிக் குடுத்தயா டா?” கேட்டே விட்டாள்.

வீரா வாய் மூடிக் கொண்டது. பிடிபட்ட பாவனையுடன் அவளை பார்த்தான்.

“என்ன பார்க்குற? என்ன சொன்னாலும் இவ நம்புவான்னு இன்னும் கதை சொல்லப் போறயா. இனி உன்னால முடியாது. அந்த கடை இனியும் பொதுவில இருந்தால் நீ சரிப்பட்டு வரமாட்ட.. இப்போதைக்கு உனக்கு இரண்டு ஆப்ஷன். ஒன்னு இப்பவே என்கூட கிளம்பி எங்க வீட்டுக்கு வர்ற..

இல்லை இங்கேயே இருந்துக்கோ நான் கிளம்பிடுறேன். பிள்ளையை எப்படிப் பார்த்துக்கணும்னு எனக்குத் தெரியும்”

“என்னமா இது இப்படிப் பேசுற”

“என்னால உங்களை மாதிரி பாய்ஷன் சாப்பிடுற ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாது. நான் இப்படித்தான். இப்போக் கூட எனக்கு இவனோட வாழணும்னு ஆசையெல்லாம் இல்லை. ஆனால் இங்கயே இருந்தால் இவனோட புத்தி எப்படி வேலை செய்யும்னு சொல்ல முடியாது. கோபத்துல மேலும் மேலும் அக்கா மாமாவைத்தான் இவன் கஷ்டப்படுத்துவான். என்ன சொல்லுற கிளம்புறயா? இல்லை இங்கேயே இருக்கயா?” என்றுக் கேட்டாள் அவள்.

மணியம்மாள் தன் கணவனை இதுக்கெல்லாம் காரணம் நீதான் என்று ஆங்காரமாக பார்க்க அவரோ தலை கவிழ்ந்து நின்றுவிட்டார்.

எப்போதும் மணியம்மாளை உறுத்தும் விஷயம் அதுதானே. அதுவும் உமாவுக்கு தெரியும் என்ற போதே அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்போது இவளுக்கும் தெரிந்ததில் மனம் கசங்கிப் போனது.

“வீரா தப்பு பண்ணியிருக்க மாட்டான் லட்சணா. இவங்கதான் ஏதோ திட்டம் போட்டு பேசுறாங்க” மென்மையாக முணுமுணுத்தார்.

“அப்படியா அத்தை.. இதைக் கேளுங்க” என்று ஒரு ஆடியோவை ஓடவிட்டாள். அது ருத்ரனும் சரவணனும் அந்த பெண்ணிடம் சென்று பேசியபோது பதிவு செய்தது.

“உங்க அருமை புள்ளையோட வண்டவாளம். இப்பவாவது புரியுதா?”

“இதை இவனுங்களே திட்டம் போட்டு ரெடி பண்ணியிருப்பாங்க”

“ஓஹ் ஆமால.. அப்படிக் கூட இருக்கும்ல. அப்போ இதையும் இவங்கதான் திட்டம் போட்டு ரெடி பண்ணாங்களா?”

என்று பேங்க் ஸ்டேட்மெண்ட்டை அவர் முன் நீட்டினாள்.

வாங்கிப் பார்த்தவருக்கு தலை கிறுகிறுத்தது.

அவ்வளவு பணம்.. இதற்காகத்தான் ருத்ரனை விடாமல் பிடித்துக் கொண்டது. அந்த பணம் அநாமத்தாக வேறு ஒரு பெண்ணிற்குச் சென்றதை ஏற்கவே முடியவில்லை.

“நீயா வீரா?” அதிர்ந்துப் போய் கேட்டார்.

“அம்மா அது..” பேச்சு வரவில்லை.

“இதைக் கூட ஏத்துக்கலாம். உங்க பையன் அந்த பழியை ருத்ரன் மாமா மேல போட்டதை தான் என்னால ஏத்துக்க முடியல. ஏற்காடு திடீர்னு கூட்டிட்டுப் போனபோதே எனக்கு சந்தேகம். அதான் என் அப்பாகிட்ட ருத்ரன் மாமாவை ஃபாலோ பண்ணி விஷயம் என்னென்னு பாருங்கன்னு சொல்லிட்டுப் போனோன். நேத்து அம்மா வீட்டுக்குப் போனதும் அதுக்காகத்தான். குடும்பத்தை பிரிக்கணும்னு நினைச்ச உங்க பிள்ளையை விட்டு என்னால பிரிய முடியும். ஆனால் பிரிஞ்சுப் போயிட்டால் அவன் பண்ண தப்புக்கு எப்படித் தண்டனைத் தர்றது. அவன் கூடவே இருந்து தண்டனை தர்றதுதான் சரியா இருக்கும்னு முடிவு பண்ணிட்டேன். இனி அவன் வாய் திறக்கவே கூடாது.. கிளம்பு” அவளது அதிகாரத்தில் அடங்கிப் போவதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை.

புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது.

ருத்ராவை நிமிர்ந்து மணியம்மாள் பார்க்க அவனோ உமாவுடன் பேசிக் கொண்டிருந்தான்.

ருத்ரன்! அவன் கடைக்குள் நுழைந்ததில் இருந்து யாரையும் கடைக்குள் வரவிட்டதே இல்லை. அந்தளவிற்கு உழைப்பான். அவன் வருவதற்கு முன் வரை மணியம்மாளும் சேர்ந்து கடையில் இடுப்பொடிய நின்று வேலை பார்த்திருக்கிறார். இப்போது நினைத்துப் பார்க்கையில் இந்த சொகுசு எல்லாம் அவன் அளிக்கும் பிச்சை என்று புரிந்தது.

“ருத்ரா! இப்போ வீட்டை விட்டு அவசியம் நீ போகணுமா?” இறங்கி வந்து பேசினார்.

அதில் பாசம் எல்லாம் அவ்வளவு அதிகமாக இருந்து விடவில்லை. ஆனால் மறைமுகச் செய்தி ஒன்று இருந்தது. அது உடம்பு வணங்காத மணியம்மாளின் நிலை மட்டுமே

“போய்த்தான் ஆகணும். அதுக்குத்தானே ஆசைப்பட்டீங்க. இனி இல்லாதவன்னு இவளை நீங்க சொல்ல முடியாது. உமா நீ ஆசைப்பட்டது படி எல்லா பிரச்சனையும் முடிஞ்சுடுச்சு. கிளம்பலாமா?”

“கொஞ்சம் பேசணும் ருத்ரா”

“பேசு. நான் ரூம்க்கு போறேன்” அவன் சென்றுவிட, “உங்களுக்குத் தெரியும். இங்க வந்ததுல இருந்து நான் என்னைக்கும் உங்களை மரியாதைக் குறைவா நடத்துனதே இல்லைன்னு. எனக்கு முடியலைன்னா கூட வேலை எல்லாத்தையும் செஞ்சு முடிச்சுட்டுத்தான் போவேன். நான் வந்த பிறகுதான் இரண்டு கல்யாணம் நடந்தது. கல்யாணத்துல பெத்தவங்களா நீங்க செஞ்சது உங்க கால்ல விழுந்தவங்களை ஆசிர்வாதம் பண்ணது மட்டும்தான். மத்தபடி எல்லா வேலையும் செஞ்சது நானும் ருத்ரனும்தான். இது எங்க கடமை தான். இதைச் சொல்லிக் காட்டணும்னு அவசியம் இல்லை. ஆனாலும் சொல்லுறேன் ஏன்? நீங்க சில விஷயங்களை புரிஞ்சுக்கணும்.

ருத்ரனும் நானும் ஆசைப்பட்டது உங்களுக்குப் பிடிக்கலை. அதை நீங்களும் பலவழியில காட்டுனீங்க. பொறுத்துக்கிட்டேன். சில சமயம் எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா? இந்த இழவெடுத்த காதலை ஏன்டா பண்ணித் தொலைச்சோம்னு இருக்கும். நான் கிச்சன்ல வேலை செஞ்சுட்டு இருப்பேன். ஏதாவது செய்யணுமா அப்படிங்கிற கர்டஸிக்குக் கூட நீங்க எதுவும் கேட்டதில்லை. ஆனாலும் செஞ்சேன். ஏன்? இது என்னோட வீடுன்னு நான் நினைச்சேன். உங்களோட நினைப்பு வேற மாதிரி இருந்துருக்குன்னு லட்சணாவுக்குத் தனி கவனிப்பு கவனிச்சப்போ புரிஞ்சது. பொதுவா இரண்டு பசங்க இருக்குற வீட்டுல வர்ற பிரச்சனைதான் இது. ஆனாலும் ருத்ரனை நீங்க ரொம்பவே யூஸ் பண்ணிக்கிட்டீங்க. அதுமட்டும் இல்லை. அவன் மேல இல்லாத பழி போட்டீங்க. அப்பாவும் நானும் போய் பேசிட்டு வந்தோம் அவன் கேட்கவே இல்லைன்னு வீரா சொல்லும் போதே நீங்க அது உண்மைதானான்னு கேட்டுக் கன்பார்ம் பண்ணீங்களா? ருத்ரன்கிட்ட.. இல்லையே. உங்களுக்கு வீரா சொல்லுறது தான் சரி. ருத்ரன் வேலைக்காரனா சரி.. அப்படியொரு கோணத்துல இருந்தீங்கன்னா.. மூத்தப் புள்ளையோட மனசை உங்களால என்னைக்கும் புரிஞ்சுக்க முடியாது. வீராவுக்கு பங்கு இல்லைன்னு இப்போதைக்கு சொன்னது அவன் கொஞ்சமாச்சும் குடும்ப பொறுப்புக்குள்ள வரணும்னு தான். அவனோட பங்குப் பணத்தை பேங்க்ல டெபாசிட் பண்ணியிருக்கு. அந்த பணத்தோட இன்ட்ரெஸ்ட் வரும். அதை நீங்க உங்களுக்கு யூஸ் பண்ணிக்கோங்க. என்னடா இப்படித் தனியா விட்டுட்டு போறாங்களேன்னு யோசிக்காதீங்க. காலம் எல்லாத்தையும் மாத்தும். அதுவரைக்கும் தனித்தனியா இருக்குறதுதான் பெட்டர். இது உங்க மூத்த புள்ளையோட முடிவுதான். சோ நான் வந்துதான் குடும்பத்தை பிரிச்சுட்டேன்னு இனி சொல்லாதீங்க” எழுந்து சென்றுவிட்டாள்.

“என்னடி அட்வைஸ் மழை பொழிஞ்சுட்டு வர்ற”

“அட்வைஸா! மனசுக்குள்ள அழுத்திட்டே இருக்க விஷயம் ருத்ரா. இதைச் சொல்லாமல் என்னால இருக்க முடியல. அதான் சொல்லிட்டேன். ஏன் உன் அம்மாவைச் சொன்னதும் உனக்கு மனசு தாங்கலையா?”

“இப்போ மனசுக்குள்ள உமா தங்கம் நான் தங்கியிருக்கு. அதனால? எல்லாம் தாங்கும்”

“என்ன தாங்கும்”

“தங்கம் என்னைத் தாங்கும். தாங்குறயா?” பிரச்சனையை முடித்த சந்தோஷத்தில் அவன் எதற்கோ அடிபோட அவன் தலையிலேயே அடிபோட்டவள் “இரண்டு நாளா ஊர்சுத்திட்டு இருந்தது எல்லாம் போதும். இப்போக் கடைக்குப் போங்க  நான் லட்சணா கிட்ட பேசணும்..” என்றதும் அவனும் கிளம்பிவிட்டான்.

புயல் தாக்கும்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 31

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
21
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்