Loading

புயல்  19

“என்னை மன்னிச்சுடு தங்கம்” அவனிடம் இருந்து கதறலாய் வந்து விழுந்தது வார்த்தைகள்.

“எப்படிடா மன்னிக்க முடியும். அடிக்கடி இதையே சொல்லிச் சொல்லி இவங்க எல்லாரும் பேசும் போது எனக்கு உன்னைக் கொல்லணும் தான் ஆங்காரம் வருது”

“அதைச் செய் தங்கம். நான் தப்புப் பண்ணிட்டேன்”

“இது என்ன சாதாரண பழியா நீ ஈசியா தூக்கி உன் தலையில போட. ஏன்டா இப்படிப் பண்ண? ஏன் இப்படிப் பண்ண? உன்னை நம்பி நான் இருக்கேன்னு ஒரு செகண்ட் நீ யோசிச்சுப் பார்த்திருந்தால் நீ இப்படியொரு வேலை பார்த்திருப்பயா? அப்போ உனக்கு நான் முக்கியம் இல்லை தானே. உன்னை ஏன் தான் கல்யாணம் பண்ணோம்னு இருக்குடா.. உங்கம்மாதான் விஷக்குடோன்னு பார்த்தால் நீதான் கடைசியில உங்கம்மாவுக்கே விஷம் சப்ளை பண்ணிருக்க.. உன்கூட போய் குடும்பம் நடத்தியிருக்கேன் பாரேன். எவன் எக்கேடு கெட்டுப் போனால் என்ன? உனக்கு உன் குடும்பம் மட்டும் பாதுகாப்பா இருக்கணும் அவ்வளவுதானே. இதையெல்லாம் கூட விட்டுடலாம்.. அவன் குழந்தைக்குக் மொட்டை போடணும்னு நீ… ” பேச முடியாமல் அவள் தடுமாறிவிட அவள் கரத்தினைப் பிடித்துக் கொண்டவன்

“இல்லை தங்கம்.. நான் அதுவந்து எப்படி நினைச்சேன்னா.. குழந்தை தங்கிட்டால் குட்டிப்பையனுக்கு மொட்டை போட முடியாதுல அதான்..” குற்ற உணர்வுடன் பேசினான்.

“அதுக்குத்தான் உன் தம்பி உன்னை மொத்தமா மொட்டை அடிச்சுவிட்டுட்டான்.  காதல் இப்படி புயல் போல தாக்கி நம்ம சோலியை முடிச்சுடும்னு தெரிஞ்சுருந்தால் நான்லாம் காதலிச்சுருக்கவே மாட்டேன். எங்க? அப்போ எல்லாம் தென்றல் மாதிரி தானே இருக்குற இடம் தெரியாமல் இருக்கீங்க. அடுத்துத்தானே புயல் மாதிரி ஆளையே அடிச்சுத் தூக்கிட்டு போய்டுறீங்க. நிஜமாவே என் மேல காதல் இருந்திருந்தால் நீ இப்படியொரு வேலையை செஞ்சுருப்பயா? இவளெல்லாம் ஒரு ஆளான்னு உன் இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணியிருக்க.. ரைட்”

“சத்தியமா அந்த மாதிரி எதுவும் நான் நினைக்கல தங்கம். கடையிலயே ஏகப்பட்ட வேலை அதுல நம்ம வேற ஹாஸ்பிட்டல் அது இதுன்னு அலைஞ்சுட்டே இருந்தோமா.. அந்த சமயத்துலதான் வீராவை கடையில கண்டிப்பா இருக்கணும்னு சொல்லி வச்சுட்டு வந்தேன். கடைக்கு வர்றவன் உடனே காணாமல் போயிடுறான்னு அண்ணே போன் பண்ணுச்சு. அப்போத்தான் என் கண்ணுல அவன் தட்டுப்பட்டான் ஒரு பொண்ணோட. எனக்கு விஷயம் தெரிஞ்சதும் அவன் என் முன்னாடி வரவே இல்லை. நான் முதல்ல இது உண்மையான்னு விசாரிக்கத்தான் அந்த பொண்ணைப் போய் பார்த்தேன்.

அந்த பொண்ணோட கேரக்டரும் சரியில்லை. இவனும் சரியில்லை. அதான் பார்த்த உடனே இதுங்க தனி டிராக் போட்டுப் பழக ஆரம்பிச்சுடுங்க..

நான் வீட்டுக்கே போனபோது அந்த பொண்ணு என்னையும் ஒரு மார்க்கமா பார்க்குது. இது சரிப்பட்டு வராதுன்னு சொல்லி வீராவுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. அவன் வழியில வரக்கூடாதுன்னு சொன்னால் அவனுக்கு கல்யாணம் ஆனது எல்லாம் தெரியும்னு சொல்லுதுடி. அதுமட்டுமா? விட்டால் என்னையே வான்னு கூப்பிடும் போல. அப்படிப் பார்க்குது” பாவமாய் சொன்னான் அவன்.

“ஏன் போக வேண்டியதுதானே”

“அடியே நான் ருத்ரன்.. உமாவுக்கு மட்டுமே சொந்தமானவன்.. என்னால எப்படி அப்படியெல்லாம் நினைச்சுப் பார்க்க முடியும். இந்த லேடிவேற கொஞ்சம் டேஞ்சரான ஆள் மாதிரி தெரியுது. அதான் சரவணன் கிட்ட சொல்லி அவனுக்குத் தெரிஞ்ச எஸ்ஐ  மேடம்கிட்ட பேசி வார்ன் பண்ணி விட்டோம்.

அதுக்குள்ளயே காசு எக்கச்சமாக அங்க போயிருக்குடி. இதெல்லாம் யார் வீட்டுப் பணம். அதான் உடனே லாக் பண்ணேன். அதுல அவன் செம டென்ஷன் ஆகிட்டான். நேராவே என்கிட்ட வந்து சண்டை போட்டான். என் விஷயத்துல தலையிட நீ யாருனு கேட்டான். இந்த பிரச்சனையையே உன் பேர்ல மாத்திவிட எனக்கு நொடி நேரம் ஆகாதுன்னு சொன்னான். உன்னால முடிஞ்சதைப் பண்ணுன்னு சொன்னேன். நல்லாப் பண்ணிட்டான்டி. எனக்கு நீ வீட்டை விட்டுப் போனதுல அவ்வளவு கோபம். உன்னை பளார்னு நாலு அறை விட்டுட்டு கூட்டிட்டு வரலாம்னு தான் நினைச்சேன். உன் தம்பி இருக்கானே..” பேசும் முன்னரே

“அவன் உன் மண்டையை உடைச்சுருக்கணும்.. ப்ச் அவனும்”  அவளுக்கு அன்றைய நாளின் நினைவில் கண்கள் கலங்கியது.

அம்மாவின் வீட்டிற்கு வந்து நின்ற அவளது கோலம் ஆத்விக்கை ரொம்பவும் பாதித்தது. இப்படியொரு நிலை வந்துடக் கூடாது என்றுதானே அவன் நினைத்தான். இறுதியில் அதுவே நிகழ்ந்திருக்கிறது.

“என்ன பிரச்சனை?”

“ஒன்னும் இல்லை ஆத்வி”

“இப்போ சொல்லப் போறியா இல்லையா”

“அந்த ஆளுக்கு வேறொரு பொண்ணோட தொடர்பு இருக்குடா”

“அவன் அப்பன் புத்தி.. ச்சே கருமம்” ஆத்விக் உதடு சுழித்தான்.

“என்னடா சொல்லுற?”

“என்னத்தை சொல்லுறது? உன் மாமனாருக்கும் ஒரு லேடி கூட பழக்கம். இது தெரிஞ்சதும் உன் மாமியார் பாய்சன் சாப்பிட போயிடுச்சு. பக்கத்து வீட்டுக்காரவங்க எதேச்சையா வந்து தடுத்து திட்டியிருக்காங்க. விஷயம் தெரிஞ்ச பின்னால தான் உன் மாமனார் கப்சிப்னு ஆகியிருக்காரு. இது மாப்பிள்ளை வீட்டைப் பத்தி விசாரிக்கும் போது எனக்குத் தெரிய வந்தது. உன் புருஷன் கிட்டயும் சொல்லப் போனேன். ஆளு அப்பா பேச்சை எடுத்துமே படு டென்ஷன் ஆகிட்டார். அப்படியே விட்டுட்டேன். எனக்கு நம்பிக்கை இருந்தது அந்த ஆளு இப்படியெல்லாம் பண்ண மாட்டாருன்னு. எல்லாத்தையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி வச்சுருக்கானா.. அவனை நான் சும்மாவே விடப் போறதில்லை அக்கா. கேட்க ஆள் இல்லைன்னா அவன் இப்படியெல்லாம் பண்ணுறான்.. நீ போய் அமைதியாய் தூங்கு. எதைப்பத்தியும் நினைக்காத தம்பி எப்பவும் உனக்குத்தான் சப்போர்ட்டா இருப்பேன்.. சரியா?” அவளை உறங்கச் சொல்லி அனுப்பியவன் நேராக கடைக்குச் சென்றான்.

“யோவ் மாமா! உன்னை நம்பி பொண்ணு கொடுத்தால் அவளை வீட்டுக்கு அனுப்பிவிட்டுட்டு நீ பாட்டுக்கு தொழிலை கண்ணும் கருத்துமா பார்த்துட்டு இருக்கயா? உன்னையெல்லாம் அடி வெளுத்துனால் தான் சரியா வரும்” என்று சொன்னவன் முதுகில் மொத்த தொடங்கினான்.

“டேய் அடிக்காதடா ஆத்வி”

“பொம்பளை பொறுக்கி நாயே. உன்னை சும்மா விடமாட்டேன்”

“என்ன பொம்பளை பொறுக்கியா? இதெல்லாம் என் உமாவுக்குத் தெரிஞ்சால் உன்னை நொறுக்கி விட்டுடுவா?”

“அவதான் என்கிட்ட வந்து சொன்னா”

“உமாவா.. என்ன சொல்லுற? அவ எங்க இருக்கா?”

“எங்க வீட்டுல இருக்கா.. தோத்துப் போய் வந்துருக்கா. சொல்லுயா.. இதெல்லாம் நடக்க வேண்டாம்னு தானே நான் கல்யாணத்துக்கு முன்னாடியே வந்து பேசுனேன். அப்போ பெரிய டேஷ் மாதிரி என்னென்னவோ பேசி என் மண்டையை கழுவிவிட்டுட்டு இப்போ அதுக்கு ஆப்போசிட்டா நடந்துருக்க. உன்னை கொல்லப் போறேன்யா” அடி விழுந்துக் கொண்டே இருந்தது.

ருத்ரன் அவன் கையைப் பிடித்துக் கொண்டான்.

“உமா அங்கயா இருக்கா?”

“ஆமா! பொம்பளை பொறுக்கி கூட எல்லாம் வாழ முடியாதுன்னு வந்துட்டா”

“என் உமாவா அப்படி சொன்னா? அவ ஏன்டா அப்படிச் சொல்லணும்”

“நல்லா வாயில இருந்து வருது.. என் அக்கா இனி உன் கூட வாழ மாட்டேன்னு சொல்லி அங்க வந்து இருக்கா. உன்னை யாருயா இன்னொரு பொண்ணு கூட குடும்பம் நடத்த சொன்னது. அப்போ என் அக்கா என்ன கிள்ளுக் கீரையா. அவளுக்குக் கேட்க யாரும் இல்லைன்னு நினைச்சயா? தம்பி நான் இருக்கேன்”

“டேய் மொதல்ல அடிக்கிறதை நிறுத்துடா.. இல்லைன்னா கிஸ் பண்ணிடுவேன்..” தன்னாலே அடிப்பதை நிறுத்திவிட்டு பின்னால் நகர்ந்தான் ஆத்விக்.

“என்னடா நடந்தது. இப்போ சொல்லு”

“ம்ம் உன் தம்பிகாரனும் உன் அம்மாவும் போய் அக்காகிட்ட  ஒரு நாடகம் போட்டுருக்காங்க. அதை நம்பிட்டு பெட்டியைத் தூக்கிட்டு வந்துடுச்சு என் அக்கா. வந்த உடனே கேட்டேன் என்ன பிரச்சனைன்னு.. நீயொரு பொம்பளை பொறுக்கின்னு தெளிவா சொன்னா..”

“ப்ச் வீரா இவ்வளவு மோசமா இறங்குவான்னு எனக்குத் தெரியாமல் போயிடுச்சு” நெற்றியில் நீவியவனுக்கு உமாவினை எப்படிச் சமாளிப்பது என்று புரியவில்லை.

“இல்லை நான் தெரியாமல் தான் கேட்குறேன். உனக்கென்ன ஊருக்கு நடுவால சிலை எதுவும் வைக்கப் போறாங்களா.. இல்லை தானே. பின்ன ஏன்யா இப்படி இருக்க.. கொஞ்சமாச்சும் உன் குடும்பம்ன்னு தனியா யோசிக்கப் பழகு. ம்க்கும் இனி பழகி என்ன பிரயோஜனம் என் அக்கா இனி ஜென்மத்துக்கும் உன் வீட்டு வாசப்படியை மிதிக்க மாட்டா. அவ அடங்கி இருந்ததே எனக்குலாம் ஆச்சர்யம்தான். அவள அந்த வீட்டோட சமையல்காரியாவே மாத்தி வச்சுருக்கீங்கள்ல. நிஜமா சொல்லுறேன் நீங்க அவளுக்கு பண்ணது முழுக்க முழுக்க அநியாயம். எனக்கு மனசு ஆறவே இல்லை. நீ ஏற்கனவே இந்த விஷயத்தைப் பத்தி என்கிட்ட பேசினதால நல்லவன்னு எனக்குத் தெரியும். உமாவுக்கு எப்படித் தெரிய வைப்ப? அவ மனசொடிஞ்சு ஏதாவது பண்ணிட்டால் என்னயா பண்ணுவ?” ஆத்வி கேட்டதில் அவனிடம் பதில் இல்லை.

“நான் காதலிச்சுருக்கவே கூடாதுடா ஆத்வி”

“சொன்னால் எங்க கேட்டீங்க மாம்ஸ்”

“நான் என்ன பண்ணக் கூடாத தப்பைப் பண்ணிட்டேனா டா”

“பின்ன காதல் எவ்வளவு பெரிய கொலைக்குத்தம். நான் அன்னைக்கே வந்து உங்ககிட்ட வேண்டாம்னு சொன்னேன்ல. அப்பவே எஸ்ஸாகியிருக்கலாம்ல. சின்னப்பையன் பேச்சை எல்லாம் கேட்கணுமான்னு நினைச்சு இப்படி லைஃபை கோட்டை விட்டுட்டீங்களே தலைவரே”

“அவங்க எல்லாரும் ஒன்னு நான் மட்டும் தனின்னு பிரிச்சு விளையாடிட்டாங்க ஆத்வி. மனசு வலிக்குது. வீராவுக்கு பிரச்சனை வராமல் அவனை இதுல இருந்து வெளிய கொண்டு வரணும்னு நினைச்சேன். நான் நினைச்சிருந்தால் பேமிலி முன்னாடி அவனை அசிங்கப்படுத்தியிருக்கலாம். பண்ணலையே”

“பண்ண மாட்டயே. ஏன்னா அவன் உன் தம்பி உன்னோட இரத்தம். உமா என் இரத்தம்ல. அதான் உனக்குக் கொதிக்கல”

“ஆத்வி! நிறுத்துறயா?” கோபத்தில் கத்தினான் ருத்ரன்.

“கோபம் வேற வருதாக்கும்”

“நீ வேற ஏன்டா”

“வலிக்குது மாம்ஸ். அக்காவை அப்படிப் பார்க்குறப்போ எனக்கு வலிக்குது. இப்போக் கூட அவ என்னை ரொம்ப நம்புவா. ஆனால் நான் இங்க உனக்கு கூஜா தூக்கிட்டு இருக்கேன். எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன் குடும்பத்தையே ஒன்னும் இல்லைன்னு ஆக்கணும்னு வெறியே வருது”

“அவங்களை விடு. நான் உமாவைப் பார்க்கணும்”

“நான் சொன்னால் கேட்பீங்கன்னா ஒன்னு சொல்லணும் மாமா”

“சொல்லுடா’

“கொஞ்ச நாளைக்கு உமா வீட்டுல இருக்கட்டும்”

“டேய் அப்போ நான் எப்போ சமாதானம் செஞ்சு சேர்றது”

“அவ மைண்ட் கொஞ்சம் ப்ரீயா ஆகட்டும் மாமா. அவள் ரொம்பவே வீக்கா இருக்குறதா எனக்குப் படுது. அம்மாகிட்ட சொல்லி அவ உடம்பை மொதல்ல தேத்துவோம் மாமா. அவ இருக்கட்டுமே” அவனது கெஞ்சல் இவனை என்னவோ செய்திருக்க வேண்டும்

“நீ என்னோட தம்பியாய் பொறந்திருக்கலாம். ஏன்டா வீரா உன்னை மாதிரி இல்லாமல் போனான். வருத்தமா இருக்குடா”

“அவனைத் தூக்கிப் போய் தொட்டில்ல போட்டுக் கொஞ்சுங்க மாமா.. வருத்தம் எல்லாம் காணாமல் போயிடும். வந்துட்டாரு ப்லீங்க்ஸை தூக்கிட்டு”

“அவனுக்கு இருக்கு இனி. ஆனால் அதுக்கு முன்னாடி உமா வீட்டுக்கு வரணும் டா. அவள் இல்லாமல் நான் இல்லையே”

“அது மட்டும் நடக்காது”

“உன் வாயில வசம்பை வச்சுத்தான் தேய்க்கணும். ஏன்டா இப்படிப் பேசுற?”

“வேற எப்படிப் பேசச் சொல்லுறீங்க. இப்போ உங்க தங்கச்சி கவிதா இருக்காங்க. இப்படியொரு சூழ்நிலையில அவங்க கோச்சுக்கிட்டு வர்றாங்கன்னு வச்சுக்குவோம்.. என்ன பண்ணுவீங்க. இதெல்லாம் ஒரு பிரச்சனையாம்மான்னு சொல்லி வீட்டுக்கு அனுப்பி விட்டுருவீங்களா?”

“அந்த நாயை ஓட விட்டு அடிப்பேனே தவிர என் தங்கச்சியை நான் அந்த வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்”

“அதைத்தான் நானும் சொல்லுறேன் நான் உமாவை அங்க அனுப்ப மாட்டேன்”

“நீயே இப்படிச் சொன்னால் எப்படி?”

“நான் இப்படித்தான் பேசுவேன் மாமா. அவ அங்க இருக்கட்டும். அவள் உங்ககூட சேர்ந்து இருப்பான்னு எல்லாம் கனவுல கூட நினைக்காதீங்க”

“என்னைப் பத்தித் தெரியாமல் பேசுற ஆத்விக். நான் நினைச்சால் என்ன வேணும்னாலும் செய்வேன்”

“செய்யுங்க. உங்க தம்பியை வச்சு செய்யுங்க. அதுக்கப்பறம் உமா பக்கம் உங்க பார்வை திரும்பட்டும். அதுவரைக்கும் அவளை தொந்தரவு பண்ணுறதை என்னால அனுமதிக்க முடியாது. பிரச்சனையை சரி பண்ணிட்டு வாங்க. உமாவை நீங்க என்ன வந்து கூப்பிடுறது. நானே கூட்டிட்டு வந்து விடுறேன். மறுபடியும் வேலைக்காரியாத்தான் அவ இருப்பான்னா பெட்டர் நீங்க அவளைக் கூப்பிடாமலேயே இருக்கிறது நல்லது”

ஆத்வி மீண்டும் மீண்டும் உமாவின் உடன்பிறப்பு என்பதை நிரூபித்துக் கொண்டே இருந்தான்.

 

புயல் தாக்கும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்