Loading

புயல் 21

அவனது விரல்களும் அவளது விரல்களும் ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தது அந்த அரையிருளில். இருவரது மனமும் அவ்வளவு நிறைவாக இருந்தது.

இதமான தென்றல் அவர்களை வருடியது போல் உணர்ந்தார்கள். எங்கே வாழ்வே முடிந்து போய்விட்டதோ என்று பயந்திருந்த வேளையில் வாழ்க்கையின் அழகியல் இன்னும் கூடியிருந்ததில் ருத்ரனுக்கு உமாவின் மீதான காதல் இன்னும் கூடியிருந்தது. இப்போதுதான் சொல்லப் போனால் காதலைக் காட்டுவது எப்படி? என்பதைக் காட்டுகிறான்.

“எதுவும் வேண்டுமா உமா?”

“ம்ம் வேண்டும்.. உம்..மா”

“அது உமா கேட்காமலே தருவான் ருத்ரன்.. இருந்தாலும் இப்போ கேட்டதுக்காக” என்று அவன் அவசர அவசரமாய் ஒற்றியெடுத்து நிமிர்ந்தான்.

அன்றைய தினம் உமா மற்றும் ருத்ரனின் வாட்சப் ஸ்டேட்டஸ் தொடர்வண்டி போல் சென்றுக் கொண்டிருந்தது.

“இத்தன ஃபோட்டோ இப்போ போட்டே ஆகணுமா? “

“நீங்க என்ன ப்ளான்ல இருக்கீங்கன்னு தெரியல ருத்ரன். பட் நான் எல்லாரையும் கடுப்பாக்கிப் பார்க்கணும்ங்கிற ப்ளான்ல இருக்கேன். டோண்ட் டிஸ்டர்ப் மீ”

“அப்படின்னா?”

“என்னைத் தொல்லைப் பண்ணாதீங்க”

“பண்ணுவேனே?”

“நான் உங்க மம்மியை டார்ச்சர் பண்ணுவேன்”

“நீ தாராளமாக பண்ணலாம்”

“ஓஹோ.. அப்போ நீங்க அம்மா பையன் பதவியை ராஜினாமா பண்ணுறீங்களா?”

“இப்பவும் பாசம் இருக்குது. என்னால யாரையும் விரோதியாய் பார்க்க முடியாதுதான். ஆனால் வாழ்க்கையை தொலைக்குற அளவுக்கு பாசம் வைக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்றான் உணர்ந்து.

“அப்பறம் உங்க டார்லிங் கிட்ட இருந்து போன் வரலையா?” பேச்சை இவளே மாற்றினாள்.

“இன்னும் இல்லை? எப்படியும் உனக்கு விஷயம் தெரிஞ்சுப் போனதால பேசாமல் இருப்பான்..” சொல்லி முடிக்கவில்லை. அவனே அழைத்திருந்தான்.

 

“மூக்கு வேர்த்திடுச்சு போல உங்க டார்லிங்க்கு” என்று அவள் உதட்டைச் சுழித்துச் சொல்ல போனை சிரிப்புடன் ஏற்றிருந்தான்.

“மாமா!”

“சொல்லுடா”

“ஸ்டேட்டஸ் எல்லாம் பயங்கரமா இருக்கு. இப்போத்தான் புதுசா கல்யாணம் ஆனதா நினைப்பா உங்களுக்கு”

“அப்படித்தான் நினைப்பு எனக்கும் வருது. ரொம்ப ஜாலியா இருக்குது “

 

“என் உடன்பிறப்பு நேத்து உங்களை போட்டு அடிச்சுக் கொடுமை பண்ணியிருப்பாளே. இன்னைக்கு உங்களை ஹாஸ்பிட்டல்ல வந்துதான் மீட் பண்ணனும்னு நினைச்சுட்டு இருந்தேன். நீங்க என்னென்னா தியேட்டர்ல ரொம்ப ஜாலியா இருக்கீங்க. சிங்கிள் சாபத்தை வாங்கிக்காதீங்க அங்கிள்”

“இப்போ நீ எதுக்கு போன் பண்ண அதைச் சொல்லு”

“ஜிபேயில ரெக்வஸ்ட் குடுத்துருக்கேன். அதை பே பண்ணி விடுங்க”

“அடேய் ஏற்கனவே உனக்கு எவ்வளவு அனுப்பியிருக்கேன்”

“அது எல்லாம் உங்ககூட சேர்ந்து நடிச்சதுக்கான சம்பளம் மாம்ஸ். அதையும் இதையும் கன்ப்யூஸ் பண்ணிக்காதீங்க”

“சரி இது எதுக்குடா”

“நீங்க அக்காவுக்கு மட்டும் ஸ்நாக்ஸ் அது இதுன்னு வாங்கித் தர்றீங்க. அவளோட ஒரே தம்பி நான். அவளோட ஜாடையிலேயே இருக்கேன் வேற. அதுமட்டுமா உங்க புள்ளைங்களோட தாய் மாமா நான். எனக்கு நீங்கதான் செய்யணும்”

“போனை வைடா அனுப்புறேன்.. எதுக்கும் கொஞ்ச நாளைக்கு உங்க அக்கா கண்ணுல பட்டுறாத. கொலை வெறியில இருக்கா”

“இது என் மேல இருக்க அக்கறையில சொன்ன மாதிரி இல்லை. பாசத் தொல்லை பண்ணாமல் விலகியே இருங்கடான்னு சொல்லுற மாதிரி தெரியுது”

“இவ்வளவு அறிவாளியா இருக்கயே அதனால தான்டா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்குது.. உம்மா” என்று அவனுக்குப் போனிலேயே உம்மா கொடுத்துவிட ஆத்வி பட்டென்று போனைக் கட் பண்ணியே விட்டான்.

 

“அவனுக்கு மட்டும் கேட்காமலேயே தர்றீங்க” உமா மகேஸ்வரி கேட்கவும் “அது என்னவோ தெரியலைடி அவனைப் பார்த்தாலே அப்படித்தான் வம்பிழுக்கத் தோணுது. இருக்கட்டும் என்னமோ உனக்குத் தரவே தராத மாதிரி பேசுறயே. என் மொத்தமும் உனக்குள்ள தானே இருக்கு” என்றவனின் பதிலில்..

“அய்யே.. படத்தைப் பாருங்க” அவள் பட்டென்று திரும்பிக் கொள்ள இவனுக்கோ படபடவென்று உணர்வுகள் வெளிக் கிளம்பியது. அவளது கையைப் பற்றியவாறே தன்னை அடக்கிக் கொண்டு அமைதியாய் அவளது முகத்தினையே ரசித்திருந்தான்.

“உங்க அண்ணாவும் அண்ணியும் படத்துக்குப் போயிருக்காங்க போல” லட்சணா வீராவிடம் கேட்டாள்.

அவன் தலையசைத்தோடு சரி, அவன் மனதிற்குள் என்ன ஓடுகிறதென்பதை அவன் வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொண்டான். ஆனால் நிச்சயம் நல்லவிதமாக இல்லை போல.

படம் முடிந்து வெளியே வந்தார்கள்.

அவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்தது ஒரு மாதிரியாக இருந்தது. அதுவும் படம் பார்த்துக் கொண்டே சாப்பிட்டதும் அதன் வேலையைக் காட்டியிருக்க அவனிடம் கைகாட்டிவிட்டு கழிவறைக்குள் நுழைந்தாள்.

வெளியே வந்தவளிடம்,

“வாந்தி வந்துடுச்சா” ருத்ரன் அக்கறையாக விசாரித்தான்.

“ஆமா.. ஒரு மாதிரியா இருக்கு”

“வேற ஏதாவது குடிக்கிறயா? ரொம்பவே களைப்பா தெரியுற உமா”

“இல்லை வேண்டாம். மறுபடியும் வாந்தி வரும். ருத்ரா! உன் புள்ளைங்க ரொம்ப டார்ச்சர் பண்ணுறாங்க”

“பட்டு லட்டுக்கிட்ட நான் பேசுறேன் இனி அவங்க சமத்தா இருப்பாங்க அப்படித்தானே பட்டு லட்டு” அவன் பேசியவாறே அவளைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.

“வீட்டுக்குப் போகலாமா?”

“வீட்டுக்கா?” அவள் யோசித்தாள்.

“என் மாமியார் வீட்டுக்கு டி”

“நிஜமாவா? ஆனால் என்ன திடீர்னு”

“அது ஒன்னும் இல்லை.. இந்த மாதிரி சமயத்துல பொண்டாட்டி மனசு குளிர்ந்தால்தான் உள்ளே இருக்க..” வெடுக்கென்று கையை உதறி விட்டு அவள் நடந்துவிட சிரிப்போடு காரினுள் ஏறியவன் அவளைக் கண்டுக் கொள்ளாமல் வண்டியை எடுத்திருந்தான்.

“தங்கம்” காரினுள் எதிரொலித்தது அவனது குரல்.

“அடி வாங்கிடுவ. பேசாமல் போ.. அந்த கண்ணாடியை மாட்டித் தொலைடா. எங்கயாவது போய் வண்டியை விட்டுத் தொலைஞ்சுடாத”

“அதெல்லாம் மாமா கவனமாத்தான் இருப்பேன். ஏன்னா”

“வயித்துக்குள்ள பட்டு லட்டு இருக்காங்க அதான.. “

“அதேதான்”

“அவங்க மட்டும்தானே முக்கியம். இப்போக் கூட அவங்களுக்காகத்தானே நீ என்னை கூட்டிட்டு வீட்டுக்கே வந்த. இல்லைன்னா இவ எப்டியோ போகட்டும்னு விட்டுருப்பேல”

“அவங்க முக்கியம்தான் இல்லைன்னு சொல்ல முடியுமா? ஏன் நீ சொல்லுவீயா?”

அவள் மீண்டும் முகம் திருப்பிக் கொண்டாள்.

அம்மா வீட்டின் முன் வண்டி நின்ற பிறகும் அவள் இறங்காமல் இருக்க “தூக்கிட்டுப் போகணுமா உமா” என்றான் இவன்.

“தேவையில்லை. எனக்கு வரத் தெரியும்” இறங்கி உள்ளே வந்தாள்.

அம்மா அப்பா இருவருக்கும் அவர்களுக்குள் பிரச்சனை இருந்தது பற்றி எல்லாம் சரிவரத் தெரியவில்லை. ஆத்வியிடம் கேட்ட போதே அவன் அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வதாக உரைத்திருக்க இப்போது வீடு தேடி வந்திருக்கும் மாப்பிள்ளைக்கும் பெண்ணிற்கும் உரிய வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றார்கள்.

“என்ன உமா வாந்தி எடுத்தயா என்ன? முகமே ஒரு மாதிரி இருக்கு”

“ஆமாம்மா தியேட்டர் போயிருந்தோம். அங்க சாப்பிட்டது சேரலைம்மா”

“வெளிய கொஞ்ச நாளைக்கு சாப்பிட வேண்டாம் உமா. உனக்கு ஏதாவது ஆசையாய் இருந்தால் என்கிட்ட கேளு நான் செஞ்சு தர்றேன்” என்று சொன்ன அம்மாவிடம் அவள் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்க அவன் அதைக் கண்டும் காணாமல் அவளது அறையில் அமர்ந்திருந்தான்.

கைவலி வேறு இருக்க அதை அவளுக்குக் காட்டக் கூடாது என்பதாலேயே அவளுடன் இயல்பாக பேசிக் கொண்டிருந்தான். இப்போது உள்ளே வந்தபிறகு அதன் வலி அவனுக்கு அதிகரித்தது போல் இருந்தது.

கண்மூடி படுத்துவிட்டான். இருந்த களைப்பில் அவன் உறங்கியும் போய்விட்டான். இப்படி அவன் உறங்குவதே அபூர்வம் தான்.

அம்மாவுடன் பேசிவிட்டு இவனைக் காணவேண்டும் என்று வந்தவள் அவன் உறங்குவதை எண்ணி தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நகரப் பார்த்தாள்.

இல்லை அவனை தொந்தரவு செய்தே ஆக வேண்டும் என போன் அதிர, அவன் விழிப்பதற்கு முன் அதை எடுத்தாள்.

வீரா என்றிருந்தது. அவளது புருவம் சுருங்கிப் போனது.

இவனை.. என்றெண்ணியவள் அவனை விட்டுத் தள்ளி வந்து அழைப்பை ஏற்றாள்.

“தேவையில்லாத வேலை பார்க்குற  ருத்ரா” எடுத்ததுமே அவன் பொரிந்தான்.

“வீரா” உமாவின் குரலில் “அண்ணி” என்றான் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு. அவள் எடுப்பாள் என அவன் எதிர்பார்க்கவே இல்லை.

 

“என்ன வீரா எதுக்கு இவ்வளவு கோபம்?”

 

“அண்ணி எல்லாம் உங்களோட புருஷனால தான்”

 

“அவங்க என்ன பண்ணாங்க ருத்ரா”

 

“இன்னும் ஏன் அண்ணி இப்படிப் பண்ணிட்டு இருக்கான்”

 

“என்ன பண்ணாங்கன்னு கேட்டேன்”

 

இவங்களுக்கு எதுவும் தெரியாது என்ற எண்ணத்தில் “அன்னைக்கே இதைப் பத்தி உங்ககிட்ட சொன்னேன்ல அண்ணி. இன்னும் ருத்ரா அதை விடுற மாதிரி தெரியல” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

 

“வீரா நீ சொல்லுறது உண்மையா?” அதிர்வோடு கேட்டாள்.

 

“ஆமா அண்ணி. எவன் என்ன சொன்னாலும் நான் என் இஷ்டப்படி தான் இருப்பேன்னு சொல்லுறான் அண்ணி”

 

“இனி மேல் இப்படிப் பண்ண மாட்டேன்னு என் புள்ளைங்க மேல சத்தியம் பண்ணிச் சொன்னாரே வீரா. அது அது.. பொய்யா? அய்யோ” வார்த்தைகள் வராமல் அவள் தடுமாறினாள்.

 

“என்ன அண்ணி சொல்லுறீங்க? குழந்தைக மேல சத்தியம் பண்ணானா.. ச்சே அவன் இவ்வளவு கேவலமான வேலை எல்லாம் செய்வான்னு நான் நினைச்சுக் கூட பார்க்கல அண்ணி. இவன் கூடப் பொறந்ததை நினைக்கும் போது எனக்கு வெட்கமா இருக்கு அண்ணி”

 

அவள் பதிலே பேசவில்லை எரிச்சல் அப்பிய முகத்தோடு மௌனமாக இருந்தாள்.

 

“அண்ணி!”

 

“என்ன வீரா..” விசும்பிக் கொண்டே அவள் பேச “அண்ணி! நீங்க இந்த நிலையில அழாதீங்க அண்ணி. இவன் கை காலை உடைச்சுப் போட்டு நான் உங்ககிட்ட பேசுறேன்”

 

அவன் போனை வைத்துவிட நீ கண் முன்னாடி வாடா மவனே உன் கை காலை நான் உடைக்கிறேன் சத்தமில்லாது பேசியவள் மீண்டும் உள்ளே எட்டிப் பார்த்தாள்.

 

நிம்மதி படர்ந்த முகத்தோடு அவன் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க வெளியே வந்துவிட்டாள்.

 

ஆத்வி அப்போதுதான் வீட்டிற்குள் வந்தான்.

“எப்போ வந்தக்கா”

“கொஞ்சம் முன்னாடி தான்டா “

“எங்க உன் வீட்டுக்காரர்”

“உள்ள தூங்குறான்”

“இன்னைக்கு என்ன ஜாலி மூட்ல சுத்திட்டு இருக்காரு”

“அவன் டார்லிங் கூட பேசுறான்ல அதான் அப்படி இருக்கான் போல”

“நீ வேற ஏன் உமா?”

“என்னையெல்லாம் தங்கம்னு தான்டா சேவ் பண்ணி வச்சுருக்கான். உன்னை மட்டும் டார்லிங்ன்னு போட்டுருக்கான். இது இப்போ வெறுப்பேத்தவே பண்ணியிருப்பான் போல மாடு..”

“இல்லை கல்யாணத்துக்கு முன்னாடி இருந்து என் நம்பரே அப்படித்தான் சேவ் பண்ணி வச்சுருக்காரு”

அவள் நம்பாத பார்வை பார்க்க “நிஜம்தான் நம்புக்கா. அந்தாளு அப்படித்தான் போட்டு வச்சுருக்காரு” என்றான் இவன்.

“என்னை விட உன்னைத் தான் பிடிக்கும் போல”

“நல்லவேள நான்லாம் பொம்பளைப் புள்ளையா பொறக்கல. பொறந்திருந்தால் என் கதி என்னாகும்னு நினைச்சுப் பாரு”

“நீ பொம்பளைப் புள்ளையா இருந்திருந்தால் புள்ளை மாதிரிதான் பார்த்திருப்பார். ஆம்பளைப் பையன் அவரோட மச்சினன்னு தான் உன்னை இப்படிக் கலாய்க்கிறார் டா”

 

அப்போதுதான் உறக்கம் கலைந்து எழுந்து வந்த ருத்ரன் இந்த பேச்சில் அசையாமல் அப்படியே நின்றுவிட்டான்.

 

அவளது அசைக்க முடியாத நம்பிக்கையில் வார்த்தைகள் ஏதும் வரவில்லை.

“ஏய் அங்க பாரு உன் ஆளு அப்படியே டன் கணக்குல காதலை வழிய விடுறாரு. நீ பேசுனதைக் கேட்டுட்டு ஃபீல் பண்ணுறாரு போல” என ஆத்விக் சொன்னதும் அவள் அவன் புறம் பார்வையைத் திருப்பினாள்.

அவனது பார்வை அவளையும் அசைத்துத்தான் பார்த்தது.

 

புயல் தாக்கும்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 30

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
25
+1
3
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்