Loading

பிறை -7

 

நியாயம் பேசும் இடத்தில் அவளும் இல்லை. அவளுக்கு நியாயம் செய்யும் இடத்தில் நிர்மலாவும் இல்லை. சுயநல பூமியாக மாறி வெகு நாட்கள் ஆகி விட்டதே.. அவரவருக்கு தேவையானதை செய்து பிழைத்து கொள்ள வேண்டும்.. அப்படி ஒரு சூழலில் தான் நிர்மலா இருக்கிறார்.

 

” இதெல்லாம் எப்படி நியாயமாகும் … அந்த பொண்ணு இறந்ததுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு ஸ்டேஷன்ல சொல்லி தானே வெளிய அனுப்பிருக்காங்க.. அப்பறம் உங்களுக்கு என்ன பிரச்சனை ” கோபத்தின் உச்சியில் இருந்தாள் பிறை.

 

பின்னே யாரென்று தெரியாத பெண் இறந்ததில் இருந்து அவளுக்கு எத்தனை வேதனை, எத்தனை சிக்கல். கூட வந்த தோழிகளும் கைவிட்டு போன நிலையில், அவளையும் காலி செய்ய கூறினாலும் அவளால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்.

 

” இங்க பாரு மா எனக்கு அதை பத்தி எல்லாம் கவலையும் இல்ல.. நீ இங்க இருக்குற வரைக்கும் விசாரணை அது இதுன்னு போலீஸ் இங்க வந்து போயிட்டு தான் இருப்பாங்க. அது தொடர்ந்து நடந்தா ஹாஸ்டல் பேர் தான் கெட்டு போகும் “

 

” ஹலோ.. உங்க ஹாஸ்டல்ல தூக்கு போட்டு செத்த பொண்ணுக்கும் எனக்கும் எந்த வித சம்மந்தமும் இல்ல.. தூக்கு போட்டு செத்ததுல உங்க ஹாஸ்டல் நேம் போகாதா.. நான் இருக்கிறது தான் உங்க பிரச்சனையா ” 

 

” உன்கிட்ட தேவையில்லாம விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.. நான் இந்த ஹாஸ்டல் வார்டன், காலி பண்ணுன்னு சொன்னா பண்ணி தான் ஆகனும் ” நிர்மலா பொறுமை இழந்து கத்தினார்.

 

” நான் உங்க மேல கம்பளெண்ட் கொடுப்பேன் ” என முகத்தை திருப்பிக் கொண்டு அறைக்குள் வந்தவள், அவளது பொருட்களை எல்லாம் அடுக்கத் தொடங்கி இருந்தாள்.

 

அடுத்து எங்கே போக வேண்டும்.. என்ன செய்ய வேண்டும் என எதுவும் தெரியவில்லை. இத்தனை பெரிய ஊரில் தான் எங்கு தங்குவது, யாரை நம்புவது என தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள் பிறைநிலா.

 

வேறு வழியே இல்லாமல் சுஷ்மிதா எண்ணிற்கு அழைத்து தகவலை கூற.. உடனே தன்னுடைய மாமாவோட வருவதாக தகவல் கூறினாள்.

 

கூறியது போலவே அரை மணி நேரத்தில் ஹாஸ்டலை வந்தடைந்தார். வந்ததும் மேற்கொண்ட படிவங்களில் கையெழுத்திட்டு, பைகளை தூக்கி கொண்டு கிளம்பி இருந்தாள் பிறை.

 

” இதுக்கு தான் எங்க கூட வான்னு சொன்னேன்.. இருந்தாலும் அந்த வார்டனுக்கு இவ்வளவு ஆகாது டி ” என சுஷ்மிதா வார்டனை கரித்து கொட்ட.. பிறை அமைதியாக வந்தாள்.

 

” நீ ஒன்னும் கவலை படாத மா.. நான் என் வீட்ல பேசிட்டேன்.. நீயும் சுஷ்மியும் தாங்கிக்கோங்க.. ஒரு மாசம் தானே.. முடிச்சதும் ஊருக்கு ஏத்தி விடறேன் ” சுஷ்மிதா மாமாவின் வார்த்தையில் சற்றே அமைதியாகி போனாள். 

 

வீட்டிற்கு வந்ததும் மூவரும் இறங்கி வீட்டுக்குள் செல்ல.. அவர்களை அன்போடு அழைத்தார் ரஞ்சனி, சுஷ்மியின் அத்தை.

 

பட்டும் படாமல் அவரிடம் சிரித்து வைத்தவள், தயக்கமாக அந்த வீட்டிற்குள் நுழைந்தாள். இப்படி அடுத்தவர்கள் வீட்டில் வந்து தங்கி இருப்பது மட்டும் அவர்களது வீட்டில் தெரிந்தால் உடனடியாக கிளம்பி வர கூறுவார்கள்.

 

ஆனால் எதையும் அவள் வீட்டில் கூறவில்லை. இரண்டு நாள் சென்ற நிலையில் ரஞ்சனியுடன் கலகலப்பாக தன்னை மாற்றிக் கொண்டாள் பிறை.

 

சுஷ்மிதாவை விட , இவள் அவரிடம் நெருக்கமாக பழகி இருந்தாள். பேச்சில் இருந்து சமையல் வரை இருவரும் ஒன்றாக செய்தனர்.

 

மூவரும் அதே இன்டெர்ன்ஷிப்பை தொடர்ந்து கொண்டு தான் இருந்தனர். கீதா அவர்களை அலுவலகத்தில் பார்த்துக் கொள்வாள். தோழிகளை விட்டு பிரிந்ததில் அவளுக்கு ஏக ஏக்கம்.

 

**

 

வழக்கம் போல் செய்தித்தாள் முன்னே அமர்ந்திருக்கும் கணவனை மூக்கு முட்ட முறைத்து வைத்தாள் மீனாட்சி.

 

மனைவியின் உஷ்ண பார்வையை உணர்ந்தாலும், தலையை திருப்பி பார்த்து விட்டால் பஸ்பம் ஆக்கி விடுவது உறுதி என்பதால் அதில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தார் திவாகர்.

 

” பார்கவி.. ரூம்ல என்ன டி பண்ணுற.. இங்க நான் ஒரே ஆளா எல்லா வேலையையும் இழுத்து போட்டுட்டு செஞ்சிட்டு இருக்கேன்.. கூட வந்து உதவி பண்ணா என்ன.. அப்படி என்ன தான் இருக்கு அந்த ரூம்ல ”  என கீழிருந்து மீனாட்சி போட்ட சத்தத்தில் அடித்து பிடித்து மாடியில் இருந்து ஓடி வந்தாள் பார்கவி.

 

” என்ன மா.. என்ன செய்யனும் சொல்லுங்க செய்யுறேன்..”

 

” சொன்னா தான் செய்வியா.. உனக்கா இதெல்லாம் தோணனும்”

 

“இப்போ என்ன மா அச்சு “

 

” சாப்பிட்ட தட்டை எடுத்து சிங்ல போடுன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்.. “

 

” நீங்க சொல்றது சரி தான்.. நீங்க சொன்ன மாதிரி சிங்ல போட்டேன்.. அதுக்கு என்ன சொன்னீங்க.. சாப்பிட்ட தட்டை கூட கழுவி வைக்க முடியாதுன்னு கேட்டீங்க.. சரின்னு கழுவி வச்சேன்.. அப்பறம் என்ன சொன்னீங்க கூட இருக்கிற பாத்திரங்களையும் கழுவி வச்சா என்னை கேட்டீங்க.. அதையும் கழுவி வச்சேன்.. ஆனால் அப்பறம் தண்ணி வடியுற மாதிரி கவுத்த தெரியாதுன்னு கேட்டீங்க.. என்னால முடியல மா.. அதான் அப்படியே வச்சுட்டேன் ” எரிச்சல் மிகுந்த குரலில் பேசினாள் பார்கவி.

 

” அடேங்கப்பா நல்லா விளக்கம் சொல்லுற டி நீ.. போற வீட்ல இப்படி விளக்கம் சொல்லு, எங்களை தான் நறுக்குன்னு கேட்பாங்க “

 

இதற்கு மேல் அவரிடம் பேசினால் மேற்கொண்டு ஆவி போய் விடும் என்ற எண்ணத்தில் தட்டை கழுவி வைத்து விட்டு, ஹாலில் இருக்கும் தந்தையுடன் அமர்ந்து விட்டாள் பார்கவி.

 

” என்ன மா காலையிலேயே அம்மா கூட சண்டையா “

 

” நாளையில இருந்து எனக்கும் ஒரு பேப்பர் வாங்கிட்டு வந்துடுங்கப்பா.. முடியல ” மகளின் பதிலில் கமுக்கமாக சிரித்தார் திவாகர்.

 

” உன் அண்ணன் வர நேரம் ஆச்சு.. நம்ம விஷயத்தை பேசுவோம் ” என குடும்பமே காத்திருந்தது.

 

மாடியில் இருந்து கிளம்பி கீழே வந்தான் ஆதிதேவ். உணவை பரிமாறிக் கொண்டிருந்த மீனாட்சி , தனது கணவனை முறைக்க.. அவரோ பேசுமாறு சைகை செய்தார்.

 

” நீ கேட்ட மாதிரி கொழுந்தியா இருக்கிற பொண்ணா உனக்கு பார்த்து வச்சுருக்கேன் ஆதி.. நீ பொண்ணு போட்டோவை பாரு. பிடிச்சிருந்தா அடுத்து பேசலாம் ” என்றவரை ஒரு பார்வை பார்த்தவன்.. மீண்டும் சாப்பாட்டில் கவனம் ஆக.. மீனாட்சி என்ன செய்வது என தெரியாமல் முழித்து வைத்தார்.

 

” பொண்ணு யார் மூலமா வந்தது ” ஒரே கேள்வி தான் .

 

” நம்ம பார்கவி கூட படிக்கிறா.. அவளோட பிரெண்ட் தான்.. நல்ல பொண்ணு ” என்றதும் சாப்பிட்டு கொண்டிருந்த  ஆதி மெதுவாக திரும்பி தனது தங்கையை அழுத்தமாக பார்க்க.. அவளோ விட்டால் போதுமென்று அறைக்குள் ஓடி இருந்தாள்.

 

” பார்கவி வயசு பொண்ணுங்க எல்லாம் வேணாம் மா.. ரொம்ப சின்ன பொண்ணுங்க. வேற பார்க்கலாம் “

 

” உனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைனா நீ நேரடியாவே சொல்லிடலாம் ஆதி. அதுக்காக வந்த பொண்ணை எல்லாம் காரணம் சொல்லி கழட்டி விடாத ” தந்தையின் தீவிரக் குரலில் சற்றே நிதானித்தவன்..

 

” எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் வந்தா இவ தான் உங்க மருமகள்னு நேரா சொல்லிடுவேன் பா ” என எழுந்து கிளம்பி இருந்தான் ஆதி.

 

” என்னங்க சொல்லிட்டு போறான் “

 

” இன்னும் அவனுக்கு கல்யாணம் பண்ணிக்க ஆசை இல்லையாம். அப்படியே வந்தாலும் சாரே ஒரு பொண்ணை காட்டுவாராம்.. அந்த பொண்ணை நம்ம கல்யாணம் பண்ணி வைக்கனுமாம் ”  திவாகர் அத்தோடு முடிந்து விட்டது என அறைக்குள் சென்று விட மீனாட்சி தான் மகனின் செயலில் மிகவும் வருந்தினார் .

 

” இவன் போடுற ஆட்டத்துக்கு இவனை அடக்குற மாதிரி பொண்ணு தான் வேணும் கடவுளே.. இது ஒன்னை மட்டும் எனக்காக பண்ணிடு” என அவசர வேண்டுதலை வைத்தார் மீனாட்சி.

 

நேராக காரை கிளப்பி கொண்டு ஸ்டேஷன் சென்று கொண்டிருந்தான் ஆதி. வழியில் அதே சிக்னலில் அவனது வாகனம் நிற்க.. அந்த சிக்னலை கடந்து சென்றாள் அவள்.

 

மாந்துளிர் பச்சை வண்ண நிறத்தில் அழகான சல்வார் அணிந்திருந்தாள். வளர்ந்த கூந்தலை தளரப் பின்னிய வண்ணம், அழகான மல்லிகை மலர் வீற்றிருக்க.. பச்சை வண்ண கண்ணாடி வளையல்கள் வலக்கையில் அலங்கரித்ததுடன், இடக்கையில் கைக்கடிகாரம்.. நெற்றியில் சின்ன பொட்டும், மேலே சிறிது குங்குமமும், தோளில் சின்ன ஹேன்ட் பேக் சகிதம் அவள் கடந்து செல்ல.. சென்னையில் இப்படி ஒரு அழகான பைங்கிளியை தற்போது உள்ள காலகட்டத்தில் பார்ப்பது மிகவும் அரிது என்பதால், சிக்னலில் நின்ற அடவர்களின் விழிகள் யாவும் அவளைத்தான் வட்டமிட்டது.

 

அந்த விழிகளுள் ஒருவனாக நமது நாயகனின் பார்வையும் அவளைத்தான் தீண்டி சென்றது. சிக்னலை கடந்து , கார்கள் நிற்கும் பக்கம் தான் இருவரும் வந்தனர்.

 

தூரத்தில் இருந்தே சுஷ்மிதா அவனைக் கண்டு கொண்டாள். பிறையுடன் நடந்து கொண்டே அவளது கைகளை சுரண்ட, ” எதுக்கு டி இப்படி கையை சுரண்டிட்டு இருக்க ” என டிராபிக்கில் வந்த எரிச்சலில் கேட்டாள் பிறை.

 

” அங்க பாரு டி அந்த ஆளு..”

 

” எந்த ஆளு “

 

” ஹான் உன் ஆளு ” என சுஷ்மிதா நக்கல் செய்ய.. பிறை அவளை முறைத்து தள்ளினாள்.

 

” அந்த கமிஷனர் டி ”  என சுஷ்மிதா பார்வையால் அவன் இருந்த திசை பக்கம் காட்டினாள்.

 

கமிஷனர் என்ற பெயரை கேட்டதுமே.. அவளது மனதில் வந்து போன அவனது தோற்றத்தை புறம் தள்ளியவள், சட்டென பார்வையை திருப்ப.. அவனும் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அவள் பார்ப்பது தெரிந்தாலும் , அவன் பார்வையை திருப்பவில்லை. ஏன் திருப்ப வேண்டும், எனக்கு பிடித்திருக்கிறது அதனால் பார்க்கிறேன் என்ற எண்ணம் அவனுக்கு. ஆனால் அவளுக்கோ.. ‘ எவ்வளவு திமிரு நான் பார்க்குறேன்னு தெரிஞ்சும்… அப்படியும் என்னைய பார்க்குறான்.. பொறுக்கி ‘ உதட்டிற்குள் முனு முனுத்தாலும் .. அவளது இறுதி வார்த்தையை தெளிவாக கண்டு கொண்டான் ஆதிதேவ்.

 

சிக்னல் விழுந்தவுடன் கார் மெல்ல நகர, அவளும் கம்பெனிக்குள் நுழைந்து கொண்டாள். 

 

காருக்குள் இருந்தவனின் இதழ்கள் மெல்ல விரிந்தது. அந்த சிரிப்பில் இருந்தது என்ன.. ஆர்வமா, குரோதமா என பிரித்தறிய முடியவில்லை.

 

கம்பெனிக்கு செல்லும் முன் அவளது தாய்க்கு அழைத்து பேசி இருந்தாள் பிறை.

 

” பிறை நாங்க எல்லாம் நல்லா தான் இருக்கோம். ஆனால் இங்க உன் அப்பாத்தா தான் உன் அத்தை வீட்ல போய் உனக்கு சம்மந்தம் பேசிட்டு வந்திருக்காங்க ” என சிவகாமி கூறியதை கேட்டு, அவளுக்கு அத்தனை ஆத்திரமாக வந்தது.

 

” கல்யாணம் நான் வந்தா தானே மா

பண்ண முடியும்.. அவங்க என்ன வேணாலும் பண்ணட்டும் ” என போனை அணைத்து விட்டாள் பிறை. சிவகாமிக்கு தான் மகளின் பதிலில் திக்கென்று இருந்தது.

 

” என்ன சொல்லுறா இவ.. தெரியாம இவ கிட்ட சொல்லிட்டேன் கடவுளே.. இவ ஏதாவது முடிவு எடுத்தா நான் இந்த வீட்ல இருக்க முடியாது ” என புலம்பிக் கொண்டே அடுக்களைக்கு சென்றார்.

 

யாருக்கு யாரென்று எப்போதோ எழுதி வைக்க பட்டிருக்கிறது. அதையும் மீறி அந்த திருமணம் நடந்து விடுமா என்ன ? 

 

சனா💖

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்